மார்க்சியத்துக்கு "வரலாற்றுத் தாயகம் எதுவும் இல்லாமல் போய்விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் தாயகம் மேற்கு ஐரோப்பாவாக இருந்தது என்றால், இருபதாம் நூற்றாண்டில் அதன் தாயகம் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா அடங்கிய முக்கண்டம் என்றாகி விட்டது" என்கிறார் கனடாவின் மெக்-கில் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் காவின் வாக்கர். [சக்ரபோர்த்தி, பக்.47].

மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சியம் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எவ்வாறு பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் மார்க்சியமும் மார்க்சியத்தின் முதன்மை ஆக்கமான மூலதனம் நூலும் எவ்வாறு வந்து சேர்ந்தன? அதற்கான அரசியல் பின்புலங்கள் என்னவாக இருந்தன; அதனால் ஏற்பட்ட புரட்சிகர விளைவுகள் என்ன? மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே மூலதனம் நூலின் மொழியும் அதனை பிற மொழிகளுக்கு பெயர்ப்பதும் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டன?

மூலதனம் நூலின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் 1867இல் கார்ல் மார்க்சால் வெளியிடப்பட்டது. இரண்டாம் தொகுதி 1885இலும் மூன்றாம் தொகுதி 1894இலும் மார்க்சின் நண்பரும் சக தோழருமான பிரெடரிக் எங்கெல்சால் வெளியிடப்பட்டன.

das kapitalஅ. ரசிய மொழிபெயர்ப்பு - ரசியப் புரட்சி

மூலதனம் நூல் ஆங்கிலம், ஃபிரெஞ்சு உள்ளிட்ட வேறு எந்த ஐரோப்பிய மொழியிலும் பெயர்க்கப்படுவதற்கு முன்பாகவே ஐரோப்பாவின் ஆகப் பின்தங்கிய நாடாகக் கருதப்படும் ரசியாவில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலின் ரசிய மொழிபெயர்ப்பு 1872இல் பீட்டர்ஸ்பர்கில் வெளியானது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த என்.பி போலியகோவ் மூலதனம் நூலை ரசிய மொழியில் வெளியிட முன்வந்தார். ஆனால், இந்த மொழிபெயர்ப்பை செய்து முடிக்க ஏறத்தாழ நான்காண்டு காலம் ஆகிவிட்டது. நான்கு மொழிபெயர்ப்பாளர்கள் அதில் ஈடுபட்டனர். 1871 டிசம்பரில், நூல் அச்சுக்குச் சென்றது. ரசியாவின் தணிக்கையாளர்களின் கடும் தடைகளைத் தாண்டி, 1872ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி நூல் ரசியப் பேரரசுக்குள் விற்பனைக்கு வந்தது.

மேலும், டேனியல்சன் மூலதனம் இரண்டாம் (1886) மூன்றாம் தொகுதிகளை (1895) ரசிய மொழிக்கு பெயர்த்தார். இந்த மூன்று தொகுதிகளை அச்சிட்டு வெளியிடும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.

"மூலதனம் நூலின் அருமையானதொரு ரசிய மொழிபெயர்ப்பு 1872 வசந்த காலத்தில் வெளிவந்தது. 3,000 படிகள்கொண்ட பதிப்பு இதற்குள் [1873, ஜனவரி] விற்றுத் தீர்ந்து விட்டது" என்று இது குறித்து மார்க்ஸ் மூலதனம் நூலின் இரண்டாம் பதிப்புக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார் [மூலதனம், பக்கம் 36, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது].

மூலதனம் நூலின் முதல் தொகுதி ரசிய மொழியில் வெளியான 45 ஆண்டுகளுக்குப் பிறகு, 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரசியாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்தது. அதற்கு முன்னர் மார்க்சியம் ரசியாவுக்குள் பரவுவதற்கான கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்குவதில் அது முதன்மைப் பங்களித்தது.ரசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பற்றி 1897இல் வெளியான லெனினின் நூல் மூலதனம் நூலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது ரசியாவில் தொழிலாளி வர்க்கப் போராட்டத்துக்கான திசைவழியை உருவாக்கிக் கொடுத்தது.

