pataiyal 400குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் பாதுகாப்பின் பொருட்டுக் கையில் அணிந்துகொள்ளும் ஒருவகையான பஞ்சு போன்ற உடையை ‘Gloves’ என்பார்கள். இதற்குத் தமிழில் ‘கையுடை’ என்று பெயர் (Tamil Lexicon, p. 1119). மருத்துவத் தொழில் செய்பவர்களும் நோய்ப் பாதுகாப்பின் பொருட்டு இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

இன்றைக்கு இரு சக்கர வாகனம் ஓட்டும் நகரப் பெண்கள் சிலரும் கையில் ‘Gloves ஐ அணிந்துகொள்கிறார்கள். வாகனப் புகையிலிருந்தும் வெயிலின் தாக்கத்திலிருந்தும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு இவற்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். நகர கலாசாரத்தில் ‘கையுடை’ நாகரிமாக மாறிப்போனதின் அடையாளமாகவும் இவற்றைக் கொள்ளலாம்.

கையுடையை இன்றைய வழக்கில் ‘கையுறை’ என்று சுட்டுகின்றனர். பாதுகாப்பின் பொருட்டுக் கையில் அணிந்துகொள்ளும் உடைகளைக் ‘கையுடை’ என்பதே பொருத்தமான பெயராக இருக்க முடியும். இன்றைய அகராதிகள் பலவும் ‘Gloves’சிற்கான தமிழ்ப் பொருளாகக் ‘கையுறை’ என்றே விளக்கம் தருகின்றன. ஆனால் நமது பழந்தமிழ் நூல்களில் இதற்கான பொருள் என்பது முற்றிலும் வேறாக வழங்கியுள்ளது.

சங்க கால ஆடவன் ஒருவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலந்தாழ்த்திக்கொண்டு களவொழுக்கத்தில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டு வருகிறான். நாள்தோறும் அவன் காதலியைக் குறியிடத்துக் (சந்திக்கும் இடம்) கண்டு மகிழ்வதையே மேற்கொள்கிறான். இதைக் கண்டுவந்த தோழி ஒரு நாள் தலைவியை விட்டுப் பிரிந்து வந்து குறியிடத்தில் காத்திருக்கிறாள். காதலியைக் காணவந்த ஆடவன் தோழியைக் கண்டதும் வியப்புற்று நிற்கிறான். அப்பொழுது தோழி:

“எம் அன்னை நீர்த்துறையிடத்து நிலைபெற்ற கடவுளுக்குக் கள்ளையும் மாலையையும் நிமிர்ந்து நேர்கொண்ட கொம்பினையும், தொங்கும் காதினையும் உடைய வெள்ளாட்டுக் கிடாயினையும் சேர்த்துக் கையுறைப் பொருளாகத் தந்தும் தன் மகள் கொண்ட நோய் தணியும் வழியறியாது அழுமாறு, தலைவியின் நீலமேனி போன்ற மேனி பசலை பாய்ந்து பொன்னிறம் கொண்டது” என்கிறாள். அகநானூற்றில் இடம் பெற்றுள்ள அப்பாடல்,

............................. பெரும

கள்ளும் கண்ணியும் கையுறை யாக

நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி

தணிமருங்கு அறியாள்........         (அகம். 156: 12-16)

என்பதாகும்.

உன்னால் ஏற்பட்ட உடல் நோயை அறியாமல் உண்மையிலேயே தலைவிக்கு நோய் வந்துவிட்டதாகக் கருதி தன் மகளுற்ற நோய் நீங்க வேண்டுமென்று கடவுளுக்கெல்லாம் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறாள் தாய். இந்தத் துயர நிலை நீடிக்காமல் தலைவியைத் திருமணம் செய்துகொள் என்று தலைவனுக்குத் தோழி குறிப்பாகத் உணர்த்து வதாக அமைந்துள்ளது அப்பாடல்.

இங்குக் கடவுளுக்குக் கொடுக்கப்படும் ‘கள் (மது), பூ மாலை, வெள்ளாட்டுக் கிடாய்’ ஆகிய பொருட்கள் ‘கையுறை’ என்று சுட்டப்பட்டுள்ளது. இன்றைய வழக்கைக்கொண்டு சொல்வதென்றால் கடவுளுக்குச் செலுத்தப்படும் காணிக்கைப் பொருள் ‘கையுறை’ என்பதாகும்.

சங்க காலத்தில் கடவுளுக்குப் படைக்கப் படும் மது, மாலை, மாமிசம் போன்ற பொருள் மட்டுமா ‘கையுறை’ எனப்பட்டது. இல்லை கடவுளை வேண்டிக் கொண்டு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கும் ‘கையுறை’ என்று சுட்டுகிறது குறுந்தொகைப் பாடலொன்று.

