இருபதாம் நூற்றாண்டு புரட்சியின் நூற்றாண்டு எனப்படுகிறது. அதனால் அந்த நூற்றாண்டில் உலக அளவில் மதிக்கப்பட்ட பல தவைர்கள்-புரட்சியாளர்கள் தோன்றினர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஃபிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத் ஆகிய மூவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளாக உலக அளவில் பரந்துபட்ட மக்களால் போற்றப்பட்டனர். யாசர் அராபத்தின் போராட்டம் துன்பியல் நாடகம் போல் முடிந்துவிட்டது. நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகள் சிறைக்குள் இருந்தவாறே வெள்ளை இனவெறி ஆட்சி யிலிருந்து தென்னாம் பிரிக்காவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆப்ரிக்கக் கண்டத்து நாடுகளின் மக்களிடையே சுயமரியாதை உணர்வை-தன்னம்பிக்கையை ஊட்டினார். ஆனால் ஃபிடல் காஸ்ட்ரோ சிங்கத்தை அதன் குகை யில் சந்தித்து அதன் பிடரியைப் பிடித்து ஆட்டுவது போன்று அமெரிக்க ஏகாதிபத்திற்கு விளங்கினார். தன் இளமைக்காலம் முதலே ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் எரிதழலை ஏந்தியவாறு செம்மாப்புடன்உலவி வந்த ஃபிடல் காஸ்ட்ரோ 26.11.2016 அன்று வரலாறாகி விட்டார்.

castro 300கியூபா, கரீபியன் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள குட்டி நாடு. கியூபாவின் மக்கள் தொகை 110 இலட்சம். அமெரிக்காவில் ஐசனோவர் ஆட்சிக்காலம் (1953-1961) முதல் ஜார்ஜ் டபிள்யு. புஷ் ஆட்சிக்காலம் (2001-2009) வரையிலான பத்துக் குடியரசுத் தலைவர்களும் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமை யிலான கியூபாவைப் பெருங்கடலுள் அமிழ்த்தி அழித்து விட முயன்றனர். உலக ஏகாதிபத்தியமான அமெரிக்க வல்லரசின் வஞ்சகத்தைக் கியூப மக்களின் பேராதர வுடன் எதிர்த்து நின்று வென்ற பெருவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ. தன் நாட்டு மக்களுக்காக மட்டுமின்றி, தென்அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளில் முதலாளியச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் இலக்கான மக்களுக்காக உலக அரங்கில் வாழ்நாள் முழுவதும் போராடிய மனிதநேய மானுடக் காவலர். எனவேதான் “மனிதகுலம் தான் தாய்நாடு” என்ற ஹொசே மாத்தியின் புகழ்பெற்ற வரியை ஃபிடல் காஸ்ட்ரோ தன் உரைகளில் அடிக்கடி மேற்கோளாகக் கூறிவந்தார்.

