தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில், ராஜீய கோரிக்கை என்ன என்பதில் வாசகம் தெளிவாயில்லை என்றும், மக்களை தப்பான வழியில் நடக்கும்படியான பிரசாரம் நடந்து வருகிறதென்றும் ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, ராஜீய கோரிக்கைகளை தெளிவுபடுத்தும் முறையில் பூரண சுயேட்சை என்று காங்கிரஸ் தீர்மானித்திருப்பதற்கு பொருள், ராணுவம் அன்னிய நாட்டு சம்மந்தம் பணம் ஆகியவைகளில் பூரண ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதே என்றும் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு தன்னைப் பொருத்தவரையில் இப்பொழுது அவர் இன்னும் அதிகமாகப் போக வேண்டி இருப்பதாகவும், அந்த நிலைமையையும் தெளிவுபடுத்துவதாகவும் சொல்லி, மேல்கண்ட அதிகம் என்பதின் கருத்தை விளக்குகையில் பாமரமக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தவும், அவர்களுக்கு பொருளாதார சௌகரியம் ஏற்படுத்தவும், அவர்கள் சுதந்திரத்தோடு வாழவும், வேண்டுமானால் இந்தியாவில் அதிகமான உரிமைகளையும், சலுகைகளையும், அனுபவித்து வரும் கூட்டத்தார்கள் அவற்றை விட்டுக் கொடுத்தாலொழிய வேறு எவ்வழியிலும் முடியாது என்றும் விசேஷ தனி உரிமையையும், சலுகையையும், பாமர ஜனங்களுக்கு அனுகூலமாக திருப்ப வேண்டும் என்றும், அப்பொழுதுதான் சுதந்திரம் என்பது ஏற்பட்டதாகச் சொல்ல முடியும் என்றும், சொல்லிவிட்டு. தனிப்பட்ட விசேஷ உரிமையும், சலுகையும் அனுபவித்து வருபவர்களில் முறையே பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்திய சமஸ்தானாதிபதிகளும், இன்னும் பலருமாவார்கள், என்றும்,

இவர்கள் எல்லோருடைய தனி உரிமைகளையும், சலுகைகளையும், ஒழிக்கும் விஷயத்தில் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும்,

ஆனாலும் பொது ஜனங்களின்-பாமர மக்களின் உழைப்பினால் ஒரு சிலர் பெருமையுடன் வாழும் முறையை ஒழித்துத் தான் ஆகவேண்டும் என்றும், இதனால் சிலருக்கு அல்லது ஒரு வகுப்பாருக்கு நஷ்டம் உண்டாய்த்தான் தீரும் என்றும்,

nehru and gandhi ஆனால் பாமர மக்கள் நிலை எவ்வளவு கேவலமாய் இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அவைகள் அவசியமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு பதில்விடுத்த தோழர் காந்தியாரின் கடிதத்தில் கராச்சி காங்கிர சுக்கு பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சியின் அனுபவத்தினால் தனக்கு பூரண சுயேட்சை தீர்மானத்திலும், தோழர் ஜவஹர்லால் சொல்லும் பொருளாதாரத் திட்டத்திலும், நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என்றும், பூரண சுயேட்சையே முடிவான லட்சியம் என்றும் முடிவாகி திட்டமாகி விட்டது என்றும், பொருளாதார விஷயத்தில் தோழர் ஜவஹர்லால் அபிப்பிராயத்தில் தானும் கலந்து கொள்ளுவதாகவும், ஆனாலும் தான் அவ்வளவு தீவிர எண்ணமில்லாதவராய் இருப்பதாகவும், மற்றும் இருந்த போதிலும் இந்தியா ஒன்றுபடும்வரை சமஸ்தானாதிபதிகள் தங்கள் அதிகாரத்தில் பெரும் பாகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவற்றுள் தோழர் ஜவஹர்லால் அவர்கள் கூறியிருக்கும் கோரிக்கை கள் மிதவாத பாஷையில் இருந்தாலும் பயமும், தாட்சண்யமும் அதற்குள் வழிந்திருந்தாலும், அவரது கருத்தையும், உணர்ச்சியையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் இந்த அளவுக்கு இப்பொழுதுதான் போவ தாகச் சொல்லுகிறார். இப்பொழுதாவது இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டியதேயாகும்.

