சென்ற திங்கள் இரண்டாம் கிழமையில் இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி, நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் அய்ந்து ஆண்டுகளில் அதாவது 2024 வாக்கில் தற்போதுள் ளதைப் போன்று இருமடங்கு அளவுக்கு அதாவது அய்ந்து டிரில்லியன் டாலர் (அய்ந்து இலக்கம் கோடி டாலர் - ரூ.350 இலக்கம் கோடி) பொருளாதாரமாக மாற்றிடுவோம் என்று சொன்னதையே அண்மையில் சில திங்கள்களாக நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்து சரிந்து வருவதை உலகளவில் உள்ள பல பெரும் பொருளாதார நிறுவனங்கள் நாட்டின் நடுவண் (ரிசர்வ்) வங்கியும் சுட்டிக்காட்டி வருகின்ற வேளையிலும் அவற்றையெல்லாம் கருத்திற் கொள்ளாமல் திரும்பவும் சொல்லியுள்ளார். இதை நம் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுநர்களும், உலகளவில் சிறந்த பொருளாதார வல்லுநர்களும் மோடி சொல்வது வெறும் வெற்றுக் கூற்றாகத்தான் கருத முடியும் என்கின்றனர்.

modi and nirmala sitharamanஇதையடுத்து, சென்ற திங்கள் மூன்றாம் கிழமையில் மகாராட்டிர மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.70 இலக்கம் கோடி) அளவுக்கு உயரும் என்று அவர் மனம் போனபடியெல்லாம், தான் நாட்டின் முதன்மை அமைச்சர் நிலையில் உள்ளவர் என்ற நினைப்பைக் கொண்டுள்ளாரா என்று அய்யுறும் வகையில் பேசி வருகிறார் என்று கருதப்படுகிறது. கட்டுரைத் தலைப்பு வேளாண்மை குறித்து விவரிக்கும் முன் இந்திய ஒன்றிய அரசு இத்துறையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இவ்வாறு செயல்பட்டு வருகின்றதற்கு இவர்களின் பிற செயல்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது முதன்மை.

இந்திய ஒன்றியப் பொருளாதாரம் சென்ற அய்ந்து ஆண்டுகளில் 6-7 விழுக்காடு அளவுக்கு இருந்து வந்தது. 2019-20-ஆம் ஆண்டில் 6 விழுக்காட்டுக்கும் கீழாகவும் சரியக்கூடும் என்று கணிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொருளாதாரம், இவர்கள் கூறுவதுபோல் வரும் அய்ந்து ஆண்டுகளில் அய்ந்து டிரில்லியன் டாலர் அளவை எட்டிப் பிடிக்க வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு நிகரளவில் குறைந்தது 8-9 விழுக்காட்டளவிலாவது இருந்தாக வேண்டும்.

ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைக் காண உள்ளதை கீழேயுள்ள அட்டவணை சுட்டுகிறது. ஆனால் அரசு உண்மை நிலைக்கு மாறாக எந்த அடிப்படையில் இவ்வாறெல்லாம் பேசி வருகிறது என வியப்பாக உள்ளது.

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் 2019-20-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் கணிப்பு விழுக்காட்டில்

finance institutions

(வளர்ச்சி அளவு 6 விழுக்காட்டை அடைவதே அய்யமாக உள்ளது தெளிவு)

ஆனால், இவர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்திய ஒன்றியத்திலுள்ளோர் கருப்புப் பணமாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதைக் கைப்பற்றி நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 இலக்கம் சேர்க்கப்படும் என்றும் மிகு மதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்பு திட்டம் 2016-இல் அவர் அறிவித்த போது கள்ளப்பணமும், கருப்புப் பணமும் பல இலக்கம் கோடிகளில் கைப்பற்றப்படுமென்றும், நாட்டில் எல்லைப் பகுதியில் (நடமாடும்) புழக்கத்தில் உள்ள கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்படும் என்றும் இந்த இலக்குகளை எட்டவில்லையெனில் முச்சந்தியில் தன்னைத்தானே தண்டித்துக் கொள்வேன் என்றும் சொன்ன இவருக்கு இந்திய ஒன்றியப் பொருளாதாரம், மகாராட்டிர மாநிலப் பொருளாதாரம் இவ்வாறெல்லாம் பெருகும் என்று சொல்வதற்கு ஒன்றும் கூச்சம் கொள்ளத் தேவையில்லைதான் என்று தோன்றுகின்றது. மொத்தத்தில் ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற வள்ளுவரின் வாக்கை அடிப்பிசகாமல் கடைப்பிடிக்கும் தகைமையாளர் தான் என்பதை உலகுக்குப் பறைசாற்றுகிறார் மோடி. போகட்டும்.

நாட்டின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்பதை வெற்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அந்த வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி என்ற அடிப்படையான வினா எழும்பினால் அவ்வளர்ச்சியின் பயன்களும் பலன்களும் பெருமளவில் ஒரு விழுக்காடான பில்லியனர்களுக்கு (ரூ.7000 இலக்கம் கோடிக்குமேல் சொத்துடையவர்கள்) மட்டுமே சென்று சேரும். அடுத்துள்ள 10 விழுக்காடு ரூ.100 கோடி அளவில் சொத்துள்ளவர்கள் மேலும் பெரிதும் பயனடைவர். எஞ்சியுள்ள மிச்சம் சொச்சம் 85-90 விழுக்காட்டு மக்களுக்குச் சென்றடையும். அதாவது உழைப்பை நல்கும் உழவர்கள், தொழிலாளர்கள் படைத்திடும் செல்வமெல்லாம் இவர்களையெல்லாம் ஒட்டாண்டி யாக்கிவிட்டு பிழைப்புக்கே வழியில்லா வறியவர்கள் என்றாக்கி விட்டு பெரும் செல்வம் படைத்தவர்களிடம் சென்றடையும். எனவே பொருளாதார வளர்ச்சிக் குறியீடே மிகப் பெரும் பொய்யுரை.

