சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிங்கூர், நந்திக்கிராம் பகுதிகளில் பெருமுதலாளிய நிறுவனங்களுக்காக உழவர்களின் நிலங்களை மேற்குவங்க அரசு, கட்டாயப்படுத்திக் கைப் பற்ற முனைந்தபோது, அதை எதிர்த்து உழவர்கள் தீரமுடன் நடத்திய போராட்டம் இந்தியா முழு கவனத்தையும் ஈர்த்தது.
அதுபோல் இப்போது 2017 சூன் மாதத் தொடக்கத் தில் பாரதிய சனதா கட்சி ஆளும் மாநிலங்களான மகா ராட்டிரத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் உழவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலி யுறுத்திப் பல்லாயிரக்கணக்கில் பல பகுதிகளில் கிளர்ந்தெழுந்து தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள்.
மத்தியப்பிரதேசத்தில் மன்ட்சார் மாவட்டத்தில் உழவர்களின் போராட்டத்தை ஒடுக்கிட காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஆறு உழவர்கள் மாண்டனர். உழவர்களைக் காவல் துறையால் சுட்டுக்கொல் லப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உழவர் கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
உழவர்களின் போராட்டம், டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த பா.ச.க. தலைவர் களையும், ஊடகங்களையும் உழவர்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசச் செய்தது.
2016ஆம் ஆண்டில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற் றில் பருவமழை பொய்த்துவிட்டது. குறிப்பாகத் தமிழ் நாட்டில் 146 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டது. கருநாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் காவிரிப் பாசனப் பகுதி யில் பல இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெல் பயிர் காய்ந்து கருகிப் போனது. உழவர்கள் பெரும் இழப்புக்கும் இன்னல்களுக்கும் உள்ளாயினர். நடுவண் அரசும், தமிழக அரசும் உரிய இழப்பீடுகளை வழங்க வில்லை.
இந்நிலையில் தமிழக உழவர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; வங்கிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; 2006ஆம் ஆண்டில் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி, சாகுபடிச் செலவில் 50 விழுக்காடு அளவுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் நடுவண் அரசு விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price-MSP) நிர்ணயிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக உழவர்கள் தில்லி ஜன்தர் மந்தர் பகுதியில் 14.3.2017 முதல் 41 நாள்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
அதன்பின் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பவற்றை முதன்மையான கோரிக்கைகளாக முன் னிறுத்திப் போராட வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டது, ஏன்?
இராசிவ் காந்தி தலைமை அமைச்சராக இருந்த போது, 1986இல் தாராளமயம், தனியார்மயம் எனும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடித்தளம் இட்டார். 1991இல் பி.வி. நரசிம்மராவ் தலைமை அமைச்சராக வும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் இருந்த போது தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பது அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை தொழில் உற்பத்திக்கும், சேவைப் பிரிவு வளர்ச்சிக்கும் முதன்மை தந்தது. வேளாண்மையைப் புறக்கணித்தது.
கடந்த கால் நூற்றாண்டில் நடுவண் அரசில் மாறி மாறி ஆட்சி செய்துவரும் காங்கிரசும், பா.ச.க.வும் வேளாண்மையைப் புறக்கணித்ததுடன், அது மேலும் நலிவடையும் படியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் அந்நிய முதலீட்டைப் பெறுவதன் மூலம் மட்டுமே நாட்டின் வளர்ச்சியை-மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்று நடுவண் அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து கூறிவருகின்றன.
வேளாண்மையில் அரசின் முதலீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. நீர்ப்பாசனத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக வேளாண் மானியங்கள் நீக்கப் பட்டன. அதனால் விதை, உரங்கள், பூச்சிமருந்து முதலான இடுபொருள்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்தன. உலக வங்கி, பன்னாட்டு நிதியம், உலக வணிக அமைப்பு (WTO) ஆகியவற்றின் அறிவுறுத் தலின்படி, பொதுவழங்கல் முறையின் (PDS) கீழ், மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கு வதைப் பலவகையிலும் அரசுகள் குறைத்து வருகின்றன. அதன்மூலம் நெல், கோதுமை ஆகியவற்றைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) உழவர் களிடம் கொள்முதல் செய்வதைக் குறைத்து வருகிறது நடுவண் அரசு. இவ்வாறு கொள்முதல் செய்வதை அடியோடு ஒழிப்பதன்மூலம், இதற்காக 1965இல் ஏற்படுத்தப்பட்ட இந்திய உணவுக் கழகத்தையே (FCI) கலைத்துவிட வேண்டும்; அதன்மூலம் கொள்முதல், விற்பனை, சந்தை ஆகியவற்றை முற்றிலுமாகத் தனியாரிடம் தரவேண்டும் என்பதே நடுவண் அரசின் கொள்கை யாகும்.
