eswaran 400(Socialism: Utopian and Scientific)

எங்கல்ஸ் எழுதிய இச்சிறுநூல் மார்க்சீயம் கற்பவர்களுக்கு அடிப்படையான ஒன்றாகும். இது உண்மையிலேயே ‘டூரிங்கிற்கு மறுப்பு’ என்ற நூலில் உள்ள மூன்று அதிகாரங்களைச் சற்று சுருக்கி எழுதப்பட்டதாகும்.

‘இந்த நூலில் எங்கல்ஸ் மார்க்சியத்தின் அடிப் படைகளை தெளிவாக விளக்குகிறார். இதன் முதல் பகுதியில் மார்க்சிற்கு முந்தி சோஷலிசம் பற்றிப் பேசியவர்களில் - குறிப்பாக ஆலிவன், யூரியர் ஆகியோர் பற்றிய விமர்சனம் இடம் பெறுகிறது. பின் பகுதியில் முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படையான அம்சங்கள் பற்றிய விளக்கம் உள்ளது.

இந்த நூலின் ஆரம்பத்திலேயே தற்கால சோஷலிசத்தின் அடிப்படையைப் பற்றி எங்கல்ஸ் கூறுகிறார்.

“தற்கால சோஷலிசம் என்பது இன்றைய சமுதாயத்தில் சொத்து உள்ளவர்கள்-இல்லாத வர்கள், முதலாளிகள் - தொழிலாளிகள் ஆகியவர் களுக்கு இடையே நிலவும் வர்க்கப் பகைமை, உற்பத்தியில் நிலவும் அராஜக நிலை ஆகியவற்றின் விளைவு ஆகும். ஆனால் அதன் கொள்கை வடிவத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு பிரஞ்சு தத்துவவாதிகள் வெளியிட்ட விதிமுறைகளின் தர்க்கரீதியான விரிவாக்கம் ஆகும் அது” (394).

பதினெட்டாம் நுற்றாண்டில் பிரான்ஸ் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இந்தப் புரட்சிக்காக மக்களைத் தயார் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. மதம். இயற்கையின் ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் எல்லாமே கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டன. எல்லாமே அறிவுப்பூர்வமாக அணுகப் பட்டன. அறிவிற்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. சிந்தனை மூலமாகக் கிடைத்த விதிமுறைகளுக்கு எல்லாமே உட்படுத்தப்பட்டன. எண்ணங்கள் மனிதச் செயல்களுக்கு அடிப்படை வலுவாக இடம்பெற்றது. இவ்வாறு அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது பூர்ஷ்வாக்கள் ஆவர். இது ‘பூர்ஷ்வாக்களின் சாம்ராஜ்யம்’ ஆகும். எனவே பதினெட்டாம் நூற்றாண்டின் சிந்தனை யாளர்கள் அவர்களுக்கு முந்தி இருந்தவர்களது குறைபாடுகளுடனேயே இருந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் முக்கியமான சில நிகழ்வுகள் இடம் பெற்றன. பூர்ஷ்வாக்கள் நிலப் பிரபுக்களுக்கு எதிராகப் போராடினர். அதே சமயத்தில் பூர்ஷ்வாக்கள் கூலி உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். இந்தக் கூலி உழைப்பாளிகள் பல வடிவங்களில் அப்பொழுது இடம் பெற்றனர்.

இந்தக் கூலி உழைப்பாளிகள் படிப்படியாகப் பாட்டாளிகளாக மாறினர். இந்தப் பாட்டாளி களின் முன்னோர்கள் பூர்ஷ்வாக்களுக்கு எதிராகக் கலகம் செய்தனர். எங்கல்ஸ் இந்த இடத்தில் பல உதாரணங்களைத் தருகிறார். அவற்றில் ஒன்று ஜெர்மனியில் இடம்பெற்ற விவசாயிகள் போராட்டம்.

இந்த எழுச்சிகளுக்கான தத்துவ விளக்கங்கள் தோன்றின. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் சமுதாய நிலைகளை மனதில் கொண்டு, பல கற்பனாவாத (Utopian) சித்திரங்கள் தோன்றின. இதில் ஒரு வகையான சந்நியாசப் போக்கு இருந்தது. உலக இன்பங்களை எல்லாம் துறந்து துறவி போன்று எல்லாவற்றையும் சமமாகக் காணும் போக்கு இருந்தது. இந்தப் போக்கில் முக்கியமான மூவர் இடம் பெற்றனர்.

