அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாசக முன்னணித் தலைவர்களில் ஒருவரான இல.கணேசனின் நேர்காணலைக் கேடக நேர்ந்தது. திராவிட இயக்கங்களுக்கு இன்று நேர்ந்துள்ள பின்னடைவை மிகுந்த உற்சாகத்தோடு அவர் விவரித்தார். அவர் பேச்சின் சாரம் இவைதாம்:

"ஒரு காலத்தில் கருப்பு, நாத்தீகர்களை அடையாளப்படுத்தியது. இன்று அது அய்யப்பப் பக்தர்களை அடையாளப்படுத்துகிறது. சிவப்பு மருவத்தூர் பக்தர்களின் அடையாளமாகிப் போனது. நாத்தீகம் தமிழ்நாட்டில் தோற்று விட்டது. தமிழ் தமிழ் என்று இவர்கள் போட்ட கூச்சலில் தமிழ் இன்று தமிழ்நாட்டை விட்டே காணாமல் போய்க் கொண்டுள்ளது. சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசிய இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் உடுமலைப்பேட்டைகள் அரங்கேறுகின்றன. சாதி தெரிந்தால்தான் அவர்களை முன்னுக்குக் கொண்டுவர முடியும் என்றார்கள். அதன் விளைவைத்தான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று திராவிட இயக்கங்களை விட்டு விலகி இளைஞர்களும் மாணவர்களும் பாசகவை நோக்கி வந்து கொண்டுள்ளனர்."

இல.கணேசனின் பேச்சு திராவிட இயக்கங்களுக்கு நேர்ந்துள்ள பின்னடைவை மட்டும் விவரிக்கவில்லை; அஃது ஒட்டுமொத்தத் தமிழகம் சந்தித்து வரும் அவலத்தைப் படம் பிடிக்கிறது; தமிழகம் முற்போக்குப் பாதையிலிருந்து விலகி பிற்போக்குப் பாதையைத் தழுவுவதை மட்டற்ற மகிழ்வோடு வெளிப்படுத்துகிறது. அவர் பேச்சு நமக்கு ஆத்திரம் ஊட்டலாம். ஆனால் உண்மை அதுதான்.

PWF election rally

உண்மை கசக்கத்தான் செய்யும். அதுவும் எதிரியிடமிருந்து நம்மைப் பற்றிய உண்மை வெளிப்படும் பொழுது  கசக்கவும் செய்யும்; எரிச்சல் ஊட்டவும் செய்யும். ஆனால் மெய்நடப்பை ஒத்துக் கொண்டு, தவறுகள் எங்கே நேர்ந்தன, எப்படி நேர்ந்தன என ஆய்வுக்குட்படுத்தி, தமிழ்நாட்டை நேர்பாதையில் மீளச் செலுத்துவதற்கான வழியைக் காண்பதுதான் அறிவுடைமை.

ஆனால் ஆத்திரப்பட வேண்டியவர்கள் ஆத்திரப்பட்டதாகத் தெரியவில்லையே! பாசக தலைவரின் பகடிக்குத் திராவிட இயக்கத்தாரிடமிருந்தோ அல்லது இடதுசாரிகளிடமிருந்தோ எந்த எதிர்வினையும் வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை இதற்கெல்லாம் விடை அளித்துக் கொண்டிருப்பது தேர்தலில் வாக்குச் சேகரிக்க உதவாது எனக் கருதியிருக்கலாம். கொள்கை விவாதங்களிலும், தத்துவ விசாரணைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரமா இது?

கூட்டணிக்கு ஆள் பிடிக்க வேண்டும்; மாற்றுக் கூட்டணிப் பேரங்களைத் தெருவில் நாறடிக்க வேண்டும். “எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டு விடும்’’ எனச் செவிப்பறை கிழிய முழங்க வேண்டும். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் தேனும் பாலும் ஓடும்’’  என்று மக்களை நம்ப வைக்க வேண்டும். இதுவே, இது மட்டுமே இன்று ஒவ்வொரு கூட்டணியின்\ கட்சியின் முதன்மையான பணி; முழுமையான பணி.

வரலாற்றில் இன்று தமிழ்நாடு எத்திசையில் பயணிக்கத் தொடங்கி உள்ளது என்ற புரிதல் தேர்தல் பதவிக் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதைப் பற்றிய கவலையும் அக்கறையும் இக்கட்சிகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டையும் மக்களையும் உண்மையிலே நேசிப்பவர்களாய் இருந்திருந்தால் சூழ்ந்து வரும் பாசிச இருள் பற்றிய பதட்டம் இக்கட்சிகளுக்குத் தொற்றியிருக்கும். தேர்தலிலும் அது மய்யப் பொருளாய் மாறியிருக்கும்.