இராணுவத் தளபதி பல்ஜெனிசியோ பாடிஸ்டா 1952இல் கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதி கார ஆட்சியை நடத்தினார். அமெரிக்க அரசுக்கும் பெரும் முதலாளிய நிறுவனங்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு உழைக்கும் மக்களைக் கொடுமையாக ஒடுக்கினார். பட்டப் படிப்பை முடித்திருத்த ஃபிடல் காஸ்ட்ரோ இளைஞர்களைத் திரட்டி 1953இல் சாண்டியாகோ எனும் இடத்தில் அரசுக்கு எதிராகக் கொரில்லா தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதல் தோல்வியில் முடிந்தது. ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்தை நீண்ட எழுச்சியின் மூலம் முன்வைத்தார். அப்போதுதான் “நான் குற்றவாளி அல்ல வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற வைர வரிகளைப் பதிவு செய்தார். நீதிமன்றம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ இளைஞனாக இருந்த காலம் முதல் வாழ்வின் இறுதிவரையில் நீண்டநேரம் கலந் துரையாடல் நிகழ்த்துவதில் சொற்பொழிவாற்றுவதில் பெருவிருப்பம் கொண்டவர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 1960 செப்டம்பர் 26 அன்று அய்க்கிய நாடுகள் அவையில் 4 மணி 26 மணித்துளிகள் தொடர்ந்து உரையாற்றினார். 1998ஆம் 2 ஆண்டு கியூபாவின் தேசிய பேரவையில் அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 7 மணி 30 மணித்துளிகள் பேசினார். பிரேசில் நாட்டின் பாதிரியார் ஃப்ரே பெட்டோ 1985 ஆம் ஆண்டில் ஃபிடல் காஸ்ட்ரோவை இரண்டு தடவை நேர்காணல் செய்தார். முதல் தடவை 9 மணிநேரமும், இரண்டா வது தடவை 23 மணிநேரமும் தொடர்ந்து இக்கலந்துரை யாடல் நிகழ்ந்தது. இக்கலந்துரையாடல் ஆங்கிலத் தில் Fidel and the Religion என்ற தலைப்பில் பெரிய நூலாக வெளிவந்தது. தமிழில் அலைகள் வெளியீட்டகம் “மதம்-மக்கள்-புரட்சி” என்ற தலைப்பில் இந்நூலை அ.குமரேசனின் சிறந்த மொழி பெயர்ப்பில் வெளி யிட்டுள்ளது. கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

சிறையிலிருந்து வெளிவந்தபின் ஃபிடல் காஸ்ட்ரோ மெக்சிகோ நாட்டுக்குச் சென்றார். அங்கு புரட்சியாளர் சே குவேராவின் தோழமை கிடைத்தது. அதுவரை ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு தேசியவாதியாகவே இருந்தார். சேகுவேராவும் தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் தான் ஃபிடல் காஸ்ட்ரோவை கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு கொள்ளச் செய்தனர்.

1956 திசம்பர் 2 அன்று ஃபிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் 81 போராளிகளுடன் மெக்சிகோவிலிருந்து கிரான்மா எனும் பாய்மரக் கப்பலில் தென்கிழக்குக் கியூபாவுக்கு வந்தனர். கரடுமுரடான சியாரா மெஸ்டிரா மலைகளை தங்கள் புரட்சியை முன்னெடுப்பதற்கான தளமாகக் கொண்டனர். உழவர்களையும் தொழிலாளர் களையும் திரட்டி பாடிஸ்டா சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகக் கொரில்லா தாக்குதல்களை 25 மாதங்கள் நடத்தினர். 1959 சனவரி 1 அன்று பாடிஸ்டா அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார். 1959 சனவரி 8 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ தலைநகர் ஹவானாவில் வெற்றி வீரராகத் தன் தோழர் களுடன் நுழைந்தார். 1959 பிப்ரவரியில் கியூபாவின் பிரதமரானார்.

கியூபாவின் புரட்சியை நசுக்கிட, அமெரிக்கா தன் நாட்டில் அடைக்கலம் புகுந்த கியூப நாட்டவரில் 1400 பேருக்குப் போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்து 1961 ஏப்பிரல் மாதம் பன்றி வளைகுடாப் பகுதியில் கியூபாவைத் தாக்கியது. காஸ்ட்ரோவின் புரட்சிப் படைகள் இத்தாக்குதலை முறியடித்தன. அப்போதுதான் கஸ்ட்ரோ, சோசலிசத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கமுடியும் என்பதைத் திட்டவட்டமமாக உணர்ந்தார். 1961 ஏப்பிரல் 16 அன்று ஆற்றிய உரையில், “நாம் இருக்கிறோம், அதனா லேயே ஏகாதிபத்தியவாதிகளால் நம்மைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை... தொழிலாளர் தோழர்களே, குடியானத் தோழர்களே, எளியவர்களுக்காக எளியவர் களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட எளியவர்களின் சோசலிச, சனநாயகப் புரட்சி இது... சோசலிசப் புரட்சி என்றென்றும் வாழ்க! சுதந்தர கியூபா என்றென்றும் வாழ்க! தாய்நாடு அல்லது மரணம்” என்று முழங்கினார்.