மூலதனம் நூல் ரசியாவுக்குப் பெயர்க்கப்பட்ட அரசியல் சூழலையும் அது ரசியாவின் புரட்சிகர இயக்கத்தின் மீது தொடக்க காலத்தில் செலுத்திய தாக்கத்தை ஆல்பர்ட் ரெசிஸ் என்ற அமெரிக்கப் பேராசிரியர் Das Capital Comes to Russia ("மூலதனம் நூல் ரசியாவுக்கு வருகிறது") என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். [ரெசிஸ்]

ஆ. ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பின் அறிவியல் முதன்மை

மூலதனம் நூலின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பை தொடர் வெளியிடாக கொண்டுவருவது என்று மோரிஸ் லஷாத் என்பவர் 1872ஆம் ஆண்டில் முடிவு செய்தார். இது குறித்து "இந்த வடிவத்தில் புத்தகம் தொழிலாளி வர்க்கத்துக்கு மேலும் எளிதாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்கும்; இந்த நோக்கம் வேறு எதையும்விட எனக்கு முதன்மையானது" என்று ஃபிரெஞ்சுப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் மார்க்ஸ் கூறுகிறார் [மூலதனம், பக்கம் 42, மொழிபெயர்ப்பு சிறிது மாற்றப்பட்டது].

ஃபிரெஞ்சுப் பதிப்பு 44 பகுதிகளாக வெளியாகி நிறைவுற்ற பிறகு, அதற்கு 1875ஆம் ஆண்டு ஏப்ரல் 28 தேதியிட்ட பின்னுரையை மார்க்ஸ் எழுதியுள்ளார்.

"முடிந்தவரை துல்லியமாகவும் ஏன் சொல்லுக்குச் சொல் நேரான பொருளிலும் கூட, ஒரு மொழிபெயர்ப்பைத் தயாரிக்கிற பணியை திரு ஜே. ராய் ஏற்றுக்கொண்டார். அதனை அவர் இம்மியும் பிசகாத முறையில் நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், அவரது இந்த இம்மியும் பிசகாத நிலையே அவருடைய வாசகத்தைத் திருத்த வேண்டிய கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கியது; அதனை வாசகருக்கு மேலும் புரியக் கூடியதாய் ஆக்குவதே இத்திருத்தங்களின் நோக்கம். நூல் பகுதிபகுதியாக வெளியிடப்பட்டதால், அவ்வப்போது புகுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் ஒரே மாதிரியான கவனத்துடன் செய்யப்படவில்லை; இதன் விளைவாக நடையில் இசைவின்மை தவிர்க்க முடியாததாயிற்று." [மூலதனம், பக்கம் 43, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது]

"முடிந்த வரை துல்லியமாகவும் ஏன் சொல்லுக்குச் சொல் நேரான பொருளிலும் இம்மியும் பிசகாமல்" மொழிபெயர்ப்பதற்கும் அதனை மொழிபெயர்க்கப்படும் மொழிபேசும் "வாசகருக்கு மேலும் புரியக் கூடியதாய் ஆக்குவதற்கும்" இடையேயான இழுபறி மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல். இதனை மார்க்ஸ் இங்கு பதிவு செய்துள்ளார்.

"ஃபிரெஞ்சுப் பதிப்பின் இலக்கியக் குறைபாடுகள் என்னவானாலும், மூலத்திற்கல்லாத ஒருவகை அறிவியல் மதிப்பு இதற்குள்ளது; ஜெர்மன் மொழி தெரிந்த வாசகர்களும் கூட இதனைப் பார்த்தறிய வேண்டும்" என்று பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் முதன்மையை மார்க்ஸ் விளக்குகிறார் [மூலதனம், பக்கம் 43, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது].

இவ்வாறு மார்க்ஸ் தயாரித்து அளித்த ஃபிரெஞ்சு பதிப்பு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் புரட்சிகர அரசியல்மீது தாக்கம் செலுத்தியுள்ளது.

"மூலதனம் நூலின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு மார்க்ஸ் கணிசமான நேரம் செலவிட நேரிட்டது. ஆகச்சிறந்த ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பை உருவாக்குவதற்கு மார்க்ஸ் செலுத்திய உழைப்புக்கும் முயற்சிக்கும் தக்க வெகுமதி கிடைத்தது" என்கிறார் மார்க்சிய வரலாற்றாய்வாளர் மார்சலோ முஸ்டோ. லெ கேபிடல் என்ற தலைப்பிடப்பட்ட ஃபிரெஞ்சு பதிப்பில் மார்க்ஸ் சேர்த்தவையும் செய்த மாற்றங்களும் மூலதனம் நூலின் காலனிய எதிர்ப்பு அரசியலுக்கும் அதன் உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களித்தன என்றும் அவர் கூறுகிறார். [முஸ்டோ]

-             1882-க்கும் 1884-க்கும் இடையே பதிப்பிக்கப்பட்ட முதல் இத்தாலியப் பதிப்பு பிரெஞ்சு பதிப்பிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது.