இத்தெளிவுகளைக் கொண்டிருக்க வேண்டிய இடதுசாரிகளோ மாறி மாறிக் கூட்டணி சேர்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இப்படியான தேர்தல் கூட்டணி உத்திகள் மூலமே புரட்சியைக் கொண்டு வந்துவிட முடியும் என நம்புகிறார்களோ என்னவோ, யாருக்குத் தெரியும்? நேற்று வரை இவர்கள் இரு திராவிடக் கட்சிகளோடும் மாறி, மாறி, சவாரி செய்தார்கள். அவ்வப்போது ஒரு சில சட்டமன்ற\பாராளுமன்ற இடங்களையும் வென்றார்கள். அதன் மூலம் அவர்கள் சாதித்தது என்ன?

மேற்கு வங்கத்தில் நீண்ட நாளும் கேரளாவில் பலமுறையும் ஆட்சியிலும் இருந்தார்கள்; திரிபுராவில் ஆட்சியில் தொடர்கிறார்கள். இங்கெல்லாம் என்ன புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன? அவர்கள் ஆண்ட\ஆளும் பகுதிகளில் உலகமயத் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்றி விட்டார்களா? அவர்களும் அதற்குப் பலியானதுதானே வங்க வரலாறு? இன்று மம்தாவிடம் சிக்கி விழி பிதுங்குகிறார்களே? தப்பிப் பிழைக்க வெட்கம் கெட்டு, காங்கிரசிடம் சரணாகதி அடைந்துள்ளார்களே?

புரட்சிநிறை மாற்றங்கள் வேண்டாம், வங்கத்தில் நல்லாட்சி புரிந்திருந்தாலே மக்கள் மம்தாவிடம் சென்றிருக்க மாட்டார்களே? அங்கே நீண்ட ஆட்சி அதிகாரம் கட்சியின் புரட்சிப் பண்புகளைப் பாழடித்து விட்டது என்பதுதானே உண்மை? ஈபிடபுள்யூவில் வெளிவந்த கட்டுரைகள் இச்சீரழிவைப் படம் பிடித்துக் காட்டினவே? கேரளாவில் அச்சுதனுக்கும் பினாராயுக்கும் இடையே நடப்பது என்ன தத்துவப் போராட்டமா? கட்சியைக் கைப்பற்ற நடக்கும் வெட்கம் கெட்ட வெளிப்படையான வெட்டுக் குத்துத்தானே?

தமிழ்நாட்டில் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்ததின் விளைவு திருப்பூர் கோவிந்தராசுக்களின் பெருக்கம்தானே? சிபிஅய்யில் பாண்டியன் செய்ததாகக் கூறப்படும் நிலப்பேரம் நீதிமன்றம் வரை சென்று நாறிப்போய் உள்ளதே? அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலர் திராவிடக் கட்சிகளுக்கு ஓடிப்போன வெட்கம் கெட்ட வரலாறும் உண்டே? இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இபொகவின் சட்டமன்ற உறுப்பினரும் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான பொன்னுபாண்டி அதிமுகவிற்குத் தாவிய செய்தி வந்துள்ளதே?

தேர்தலைப் பொதுமையர் தந்திர உத்தியாய்ப் பயன்படுத்தப் போய் ‘முதலாளித்துவத் தேர்தல் சனநாயகத் தந்திரம்’ இவர்களின் மூலவுத்தியையும் தந்திரவுத்தியையும் ஒரு சேர விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. மண்ணுக்கேற்ற கால மாறுதலுக்கேற்ற ஆய்வுகளின்றி இலெனின்\இசுடாலின்\மாவோ காலத்து உத்திகளையே அப்படியே பின்பற்றியதின்\பின்பற்றுவதின் சோக விளைவுதான் இது.

விசயகாந்துடனான கூட்டணி முகநூலில் கடுந்திறனாய்வுக்கு உள்ளாகிறது. “விசயகாந்த் கூட்டணி தமிழ்நாட்டு வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்’’ எனத் தோழர் இராமகிருஷ்ணன் சொல்வதை எப்படி செரித்துக் கொள்வது? இப்பொழுது தமாகா வாசனும் மக்கள் நலக் கூட்டணியில். வெண்மணியில் நடந்ததை எல்லாம் மறந்து விட வேண்டியதுதானா? கருணாநி சொன்னது போல் அரசியலில் நிலையான உறவு, நிலையான பகை என்பதெல்லாம் இல்லை என்கிறீர்களா? வர்க்கப் பகை முரண்பாடு கூட நட்பு முரண்பாடாக மாறி விடுமா? மாற்றம் ஒன்றைத் தவிர மற்றனைத்தும் மாறக்கூடியதே என்ற மார்க்சின் மாறாக்கூற்று இங்கும் பொருந்துமா?

