கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

2012-ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இரவு தில்லி மாநகரில் ஓடும் பேருந்தில் ‘நிர்பயா’ என்ற இளம்பெண் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடிய முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால் இறந்துபோனார். இந்நிகழ்ச்சி இந்தியாவையே உலுக் கியது. இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்களின் பாலியல் வல்லுறவுக்கு ஆளா கின்ற கொடுமை நடக்கிறது. ஆனால் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை தில்லியில் நடைபெற்றதால் நாடே கொந்தளிக்கும்படியான நிலை ஏற்பட்டது.

இதேபோன்று, 22-4-2015 அன்று தில்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில், நரேந்திர மோடி தலைமை யிலான நடுவண் அரசு, ஆணவத்துடன் இரண்டாவது தடவையாக நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம் கொண்டுவந்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நடத்திய கண்டனப் பேரணியின் போது, இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரசிங் என்கிற உழவர் மரத்தில் ஏறி தூக்குப் போட்டுக் கொண்டது, இந்திய அரசியலில் ஒரு சூறாவளி போல் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

நடுவண் அரசின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் மூன்று இலட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதாவது அரை மணி நேரத்திற்கு ஒரு உழவர் இந்த நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் கஜேந்திர சிங்கின் தற்கொலை மட்டும் மாபெரும் பிரச்சனையாக உரு வானது எப்படி?

தில்லியில், பட்டப்பகலில் பல ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்க, ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இக் காட்சியைப் படம் பிடிக்க, இத்தற்கொலை நிகழ்ந்தது என்பது முதல் காரணம். அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக, பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங் களுக்கு உழவர்களிடமிருந்து நிலத்தைப் பறித்து, வாரி வழங்குவதற்கு, மன்மோகன் சிங் ஆட்சியில் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “நிலம் கையகப் படுத்தலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் உரி மைச் சட்டம்” தடையாக இருப்பதால், இதைத் தகர்த்துவிட்டு, தான் விரும்புகிற வகையில் புதிய சட்டத்தை இயற்றிட மோடி துடிக்கிறார். இதற்காக 2014 திசம்பர் 31 அன்று ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

இந்த அவசரச் சட்டத்தில் 2013ஆம் ஆண்டின் சட்டத்தின் உயிரான கூறுகளான 1. 80 விழுக்காடு உழவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்; 2. சமூகத்தாக்கம் குறித்து மதிப்பீடு (Social Impact Assessment-SIA) கட்டாயம் செய்யப்பட வேண்டும்; 3. எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட தோ, அதற்காக, அந்நிலம் அய்ந்தாண்டுகளுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், அந்நிலத்தை உழவருக் குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் ஆகியவை இந்த அவசரத்தில் நீக்கப்பட்டுவிட்டன. மேலும் உழவர்கள், நீதிமன்றத்தை அணுகுவதற்கு இருந்த உரிமை இந்த அவசரச் சட்டத்தில் பறிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அவசரச் சட்டத்தை இந்தியா முழு வதும் உழவர் அமைப்புகளும், காங்கிரசுக் கட்சியும் மற்ற எதிர்கட்சிகளும் கண்டித்தன. பாரதிய சனதா கட்சி, மக்களவையில் தனக்குள்ள பெரும்பான்மை வலிமையைக் கொண்டு 10-3-2015 அன்று இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றது. ஆனால் மாநி லங்கள் அவையில் பெரும்பான்மை இல்லாததாலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் (அ.தி.மு.க. தவிர) எதிர்த்த தாலும் நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே உரிய காலத்திற்குள் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியா ததால் இந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டது.

2015 பிப்பிரவரி 28 முதல் மார்ச்சு 10 வரை வடஇந்தியாவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங் களில் பருவம் தவறிய பருவத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டிப் பெருமழை பெய்தது. இதனால் ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுக் கதிர் பருவத்தில் இருந்த கோதுமை, பயறு வகைகள், காய்கறிகள், பணப்பயிர் கள், தோட்டக்கலைப் பயிர்கள் முதலான பயிர்கள் 94 இலட்சம் எக்டரில் கிட்டத்தட்ட முற்றிலுமாகப் பாழாகி விட்டன. இதனால் உழவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 25-4-2015 அன்று நேபாளத்தில் நிகழ்ந்த கொடிய நில நடுக்கம் போன்றது - 94 இலட்சம் எக்டரில் பயிர்கள் பாழானதால் உழவர்கள் பேரிடருக்கும் பெருந்துன்பத்துக்கும் ஆளானது ஆகும். ஆனால் ஊடகங்கள் உழவர்களுக்கு நேர்ந்த இக்கொடுமை யைக் கண்டுகொள்ளவே இல்லை. நடுவண் அரசும் பதறவில்லை. மாறாக இரண்டாவது தடவையாக நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தைப் பிறப்பித் தது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல!

