கட்சிகள், சின்னங்கள், பிரச்சார முழக்கங்கள், பகட்டான அறிக்கைள், தேர்தல் ஆணையம், ஓட்டு, வெற்றி, தோல்வி - இப்படியான சில வார்த்தைகளோடும் நிகழ்வுகளோடும் தேர்தல் பற்றிய நமது மனப்பதிவு இருக்கிறது. அரசியல் வெளிக்குள் உண்மையில் எது விவாதப் பொருளாக இருக்கவேண்டும் என்ற கேள்வியோடு இடதுசாரி பண்பாட்டு ஊழியரும் புதுவை பிரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளருமாகிய செந்தில்பாபு அவர்களை சந்தித்தோம்.

புதுவிசை சார்பான இவ்விவாதத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் .தமிழ்ச்செல்வன், தமுஎச மாநில துணைத் தலைவர் சு.இராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பால்கி, ஞானசேகரன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதியாக்கம்: .பெரியசாமி

உதவி: சம்பு, சிவா

************************

ரமேஷ்பாபு: தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற ஒரு கணிசமான பகுதி வாக்களிக்க வருவதேயில்லை. அவர்களை வரவழைக்கும் ஏற்பாடும் இல்லை. அதனால் இந்த தேர்தல்முறை சரிதானா என்பதிலிருந்து விவாதத்தை தொடரலாம்.

ராமச்சந்திரன்: இன்னார்தான் ஜெயிப்பாங்கன்னு ஒரு தோற்றத்தை உருவாக்கறதுதான் கருத்துக் கணிப்புகளோட நோக்கம். அதனால தோற்கிற கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவது வீண் என்ற கருத்து உள்ளது. ஒவ்வொருவருடைய ஓட்டும் வீணாகாமல் இருக்க விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் தருகிற தேர்தல்முறை தேவை.

ஆதவன்: வழக்கமா தோல்வி அடைகிற கட்சிகள் தங்களது ஓட்டு சதவிகிதம் குறையலேன்னும் விகிதாச்சார அடிப்படையில் இத்தனை சீட் தங்களுக்கு கிடைத்திருக்கும்னும் ஆனால் இந்த தேர்தல் முறையால் ஓட்டு சதவீதத்துக்கு தகுந்த சீட் கிடைக்கலேன்னும் பேசுவாங்க. ஆனா விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அவர்கள் கேட்பதேயில்லை.

ராம: சதவீதம்னு சொல்றதும்கூட எந்தக் கட்சியுமே தனித்தனியா நின்னு வாங்கிய ஓட்டு கிடையாது. கூட்டணிக் கட்சிகளுக்கு சேர்த்துக் கிடைக்கிறது தான்.

தமிழ்ச்செல்வன்: இத்தனை ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்றும் நாலைந்து ஆண்டுகளில்தான் இடதுசாரிகள் மக்களது கவனத்துக்கு வந்திருக்காங்க. அவர்களைப் பற்றி மக்களிடையே ஒரு மதிப்பீடு உருவாகியுள்ளது. ஆனால் இடதுசாரிகளின் அமைப்புப் பலத்திற்கும் பாராளுமன்ற அரசியலில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் தோற்றத்திற்கும் பெருத்த இடைவெளி இருக்கு. அதனால் இடதுசாரிகள் தேர்தலில் பங்கேற்பதோட பொருத்தப்பாடு பற்றியும் பேசவேண்டி உள்ளது.

செந்தில்பாபு: பாராளுமன்றத்திலோ அதற்கு வெளியே நடக்கும் அரசியல் செயல்பாடுகளிலோ ஜனநாயகத்திற்கும், அதில் பங்கெடுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி பல வகைகளில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இடைவெளி எந்தளவிற்கு அதிகமாகிறதோ, அந்தளவிற்குத்தான் தேர்தல் களம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இடதுசாரி அரசியலோ - பொது நீரோட்டத்தில் இருக்கும் திராவிட கட்சிகளின் அறிக்கை விடுகிற அரசியலோ - கூட்டணி அரசியலோ - தேர்தலில் மக்களுக்கும், அரசியலுக்கும் உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இந்த இடைவெளி அதிகரிப்பது எந்த மாதிரி அரசியலுக்கு, யார் கட்டமைக்கிற அரசியலுக்கு சாதகமா இருக்கு? இடைவெளியை அதிகமாக்கும் இந்த அரசியலில் எந்தமாதிரியான பிரச்னைகள் மக்களுடையதாக முன்வைக்கப்படுது, உண்மையில் அது யாருடைய பிரச்சினை, அது எம்மாதிரியானதொரு அரசியல் தளத்தில் கட்டமைக்கப்படுது என்ற விவாதம் தேவை.

இரண்டுமாதமா அரசியல் சந்தர்ப்பவாதம் கூட்டணி என்ற பெயரால் உச்சத்தில் இருந்தது. யார் யார் பக்கம் போவாங்கன்னு அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் வேடிக்கைப் பார்த்தனர். ஒரு ஸ்டேட்மெண்ட் மூலமா ஜனங்களோட மனநிலையை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்கிற நம்பிக்கை, ஜனநாயக அரசியலோட அஸ்திவாரமான கட்சிகளுக்கு இருக்கு. ஒவ்வொரு நாள் மாலையும் அறிக்கை கொடுத்தால் அன்றைய அரசியல் பணி முடிந்ததாக கருதுவது - களஅளவில் அந்த அறிக்கை திட்டம், கடன், சலுகை அறிவிக்கும் அரசியலாக – முழுக்க முழுக்க பாப்புலிஸ்ட் பாலிட்டிக்ஸ் செயல்படும் வெளியாக தேர்தல்களம் மாறி வருகிறது.

பால்கி: ஒரு ஆட்சியின் நடவடிக்கைகளை பிரச்சாரம் செய்து, தேர்தலை சந்திப்பதே அருகி வருகிறது. பிரச்னைகளை தீர்க்காத அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்கிற - தேர்தலில் தங்கள் பங்கை மக்கள் முழுமையாக ஆற்ற வேண்டும்கற பிரச்சாரம் தேவை. கடைசிநேர நிகழ்வுகளை மனதில் வைத்து வாக்களிக்கும் போக்கிலிருந்து மக்களை மீட்டெடுப்பது அவசியமாகிறது.

செந்தில்பாபு: செயற்கையாக சித்தரிக்கப்பட்ட ஒன்றாகவே பொதுத்தள அரசியல் உள்ளது. உண்மையான அரசியல், பொதுத்தளம் எதுன்னு கேள்வி எழுப்புது. தேர்தலோ அல்லது கட்சிகளோ தீர்மானிக்கறதுதான் பொதுத்தளமா? அல்லது கிராமத்திலும் நகரத்திலும் மக்கள் ஒருத்தரோடு ஒருத்தர் வாழ்ந்து அன்றாடம் புழங்கக் கூடியதில் உருவாவதுதான் பொதுத் தளமா? சில விசயங்களை கேட்டுக் கொள்கிறவர்களாக, தங்களோட கருத்துக்களையும், ஒப்புதலையும் வெளிப்படுத்தாதவர்களாக இருக்கும் மக்களது மனநிலையை கட்டமைக்கிற தளம் எது? உயிருள்ள ஜீவன்களாக அவர்களை வளர்த்தெடுக்கும் பொதுவெளியாக அரசியல் உருவாக வேண்டியதற்கும், இன்று கட்சிகள் உருவாக்கியுள்ள பொதுவெளிக்கும் உள்ள இடைவெளியில் எது எப்ப மேலே போகுது எப்ப கீழே வருதுன்னு வேடிக்கைப் பார்க்கிறவர்களாக மக்கள் மாறுகின்றனர். எங்கெல்லாம் இடைவெளி அதிகமாகுதோ அங்கே நடப்பதெல்லாம் காட்சிப்பொருளாக மாறுது. மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள்.

சித்தரிக்கப்படுகிற அரசியலுக்கும், அன்றாட வாழ்க்கைக்காக உழைப்பாளி மக்களின் போராட்டம் நடக்கும் பொதுவெளியின் (அதில் இருக்கும் சாதியம், மத நம்பிக்கைகள், நலத் திட்டங்களை அறிவித்து அது சார்ந்து நடக்கும் ஒரு அரசாட்சியில் அத்திட்டத்தின் பயனாளியாக - உலகவங்கி சொல்லாடலில் stake holder - இருக்கும் மக்களின்) அரசியலுக்கும் உள்ள இடைவெளிதான் பேசப்பட வேண்டியது. இதில் அரசியல் பொருளாதாரத்தோட பங்கு என்ன? உலக மயமாக்கம் மூலமாக பன்னாட்டு மூலதனங்களோட அரசியல் திட்டங்கள் என்ன? பொதுத்தளத்தில் இயங்கும் அரசியல் கட்சிகள் உலகமயத்தில் அவர்களுக்கான பங்கை எப்படி பெறுகின்றன? அடிப்படையான பிரச்னைகளை முன்வைக்கும் இடதுசாரிகள்கூட இந்த இடைவெளியை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் இல்லை என்பதுதான் சமீபகாலத் தேர்தல்களில் வெளிப்படும் கவலையளிக்கிற அம்சம். இடதுசாரிகளுக்கு மக்கள்மீது, மக்கள் ஜனநாயகத்தின் மீது, மக்கள் நிர்ணயிக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை இருக்கிறதென்றாலும், எந்த மாதிரி பிரச்னைகளை முன்வைப்பது, ஜனநாயக நடைமுறையில் எதை நிகழ்ச்சி நிரலாக்கனும் என்பதும் இன்றைய இடப்பங்கீடு, திட்டங்கள் அறிவிக்கும் அரசியலில் பின்னுக்கு போயுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் அரசும் பொதுநீரோட்ட அரசியல் அமைப்புகளும் முன்வைத்த வளர்ச்சிங்கிறது யாருக்கானதுன்னு கேள்வி எழல. மக்களுடைய பிரச்சினைகளாக யார் எதை முன்வைக்கிறார்கள்? தமிழ்நாட்டில் இன்றைக்கு எரியும் பிரச்சினை என்னன்னு கேட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் தீர்க்க வேண்டியது இன்னின்னதுதான் என்று சொல்ல எந்த கட்சியாலும் முடியாது. யார் எதை செய்ய தவறியிருக்கிறார்கள் என்று பட்டியலிடுவது ஒன்று. ஏன் செய்யத் தவறினார்கள் என்று ஆய்வு செய்வது ஒன்று. இடைவெளியை பராமரிப்பதில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது, எந்த பிராசஸில் இடைவெளி பராமரிக்கப்படுகிறது என்று இந்த ஆய்வில் பேசலாம்.

தமிழ்: வர்க்க அரசியலை நோக்கி சின்ன அசைவுகூட ஏற்படாத நிலை அரசியலுக்குள் நீடிக்கிறது. அரசியல் விழிப்புணர்வு இயக்கமாக இடது சாரிகள் உட்பட யாருமே செய்யாத நிலையிலேயே - அதன் தொடர்ச்சியாக தேர்தலும் வருது... இந்த இடைவெளியைப் பற்றி சொல்லறீங்களா?

செந்தில்: எலிமெண்டரி பொலிட்டிகல் சோசியலாஜியில் எழுப்பப்படும் கேள்விகள்: ஒரு சமுதாயத்தில் அரசியல் நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்தறதுக்கான அமைப்புரீதியான ஏற்பாடு என்ன? என்பது. மக்கள் ஜனநாயகம் அல்லது பாராளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பை உத்திரவாதப்படுத்தும் அரசியல் அமைப்புகளாக கட்சிகள்தான் இருக்கு. இந்த கட்சிகளில் இருக்கிற அரசியல் வர்க்கத்தோட (இது எல்லா வர்க்கத்திலிருந்தும் வந்திருக்கலாம்) வர்க்கப்பின்னணி என்ன, அவர்கள் யாரை மக்களாக பாவித்து பங்கெடுக்க வைக்கிறார்கள் - அந்த மக்களின் வர்க்க பின்னணி என்ன?