பொதுமையர் பலர் ரத்தம் சிந்தியது இதற்குத்தானா தோழர்? விலை மதிப்பற்ற ஈகம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிறதே! தமிழ்நாட்டு வரலாற்றின் திருப்புமுனை என்கின்ற தோழரே, தமிழ்நாட்டின் வரலாறு எங்கே திரும்பி உள்ளது என்பதைத்தான் பாசக தலைவர் அப்பட்டமாகப் போட்டுடைத்துள்ளாரே? வலது நோக்கித் திரும்பிச் செல்லும் தமிழக வரலாற்றை விசயகாந்த் கூட்டணி இடது பக்கம் திருப்பி விடுமா?

மார்க்சிய நெறியாளர்களால் மட்டும்தான் இம்மண்ணில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அந்நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்ற அச்சத்தில்தான் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கேள்விகளை எதிர்கொண்டு தங்களைத் தற்திறனாய்வுக்கு உட்படுத்தித் தோல்விகளுக்கு விடை தேடாமல் ஆத்திரப்படுவதில் பொருளில்லை. முகநூலில் ஆத்திரங்கள்  வெளிப்படுவதைக் காண்கிறோம். இத்தகைய போக்கை  மார்க்சீய அரசியல் பண்புநெறிகளிலிருந்தான விலகலாகத்தான் கொள்ள முடியும். இன்று தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள பேரச்சங்களை எதிர்கொள்ள இத்தேர்தல் கூட்டணிகள் எள்ளளவும் உதவாது; மேலும் மேலும் இத்திருநாட்டைக் கீழ்நோக்கி மீளா இடத்திற்குக் கொண்டு செல்லவே பயன்படும். அப்பொழுது வரலாறு நம்மைக் காறித் துப்பும்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விரைந்து பரவி வரும் சாதி, மதவெறிப் பாசிசம் தமிழ்நாட்டையும் கவ்வி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் சாதி ஆணவப் படுகொலைகள் அதைத்தான் காட்டுகின்றன. இந்துத்துவா வெறி இங்கே சாதிவெறியோடு கைகோர்க்கிறது. இந்துத்துவா தமிழ்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வலு அற்றதாக இருக்கலாம். தில்லியில் அதன் அதிகாரம் உச்சத்தில் உள்ளது. அவ்வதிகாரம் அதன் நச்சுவேரை மூலைமுடுக்கெல்லாம் பரப்ப உதவுகிறது. தமிழ்நாட்டிலும் அது விரைந்து பரவி வருகிறது. ஆர்எஸ்எஸ் தொடங்கி கிராமப் பூசாரிச் சங்கம் வரை அதன் வகைவகையான அமைப்புகள் கண்ணுக்குத் தெரியாத மாபெரும் வலைப்பின்னலை ஏற்படுத்தி வருகின்றன; கல்விக் கூடங்கள் எல்லாம் காவிக் கூடங்களாக மாறி வருகின்றன. இதை உணர்ந்து செயல்படாவிட்டால் தமிழ்நாடு இந்துத்துவாப் படுகுழியில், எழுந்திருக்கும் வழியின்றி மூழ்கி விடும். பாசக தலைவரின் “குதூகலப்’’ புதிய தலைமுறை நேர்காணல் இதைத்தான் நம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

இந்துத்துவா சாதி, மதவெறிப் பாசிசத்தை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல்கள் இங்கே அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறவில்லை. இங்கே தேர்தலில் அது ஒரு மய்யப் பொருளாக இல்லை; ஒரு பேசுபொருளாகக் கூட இல்லை. கருணாநிதியின் ஊழலும், செயலலிதாவின் ஊழலுமே திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றன. ஒருவேளை தேர்தல் அறிக்கைகளில் இது குறித்து எழுதப்படலாம். தேர்தல் அறிக்கைகளைப் பெரும்பாலான கட்சித் தொண்டர்களே படிப்பதில்லை. பரந்துபட்ட மக்களை அது எங்கே சென்றடையப் போகிறது? சாதி, மதவெறிக்கு எதிராக மக்களை எப்படி ஒன்று திரட்டுவது?

ஒருவேளை மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று, விசயகாந்த் தலைமையில் ஆட்சி அமைந்தால் அவ்வரசு இந்துத்துவாப் பாசிசத்தை எதிர்கொள்ளும் வலிமை பெற்ற அரசாக இருக்குமா? இடதுசாரிகள் அதற்கான உறுதியைத் தரமுடியுமா? அது கூட வேண்டாமய்யா, நீங்கள் நீட்டி முழங்குகின்ற ஊழலற்ற அரசை வழங்க முடியும் என்று உறுதியையாவது அளிக்க முடியுமா? அவ்வாறெல்லாம் பொறுப்பேற்க முடியாதென்றால் பின்னர் எதற்கு இந்த வெட்கம் கெட்ட கூட்டணி? கேவலம் ஒரு சில சட்டமன்றப் பதவிகளுக்குத்தானா?