இரண்டாவது அவசரச் சட்டத்தை மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையை ஒன்றாகக் கூட்டியே னும் நிறைவேற்றுவது என்று மோடி உறுதிபூண்டிருந் தார். எனவே 2014 மக்களவைத் தேர்தலில் படுதோல்வி கண்ட காங்கிரசுக் கட்சி மீண்டும் தலைதூக்குவதற் கான நல்லதொரு வாய்ப்பாக அவசரச் சட்ட எதிர்ப்பைப் பயன்படுத்த முனைந்துள்ளது. இரண்டுமாத விடுமுறை யிலிருந்து திரும்பிய ராகுல்காந்தி தலைமையில் 19-4-2015 அன்று தில்லியில் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தியது. நாடாளுமன்றமும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இடைக்கால விடுமுறைக்குப்பின் 20-4-2015 அன்று கூடியது.

இந்நிலையில், தில்லி மாநிலத்தில் தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, போட்டி அரசியல் நோக்கத்துடன், 22-4-2015 அன்று தில்லியில் நில அவசரச் சட்டத்துக்கு எதிரான பேரணியை நடத்தியது. இப்பேரணியில் கலந்துகொள்ள இராஜஸ்தானில் தவுசர் பகுதியிலிருந்து வந்த உழவரான கஜேந்திர சிங் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்த வேப்பமரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்த கடிதத்தில், “இராஜஸ்தான் மாநிலம் தவுசர் பகுதி உழவரின் மகன் நான். பெருமழையால் கோதுமை பயிர் முற்றிலும் பாழாகிவிட்டதால், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் இருந்த என்னை எனது தந்தை விரட்டிவிட்டார். அதனால் எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார் (தினமணி 23.4.2015). இக்கடிதத்தை கஜேந்திர சிங் மரத்தின் மேல் ஏறிய பிறகு எழுதியதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைப்பழி தன் கட்சி மீது விழாமல் தடுப்ப தற்காக ஆம் ஆத்மி கட்சியும் பா.ச.க.வும் ஒருவர்மீது ஒருவர் பழிதூற்றினர். அரசியல் ஆதாயத்துக்காக ஆம் ஆத்மி கட்சியினரே கஜேந்திர சிங்கைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டினர் என்று பா.ச.க. தலை வர்கள் சாடினர். நடுவண் அரசின் உள்துறை அமைச்ச கத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறை, இவ்வாறே வழக்கைப் பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியோ நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை யினர் பேரணி நடந்த இடத்தில் இருந்த போதிலும் கஜேந்திர சிங்கின் தற்கொலையைத் தடுக்கத் தவறி னர் என்று குற்றஞ்சாட்டியது. காங்கிரசுக் கட்சியோ பா.ச.க., ஆம் ஆத்மி ஆகிய இரண்டுமே இத்தற் கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது. பா.ச.க. ஆட்சி யில் உள்ள இராஜஸ்தான் மாநில அரசின் சுகாதார அமைச்சர் தவுசர் மாவட்டம் பண்டிகுயிக் ஊரில் உள்ள கஜேந்திர சிங் வீட்டிற்குச் சென்று, அவருடைய குடும் பத்துக்கு ரூ.4 இலட்சம் வழங்கினார். ஆம் ஆத்மி, தன்னுடைய தலைவர் ஒருவரை அனுப்பி ரூ.10 இலட்சம் கொடுத்தது. கஜேந்திர சிங்கிற்குத் ‘தியாகி’ என்ற பட்டத்தைக் கொடுத்ததுடன், அவருடைய பெயரில் உழவர் நிவாரணத் நிதித் திட்டம் தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் தில்லி மாநில அரசு அறிவித் துள்ளது.