1961இல் அமெரிக்கத் தூண்டுதலின் தாக்குதலுக்குப் பின் சோவியத் நாட்டுடனான உறவை மேம்படுத்தினார். அப்போது குருச்சேவ் சோவியத் நாட்டின் அதிபராக இருந்தார். அமெரிக்காவுக்கும் சோவியத் நாட்டுக்கும் இடையில் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. 1962இல் சோவியத் நாடு அணுகுண்டு ஏவுகணை தளத்தைக் கியூபா நாட்டில் அமைத்து அமெரிக்காவை அச்சுறுத்தியது. அதற்கு எதிராக மறுமுனையில் அமெரிக்காவும் அணு ஆயுதத்தைக் குவித்தது. அணு ஆயுதப் போர் மூளுமோ என்று உலகமே அஞ்சியது. உலக நாடுகளின் தலை யீட்டால், இனி அமெரிக்கா கியூபா மீது படையை ஏவித் தாக்காது என்கிற அமெரிக்காவின் உறுதிமொழியின் பேரில், சோவியத் நாடு கியூபாவின் அணு ஏவுகணைத் தளத்தைக் கலைத்தது.

காஸ்ட்ரோ 1965இல் கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். காஸ்ட்ரோ சோவியத் நாட்டின் கம்யூனிச மாதிரியையோ சீன நாட்டின் கம்யூனிச மாதிரியையோ பின்பற்றவில்லை. கியூபா நாட்டுக்கே உரிய தனித்தன்மையான சூழலுக்கு ஏற்றதான சோசலிசத் திட்டங்களைச் செயல்படுத்தினார். காஸ்ட்ரோ மார்க்சிய-லெனினிய தத்துவத்தில் வல்லவர் அல்லர் என்று சிலர் குறை கூறினர். காஸ்ட்ரோ அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மயிர் பிளக்கும் தத்துவ விவாதங் களை அவர் எப்போதும் தவிர்த்து வந்தார். நடைமுறை சார்ந்த செயல்பாடுகளிலேயே தன் முழு முனைப்பையும் ஆற்றலையும் செலுத்தினார்.

அதனால்தான் செல்வ வளம்மிக்க அமெரிக்காவை விட மனிதவள மேம்பாட்டு அளவீடுகளில் கியூபா முன்னிலையில் நிற்கிறது. கியூபா நாட்டு மக்கள் அனை வருக்கும் இலவயக் கல்வி, மருத்துவம் கிடைக்கச் செய்தார். நெடுந்தொலைவில் சிற்றூரில் படிக்காத ஒருவர் இருப்பினும் அவருக்காக ஒரு ஆசிரியரை அவருடைய வீட்டுக்கு அனுப்பி கல்வி கற்பித்தார். உலகிற்கே இது ஒரு முன்னோடித் திட்டம் என்று பாராட்டப் பெற்றது. நோயாளியின் வீட்டைத் தேடி மருத்துவர் செல்லும் அதிசயத்தையும் கியூபாவில்தான் பார்க்கமுடியும்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியும் மருத்துவர்களும் கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளின் மக்களுக்கும் பயன்பட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்தானில் கொடிய நிலநடுக்கம் ஏற்பட்டது. கியூபா நாட்டின் மருத்துவக் குழுவினர்தான் முதலில் அங்கு சென்றனர். பாக்கிஸ்தானால் கியூபாவுக்கு எவ்வகையிலும் அரசியல் ஆதாயம் இல்லை. “பகைவர்க்கு அருள்வாய் நன்னெஞ்சே” என்பது போல அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தைச் சூறாவளி கடுமையாகத் தாக்கியபோது கியூபா ஆயிரக்கணக்கான மருத்துவர் களை அங்கு அனுப்பியது. சோசலிசம் என்பது உலக ளாவிய மனிதநேயத்தை முன்னெடுப்பது-செயலில் காட்டுவது என்கிற கோட்பாட்டையும் செயல்முறையையும் ஃபிடல் காஸ்ட்ரோ கொண்டிருந்ததே இதற்குக் காரண மாகும். கியூபா உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மருத்துவத் துக்காக 11.1 விழுக்காடு நிதியை ஒதுக்குகிறது. இந்தியா விலோ 1.8 விழுக்காடுதான் ஒதுக்கப்படுகிறது.