கார்காலம் வந்ததும் வந்துவிடுவேன் என்று கூறி மனைவியைப் பிரிந்து சென்ற கணவன் கார்காலம் முடிந்தும் இல்லம் திரும்பவில்லை. கணவன் வருவதாகச் சொல்லிச் சென்ற காலமும் கடந்துவிட்ட நிலையில் அந்த சங்ககால மனைவி தோழியிடம் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள்:

செற்றா மன்றே தோழி தண்ணெனத்

தூற்றுந் திவலைத் துயர்கூர் காலைக்

கயலே ருண்கண் கனங்குழை மகளிர்

கையுறையாக நெய்பெய்து மாட்டிய

சுடர் துயிலெடுப்பும் புன்கண் மாலை

(குறுந். 398: 1- 15)

அதாவது, ‘தோழி. குளிர்ச்சியுண்டாகுமாறு, மழைத்துளிகளைத் தூவுகின்ற, பிரிந்தோர்க்குத் துயரம் மிகுவதற்குக் காரணமாகிய கூதிர்ப்பருவத்தில், கயல்

மீன் போன்ற அழகிய மையுண்ட கண்களையுடைய, கனத்த குழையணிந்த பெண்கள், தம்முடைய கையுறைப் பொருளாக, எல்லா உலகங்களும் தொழும் ஒளி பொருந்திய தெய்வத்திற்கு, நெய் ஊற்றிக் கொளுத்திய விளக்கு அடங்கிக் கிடந்த துன்பத்தை மாலைப் பொழுதில் மிகுவித்தது’ (வி. நாகராசன், ப. 948). என்பதாகும். இங்குக் கடவுளை வேண்டிக்கொண்டு நெய்யூற்றி ஏற்றப்படும் விளக்கும் ‘கையுறை’ எனப் பட்டுள்ளது

‘கையுறை’ என்பது தெய்வத்திற்கு வேண்டிக் கொண்டு காணிக்கையாகக் கொடுக்கப்படும் பொருட்கள் மட்டும் இல்லை. அன்பின் மிகுதியால் ஒருவருக்குக் கொடுக்கப்படும் பொருளும் கையுறையாகும். தனது முன்னால் காதல் கணவனின் பிள்ளைக்குப் பரத்தைப் பெண்ணொருத்திச் சூடி மகிழும் தங்கப் பூண் ஒன்றைக் ‘கையுறை’ என்கிறது கலித்தொகைப் பாடலொன்று.

வீட்டிலிருந்து வெளியே சென்று கோயில்களை யெல்லாம் வலம்வந்து கடவுளை வணங்கி விட்டு வருமாறு தன் மகனைப் பணிப்பெண்களுடன் அனுப்பி வைக்கிறாள் ஒரு சங்க கால இல்லறப் பெண்.

வெளியில் சென்றவர்கள் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வருகிறார்கள். வந்தவுடன் பணிப்பெண்ணைப் பார்த்து, ஏன் இவ்வளவு நேரம் கடந்து வருகிறீர்கள்; என் மகன் எங்கெங்கெல்லாம் சென்றுவந்தான் சொல் என்கிறாள் அந்த இல்லறப் பெண். பணிப்பெண் அவளிடத்து மகன் சென்ற இடங்களையெல்லாம் வரிசையாகக் கூறுகிறாள். அவற்றுள்,

மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண் தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து (கலி. 82: 9-12)

என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. அதாவது வேண்டியவாறு பழகும் அடக்கமற்ற வயதில் (பேதமை) இவனது தந்தையோடு பழகிய பெண் அழைக்க இவன் அங்கு சென்றான். அவள் காளை உருவம் பொறித்த பூணினைக் கையுறையாக (அன்பளிப்பாக) இவனுக்கு அணிவித்து ‘பெருமானே சற்று சிரி என்றாள்’ என்கிறது இப்பாடலடிகள்.

தனது காதலன் மகனுக்குப் பரத்தைப் பெண் அன்பின் மிகுதியால் அன்பளிப்பாக அணிவிக்கப்பட்ட மருப்புப் பூண் ‘கையுறை’ எனச் சுட்டப்பட்டுள்ளது. அன்பளிப்புப் பொருளையும் ‘கையுறை’யாகக் கருதும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது.

தலைவன் மகனைத் தெருவில் கண்டு தடுத்த பெண்ணொருத்தித் தாம் அணிந்திருந்த பல அணிகளுள் அவனுக்கு ஒத்தவற்றை ஆராய்ந்து எடுத்து ‘கையுறை’ என அணிவித்தாள் என்கிறது இன்னொரு பதிற்றுப் பத்துப் பாடல்.

