1947 இல் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்ததைப் பற்றி அறிஞர் அண்ணா ``கணக்கு தீர்த்த நாள்’’ என்றும், 1947-க்குப் பிறகு வருகின்ற காலத்தினைக் ``கணக்குப் பார்க்கும் நாள்’’ என்றும் குறிப்பிட்டார்.

வெள்ளையர் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து சுரண்டப்பட்ட வள ஆதாரங்களைப் பற்றிப் பலர் கணக்கிட்டுள்ளார்கள். இக் கணக்குகளையும் சேர்த்து உலகமயமாதல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இந்நாளில் ஒப்பிடுவது காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால் வணிகம் செய்வதற்காகத்தான் முதன் முதலில் அய்ரோப்பிய நாடுகள் இந்தியாவில் கால் வைத்தன. போர்ச்சுகீஸ், டச்சு, இங்கிலாந்து, பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனிகள் வணிகம் தொடங்கின. இறுதியில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இந்திய ஆட்சியையும் கைப்பற்றியது.

இந்தியாவில் நடந்த சுரண்டலை எதிர்த்தவர்கள் நசுக்கப்பட்டார்கள். 1885இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ், மெல்ல மெல்ல பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமையைப் பற்றி மக்களுக்கு விளக்கி இயக்கம் கண்டது. தாதாபாய் நௌரோஜி 1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகச் செயல்பட்டார்.

தாதாபாய் நௌரோஜியை, பெருந்தலைவராகப் போற்றப்பட்ட காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்.

இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தாதாபாய் நௌரோஜியின் ``பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’’ (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றி உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது. காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் காந்தியார், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.

இதன் அடிப்படையில் தான் ஐந்தாண்டுத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. நாட்டிற்குத் தேவையான அடிப்படை, கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் ஆகியன பொதுத் துறையில் இயங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன. இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் அணு ஆயுத உற்பத்தி, செயற்கைக் கோள்கள் செலுத்துதல் ஆகிய துறைகளில் இந்தியா, வல்லரசு நாடுகளுடன் இணையாமல் சுயசார்பு நிலையை எட்டியது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, விடுதலைப் போராட்ட அரசியல் உணர்வை எதிரொலிக்கும் முறையில்தான் ஏகாதிபத்திய நாடுகளுடன் சார்ந்திராமல் அயல்நாட்டுக் கொள்கையில் அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒன்றினைக் கண்டு அதில் வெற்றியும் பெற்றார். நேரு கடைப் பிடித்த உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுத் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் 1990 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் காலனி ஆதிக்க கொள்கையாலும், தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி மூன்றாவது உலக நாடுகளின் வளத்தையும், ஆதாரங்களையும் சுரண்டிச் சென்று வளர்ந்த நாடுகளாக ஏற்றம் பெற்றன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உயர் நெறிகளுடன் ஐ.நா. அமைப்பு தொடங்கப்பட்டது. ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கும் பொருளாதார, சமூக அமைப்புகளான, வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான குழுமம் (UNCTAD), தொழில் வளர்ச்சிக் கழகம் (UNIDO), பன்னாட்டு தொழிலாளர் மையம் (ILO), உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தைகளுக்கான உதவி நிதியம் (UNICEF) ஆகியன வளர்கின்ற நாடுகளின் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு உதவிடும் போக்கும் 1990 வரை நீடித்தது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு அமெரிக்காவின் அரசியல் மேலாண்மைப் போக்கு உலக அரங்கில் வலுப்பெற்றது. இதன் காரணமாக 1990க்கு பிறகு உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund) செல்வாக்கு வளர்கின்ற நாடுகளிலும் பெருகிற்று. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய போன்ற நாடுகள் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய நிதி அமைப்புகளில் பெருமளவில் பங்குகளை வைத்துள்ளன. எனவே இந்நாடுகளுடைய கட்டுப்பாட்டிற்குள்தான் இந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, இந்த நிதி நிறுவனங்களிடம் கடனாகப் பெற்றதின் காரணமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