இந்தியாவில் சமாதானப் புறா என்று போற்றப்பட்ட அமெரிக்காவின் அதிபர் ஜான் எப்.கென்னடிதான் கியூபா மீது 1961 ஏப்பிரலில் பன்றி வளைகுடாத் தாக்குதலுக்கு ஆணையிட்டர். 1962 பிப்ரவரியில் கியூபா மீது பொருளா தாரத் தடையை விதித்தார். லிண்டன் ஜான்சன் (1963- 1969) மற்ற நாடுகளும் கியூபாவுடன் பொருளாதாரத் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதை முடுக்கிவிட்டார். லிண்டன் ஜான்சன்தான் உளவுத்துறையான சி.ஐ.ஏ.விடம் காஸ்ட்ரோவைக் கொல்லுமாறு ஆணையிட்டார். அது முதல் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 தடவைகள் பல்வேறு வஞ்சக வழிகளில் அமெரிக்கா முயன்று தோற்றது.

அமெரிக்கா 1963இல் கியூபா மீது பொருளாதாரத் தடைவிதித்த பிறகு சோவியத் நாடு கியூபாவுக்கு மானியமாகவும், கடனாகவும் பெருமளவில் நிதி உதவி செய்து வந்தது. 1990இல் சோவியத் நாடு 15 நாடு களாகச் சிதறுண்ட பிறகு-அங்கு சோசலிச ஆட்சிமுறை தகர்ந்த பிறகு-அந்நாட்டின் உதவி கிடைக்காமல் கியூபா பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அந்நிலையிலும் தலைதாழாச் சிங்கமென காஸ்ட்ரோ தன்னுடைய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் கிஞ்சிற்றும் பின்வாங்கவில்லை. பல்வேறு வழிகளில் அந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து கியூபாவை மீட்டெடுத்தது பிடல் காஸ்ட்ரோவின் மாபெரும் சாதனை யாகும். அந்த நெருக்கடியான காலத்தில் கியூபாவின் மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைத் தாமே முன்வந்து சுருக்கிக் கொண்டு, காஸ்ட்ரோவுக்குத் துணையாக நின்றனர் என்பது காஸ்ட்ரோ மாபெரும் மக்கள் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்ட நெடுங்காலமாக தென்அமெரிக்க நாடுகளைத் தன் வேட்டைக்காடகவே பயன்படுத்தி வந்தது. அமெரிக்க முதலாளிய நிறுவனங்கள் தென்அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களை, எண்ணெய் வளத்தை எத்தகைய தடையுமின்றிக் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற வகையில் அந்நாடுகளில் தன்னுடைய கைப்பாவைகளை ஆட்சியாளர்களாக அமர்த்தியது. அந்நாடுகளின் இராணுவத்தைத் தன் கட்டுப்பாட்டில் இருக்குமாறு செய்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் முதலாளியச் சுரண்ட லுக்காக தென்அமெரிக்க நாடுகளை வஞ்சிப்பது குறித்து ஃபிடல் காஸ்ட்ரோ தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வந்தார். தென்அமெரிக்க மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்று, அந்நிய முதலாளிகள் தங்கள் நாடுகளின் வளங் களைக் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போராட வேண்டாம் என்று அறைகூவல் விடுத்து வந்தார். இதன் விளைவாக தென் அமெரிக்காவின் பல நாடு களில் குறிப்பாக பொலிவியா, வெனிசுலா, நிகராகுவா, ஈக்குவடார், சிலி, அர்ஜன்டைனா, பிரேசில் முதலான நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் எழுச்சி பெற்றன. இந்நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் ஆதரவு பெற்ற சர்வாதிகார ஆட்சிகள் அகற்றப்பட்டன. அனை வருக்கும் வாக்குரிமை எனும் அடிப்படையிலான சனநாயகத் தேர்தல் மூலமான ஆட்சிகள் ஏற்பட்டன. அமெரிக்க முதலாளிகளின் சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் நாட்டுடமையாகக்கப்பட்டன. இவற்றின் வருவாயைக் கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. வெனிசுலாவின் ஹீயுகோ சாவேஸ், பொலியாவின் ஏவோ மொராலிஸ் போன்ற இடதுசாரி ஆட்சியாளர்கள் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். தென்அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி இயக் கத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் தென் அமெரிக்க நாடுகள் அனைத்திலிருந்தும் அமெரிக்க எடுபிடிகளின் ஆட்சியையும் ஏகாதிபத்தியமும் விரட்டி யடிக்கப்பட்டதற்கு பிடல் காஸ்ட்ரோ முன்வைத்த “சோசலிசம் அல்லது மரணம்” என்கிற எழுச்சிமிகு முழக்கமே மூல காரணமாகும்.