ஒருவர் கெயின்ட் சைமன் என்பவர். மற்ற இருவர்கள் பூரியர், ஓவன் ஆகி யோர். இந்த மூவருக்கும் பொதுவான ஒரு அம்சம் உண்டு என்று எங்கல்ஸ் கூறுகிறார். அதாவது இவர்கள் யாரும் பாட்டாளி வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கவில்லை என்பது அது.

இவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, மொத்த மனித குல விடுதலையைப் பற்றிப் பேசினர். அறிவு, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாயம் அமைய வேண்டும் என்று இவர்கள் விரும்பினர்.

ஆனால் பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் தோல்வியடைந்தன. உதாரணமாக ரூசோவின் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட அமைப்பு பயங்கரவாதத்திற்கு இடமளித்தது. பிரான்ஸ் தேசத்தில் ஜாக்கோபியர்கள் ஆட்சி இதற்கு எடுத்துக்காட்டு. இரத்த ஆறு ஓடியது.

இந்தச் சூழலில் ஐரோப்பாவில் - குறிப்பாக இங்கிலாந்தில் - முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவச் சொத்துரிமை மறுக்கப்பட்டு, பூர்ஷ்வாச் சொத்துரிமை தோன்றியது. பணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்ற நிலை தோன்றியது.

 குற்றங்கள் அதிகரித்தன. வாணிபம் என்பது ஏமாற்றுதல் என்ற நிலைக்குச் சென்றது. சுருக்கமாகக் கூறினால் அறிவுப்பூர்வ மாகக் கண்ட சமத்துவம் நடைமுறையில் சின்னா பின்னமாயிற்று. இப்பொழுது செயின்ட் சைமன் (1802) ஜெனிவாக் கடிதங்கள் என்பதை எழுதினார்.

 பூரியர் அவரது முதல் நூலை (1808) எழுதினார். ராபர்ட் ஓவன் அவரது பரிசோதனைகளைத் தொடங்கினார் (1800). இவர்கள் உருவாக்கிய கொள்கைகள், அக்காலத்திய முதலாளித்துவ வளர்ச்சிகளுக்கு ஏற்ப இருந்தன.

இதில் மூவர் தனித்து நிற்கின்றனர். முதலா மவர் செயின்ட் சைமன். இவரை எங்கல்ஸ் ‘பிரஞ்சுப் புரட்சியின் மகன்’ என்று அழைக்கிறார். பிரஞ்சுப் புரட்சி என்பது சமுதாயத்தின் மூன்றாவது பிரி வினரது வெற்றி ஆகும்.

இந்தப் பிரிவு அல்லது எஸ்டேட் என்பதில் விவசாயிகள், வியாபாரிகள். கைவினைஞர்கள், பூர்ஷ்வாக்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் மேல்தட்டு வர்க்கத் தினருக்கு எதிராகப் போராடினர். செயின்ட் சைமன் இதனை ‘உழைப்பாளிகள்’, ‘சும்மா இருப் பவர்கள்’ ஆகியோருக்கு இடையே உள்ள பகைமை என்று கூறுகிறார். ஏழைகள்பால் அனுதாபம் காட்டுகிறார். ‘எல்லா மனிதர்களும் உழைக்க வேண்டும்’ என்பது அவரது கொள்கை.

 பிரஞ்சுப் புரட்சியை வர்க்கப் போராட்டம் என்று அவர் கூறினார். இது முக்கியமான ஒன்றாகும். பொருளா தாரச் செயல்பாடுகள்தாம் அடிப்படையானவை என்ற கருத்து அதன் கருநிலையில் செயின்ட் சைமனிடம் காணப்பட்டது.

பூரியர் என்பவரிடம் இது வேறு வடிவத்தில் இடம்பெற்றது. பூரியர் அவர் காலத்திய சமுதாயத் தினைக் கடுமையாக விமர்சித்தார். பூர்ஷ்வா அமைப்பினை விமர்சனம் செய்யும் அதே வேளையில், பூரியர்தான் முதல்முதலாக பெண் விடுதலை பற்றியும் பேசினார்.

பூரியரின் முக்கிய மான பங்களிப்பு, வரலாறு பற்றிய அவரது கருத்தாகும். மனிதகுல வரலாற்றை காட்டு மிராண்டி நிலை, அநாகரிக நிலை, தந்தை வழிச் சமுதாய நிலை; நாகரிக நிலை என்று அவர் பிரித்துக் காண்கிறார். இவர் இயங்கியல் முறையைக் கையாண்டு சமுதாய வரலாற்றை விளக்கினார்.