சட்டமன்றத்தில் இடதுசாரிகள் குரல் ஓங்கி ஒலிக்கும் அல்லவா என்பார்கள். திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றம் செல்வது, பின்னர் அவர்களுக்கு எதிராக அங்கே முழக்கமிடுவது; அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியோடு சட்டமன்றம் செல்வது, பின்னர் அவர்களை எதிர்த்து (உள்ளே பேசவெல்லாம் முடியாதென்பதால்) வெளிநடப்பு செய்வது; இப்பொழுது விசயகாந்த் கூட்டணி, அதன்பின்னர் சட்டமன்றத்திற்குள் வழக்கம் போலத்தான் என்றால், மக்கள் மன்றம் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்ளும்? இவர்கள் மக்கள் இயக்கமாய் எப்படி உருக்கொள்ள முடியும்?

சாதிவெறிக் கட்சியான பாமக பற்றிய நிலைப்பாட்டில் காட்டிய உறுதியை முதல்வர் வேட்பாளர் தொடர்பான நிலைப்பாட்டில் பற்றியிருக்க முடியவில்லையே! அது ஏன்? ஜனநாயக நெறிமுறையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, கோட்பாடோ கொள்கையோ அற்ற ஒரு கும்பலை அதனிடம் உள்ளதாக நம்பப்படும் வாக்கு விகிதத்திற்காக ஏற்றுக் கொள்வதை என்னவென்று அழைப்பது? ஒருவேளை விசிக கூட்டணியில் இருந்திருக்காவிட்டால், பாமகவையும்  கூட்டணிக்கு இழுத்திருப்பார்களோ என்னவோ? யார் அறிவர்?

பாமகதான் இப்பொழுது  சாதிக் கட்சி இல்லை என்று ஊர் ஊராகச் ‘சத்தியம்’ செய்து வருகிறதே? அதையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டியதுதானே? யார் முதல்வர் என்பதில் சிக்கல் வந்து விடும் என்கிறீர்களா? மக்கள் நலக் கூட்டணியில் இரு முதல்வர் வேட்பாளர்கள் என்று அறிவித்து ஒரு புதுமையைச் செய்யலாமே? தேர்தலில் இருவரும் வெற்றி பெற்று விட்டால் ஜனநாயக நெறிப்படி இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்து, ஜனநாயக நெறியைக் காப்பாற்றிய  பெருமையையும் பெற்றிருக்கலாமே? தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் இப்படியெல்லாம் கேவலப்பட்டதாக உள்ளது என்பதுதான் சோகத்திலும் பெருஞ்சோகம்.

உண்மையில் இங்கே கொள்கைக் கூட்டணி என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது.  மக்கள் நலக் கூட்டணியை ஊழலுக்கு எதிரான கூட்டணி என்றும் சொல்ல முடியாது; சாதி மதவெறிக்கு எதிரான கூட்டணி என்றும் கூற முடியாது. திமுக விசயகாந்துடன் பேரம் பேசியது என்பது வைகோவின் குற்றச்சாட்டு. அப்படியென்றால் பேரத்திற்கு திமுக அழைத்தவுடனேயே அதை மக்கள் முன் விசயகாந்த் பகிங்கரப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதை விடுத்து கடைசிவரை இங்கேயா அங்கேயா என்ற ஊகத்தை ஊடகங்களில் வெற்றிகரமாக உலவ விட்டு விட்டு, கடைசியில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓடி வந்தது எதைக் காட்டுகிறது ? திமுகவுடன் அவரும் பேரம் பேசினார் என்பதைத்தானே? அங்கே எதிர்பார்த்த பேரம் படியவில்லை, இங்கே எதிர்பார்த்த முதல்வர் பேரம் படிந்து விட்டது, அவ்வளவுதானே?

இத்தகைய ‘இலட்சியக்’ கேப்டனை ஊழலுக்கு எதிரானவர் என இடதுசாரிகளும் முழங்கும் போது நமக்குப் பெரும் நெருடல் ஏற்படுகிறது. வேட்பாளர் தேர்விற்கு இலட்சம் இலட்சமாய்ப் பணம் பெறுகின்ற கட்சியை ஊழலுக்கு எதிரானதாய்க் காட்டுவது பன்றியைப் பசுவெனக் கூறுவதற்கு ஒப்பானதே. வேட்பாளர் தேர்விற்கே இலட்சம் இலட்சமாய்ச் செலவு செய்யும் கட்சிக்காரர் பின்னர் தேர்தலிலும் பல இலட்சங்களைச் செலவு செய்து விட்டு மக்கள் நலப்பணி புரிவார் எனக் கூறுவதும், அதை நம்புவதும், என் குதிரைக்குக் கொம்பு முளைக்கும் என்று கூறுவதும், அதை நம்புவதையும் போலத்தான். தேர்தலில் வெற்றிக்கு ஊழல் செய்யும் கட்சிகள் வென்ற பின் ஊழலை எப்படி ஒழிக்கும்? தேர்தல் பதவிக் கட்சிகளுக்கு ஊழலே உயிர் மூச்சு. இந்தக் கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டுச் சேரும் பொதுவுடைமைக் கட்சிகளும் சீழ் பிடிக்கத் தொடங்கி விட்டன என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை.