முன்னர் சுட்டியது போன்றே மகனைக் கோவில் களுக்கு அழைத்துச் சென்று வணங்கச் செய்து கொண்டு வா என்று தோழிப் பெண்ணுடன் அனுப்பிவைக்கிறாள் இன்னொரு இல்லறப் பெண். வெகுநேரம் சென்று வீட்டிற்குத் திரும்பிய மகன் கையில் முன்பொரு காலத்தில் அவன் தந்தை அணிந்திருந்த வளை அணியப் பட்டுள்ளதைக் கண்டு கோபம்கொண்டு தோழியிடம் அவன் எங்கு சென்று வந்தான்? யார் அதை அவன் கையில் அணிவித்தது என்று கேட்கிறாள். அதற்குத் தோழி:

நீருள் அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட

குடைநிழல் தோன்றும்நின் செம்மலைக் காணூஉ

‘இவன்மன்ற யான்நோவ, உள்ளம் கொண்டு உள்ளா

மகனல்லான் பெற்ற மகன்’ என்று அகல் நகர்

வாயில் வரை யிறந்து போத்தந்து, தாயர்

தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன்; மற்று அவர்

தந் தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்...... (கலி. 84: 10-17)

என்று பதில் கூறுகிறாள். அதாவது, ‘பொய்கையில் இலையால் மறைக்கப்படும் தாமரைப் பூவைப் போல் குடைநிழலில் சென்ற உன் மகனைக் கண்டு, தெருவில் எதிர்ப்பட்ட தாய்மார் ‘நம்முடைய நெஞ்சத்தைக் கொண்டு இப்போது ஒரு சிறிதும் நினையாமல் இருக்கின்ற அந்த மனிதப் பண்பில்லாதவன் பெற்ற மகன்போலும் இவன்!’ என்று தத்தம் வீட்டு வாயிலை விட்டு வந்து, தெருவில் இவனுக்கு முன்னாள் நின்று கொண்டார்கள். இவனும் நின்றான். அவர்கள் கையுறை என்று இவனுக்கு ஏற்ற அணிகலன்களை அணிவித் தார்கள்’ (சுப. அண்ணாமலை, ப. 312). என்கிறாள். இங்கும் அன்பளிப்பாக வழங்கப்படும் அணிகலன் ஒன்று ‘கையுறை’ எனப்படுகிறது.

சங்க காலத்தில் வேண்டுதல் செய்யும் போது தெய்வத்திற்கு அளிக்கப்படும் பொருட்களாகிய பூ மாலை, மது, மாமிச வகைகள், நெய் விளக்குகள் போன்றன ‘கையுறை’ எனப்பட்டது. அன்பு பாராட்டி அளிக்கப்படும் அணிகலனும் ‘கையுறை’ என்றே சுட்டப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் தலைவியிடம் உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் தலைவன் அன்பு பாராட்டி அளிக்கப்படும் பூ, தழை முதலியனவும் ‘கையுறை’ எனப் பட்டுள்ளது. ‘தோழி கையுறை மறுத்தது’ என்றே சங்க இலக்கியங்களில் துறை வகையன்று காணப்படுவதும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

காலப்போக்கில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சி களில் அன்பளிப்பாகத் தரப்படும் பொருட்களும் ‘கையுறை’ எனப்பட்டுள்ளது. ‘கையுறை எழுதினார்’ என்ற குறிப்பு சீவகசிந்தாமணியில் (829) காணப்படுவதும் இங்கு எண்ணத்தக்கது.

தமிழில் சங்க காலத்தில் ஒருவருக்கு மற்றொருவர் அன்பின் மிகுதியில் (கடவுள், மனிதன்) அளிக்கும் பொருளும், சங்கம் மருவிய காலத்தில் ஒருவருக்கு உதவும் வகையில் கொடுக்கப்படும் பொருள் ‘கையுறை’ என்று சுட்டப்பட்டுள்ளது. அன்பின் காரணமாக ஒருவருக்கு அளிக்கப்படும் பொருள் ‘கையுறை’ என்பது பண்டைய வழக்கு. இந்தச் சொல் சமகாலத்தில் கையில் அணியப்படும் உடை வகையைச் (‘Gloves) சுட்டி நிற்கிறது. கால ஓட்டத்தில் ஒரு சொல் முற்றாகப் பொருள் மாற்றம் அடைந்துள்ளது.

துணைநின்ற நூல்கள்

1.  பரிமணம், அ.மா. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); நாகராசன், வி. (உ.ஆ.). 2004. குறுந் தொகை மூலமும் மூலமும் உரையும் (தொகுதி 1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

2. சாமிநாதையர், உ.வே. (ப. ஆ.). 1937. எட்டுத் தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை, சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.

3.சௌரிப்பெருமாளரங்கன், திருமாளிகை (பதிப்பும் உரையும்). 1915. எட்டுத்தொகையுள் இரண்டா வதாகிய குறுந்தொகை, வேலூர்: வித்யாரத்னாகர அச்சுக்கூடம்.

4.   பரிமணம், அ.மா. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); செயபால், இரா. (உ. ஆ.). 2004. அகநானூறு மூலமும் உரையும் (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

5.தமிழண்ணல், அண்ணாமலை, சுப. (ப. ஆ.).; அண்ணாமலை, சுப. (உ. ஆ.). 2003. கலித் தொகை (மக்கள் பதிப்பு), கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

6.  பதிப்பாசிரியர் குழு. 1982. தமிழ் லெக்சிகன், சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

Pin It