இன்னிக்கு கிராமப்புறத்தில் பிசிக்கல் செக்ரிகேஷன் ஒரு பிரச்சினையா இருக்கு. சேரி - ஊர் பிரச்னை. அல்லது சேரியில் உடல் உழைப்பை செலுத்தக்கூடிய தனிநபர் தொழிலாளி, அவரது குடும்பம், அது சார்ந்த வாழ்வியல் அனுபவத்துக்கும் அரசு அமைப்புக்குமிடையே மோதல்களும் உரையாடல்களும் உறவுமுறைகளை கட்டமைப்பதும் அன்றாடம் நடக்குது. அதேநேரத்தில் இந்த அரசுக்கும், அரசியல் வர்க்கத்திற்கும் அன்றாட உறவு முறைகள் கட்டமைக்கப்படுது. இதற்கும் தாண்டி அரசியல் பொருளாதார காரணிகளையும் சேர்த்துப் பார்த்தால், தூரத்தில் இருக்கக்கூடிய மக்கள் தூரத்தில்தான் இருக்கனும்கிறதும் - இவங்களுடைய பிரச்னைகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியலில், எந்தளவுக்கு தூரத்துல இருந்து இந்த பிரச்னைகள் சித்திரிக்கப்படுதோ அதுதான் மெய்ன்ஸ்ட்ரீம் பாலிடிக்ஸ்சா இருக்கு. இடைவெளிகள்னு நான் சொல்றது இதைத்தான்.

இதில் யாருக்கு அதிகமாக அங்கீகாரம் கிடைக்கும்கிறதாக தேர்தல் வருது. எல்லோருமே ஒரேமாதிரி தான் அரசியல் பண்றோம். நாம் ஒரு பண்பாட்டு ஊழியனாகவோ தீவிர இடதுசாரி சிந்தனையாளனாகவோ மாறும்போது திடீரென உழைப்பு எங்கிருந்து வருது? மக்கள் பிரச்னை எங்கிருந்து வருது... எது மக்கள் பிரச்சினை... எதில் கால்வைப்பது... எதை தீர்ப்பது.. இந்த விசயத்தை எங்கே பேசணும்....? தடுமாற்றம், குழப்பமான மனநிலைக்கு இடதுசாரிகள் நிலையாக தள்ளப்படுகிறார்கள்.

வர்க்க அரசியல் பேசப்படவேண்டிய விசயம்தான். அதில் பாராளுமன்ற அரசியலையும் தாண்டி ஏன் வர்க்க அரசியல் இருக்கணும்கிறதைப் பற்றி பேசணும். கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற அரசியலில் கலந்துகிட்டதே வர்க்க அரசியலோடு மெய்ன்ஸ்டீரிம் பாலிடிக்ஸ்ல ஒருபகுதியினரை மாத்தணும்கிற அடிப்படையிலதான். மாறமாற வர்க்க அரசியல் பேசப்படாத விஷயமாகவும், கட்டமைக்கப்பட்ட, சித்திரிக்கப்பட்ட அரசியல் தளத்தில் மட்டுமே, ஒரு அங்கீகாரத்தை நோக்கியே போய்கிட்டே இருக்கிறோம்னா அது கவலைப்படவேண்டிய விஷயம்.

ஜனநாயகத்தில் ஒரு தலைமை தேவை. அதை மக்கள் தேர்ந்தெடுக்கனும். முடிவெடுக்கறதுக்கு ஒரு அமைப்பு தேவை. அந்த அமைப்பில் பங்கெடுக்கிற ஒரு வழிமுறையாகத்தான் தேர்தல் நடக்குது. பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்ததும் நம்முடைய வேலை முடிந்ததாக நினைக்கிறோம். பிறகு அவர்கள் தான் மக்களுக்காக பணியாற்றுவதாக கருதறோம். அவங்கதான் வளர்ச்சிங்கிறதை நிர்ணயிக்கிறாங்க. பொதுவாகவே வளர்ச்சின்னா ரோடு போடுவது, பில்டிங் கட்டுவது, ஆஸ்பெட்டல் கட்டுவது. நலத்திட்டங்கள் என்றாலே கான்கிரீட் பில்டிங்ஸாகத்தான் பார்க்கப்படுது. அதாவது கான்ட்ராக்ட், கான்கிரீட். வர்க்கமோ, தனிநபரோ, உழைப்பாளி குடும்பத்தின் வாழ்வியல் பிரச்சினைகள், கல்வி, வேலை, சுகாதாரம்கிற பிரச்சினைகள் வளர்ச்சி என்கிற வட்டத்துக்குள்ளேயே வராமல் இருப்பதைத்தான் இடைவெளி என்கிறேன்.

தமிழ்: கடந்தகால வாழ்வியல் பிரச்னைகளின் தொடர்ச்சியாக தேர்தல் பார்க்கப்படுவதில்லை. ஐந்து வருசத்துல எத்தனையோ போராட்டம் நடந்திருக்கு. ஆனால் தேர்தல் வந்ததுமே அது எதுவும் மக்கள் மனசில் இல்லாத மாதிரி புதியதாக ஒரு நாடகம் ஆரம்பிக்கிற மாதிரி இருக்குது. வை.கோ அங்கிட்டு போனார் இங்கிட்டு போனார்ங்கிற மாதிரி விஷயத்தில் ஜனங்க குஷியாயிடறாங்க... சொல்லப்போனால் ஒரு விளையாட்டு மாதிரி, இல்லேன்னா எம்.ஜி.ஆர், நம்பியார் கத்தி சண்டை போடுற மாதிரி இருக்கு. அதில் ஜனங்களே பார்வையாளராக மாறிடறாங்க. தேர்தலில் பங்கெடுக்கிறதுக்கு பதிலா மக்கள் பார்வையாளராக மாறி ரெண்டு பக்கமும் அப்படி போடு இப்படி போடுன்னு குஷியாயிடறாங்க. தனக்குள்ள ஒரு பகுதியாக நினைக்காம, தனக்கு வெளியில் நடக்கிற விஷயமாக தேர்தலைப் பார்க்கிற மனோபாவம் இருக்கு. வை.கோ அடிப்படையில ஒரு தார்மீகத்தை இழந்துட்டார்னு யாரும் நினைக்கிறதில்லை. பரவாயில்லையே அந்த அம்மா அந்தப் பக்கம் அவரை இழுத்துட்டாங்க பாத்தியா...இப்ப அவர் என்ன செய்யறார்னு பார்ப்போம்கிற சுவாரசியமான மனநிலைதான் இருக்கு. அதனால இது ஒரு கேம் ஆயிடுது. கேம்ல யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கிறதாகவும், அது ஒரு வகையில் பழைய அரண்மனை அரசியலில் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, முடிவை தெரிந்து கொள்கிற நிலையில் தான் மக்கள் இன்னும் நீடிக்கிறாங்கன்னும்தான் தோணுது. இதுதான் முக்கியமான இடைவெளியாக இருக்கு. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து பங்கெடுக்க வேண்டிய மக்கள் பார்வையாளராயிடறாங்க.

ரமேஷ்: மக்கள் வேடிக்கைப் பார்க்கிறவங்களா இருந்தா இவ்வளவு மாற்றங்கள் வருமா? இந்தி திணிப்பு, காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி, எம்ஜிஆர் சுடப்பட்டதெல்லாம் முன்னுக்கு வந்து 1967ல் ஒரு ஆட்சி மாற்றம் நடக்கலையா?

தமிழ்: முடிவை மக்கள் தான் எடுக்கிறார்கள். ஆனால் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து அல்லது உண்மையான அரசியல் பிரச்சினைகளை புரிந்து கொண்டு முடிவெடுக்கறாங்களா?

பால்கி: காங்கிரசை முன்நடத்தியவர்கள் பெரும்பாலும் மேட்டுக்குடியினராக இருந்த நிலையில், திமுக தலைவர்களோ விவசாயம் அல்லது தொழிலாளர் நிலையிலிருந்து - தன்னுடைய பகுதியிலிருந்து தலைவர்கள் உருவானார்கள் என்பது திமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணி.

ஆதவன்: இந்தி, காங்கிரஸ், எம்ஜிஆர் சுடப்பட்டது இதெல்லாம்தான் அன்றைக்கு மக்களுடைய உண்மையான பிரச்னையா இருந்ததா? மக்கள் ஓட்டு போடுவதை தீர்மானிக்கும் விஷயமாக இதெல்லாம் இருந்ததா? என்பதுதான் இப்போது வரை நாம் பேசும் விஷயம்.

செந்தில்: வெவ்வேறு கட்சிகளாக இருந்து கட்டமைக்கப்பட்ட அரசியலைச் சேர்ந்த ஒன்றையே பேசுகிற மாதிரி காங்கிரசை தோற்கடிச்சதுக்கும், திமுகவை ஜெயிக்க வைத்ததுக்கும் மக்களுக்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் இந்தி திணிப்புக்கு எதிராகவோ, எம்ஜிஆர் மீதான அனுதாபமாகவோ, அப்படியே நீட்டித்தால் இந்திராகாந்தி சுடப்பட்டது, ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது வரை பேசலாம். தமிழ்ச்செல்வன் சொன்னமாதிரி அரசாங்கத்தோடு, அல்லது ஒரு கட்சியோடு அவங்களுங்கு இருக்கும் பிணக்குகள் அவங்க செய்த கொடுமைகள், எல்லாத்தையும் மறந்திட்டு வேறு ஏதோ ஒன்றை முன்னிட்டு எப்படி வாக்களிக்கப் போறாங்க? என்பதைத்தான் இப்போ பேசணும்.

ரமேஷ்பாபு: ஒரு கட்சி தன் உறுப்பினரை எதை நோக்கி திருப்பி விடுதுங்கிறது தான் முக்கியம். அந்த உறுப்பினர்தான் தன் பகுதிக்குள் இன்னதுதான் பிரச்னை என்று கொண்டு போகிறார்.

தமிழ்: மக்கள்னு நாம் சொல்வது திமுக அதிமுகவில் இருப்பவர்களையும் தான். ஆனால் அவங்க தங்களை ஒரு வர்க்கமாக உணர்வதில்லை. தான் ஒரு விவசாயி, அல்லது தொழிலாளி என்கிற உணர்வும் அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்து அவர்கள் அரசியலைப் பார்ப்பதில்லை. அந்த அர்த்தத்தில் பார்வையாளராகத்தான் இருக்காங்க. அவர்களை அரசியல்படுத்தாத நிலையில் திமுக அல்லது அதிமுக-காரராகத்தான் தேர்தலை சந்திக்கிறாங்க.

ஆதவன்: இந்த கட்சிகளில் இருக்கிறவர்கள் ஒரு காலத்திலும் தன் கட்சி தன் பிரச்சினையை பேசவில்லை என்று புகார் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கட்சிகள் மக்களோட பிரச்சினைகளை வேறொன்றை சொல்லி மறைக்கலாம் அல்லது மறந்திருக்கலாம் ஆனால் ஏன் மக்களும் தங்களோட பிரச்சினைகளை மறந்துவிட்டு தேர்தலில் பங்கேற்கிறார்கள்.

செந்தில்: திராவிட அரசியல் என்பதே உணர்வுநிலை, அடையாளம் சார்ந்த ஒன்றுதான். தமிழ் என்கிற உணர்வுநிலையிலிருந்து தொடர்ச்சியா மக்கள் திரளில் ஒரு பகுதியை ஒரு கொள்கை ரீதியாகவோ அமைப்பாகவோ திரட்டுவதுதான். உணர்வு, அடையாளம் சார்ந்த பிரச்னைகளில் ஒரு அமைப்பு ரீதியான அரசியல் வெளிப்படும்போது தனிநபராகவோ, குழுவாகவோ மக்கள் அதில் இணைகிறார்கள். பொதுமேடை, பொதுக்கூட்டம், மேடைப் பேச்சு சார்ந்து திராவிட அரசியலில் மாணவப் பருவத்தில் அநேகமாக எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு. இந்த மாதிரியான ஒரு கலாச்சாரத்தில் நாமே ஒரு ஆளாக மாறுகிறபோது, இது யாரோட மேடை, இது யாருக்கான பேச்சு என்று கஷ்டப்பட்டுத்தான் பகுத்தறிய முடிகிறது. அது வரை எல்லோருமே அந்த களத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப்பற்றி விவாதிப்பதுதான் ஒரு தேர்தலின் பிரச்சாரமாக அமையப்போகிறது. காவேரி பிரச்னை மாதிரி பகுதி வாரியாக அல்லது உள்ளூர் அளவில் யார் சாலை போட்டார்கள், கட்டிடம் கட்டினார்கள் என்பது மாதிரியான பிரச்னைகள் வரலாம். ஒரு தொழிலாளி ஆலைக்குள் தொழிற்சங்க உறுப்பினராக இருக்கிறான். ஆனால் வெளியே குடியிருப்பில் அண்டை வீட்டானாகவோ அல்லது வட்டி கொடுத்து வாங்குகிற இருவரில் ஒருவராகவோதான் இருக்கிறார். அங்கே அவருக்கும் தொழிற் சங்கத்துக்கும் எந்த உறவும் இல்லை. அதேமாதிரிதான் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பவருக்கும், அந்த கட்சிக்கும் இருக்கின்ற உறவும். அதனால் பார்வையாளர் பங்கேற்பாளர் அன்னியமாதல் என்பதெல்லாம் இரண்டுக்கும் ஒன்றுதான். பொதுநீரோட்ட அரசியல் என்று இருப்பதற்கும், அணி திரட்டப்பட்ட அரசியலுக்கும் பல இடைவெளிகள் இருக்கு. இந்த இடைவெளிகள்தான் அடிப்படையாக இருக்கு. அணிதிரட்டப்பட்ட அரசியல் மீதே நம்பிக்கை இல்லாத ஒரு வெகுஜன அரசியலாக - உணர்ச்சிவயமான அரசியலாக இருக்கும் திராவிட அரசியல் கலாச்சாரத்தில் அந்த இடைவெளி அதிகமா இருக்கு. அப்போ அணிதிரட்டப்பட்ட அரசியலில் இருக்கும் மதச் சார்பற்ற தன்மையும் ஜனநாயகத் தன்மையையும் அர்த்தமுள்ள அரசியல் தளமாக மாற்றக்கூடிய -ஜனநாயகத்தின் மீது (இடதுசாரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை) நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைக்க வேண்டியிருக்கு.