மேற்சொன்ன கூற்று எவ்வளவு உண்மைத் தன்மை யானது என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை தெளிவு படுத்தும். உலகிலுள்ள 141 நாடுகளில் பொருளாதாரத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் அளவீடுகளில் முதன்மையானவற்றில் நம் நாட்டின் இரங்கத்தக்க நிலையைக் காணலாம்.

economy measure india

இதிலிருந்து உற்பத்தியை மேற்கொள்ளும் உழைப்பாளிகளை வேலையற்றவர்களாக வைத்துக் கொள்வதில் மிகவும் முன்னோடியாக உள்ளது. உற்பத்தியைப் பெருக்கும் தன் மையில் அடிப்படைக் கட்டமைப்பும் மிகவும் குறைந்த அளவே உள்ளது. இம்மக்களுக்கான மருத்துவம் அளிப்பதிலும் கடைநிலையில் உள்ளது. எனவே மக்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் தொழிற்நுட்பத் திறனை நம் நாட்டிற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் ஆற்றலற்றவர்களாகவும் உழைப்பாளித் தொழிலாளர்கள் வைக்கப் பட்டுள்ளனர்.

இவ் இழிநிலையிலுள்ள பொருளாதாரச் சூழலில் நாட்டில் உற்பத்தியைப் பெருமளவில் உயர்த்துவோம் என்று சொல்வது மனமறிந்த பொய் என்பது மட்டுமல்ல. வெறும் வெற்றுக் கூச்சலாகத்தான் கொள்ள முடியும். இதையெல்லாம் தாண்டி உற்பத்தியின் பயன், பலனின் பெரும்பங்கு உழைப்பாளிக்குக் கிடைக்காத வகையில் இது பார்ப்பன சனாதன இந்துத்துவ நச்சுக் கோட்பாட்டின் வெளிப்பாடாக 85-90 விழுக்காட்டு மக்கள் வறியவர்களாக வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதை உணராத மக்களாகவும் இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்டுள்ள வறுமை நிலையை உணர்த்தும் வகையில் உலகிலுள்ள நாடுகளின் பசிப்பிணியின் குறியீடு (Global Hunger Index) குறித்த 2019ஆம் ஆண்டின் அறிக்கை உள்ளது. அயிரிசு நாட்டு உதவி பெறும் ‘உலகின் மீதான அக்கறை’ (Concern Worldwide) என்ற நிறுவனமும், ‘வெல்ட் அங்கர் கில்பி’ (Welt Hunger Hilfe) என்ற செர்மன் அமைப்பும் இணைந்து உலக நாடுகளுள் 117 நாடுகளின் மக்கள் பசிப்பிணி நிலை குறித்து 2019-க்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளுள் இந்திய ஒன்றியம் 102-ஆம் இடத்தில் கீழ்நிலையிலுள்ளது. பிற நாடுகளின் நிலை பற்றிய விவரங்களை கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

‘பசிப்பிணிக் குறியீடு’ அடிப்படையில் உலக நாடுகளின் இடம்

economy status of india

(மய்ய ஆப்பிரிக்க 4 நாடுகள் இந்திய ஒன்றியத்திற்குக் கீழ் நிலை)

இந்த அறிக்கை கீழேயுள்ள நான்கு அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

  1. உரிய அளவுக்குக் குறைவான சத்துணவு.
  2. வீணாக்கப்பட்ட குழந்தை (அகவைக்கேற்ற எடை இன்மை).
  3. நறுங்கிய குழந்தை (அகவைக்கேற்ற உயரமின்மை).
  4. குழந்தை பிறப்பு விழுக்காடு (5 அகவைக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விழுக்காடு).

இந்திய ஒன்றியத்தில் உள்ள இந்தக் குறைபாடுகளுக் கெல்லாம் எடுத்துக்காட்டாக ஒன்றை அறிக்கை சொல்கிறது. 6 முதல் 23 மாதக் குழந்தைகளுள் வெறும் 9.6 விழுக்காட்டி னருக்குத்தான் ஏற்புடைய குறைந்தளவு உணவாவது கிடைக்கின்றது என்கிறது. உண்மையில் இந்த அளவில்கூட இல்லாது இன்னும் குறைவாக 6.4 விழுக்காட்டுக் குழந்தை களுக்குத்தான் இந்த அளவு உணவு கிடைக்கின்றது என இந்திய மக்கள் நல அமைச்சரகம் அண்மையில்நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

முன்னைய கட்டுரைகளில் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் யாவும் மிகவும் குறைந்த அளவிலேயே மக்களுக்குக் கிடைக்கின்றன என பல்வேறு உலக நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளதையும் மேற்சொன்ன அறிக்கை விவரங்களை உற்றுநோக்கிப் பார்த்தால் நாடு மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது எனத் தெளிவாகின்றது. இவற்றையெல்லாம் இங்குள்ள ஒன்றிய அரசின் அனைத்து அலகுகளின் உயர் நிலையில் உள்ளோர் சற்றேனும் பொறுப்புடனும் கவலையுடனும் கருத்தில் கொள் கின்றனரா என்ற அய்யம் வராமலில்லை.