ஊழலை விட்டு விடுவோம். அதனினும் பன்மடங்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சாதி, மதவெறிப் பாசிசத்தை உறுதியாய் எதிர்த்து நிறகக் கூடிய வல்லமை படைத்ததா மக்கள் நலக் கூட்டணி? தெரியாமல்தான் கேட்கின்றோம், தேமுதிகவிற்குச் சாதி, மத எதிர்ப்புக் கொள்கை என்று ஒன்றிருக்கிறதா? நேற்று வரை விசயகாந்த் பாசகவின் கூட்டணியில் இருந்தவர்தானே? அவர்களோடும் பேரம் நடத்தியவர்தானே? பாசக கடைசி வரை கேப்டன் எங்களோடுதான் என்று கூறி வந்ததே? விசயகாந்தும் அதை மறுக்காமல் அமைதிதானே காத்து வந்தார்? கடைசியில் முதல்வர் பேரம் எங்கு படிந்ததோ அங்கு ஒட்டிக் கொண்டார்.

அவரை விட்டு விடுவோம். திரைப்படத்தில் எழுதித் தந்த வசனத்தைப் பிழையின்றிப் பேசுவார்; எதிரிகளை அடித்து வீழ்த்துவார். ஆனால் மேடையிலே சரளமாகப் பேசத் தெரியாமல் பாவம் தடுமாறுவார். முடிந்தால் கட்சிக்காரர்களை இரண்டு சாத்து சாத்துவார்; செய்தியாளர்களைத் திட்டி விரட்டுவார். புரட்சிப் புயல் வைகோவின் நிலைமை என்ன? மூச்சுக்கு மூச்சு இராசபட்சாவைத் தமிழினப் படுகொலையாளன் என்று அடிக்குரலிட்டு முழங்கியவர் எப்பொழுதாவது குசராத் படுகொலை பற்றி வாய் திறந்ததுண்டா? மோடியைக் கொலைகாரன் என்று கூற வேண்டாம், குற்றம் சாட்டியாவது பேசியதுண்டா? கடந்த தேர்தலில் முசுலீம்களின் ரத்தக்கறை படிந்த மோடியோடு அல்லவா அவர் கைகுலுக்கினார்? இதற்கு முன்பும் வாசுபாய்க் காலத்து பாசகவுடன் நட்புப் பாராட்டினவர்தாமே? ஈரோடு மதிமுக மாநாட்டிற்கு அத்வானியை அழைத்துச் சிறப்புச் செய்தவர்தாமே?

இவர்களிடம் எல்லாம் என்ன கொள்கை உறுதிப்பாடு உள்ளது? நேற்று வரை தனி ஈழம் என முழங்கியவர் இப்பொழுது அது பற்றியெல்லாம் மூச்சு விடாமல் கூட்டணி அறம் காக்கிறாரே? அதில் வெளிப்படவில்லையா அவருடைய கொள்கை உறுதி? கருணாநிதியின் சாதி மூலம் பார்த்ததில் அவருடைய சாதி எதிர்ப்புக் கொள்கையும் வெளிறிப் போய்விட்டதே? குறிஞ்சாங்குளம் தலித் மக்கள் மீதான தாக்குதலின் போது அவர் தம் சாதிப் பக்கம் நின்றார் என்றும், தன் தம்பியைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்றும் குற்றச்சாட்டு உண்டே?

இன்னொன்றையும் இங்கே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அதிமுக, திமுக, தேமுதிக, பாசக என இன்ன பிற கட்சிகளைப் போலவே மதிமுகவிலும் பொறுப்பில் உள்ள பெரும்பாலான இடைநிலைச் சாதிக்காரர்கள் ஆதிக்கச்சாதி மனநிலை கொண்டவர்களே. தலைவர் எவ்வழி தொண்டர்களும் அவ்வழி. பாமக தனியொரு சாதியின் நலம் காக்கும் கட்சியென்றால் மதிமுக போன்ற கட்சிகளோ ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இடைநிலைச் சாதிகளின் நலன் காக்கும் கட்சிகள். உண்மையில் இக்கட்சிகள் இடைநிலைச்சாதிக் கட்சிகளே! சாதி தமிழ்நாட்டில் அசைவின்றி நிலைபெற்றிருப்பதற்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கும் தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கும் கட்சி வேறுபாடின்றி இவர்களே காரணம், இவர்களே காரணம்.