இதில் தன்னோட நலனை அந்த அமைப்பு பிரதிபலிக்கணும் என்ற விசயம் நடக்கிறதே இல்லை. தினமும் மாலை நான்கு மணிக்கு அண்ணா அறிவலாயத்திலிருந்து கருணாநிதி விடுக்கிற அறிக்கைகள், அதற்கு ஜெயலலிதா கொடுக்கிற மறுப்புகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், அவை எந்த ஒரு துறையிலும் இருக்கின்ற உண்மையான பிரச்னையை பேசவில்லைன்னு அறிய முடியும். அதுமட்டுமல்ல. எல்லாருமே ஸ்டேட்மெண்ட் விட்டே அரசியல் நடத்திவிடலாம்கிற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இந்த கட்சிகளில் ஒரு கிராமவாசி எந்த அடிப்படையில் உறுப்பினராகிறார். எப்படி நீடிக்கிறார்? ஆனால் மேலோட்டமாக இந்த தேர்தலில் என்ன போக்கு முன்னுக்கு வருது... தொங்கு சட்டசபைதான் வருமாமே, என்பது மாதிரியான யூகங்கள் புழக்கத்துக்கு வந்தாச்சு. இந்த சொல்லாடலில் இருக்கின்ற சுவாரசியத்தில்தான் மக்கள் மூழ்கடிக்கப்டுகிறார்கள்.

தமிழ்: தேர்தல் வந்துட்டாலே அதுக்குன்னு ரெடிமேடாக தனி மொழி, சில வார்த்தைகள், சம்பவங்கள், கருத்துக்கணிப்புகள், சில ஏற்பாடுகள் இதெல்லாம் இருக்கிறமாதிரி தெரியுது. மக்களும் ஈடுபாடு காட்டத் தொடங்கி விடுகிறார்கள். வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடாக மக்கள் ஒரு அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அந்த உண்மையான அரசியலை மறந்துட்டு ஐந்து வருடத்தோட தொடர்ச்சியாகத்தான் தேர்தல் வருதுங்கிறதை - தேர்தலுக்கு அப்புறமும் நம்ம வாழ்க்கை தொடரப் போகுதுங்கிறதை - மறந்துட்டு மக்கள் தேர்தலை சந்திக்கிறதுதான் முக்கியமான பிரச்னை.

இடதுசாரிகளை மக்கள் வித்தியாசப்படுத்தி பார்ப்பது அவர்களின் வர்க்க அரசியலின் காரணமாக இல்லை. எல்லாரைவிடவும் இவங்க நல்லவங்க - லஞ்சம் ஊழல் இல்லாதவங்க - பாராளுமன்ற ஜனநாயகத்துடைய நல்ல வடிவமாகத்தான் இடதுசாரி அரசியல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவங்ககிட்ட வர்க்க அரசியல் இருக்குது - அதனால வித்தியாசமானவங்க என்று கருதல. இந்த இடைவெளி ரொம்ப முக்கியமானது. இந்த தேர்தல்ல 23லும் ஜெயித்து வந்தாலும் ஒண்ணும் நடக்கப் போவதில்லை.

செந்தில்: பார்வையாளராயிருப்பதும் அல்லது பங்கேற்பாளராயிருப்பதும் அரசியலில் வகிக்கக்கூடிய ஒரு பாத்திரம்தான். பார்வையாளராக இருந்து, ஒரு அரசியல் முடிவை எடுக்கிறாங்க இல்லையா, அந்த இறுதி முடிவை எந்த மாதிரியான கட்டாயங்களிலிருந்து எடுக்கிறார்கள்?

செந்தில்: இப்போ கிராமப்புற மக்களிடம் தலையாய பிரச்சினை எதுன்னு கேட்டால் பிழைக்க ஊர்விட்டு ஊர்போவதுதான் என்பார்கள். ஊர்விட்டு ஊர்போவதை தவிர வேறுவழியில்லை, போனால்தான் பிழைக்க முடியும்னு நம்பும் அந்த ஊரின் உண்மையான பொதுத்தளம் ஏன் வேலை கிடைக்கலேன்னு கேள்வி எழுப்பாது. கேள்வி எழுப்ப அவர்களை அரசியல் படுத்துவது யாருடைய வேலை என்பதிருக்கட்டும். ஆனால் இடம்பெயர்ந்து போகும் கிராமப்புற மக்களைப் பற்றி கட்டமைக்கப்பட்ட, சித்தரிக்கப்பட்ட அரசியல் பொதுவெளியில் என்ன கருத்து இருக்கு? இடம்பெயர்ந்து போகிறவர்களை ஒரு வாக்கு வங்கியாகக்கூட அது கருதுவதில்லை. ஆனால் எப்படியோ கடைசி நேரத்தில் அவர்களை வாக்காளராக பங்கெடுக்க வைத்துவிடுகிறது. அந்த மக்களின் பிரச்னை என்னவோ விவாதிக்கப்படாததாகவே இருக்கு.

ராமச்சந்திரன்: இடப்பெயர்ச்சிக்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ காரணமில்லைன்னு யோசிக்கிறாங்க. வேலை கிடைக்கலேன்னா நாம் குடிபெயர்ந்து போகணும்தான் என நம்புறாங்க. இதைவிட்டால் வேறுவழி இல்லைன்னு அவங்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதுதான் இந்த கஷ்டம்.

ஆதவன்: பஞ்சம் பிழைக்கப் போவது என்பது அவங்களோட தனிப்பட்ட குடும்பம் சார்ந்த விசயமாக குறுக்கப்படுது. அந்த இடத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளோ, மற்ற கொள்கை கோட்பாடுகளோ உள்ளே வருவதில்லை. மழைமாரி பெய்யல, வேற ஒண்ணும் வழியில்லேன்னு நம்பறாங்க.

தமிழ்: போகிற இடத்திலும் இங்கே வச்சிருந்த அரசியல் பிடிப்போடு தான் ஒருவர் இருக்காங்க. தேர்தல் நேரத்தில் மூட்டை முடிச்சோடு ஊர் வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்புறாங்க. அடுத்ததாக, பஞ்சத்துக்கு காரணம் ஜெயலலிதா, கருணாநிதி மட்டுமேன்னு சொல்லிட முடியுமா? ஐம்பது வருச பொருளாதாரக் கொள்கையோட தொடர்ச்சிதானே இது. இதில் எந்தக் கட்சிக்கும் மாற்று அபிப்பிராயம் கிடையாதே... அதை வித்தியாசப்படுத்தி பார்க்கிற அரசியல் கண்ணோட்டம்தான் முக்கியம். அது எந்த தேர்தலிலும் நடக்காதபோது எந்த வித்தியாசமும் தெரியாத ஒரு விளையாட்டா மாறிடுது.

ஞானசேகரன்: சொந்தப் பிரச்னைகளோடு மக்கள் தேர்தலை இணைத்து பார்ப்பதில்லை. எந்த பக்கம் அதிகமாக கூட்டம் திரட்டப்படுகிறதோ, அந்த பக்கம் போய்விடுபவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்: சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து காங்கிரசுக்கு ஓட்டு போடும் குடும்பங்கள் இப்பவும் இருக்கு. அதிமுக வாக்கு வங்கியில் பெரிய சரிவு நடக்கல. அவங்களோட பொதுப்புத்தியில் அரசியல்னு எது இருக்கு என்று பார்க்க வேண்டியுள்ளது. பிறகு நியாயம்னு மக்களிடம் ஒரு கருத்து இருக்கு. ஓட்டுக்காக ஒரு குடம் கொடுத்தாங்க, வாங்கியாச்சு.. போடாம இருக்கிறது என்ன நியாயம்னு யோசிக்கிறாங்க.

செந்தில்பாபு: மக்கள் எப்போதும் கும்பல் மனப்பான்மையோடு செயல்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தங்களுடைய கோபங்கள், அபிலாஷைகள் தெரிவிக்க பல்வேறு சிறுசிறு ஜனநாயக அமைப்புகளை உருவாக்கி இருக்காங்க. அது சுயஉதவிக் குழுக்களாக இருக்கலாம் அல்லது சாதி அமைப்புகளாகவும் இருக்கலாம். சாதி ஆதிக்கம், நிலவுடமை சார்ந்த சுரண்டல் ஆதிக்கம் இருக்கிறபோதேதான் கிராமப்புறங்களிலும் இப்படிப்பட்ட சின்ன சின்ன அமைப்புகள் உருவாகுது. உள்ளூர் அளவிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கும், இந்த சிறுசிறு அமைப்புகளுக்கும், அரசியல் அரங்கத்தில் - தேர்தல் காலத்தில் எப்படிப்பட்ட உறவுமுறை இருக்கு? இந்த அமைப்புகள் சுரண்டலுக்கு எதிரான கோபத்தை மட்டுப்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. எல்லாமே அப்படியல்ல. சிலது மட்டுப்படுத்தலாம். அதிகரிக்கச் செய்வதாகவும் இருக்கலாம்.

வாக்குகளை திரட்டித் தரக்கூடிய ஒரு வலுவான அமைப்பாக சுயஉதவிக் குழுக்கள் இப்போ மாறியிருக்கு. நம்மால் அவற்றுக்குள்ளிருந்து இயங்குவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ இயலாததனாலயே அவற்றை நிராகரித்துவிட முடியாது. உள்ளூர் அளவில் மக்களை திரட்டக்கூடிய ஒரு அமைப்பாக அது மாறியிருக்கிறது.

தமிழ்: ஏற்கனவே இருக்கிற சாதிரீதியான அணித்திரட்சி மாதிரி சுயஉதவிக் குழுக்களும், ஒரு வாக்கு வங்கி. இந்த மாதிரி வேறுவேறு வடிவத்தில் நிறைய வாக்கு வங்கிகள் உருவாகலாம். அதைப்பார்த்து நாம் பதட்டமடைய வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் சுயஉதவிக் குழுக்கள் வாக்கு வங்கியாக மாறுகிறது. மற்ற நேரங்களில் பெண்கள் சுயமாக இயங்குகிற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கு. ஆனாலும் பெண்களை அதிகாரப்படுத்துவதற்குப் பதிலாக அரசின் வளர்ச்சித் திட்டங்கள், கடன்கள், பெறுகிற அமைப்புகளாக அதனுடைய செயல்பாடுகள் குறுகியுள்ளதால் அவை ஒரு வாக்கு வங்கியாகத்தான் இருக்கமுடியும். தங்களைத் தாங்களே புரிந்துகொள்கிற, உலகத்தைப் புரிந்துகொள்கிற, கற்றுக்கொள்கிற ஒரு உள்ளூர் சமூகமாக சுயஉதவிக் குழுக்கள் தம்மை உணர்ந்து செயல்படும் பட்சத்தில் அவை ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக மாறமுடியும். அப்படி மாறுவதற்கான வழிமுறையைக் கண்டடைவதும் ஒரு பண்பாட்டு ஊழியனுடைய பணியாக இருக்கவேண்டும். அதைச் செய்யாமல் தேர்தல் காலத்தில் அவற்றை வாக்கு வங்கிகள் என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது.

பால்கி: மேதாபட்கரும் சி.கே. ஜானுவும் உருவாக்கிய அமைப்புகள் அந்த மக்களுடைய பிரச்னைகளுக்காக மட்டுமில்லாம புஷ் எதிர்ப்பு இயக்கத்திலும் முன்னணியில் இருந்ததே. எல்லா சுயஉதவிக் குழுக்களையும், அல்லது தொண்டு நிறுவனங்களையும் ஆட்சியாளர்கள் தங்களுடைய வாக்கு வங்கிகளாக பயன்படுத்திவிட முடியாது.