1995 இல் உருவான உலக வர்த்தக அமைப்பிலும் இந்தியா இடம் பெற்றது. இந்தப் பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்திய பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை இந்தியா 1991 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியது. இந்தியப் பொருளாதாரத்தில் இக் கொள்கை ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைப் பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவினுடைய விவசாயத் துறை, தொழில் துறை மற்றும் பணித்துறைகளில் ஏற்பட்ட ஒட்டு மொத்த வளர்ச்சியின் பிரதிபலிப்பை, நிகர உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் (GDP) காணலாம். விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் முதன்மைத் துறை என்று அழைக்கப்படுகிறது. இத் துறையின் வளர்ச்சி விழுக்காடு 1981-82க்கும் 1990-91க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் 3.8 ஆக வளர்ச்சி அடைந்தது. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கப்பட்டபின் 1991-92லிருந்து 2000-01 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் வளர்ச்சி விழுக்காடு 2.7 என்று குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் தொழில் மற்றும் சில துறைகள் இணைந்த இரண்டாம் துறையில் 7.0 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது. பணித்துறையில் இக்காலக் கட்டத்தில் வளர்ச்சி விழுக்காடு 6.7லிருந்து 7.6 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், நிகர உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு கால கட்டத்திலும் (1981-82லிருந்து 2000-01 வரை) 20 ஆண்டுக் காலத்தில் 5.6 விழுக்காட்டு அளவிலேயே நிலைபெற்றுள்ளது. எனவே, பொருளாதாரச் சீர்திருத்தம் கொண்டு வந்ததால் பெரும் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரம் எடுத்துக் காட்டுகிறது.

மூன்று துறைகளிலும் வேலை வாய்ப்புப் பெருகியுள்ளதா? என்பதை காண்போம். விவசாயத்துறையில் 1983லிருந்து 1994 வரை ஆண்டு வளர்ச்சியின் விழுக்காடு 1.5 ஆக இருந்தது. 1994-2000இல் (-) 0.34 என்ற குறைந்து (எதிர்மறையாக) பின்னடைவில் உள்ளது. கனிமம் மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைவாய்ப்பு இதே காலகட்டத்தில் ஆண்டு வளர்ச்சி விழுக்காட்டில் 4.16இருந்து (-)2.85 என்ற அளவிற்கு வெகுவாக வீழ்ந்துள்ளது. தொழில் உற்பத்தியில் 2.14 என்ற அளவில் இருந்து 2.05 என்று குறைந்துள்ளது. மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகத் துறைகளில் வேலை வாய்ப்பின் ஆண்டு வளர்ச்சி 4.50லிருந்து (-)0.88 என்று குறைந்தது. கட்டுமானத் தொழில்களில் மட்டும் ஆண்டு வளர்ச்சியின் விழுக்காடு 5.32லிருந்து 7.09 அளவிற்கு வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளது. பணித்துறையில், வர்த்தகம் 3.57லிருந்து 5.04 என்று உயர்ந்துள்ளது. போக்குவரத்து மற்றும் தொடர்புத் துறைகளில் 3.24 லிருந்து 6.04 ஆக உயர்ந்துள்ளது. நிதித்துறையில் வேலை வாய்ப்பு ஆண்டு வளர்ச்சி 7.18 என்ற அளவிலிருந்து 6.20 ஆக குறைந்துள்ளது.