இவை அனைத்தும் பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது இங்கிலாந்தில் மிக அமைதியாக தொழிற்புரட்சி நடைபெற்றுக் கொண் டிருந்தது. புதிய இயந்திரங்கள் அதிகமான அளவு அங்குதான் பயன்படுத்தப்பட்டன. பாட்டாளி வர்க்கம் அங்கு உருவாயிற்று.

பாட்டாளி முதலாளி வேறுபாடு அங்கு அதிகமாயிற்று. நகரங்களில் சேரிகள் தோன்றின. பாரம்பரிய உறவுகள் சிதைக்கப்பட்டன; பெண்களும், குழந்தைகளும் கடுமையாக உழைத்தனர். உழைக்கும் வர்க்கம் ஒழுக்க வீழ்ச்சியில் இருந்தது. விவசாயம் புறக் கணிக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் ராபர்ட் ஓவன் என்பவர் தோன்றினார். இவர் பொருள்முதல்வாத அடிப் படையில் சமுதாயத்தினை அணுகினார். மனி தனது பண்பு என்பது ஒரு பக்கத்தில் பாரம்பரியம் சார்ந்தது.

 மற்றொரு பக்கத்தில் சூழ்நிலையைச் சார்ந்தது என்று இவர் கூறினார். இவர் ஒரு முதலாளி. இவரைப் போன்ற முதலாளிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது இவர் மட்டும் தெளிவு பெற வேண்டும் என்று விரும்பினார். புதிய லனார்க் பருத்தி ஆலையின் இயக்குனராக இவர் இருந்தபொழுது சில சீர்திருத்தங்களை செய்தார்.

இந்த ஆலையை ஒரு வகைமாதிரி குடியிருப்பாக மாற்றினார். இந்தக் காலனியில் குடி கிடையாது. காவலர்கள் கிடையாது. நீதிபதிகள் இல்லை. சட்ட வழக்குகள் இல்லை; ஏனென்றால் உழைப் பாளிகள் மனிதர்களாக நடத்தப்பட்டனர். இவர் வேலை நேரத்தைக் குறைத்தார்.

 குழந்தைகள் பள்ளிகளைத் திறந்தார். இதனால் இவரது ஆலையில் உற்பத்தி பெருகியது. இங்கு ஆலை யானது எல்லோருக்கும் பொதுச் சொத்தாகக் கருதப்பட்டது. ஆனால் இவர் வாணிப ரீதியாகவே செயல்பட்டார். இந்த சீர்திருத்தங்கள் மூலமாக ஓவன் பொதுஉடைமை நோக்கி நகர்ந்தார்.

அவர் ஒரு தர்மவானாக இருக்கும் வரை அவரை ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நல்ல மனிதர் என்றே கண்டனர். ஆனால் தனிச்சொத்து, மதம், திருமண முறை ஆகியன பற்றி அவர் பேச ஆரம்பித்த பொழுது, அவருக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. இதன் விளைவு அவரை ஒதுக்கி வைத்தனர். அவரைப் பற்றி மௌனம் சாதித்தனர். அவரது தொழில் சிதைந்தது. அமெரிக்கா சென்றார். அங்கு தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இவர்களது சோஷலிசம் கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டது. இவர்களைப் பொறுத்த மட்டிலும் சோஷலிசம் என்பது முழுமையான உண்மை, அறிவு, நீதி ஆகியவற்றின் விளைவாகும். எங்கல்ஸ் கூறுகிறார்.

“இவற்றிலிருந்து கிடைப்பது எல்லாம் கலந்த சராசரி சோஷலிசம் ஆகும்.... எனவே பல்வேறு அபிப்பிராயம் கலந்த கலவை யாக அது இருந்தது. பல்வேறு விமர்சனக் கருத்துக்கள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்கால சமுதாயம் பற்றிய சித்திரம், ஆகிய வற்றின் அவியலாக இது இருந்தது.” (404)

இந்தக் காலகட்டத்தில் சிந்தனை பற்றிய இயங்கியல் பார்வை தோன்றியது. அதனை முழு வதுமாக வளர்த்தவர் ஹெகல். இந்த இயங்கி யலைப் பின்பற்றியவர்கள் எண்ணங்களை மட்டுமே விளக்கினர். இந்த முறையை இயற்கை விஞ்ஞானங்களுக்குப் பயன்படுத்தினால் இயற்கை யாக மாறுகிறது. இயற்கையில் உள்ளவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற கருத்து உருவாயிற்று.