ஆதவன்: ஒரு நாட்டோட வளர்ச்சியை என்னுடைய சொந்த வாழ்க்கையில் உணராமலேயே நான் இந்த சமூகத்தின் குடிமகனா இருக்கிறேன். இதை தேர்தலுக்கு முன்பும் பேசுவதில்லை. தேர்தலின்போதும் பேசுவதில்லை. இது பற்றின என் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக தேர்தலைப் பார்க்காமல் எத்தனை சீட் எந்த தொகுதி என்ற கவலையில் சுருங்கிப் போகிற ரெட்டை மனநிலையிலிருந்து விடுபட்டு தேர்தலை எப்படி பார்க்க வேண்டும்?

செந்தில்பாபு: தேர்தல் முறை மீது அவநம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த ஜனநாயகமுறை மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் யாருக்கு இருக்கிறது? சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் இயக்கங்கள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பும், இன்றைக்கு சிலர் சொல்லும் புறக்கணிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்றைக்கு புறக்கணிப்பென்பது பொருத்தப் பாடற்றதாக இருக்கிறது.

தமிழ்: பாராளுமன்ற ஜனநாயகம் உட்பட இங்கிருக்கும் ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் முதலாளித்துவத்துக்கு சேவை செய்பவைதான் என்ற பார்வை இருக்கு. உழைப்பாளி மக்கள் போராட்டத்தின் மூலமாக தங்களோட இயங்கும் வெளியை விரிவுபடுத்திக்கொண்டே வருவதின் ஒரு பகுதிதான் தேர்தலில் பங்கெடுப்பதும். அவர்கள் போராடித்தான் இதை அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதை நிராகரிக்கணும்கிற கருத்து தொழிற் சங்க அரங்கத்திலும் சில இடதுசாரி அமைப்புகள் தனிநபர்களிடமும் இருக்கிறது. நாம் போராடிப் பெற்றது என்ற உணர்விலிருந்து அதை கைப்பற்ற வேண்டும் என்று பார்த்தால்தான் அதில் மக்களை பங்கெடுக்க வைப்பதற்கான பணிகளில் இடதுசாரிகள் ஈடுபட முடியும். அந்தளளவிற்கு நாம் இருக்கிறோமா? எத்தனை முறை அலைக்கழிச்சாலும் புகைப்பட அடையாள அட்டை எடுக்க மக்கள் ஆர்வமாகத்தான் பங்கெடுக்கிறாங்க. அதற்கு அவர்களை திரட்டுவதில் மற்ற கட்சிகள் காட்டிய அளவிற்கான அக்கறை இடதுசாரிகளுக்கு இருந்ததாக சொல்லமுடியாது. தயாரிப்பில் பங்கேற்காமல் தேர்தலின்போது மக்களை குற்றம் சொல்லமுடியாது. தேர்தல் பற்றி தாமரை இலை தண்ணீர் மாதிரியான ஒரு மனநிலை நமக்கிருக்கு. வர்க்க அரசியலை முன்வைத்த போராட்டத்தில் தேர்தலில் பங்கெடுப்பதும் ஒரு பகுதிதான். அதேநேரத்தில் தேர்தல் என்றதும் இடதுசாரி ஊழியர்களிடையே ஒரு பகுதியினருக்கு உற்சாகம் பிறக்கிறது. விடுப்பு எடுத்துக் கொண்டெல்லாம் வேலை பார்க்கிற மனநிலை இருக்கு. தேர்தலை முக்கியம்னும் முக்கியமற்றதுன்னும் கருதுகிற இருவேறு கருத்துகளும் இருக்கு.

செந்தில்: அமைப்போட கருத்தாக இதை எடுத்துக்கக்கூடாது. ஒரு தனிப்பட்ட இடதுசாரி செயல்பாட்டாளனாக சொல்றதுன்னா, பாரம்பரியமா உழைப்பாளி மக்களோட போராட்டத்துக்கும் ஜனநாயகத்தளம் அவசியம்னு தியாகம் செய்து, நம்மோட வரலாற்றை நாமே கட்டமைத்து தான் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம். உலகமயமாக்கலுக்கு எதிராக - சுயாதிபத்தியத்துக்கான போராட்டத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும் ஒரு பங்கிருக்கு. சுதந்திர போராட்ட காலத்தில் தேர்தல் களத்தை உழைக்கும் மக்களோட அரசியலை பேசக்கூடிய வெளியாக பயன்படுத்தும் உறுதியோடு தேர்தலில் இடதுசாரிகள் பங்கேற்றனர். ஆனால் காலப்போக்கில் எப்படியாய் இருந்தாலும் நாம் வெற்றிபெற வேண்டும்கிற கருத்து மேலோங்கி உழைப்பாளி மக்களின் அரசியலைப் பேசும் களம் என்கிற நிலை பின்னுக்குப் போய்விட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு இடதுசாரிகளுக்கு தேர்தலும் ஒரு போராட்ட வடிவம்தான். அப்படியொரு திட்டவட்டமான தேர்தல் உத்தி இடதுசாரிகளிடம் இன்று ஏன் இல்லாமல் போனது? அல்லது அப்படி ஏதேனுமொன்று இருக்கா என்ற கேள்வி எனக்குள்ள முதல் பிரச்னை.

அடுத்தது, உள்ளூர் அளவில் இருக்கக்கூடிய ஆதிக்க சக்திகள் கட்டமைத்திருக்கும் அணிதிரட்டப்பட்ட அரசியல்மீது அப்பகுதியின் உழைப்பாளி மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையையும், உள்ளூர் யதார்த்தங்களையும் கணக்கில் கொண்டு செயல்படும் வாய்ப்பு ஒரு இடதுசாரி ஊழியனுக்கு இருக்கிறதா? அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில்தான் அந்த அரசியல் வெளியை தகவமைத்து இங்கே பேசப்படவேண்டிய விசயங்கள் இவைதான் என்று என்னால் தீர்மானிக்க முடியும். இந்த இரண்டு விசயமும் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக பின்னுக்குப் போயிருக்கிறது. அங்கீகாரம் தேடும் அரசியலில் தேர்தலை ஒரு போராட்டமாக, என் கருத்துக்களை பிரச்சாரம் செய்யக்கூடிய வடிவமாக கருதும் பார்வை மாறியிருக்கிறது. அப்படியானால் என் அரசியலை பரந்த மக்களிடம் நான் பேசும் வெளி எது?

எஸ்.ராமச்சந்திரன்: மற்ற கட்சிகளை போலவே இடதுசாரிகளுக்கும் தேர்தலின் மீது மோகம் வந்துவிட்டதா?

செந்தில்: மோகம்னு சொல்லமுடியாது. வர்க்க அரசியலை நடத்தறதா அல்லது இப்படியே பஞ்சாயத்து தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்னு மக்களை எப்பவுமே வாக்காளரா பாக்கறதா? ஏதாவது ஒன்றை உருப்படியா செய்வோம்கிற தோழர்கள் இருக்காங்க. எல்லாமே நலத்திட்டங்கள், கடன்கள் என்று ஆகிவரும் சூழலில் ஒரு குடிமகன் அதன் பயனாளியாக மாறுகிறான். அப்போது அவனுக்கு அந்த நலத்திட்டங்களை அல்லது கடனை முறையாக பெற்றுத் தருகிற வேலையையாவது அங்கிருக்கும் இடதுசாரி ஊழியன் செய்வதன் மூலமாகத்தான் அப்பகுதியில் அவர் நிலைநிற்க முடியும். ஆனால் அதையும் தங்களால் செய்ய முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

உழைப்பாளி மக்களுடைய அரசியலிலும், பொதுத்தள ஜனநாயக அரசியலிலும், பங்கெடுக்கிறது மூலமாகத்தான் உழைக்கும் மக்களோட அரசியல் நிலை உயரும். அப்போதுதான் ஒரு குணரீதியான மாற்றம் நிகழும்கிற தத்துவார்த்த புரிதல் இருந்தாலும் நான் முன்பு சொன்ன இரண்டு பிரச்சினைகளும் ஒரு இடதுசாரிக்கு உள்ளூர் அளவில் இருக்கிறது.

தமிழ்: இடதுசாரிகள் மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி தேர்தலிலும் பங்கெடுத்து மக்களை எஜுகேட் பண்றாங்க. இடதுசாரிகள் மட்டுமல்ல, அதிகாரம் பொருந்திய சக்திகளும் மக்களை எஜுகேட் பண்றாங்க. கடந்த பத்து பனிரெண்டு தேர்தல்ல இந்த நடைமுறைக்கு பழகிய மக்கள் அவர்களாக ஒரு தெளிவுக்கு வந்து இடதுசாரிகளை என்னன்ன விஷயங்களுக்கு பயன்படுத்தலாம், மற்றவர்களை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற அளவில் மாறிவிட்டார்களா? அதனால் விரக்தியடைந்த இடதுசாரிகள் தேர்தலிலாவது ஜெயிக்கலாமென்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா?

செந்தில் : என் நண்பர்களோ குடும்பத்தாரோ உன் கட்சி என்ன செய்ததுன்னு கேட்டால் நாலு எம்எல்ஏ இருக்கிறார்கள் என்றாவது சொல்ல வேண்டிய - அவர்கள் மொழியில் பேசுவதற்கான கட்டாயம் இருக்கிறது. அதைத் தவிர்த்து உழைப்பு, சுரண்டல், வர்க்கம்னு பேசுறவங்கள விநோதமா பார்க்கிற அல்லது இவன் இப்படித்தான் என்று கேலி பேசும் வழக்கம் தொடருது.

தமிழ்: அப்படி கேலி செய்யறவங்க அல்லது கேள்வி கேட்கறவங்க யாருன்னா மற்ற சிந்தனைகளால் பயிற்றுவிக்கப்பட்டவங்கதான். அந்தத் தளத்தில் போய் இடதுசாரிகள் வேலை பார்க்காம அந்த கேள்வியை எதிர் கொள்ளமுடியாது.

எஸ்.ராமச்சந்திரன்- இத்தனை வருசத்தில் பாண்டிச்சேரி சட்டசபைக்குள் ஒரு சிபிஎம் ஆளும் போகல. வருசம் பூரா கத்திக்கிட்டேத்தான் இருக்கீங்க உள்ள போறதுக்கான வழியப் பாருங்க சார்னு பலபேரும் சொல்றாங்க. நாங்க அதுக்காகவெல்லாம் இல்லேன்னு சொல்றதுக்கும் நாம தயாரா இல்லை. தேர்தல் என்பது ஒரு போராட்டம்தான்னு நாம் சொல்லிக் கொண்டாலும், தேர்தல்ல ஜெயிக்கிறதுதான் அங்கீகாரம்னு ஒரு நெருக்கடியை மற்றவர்களெல்லாம் உருவாக்கியுள்ளார்கள்.

ரமேஷ்பாபு: தேர்தல்ல பங்கெடுக்கறதுன்னு ஆனப்பிறகு ஜெயிக்கலைன்னா யாரும் மதிக்கமாட்டாங்க. அப்ப அதுக்காக வேலை செய்து கூட்டணி போட்டு ஒழுங்கா உள்ளே போறோமா என்றால் அதுவும் நடக்கல.

தமிழ்செல்வன்: ஒருத்தர் ஜெயிச்சிட்டாருன்னா, அடுத்த தேர்தல் வரைக்கும் அந்த வாக்கு வங்கி சிதைந்து விடக்கூடாதுங்கிற மனநிலையோடு அந்த ஐந்து வருடமும் வேலை செய்கிறபோது அங்கே என்ன வர்க்க அரசியல் செய்வீங்க? தேர்தலை மையமாக வைத்த எல்லா சீர்கேடுகளுக்கும் நீங்களும் அடிபணிந்து போக வேண்டியிருக்கும். ஒரு கலை இரவுக்கு ஸ்பான்சர் பிடிக்கிற பண்பாட்டு ஊழியன் அடுத்த கலை இரவு வரைக்கும் அந்த உறவை காப்பாற்றிக் கொள்கிற ஜாக்கிரதை உணர்வோடுதான் பழகுகிறான். அந்த ஸ்பான்சரரை எதிர்த்து எதுவும் பேசமுடியாத தன்மை உருவாகிடுது.