இவ்வளவு இரங்கத்தக்க நிலையில் நாட்டின் மக்களை வைத்துக் கொண்டு உலகில் இந்திய ஒன்றியம் 5-ஆம் பெரிய பொருளாதாரம் என்று பீற்றிக் கொள்வது நாட்டுக்கே தலைகுனிவு என்று உணரவேண்டும். இந்த இழிநிலையை மாற்றிடும் வகையில் ஒன்றிய அரசு பார்ப்பனிய சனாதன மனநிலையை அடியோடு ஒழித்துவிட்டு பல்துறைசார் வல்லுநர்களுடன் கரிசனத்துடன் கலந்து விவாதித்து ஆக்கம் தரும் திட்டங்களை வகுத்தெடுத்து செயல்படுத்தி உலக நாடுகளின் நகைப்புக்குரிய நிலையில் வைக்கப்பட்டுள்ள நாட்டை பொருளாதார வளர்ச்சி என்ற பார்வையில் மட்டுமல்லாது மக்களின் மேம்பாட்டை மனதிற்கொண்டு பெருமளவுக்குப் பசிப்பிணியை ஒழித்து நாட்டைத் தலைகுனிவிலிருந்து விடுவித்து உலகில் தலை நிமிர்ந்து நிற்க வைக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் நாட்டின் மக்கள் தொகையில் 12 விழுக்காட்டிற்கு மேல் 16 கோடிக்கும் மேலானோர் பசிப் பிணியின் பிடியில் வாடி வதைந்து கொண்டிருப்பவர்கள் யார்? ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இவர்களுள் 10 விழுக்காடு மக்கள் தொகையுள்ள மேல்சாதி மக்களில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் யாவரும் ஒடுக்கப்பட்ட வேளாண் குடியானவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், பிற தொழிலாளர்கள் என 90 விழுக்காட்டு மக்களுள்தான் இருப்பர். இப்படி இழிநிலை நிலவுவதை கருத்திற் கொள்ளாதவர்களாகத் தான் பார்ப்பனிய, சனாதன பாரதிய சனதாக் கட்சி அரசு, இவர்கள் ‘இந்துகள்’ என்ற வளையத்திற்குள் வராதவர்கள் என்ற மனு கோட்பாட்டைக் கடைப்பிடித்து இந்தப் பசிப் பிணியைப் போக்க எந்தச் செயல் திட்டத்தைப் பற்றியும் எள்ளளவும் எண்ணாமலே செயல்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களைப் பெயரளவில் இந்து மக்கள் எனச் சொல்லி அவர்கள் நலன் நாடுவதாகக் காலமும் பசப்பு மொழி பேசி வருகிறது சங் பரிவார் கூட்டம். அதே நேரத்தில் எறியும் எண்ணெய்யில் எரி தழலைச் சுருவுதல் போன்று இவர்கள் இந்துக்கள் என்று கருதும் மேல்சாதி மக்களுள் ஆண்டுக்கு ரூ.8 இலக்கம் வருமானம் உள்ளவர்கள் நலிவுற்ற ஏழைகள் எனச் சொல்லி, வெறும் 3 விழுக்காடு அளவுக்குள்ளே யுள்ளவர்களுக்குத் தனியே 10 விழுக்காடு ஒதுக்கீட்டைக் கல்வியிலும் வேலையிலும் வழங்கி பலப்பல ஆயிரங்கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இவர்கள் அக்கறையெல்லாம் எதற்காக என்பதைக் கீழேயுள்ள அவர்கள் நடவடிக்கைகளுள் சில காட்டாகத் தரப்பட்டுள்ளன.

(அ) பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை : மனிதர் மடியலாம்; மாடுகள் மடியக்கூடாது. இதுதான் இவர்கள் நோக்கமாகத் தெரிகிறது. தனிமனித விருப்பம் சார்ந்த உணவு முறையைத் தடைசெய்வது வேளாண் குடிமக்கள் உள்ளிட்ட நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் இன்னலுக்கும் பொருளாதாரத் துயரத்திற்குள்ளும் தள்ளுவது. பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் காவிக்கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுவோர், சட்டப்படி தண்ட னைக்குள்ளாக்கப்பட வேண்டுமே அன்றி, சட்டத்தை இந்தக் கொலைகாரக் கும்பல் கையிலெடுத்துக் கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து அவர்களுக்குத் தண்டனை அளித்திடத் தவறுகிறது பா.ச.க. அரசுகள், மேலும் இந்த வன்முறையை ஊக்குவிக்கும் வகையில்தான் பேசி வருகின்றன.

(ஆ) மிகுமதிப்புப் பணத்தாள்கள் மதிப்பிழப்பு : வேளாண் குடியானவர், தொழிலாளர், நெசவாளர், ஏனைய தொழிலாளர்களின் வாழ்வையும், குறு சிறு தொழில்களை முடக்கி அவை சார்ந்த எளிய மக்களை வதைத்தும், பல நூறு மக்களை அவர்கள் வங்கியில் வைத்திருந்த பணத்தைப் பெற்றிட முடியாமல் பலிவாங்கிவிட்டதும், திட்டத்தின் குறிக்கோள் என்று சொன்ன கள்ளப்பணம் ஒழிப்பு, கறுப்புப் பணம் ஒழிப்பு பயங்கரவாதிகளுக்குக் கிடைக்கும் கள்ளக் கறுப்புப் பணம் ஒழிப்பு என்ற எதையும் கட்டுக்குள் கூடக் கொண்டுவரவே இல்லை. பின் எங்கே இக்கேடுகளை ஒழிக்க முற்படுவது. இது ஒரு நிழல் போரானது.