ஆனால் எந்தவொரு கட்சியும் உழவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கான அடிப்படையான காரணங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. 2013-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 1995 முதல் 2,70,940 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2000 காலத்தில் சராசரியில் ஓராண்டில் 14,462 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2001-2011 காலத்தில் ஓராண்டில் 16,743 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2011இல் 14,027 பேர், 2012-இல் 13,754 பேர், 2013-இல் 11,772 பேர் என, மூன்று ஆண்டுகளில் 39,553 உழவர்கள் தற் கொலை செய்துகொண்டனர். இந்த மூன்று ஆண்டு களில் மகாராட்டிரத்தில் 10,269, ஆந்திரத்தில் 36,792, கர்நாடகாவில் 5,388, மத்தியப்பிரதேசத்தில் 3,588, கேரளாவில் 2,883 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உழவர்கள் தற்கொலை செய்து கொள் வது ஏன்? நடுவண் அரசும் மாநில அரசுகளும் 1991 முதல் வேளாண்மையில் முதலீடு செய்து மேம்படுத்தாமல், புறக்கணித்து விட்டு, பெருமுத லாளிகளின் கொள்ளை இலாபத்துக்கு வழி கோலும் சேவைத் துறைக்கே முதன்மை தந்து நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், சாலை களும் என வாரி வழங்கி ஊக்குவித்ததன் விளைவே விவசாயிகளின் தொடர் தற்கொலைக்குப் பெருங் காரணமாகும்.

1991இல் பி.வி. நரசிம்மராவ் தலைமை அமைச்ச ராக இருந்தபோது, நிதி அமைச்சராக இருந்த மன் மோகன் சிங் பொறுப்பில் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்டது. அப்போது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 35 விழுக்காடாக இருந்தது. பத்து ஆண்டுகள் தலைமை அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் 2014இல் முடிந்த போது, வேளாண்மையின் பங்கு 14 விழுக்காடாகக் குறைந்தது. ஆனால் சேவைத் துறையின் பங்கு 65 விழுக்காடாக உயர்ந்திருந்தது.

ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 14 விழுக்காடு மட்டுமே தரும் வேளாண்மையைச் சார்ந்து 60 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர். இதுவே இவர் களின் துன்பங்களுக்கு அடிப்படையான காரணமாகும். இந்தியாவில் 24 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் 12 கோடி குடும்பங்கள் முழுவதுமாகவோ ஒரு பகுதி யாகவோ வேளாண்மையைச் சார்ந்துள்ளன. இதில் 3 கோடி குடும்பங்களுக்கு நிலம் இல்லை. இவர்கள் வேளாண் கூலித் தொழிலாளர்கள். மீதியுள்ள 9 கோடி உழவர் குடும்பங்களில் 7.5 கோடிக் குடும்பங்கள் 2 எக்டருக்கும் (5 ஏக்கர்) குறைவாக நிலம் உடையவர் கள். இவர்கள் சிறுகுறு உழவர்கள் எனப்படுகின்றனர். இப்பிரிவினர் வேளாண்மையின் சீரழிவால் நிலை குலைந்து அல்லற்பட்டு ஆற்றாது தற்கொலை செய்து கொள்பவர்கள்.

இந்தியாவில் பயிரிடப்படும் மொத்தப் பரப்பில் 65 விழுக்காடு நிலம், நீர்ப்பாசன வசதி இல்லாத - வான் மழையை மட்டும் நம்பியிருப்பதாகும். இந்த வானம் பார்த்த நிலத்தில் உழவர்கள் காலங்காலமாக வறட்சி யைத் தாங்கவல்ல தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு வந்தனர். 1960 களின் இறுதியில் பசுமைப் புரட்சித் திட்டத்தை அரசு கள் செயல்படுத்தத் தொடங்கின. குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்கள் - குறிப்பாக நெல், கோதுமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இப்பயிர்களுக்கு அதிக அளவில் இரசாய உரங்கள் இடவேண்டும்; பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டும். இத்தன்மையில் அதன்பின் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு முதலான பயிர்களில் உயர் விளைச்சல் இரகப் பயிர்கள் பயிரிடப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் சாகுபடிச் செலவு அதிகமாயிற்று. இந்த உயர் விளைச்சல் பயிர் வகைகள் மானாவரி நிலங்களிலும் பயிரிடப்பட்டதால், வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ‘நாட்டு’ இரகப் பயிர்கள் வழக்கொழிந் தன. ஆனால் உயர் விளைச்சல் பயிர்களால் உழவர் களுக்குப் பெரும் இழப்பே ஏற்பட்டது. பசுமைப்புரட்சித் திட்டத்தில் மானாவரி வேளாண்மை புறக்கணிக்கப் பட்டதால், காலப்போக்கில், இது சீரழிந்து, உழவர் களுக்குக் குறைந்த அளவு வருவாய் கிடக்கும் நிலை யும் இல்லாது போயிற்று, அதனால் மானாவரி நிலத் தில் பெரும் பகுதி தரிசாகக் கிடைக்கும் அவல நிலை ஏற்பட்டது.