ஆனால் இயற்கை விஞ்ஞானிகள் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனி யாகவே ஆண்டனர். இதன் விளைவாக ஒரு இயந்திரகதியிலான அணுகுமுறை தோன்றியது.

இதனை லாக், பேகள் போன்றவர்கள் தத்துவத்திற்கு மாற்றும்பொழுது இயற்கை பற்றிய ஒரு இயக்க மறுப்பியல் (metaphysical) முறை தோன்றியது. இவர்கள் இயற்கையை இயந்திரகதியில் அணுகினர்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கண்டனர். இதிலிருந்து மாறுபட்டு, மார்க்ஸ் இயங்கியலை வளர்த்தெடுத்தார். எங்கல்ஸ் கூறுகிறார் “மற் றொரு பக்கத்தில், இயங்கியல் என்பது, பொருள்கள், அவற்றின் பதிலிகள், எண்ணங்கள் ஆகியவற்றை தொடர்பு, இணைப்பு, இயக்கம், அவற்றின் தோற்றம், முடிவு என்ற முறையில் காண்கிறது.” இதனை வரலாற்றிற்குப் பயன்படுத்தும் பொழுது ‘பரிணாமச் செயல்முறையாக’ அது காணப்படு கிறது.

ஐரோப்பாவில் இடம்பெற்ற பல போராட்டங் களில் (லயான்ஸ் உழைப்பாளர் எழுச்சி, சார்ட்டர் இயக்கம்) பாட்டாளிகளுக்கும் பூர்ஷ்வாக்களுக்கு மான வர்க்கப் போராட்டம் தெளிவாக வெளிப் பட்டது.

ஆனால் கருத்துமுதல்வாதக் கண் ணோட்டத்தின்படி அமைந்துள்ள பழைய வரலாற்றில் வர்க்கப்போராட்டம் பற்றிய பேச்சு இல்லை. இதற்கு பொருளாதார அடித்தளம் உண்டு என்ற பேச்சு இல்லை.

ஆனால் வரலாற்றிற்கு உந்து விசையாக உள்ளது ‘வர்க்கப் போராட்டம்’ என்பதும், இது பொருளாதாரக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் தெளிவான பின்னர், சோஷலிசம் பற்றிய கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மையுள்ளதாக மாறியது.

இது பற்றி எங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகிறார். “இந்தக் கட்டத்திலிருந்து சோஷலிசம் என்பது யாரோ ஒருவரது மூளையில் உதித்த தற்செயல் நிகழ்ச்சி இல்லை என்பது தெரிந்தது.

இது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங் களின் (பாட்டாளிகள், பூர்ஷ்வாக்கள்) போராட்டத் தினால் தோன்றியது ஆகும்...”

ஆனால் பழங்கால சோஷலிசம் என்பது, இந்தக் கருத்திற்கு முரணான ஒன்றாகும்....

பழங்கால சோஷலிசத்தில் முதலாளித் துவ உற்பத்தி முறை பற்றிய விமர்சனம் இருந்தது. ஆனால் அந்த முறையை அதனால் விளக்க முடிய வில்லை. எனவே அதனை வெற்றிகொள்ள முடிய வில்லை.

அது மோசமானது என்று மறுக்க மட்டுமே அதனால் முடிந்தது (411). இதனை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் பின்வரும் இரு நிபந்தனைகள் இடம் பெற வேண்டும்.

1. முதலாளித்துவ உற்பத்தி முறை. அதன் வரலாற்று வளர்ச்சி, அதன் அத்தியாவசியம் ஆகியவற்றையும், அதன் வீழ்ச்சியையும் விளக்க வேண்டும்.

2. அதன் முக்கியமான பண்புகளை விளக்க வேண்டும். இது உபரி மதிப்பு என்பதில் அடங்கி யுள்ளது. உபரி மதிப்பு என்பதில்தான் முதலாளித் துவத்தின் ரகசியமே உள்ளது.

இதனை விளக்கிய எங்கல்ஸ் வரலாறு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தினை விளக்குகிறார். மிகச் சுருக்கமான வரலாற்று வளர்ச்சியை விளக்கு கிறார்.