-             ஸ்பானிய மொழியைப் பொறுத்தவரையில், லெ கேபிடலைப் பயன்படுத்தி 1967இல் மாட்ரிடிலும் 1973இல் அர்ஜென்டினாவின் புனஸ் ஐரஸிலும் இரண்டு முழுமையான மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன.

-             போர்ச்சுகல்லிலும் போர்ச்சுகீசிய மொழி பேசும் பிரேசிலிலும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆய்வாளர்களும் மூலதனம் நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதையே வசதியானதாகக் கருதினர். போர்ச்சுகீசிய மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஃபிரெஞ்சு பதிப்புதான் பயன்படுத்தப்பட்டது.

-             ஃபிரெஞ்சுப் பதிப்பு, பிற இடங்களிலும் முதன்மைப் பாத்திரம் வகித்தது, குறிப்பாக பிரெஞ்சு காலனிய ஆதிக்கத்தில் இருந்த அல்ஜீரியாவிலும் 1959-க்கும் 1960-க்கும் இடையே வெளியிடப்பட்ட வியட்நமீய மொழிபெயர்ப்புக்கும் ஃபிரெஞ்சுப் பதிப்பே பயன்படுத்தப்பட்டது.

மார்க்ஸ் திருத்தி சீர்செய்த ஃபிரெஞ்சுப் பதிப்பின் இந்த உரை எங்கெல்ஸ் பதிப்பித்த மூன்றாம், நான்காம் ஜெர்மன் பதிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டது. அது மொழிமாற்றம் தொடர்பாக புதிய சிக்கல்களை முன்வைத்தது.

இ. மார்க்சின் மொழிநடை

மார்க்சின் மறைவுக்குப் பின் ஜெர்மன் மொழியில் மூன்றாம் (1883 நவம்பர்), நான்காம் (1890 ஜூன்) பதிப்புகளை எங்கெல்ஸ் பதிப்பித்தார். ஃபிரெஞ்சு பதிப்பில் செய்யப்பட்ட மாற்றங்களை ஜெர்மன் மொழிக்குக் கொண்டு வருவதில் எங்கெல்ஸ் சிக்கல்களை எதிர்கொண்டார்.

"நடையைப் பொறுத்தவரை மார்க்சே பல உட்பிரிவுகளை முழுமையாகத் திருப்பிப் பார்த்துத் திருத்தியிருந்தார்; ஆங்கில கலைச்சொற்களையும் இதர ஆங்கில வழக்குகளையும் நீக்குவதில் எந்த அளவுக்குச் செல்லலாம் என்பதை இதில் குறிப்பிட்டிருந்தார்; அத்தோடு எண்ணற்ற வாய்மொழி பரிந்துரைகளிலும் எனக்கு சுட்டிக் காட்டியிருந்தார். எது எப்படியானாலும், மார்க்ஸ் சேர்ப்புகளையும் துணை வாசகங்களையும் சரிபார்த்துத் திருத்தி சரளமான ஃபிரெஞ்சின் இடத்தில் தனக்கேயுரிய மணிச்சுருக்கமான ஜெர்மன் மொழியை அமர்த்தியிருப்பார்; அவற்றைப் பெயர்த்துச் சேர்க்கும் போது, மூல வாசகத்துடன் அதிகஅளவு இசைவு கொண்டவையாக்குவதோடு நான் நிறைவுபெற வேண்டியிருந்தது." [மூலதனம், பக்கம் 45, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது]

ஈ. கலைச்சொற்கள் - மொழிபெயர்ப்பு

எங்கெல்ஸ் துறைசார் சொற்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசுகிறார். ஃபிரெஞ்சு பதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஜெர்மன் பதிப்பைத் தயாரிக்கும்போது அதற்கேயுரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.

"ஜெர்மானியப் பொருளாதார அறிஞர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வழக்கமாகப் பயன்படுத்துகிற இப்போதைய பிதற்றலை மூலதனம் நூலுக்குள் நுழைக்கும் எண்ணம் எனக்கு வரவே வராது. எடுத்துக்காட்டாக, மற்றவர்களை பணத்துக்கு உழைப்பைத் தன்னிடம் கொடுக்கச் செய்பவர் உழைப்பைக் கொடுப்போன் (Arbeitgeber) என்று அழைக்கப்படுகிறான்; யாருடைய உழைப்பு கூலிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவன் உழைப்பை எடுப்போன் (Arbeitnehmer) என்று அழைக்கப்படுகிறான்.