எனவே வேளாண்மையின் சிக்கல்களுக்கும், உழவர்களின் இன்னல்களுக்கும் மூல காரணியாக இருப்பது அரசின் தாராளமய, தனியார் மய, உலக மயக் கொள்கையே ஆகும். கடந்த முப்பது ஆண்டு களாக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வேளாண்மை யை உழவர்களின் வாழ்வாதாரமாகவும் மக்கள் அனை வருக்குமான உணவுப் பாதுகாப்பாகவும் கருதாமல், வெறும் தொழிலாகப் பார்ப்பதால், அதன் இலாப-நட்டத் திற்கு உழவர்களே பொறுப்பு என்று கருதுகின்றனர்.
ஆனால் அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளி லும் வேளாண்மையில் 2 முதல் 10 விழுக்காடு மக்களே ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அதிக அளவு மானியம் தரப்படுகிறது. இந்தியாவிலோ 60 விழுக் காடு மக்கள் வேளாண்மையைச் சார்ந்து வாழ்கின்றனர். அமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் வேளாண் மையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எவ்வகையிலும், எந்த நிலையிலும் இழப்பு ஏற்படாமல் காப்பதுடன், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் அந்நாடுகளின் அரசுகள் விதிகளை வகுத்துச் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அரசுகள் உழவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கிற எண்ணங் கொண்டவைகளாக இருக்கின்றன.
வேளாண் கடன் தள்ளுபடி
“இந்திய வேளாண்மை என்பது பருவ மழையுட னான ஒரு சூதாட்டம்”. “இந்திய உழவன் கடனில் பிறந்து கடனிலேயே சாகிறான்” என்கிற சொல் வழக்குகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. நவீன அறிவியல் காரணமாக மற்ற துறைகளில் எவ்வளவோ மாற்றங் கள் நிகழ்ந்துள்ள போதிலும், மேலே குறிப்பிட்டுள்ள சொலவடைகளின் நிலையில் மாற்றம் உண்டாக வில்லை.
பசுமைப் புரட்சித் திட்டம் தொடங்கி அய்ம்பது ஆண்டுகளாகின்றன. அதனால் நீர்ப்பாசனம் பெறும் நெல், கோதுமை போன்ற பயிர்களில் விளைச்சல் உயர்ந்தது. ஆனால் ஏழை, எளிய உழவர்களாக இருந்தவர்கள் மானாவாரியில் சிறு தானியங்கள், பயறு வகைகள் பயிரிட்டு தங்கள் பசியாற்றிக் கொண்டி ருந்த நிலையைப், பசுமைப் புரட்சி ஒழித்துவிட்டது. வளமான நிலமும், நீர்ப்பாசன வசதியும், அதிக அளவில் நிலமும் கொண்டிருந்த மேல்சாதிகளைச் சேர்ந்த பண்ணையார்களுக்கே பசுமைப் புரட்சியால் நன்மை கிடைத்தது. சிறு, குறு உழவர்களாக - 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் மொத்த உழவர்களில் 85 விழுக்காட்டினராக இருக்கின்றனர்.
பசுமைப் புரட்சியாலும், புதிய பொருளாதாரக் கொள்கையாலும் இவர்களின் வாழ்வதாரம் பந்தாடப்படுகிறது. வறட்சி, வெள்ளம், பூச்சிநோய் தாக்குதல், விளைபொருள் விலை வீழ்ச்சி முதலான காரணங்களால் பெருமளவில் சிறு, குறு உழவர்களே பாதிக்கப்படுகின்றனர். அதனால் அடுத்தடுத்து வேளாண்மை செய்வதற் காகத் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பத்து ஏக்கருக்குமேல் நிலம் உடைய உழவர்களும் வருவாய் இழப்பு, கடன் சுமை களால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மையே.