ரமேஷ்பாபு: சங்கராச்சாரியாரை விமர்சித்துப் பேசினால் பார்ப்பனர்கள் ஓட்டு கிடைக்காதுங்கிற அளவுக்குக்கூட அரசியல் பேசாத நிலைக்கு இடதுசாரிகளை தேர்தல் தள்ளுகிறது. இந்த சின்ன சின்ன தடுமாற்றங்களெல்லாம் எங்கே போய் முடிகிறதென்றால் ஒருவேளை அங்கே ஜெயித்தாலும்கூட அங்கே இருக்கிற யாரையும் முறைத்துக் கொள்ள வேண்டாம் என்ற நிலைமை வருது. அந்த வெற்றியை பயன்படுத்தி இயக்கத்தை வளர்ப்பதற்குப் பதிலாக ஓட்டைப் பாதுகாப்பதே குறியாகிவிடுகிறது.

தமிழ்ச்செல்வன்: அப்படி பேசுவதால் ஒரு பகுதியினர் தொந்தரவு அடைகிற அதேநேரத்தில் இன்னொரு புதிய பகுதியினர் ஆதரவாளர்களாக மாறுவதை ஏன் கவனிக்கத் தவறுகிறார்கள்?

செந்தில்: குறுகியகாலத் தேவைக்காக நாம் கடைபிடிக்கும் உத்திகள் நம்முடைய தொலைநோக்கு திட்டத்திற்கு உதவிகரமா இல்லை என்பதுதான் எதார்த்தம். அது கலை இரவுக்கு ஸ்பான்சர் வாங்குவதாக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக ஜெயிச்சாலும் சரி. அப்படியே ஜெயிச்சிட்டாலும் அதை நியாயமான வெற்றியாக ஆக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் பலமான அமைப்பு தேவை. அந்த அமைப்பு பலம் எந்த அடிப்படையில் கட்டமைக்கப்படனும், யாருக்காக நிக்கணும், என்பதுதான் கேள்வி. அந்த பலத்தைப் பற்றி, அதை உருவாக்கியிருக்கும் அடிப்படையைப் பற்றி கேள்வியோ, விமர்சனமோ இல்லாமல் - ஆனால் எல்லாத்துக்கும் நியாயம் கற்பிச்சுக்க முடியும்னு - கட்சி ஊழியர்களின் ஆதங்கத்துக்கு ஈடுகொடுப்பதாக கருதிக் கொண்டு - சரி உள்ள போவம் என்று குறுகிய கால லாபத்திற்காக தொடர்ந்து நியாயம் கற்பிச்சுக்கிற மனநிலை ஒரு இடதுசாரி ஊழியனுக்கு ஏற்படுவதற்கு காரணம் நான் ஏற்கனவே சொன்ன ஊசலாட்டங்கள்தான்.

இரண்டு தேர்தல்களுக்கு இடையில் உள்ள ஐந்து வருடங்களில் அமைப்பின் நடைமுறைக்கும், அரசியல் என்று நான் நம்புகிற போராட்ட அரசியலுக்கும் சம்பந்தம் இல்லாதபோது நான் எங்கே நின்று எதை செய்வதுங்கிற குழப்பம் ஏற்படுது. அந்த நேரத்தில் எப்படியாவது ஜெயிப்பது என்பது உட்பட எல்லா முழக்கமும் என்னை ஈர்ப்பதாகத்தானே இருக்கும்.

தமிழ்: மொத்த சூழலும் குழம்பிக் கிடக்கிறபோது அதற்கொரு தெளிவான தீர்வை நாம் கண்டுவிட முடியாது. சூழல் எப்படியும் இருக்கட்டும், நமக்கொரு வழியை சொல்லுங்க தோழர் என்று கேட்க முடியாது. இந்த சூழலிலேயே உழப்பியடிச்சு மீண்டு வருவதற்கான போராட்டத்திலிருந்துதான் ஒரு தீர்வு கிடைக்க முடியும்கிற மனநிலைக்கு ஊழியர்கள் வரவேண்டும். தேர்தல் பங்கெடுப்பு, போராட்ட அரசியல் ரெண்டையும் இணைச்சு நடத்தியாகனும். இதெல்லாம் எளிதான ஒரு நேர்கோட்டுபாதையில் நடப்பதல்ல. எல்லா நெளிவு சுளிவுகளோடும் வர்க்க அரசியலை நோக்கி மக்களை அழைத்துப் போவதே நம்முடைய வேலையாக இருக்கும். உடனடித் தேவை, தொலைநோக்குத் தேவை என்பதிலேயே எது உடனடி, எது தொலைநோக்கு என்ற கேள்வியும் இருக்கு. சோசலிசம் கம்யூனிசம் தொலைநோக்காகவும், மக்கள் ஜனநாயகம் உடனடி இலக்காகவும் இருக்கு. அதிலேயே பல உடனடி, உடனடி தேவைகள் என்று சுருக்கி சுருக்கி வருகிறபோது இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயிப்பது தான் உடனடி இலக்கு என்கிற இடத்திற்கு வந்து சேர்கிறோம். குறைந்தபட்சம் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை தயார் செய்யக்கூடிய போராட்டங்களில் ஒன்றாக தேர்தலைப் பார்ப்பது உடனடி திட்டம்தானே.

ஆதவன்: நக்சல்பாரி இயக்கத்தினர் ஆரம்பத்தில், தேர்தல் பாதை திருடர்கள் பாதை, பாராளுமன்றம் பன்றித் தொழுவம், பாராளுமன்றத்தில் பங்கெடுப்பவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள், போலி கம்யூனிஸ்டுகள்னு கடுமையாக தாக்கினார்கள். அவர்களது அவதூறுகளுக்கு பதில் சொல்லவும், கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்தவும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் பங்கெடுப்பது குறித்த தத்துவார்த்த கல்வி அப்போது கிடைத்தது. ‘பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது குறித்த கட்சித் திட்டத்தின் 117வது பாரா குறித்து’ என்று பசவ புன்னையா போன்ற தலைவர்கள் பிரசுரம் எழுதினார்கள். இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தில் பங்கெடுப்பதும், வர்க்க போராட்டத்திற்கு அனுசரணையான ஒரு வடிவம்தான் என்பதும் தேர்தல் மூலமாகவே எல்லாம் தீர்ந்துவிடாது என்கிற தெளிவும், அணிகளுக்கு கிடைத்தது. நக்சல்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம், அதனை எதிர்கொண்ட அரசின் ஒடுக்குமுறை, எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவின்றி தனிமைப்பட்டது.... இதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்களில் பெரும்பாலானவர்களும் ‘வேட்டு பொறுக்கி’ அரசியலிலிருந்து ‘ஓட்டு பொறுக்கி’ அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், தேர்தலில் பங்கெடுப்பது பற்றி கம்யூனிஸ்ட்களுக்கு எந்தவித லஜ்ஜையும் எச்சரிக்கையுணர்வும் இல்லாமல் போய்விட்டதா?

நாளாவட்டத்தில் நக்சல்களின் புறவயமான தத்துவார்த்த தாக்குதல் மங்கிவிட்ட நிலையில் தேர்தலில் நிற்கிறதுல என்ன தப்பு என்கிற மாதிரியோ அல்லது தேர்தலில் நிற்காம எப்படிங்கிற மாதிரியோ, தேர்தலில் நிற்பதும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிற - ‘அதுவும்’ என்பதற்கு பதிலாக ‘அதுவேதான்’ என்ற நிலை முன்னுக்கு வந்துவிட்டதாகவும் தோணுது. தேர்தலில் பங்கெடுக்கும் முதலாளித்துவ கட்சியினர் அதன்மூலம் தனிப்பட்ட முறையில் அடையும் ஆதாயங்கள் அதிகாரங்களைக் கண்டு சலனமடையும் மனப்பான்மை இடதுசாரிகளுக்கும் வந்திருக்கிறதா?

அடுத்து, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படையான நோக்கம் நிலபிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களையும் இந்திய பெருமுதலாளித்துவத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதுதான். இந்த ஐம்பதாண்டு காலத்தில் இடதுசாரிகள் நிலபிரபுத்துவத்தின் எந்த மிச்ச சொச்சங்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் அல்லது அந்த அடிப்படையான இலக்குகளை மையமிட்டு நடந்த போராட்டங்கள் என்னென்ன? இந்திய முதலாளித்துவம், பெரிய சுரண்டல் வலைப்பின்னலான உலகமயத்தோடு தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது. உலகமயத்தால் உள்நாட்டுச் சந்தையில் சில இழப்புகளை சந்திக்க நேரிட்டாலும், இந்திய முதலாளிகளில் ஒருபகுதியினர் மற்ற நாடுகளில் கொள்ளையடிக்க வசதி வாய்ப்புகள் உருவாகியிருக்கு. முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டம் அந்தந்த கம்பெனி அல்லது அலுவலக தொழிற்சங்கங்கள் நடத்தக் கூடியதாக சுருங்கி இருக்கேயொழிய ஒரு வர்க்கமாக இருந்து போராடப்படுதா? இந்த இரண்டு தளங்களிலும் ஏற்பட்ட சரிவு அல்லது கவனமின்மையால்தான் தேர்தல்கள் பற்றி இப்படியொரு கூடுதலான பிரமைகளும், அதில் பங்கெடுப்பதில் அளவற்ற ஈடுபாடும் உருவாகியுள்ளதா?

செந்தில்: தேர்தலில் பங்கெடுப்பதை ஒரு வடிவமாகத்தான் இடதுசாரிகள் பார்க்கிறாங்க. இந்திய முதலாளிகள் அன்னிய முதலாளிகளின் தரகர்களா அல்லது சுயேட்சையானவர்களா என்று பார்க்கனும். என்றும் இல்லாத அளவிற்கு இடதுசாரிகளுக்கு பாராளுமன்றத்தில் கூடுதல் பலம் கிடைத்திருக்கிற நிலையில் அதைப் பயன்படுத்தி அமைப்பை பலப்படுத்தவும் செயல்பாட்டை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சில நிர்பந்தங்களும் இருக்கின்றன. ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எடுக்கும் எந்த நிலைபாட்டின் மீதும் ஒரு கறாரான நிலைபாட்டை இடதுசாரிகளால் முன்வைக்க முடியவில்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்க வேண்டும் என்பது அணிகளின் எதிர்பார்ப்பு. ஆனால் நெளிவு சுளிவாகத்தான் தலைமையால் முடிவெடுக்க முடியும். ஏன்?

ஈரான் அணு ஆயுத விசயமாகட்டும், அணுசக்தி பாதுகாப்புத் துறைக்கா அல்லது மற்றதற்கா என்பதாகட்டும் - எந்த வடிவத்தில் எங்கேயும் அணு ஆற்றல் வேண்டாமென்பதுதான் ஒரு யுத்த எதிர்ப்பு போராளிக்கோ அல்லது பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தில் நம்பிக்கையுள்ளவனுக்கோ நியாயமான அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியும். ஆனால் உலகமயமாக்கல் சூழலில் இந்தியாவுக்கு அணுசக்தியோட தேவை என்ன அதில் ஏகாதிபத்தியத்தினுடைய தலையீட்டை எப்படி தடுப்பது என்றெல்லாம் பேசுகிற ஒரு நெளிவு சுளிவான நிலைபாட்டையே எடுக்கவேண்டிய கட்டாயம் இடதுசாரிகளுக்கு இருக்கு. அதேமாதிரி கிராமப்புற எதார்த்தத்தை மையமாக வைத்து நாம் எடுக்கவேண்டிய நிலைபாடு என்ன? உலகமயம் வந்துவிட்ட நிலையில் பாராளுமன்றத்துக்குள் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்ப்பு நிலைபாட்டை உருவாக்குவதோடு தலமட்டத்தில் மக்களை அணிதிரட்டி போராடக்கூடிய இயக்கமாகத்தான் இருக்கமுடியும் என்பதுதான் எல்லா இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு.

முக்கியமான பிரச்சினைகளில் மாற்று திட்டங்களை சொல்வதற்கும் அதை ஏற்காத பட்சத்தில் எதிர்ப்பை உருவாக்குவதற்கும், பாராளுமன்றத்தில் பங்கேற்பது ஒரு தவறான விஷயமாகப் படவில்லை. ஆனால் பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியத் தொழிலாளி / கிராமப்புற விவசாயிக்கும் இருக்கும் உறவுமுறையில் இடதுசாரி வர்க்க அமைப்பான விவசாய சங்கமோ, விவசாய தொழிலாளர் சங்கமோ கையாள வேண்டிய அணுகுமுறை என்ன? உலகமயத்திற்கு எதிரான ஆக்கப்பூர்வமான எதிர்ப்பை மட்டும் உருவாக்கனுமா? அல்லது நிலபிரபுத்துவத்தின் மிச்ச சொச்சங்களை - அதோட சாதிய எச்சங்களை கூலி சார்ந்த நிலம் சாராத ஒரு போராட்டக் குணத்தை வளர்த்தெடுப்பதற்கான வேலையையும் செய்வதா?