மக்கள் நலக் கூட்டணிக்கு வக்காலத்து வாங்குவோர் மதவாதப் பாசிசத்தை எதிர்கொள்ள பரந்த கூட்டணியின் தேவையை வலியுறுத்துகிறார்கள். தங்கள் தர்க்கத்திற்கு வலுச் சேர்க்க இசுடாலின் பாசிசத்தை எதிர் கொள்ள வல்லாதிக்கங்களோடு ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியையும், மாவோ சப்பான் ஆக்கிரமிப்பு எதிப்புப் போரின் போது சியாங்கே சேக்கோடு செய்து கொண்ட கூட்டணியையும் சுட்டிக் காட்டுகிறார்கள். காலம், இடம், அரசியல், சூழல் என எதுவும் பொருந்தி வராத எடுத்துக்காட்டுகள் இவை. உண்மையில் நகைப்புக்குரியதும், அந்த மாபெரும் புரட்சியாளர்களை இழிபடுத்துவதுமான இந்த ஒப்புவைமையை தர்க்கத்திற்காக ஏற்றுக் கொண்டு விவாதித்தாலும் அந்தத் தர்க்கம் எடுபடாது.  

எளிய கேள்வி ஒன்றை எழுப்புவோம். நம் கேள்வி இதுதான். தேமுதிகவும், மதிமுகவும் சாதி மதவெறிப் பாசிசத்தை எதிர்கொள்ளச் சரியான கூட்டணி என்றால் திமுகவைத் தள்ளி வைப்பது ஏன்? உண்மையில் மதவாத எதிர்ப்பில் மேலே குறிப்பிட்டவர்களை விட திமுக எவ்வகையில் பின் தங்கிப் போனது? திமுகவில்தான் முசுலீம் கட்சிகள் கூடுதலாக இடம் பெற்றிருக்கின்றன; அவர்களுக்குக் கூடுதலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதவாத எதிர்ப்பு மட்டுமே முதன்மை நோக்கம் என்றால் திமுகவும் இடம் பெற்றால்தானே அது வலுவான பரந்த கூட்டணியாக இருக்க முடியும்.

திமுக கூட்டணியில் தலித் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அக்கட்சிகள் அவர்களுக்கான சின்னத்திலேயே நின்று கொள்ளலாம் என்ற மேலான ஜனநாயக உரிமையையும் கருணாநிதி வழங்கி உள்ளார். புதிய தமிழகத்திற்கு இம்முறை நான்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். ஆதித்தமிழர் பேரவையும் திமுக ஆதரவுக் கட்சியே. அதற்கும் மேற்கு மண்டலத்தில் ஏதேனும் தொகுதி ஒதுக்கப்படலாம். கிருஷ்ணசாமியும் அதியமானும் எந்த வகையில் திருமாவளவனுக்குக் குறைந்தவர்கள்? மக்கள் நலக் கூட்டணியிலோ ஒரு தலித் கட்சி, திமுகவில் இரு தலித் கட்சிகள், அவை இரண்டு தலித் பிரிவு மக்களின் படிநிகராளிகள் என்பதைக் கவனத்தில் கொள்க!

திமுக மட்டும் அல்ல, காங்கிரசும் கூட மதவாத எதிர்ப்புக் கூட்டணியில் இடம் பெறத் தகுதியானதே! மேற்கு வங்கத்தில் மம்தாவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ளக் காங்கிரசோடு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் போது மம்தாவின் இன்னொரு முகமான செயல்லிதாவை எதிர் கொள்ள இங்கே காங்கிரசையும் இணைத்துக் கொள்ள ஏன் தயங்க வேண்டும்? அப்பொழுதுதானே இசுடாலின், மாவோ ஒப்புவைமைகள் தர்க்கத்திற்காவது பொருந்தி வரும்? இங்கு அதிமுகவையும் பாசகவையும் மதவாதக் கட்சிகள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்ற கருத்தை ஒப்புக் கொண்டு பேசுகிறோம். கூடவே மம்தா போலவே ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பவர் நம் புரட்சி அம்மா என்ற கருத்திலும் பேசுகிறோம்.