(இ) பொருள் - சேவை வரி : இந்த மறைமுக வரிவிதிப்பு வெகு மக்களான ஒடுக்கப்பட்ட வேளாண்குடி மக்கள் அனைவரையும் ஒருபுறம் அவர்களின் அடிப்படை தேவைக்கான பொருள்களின் மீது வரி, மறுபுறம் அவர்களுக்கான வேளாண் இடுபொருள்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மீது கடுமையான வரி எனவும் அதேநேரத்தில் அவர்களின் வேளாண் விளைபொருள்களுக்கு அரசு ஈன விலை தருவது என்றும் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது சமூகத்தின் அனைத்துத் தளத்திலிருக்கும் ஏழை, எளிய மக்கள் மீது தொடுக்கப்ட்ட வன்முறைத் தாக்குதல் போன்றது.

(ஈ) நீட் (Neet) தேர்வு முறைத் திணிப்பு : நாட்டில் மருத்துவப் படிப்பில் சேரத் தன் நிதி மருத்துவக் கல்லூரிகள் பொருளாதாரக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அதனால் படிப்புத் தரம் குறைந்துவிட்டது எனவும் அதற்காக ஒன்றியம் முழுமைக்குமாக ஒரே நுழைவுத் தேர்வு என ‘நீட்’ தேர்வு திணிக்கப்பட்டது. இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இது முரணானது என்று 2013-இல் சொன்ன தன்நிலைப் பாட்டை உச்ச வழக்கு மன்றம் பின் மாற்றிக் கொண்டு 2016-இல் ‘நீட்’ தேர்வை நடத்தலாம் என்றது மாநிலத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு முரணானது என்றும் நீதிமன்றமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்ற முன்னைய நிலைப்பாட்டின் அடிப்படையில் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த தமிழகத்தை கல்வித் தரத்தை உயர்த்துங்கள் என ஏற்கெனவே சொன்னதைக் கடைப்பிடிக்காமல் விட்டதுதான் போதுமான தமிழ் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பற்றவர்கள் ஆனார்கள் என்று கூறுவது அய்.அய்.டி., அய்.அய்.எம்., அய்.அய்.எஸ்.சி., அய்.அய்.எம்.எஸ். போன்ற இந்திய ஒன்றியக் கல்வி பார்ப்பனக் காவிக் கூட்டம் முற்றுரிமை பெற்றவர்கள் போல் பன்னெடுங்காலமாக அவை கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலையில் உலகில் உயர் கல்வித்தரம் குறித்த அறிக்கை ஒன்றியத்திலுள்ள எந்தக் கல்வி நிறுவனமும் முதல் 300 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்ற நகைப்புக்குரிய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. எங்கே சென்றது உங்கள் தகுதி, திறமை என்ற வறட்டு, வெற்றுப் பெருமை இப்போது ஆங்கில, அமெரிக்க, அய்ரோப்பியக் கல்வித் திட்டத்தைப் பின்பற்றிக் கல்வித் தரத்தை உயர்த்தலாம் என எவரேனும் சொல்ல முற்பட்டால் அது அறிவியல் அறிவுக்கு முற்றிலும் பொருந்தாது என்பதை எவனாலும் உணர முடியும்.

இந்திய அனைத்திந்திய நுழைவுத் தேர்வு ஆள் மாறாட்டம், இதற்கென்ற தரகர்கள் எல்லையில்லா கொள்ளைக்கு வழிவகுக்கும் நாடெங்கிலும் தனிப்பயிற்சிக் கூடங்கள், பல கல்வி நிறுவனங்களை முறையற்ற செயல்களைச் செய்யத் தூண்டல், கணக்கற்ற பல்லாயிரம் கோடி கணக்கில் பணம் கள்ளத்தன மாகப் புழங்க வழிகோலியது முற்றிலும் தகுதியற்றவர்களிட மிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தனியார் கல்வி நிலையங்கள் இடமளித்தல் போன்ற இன்னும் பல்வேறு கேடான வழிகளுக்கு வழிவகுத்துவிட்டு மருத்துவப் படிப்பைப் பாழ்படுத்தி சீர்கேட்டில் கொண்டு வந்துவிட்டது. இது மேலும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவப் படிப்புக்கு அந்நியமாக்கும் வஞ்சக உள்நோக்கம் கொண்டது.

எனவே 135 கோடி மக்கள் தொகை கொண்ட பல்வேறு இனம், மொழி, சமயம் என பன்முகத் தன்மை கொண்ட மாநி லங்கள் தத்தம் கல்விக் கொள்கையைக் கடைப்பிடித்ததால்தான் கல்வித்தரம் உயரும். எனவே அந்தந்த மாநிலங்கள் மருத்துவச் கல்விக் கோரிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

பா.ச.க. இந்திய ஒன்றிய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விழுக்காட்டு அளவை உயர்த்துகிறோம் எனும் பொய்யாகக் கணக்கிட்டு காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் சென்ற பல காலாண்டுகளாகப் பொருளாதாரம் மிகவும் பெரும் சரிவை நோக்கி நகர்கிறது எனப் பல பொருளியல் நிறுவனங்கள் உறுதியுடன் நிறுவியுள்ளன. அடுத்து அரசே ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனை எதிர்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்காமல் நாட்டின் கவனத்தைப் பொருளாதார மீட்சிக்குத் தொடர்பற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

