சட்டமன்ற உறுப்பினரையோ, மக்களவை உறுப்பின ரையோ தேர்ந்தெடுக்கும் பொழுது நேரம் ஒதுக்கிச் சிந்தித்து, வாக்குகளை பணத்திற்கோ, இனாம் பொருட்களுக்கோ, ஆசை வார்த்தைகளுக்கோ விற்கக் கூடாது. மக்கள் நலனுக்குப் பாடுபடும் தன்னலமற்ற, எளிதில் சந்திக்கக் கூடிய ஒருவரையே தேர்ந்தெடுப்பது முக்கியம்.

சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் என்று அறிக்கையில் சொன்னது அதில் 20 விழுக்காடு கூட செயல்படுத்தப்படவில்லை. வக்கனையாகப் பேசியும் அறிக்கைவிட்டும் மக்களைச் சந்திக்கக்கூட பணம் கேட்கும் கேவலமானவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். நம்மை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் நமக்கு அடிப்படைத் தேவையான, கல்விக்கு வேலை வாய்ப்புக்கு கவலைப்படவில்லை. மொத்த அதிகாரத்தையும் மைய அரசுக்கு விட்டுவிட்டுத் தரகு வேலை செய்யும் கட்சியையும், தாய்மொழிக்குப் பாதுகாப்புத் தராத கொள்கையற்ற அரசியல் கூட்டணியையும் நம்மை கொள்ளை யடிக்கும் கூட்டத்தையும் தோற்கடியுங்கள்.

இலவசமாகக் கல்வியும், குடிநீரும், மருத்துவமும் அளிப்பதில் உத்திரவாதம் தருவோரையும் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விகிதாச்சாரப்படி இடப்பங்கீடும் உணவு பொருள்களுக்கும், ஆயுள் காப்பீட்டு சேமிப்புக்கும் மக்கள் நலனுக்குச் செய்யப்படும் சேவைக்கும், வரியில்லாமல் ஆட்சி செய்வோம் என்றும் நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் இயற்கை வளங்களை (காடுகளையும் மலைகளையும் உழவுத் தொழிலையும் காப்போம் என்றும் மதுவை ஒழிப்போம் என்றும் உறுதி கூறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம்.

போட்டியாளர்களில் நல்லவர்கள் இல்லை என்றால் வாக்களிக்க விருப்பமில்லை என்ற பதிவுக்கு வாக்கைப் பதியுங்கள். விருப்பமில்லாப் பதிவில் அதிகப் பதிவு இருந்தால் தேர்தல் ஆணையம் போட்டியிட்ட அனைவரையும் ஐந்து தேர்தல்களுக்குப் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்தும், போட்டியிட்ட சின்னத்தையும் தடைசெய்து தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்களின் சுயமரியா தையையும், சபை நாகரிகத்தையும் இழக்காமல், அரசு ஊழியர்களை மிரட்டித் தரகு வேலை செய்யாமல் தொண்டர்களைத் தொகுதியில் நலத் திட்டத்தைத்தவிர வேறு செயல்களுக்குப் பயன்படுத்தாமல், ஆடு மாடுகள் போல் அரசியல் சந்தையில் அய்ந்தறிவு குதிரையாகச் செயல்படாமல் பணியாற்றும் உறுப்பினர்களைப் போற்றுவோம்.

Pin It