தென்அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்க-அய்ரோப்பிய ஏகாதிபத்தியங் களின் ஆதரவு பெற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதமேந்திய புரட்சிக் குழுக்களுக்கும் காஸ்ட்ரோ தன்நாட்டின் படைகளை அனுப்பி அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்குத் துணை நின்றார். கியூபா நாட்டுப் படைகளின் துணையால்தான் நமீபியா விடுதலை பெற்றது. தென்னாப்பிரிக்காவின் வெள்ளை நிறவெறி ஆட்சி அங்கோலாவிற்குத் தன் படைகளை அனுப்பித் தாக்கியது. 4 இலட்சம் கியூபாவின் படைகள் வெள்ளை இனவெறி ஆட்சியின் படைகளைத் தோற்கடித்தன. இத்தோல்விதான் தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி ஆட்சியின் வீழ்ச்சிக்கும், நெல்சன் மண்டே லாவின் விடுதலைக்கும் வித்திட்டது. எனவே நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கியூபாவுக்குச் சென்று அங்கோலா வுக்குப் படைகள் அனுப்பி உதவியதற்கு பிடல் காஸ்ட் ரோவுக்கு நன்றி தெரிவித்தார். அங்கோலா போரில் வெற்றி பெற்றபின் கியூபாவின் 4 இலட்சம் படையினர் 1991இல் தாய்நாடு திரும்பினர். ஆப்பிரிக்க நாடுகளில் நடந்த போர்களில் 4300 கியூபா நாட்டு வீரர்கள் மாண்டனர்.

ஜவகர்லால் நேரு, மார்ஷல் டிட்டோ ஆகியோரின் மறைவுக்குப்பின் காஸ்ட்ரோ அணிசேரா நாடுகளின் ஒப்பற்ற தலைவராகப் திகழ்ந்தார். அய்க்கிய நாடுகளின் மன்றக் கூட்டங்களாயினும், உலக அளவிலான எந்தவொரு அரங்கிலும் மூன்றாம் உலக நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களுக்கும் கொடுமை களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் முதலாளித்துவச் சுரண்டல் அமைப்புமே காரணம் என்று முழங்கி வந்தார். உலகில் பத்து விழுக்காட்டினராக உள்ள பணக் காரர்கள் உலகின் செல்வவளத்தில் 89 விழுக்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் நிலையை ஒழிக்காத வரையில் மானுட சமத்தும் ஏற்படாது என்றார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பின் குறியீடாக-புரட்சியின் சின்னமாக அறுபது ஆண்டுகளுக்குமேல் திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்துவிட்டார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களை அணிதிரட்டிப் போராடு வதே புரட்சியாளனின் கடமை என்னும் காஸ்ட்ரோவின் படிப்பினையை ஏற்று இந்த உலகை மாற்றியமைப்போம்.

Pin It