(அ) தேசியக் கல்விக் கொள்கை : இது வெகுமக் களுக்குக் கல்வியை மறுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அடிப்படையில் நாட்டின் ஒன்றியக் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குலைப்பதற்காக, தமிழ், வங்கம், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிவழி இனத் தேசியப் பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதற்காகத்தான் இக்கல்விக் கொள்கை. கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் இந்தக் கல்வி வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. உண்மையில் அனைத்துக் கல்வி நிலையிலும் குறிப்பாகச் சிறப்பாகத் தொடக்க நடுநிலைக் கல்வி நிலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறையான தொடர்ச்சியான பயிற்சி அளித்து அவர்களின் பயிற்றுவித்தல் திறனையும், திறமையையும் பெருக்குவதுதான் கல்வித் தரத்தை உயர்த்தும் வழி. எனவே இது ஒரு வெற்று வேலை. இதை நாட்டின் விவாதப் பொருளாக்கி நாட்டுப் பொருளாதார வீழ்ச்சி மீட்சியைப் புறம் தள்ளிவிடுகிறது. ஆகவே இந்தப் பா.ச.க. காவிக் கூட்டம் வெகுமக்கள் நலன்களைக் குலைத்திட மேற்கொண்ட சூழ்ச்சி நாடகம்தான் இந்த தேசியக் கல்விக் கொள்கை. எனவே இதைக் கைவிட்டு விட்டு அந்தந்த மாநிலக் கல்விக் கொள்கைகள் மேம்பட ஆசிரியப் பெருமக்களை முறையான சிறந்த பயிற்சிக்கு உள்புகுத்தி அவர்களின் பயிற்று வித்தல் திறனைப் பெருக்கி சிறப்பான கல்வியை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

(ஆ) இசுலாமியரின் முத்தலாக் மணமுறிவு முறை : நாடெங்கிலும் ஒரே வகைக் குடிமையியல் சட்டத்தை உரு வாக்கும் உள்நோக்கத்தில் இந்திய இசுலாமிய மக்களின் சமூக வழிமுறையாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மணமுறிவு முறையை ஒரு குற்றவியல் சார்ந்ததாக மாற்றிக்காட்டி இசுலாமியப் பெண்மக்களின் நலம் பேணுவோர் இந்தக் காவிக் கூட்டம் எனக் காட்டிக்கொள்ள வகுத்திட்டதுதான் இந்த முத்தலாக் ஒழிப்புச் சட்டம். சமூகம் வளரும் சூழலில் பிற இசுலாமிய நாடுகளில் இம்முறை கைவிடப்பட்டது போல் இம்முறை இயற்கையாக அற்றுப்போகும்.

(இ) இராமன் கோவில் அயோத்தியில், சபரி மலையில் அனைத்து அகவைப் பெண்கள் வழிபடத் தடை: முற்றிலும் புனைவாக உருவாக்கப்படும் கதாபாத்திரங் களைக் கொண்டு கட்டப்படும் கட்டுக்கதைதான் காவியங்கள், இதிகாசங்கள் என உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதிகாசத் திற்கான இலக்கணம். இந்த அடிப்படையில்தான் இராமாயண இதிகாச நூலும் இயற்றப்பட்டது என்று இந்துமத முன்னோடி களான பல சாமியார்களால் சொல்லப்பட்டவை. உண்மை நிலை இப்படி இருக்க, இதற்கு முற்றிலும் மாறாக இராமனுடைய தாயார் பாபர் மசூதி இருந்த நடுப்பகுதியில்தான் அவனைப் பெற்றெடுத்தார் என்ற வடிகட்டிய அறிவுக்கொவ்வாத கட்டுக்கதையைக் காலம் காலமாய்ச் சொல்லி வந்து இது ஓர் நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு, அதை வைத்து அப்பாவி மக்களைத் தூண்டி உசுப்பிவிட்டு இந்தக் காவிக் கும்பல் கொடும் வன்முறையில் ஈடுபட்டு மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் பல நூறு இசுலாமிய மக்களை மதவெறியின் பெயரால் பலியும் வாங்கி விட்டனர். அதன் தொடர்ச்சியாக இராமன் இந்த இடத்தில்தான் பிறந்தான் என்று அந்த இடத்தில் இராமன் கோவில் கட்டுவது தான் இராமனுக்கும் மதவெறி கொண்ட மக்களுக்கும் தீர்வாகும் எனச் சொல்லித் திரிந்து வழக்கு மன்றங்களை நாடி வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது. இது வெகுமக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் கவனத்தைத் திசைதிருப்புவதாகும்.

இதே தன்மைத்தது தான் அனைத்து அகவைப் பெண்களும் அய்யப்பன் கோவிலுள் வழிபடத் தடையிடுவது இந்தக் காவிக் கும்பலின் வேலை. ஆனால் இது இயற்கை அறன்களுக்கும், மனிதப் பண்புகளுக்கும் ஏற்றதல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இருப்பினும் பாலின அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி இதை ஊதிப் பெரிதாக்கி நாட்டின் கவனத்தை நாட்டின் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளிலிருந்து திசைதிருப்பி பா.ச.க. காவிக் கும்பலும், காங்கிரசும் இந்த பா.ச.க. அரசு, நாட்டின் பொருளாதாரச் சரிவை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்ததைக் கருத்தில் கொள்ளாமல் மக்களை, நாட்டை மேற்சொன்ன மடைமாற்று வழிகளில் திசைதிருப்பி விட்டதுடன் அன்றி, நாடு இப்போது மிகப்பெரும் பொருளாதாரச் சரிவில் வீழ உள்ளது. நாடும் உலகமும் இவர்களை உணர வைத்தபின் இந்தக் கும்பல் பொருளாதாரச் சீரடைவுக்கு மேற்கொண்டுள்ள கீழே குறிப் பிட்டுள்ள நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலுள்ளது.