ஒருபக்கம் பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கதாக இருக்கிறது. ஆனால் வெளியே நடக்கக்கூடிய இந்தப் போராட்டம் பின்னுக்குப் போவதற்கான காரணம் என்ன? நிலக்குவியலை உடைத்து விட்டோம் என்று பேசுவதற்கு முன்பே பஞ்சாபிலும், ஏன் தஞ்சாவூரிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை ஒரு ஏஜென்சி வாங்கி வெறும் பழத்தோட்டங்களை உருவாக்கும் காண்ட்ராக்ட் பார்மிங் நடைமுறைக்கு வந்தாச்சி. ஆனால் மறுபக்கம் கூலிக்கான, நிலத்துக்கான போராட்டத்திற்கான சாத்தியங்களை பார்க்கிறபோது உலகலாவிய இடதுசாரி தத்துவார்த்த நிலைபாடு ஒன்றை இங்கே பேசவேண்டியுள்ளது.

பன்னாட்டு மூலதனத்திற்கும் இந்தியாவிற்குமிடையே இருக்கும் முரண்பாடு, இந்திய முதலாளித்துவத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்குமிடையே இருக்கும் முரண்பாடு இரண்டில் எது முதன்மையானது என்றால் பன்னாட்டு மூலதனத்துடன் உள்ளதே ஆகும். காலனியாதிக்கத்தை முதன்மை எதிரியாகவும், இந்திய முதலாளித்துவத்தை அடுத்த நிலையிலும், வைத்துப் பார்த்த சுதந்திரப் போராட்ட காலத்து நிலைதான் இப்போதும். இந்தத் தெளிவு அவசியம். அது இல்லாத பட்சத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நடத்த முடியாது என்பதே அந்த நிலைபாடு. அப்படியானால் உள்ளூரில் எண்பது ரூபாய் சட்டக்கூலி ஆக்கினாலும் இருபது ரூபாய்க்கு மேல் தரமாட்டேன் என்கிற சிறு, குறு, நடுத்தர அல்லது பெரிய விவசாயியிடம் ஒரு விவசாய தொழிலாளர் சங்கம் என்ன நிலைபாட்டை எடுப்பது, பன்னாட்டு மூலதனத்தின் கான்ட்ராக்ட் பார்மிங்கை எதிர்த்து என்ன நிலைபாட்டை எடுப்பது?.

இன்னொரு பக்கம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து திருப்பூர், கோயமுத்தூர், ஓசூரில் ஆலைத் தொழிலாளியாக மாறுகிறவர்களின் உழைப்பை சுரண்டும் அல்லது சுரண்டலுக்கு ஏஜெண்டாக சிறு முதலாளிகள் இருக்கிறார்கள். அடிப்படை மனித உரிமைகளைக்கூட மறுக்கிற, பெண் தொழிலாளிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற, குறைந்த கூலிக்கு அதிகநேரம் வேலைவாங்குகிற அத்துமீறல்களோடு அந்த சிறுமுதலாளி பன்னாட்டு மூலதனத்தின் ஒரு சின்ன கூட்டாளி அல்லது பெரிய பிராண்ட் ஒன்றோ லோக்கல் அம்பாசிடர். இங்கே பன்னாட்டு மூலதனத்தை பிரதான எதிரியாக கருதிக்கொள்ளும் பட்சத்தில் அந்த சிறுமுதலாளிக்கு ஆதரவு அளிக்கக்கூடியவனாக மாறி விடுவேன். ஆனால் அந்த தொழிலாளிகள் பக்கம் நிற்கும்போது என்னுடைய உடனடி எதிரி அந்த சிறுமுதலாளி.

உலகமயத்துக்கு ஒரு மனித முகம் கிடையாது. அதன் கடுமையை குறைக்க போராடிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் கான்ட்ராக்ட் பார்மிங் விசயத்திலும் தொழிற்சங்கம் திருப்பூரில் அல்லது ஒரு தொழிற்பேட்டையில் யாரை முதன்மை எதிரியாக கருதி போராடுவது என்பதிலும் தத்துவார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் ஒரு தெளிவின்மை இருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: தொழிலாளிகளின் உரிமையை மறுக்கிற முதலாளியை எதிர்த்து போராடுவதும், அவர்களையும் திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடுவதும் சாத்தியம்தான். இரண்டும் வெவ்வேறு அணிகளையுடையது. ஆகவே அவங்க சுரண்டலை எதிர்த்துப் போராடினாலும், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளோடு சேர்ந்து நிற்கவேண்டிய கட்டாயம் சிறுமுதலாளிக்கு இருக்கு. ஆனால் அந்த சோதனையை செய்யாமலே இருப்பதுதான் இடதுசாரிகளோட தவறு.

செந்தில்: இந்த அரசியல் புரிதல், ஏற்கனவே இருக்கிற கலாச்சார தன்மைகளை உள்வாங்கிய உள்ளூர் யதார்த்தத்தோடு பொருந்தனும். அப்போது ஏற்படுகிற முரண்பாடு பெரிய சவால்களை உருவாக்குது. ஒரு செமினாரில் பேசறதா இருந்தா பாராளுமன்றத்துக்குள் இடதுசாரிகளின் ஆக்கப்பூர்வமான எதிர்ப்பு எனக்கு முக்கியமாப்படலாம். ஆனால், நாகப்பட்டினத்திலோ திருப்பூரிலோ நிற்கிறபோது வேறுமனநிலை உருவாகிறது. ஆனால் உழைப்புச் சுரண்டலை எதிர்த்த உள்ளூர் போராட்டத்திலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைப்பின் தன்மை இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்காலிக நியாயங்கள் நீண்டகால நியாயங்களாக மாறுவதும், ஆதங்கங்களுக்கு நியாயம் கற்பிப்பதுமாக மாறுகிறது. ஒரு மூன்றாம் உலக நாட்டின் இடதுசாரி இயக்கம் வகிக்கும் அரசியல் பாத்திரம் எதுவாக இருக்கமுடியும் என்ற புரிதல் உள்ளவர்கள் மட்டும்தான் நியாயம் கற்பிக்காதவர்களாக இருக்கிறார்கள்.

ஆதவன்: ஓசூரில் அநேகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கு. அதை திறக்கனும்கிற கோரிக்கையை இந்த தேர்தலிலும்கூட இரண்டு பெரிய கட்சிகளும் பேசவில்லை. இதை ஒரு முதன்மையான பிரச்னையாக இடதுசாரிகளாலும் மாற்றமுடியவில்லை. கூட்டணியா இருந்தாத்தான் இதையெல்லாம் பேசமுடியும் - வெறும் தொகுதி உடன்பாடுதான் அவங்களோடு என்று இதற்கொரு வியாக்கியானத்தையும் கூட கூறிக்கொள்ள முடியும். உலகமயமாக்கலை தமிழ்நாட்டில் அமுல்படுத்துவதில் காட்டுகிற தீவிரத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இப்போதும் உலகவங்கி நிபந்தனைகளை ஏற்று கடன்வாங்கி தங்க நாற்கர சாலை போடக்கூடியவர்களாகவும், தொலைத்தொடர்பில் அன்னிய நேரடி முதலீடை அனுமதிப்பவர்களாகவும் திமுக அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள். முன்பு முரசொலி மாறனும் அதைத்தான் செய்தார். அவர்களை எந்த இடத்திலும் இவ்விசயத்தில் நாம் கட்டுப்படுத்தவில்லை. இந்தத் தேர்தலில் முக்கியமாக முன்வைக்கும் பிரச்னைகள் எவை?

தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியமாகப்படும் பிரச்னை கிராமப்புற மக்களின் இடப்பெயர்ச்சிதான். விவசாயத்தை சாத்தியமற்ற தொழிலாக கருதி நிலத்தைவிட்டு வெளியேறுவதும், அந்த நிலத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதும் நடக்கிறது. ஒரு நெருக்கடியைத் தூண்டி முற்றவைத்து அதிலிருக்கும் ஆதாயத்தை மூலதனங்கள் அடைவதும், நெருக்கடியின் சுமையை, தீவிர உழைப்புச் சுரண்டலை கிராமப்புற மக்கள் மீது சுமத்தும்போது இடப்பெயர்ச்சி நடக்கிறது. இடப்பெயர்ச்சி ஒரு வெளிப்பாடுதான். அதற்கான சமூக பொருளாதார அடிப்படை இருக்கு. அதில் இடதுசாரிகளின் தலையீடு என்னவாக இருக்கமுடியும். அதில் அணிதிரட்டி போராடக்கூடிய அரசியலுக்கான களம் என்ன, அதை எப்படி இடதுசாரிகள் கட்டமைக்கப் போகிறார்கள் என்பதுதான் ஒரு அர்த்த பூர்வமான விவாதமாக இருக்கும். தேர்தலை ஒட்டி இந்த கேள்வி எழுப்பப்பட்டாலும் அதைத் தாண்டித்தான் விவாதிக்க வேண்டியிருக்கு.

தமிழ்ச்செல்வன்: இடப்பெயர்ச்சி என்பது ஒரு பகுதிசார்ந்த பிரச்சினையா அல்லது ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான பிரச்சினையா? அதேபோல கிராமப்புறத்தினுடைய பிரச்சினையா? அல்லது கிராமப்புறம், நகர்புறம் இரண்டுக்குமானதா?

செந்தில் பாபு: நகரம் கிராமம் இரண்டுக்குமான மாநிலம் தழுவிய பிரச்சினைதான் இது. கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்தை நோக்கி நகர்கிறார்கள்.

தமிழ்ச்செல்வன்: நகரத்தில் ஏற்கனவே இருக்கிற குடிநீர், இருப்பிடம் மாதிரியான நெருக்கடிகள் அதிகமாகுது. இந்த பிரச்னையை இதுவரை யாருமே கையிலெடுக்காதபோது இது எப்படி ஒரு தேர்தல் பிரச்னையாக மாறும்? அமைதியான காலத்தில் எதுவும் பேசாமல் பரபரப்பான தேர்தல் காலத்தில் பேசி மாற்ற முடியுமா?

செந்தில்பாபு: உதாரணமாக கடலோர மக்கள் அமைப்புகள் ஒன்றுகூடி தங்களுடைய பிரச்சினைகளை அடையாளப்படுத்தி ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிற பட்சத்தில்தான் தேர்தலில் பங்கெடுப்போம் என்று அறிவித்துள்ளார்கள். வெளியேறிப் போவதற்கு தெளிவான முறைகள் இருக்கு. மாமன் மச்சன் ஊர்க்காரர்கள் சொல்லித்தான் வெளியேறுகிறார்கள். முதல் தலைமுறை இடம் பெயர்ந்தவர்களே மூன்று நாலு மாதம் கழித்து அந்த ஊரிலிருந்து மற்றவர்களை அழைத்துக் கொள்கிற ஏஜெண்டுகளாக மாறுகிறார்கள். இடப்பெயர்ச்சி காலகாலமா அப்படித்தான் நடந்திருக்கு.

ஆதவன்: இந்த வருடம் நல்ல மழை. விவசாயம் செழிப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் இடப்பெயர்ச்சி ஏன் தொடர்கிறது? அப்படியானால் விவசாயத்தை சாத்தியமான தொழிலாக மாற்றுவதற்கு கிராமப்புறத்தில் செய்ய வேண்டியது என்ன?

ரமேஷ்: விவசாயக்கூலியை விடவும் நகர்புற வேலையில் கூலி அதிகமாக கிடைக்கிறது. வெளியேறியவர்கள் கிராமத்திற்கு திரும்பாமல் இருப்பதற்கு அதுவும்கூட காரணமா இருக்கலாம்.

