எத்தனை மன அழுத்தம் இருந்தாலும் ஒரு நல்ல கவிதை, ஒரு பாடல், ஓர் இசை அதிலிருந்து நம்மை மீட்டு விடுகிறது. இந்த அதிசயத்தை இன்று மீண்டும் உணர்ந்தேன்.

அப்படிப்பட்ட கவிதைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் சீனு ராமசாமி. நண்பராகிய அவருடைய கவிதைகளை இருபது ஆண்டுகளாக வாசித்தும் 'உயிர் எழுத்தி'ல் வெளியிட்டும் வந்திருக்கிறேன். சமீபகாலமாக அவர் கவிதைப் புலத்தில் தீவிரமாக இயங்கி வருவதையும் கவனித்தபடியிருக்கின்றேன். என் மேசைக்கு அவருடைய புதிய கவிதை நூல்கள் வந்தபடியிருக்கின்றன. என்றாலும் அவற்றை வாசித்து சில வரிகள் எழுதவோ சில சொற்கள் பேசவோ தோன்றவில்லை.

katral nadanthen seenu ramasamyஇன்றும் வழக்கமான லௌகீக வாழ்வின் அழுத்தங்களோடு அலுவலகம் வந்தபோது என் மேசையில் சீனு ராமசாமியின் 'காற்றால் நடந்தேன்' கவிதை நூல் சிறகடித்தபடி அமர்ந்திருந்தது.

கவிஞர் சுகுமாரன் விதந்தோதி சுட்டிக்காட்டியிருந்த கவிதை கண்களில் பட்டது.

"பின் தொடர்ந்து

பின் தொடர்ந்து

பின் தொடர்ந்து

என்னைக் கடக்காமலேயே நிற்கிறாள்

குற்றமற்றவன் போலவே நடப்பது

என் சுபாவம்."

ஒரு கணம் திகைத்துப்போய் விட்டேன். இப்படி ஒரு கவிதையை சீனு ராமசாமியினால் எப்படி எழுத முடிந்ததுவென நினைத்துக்கொண்டேன். தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி இருந்திருந்தால் சீனு ராமசாமியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.

அடுத்த கவிதையை வாசித்தேன்.

"நடைபயிலும் அவளோ

பின்தொடர்ந்து

வருகிறாள்

கதவுக்கு வெளியே

பிரிவின் தளிர் அரும்ப

திரும்ப மறுக்கிறாள்

செய்வதறியாது

கண்ணீர் தேங்கிய

கன்னத்தில்

இதழ் குவித்து முத்தமிடுகிறேன்

மீண்டும் அப்பா அப்பாவென

அரற்றுகிறாள்."

பெண்ணைப் பெற்ற ஒரு தந்தையின் உணர்வுகளை, பின்னும் தந்தைமையின் மீது பெண் குழந்தைகள் கொண்டிருக்கும் பேரன்பை கச்சிதமாகக் கவிதை காட்சிப் படுத்திவிடுகிறது. சொற்களின் கட்டு அத்தனை கச்சிதம். மற்றுமொரு கவிதையில்

"உனக்குக் கொண்டுவர

அக் கனிகளை நோக்கி

கைகளை ஏந்தியே பிரார்த்திக்கிறேன்

அந்த மரமே

விழுந்தது."

என்று வாசிக்கும்போது மகளுக்காக யாசிக்கும் மனிதன் மீது இயற்கையே கருணை கொள்கிறது என்பதில் தகப்பனின் அன்பு மிளிர்கின்றது. மனித உறவுகளில் தகப்பன் மகள் உறவு என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமானது இல்லையா?

நான் விவிலியத்தைத் தொடர்ந்து வாசித்து வருபவன். அதற்கும் என் மத மற்றும் வழிபாடு சார்ந்த நம்பிக்கைகளுக்கும் தொடர்பில்லை. அதில் அன்பைப் பற்றியும் அதன் குணங்கள் குறித்தும் சொல்லப்பட்டவை என் வாழ்வின் அடி நாதமாக விளங்குகின்றன என்பது என்னை அறிந்த அநேகருக்கும் தெரியும். ஆனால், 'பிரயோகம்' என்கிற கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"கோபத்தில் பதுங்கியிருக்கிறது

காட்ட இயலாத அன்பென்றேன்"

எனத் துவங்கும் வரிகளில் மனம் அப்படியே லயித்துவிட்டது. அதென்ன அன்பு பதுங்கியிருக்குமா? வள்ளுவர் சொல்கிறாரே 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என. அது பொய்யா? என்னடா இது வள்ளுவத்திற்கும் கிருஸ்துவத்திற்கும் வந்த சோதனை என நினைத்துக்கொண்டேன்.