(அ) 1.76 இலக்கம் கோடி உதவித் தொகையளித்து பெருநிறுவனங்களை ஊக்குவித்தல்: நாட்டின் பொருளா தார நிலை குலைவைத் தடுத்திட பா.ச.க. கூட்டம் சொல்வது - நாட்டிற்கு வரிசெலுத்தும் பெருநிறுவனங்களையும் பில்லியனர்க ளையும் மிகவும் மதிப்புடன் நடத்துவது, அவர்களுக்கு வரிச் சலுகை வழங்கி ஊக்கமளிப்பது, அவர்களின் தொழில் நிறு வனங்கள் சில இலக்கம் தொழிலாளர்களைக் கொண்டவை மட்டுமே. அத்தொழிற்சாலைகள் முற்றிலும் கணினிமயமாக் கப்பட்டு நடைபெறுவதால் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பே அருகி வருகின்ற நிலையுள்ளது. மேலும் அவர்களின் உற்பத்திப் பொருள்கள் துய்த்தல் உணர்வைத் தூண்டுபவை களாகவும் அதன்வழி அப்பொருள்களின் உற்பத்திச் செலவு போன்றவை பன்மடங்கு அதிக விலை வைத்து சந்தைப்படுத்தி வரன்முறையற்ற இலாபம் ஈட்டுவதற்காகத்தான் இந்த அரசு செயல்படுகிறது. இப்படி கொள்ளை கொள்ளும் பெறுநிறுவனங் களுக்கு ரூ.1.76 கோடி அளவில் வாரி இறைத்து அவர்கள் வளம் வாடாது பார்த்துக் கொண்டது மோடி அரசு. இவ்வளவு பெரும் தொகையைப் பல காலமாக நடுவண் வங்கி (ஆர்.பி.அய்.) சேமித்து வைத்திருந்தது. அது நாட்டுக்கு இடர் நேரும் போது அதைக்கொண்டு நாட்டை மீட்டெடுப்பதற்காக இருந்ததை சில பெரு நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுத்துவிட்டது மோடி அரசு. இவர்களெல்லாம் ஏற்கெனவே பத்து இலக்கம் கோடி ரூபாய் அளவில் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்டு அதைத் திரும்பச் செலுத்தாது, அதையெல்லாம் வராக் கடனாக்கிய கடனாளிகள்.

(ஆ) ரூ.1.45 இலக்கம் கோடி அளவில் பெரு நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு : மேலே அளிக்கப்பட்ட ஊக்கத் தொகையுமின்றி பெருநிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கிப் பொருளாதாரச் சரிவை நிறுத்த அவர்கள் செலுத்தி வந்த பெருநிறுவன வரி 30 விழுக்காடாக இருந்ததை 22 விழுக்காட்ட ளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாகப் புதிதாகத் தொடங்கப்படும் பெருநிறுவனங்கள் 15 விழுக்காட்டு அளவுக்கு வரி செலுத்தினால் போதும் என்றும் இந்த அரசு அறிவித்து விட்டது. இந்த வகையில் அரசுக்கு வரும் வரி வருவாய் ரூ.1,45 இலக்கம் கோடி குறைந்துவிடும்.

(இ) அரசுப் பொது நிறுவனங்களின் பங்கை விற்றல் : அரசு இப்படிச் செய்யும் ஊதாரித்தனத்தினால் ஏற்படும் இழப்பை ஆண்டுதோறும் பொதுத்துறை நிறுவன பங்குகளை மலிவாக விற்று ரூ. ஒரு இலக்கம் கோடி அளவுக்கு ஈட்டி வருகின்றது. இந்த, அரசுப் பொது நிறுவனங்கள் கோடான கோடி மக்களிடமிருந்து 50-60 ஆண்டுகளாக வரிப்பணமாகத் திரட்டப்பட்டுத்தான் பொது நன்மைக்காக நிறுவப்பட்டவை. ஆனால் அதன் பங்குகளையெல்லாம் விற்று அவற்றைச் சீரழிக்கின்றது இந்த அரசு. இந்தக் கேடுகெட்ட வேலைகளைச் செய்ய தனியார் துறைகளும், முகமைகளும் அமைக்கப்பட்டு அவை தன்னிச்சையாகச் செயல்படத் திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. இவையெல்லாம் வெகுமக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் துரோகச் செயல்களாகும்.

(ஈ) அரசு பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கல் : ஒரு பக்கம் பொதுத் துறை நிறுவனங் கள் ஏலத்தில் விற்கப்பட்டுவரும் அதே வேளையில் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகின்றது அரசு. தொடர்வண்டித் துறையில் தொடங்கிவிட்டனர் துரோகத்தை. சென்ற ஆறாண்டு காலமாய் இது தனியாருக்கு அளிக்கப்படாது என்று மனமறிந்து பொய் சொல்லி வந்துள்ளனர். இதில் உள் நோக்கம் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டை அழித்தொழித்து அவர்களுக்கான அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையை மறைமுகமாகப் பறித்திடு வதாகும்.

(உ) நாட்டின் பாதுகாப்புக்கு உபரி ஒதுக்கீடு : அண்டை நாடுகளுடன் குறிப்பாக பாக்கிசுத்தான் சீனாவுடன் நல்லுறவைப் பேணுவதை விடுத்து, மோதல் போக்கை, அரசியல் நலனுக்காகக் கடைபிடித்து ஆண்டுக்கு ரூ.5 இலக்கம் கோடி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்து ஊதாரித்தனமாகச் செலவு செய்து வருகிறது பா.ச.க. அரசு.

நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்து வரும் சூழலில் மேற்சொன்ன நடவடிக்கைகளின் பின்னணியில் வேளாண்துறை கைவிடப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் உலகளவிலும் இந்திய ஒன்றியத்திலுமுள்ள பொருளாதார வல்லுநர்கள் சரிவைத் தடுக்க இந்திய ஒன்றியம் விவசாயப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க முன்னுரிமை அளித்திட வலியுறுத்துகின்றனர்.