செந்தில்பாபு: பல ஊர்களில் இளைஞர்களே கிடையாது. ஊரின் மக்கள் தொகையில் அறுபது சதவீதம் வரை வெளியேறி இருக்கிறார்கள். அவர்களோடு பேசும்போது பொருளாதாரமும், கலாச்சாரமும் தனித்தனி தளத்தில் இருக்க முடியாது என்பது தெரியும். தலித் அரசியல் மேலெழுந்து வந்திருக்கக்கூடிய சூழலில் அவர்களோட கேள்வி என்னன்னா எங்களை ஏன் திரும்பத் திரும்ப நிலத்தோடு முடக்கிறீங்க. நிலத்துக்கும் எங்களுக்கும் எப்பவுமே சம்பந்தம் இருக்கணுமா? கிராமத்தில் சாதி அடக்குமுறைக்கு ஆளாகிற ஒருத்தனா இருக்கறத்துக்கு பதிலா நகரத்துல சாதி அடையாளத்தை துறந்த ஒரு சுதந்திரமான தனிநபரா இருக்கிறது பரவாயில்லை என்கிறார்கள். நகரத்தை ஒரு சுதந்திரமான வெளியாக கருதுகிறார்கள். அந்த நிலையில் நகரத்தில் ஒரு மலிவான உடல் உழைப்பாளியாக இருப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இளம்பெண்களுக்கும் இதே மனநிலைதான். நடவு அறுவடை மாதிரியான வேலைகளைவிடவும் திருப்பூர் ஒசூர் மாதிரியான இடங்களில் சுமங்கலி திட்டத்தில் வேலை பார்க்கவே விரும்புகிறார்கள். பொருளாதார நெருக்கடியால் உருவாகிற இடப்பெயர்ச்சியின் சமூகக் காரணி என்னன்னா கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்தில் சுதந்திரமாக இருப்பதுதான். அப்போ விவசாயத்தை பாதுகாப்பது என்று பேசும்போது விவசாய வேலைக்கு ஆள்வருவதில்லை என்ற பிரச்சினை.

உற்பத்திக்கு உள்ளே இருக்கக்கூடிய நீரும் நிலமும் இன்று ஏன் அரசியல் பிரச்சினையாக மாறவில்லை. பொதுச்சொத்தான நீர் எப்படி தனிசொத்து சேர்க்கிறதுக்கானாதாக இருந்திருக்கிறது? ஊருக்கு பொதுத்தளம் என்னங்கிறதும் ஊரின் பொதுசொத்து யார் ஆதிக்கத்தில் இருக்குங்கிறதுக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கில்லையா? அதன் அடிப்படையில்தான் உள்ளூர் சமூகமும், அதன் ஆதிக்கமும் கட்டமைக்கப்படுது. அந்தத் தளத்தில் நின்று விவசாயத்தை சாத்தியமான தொழிலாக்கனும்னு சொல்லும்போது நான் ஊரோட பொதுத்தளத்தை கேள்விக்குள்ளாக்கிய மாதிரியே பொதுச்சொத்து யாருக்கு சாதகமா இருக்குதுங்கிறதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அதில் சிறுவிவசாயிகள், பெருவிவசாயிகள், நடுத்தர விவசாயிகள் அணி சேர்ந்தால்தான் கான்ட்ராக்ட் பார்மிங்கை எதிர்க்க முடியுங்கிற உண்மையையும் கவனத்தில் கொண்டதுதான் இடதுசாரி நிலை என்பது. அப்போ தேர்தலுக்கான பிரச்னைகளாக முன் வைக்கிறபோது வளர்ச்சி என்ற பெயரில் கை வைக்கப்படுகிற மான்யம், சலுகைகள், கடன், கடன் தள்ளுபடி, பயிர் இன்சூரன்ஸ் அல்லது இலவச மின்சாரம் உண்டா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினைகளாக மாறும். இன்னொரு பக்கத்தில் விவசாய தொழிலாளிகளின் பிரச்சினைகளை பாக்கிறப்போ சமூக காரணிகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வேலை, கூலி அந்த மட்டத்தோடு அவங்க பிரச்சினைகள் இருக்கு. அப்போ கடலோர உழைப்பாளிகள், கல்லறுக்கும் தொழிலாளிகள், விவசாயக்கூலிகள் என்று துண்டுத்துண்டான பகுதிகளிலிருந்து பிரச்னைகள் எழும்புது. ஆனா உள்ளூருக்குள் இருக்கின்ற அந்த நெருக்கடியை முழுமையாக புரிந்து கொண்ட ஒரு அரசியல் வெளிப்பாடு வராமலிருக்கு.

தமிழ்: உருவாக்கம் என்பது ஒன்று. அதுக்கு இடதுசாரிகள் உள்ளூர் அளவில் வேலை செய்யவேண்டும் என்பதை இப்பவாவது துவங்கினால்தான் வரக்கூடிய தேர்தலில் மேலுக்கு வரமுடியுங்கிற விசயத்தை விவாதிக்கலாம்.

செந்தில் பாபு: ப்ராக்மெண்ட்டாகித்தான் அரசியல் வெளிப்பாடு இருக்கு. அதில் தோழமை உணர்வோடு அணிசேர்க்கை நடக்கனும்னா அவங்களோட சேர்ந்து தீவிரமாக வேலை செய்து, அவர்களை ஊக்குவிக்கனும். இன்னொரு பக்கம் அந்த ப்ராக்மெண்டான அரசியல் உணர்வுக்கும் உள்ளூர் சமூக உண்மைக்குமான ஆதாரம் இருக்கில்லையா... ‘வேலை கிடைக்கல.. போறோம்’ என்பதோடு இந்த சமூக பின்புலங்களோ இளம் பெண்களின் ஆசாபாசங்களோ, ஒரு கோரிக்கையாக மாறுவதற்கு வழியில்லாமல்தான் கட்டமைக்கப்பட்ட பொதுத்தளம் இருக்கு. இடதுசாரிகள் கேட்டாலும் கூட கடன் தள்ளுபடியோ, அல்லது மானியமோ தான் கேட்க முடியும். அது நிலவுடைமையாளருக்குத்தான் உதவுமே ஒழிய வெளியேறியவர்களை அல்லது விவசாய கூலிகளைப் பற்றியது அல்ல. அதாவது உள்ளூர் ஆதிக்க சக்திகளோட நலன்கள்தான் பொதுத்தள அரசியலில் கோரிக்கையாக மாறுது.

ஆதவன்: கூலியாள் என்கிற நிலையில்தான் நிலத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். ஒருவேளை அவர்களுக்கும் ஓரளவு நிலம் இருக்கும் பட்சத்தில் வெளியேற மாட்டார்களில்லையா? இடதுசாரிகள் முன்வைக்கும் நிலமீட்சி போராட்டம் என்பது இனி யாரை மையப்படுத்தியதா இருக்கும்?

செந்தில் பாபு: அது வெறுமனே நிலம் - பொருளாதாரம் பற்றிய விசயம் மட்டுமல்ல. கலாச்சார அம்சம் இருக்கிறது. கிராமப்புறத்தில் நிலப்பசி இருக்கிறதா? அல்லது தீர்ந்துவிட்டதா நிலத்துக்கான போராட்டத்திற்கு சாத்தியம் இருக்கா என்ற கேள்விகள் இதோடு தொடர்புடையதாக இருக்கு. குத்தகை விவசாயம் அல்லது நிலத்தைவிட்ட வெளியேறுகிறவர்கள் ஒப்படைத்துவிட்டு போவது மாதிரியான பல்வேறு காரணங்களால் கொஞ்சமாவது நிலம் இல்லாதவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு. அவர்களால் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. தொடர்ந்து ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடுவது, மண், நீர்வளம் பாதிக்கிறது மாதிரியான சூழலியல் சார்ந்தும் சில பிரச்னைகள் இருக்கு.

கிணற்றுப் பாசனம், வாய்க்கால் பாசனம், ஏரிப் பாசனம் ஒவ்வொன்றுக்கும் பிரச்னையின் தன்மை வேறுபடுது. கடலோர பகுதியில் விவசாயத்திற்கு பெரிய முட்டுக்கட்டை இறால் பண்ணைகள். ஒருவேளை அது அந்தப் பகுதியோட பிரச்சினையாக மாறலாம். அங்கே உழவர் பாதுகாப்புத் திட்டமாகவோ, அல்லது வேறு ஒன்றாகத்தான் பார்க்கப்படும். ஒரு ஒட்டுமொத்த தீர்வாக பார்க்கும் ஏற்பாடு இல்லை. எப்படி பேசினாலும் விவசாயத்தை ஒரு சாத்தியமுள்ள தொழிலாக பார்க்க முடியாததாலேயே இந்த பிரச்சினைகள் என்று புரிந்து கொள்ளவேண்டும். சாத்தியமில்லாது போனதற்கான பொருளாதார காரணங்கள் என்ன? அதில் வளர்ச்சி என்கிற கட்டமைப்பில் யாரை சமாதானம் செய்து பங்கெடுக்க வைக்கிறது. எந்த அடிப்படையில் அப்படி நாம் பேசமுடியும்? ஒட்டுமொத்த தமிழகத்துக்குமாக நிலத்துக்கான அவசியத்தை பேசமுடியாதுன்னு தோணுது. அந்தந்த பகுதி வாரியாக அந்தந்த பாசன வசதிக்கு தகுந்தாற் போலத்தான் நிலமீட்சி போராட்டத்துக்கான வாய்ப்புகள் இருக்கு.

தமிழ்: எந்த அரசியல் சொல்லாடலுக்குள்ளும் இடப்பெயர்ச்சி விசயம் வராத நிலையில் அதை ஒரு விவாதப் பொருளாக நாம் எப்படி மாற்றுவது?

செந்தில்பாபு: இதெற்கெல்லாம் ரெடிமேடாக ஒரு தீர்வு இல்லை. விவசாயக் கடனுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு அல்லது தேசிய வங்கிகள் கடன் தரவேண்டும் என்று தேசிய அளவிலான தீர்வை சொல்லி விடமுடியும். ஆனால் தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்கிற நாம் இந்த தேர்தலிலும் வேறு பிரச்னைகளை பேசிவிட்டு இதை மறந்து விடுவோமானால் திரும்ப எப்பவுமே பேசமுடியாது. ஒரு இடதுசாரி என்கிற முறையில் உண்மையான பிரச்னையை, உண்மையான அரசியலை எழுப்பக்கூடிய சில அடிப்படையான கடமைகள் நமக்குண்டு. அதன்படி இந்த இடப்பெயர்ச்சி பிரச்சினையை பேசுவதற்கு ஒரு திட்டவட்டமான ஏற்பாடுகள் இல்லாத போதும் சாத்தியமான எல்லா இடங்களிலும் இதை முன்னிலைப்படுத்தி பேச வேண்டியிருக்கிறது. அதன் வழியாகத்தான் இதை ஒரு பொதுவிவாதப் பொருளாக பிராதான பிரச்சினையாக மாற்ற முடியும். அதுதான் உண்மையான அரசியல். அப்போதுதான் மேலிருந்து எது வளர்ச்சி என்ற யோசனையோடு கீழிருந்து வருகிற இந்த நிர்ப்பந்தம் மோதுகிறபோதுதான் கொள்கை மாற்றங்கள் ஏற்படும். கிராமப்புறத்திற்கான மாற்றுக் கொள்கை முடிவுகளுக்கும் உலகமயம் திணிக்கிற கட்டாயங்களுக்கும் மக்களுடைய வாழ்வியல் அனுபவத்திற்கும் இடையே உள்ள உறவை கணிப்பது - அதன் விளைவுகளை ஒரு விவாதப் பொருளாக, அரசியல் பிரச்னையாக மாற்றுவதும் போராடுவதும், அந்த மோதலில் தான் கொள்கைகள் மாறும் என்கிற தெளிவும் தேவை. கொள்கைகள் தானாக மாறாதில்லையா. பிரபாத் பட்நாயக்கை பொருளாதார மந்திரியாக மாற்றினாலும் உலகமயத்தோட நிர்ப்பந்தங்கள் அவருக்கும் இருக்கத்தான் செய்யும். பிறகு அதையொட்டி நியாயங்களை கற்பித்துக் கொண்டே போக வேண்டியதுதான். பிரபாத் பட்நாயக்கிற்கு சொல்லித் தருபவர்கள் யார்? அணிதிரட்டி நடத்தப்படும் அரசியல் போராட்டங்கள் தான் எல்லோருக்குமான சிந்தனையை தருகிறது. இல்லையானால் அறிவு உற்பத்திக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் போய்விடும்.

ஆதவன்: கிராமப்புறத்தினுடைய முக்கியமான பிரச்னையாக இடப்பெயர்ச்சி இருப்பதைப்போல நகர்ப்புற மக்களுடைய பேசப்படாத ஆனால் பேசவேண்டிய முக்கியப் பிரச்சினையாக எதைக் கருதுகிறீர்கள்?