1. மத்திய கால சமுதாயம்:

இந்தக் காலகட்டத்தில் சிறிய அளவில் தனி நபர் உற்பத்தி இடம் பெற்றது. தனி நபர் நுகர் விற்காக உற்பத்தி இடம் பெற்றது. எனவே இது புராதனமானதாகவும். சிறிய அளவிலானதாகவும் இருந்தது. உபரி உற்பத்தி மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இதில் உற்பத்தியில் இடம் பெறும் அராஜகத் தன்மை ஆரம்பநிலையில் இருந்தது.

2. முதலாளித்துவப் புரட்சி:

இந்த காலகட்டத்தில் தொழில்முறையில் மாறுதல் ஏற்பட்டது. முதலில் இது எளிமையான கூட்டுறவாகவும், உடல் உழைப்பு தொடர்பான தொழிலாகவும் இருந்தது. உற்பத்தி சாதனங்கள் பெரிய பட்டறைகளில் குவியம் பெற்றன. ஆனால் பழைய பங்கீட்டு முறையே இருந்தது.

இப்பொழுது முதலாளி தோன்றினான். அவன் உற்பத்திப் பொருள்களைத் தனதாக்கிக்கொண்டு பண்டங்களாக மாற்றுகிறான். இப்பொழுது தனி நபர் உற்பத்தி என்ற நிலை மாறுகிறது.

உற்பத்தி என்பது ஒரு சமுதாயச் செயலாக மாறுகிறது. ஆனால் பரிவர்த்தனையும், பங்கீடும் தனிநபர் செயலாக உள்ளது. சமுதாயச் செயல்மூலம் இடம் உற்பத்திப் பொருள் தனித்தனி முதலாளிகளால் பங்கிடப்படுகிறது. இதன் காரணமாக ஒரு அடிப் படை முரண்பாடு தோன்றுகிறது.

இங்கு உற்பத்தியாளருக்கும் (உழைப்பாளி) உற்பத்தி சாதனங்களுக்கும் உள்ள உறவு பிரிக்கப்படுகிறது. உழைப்பாளி வாழ்நாள் முழுவதும் கூலிக்கு உழைக்கிறான்.

பாட்டாளிக்கும், பூர்ஷ்வாக்களுக்குமான முரண்பாடு தோன்றுகிறது. இப்பொழுது கட்டுப்பாடற்ற போட்டி தோன்றுகிறது.

தொழிற்சாலைகளில் சமுதாயமயமாக்கப்பட்ட அமைப்பிற்கும், உற்பத்தியில் நிலவும் அராஜகத்திற்கும் முரண்பாடு தோன்றுகிறது.

இந்த வளர்ச்சியாக இயந்திரங்கள் செம்மையாக்கப்படுகின்றன. புதிய இயந்திரங்கள் இடம் பெறுகின்றன. இதன் விளைவ உழைப்பாளிகளுக்கு வேலை போய்விடுகிறது. இதனால் வேலையற்ற உழைப்பாளிகள் கூட்டம் உருவாகிறது. மிகை உற்பத்தி, பண்டங்களின் தேக்கம், சந்தை வீழ்ச்சி என்று முதலாளித்துவ அமைப்பு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. இது ஒரு சுழல் போல் இடம் பெறுகிறது. இங்கு உற்பத்தி முறைக்கும் பரிவர்த்தனை முறைக்கும் முரண்பாடு தோன்றுகிறது. இதன் விளைவு முதலாளிகள் கூட்டணி சேர்க்கிறார்கள். டிரஸ்ட்கள், கூட்டு நிறுவனங்கள் தோன்றுகின்றன.

இதற்குத் தீர்வு என்ன?

பாட்டாளிகள் அதிகாரத்தினைக் கைப்பற்றுகிறார்கள். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள சமுதாய உழைப்பு, உண்மையான சமுதாய உழைப்பாக மாற்றம் பெறுகிறது. தனிநபர் ஆதிக்கம் ஒழிக்கப்படுகிறது.

இதனை மனதில் கொண்டுதான் எங்கல்ஸ் பழைய சோஷலிசத்தினை கற்பனாவாதம் என்றும், புதிய சோஷலிசத்தினை விஞ்ஞானரீதியானது என்றும் கூறுகிறார். பழைய கற்பனாவாத சோஷலிசத்தில் பாட்டாளிகள் என்ற பேச்சே கிடையாது. புதியதில் பாட்டாளி வர்க்கம் முக்கியமான ஒன்றாக இடம் பெறுகிறது. இதனைத் தான் எங்கல்ஸ் ‘விஞ்ஞான சோஷலிசம்’ என்கிறார்.

Pin It