ஃபிரெஞ்சு மொழியிலும் ‘travail' என்ற வார்த்தை அன்றாட வாழ்க்கையில் "வேலை" என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எந்தப் பொருளாதார அறிஞராவது முதலாளியை donneur de travail (உழைப்பைக் கொடுப்போன்) என்றோ தொழிலாளியை receveur de travail (உழைப்பை எடுப்போன்) என்றோ அழைப்பாரானால் ஃபிரெஞ்சுக் காரர்கள் அவரை மூளை குழம்பியவர் என்று சரியாகவேக் கருதுவார்கள்." [மூலதனம், பக்கம் 45, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது]

"வாசகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் ஆங்கிலேய நாணயங்களையும் பணங்களையும், அளவைகளையும் எடைகளையும் அவற்றின் புதிய ஜெர்மானியச் சமதைகளாக மாற்றவும் நான் உரிமையெடுத்துக் கொள்ளவில்லை. முதல் பதிப்பு வெளிவந்தபோது, ஆண்டில் எத்தனை நாட்கள் உண்டோ, அத்தனை வகையான அளவைகளும் எடைகளும் ஜெர்மனியில் இருந்தன. இதன்னியில் இருவகை மார்க்குகளும் இருவகை கூல்டினும் Neues Zweidrittel என்றழைக்கப்பட்ட ஒன்று உட்படக் குறைந்தது மூன்று வகை தாலெரும் இருந்தன. இயற்கை அறிவியல்களில் மெட்ரிக் முறை வழங்கியது. உலகச் சந்தையில் ஆங்கிலேய அளவைகளும் எடைகளும் வழங்கின. இந்நிலையில் உண்மை விவரம் சார்ந்த தனது சான்றாதாரங்களில் ஏறத்தாழ அனைத்தையுமே பிரித்தானியத் தொழில்துறை நிலைமைகளிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருந்த ஒரு நூலில் ஆங்கிலேய அளவை அலகுகள் இடம் பெற்றது இயல்பே" [மூலதனம், பக்கம் 47, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது].

எங்கெல்ஸ் பதிப்பித்த ஆங்கிலப் பதிப்பைப் பின்பற்றி செய்யப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பிலும், ஆங்கிலேய நாணயமான பவுண்ட், ஷில்லிங், பென்னி ஆகியவையும் அளவைகளான கெஜம், பவுண்ட், குவார்ட்டர், காலன் போன்றவையும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழ் வாசகர்களுக்கு கணிசமான இடர்ப்பாட்டைக் கொடுக்கவே செய்கிறது. மூல நூலில் இருந்து அச்சுபிசகாமல் மொழிபெயர்ப்பதற்கும் அதை பெயர்க்கப்படும் மொழியில் புழங்கும் சொற்களுக்கு மாற்றுவதற்கும் இடையேயான இன்னொரு இழுபறி இது.

உ. மொழிபெயர்ப்பவருக்கு தேவையான திறன்கள் - எங்கெல்சின் குறிப்பு

மார்க்சின் இறப்புக்குப் பின்னர் எங்கெல்ஸ் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பை தயாரித்து வந்தார். அது 1887இல்தான் வெளியானது. அதற்கு முன்னதாக நடந்த ஒரு மொழிபெயர்க்கும் முயற்சி பற்றி எங்கெல்ஸ் 1885ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.

ஜான் பிராட்ஹவுஸ் என்பவர் செய்த அத்தகைய மொழிபெயர்ப்பின் முதல் சில பக்கங்கள் டு-டே இதழின் அக்டோபர் பதிப்பில் வெளியாகியிருப்பதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். [எங்கெல்ஸ்]

"மூலதனம் போன்ற ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கு இலக்கிய ஜெர்மன் மொழியில் ஓரளவு அறிவு இருப்பது மட்டும் போதாது. மார்க்ஸ் தனது எழுத்தில் அன்றாட சொல் வழக்குகளையும் உள்ளூர் வழக்குகளையும் நிறைய பயன்படுத்துகிறார். அறிவியலின் ஒவ்வொரு கிளையிலிருந்தும் அவர் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகிறார்; பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து இலக்கிய உவமானங்களைக் காட்டுகிறார். அவரைப் புரிந்து கொள்ள ஒருவர் ஜெர்மன் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்; ஜெர்மன் வழக்கு மொழியையும் எழுத்து மொழியையும் அறிந்திருக்க வேண்டும்; ஜெர்மானிய வாழ்க்கை பற்றியும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும்."