செந்தில்பாபு: முதன்மையானது நகரத்திலுள்ள வேலைத்தரம். வேலையின்மையைத் தாண்டி வேலைத்தரம் என்பது முக்கியப் பிரச்னையா முன்வந்திருக்கு. மனித உடல் உழைப்பு சார்ந்த ஆதாரத்தை ஒரு பொருளாதாரம் எப்படி பயன்படுத்துகிறதோ அதைப் பொறுத்துதான் உள்ளூர் பொருளாதாரத்தின் வாய்ப்பு இருக்கும் என்ற பத்து வருடத்திற்கு முந்தைய முதலாளித்துவ சிந்தனை இப்போது இல்லை. இன்று வேலையின்மை, தேவையான அளவிற்கு வேலை கிடைக்காத நிலை, இதைத் தாண்டி கிடைத்த வேலையின் தரம் என்ன? அவர்களுக்கான வாழுமிடம், பணியிட நிலைமை என்ன?

தங்க நாற்கர சாலை, டைடல்பார்க்கை ஒட்டி நல்ல சாலை போடனும் என்று மூலதனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு கட்டமைப்பு வசதியைத்தான் பொதுமக்களின் தேவையைப்போல சொல்லப்படுகிறது. வேலைத் தரமற்ற அணி திரட்டப்படாத கட்டிட தொழிலாளர்கள், வீட்டுவேலை ஆட்கள் மாதிரியான நகர பொருளாதார வளர்ச்சியில் பல கட்டங்களில் பங்கெடுக்கிறவர்களுக்கு இந்த நகர கட்டமைப்புக்குள் எந்த இடமுமில்லை. குடிசைப் பகுதியில் போய் களப்பணி செய்வதும் ஆய்வு செய்வதும் இன்றைக்கு முற்போக்கு இயக்கத்தினருக்கும் அல்லது ஆய்வாளர்களுக்கும் ஒரு ரொமான்டிக்கான விசயமாயிருக்கு. ஆனால் அந்த மக்ளுடைய பணியிடம் சார்ந்த வாழ்விடம் சார்ந்த எந்த பிரச்னையையும் நகரம் பொருட்படுத்துவதேயில்லை. நகரத்தின் பொதுமக்கள் என்பவர்கள் நடுத்தர மக்கள்தான். அவர்கள்தான் நகரத்தின் சாலை, போக்குவரத்து, இன்னபிற வசதிகள் தேவைகள் என்று கட்டமைப்பு குறித்த கருத்தை உருவாக்குகிறார்கள். இந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கும் அணிதிரட்டப்படாத அந்த தொழிலாளர்களுக்கும் இடையே உழைப்பு சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு முரண்பாடு இருக்கு.

மும்பையில் மில்களில் சொத்துக்களை எடுத்துக் கொண்டு தொழிலாளிகளை நகரத்திலிருந்து முப்பது கிலோ மீட்டருக்கு வெளியே துரத்த முடிகிறது. அதற்கு நீதிமன்ற உத்தரவும் கூட துணையாக இருக்கிறது. காலையில் வீட்டு வேலை செய்வதற்கு அந்த தொழிலாளியின் வீட்டுப் பெண்கள் நடுத்தர வர்க்கத்திற்கு தேவையாக இருக்கிறார்கள். ஆனால் அவங்களோட வீட்டுக்குப் பக்கத்தில் குடிசை போட்டு அந்த தொழிலாளி வசிக்க முடியாது. ஏன்னா நகர சுற்றுச்சூழல் பற்றி நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு கருத்து இருக்கிறது. இப்படி குடிசையெல்லாம் இருந்தா எப்படி அன்னிய முதலீடு வரும் என்ற கவலை இருக்கிறது. ஆனால் நகரத்தின் பொருளாதரத்தை தழைக்க வைக்கக்கூடிய உழைப்பு அந்த அணிதிரட்டப்படாத தொழிலாளர்களுடையது. இந்த முரண்பாடு நகர வளர்ச்சி என்ற தளத்தில் ஒரு விவாதமாக மாறுவதே கிடையாது. குடிசை பகுதிகளை இடித்துத் தள்ளுவது காலங்காலமாக நடக்கிறது. இன்றைக்கு அதை நியாயப்படுத்தக்கூடிய நடுத்தர வர்க்கத்துக்கும் அந்த நடுத்தர வர்க்கத்தின் ஒட்டுண்ணி போல இயங்கக்கூடிய அரசியல் வர்க்கத்திற்கும் இடையே ஒரு ஸ்திரமான பிணைப்பு உருவாகியுள்ளது. குடிசைகளையும் சேரிகளையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.

நகரங்களுக்கு பெரிய தனியார் மருத்துவமனைகள் வந்திருக்கு. தகவல் தொழில்நுட்ப துறையில் நிறைய அலுவலகங்கள் வந்திருக்கு. அவங்களும் இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான். அந்த மருத்தவமனையில் ஒரு எக்ஸ்ரே எடுக்கக்கூடிய ஒரு இளைஞனோ, அல்லது இளம்பெண்ணோ எத்தனை மணிநேரம் உழைக்கிறார்கள்.... அவர்களுடைய வேலைத்தரம் என்ன? ஐ டி தொழிலாளர்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறார்கள் - அவர்கள் அடையக்கூடிய மனஉளச்சல் இதெல்லாம் ஒரு அணிதிரட்டப்பட்ட அரசியலுக்குள் வரவேயில்லை. அவர்களும் மலிவான கூலிக்கு உழைக்கிற அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள்தான். நகரத்திலும் ஐ டி தொழிலாளர்களா அவர்கள் பிரச்சினைக்கு தனியான அமைப்பு - கட்டடத் தொழிலாளர்களா அவர்களுக்கு தனி அமைப்பு என்று துண்டுத் துண்டான ஏற்பாடுகள்தான். நகர வளர்ச்சி என்று கட்டமைக்கப்படுகிற கருத்தின்மீது யார் கேள்வி எழுப்புவது? என்னுடைய வாழுமிடத்திற்கும் நகர கட்டமைப்புக்கும் வெளியே வரக்கூடிய டைடல் பார்க்குக்கும் அங்கே போடக்கூடிய தங்க நாற்கர சாலைக்கும் என்ன சம்பந்தமிருக்கு என்ற கேள்வியை வைத்தால் தானே அங்க ஒரு தீவிர அரசியலுக்கான இடம் இருக்கும்? அணி திரட்டப்படாத அந்த தொழிலாளர்களின் பிரச்னை வெறுமனே நல வாரியத்தோடு முடிந்துவிடக் கூடியதா?

ஆதவன்: விஜயன் கூட அவரோட நூலில் பரிதாபகரமான தங்கள் நிலையை உணராமலே பல கற்பிதங்களோடு இருக்கிற இந்த ஐ.டி. தொழிலாளிகளோட நிலையை எழுதியிருக்கிறார். குடிசைப் பகுதியில் இருக்கிற அணி திரட்டப்படாத தொழிலாளியைப் போலவே, கொஞ்சம் வசதி வாய்ப்புள்ள ஒரு கிரேடு மேலான அணி திரட்டப்படாதவங்களாகத்தான் ஐ டி தொழிலாளிகளும் இருக்கிறார்கள். மற்ற நாடுகளை விடவும் அவங்க படிப்புக்கும் வேலைக்கும் மிகக்குறைந்த கூலிதானே தரப்படுது?

செந்தில்: அவங்க பிரச்சினையே வேறு. போக்குவரத்து தடையில்லாமல் இருக்கனும். மனஅழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்கு இன்னும் நான்கு இரவு கிளப்புகள் இருந்தால் பரவாயில்லை என்பது மாதிரியானவை அவங்களோட கோரிக்கைகள். உலகமயமாக்கலுக்கு ஆதாரம் சேவைத் துறைகளென்றால் அதற்கு ஆதாரம் ஐ டி தான். அங்கே எந்த நேரத்திலும் வேலை உத்திரவாதம் கிடையாது என்பது அந்த தொழிலாளிக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியல. அவர்களை knowledge workers என்கிறார்கள். அப்போ அறிவு என்றால் என்ன? யாரோட அறிவு அது எந்த பொருளாதாரத்துக்கு உதவியா இருக்கு என்ற கேள்விகள் வருது.

அங்கே அறுநூறு ரூபாய் கூலிக்கு வீட்டுவேலை செய்கிற இளம் பெண்ணுக்கும் இந்த நாலெட்ஜ் ஒர்க்கருக்கும் இடையே இந்த நகர பொருளாதாரத்திற்குள் முட்டிக்கொண்டிருக்கும் ஒரு முரண்பாட்டை விவாதப்பொருளாக மாற்றக்கூடிய பொறுப்பு யாருக்கு இருக்கு? அவன் என் வீட்டுக்கு அருகில் சேரி இருக்கிறது அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று லெட்டர்ஸ் டூ தி எடிட்டருக்கு எழுதுவான். அவனுக்கு ஆதரவாகத் தான் நீதிமன்றம், நகர விரிவாக்கக் குழு எல்லாமே செயல்படுது. குடிமனை பட்டா கேட்டு போராடும்போதுதான் முனிசிபல் எல்லைக்குள் ஏழு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும் மாநகராட்சிகளில் பதினைந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளும் குடிமனைப் பட்டா வழங்கக்கூடாது என்று ஏற்கனவே ஒரு ஜீ.ஓ போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டியது என்பதும் அதுவரை யாருக்கும் தெரியாது. அந்த குடிசைப் பகுதிகளுக்கு முறையான மின் இணைப்போ தண்ணீர் வசதியோ கிடையாது. தேர்தல் நேரத்தில் மட்டும் டேங்கர்களில் தண்ணீரை கொண்டு வந்து ஓட்டை உறிஞ்சிக் கொள்கிறார்கள். குடிசைப் பகுதியினரை அணி திரட்டுகிறவர்களும் அவர்களுக்கான ஒரு கோரிக்கை சாசனத்தை உருவாக்கி ஏதாவது ஒரு அணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறவர்களாக ஆகிவிடுகிறார்கள். பிரச்சினை அப்படியே இருக்கிறது.

ஆதவன்: நகர்ப்புறம் கிராமப்புறம்னு பேசியதைப்போல சாதி பாலின அடிப்படையிலும் தேர்தலை பார்க்க முடியுமா?

செந்தில்: நாம் பேசிய எல்லா விசயங்களிலும் சாதியும் பாலினமும் கலந்தே இருக்கிறது. முன்னுரிமை கொடுத்தே பேசலாம். இளம்பெண்கள் ஏன் இடம் பெயர்கிறார்கள் என்றால் முழுக்க முழுக்க பாலின பாகுபாடுதான். பாலின பாகுபாட்டினை ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடியதுதான் முன்பு சொன்ன சுமங்கிலித் திட்டம். ஆணாதிக்க சிந்தனையால் ஒடுக்கப்படுகிற ஒரு பெண் தொழிலாளியை எந்த அளவிற்கு அதிகபட்சமாக சுரண்டலுக்கு ஆள்படுத்தலாம் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

இடைநிலைச் சாதிகள் இடம்பெயர்வதற்கும் தலித்துகள் இடம் பெயர்வதற்கும் திட்டவட்டமான வேறுபாடு இருக்கிறது. இருவருமே மலிவான கூலித் தொழிலாளர்களாகப் போனாலும் நகரம் முன்வைக்கிற வளர்ச்சி என்கிற வரையறைக்குள் இடைநிலை சாதியால் பொருந்திவிட முடிகிறது. இந்த இடத்தில்தான் வாய்ப்பு என்கிற விசயம் வருகிறது. கல்வி, சுகாதாரம் அரசாங்க நலத்திட்டங்கள், இதிலெல்லாம் யாருக்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கிறது யார் போராடி அடையவேண்டி இருக்கிறது? போராடினாலும் யாருக்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்படுது என்பதில் சாதி படிநிலையும் பாலின வேறுபாடும் காரணமாகிறது.

வாய்ப்பு என்பதை தனிநபர் சாமர்த்தியமாக கருதக்கூடாது. கார்மெண்ட் ஆலை சூப்பர்வைசரின் பாலியல் வெறிக்கு யார் எளிதான இலக்கு? உயர்சாதிப் பெண்ணை எளிதில் தொட்டு விடுவானா? ஆனால் ஒரு பெண், அவள் பெண் என்பதாலும் தலித் என்பதாலும் அவனுக்கு தைரியம் கூடுகிறது. சேவைத்துறையோ உற்பத்தித் துறையோ விவசாயத் துறையோ எதுவாக இருந்தாலும், அறிவு, திறன், வாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுபவற்றில் இந்த இரண்டு ஒடுக்கு முறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இதை முன்னெடுத்துப் பேசுகிற, பொதுத்தளத்தின் விவாதப் பொருளாக மாற்றுகிற வேலைதான் தேர்தலை உள்ளடக்கிய அதே நேரத்தில் அதற்கப்பாலும் விரிவடைகிற உண்மையான அரசியல்.