அடுத்த வரி

"கோபத்தில் கொலை செய்கிறார்கள்

அதையும் அன்பென்றேன்"

என்பதில் அதிர்ச்சிதான். கொலை செய்வது எப்படி அன்பாகும் என நினைக்கும் போது சுளீர் என ஒரு நினைவு உதித்தது. வாழ் நாளெல்லாம் அஹிம்சையைக் கடைபிடித்த, போதித்த மகாத்மா, தான் வளர்த்த ஆடு ஒன்றை அது நோய்வாய்ப்பட்டுச் சிரமப்படுவதைத் தாங்கவியலாமல் சுட்டுக் கொன்றாரே, அது. 'நான் கடவுள்' திரைப்படத்தில் கண்கள் தெரியாமல் துன்பப்படும் தன் பக்தையைக் கொலை செய்யும் சாமியார் செய்ததும் சரிதான்போல.

அடுத்த வரி " மனைவியைச் சந்தேகிக்கிறான்/ பேரன்பென்றேன்" என்பது அசாதாரணமான வாக்கியம். அதாவது ஆங்கிலத்தில் பொஸசிவ்நெஸ் என்பார்களே, அதனால்தான் சந்தேகம் வருகிறது. அந்தப் பொஸசிவ் என்பது அன்பில்லாவிட்டால் வராதுதான்.

அடுத்த வரி தற்கொலை குறித்து வருகின்றது. என் மேல் உள்ள குற்றச்சாட்டுகளிலொன்று அதிகமும் மரணம் குறித்து எழுதுகிறேன் என்பது. மரணம் என்றால் தற்கொலை இல்லாமலா? சீனு ராமசாமி என்ன சொல்கிறார்:

"தற்கொலைக்குத் துணிகிறார்கள்

அன்பை ஆளத் தெரியவில்லை"

என்று சொல்கிறார். மனம் துவண்டு விட்டது. அன்பை ஆளத் தெரியாதவர்களே அதாவது அன்பு செய்யத் தெரியாதவர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது உண்மைதான். 'தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு' என்றொரு கவிதையில் இதையே எழுதியிருப்பேன். அந்தக் கவிதையை 'உயிர் எழுத்தி'ல் வாசித்துவிட்டு சீனு ராமசாமி என்னிடம் அந்தக் கவிதை குறித்துச் சிலாகித்தது நினைவிலாடுகிறது இப்போது.

தத்துவம், நீதி, லௌகீகம் எனப் பயணித்த கவிதை சடாரென அரசியல் பேசுகிறது இப்படி,

"நாள் குறித்து

ஆரோக்கியம் கவனித்து

தனிச்சிறை பூட்டி

காத்திருந்து

காத்திருந்து

தூக்கிலிடுகிறார்கள்"

என்று எழுதிச் செல்கிறார். கடுகைத் துளைத்து எழு கடலையும் துளைத்துவிடும் கவிதை என்பதற்குச் சான்றுகள் தேவையில்லை என்பதை நல்ல கவிதைகள் நமக்கு உணர்த்தி விடுகின்றன.

ஒருவரைக் கொல்லும் உரிமையிலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது என பூக்கோ அரசியல் அதிகாரம் குறித்துச் சொல்வார். அதுவும் பொய்யென்கிறது இந்தக் கவிதையின் இறுதி வரிகள். இப்படி முடிகிறது கவிதை:

"தோற்றுப்போன நீதி

பிரயோகிக்கும் வன்முறையின்

அன்பென்றேன்",

தோற்றுப்போன நீதியை வன்முறையின் அன்பென்று சொல்லும் தைரியம் ஒரு கவிஞனுக்குத்தான் வரும் என்பது பொய்யில்லை.

தொகுப்பில் அநேகம் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. "எனக்கு அழவேண்டும்போல் /இருக்கிறது/எல்லோரும் வெளியேறுங்கள்" போன்ற சில கவிதைகள் ஆக்காங்கே தட்டுப்படுகின்றன. அதைத் தவிர்த்திருக்கலாமோ எனவும் தோன்றியது.

(காற்றால் நடந்தேன் | ஆசிரியர் சீனு ராமசாமி. வெளியீடு: என்.சி.பி.ஹெச்., சென்னை. பக்கம் 96. விலை ரூ. 100)

- சுதீர் செந்தில், ‘உயிரெழுத்து' இதழாசிரியர்