"ஆனால், இதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகின்றது. மார்க்ஸ் அவரது காலத்தில் மிகச் செறிவாக, ஆழமாக எழுதிய எழுத்தாளர்களில் ஒருவர். அவரது கருத்துகளை ஆங்கிலத்தில் நிறைவாக வெளிப்படுத்துவதற்கு ஜெர்மன் மொழியில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருக்க வேண்டும்."

"நுணுக்கமான ஜெர்மன் நூலை மொழிபெயர்க்க நுணுக்கமான ஆங்கில அறிவு தேவை; அந்த மொழியின் ஆகச்சிறந்த ஆதாரங்களைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்; ஜெர்மன் மொழியில் மார்க்ஸ் உருவாக்கிய புதிய கலைச்சொற்களுக்கு நிகராக புதிய சொற்களை ஆங்கிலத்தில் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும்."

இந்தத் திறன்கள் இல்லாத ஜான் பிராட்ஹவுஸ் செய்துள்ள தவறுகளை எங்கெல்ஸ் பட்டியலிடுகிறார்.

"முதல் பிரிவின் தலைப்பிலேயே அவர் Wertgroesse என்பதை "மதிப்பின் வீச்சு" (extent of value) என்று மொழிபெயர்க்கிறார். Groesseஎன்பது ஒரு திட்டமான கணிதவியல் சொல் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு சமதையான சொல் பருமன் (magnitude) என்பது. அதாவது, தீர்மானிக்கப்பட்ட அளவு; வீச்சு (extent) என்பதற்கு இதைத் தவிர பல பொருள்கள் உள்ளன.

Arbeitzeit என்பதற்கு "labour-time" (உழைப்பு-நேரம்) என்ற எளிய சொல்லமைப்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை; அதனைப் பலவழிகளில் மொழிபெயர்த்துள்ளார்:

1. "நேர-உழைப்பு" (time-labour) - இதற்கு ஏதாவது பொருள் இருந்தால், அது நேர அடிப்படையில் கூலி பெறும் உழைப்பு அல்லது கட்டாய உழைப்புத் தண்டனை பெற்ற ஒருவரின் உழைப்பு என்று பொருள்படும்

2. "உழைப்பின் நேரம்" (time of labour)

3. உழைப்பு-நேரம் (labour-time)

4. உழைப்புக் காலம் (period of labour). இந்தச் சொல்லை மார்க்ஸ் மூலதனம் இரண்டாம் தொகுதியில் முற்றிலும் வேறுபட்ட பொருளுக்கு பயன்படுத்தியுள்ளார் (Arbeitsperiod).

உழைப்பு-நேரம் என்ற கருத்தினம் ஒட்டுமொத்த நூலிலும் மிக அடிப்படையான ஒன்று. அதனை பத்து பக்கங்களுக்குள் நான்கு வெவ்வேறு சொற்களாக மொழிபெயர்ப்பது மன்னிக்க முடியாத குற்றத்தை விட மோசமானது." [எங்கெல்ஸ்]

ஊ. ஆங்கில மொழிபெயர்ப்பு - மூல ஆதாரங்களுக்கு திரும்பிச் செல்லுதல்

மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்புக்கு அடிப்படையாக 1883இல் எங்கெல்சால் தயாரிக்கப்பட்ட ஜெர்மன் மூன்றாம் பதிப்பு பயன்படுத்தப்பட்டது. மூல நூலில் தாம் பயன்படுத்திய ஆங்கில ஆதாரங்களை ஜெர்மன் மொழிக்கு மாற்றி மார்க்ஸ் எழுதியிருந்தார்.

ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியை சாமுவேல் மூர், எட்வர்ட் அவ்லிங் ஆகியோர் செய்தனர். மார்க்சின் கடைசிப் புதல்வியான திருமதி அவ்லிங் மூலநூலில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில ஆதாரங்களில் இருந்து காட்டப்பட்டிருந்த மேற்கோள்களை சரிபார்க்கும் பணியைச் செய்தார். எங்கெல்ஸ் பதிப்பாசிரியராக இருந்தார்.

