கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர்களில் தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலைக்காக, பெரியார் வழியில் அவர் கொள்கைகளைக் கருப்பொருளாகக் கொண்டு தம் கவிகள் மூலம் குரல் கொடுத்தவர் "புரட்சிக்கவிஞர்" என்றழைக்கப்படும் 'சுப்புரத்தினம்' என்ற இயற்பெயர் கொண்ட "பாரதிதாசன்".

bharathidasan 353இவர் புதுவை நகரில் கனகசபை - இலக்குமி அம்மையாருக்கு 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் பிறந்தார். இளமையிலேயே மகாவித்வான் என்றழைக்கப்படும் பு.வ.பெரியசாமியிடமும், புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்ற சிறப்பினைப் பெற்றவர்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதியார் பாடியது பாரதிதாசனின் தமிழ் உணர்வு பெருக்கெடுக்கத் துணை புரிந்தது. அதன் விளைவாய் "தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று உணர்ச்சி பொங்கப் பாடினார் பாரதிதாசன். தமிழின் சிறப்பை, தமிழின் மாண்பை "தமிழியக்கம்" என்ற கவிதை மூலம் எடுத்துரைத்தார். பாரதியாரின் மறைவுக்குப் பின் 1928 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் மாயவரத்தில் பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடுவும் பேசுவதாக அறிந்த பாரதிதாசன் ஒரு காங்கிரசுக்காரராக, சைவ பக்திமானாக அக்கூட்டத்திற்குச் சென்று மாற்றம் பெற்று, அன்றோடு கடவுள், மதம் ஆகியவற்றைப் பாடுவதை விட்டு விட முடிவெடுத்தார். பின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த பாரதிதாசன் தமிழர்களின் விடுதலைக்காக இனம், மொழி சார்ந்த பாடல்களைப் பாடினார். இத்தகைய தமிழ் உணர்வே பாரதிதாசனை தமிழ் தேசியவாதியாக அடையாளப்படுத்தியது.

'தேசியம்' என்னும் சொல் நாட்டுப்பற்று, தேசபக்தி என்ற பொருள் கொண்டது. அவ்வகையில் 'தமிழ்த்தேசியம்' எனும் போது தமிழர்களின் இனம், மொழி, நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பெருமித உணர்வு அது எனலாம். அவ்வுணர்வால் தமிழர்களின் உயர்வுக்காகப் போராடியவர் பாரதிதாசன். பாரதிதாசனின் தமிழ்த் தேசியத்தில் மிக முக்கியமானது மொழிப்பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று எனலாம். மொழியை உயிராகக் கருதினால்தான் மொழி வளர்ச்சிக்கும் பாடுபட முடியும் என்று கூறினார் பாரதிதாசன். அவ்வகையில் 1965 இல் உச்சத்தைத் தொட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் "திருந்தாத் தமிழருயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்று" என்ற பாரதிதாசனின் வரிகள் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தது. அதுமட்டுமின்றி தமிழ் மக்களின் உரிமை மீட்கும் போரில் "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்று கவிதை மூலம் பாடினார்.

தமிழ்க்கல்வி என்பது தமிழைப் பற்றிய கல்வி என்றில்லாமல் தமிழ் வழியிலான கல்வி என்று பாரதிதாசன் குறிப்பிட்டார். தமிழ் மொழியை கருத்தை தெரிவிக்கும் கருவியாக அல்லாமல் தமிழரின் வாழ்வை ஒன்றிணைத்து இயக்கும் உயிர்ப்பொருளாகக் கருதினார். தூய்மையும், வீரமும் தமிழர்களிடையே வளர வேண்டுமானால் தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியே வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"சாதி மதம் தமிழ் இல்லை- அந்தச்

 சாதி மதத்தை தமிழ் கொள்வதும் இல்லை கெஞ்சல் இறைஞ்சல் தமிழ் கொள்கை இல்லை" என்று தமிழ்த்தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழ்க் கொள்கையை வலியுறுத்தினார். தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

"ஆதி மனிதன் தமிழன் தான்

அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்! மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலில் கண்டதும் தமிழகந்தான்" என்று பாடி தமிழ் இனத்தில் தான் பிறந்தமைக்குப் பெருமை கொண்டவர் பாரதிதாசன்.

தமிழை உயர்த்தினால் தமிழர் உயர்வர் என்று ஆக்கமும், ஊக்கமும் குன்றியிருந்த தமிழர்க்குப் புத்துயிர் அளிக்கத் தமிழ் தேசியம் கண்டவர் பாரதிதாசன். அத்தகைய பாரதிதாசனின் பாடல்கள் உள்ளவரை தமிழ்த்தேசியமும் தழைத்தோங்கி நிற்கும். வாழ்க திராவிடம்...!! வளர்க தமிழ்த்தேசியம்!!

கயல்விழி, திராவிடப் பள்ளி மாணவர்