தோழர் காந்தியவர்களோ தந்திரமான வார்த்தைகளால் இவற்றை வெகு சுலபமாக கவிழ்க்கப் பார்க்கிறார். காந்தியவர்களின் வார்த்தைகள் அவர் எல்லா வகுப்பாருக்கும் எப்பொழுதும் தானே தலைவராய் இருக்க வேண்டுமென்கின்ற ஆசையையும், எல்லோரும் எப்பொழுதும் தன்னை போற்ற வேண்டுமென்கின்ற ஆசையையுமே வளியவளிய நிரப்பிக் கொண்டிருக்கிறது. எல்லோராலும் போற்றப்பட வேண்டும் என்று கருதிய எவரா லும் உலகுக்கு யாதொரு பயனும் ஒரு நாளும் ஏற்பட்டதில்லை. பொதுப் படையான வார்த்தைகளாலும், இரண்டருத்தம் கொடுக்கும் வார்த்தைகளாலும் மக்களை ஏமாற்றிப் பெருமை சம்பாதிக்க வேண்டும், சுயநலமடைய வேண்டும் என்பதே தலைவர்கள் என்பவர்களுடைய குணமாகவும், மகான்கள் என்பவர்களுடைய குணமாகவும் இருந்து வருகின்றது. இப்படி இருந்து வருவதற்கு காரணம் மக்களின் மடத்தனமும், கூலிகளின் தொண்டுமேயாகும்.

இனிவரும் சகாப்தத்திலாவது இந்தக்குணம் ஒழிந்து போக வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆதலால் இதற்கு மருந்து இனி அரைவினாடி நேரமாவது இந்திய மக்களின் அரசியல் தத்துவத்திலேனும் பொருளாதார தத்துவத்திலேனும், மதசம்பந்தமென்னும் சமுதாய வாழ்க்கை முறைத் தத்து வத்திலேனும், காந்தியாருக்கு யாதொரு வேலையும் இல்லாமல் செய்து விடுவதேயாகும்.

தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதிய கடிதத்தின் முதல்வாக்கியத்தில், அதாவது வழவழத்த வார்த்தைப் பிரயோகமும் மக்களை தவறான வழியில் நடத்திச் செல்லத்தக்க பிரச்சாரமும் நடந்ததால் குளறுபடி ஏற்பட்டு விட்டது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது, முழுவதும் தோழர் காந்தியாரைக் குறிப்பதும் அவருக்கே மிகச் சரியாய் பொருந்தக் கூடியதுமாகும். தோழர் ஜவஹர்லால் இவ்வளவு சொல்லிய பின்பும் தோழர் காந்தி மறுபடியும் அதே மாதிரியே பேசுகிறார்.

அதாவது பூரணச் சுயேச்சை என்பதுதான் தனது முடிவான லக்ஷியம் என்று முடிவு செய்து கொண்டதாகவும், அதற்குமேல் தோழர் ஜவஹர்லால் போன அளவுக்கு போகத் தக்க அளவு தீவிர எண்ணமில்லை என்றும், அரசர்கள் கொஞ்ச காலத்துக்காவது இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் ஜனங்கள் பிரதிநிதியாய் இருக்க வேண்டுமென்றும், சொல்லுகிறார். இது அரசர்களுக்கும் முதலாளிகளுக்கும் பாமர மக்களுக்கும் எல்லோ ருக்கும் நல்ல பிள்ளையாக ஆவதற்கும் ஏற்ற வார்த்தையே தவிர பாமர ஜனங்களின் கஷ்டத்தை அடியோடு போக்குவதற்கு ஏற்ற வார்த்தையே யல்ல.

மற்றும் தோழர் காந்தியாரின் அல் அறிக்கையில் எவ்வளவு முரணான கருத்துக்கள் இருக்கின்றது என்பதைப் பார்த்தால் அவரது தலைமை இனி நாட்டுக்குப் பயன்படுமா என்பதும் விளங்கும்.