இது உழைப்பாளி மக்களுக்குப் பெருமளவு வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன் அம்மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்தும், இதன் ஊடாக வேளாண் விளைபொருள் விளைச்சல் மிகுந்து மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியுறும். இதனுடன் அரசு சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களான கல்வி, மருத்துவம், சாலை அமைத்தல், தொடர் வண்டிப் பாதைகள் அமைத்தல், குறு-சிறு தொழில் ஊக்குவித்தல் போன்றவற்றிற்கு அரசு பெருமளவுத் தொகை ஒதுக்கீடு செய்து திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இவ்வகையிலும் வேலை வாய்ப்புப் பெருகும். இதிலும் வேளாண்சார் உழைப்பாளிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் வேளாண்மைத் தொழில் சார்ந்தோருக்கு வாங்கும் திறன் பெருகும் வாய்ப்பும் அதிகமாகும்.

இக்கட்டுரையில் முன் பத்தியில் குறிப்பிட்டது போல் கடுமையான பொருளாதாரச் சரிவைத் தடுக்கத் திட்டமிடாமல் இவ்வரசு மக்களைத் திசைதிருப்பும் செயல்பாடுகளில் ஈடுபடும் பின்னணியில் வேளாண்மைத் தொழிலும் புறம் தள்ளப்படு வதைப் பற்றி விவாதிக்கலாம். வேளாண்மை மேம்பாட்டுப் பொருளாதாரத்தைத் தனியே விரிவாக அடுத்தடுத்து ஆய்வுக் குட்படுத்தலாம்,

யானைப் பசிக்குப் பொறியை அளிப்பது எவ்வளவு பொரு ளற்றதோ அதே தன்மையில் வேளாண்மைசார் 65-70 கோடி மக்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6000/-ஐ மூன்று தவணைகளில் அளித்திட திட்டமிட்டுள்ளது. இதனால் அரசுக்கு வெறும் ரூ.60,000 கோடி தான் செலவு பிடிக்கும். இவ்வளவு பெரும் திரளான ஏழை, எளிய வேளாண் மக்களுக்கு உதவித் தொகை என்ற பெயரில் கையூட்டுப் போன்று அளிக்கப்பட்டதே 2019ஆம் ஆண்டு ஏப்பிரலில் நடைபெறவிருந்த பொது தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காகத் தான், இது இவர்களின் உழைப்பை இழிவுபடுத்துவது போன்றதாகும்.

உண்மையில் சில பெருநிறுவனங்களைப் பொருளாதாரச் சரிவிலிருந்து தடுப்பதற்காக என்ற பெயரில் தவணை தவணையாகப் பலப்பல இலக்கக் கோடிப் பணம் அளிக்கப்பட்டதில் ஒரு சில இலக்கம் கோடி பணம் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்து உழவுத் தொழில் மேம்பாட்டுக்கான பல்வேறு கட்டமைப்புகளை அமைதிருந்திருக்க வேண்டும். அதன் பயனாய் அம்மக்களுக்குப் பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கக் கூடும். அவர்கள் வாங்கும் திறன் அதிகமாகியிருக்கும். அதனால் பொதுப் பொருளாதாரச் சரிவு சற்றேனும் தடுக்கப்பட்டிருக்கும். மேலும் அந்தக் கட்டமைப்புகள் நிலைத்த பயன்களை அவர்களுக்கு அளிப்பதாக அமைந்தி ருக்கும்,

பல பொருளாதார வல்லுநர்கள் நலிவுற்றுள்ள பொரு ளாதாரச் சூழலில் பெருமளவில் வேலை வாய்ப்பை உருவாக்க ஏதுவாக உள்ள மகாத்மா காந்தி ஊர்ப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் இன்னும் பல கோடி மக்களை இணைத்து ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை என்றிருப்பதை 150 நாள்கள் என்று அதிகமாக்கிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இந்த அரசு மேற்சொன்ன திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்துள்ளது. அதனால் பல கோடி வேளாண் தொழிலாளி மக்கள் வேலை இழப்புக்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர். மேலும் அவர்கள் வேலை செய்தமைக்கான கூலித் தொகையை அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாகச் செயல் படுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் பொருளாதாரத் திற்கு நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் வல்லுநர் அப்ஜித் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது பொருளாதாரச் சரிவையும் தடுக்கும் என்றும் கருத்துரைத்துள்ளார். இத்திட்டத்திற்குப் பெருமளவில் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

மேலும் உழவுத் தொழில் புரிவோருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.6000/- உதவித் தொகை கொடுப்பது போன்று அவர்களிலும் பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் உழவுத் தொழிலாளி களுக்கும் கணிசமான உதவித் தொகை கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலையில் பெருநிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பெருமளவு நிதி ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பெருநிறுவன வரி அளவு 30 விழுக்காட்டை 20 விழுக்காடாகக் குறைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்றும் புதிய நிறுவனங்களுக்கான நிறுவன வரி 15 விழுக்காடாகக் குறைக்கப்பட்டதையும் திரும்பப் பெறவேண்டும் என்று கருத்துரைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட இந்த வகையிலான சலுகை பெரும் நல்விளைவுகளைத் தராது என்றும் பொருளாதாரச் சரிவைத் தடுக்காது என்றும் சொல்லியுள்ளார். இவ்வகையில் அரசு செயல்பட்டால் அரசுக்குப் பல இலக்கம் கோடி ரூபாய் வீணான செலவாகிவிடும். ஆனால் அந்தப் பெரும் நிதியை மேற்சொன்ன ஊர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து வேளாண்சார் மக்களின் வாங்கும் திறனையும் அதிகரித்து பொருளாதாரச் சரிவைத் தடுக்கலாம். மேலும் இவர்களின் உழைப்பின் பயனால் உருவாகும் அடிப்படைக் கட்டுமானங்கள் வருங்காலத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் துணையாக அமையும்.