சமூக மற்றும் சமுதாயத் துறைகளில் 2.90லிருந்து 0.55 என்ற அளவிற்குக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இத்துறைகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த இரு காலகட்டங்களிலும் வேலை வாய்ப்பின் ஆண்டு வளர்ச்சி 2.04லிருந்து (1983-94) 0.98 (1994-2000) என்ற விழுக்காடு அளவிற்குக் குறைந்துள்ளது. வேலை வாய்ப்பினைப் பெருக்குவதில் பொருளாதாரச் சீர்திருத்தம் தோல்வியுற்றுள்ளது என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கு மூலதன ஆக்கம் பெரும் தூண்டுகோலாக அமைகின்றது. 1980-81 முதல் 1990-91 வரை மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் 2.74 ஆக இருந்தது. (-)0.40 என்ற அளவில் 1991-92 முதல் 2000-01 வரை எதிர்மறையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சேமிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், முதலீடுகளை ஊக்குவிப்பதிலும், பெரும் பங்கினை வகிக்கின்றன. பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கப்படுவதற்கு முன்பு (1980-81 - 1990-91) நிகர உள்நாட்டுச் சேமிப்பின் அளவு 2.1 விழுக்காட்டு அளவில் உயர்ந்து காணப்பட்டது. சீர்திருத்தத்திற்குப் பின் (1991-92 - 2000-01) 0.46 என்ற அளவில் மிகக் குறைவாகவே உள்ளது.

பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கியபிறகு, வறுமையின் அளவு குறிப்பாக, கிராம மற்றும் நகர்ப்புறங்களின் இடைவெளி, அதிகரித்ததாகத் தேசிய மாதிரி ஆய்வில் கிராமப்புற நுகர்வோர் செலவு அடிப்படையில் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன. நுகர்வோர் செலவு 1970-89 ஆண்டுகளில் 1.54 விழுக்காடாக இருந்த நிலை மாறி 1.17 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களின் நுகர்வோர் செலவு 1.45 விழுக்காட்டிலிருந்து 2.77 அளவிற்கு 1998க்குப் பிறகு உயர்ந்துள்ளது. இப்புள்ளி விவரங்களின் அடிப்படையில் நகர்ப் புறங்களின் வாழும் மேல் தட்டு மக்கள்தான் இந்தப் பொருளாதாரச் சீர்த்திருத்தத்தால் பயன் பெற்றுள்ளார்கள் என்பதை இந்திய வளர்ச்சி அறிக்கையும் (Indian Development Report, 2004-05) குறிப்பிடுகிறது.

சமூகத் துறைகளில் பொதுச் செலவைக் குறைத்ததினால் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன்களை இந்தியா தவறவிட்டு விட்டது என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார். 1985-87லிருந்து 2000 வரை கல்விக்கான மொத்த செலவு நிகர உற்பத்தியில் 3.2 விழுக்காடே இருந்தது. இது மிகக் குறைவானதாகும்.

பொது சுகாதாரத்தில் ஒரு விழுக்காட்டிற்குக் கீழ் இக் காலகட்டத்தில் பொதுச் செலவு செய்யப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நேர்முக, மறைமுக வரிகளின் விகிதங்கள் குறைக்கப்பட்டதால் அரசிற்குக் கிடைக்கும் நிதி குறைந்துள்ளது. இதன் காரணமாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் வரித்தொகுப்பிலிருந்து கிடைக்கும் வருவாயும் 1980இல் 7.5 விழுக்காட்டிலிருந்த நிலைமாறி 2002 இல் 3.5 ஆகக் குறைந்துள்ளது. எனவே, மாநில அரசுகளும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பெருமளவில் நிறைவேற்ற முடியவில்லை. மேலும், மத்திய - மாநில அரசுகள் பொதுக் கடனை அதிகரித்துப் பொதுச் செலவைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிதிப் பற்றாக்குறையைச் சரி செய்வதற்கும் கடன் பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இக் காலகட்டத்தில் இந்தியாவின் கடனளவு பெருமளவில் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு 80 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பல பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின்படி பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதினால், பொருளாதாரத்தின் மொத்த முதலீட்டின் அளவு குறைகிறது. இதற்குக் காரணம், தனியார் துறையினர் புதிய முதலீடுகள் செய்வதற்குப் பதிலாக ஏற்கனவே முதலீடு செய்த பொதுத் துறை பங்குகளை வாங்குவதால் புதிதாகத் தனியார்துறை முதலீடு பொருளாதாரத்தில் ஏற்படவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