அதாவது அடுத்த ஆகஸ்டு மாதம்வரை, தான் சட்டமறுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லையாம். ஆனால் சட்டமறுப்புச் செய்கின்றவர்களுக்கு யோசனை சொல்லுபவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பாராம்.

தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் வைசிராயோடு ஒரு சமாதானம் செய்து கொள்ளுவதில் சாத்தியமான எல்லா வழிகளாலும் கவனம் செலுத்துவாராம். அரிஜன வேலையும் செய்வாராம். இவை எவ்வளவு முன்னுக்குப் பின் முரண் என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

மேலும் சட்டமறுப்பில் கலந்து கொள்ளச் சுதந்திரமற்றவர் என்று கருதிக் கொள்ளும் ஒருவர் சட்டமறுப்புச் செய்பவர்களுக்கு யோசனை சொல்லவும் வழிகாட்டவும் மாத்திரம் எப்படிச் சுதந்திரமுடையவராவார் என்பது நமக்கு விளங்கவில்லை.

தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொள்ளும் ஒருவர், ஒரு பெரிய காரியமாகிய சர்க்காரோடு சமாதானம் செய்து கொள்ளும் விஷயத்திலும் அரிஜன சேவை விஷயத்திலும் எப்படித் தகுதியுடையவராவார் என்பதையும் வாசகர்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.

மற்றும் தான் என்ன செய்வதென்பதே தனக்குத் தெரியாமல் திகைப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிற ஒருவர், இனிஅடுத்த ஒரு வருஷத்துக்கு மக்கள் செய்ய வேண்டிய வேலைத் திட்டத்தை கூறுவதற்கு முன்வருவது எவ்வளவு முன்னுக்குப் பின் முரண் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

ஆகவே இந்த நிலையில் இனி இந்திய மக்களின் துன்பத்தைப் போக்கி, அவர்கள் யாவரும் சரிசமமாகத் தனிப்பட்ட கவலையற்று வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள் இம்மாதிரியான வழவழ, குழகுழ, போன்ற வார்த்தையுடையவர்களையும் முன்னுக்குப் பின் சதாசர்வகாலமும் முரணாய் பேசிக் கொண்டும் நடந்து கொண்டும், ஒவ்வொன்றுக்கும் கடவுள் பேரால் தத்துவார்த்தம் சொல்லிக் கொண்டு இருப்பவர்களை எதிர்பாராமலும் பின்பற்றாமலும் இருக்கவேண்டும் என்பதே நமது அழுத்தமான அபிப்பி ராயமாகும்.

தோழர் ஜவஹர்லால் அவர்கள் எவ்வளவு மிதவாதப் பேச்சு பேசியிருந்தாலும் இந்த அளவுக்காவது அந்த அபிப்பிராயங்களை அமுலுக்குக் கொண்டு வரச் செய்ய என்ன ஏற்பாடு செய்யப் போகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.

முதலாவது காந்தியாரை விட்டுப் பிரிந்து தன் காலில் நடக்கத் தைரியம் கொள்ளுவாரா? என்பதும், இரண்டாவது இவரது இந்த கொள்கை களைக் “காங்கிரஸ்” ஏற்றுக் கொள்ளுமா? என்பதும், மூன்றாவது “காங்கிரஸ்” ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவர் தனித்து நின்று ஒரு ஸ்தாப னத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வேலை செய்யச் சக்தியும் தைரியமும் இருக்கின்றதா? என்பதும் முக்கியப் பிரச்சனையாகும்.

இதன்படி நடக்காமல் வெறும் அறிக்கையின் மூலம் அபிப்பிராயங்களை வெளியிட்டுக் கொண்டே இனியும் இருப்பதானால், இப்போது எப்படியோ ஒருவழியில் பொது ஜனங்களில் அனேகருக்கு குறிப்பாய் வாலிபர்களுக்குத் தோன்றியிருக்கும் ஒரு உத்வேகமான எழுச்சியையும் ஊக்கத்தையும் பாகுபடுத்தி “பெருமையை” அடைய முழு யோக்கியதை உடையவரேயாவார் என்பது நமது அபிப்பிராயம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.09.1933

Pin It