திமுக ஏன் ஒதுக்கப்பட்டது? திருமாவளவன் அதிகாரத்தில் பங்கு தரவில்லை என்பதற்காக அங்கிருந்து விலகினார். இடதுசாரிகளும், மதிமுகவும் திமுக ஊழல் கட்சி, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுத் தேவை எனக் கூறி அதனோடு கூட்டுச் சேர்வதைத் தவிர்த்தார்கள். தேமுதிக மற்ற பேரங்கள் எப்படி இருந்தாலும் “கிங்காக” ஆசைப்பட்டு ஒதுங்கினார். மேலே ஏற்கனவே சுட்டியதைப் போல இங்கு சாதி மதவாத எதிர்ப்பு என்பது குறைந்தளவு பேசுபொருளாகக் கூட இல்லையே? இங்கு முதன்மையானதும் இறுதியானதும் அதிகாரத்தில் என்ன பங்கு என்பதே.

தேர்தலில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு களம் அமைப்பதால்தான் கொள்கைகளும் குறிக்கோள்களும் காணாமல் போகின்றன. அப்படி இல்லாமல் நம் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வழி முறைகளில் அதுவும் ஒன்று என்ற நோக்கில் செயல்பட்டால் சறுக்கல்கள் ஏற்படாது. முதலில் ஒன்று தெளிவுபட வேண்டும். சட்டமன்றமோ நாடாளுமன்றமோ சென்றுதான் சாதிக்க வேண்டும் என்பதில்லை; வரலாறும் அப்படிச் சொல்லவில்லை.

தேர்தலுக்கு வெளியே, சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கு அப்பால் போர்க்களங்கள் விரிந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட போர்க்களங்களில்தான் இங்குப் பல வெற்றிகள் குவிக்கப்பட்டுள்ளன. கல்வியிலும் இட ஒதுக்கீடு என்ற அரசமைப்பின் முதல் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் உறுப்பினர்கள் போராடிப் பெற்றுத் தரவில்லை. மக்கள் மன்றத்தில் பெரியாரின் சமரசமில்லாத போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அது. தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்களும் பல்வேறு சிறுசிறு அமைப்புகளின் தொடர் அழுத்தங்களால் விரட்டி அடிக்கப்பட்டன என்பதே உண்மை. இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை இருபத்தாறு பேரிலிருந்து ஏழாகக் குறைந்து, பின்னர் நால்வராகி, மூவராகி, பின்னர் அவர்களையும் தூக்கிலிருந்து காப்பாற்றியது மக்கள் போராட்டங்களே ஒழிய சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ அல்ல. இப்படி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இறுதியிலும் இறுதியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் மூலமாகவே நாம் விரும்பும் அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளை நிறுவ முடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்குப் பரந்த மக்கள் வெளியில் பல்வேறு மக்கள் அமைப்புகளைக் கட்டி மக்கள் நலம் சார்ந்து தொடர்ந்து போராடுவதும்,  மக்களை அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதும்தான் ஒரே வழி. அது நீண்ட நெடுங்காலப் போராட்டம்தான். வேறு மாய மந்திரங்கள் இல்லை.

தேர்தலையும் பயன்படுத்தலாம். ஆனால் நம் இடதுசாரிகள் செய்வதைப் போல மாறி மாறிக் கூட்டணிச் சவாரி செய்யக் கூடாது. இக்கூட்டணிகளுக்கு இவர்கள் என்னதான் தர்க்க நியாயங்கள் கூறினாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற இவர்கள் தவறி விடுகிறார்கள். மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விலகிப் போய் விடுகிறார்கள். கூடுதலாக அவர்களுடைய இந்தியம் தமிழ்நாட்டு மக்களின் சிக்கல்களை முற்றாகப் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. ஆற்றுநீர்ச் சிக்கல் தொடங்கி ஈழச்சிக்கல் வரை அவர்களுக்கு நேர்ந்தது இதுவே. 50களில் தமிழ்நாட்டின் வலிமையான ஆற்றலாக இருந்த இடதுசாரிகள் தாங்கள் மேற்கொண்ட தவறான தேர்தல் உத்திகளால்தான் யானை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டார்கள்.

கொள்கை வழி நின்று கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதிக்கவாதிகளை அம்பலப்படுத்தும் போராட்டக் களமாகத் தேர்தலை மாற்றியிருந்தால் வரலாறு மாறியிருக்கலாம். தமிழ்நாட்டு அரசியலும் வேறு பாதையில் சென்றிருக்கலாம். இப்பொழுதும் கூட ஒன்றும் முழுதாய்க் கெட்டு விடவில்லை. தமிழ்நாட்டில் சிதறிக் கிடக்கும் புரட்சி ஆற்றல்களை இவர்கள் தலைமையில் ஒன்றுபடுத்தலாம். தலித் அமைப்புகள், சூழலிய அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள், பெரியார் வழி இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் என இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளலாம். அந்த அமைப்புகளின் போராட்டங்களில் தொடர்ந்து பங்கு பெறுவதின் மூலமாகப் பலரை வென்றெடுக்கலாம்.