குறிப்பாக அறுவடைக் காலத்தில் விளைபொருள் களின் விலை வீழ்ச்சியடைகிறது. கடன் தொல்லை யால், குறைந்த விலையில் தம் விளைபொருள்களைத் தனியாரிடம் விற்கும் நிலைக்குப் பெரும்பாலான உழ வர்கள் தள்ளப்படுகின்றனர். நியாயமான விலையில் வேளாண் விளைபொருள்களைக் கூட்டுறவுச் சங்கங் கள் மூலமோ, அரசு கொள்முதல் நிலையங்கள் மூலமோ கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பு அரசுகளால் உருவாக்கப்படாமையே உழவர்களின் விளைபொருள்களுக்கு நியாயமான விலையும், இலாப மும் கிடைக்காமைக்கு முதன்மையான காரணமாகும். நடுவண் அரசு 23 பயிர்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அறிவிக்கிறது. நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களுக்கு மிகக் குறைந்த விலையே அறிவிக்கிறது. மேலும் நெல், கோதுமை ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கான கட்ட மைப்புகள் உள்ளன. நெல், கோதுமை கொள்முதல் பஞ்சாப், அரியானா, ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் 80 விழுக்காடு செய்யப்படுகிறது.
எனவேதான், தேசிய மாதிரி ஆய்வறிக்கையில் நெல், கோதுமைக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை என ஒன்று இருப்பதே 33 விழுக்காடு உழவர் களுக்குத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நடுவண் அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் உழவர்களுக்கு வழங்கும் கடன் தொகையைக் கடந்த பத்து ஆண்டுகளில் பலமடங்கு உயர்த்தியுள்ளது. 2016-17ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இதற்காக 12 இலட்சம் கோடி உருவா ஒதுக்கப் பட்டிருக்கிறது. இத்தொகையில் பெரும்பகுதி டிராக்டர், அறுவடை இயந்திரம், அவற்றின் மூலம் பயன்படுத்தும் வேளாண் கருவிகள், தெளிப்பு மற்றும் சொட்டு நீர்ப் பாசனத்திற்கான கருவிகள் ஆகியவற்றைத் தயாரிக் கும் பெருமுதலாளிய நிறுவனங்களுக்குக் கோடிக் கணக்கில் வேளாண் கடனாகத் தரப்படுகிறது. அத் துடன் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கார்ப்பரேட் வேளாண்மை செய்பவர்களுக்குப் பெருந்தொகைகள் வேளாண் கடனாகத் தரப்படுகின்றன.
தேசிய மாதிரி ஆய்வறிக்கையில் (NSSO)உழவர் களில் 40 விழுக்காட்டினர்க்குக் கூட்டுறவுச் சங்கங் களிலோ, வங்கிகளிலோ கடன் கிடைப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் கந்து வட்டிக்காரர்கள், களத்தில் கொள்முதல் செய்யும் வணிகர்கள், உரக்கடைக் காரர்கள் ஆகியோரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கு கின்றனர். தங்கள், விளைபொருள்களைக் குறைந்த விலையில் இவர்களிடமே விற்கவும் நேரிடுகிறது.
இவ்வாறான காரணங்களால் உழவர்கள் கடன் சுமையால் தத்தளிக்கின்றனர். கடன் கொடுத்தவர் களால் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படு கின்றனர். இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 1997 முதல் கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகில் வேறு எந்த நாட்டி லும் இதுபோல் உழவர்கள் தற்கொலை நடக்கவில்லை.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கையின் படி, 2015ஆம் ஆண்டில் 12,602 உழவர்கள் தற் கொலை செய்து கொண்டனர். பா.ச.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி செய்யும் மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் 4,291 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பா.ச.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மொத்தம் 7,723 உழ வர்கள் (61.28ரூ) தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தான் நரேந்திர மோடி “அச்சா தின்” - நல்ல காலம் பிறக்கிறது என்று கூறுகிறாரா?
இந்திய அளவில், முதன்முதலாக 1989இல், வி.பி.சிங் தலைமை அமைச்சராக இருந்தபோது உருவா 10,000 கோடிக்கு வேளாண் கடனைத் தள்ளுபடி செய்தார். 2006இல் தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி ஆட்சி யில் உருவா 7,000 கோடி கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக் கட்சி வங்கிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதாக வாக்களித்தது. ஆட்சியில் அமர்ந்த பின் உருவா 60,000 கோடிக்குத் தள்ளுபடி செய்தது.