நிதியியல் கட்டுப்பாடு, திட்ட மேலாண்மை சட்டம் 2003இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதனுடைய குறிக்கோள்களை எட்ட முடியாத அளவிற்குப் பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவில் இது போன்ற நிதியியல் கட்டுப்பாடுச் சட்டம் பெருமளவில் வெற்றிபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு வரிச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் தளர்த்திய பிறகும் உலக ஏற்றுமதியில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு ஒரு விழுக்காட்டிற்குக் குறைவே உள்ளது. உலகமயமாதல் கொள்கை கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்த நாடுகளிலேயே பல்வேறு சரிவுகளைச் சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதின் காரணமாக உலக மயமாதல் கொள்கைக்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றன. 2000க்குப் பிறகு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, உலக உற்பத்தி வளர்ச்சி அளவைப் பெருமளவில் குறைத்துள்ளது.

இதன் விளைவாக உலக வர்த்தகத்தின் வளர்ச்சி அளவு 2000இல் 12.6 விழுக்காடாக இருந்து (-)0.1 விழுக்காடாக 2001இல் வீழ்ந்தது. அமெரிக்காவின் செப்டம்பர் 11, 2001 தாக்குதல் காரணமாக இந்தப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றளவும் உலக பொருளாதார வளர்ச்சி மூன்று விழுக்காடு எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், உலகமயமாதல் கொள்கையின் எதிர்விளைவுகளையும் இந்தியா சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், அய்ரோப்பிய நாடுகள் ஆகியவை உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளில் அதிக நிதிப் பங்கினை வைத்துள்ளதால், மேற்கூறிய நிறுவனங்களின் கடன் அளிக்கும் கொள்கையும் மேற்கூறிய நாடுகளில்தான் முடிவு செய்யப்படுகின்றன. மேலும், ஐ.நா. அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட உலக முதலீட்டு ஆய்வு அறிக்கையில் 100 பன்னாட்டு நிறுவனங்கள் உலக பொருள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த நாடுகள் பன்னாட்டு நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்ற அமைப்புகளுக்கு தங்கள் விருப்பப்படி தலைவர்களை நியமனம் செய்துள்ளன. ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ராட்ரிகோ ரேடோ பன்னாட்டு நிதியத்தின் தலைவராகவும், அமெரிக்க நாட்டைச் சார்ந்த பால் உல்போவிட்ஸ் உலக வங்கியின் தலைவராகவும், அய்ரோப்பிய நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு டோஹா மாநாட்டில் வளர்கின்ற நாடுகளின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்ட பாஸ் கல்லாமி உலக வர்த்தக அமைப்பின் தலைவராகவும் கடந்த ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இச்சூழலில் நடுநிலையோடும், நேர்மையோடும் வளர்கின்ற நாடுகளின் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு மேற்கூறிய அமைப்புகள் எப்படிச் செயல்பட முடியும் என்று பல வல்லுநர்கள் வினா எழுப்பியுள்ளனர்.

அந்நிய முதலீடுகளைப் பெறுவதில் இந்தியாவை விடச் சீனா வெற்றி பெற்றுள்ளது. சீனாவினுடைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை இந்தியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையைவிட பன்மடங்கு அதிகமாகும். உள்நாட்டுப் பொருளாதாரக் காரணிகளைத் தீர்மானிப்பதை சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்துள்ளது.