முற்போக்கான தமிழ்த்தேசிய ஆற்றல்களோடும் கலந்துரையாடலாம்.  காட்டுக்குள் உள்ள மா இலெ இயக்கங்கள் முதல் நாட்டுக்குள் பல்வேறு பெயர்களில் இயங்கும் இடதுசாரிக் குழுக்களிடமும் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்ளலாம். இதில் எதுவுமே முடியாததோ வெறும் கற்பனையானதோ அன்று. மா லெ குழுக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்குவதால்தான் நட்பு முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாகத் திரிந்து விடுகின்றன.

சீரழிந்து போன, பெயரளவுக்குக் கூட கொள்கைகளே அற்ற, அரசியலையும் பொருள் ஈட்டக்கூடிய தொழிலாகக் கருதுகின்ற, அதிகாரத்திற்காகவே நாக்கைத் தொங்கப் போட்டு அலைகின்ற வீணாய்ப் போனவர்களோடு எல்லாம் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி சேர முடியும், தோளோடு தோள் உரச முடியும் என்றால் கொள்கைக்காகவே தங்களை முற்றாக ஈந்து கொள்கின்ற ஈகச் செம்மல்களோடு ஏன் பேசக் கூடாது? அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைகளில் தவறு இருக்கலாம். அவர்களின் நோக்கங்களைக் குறை சொல்ல முடியாதே? ஈகங்களைப் பழிக்க முடியாதே?

இந்திய இடதுசாரிகள் இப்படியான பாதைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தல் சாக்கடையில் இன்னும் முற்றாக மூழ்கிக் கரையாமல் இருந்தால் இது சாத்தியமே. மூத்த, மதிப்பிற்குரிய தோழர் க.பொ. அகத்தியலிங்கம் அவர்கள் தேர்தல் கூட்டணிகளை வைத்துக் கொண்டு நாம் சண்டை போடக் கூடாது, தேர்தலுக்கு அப்பாலும் நாம் ஒன்று சேர்ந்து போராடுவதற்கு விரிந்த களம் உள்ளது என்கின்ற கருத்தில் எழுதி வருகிறார். அவர் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் தேர்தல் களம் குறைந்தளவாவது கொள்கை அடிப்படையில் அமையாவிட்டால் தேர்தலுக்கு அப்பாலான களத்தில் ஒன்று சேர்ந்து போராடுவதற்கான வெளி குறுகி விடுகிறது.

இப்பொழுது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணி மக்களுக்கு எந்த நலத்தையும் கொண்டு வராது. அது புர்ர்ரட்சி தலைவி அம்மா அவர்களை எந்தச் சிக்கலும் இன்றி ஆட்சியில் அமர்த்தி விடும். சாதி, மதவாதப் பாசிச ஆற்றல்களுக்கு அது பெரும் வாய்ப்பாய் அமையக் கூடும். பாவம், மகனை அரியணையில் ஏற்றிப் பார்த்து மகிழ ஆசைப்படும் கருணாநிதியின் ஆசையும் நிராசை ஆகக்கூடும். ஒருவேளை எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் கூட்டணிகள் கலைந்து தாவல்கள் அரங்கேறும். இதற்காகவா மார்க்சியம் பேசும் இடதுசாரிகள் மாடாய் உழைப்பது?

எது எப்படி நடப்பினும் தமிழ் மக்களின் நலனுக்கு இந்தத் தேர்தல் கூட்டணிகள் உதவா. புரட்சியை நேசிக்கும் இடதுசாரிகள், தலித் அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், பெண்ணிய, சூழலிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் போன்ற இன்ன பிற அமைப்புகளின் கூட்டணியே தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது; தமிழ் மக்களின் நலன் பேணக் கூடியது. அதுவே உண்மையான மக்கள் நலக் கூட்டணி. இன்றைய கூட்டணிகள் அனைத்தும் மக்கள் விரோதக் கூட்டணிகளே!

ஆனால் நாம் விரும்பும் கூட்டணிக்கான அடையாளங்களாவது எங்கேனும் தட்டுப்படுகின்றதா? இன்றைய சூழலில் அது மிகப் பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது. பொதுச் சிக்கலுக்காக ஒன்றிணைந்து போராடும் பொழுதும் உரையாடலுக்கான தயக்கம் உடையும் பொழுதும் இது சாத்தியப்படலாம். தமிழ்நாட்டை மீட்க வேறு வழி கிடையாது. தேவதூதர்கள் யாரும் வரப் போவதில்லை. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைப்போம். கனவின் தேவையை அப்துல் கலாம் மட்டும் வற்புறுத்தவில்லை, மார்க்சும் வலியுறுத்துகிறார். நாம் விரும்பும் மக்கள் நலக் கூட்டணி ஒரு நல்ல கனவே. நல்ல கனவு விரைந்து பலிக்கட்டும். 

வேலிறையன்