தெலுங்கானா தனி மாநிலமாக அமைக்கப்பட்டதும் முதல்வர் சந்திரசேகரராவ் உருவா 17,000 கோடிக்கு உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதியளித்தவாறு, செயலலிதா முதல்வரான பின் சிறு, குறு உழவர்களுக்கு உருவா 5,780 கோடி வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய ஆணையிட்டார். இக்கடன் தள்ளுபடியை 5 ஏக்கருக்கு மேல் நிலம் உடைய உழவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தென்னக ஆறுகள் இணைப்பு அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தொடுத்த வழக்கில், சென் னை உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று உருபா 1,980 கோடிக்கு மற்ற உழவர்களின் கடனை யும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. தமிழக அரசு, இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவ தாக அறிவித்துள்ளது.
2017 பிப்பிரவரி - மார்ச் மாதங்களில் உத்தரப்பிர தேச மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலின் போது, பா.ச.க., விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. மோடியே இதுகுறித்து மேடைகளில் முழங்கினார். உ.பி. முதல் வராக ஆதித்தியநாத் பதவி ஏற்றபின் உருவா 36,000 கோடிக்கு உழவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுவ தாக அறிவித்தார். கடன் தொகையில் ஒரு இலட்சம் உருவா மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. ஆட்சியில் உள்ள உ.பி.யில் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட தால், பா.ச.க. ஆட்சி செய்யும் மகாராட்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களின் உழவர்களும் கடன் தள்ளுபடி, உற்பத்தி செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் படியான விலை நிர்ணயம் முதலான கோரிக்கை களை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் போராட்டம் தீவிரமடைந்ததன் பின்னணி
இந்தியாவில் 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. குறிப்பாக வடஇந்தியாவில் வறட்சி கடுமையாக இருந்தது. 2016-17ஆம் ஆண்டில் தென்மாநிலங்கள் தவிர, வடஇந்தியா முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதனால் காரிப் பருவத்தில் (சூன்-அக்டோபர்) பயிர்களில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அக்டோபர் மாதத்தில் விளைச்சல் சந்தைக்கு வந்த நிலையில், நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று நவம்பர் 8 அன்று அறிவித்தார். அதனால் பணப்புழக்கம் அடியோடு நின்றுவிட்டது. எனவே உழவர்கள் காரிப் பருவத்தின் விளைபொருள்களை விற்க முடியாமல் தவித்தனர். மண்டிக்காரர்களிடமும் பணம் இல்லாததால் இவற்றை வாங்க முன்வர வில்லை. மேலும் ராபி பருவத்திற்கான (நவம்பர் - மார்ச்சு) சாகுபடியைச் செய்வதற்கு விதை, உரங்கள் வாங்குவதற்குப் பணம் கையில் இல்லாமல் திண்டாடி னர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உழவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ராபி பருவப் பயிர்களின் விளைச்சலும் நன்றாக இருந்தது. ஆனால் ஏப்பிரல், மே மாதங்களில் கோதுமை, சோயா, மிளகாய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கொண்டைக்கடலை, துவரை, தக்காளி, வெந்தயம் முதலான விளைபொருள்களின் விலை முன் எப் போதும் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்தன. சில எடுத்துக்காட்டுகள் :
கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் (100 கிலோ) ரூ.1625. ஆனால் உழவர் கள் ரூ.800 முதல் ரூ.1,100 விலையில் விற்க நேரிட்டது.
துவரையில் மகாராட்டிரத்தில் கடந்த ஆண்டைவிட 5 மடங்கு அதிகமாக விளைச்சல் இருந்தது. அந்தச் சூழலில் நடுவண் அரசு, ஆப்பிரிக்க நாடான மொசாம் பிக்கிலிருந்து துவரையை இறக்குமதி செய்தது. அதனால் சந்தையில் துவரை விலை மேலும் வீழ்ந்தது.
2016 செப்டம்பரில் கோதுமை மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாக இருந்தைப் பத்து விழுக்காடாக நடுவண் அரசு குறைத்தது. 2016 திசம்பரில் கோதுமை மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கியது. மேலும் உக்ரைன் நாட்டிலிருந்து கோதுமையைக் குவிண்டால் ரூ.1400 விலையில் இந்தியா இறக்குமதி செய்தது. இதனால் சந்தையில் கோதுமை விலை மேலும் குறைந்தது. இராஜஸ்தானில், பா.ச.க. அரசு, உழவர்களுக்கான மின் கட்டணத்தை 40 விழுக்காடு உயர்த்தியது.