ஆனால், பொருளாதாரச் சீர்த்திருத்தம் ஏற்பட்ட பிறகு இந்திய அரசமைப்புச் சட் டத்தில் கூடப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசின் பட்டியலிலுள்ள அதிகாரங்களில் தனியார் துறையும் அந்நிய நிறுவனங்களும் தங்கள் எல்லையை விரிவுபடுத்தியுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் அட்டவணை ஒன்றில் உள்ள (எண் 31) அஞ்சல், தந்தி, தகவல் தொடர்பு துறை பற்றிய அதிகாரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. இத்துறைகளில் 74 விழுக்காடு அளவில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அதிகாரப் பட்டியல் மத்திய பிரிவு (எண் 45) வங்கி அமைப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இத்துறையிலும் இன்று அந்நிய வங்கிகளின் பங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற அரசமைப்பு சட்டத்தில் உள்ள பல அதிகாரங்கள் செயல் இழந்து வருகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ள சோசலிச, மதச் சார்பற்ற அரசு என்ற நெறிகளுக்கு எதிராக இன்றைய பொருளாதார போக்குகள் நிலைபெற்றுள்ளன. தனியார் முதலீடுகளையும் அந்நிய முதலீடுகளையும் ஈர்ப்பதற்காக அரசு தனியார் நிறுவனங்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதினால், கணக்கில் காட்டப்படாத பணத்தின் அளவு பெருகியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் கருப்புப்பணம் ரூ.3 இலட்சம் கோடி அளவிற்கு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நிலையில் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன். மற்றொரு நிலையில் தனியார் துறை செலுத்தாத வராக் கடன் 90,000 கோடி. கணக்கில் வராத பணம் ரூ.3 இலட்சம் கோடி என்ற முரண்பாடான கணக்கில் வராத கருப்புப் பொருளாதாரத்தை உருவாக்கிப் பணவீக்கத்தின் அளவினையும் உயர்த்துகிறது.

இதுபோன்ற பெரும் கவலைக்குரிய பெரும் பொருளாதாரச் சூழலில் அரசியல் கட்சிகளின் போக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சுயநலமும், பணவெறியும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதும், பொருளாதாரத் தளங்களிலும் சமூகத் தளங்களிலும் அந்நிய ஆதிக்க சக்திகள் மீண்டும் தலைதூக்குவதும், இதற்கு அரசு இயந்திரமும், அரசின் தலைமையும் கண்டும் காணாமல் இருப்பதும், இந்தியா பெற்ற சுதந்திரம் உண்மையில் அரசியல் - பொருளியல் விடியலாக மாறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இதன் காரணமாகத்தான், காந்தி தனது சுயாராஜ்யம் என்ற நூலில், சுயாட்சி இல்லாத சுயராஜ்யம் என்பது பிரிட்டிஷ் புலிக்குப் பதிலாக இந்தியப் புலியை அமர்த்துவதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டார். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உங்களுடைய கொள்கைகள் ஏற்கப்படுமா? என்று 1946 ஆம் ஆண்டு ஜூலை 28 இல் கேள்வி கேட்ட பொழுது - காந்தி அளித்த பதில்தான் என்ன? காந்தி கூறுகிறார்: ``எத்தனை பேர் வன்முறையற்ற பாதை, இராட்டை, கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட அதிகார பரவலாக்கும் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதற்கு மாறாக, இந்தியா ஒரு முதல் தரமான இராணுவ சக்தியாகவும், அதற்காக வலிமையான மத்திய அரசையும், அதனை ஒட்டிய அதிகார மையத்தையும் உருவாக்க விரும்புகிறார்கள் என்று அறிவேன்’’ என்று குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் 64 விழுக்காட்டினர் கிராமங்களில் வாழும் மக்களாவர். அவர்கள் ஏழ்மையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியா ஒளிர்கிறது என்பது பெரும் பணக்காரர்களுக்கும், உயர்நிலையினருக்கும், மத்தியதர வர்க்கத்தினருக்கும்தான் பொருந்தும். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முற்போக்குக் கூட்டணி உருவாகியது. மீண்டும் மதங்களையே ஒட்டி அரசியல் களம் உருவாக்கக் கனவு கண்டவர்களை மக்கள் புறந்தள்ளினர்.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் கடந்த தேர்தலிலும் பங்கேற்று இந்த முற்போக்குக் கூட்டணி அமைய துணை புரிந்தனர். வாக்களித்த மக்களின் உணர்வினைப் புரிந்து, ஏழைகள் ஏற்றம் பெறப் பணிபுரிவோம் என்ற உறுதிமொழியோடு 59ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதில்தான் வருங்காலத்தில் மக்கள் ஜனநாயகம் வளர்வதற்கு வித்திடும்.

- பேராசிரியர் மு. நாகநாதன்

Pin It