இந்த ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்படும் கூலி நாளொன் றுக்கு நிகரளவில் ரூ.179 மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றது. இது பார்த்த மாத்திரத்தில் அந்தமக்களை அவர்கள் உழைப்பை இழிவுபடுத்தும் வகையிலான கூலியளவு என மக்கள் பற்று சற்றேனும் உள்ள எவரும் உணர்வர். ஆனால் இந்தப் பார்ப்பனிய சனாதன இந்திய ஒன்றிய பா.ச.க. அரசும், முன்னைய காங்கிரசு அரசும் மனித உழைப்பை இழிவுத் தன்மையுடையதாகத் தான் கருதி வந்துள்ளனர் என்பது தெளிவு.

இந்தக் கூலியைப் பற்றி, வெள்ளைச்சட்டைக் கூட்டம், ஆசிரியர்கள், சில பொருளியலா ளர்கள் என்று தம்மை கூறிக் கொள்வோர், அவர்கள் போதுமான அளவுக்கு வேலை செய்வதில்லை என்று சொல்லி அந்தக் கூலியளவு போதுமானதுதான் என்றும், இன்னும் சிலர் இதைப் பற்றி முற்றிலும் புரிதலற்ற தன்மையில் இத்திட்டம் தேவைதானா என்றும் வினாவும் எழுப்புகின்றனர். உண்மையில் பல ஆய்வுகள் இத்திட்டத்தின் பயனாய் பல விலை மதிப்பிட முடியாத அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. இத்திட்டத்தைத் திறம்படச் செயல் படுத்திட பல இலக்கக் கணக்கில் ஊடுருவியுள்ள தரகர்களை முற்றிலும் அகற்றிட வேண்டும். அவர்கள் வேலைகளை மேற்பார்வை யிட்டுக் கண்காணித்து, உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் அடிப்படை வசதிகள், அடிப்படைக் கட்டுமானங்கள் உருவாக்கப் படத்தான் உரிய வழிவகைகள் காணப்பட வேண்டும்.

இவர்களுக்கு வழங்கப்படும் கூலியளவு பற்றி மனிதப் பற்றுடன் கவனிக்க வேண்டும். ஒன்றிய அரசின் தொழிலாளர் அமைச்சரகம் தனி மனிதனின் குறைந்தளவிலான நாள் ஊதியம் ரூ.692/-க்குக் குறையாகமல் நிர்ணயித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இத்திட்டத்தின் நாள், நிகரளவு கூலி ரூ.179 என்பது நான்கின் ஒரு மடங்கு அளவுக்குக் கூட இல்லை. இது இந்த வேளாண்துறைசார் உழைப்பாளர் மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் இழிவு. நாட்டின் விலைவாசி நிலையைக் கணக்கில் கொண்டால் இவ் உழைப் பாளிகளுக்குக் குறைந்த அளவு கூலி ஏறத்தாழ ரூ.500 அளவுக் காவது இருக்க வேண்டும் என்று அரசு உணர்ந்து அதை உடனடியாக உயர்த்தி அளித்திட முன்வர வேண்டும்.

இக்கட்டுரையில் வேளாண்மைத் தொழில் நாட்டிலுள்ள பல்வேறு தளங்களில் நிகழும் பலவகையான நிகழ்வுகளின் பின்னணியில், பார்க்கப்பட்டால்தான் இந்த நாடு அதை எந்தளவுக்குப் புறந்தள்ளி நசிக்கியுள்ளது என்ற பருண்மையைச் சரிவர புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றிற்கு சிறு அளவிலாவது விளக்கம் தரப்பட்டது. இனிவரும் கட்டுரைகள் வேளாண்மையின் வளர்ச்சிக்கு முன் எடுப்புகள் (backward linkage) வேளாண் விளைபொருள் உற்பத்திக்குப் பின் எவ்வாறு கையாளப்பட்டு பின்னெடுப்புகள் (forward linkage) உரிய உயரிய மதிப்புடைய பொருளாக ஆக்கப்பட வேண்டும் என்பதை விரிவாகப் பேசுவோம்.

உலக நாடுகள் அவற்றில் தட்பவெப்ப, சமூக, பொருளாதார சூழ்நிலைக்கேற்பத்தான் நாட்டில் பொருளாதாரம் கட்டமைக்கப் படவேண்டும். காட்டாக சுவிட்சர்லாந்து நாடு இயற்கையாக வனப்புமிக்க நாடு. வேளாண்மை, பெரும் தொழில்கள் இல்லாத நாடு. எனவே நாட்டின் இயற்கை வனப்பை வெளி உலக மக்களை ஈர்க்கும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்தி அவர்களின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. இந்தியாவும் அவர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் போக்கில் சுற்றுலா பெரும் தொழில்கள் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்தொழித்து வேளாண்மையை முற்றும் முடக்கி வைத்திட முற்பட்டு விட்டனர். உண்மையில் இந்திய ஒன்றியந்தான் குறிப்பாகத் தமிழ்நாடுதான் உலகிலேயே வேளாண்மைக்கு ஏற்ற தட்பவெப்பம் கொண்ட நாடாகும். இதை எண்பிப்பதுதான் உலகிலுள்ள அனைத்து உயிரனங்களில் பெரும் அளவில் நம் நாட்டில்தான் உள்ளன.

எனவே வேளாண்மை மேம்படுத்தப்பட்டு, வேளாண் குடிமக்களும் மற்றெல்லோரும் செழித்த வளமான வாழ்வு. வாழ வழி காணப்பட வேண்டும்.

- இரா.பச்சமலை

Pin It