2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பா.ச.க. வேளாண் விளைபொருள்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் பா.ச.க. ஆட்சியில் இருக்கும் மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2017 ஏப்பிரல், மே மாதங்களில் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படாததுடன், இவற்றை அரசு கொள்முதல் செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த உழவர்கள் சூன் 1 முதல் பத்து நாள்களுக்குப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி மகாராட்டிரத்திலும் மத்தியப்பிரதேசத் திலும் உழவர்கள் நெடுஞ்சாலைகளில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள், பால் ஆகியவற்றைக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். காய்கறிகள், பால் ஆகியவை நகரங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்; வாகனங் களைத் தாக்கினர். மாநில அரசுகள் உழவர் சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இந்நிலையில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சவுகான் பா.ச.க.வின் உழவர் அமைப்பான பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த சிலரை உடன் வைத்துக்கொண்டு, உழவர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டதாகச் செய்தியாளர்களிடம் 5.6.17 அன்று அறி வித்தார். இதனால் கடும் சினம்கொண்ட உழவர்கள் 6.6.17 அன்று மன்ட்சார் மாவட்டத்தில் ஆயிரக்கணக் கில் திரண்டு காய்கறி அங்காடிகளை மூடச் செய்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களைத் தாக்கித் தீயிட்டனர். போபால், இந்தூர் முதலான பல இடங்களிலும் சாலைகளில் வாகனங்கள் தாக்கப் பட்டன. மன்ட்சாரில் காவல்துறையினர் துப்பாக்கி யால் சுட்டதில் ஆறு உழவர்கள் மாண்டனர்.
இவ்வாறாக உழவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்த பிறகுதான்-ஆறு உழவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான் மத்தியப்பிரதேச அரசும் மகாராட்டிர அரசும் உழவர்களுக்கான கடன் தள்ளு படியை அறிவித்தன. மகாராட்டிரத்தில் பால் விற்பனை விலையில் 70 விழுக்காடு உழவர்களுக்கு வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சி செய்யும் பஞ்சாப், கருநாடக முதல்வர்களும் வேளாண் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
கடன் தள்ளுபடி செய்வது உழவர்களின் நெருக்கடியான நிலையைத் தணிப்பதற்கு உதவுமே தவிர, வேளாண் சிக்கல்களுக்குத் தீர்வாகாது. இனியும் நடுவண் அரசும் மாநில அரசுகளும் வேளாண் சிக்கலை, உழவர்களின் துன்பத்தைப் புறக்கணிக்க முடியாது என்பதற்கான எச்சரிக்கைதான் சூன் மாதம் உழவர் கள் நடத்திய போராட்டம்.
எல்லா விளைபொருள்களுக்கும் நியாயமான இலாபம் கிடைக்கும் வகையில் அரசுகள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றைப் போதிய அளவில் ஏற்படுத்தி, அறுவடைக் காலங்களில் அரசு நிர்ணயித்த விலையில் விளைபொருள்களை உழவர் களிடம் வாங்க வேண்டும். இந்த நிலையை உண்டாக்கி விட்டால், தங்கள் கடனை அடைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உழவர்களுக்கு வாய்ப்பு அமையும். அந்நிலையில் கடன் தள்ளுபடி கோரிக்கை எழாது.
நீர் அதிகம் தேவைப்படும் நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களே பெரும் பரப்பில் பயிரிடும் நிலையைப் பசுமைப் புரட்சி உண்டாக்கிவிட்டது. அதிக உரம், அதிக அளவில் பூச்சிமருந்து ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் வேளாண்மையின் உற்பத்திச் செலவு கடுமையாக உயர்ந்துவிட்டது. அதனால் 85 விழுக்காட்டினராக உள்ள சிறு குறு உழவர்கள் தொடர்ந்து இழப்பையே சந்தித்து வருகின்றனர். நீர் குறைவாகத் தேவைப்படும் பருப்பு வகைகள், சிறுதானி யங்கள் போன்றவற்றை மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். கிடைக்கின்ற மழைநீரை மானாவாரி நிலங்களில் குட்டைகளில் சேமிக்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். உழவர்களுக்குத் தரமான விதைகள், உரங்கள் கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பாகும்.
இயற்கை வேளாண்மை நல்ல மாற்றாக உருவாகி வருகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு மூலம் உழவர்களுக்குக் கூடுதல் வருவாய் கிடைப்ப தற்கான ஊக்கத்தை அளிக்க வேண்டும். உழவர்கள் துன்பத்திலிருந்து மீண்டு வரவும், நல்ல, இயல்பான வாழ்க்கை வாழவும் செய்ய வேண்டியது அரசுகளின் தலையாய கடமையாகும்.