பசுமைப்புரட்சி என்ற பெயரால் வேளாண்மை, உழவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கார்ப்பரேட்டுகளின் கைக்கு மாற்றப்பட்டது. வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், முதலானவை முதலாளிகளால் - பன் னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் சாகுபடிச் செலவு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்காக உழவர்கள் கடன் வாங்கும் நிலைக் குத் தள்ளப்பட்டனர். அதேசமயம் இடுபொருள்களின் விலை அதிகரிப்பை ஈடுகட்டும் வகையில் விளைபொருள் களுக்கான விலை கிடைப்பதில்லை. இத்துடன் அடிக் கடி வறட்சி, வெள்ளம், பூச்சிநோய்த் தாக்குதல் ஆகிய வற்றின் காரணமாக விளைச்சல் கடுமையாகப் பாதிக் கப்படும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் கடன் சுமை தாங்காமல் உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, சிறுகுறு உழவர்கள் தனியாரிடமும் இடைத்தரகர்களிடமும் உரம்-பூச்சி மருந்து கடைக் காரரிடமும் அதிக வட்டி விகிதத்தில் கடன் பெறுகின்ற னர். அடுத்தடுத்து பயிர் பாழாகின்ற-விளைச்சல் மிகவும் குறைகின்ற காலங்களில் கடன் சுமையால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டுடமையாக்கப் பட்ட வங்கிகள் மூலம் நடுவண் அரசு பத்து ஆண்டு களுக்கு முன் உழவர்களுக்குக் கடன் தருவதற்காக ஒரு இலட்சம் கோடிக்குக் குறைவாகவே நிதி ஒதுக்கி யது. 2014-2015 நிதியாண்டில் 7.5 இலட்சம் கோடி யாக இது உயர்ந்தது. ஆனால் வேளாண்மைக்கான இக்கடன் தொகையில் பெருநில உடைமையாளர் களும், வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் முதலாளிய நிறுவனங்களும் 80 விழுக்காடு அளவுக் குக் கடன் பெறுகின்றன. நடுத்தர - சிறுகுறு உழவர் கள் தங்கள் வேளாண் கடனுக்காகத் தனியாரைப் பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.

மேலும் 1995இல் உலக வணிக அமைப்பு ஏற் பட்டது முதல் வேளாண்மையில் வேகமாகத் தனியார் மயம், தாராளமயம், உலகமயக் கொள்கை செயல் படுத்தப்பட்டது. வேளாண்மைக்கு அளிக்கப்பட்டு வந்த பலவகையான மானியங்கள் பெரிதும் குறைக்கப் பட்டன. இதனால் இடுபொருள் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகள் சூதான விதிகளின் கீழ் அதிக அளவில் வேளாண் மானியம் வழங்குகின்றன. உலக வணிக அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் 12 கோடியாக உள்ள உழவர்களுக்கு 56 பில்லியன் டாலர் டாலர் (1 பில்லியன் - 100 கோடி) மானியம் தரப்படுகிறது; 20 இலட்சம் உழ வர்கள் மட்டும் உள்ள அமெரிக்காவில் 20 பில்லியன் டாலர் மானியம் தரப்படுகிறது. 2.7 கோடி உழவர்கள் உள்ள அய்ரோப் பிய ஒன்றிய நாடுகளில் 58 பில்லியன் யூரோ மானியமாக வழங்கப்படுகிறது. எனவே இந்தியாவில் காங்கிரசு ஆண்டாலும், பா.ச.க. ஆண்டாலும் மானியங் களைக் குறைப்பதில் குறியாக இருக்கின்றன.

பா.ச.க. 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் “பா.ச.க. ஆட்சி, வேளாண் மைக்கு முதன்மை தரும். உழவர்களின் வருவாயைப் பெருக்கும். இதற்காகப் பயிர்ச் சாகுபடிச் செலவின் அடிப்படையில் 50 விழுக்காடு இலாபம் பெறுவதற்கு நடவடிக் கை எடுக்கும்” என்று கூறியது. வடஇந்திய மாநிலங்களில் மேடைதோறும் மோடி இதை முழங்கினார்.

ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும், 2014 ஆகத்து மாதம் இந்திய உணவுக்கழகத்தை (Food Corporation of India - FCI) மறுசீரமைப்புச் செய்வதற்காக பா.ச.க. தலைவர் சாந்தாகுமார் தலைமையில் எட்டுபேர் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். அக்குழு 2015 சனவரி 22 அன்று அதன் அறிக்கை நடுவண் அரசிடம் அளித்தது. 2013ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காட்டினருக்குப் பொது விநியோ கத் திட்டத்தில் தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை 40 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. உழவர் களிடம் கொள்முதல் செய்வதிலிருந்து அரசு படிப்படி யாக விலகி, தனியாரிடம் இதை ஒப்படைத்துவிட்டு, இந்திய உணவுக் கழகத்தைக் கலைத்துவிட வேண் டும் என்றும் கூறியிருக்கிறது. மோடியின் உள்ளக்கிடக் கையை உயர்மட்டக்குழு பரிந்துரையாகத் தந்துள்ளது. ஆனால் 2014-15ஆம் ஆண்டு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு, பல்வேறு வரிவிலக்குகள் மூலம் 5.72 இலட்சம் கோடி உருபாயை மோடி அரசு கொடுத் துள்ளது என்பது அரசின் பொருளாதார ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசின் பட்ஜெட் தொகையே 17,77,477 கோடி தான், எனவே பா.ச.க.வானாலும், காங்கிரசானாலும் பெருமுதலாளி களுக்காக ஆட்சி நடத்துகின்ற கட்சிகளேயாகும்.

கிட்டத்தட்ட எல்லாப் பயிர்களிலும் உழவர்களின் உற்பத்திச் செலவை ஈடுகட்டிவிட்டு, இலாபம் பெறும் வகையில் விளைபொருள்களுக்கு விலை கிடைப்ப தில்லை. மேலும் வறட்சி, அதிகமழை, வெள்ளம், நோய்த்தாக்குதல் போன்றவற்றின் பாதிப்பு ஏற்படும் காலங்களில் தவிர்க்க முடியாதவாறு பெரும் கடன் சுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இடுபொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது, விளைபொருள்களுக் குக் கட்டுபடியாகும் விலையைப் பெறச் செய்வது என்கிற பொறுப்பினை அரசு ஏற்காத வரையில் வேளாண்மை மேலும் சீரழியும்; உழவர்கள் தற் கொலையும் தொடரும்.

கடந்த மார்ச்சு மாதம் வடஇந்திய மாநிலங்களில் 94 இலட்சம் எக்டரில் பயிர்கள் பாழானதற்குப் பயிர்ச் சாகுபடியின் மொத்த செலவு அளவுக்கேனும் நடுவண் அரசும் மாநில அரசுகளும் நிவாரண நிதியாக அளிக்க வேண்டும். ஆனால் நாடு சுதந்தரம் பெற்று 67 ஆண்டுகளாகியும் பயிர் இழப்புக்கு உழவர்களுக்கு உருப்படியான வகையில் உதவும் திட்டம் ஏதும் இல்லாதது மாபெரும் வெட்கக் கேடாகும்.

பயிரிடுவதற்காகச் செலவிட்ட மொத்த தொகையில் 50 விழுக்காடு அளவுக்கு இலாபம் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் கடமை என்று எம்.எஸ். சுவாமி நாதன் தலைமையிலான குழு பல ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்துள்ளது. முதலில் உருப்படியாகச் செயல்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடி யாகச் செயல்படுத்த வேண்டும். 20 இலட்சம் உழ வர்கள் உள்ள அமெரிக்காவில் பயிர்க் காப்பீடாகக் கடந்த ஆண்டு ரூ.55,440 கோடி தரப்பட்டது. 12 கோடி உழவர்களைக் கொண்ட இந்தியாவில் இது ரூ.100 கோடி கூட இல்லை.

ஆகவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக முறையாகச் செயல்படுத்தினாலேயே உழவர்களின் தற்கொலைகள் தடுக்கப்படும். மோடி சொல்வதுபோல் போட்ட முதலில் 50 விழுக்காடு இலாபம் கிடைக்கு மானால் உழவர்கள் வாழ்விலும் வளமும் இன்பமும் உண்டாகும்.