"ஆங்கிலப் பதிப்பின் வெளியீட்டையொட்டி, பல மேற்கோள்களை முழுமையாகத் திருப்பிப் பார்த்துத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மிகப் பெரும்பாலான மேற்கோள்கள் ஆங்கில ஆதாரங்களிலிருந்து எடுக்கப்பட்டவை; ஆங்கிலப் பதிப்பில் இவற்றை ஜெர்மன் மொழியிலிருந்து மறுமொழிபெயர்ப்பாக இல்லாமல் மூல வடிவமான ஆங்கில வடிவத்திலேயே தரும் பொருட்டு, மேற்கோள்கள் அனைத்தையும் அவற்றின் மூலங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கும் வேலையை மார்க்சின் புதல்வி எலீனார் மேற்கொண்டார்.

எனவே, நான்காம் பதிப்பைத் தயாரிக்கையில், இந்த ஆங்கிலப் பதிப்பின் வாசகத்துடன் சரிபார்த்துக் கொள்வது எனது கடமையாயிற்று. இந்தச் சரிபார்த்தலினால் பல்வேறு சிறு பிழைகள் தெரியவந்தன."

"பலவிடங்களில் சில சொற்களுக்கான மொழிபெயர்ப்பு அவ்வளவாக நிறைவளிக்கவில்லை. 1843-45 காலத்திய பழைய பாரிஸ் குறிப்பேடுகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட சிற்சில பகுதிகளில் ஆங்கில வாசகத்தையே இப்போது பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்போது மார்க்சுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர்கள் எழுதியவற்றை பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே படித்துக் கொண்டிருந்தார். இந்த இரட்டை மொழிபெயர்ப்பால் பொருள் சாயல் சற்றே மாறிப் போயிற்று." [மூலதனம், பக். 49]

மார்க்சின் வாழ்நாள் தோழரும் சக செயல்பாட்டாளருமான எங்கெல்சுக்கே மார்க்சை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பில் எந்த அளவுக்கு சுதந்திரம் எடுக்கலாம் என்பதற்கு அவர் மார்க்சின் ஃபிரெஞ்சுப் பதிப்பை நாடியுள்ளார்.

"மூலத்தின் முழுக்கருத்தில் எதையேனும் மொழிபெயர்ப்புக்காக விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த இடங்களிலெல்லாம், நூலாசிரியரே எதை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார் என்பதை அறியும் பொருட்டு இடர்ப்பாடான பகுதிகளில் பெரும்பாலானவற்றிற்கு பிரெஞ்சு வாசகத்தின் துணை நாடப்பட்டது".

"குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இயல்பான அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள பொருளிலிருந்து வேறான பொருளில் பயன்படுத்தியிருப்பதைச் சொல்கிறோம். இதனைத் தவிர்க்க முடியவில்லை." [மூலதனம், பக். 49, மொழிபெயர்ப்பு சிறிதளவு மாற்றப்பட்டது]

ஒரு புதிய துறை பற்றிய நூலை மொழிபெயர்ப்பதும் அதில் பயன்படுத்தப்படும் புதிய கலைச்சொற்களை உள்ளூர் மொழியில் உருவாக்குவதும் மூலதனம் நூலை பல்வேறு ஆசிய மொழிகளில் மொழிபெயர்த்தவர்களும் எதிர்கொண்ட ஒரு சிக்கலாக இருந்தது.

எ. சீன மொழிபெயர்ப்பு - முன்தயாரிப்புகள்

மூலதனம் நூல் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு, 1928ஆம் ஆண்டில் தொடங்கியது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மார்க்சியமும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்த காலம் அது. எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான், 1938ஆம் ஆண்டில் மூலதனம் நூலின் சீனப் பதிப்பு வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்கள் இந்தக் காலகட்டத்தில் மேற்கொண்ட முன்தயாரிப்புகள் இந்நூலை மொழிபெயர்ப்பதில் இருந்த நுட்பச் சிக்கல்களை மட்டுமின்றி அதன் அரசியல் சிக்கல்களையும் காட்டுகின்றன.

சீன மொழியில் மூலதனம் நூலின் மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்தவர்களில் ஒருவர் வாங் யானான். 1928ம் ஆண்டு குவோ தாலி என்பவர், ஹாங்சோ (Hangzhou) நகரில் வாங் யானானை சந்தித்தபோது மூலதனம் நூலை இருவரும் சேர்ந்து மொழிபெயர்க்கலாம் என்று முன்மொழிந்தார்.

மூலதனம் நூலை சிறப்பாக மொழி பெயர்ப்பதற்கான தயாரிப்பாக, உலக அளவில் பொருளியலில் புகழ்பெற்ற நூல்களை முதலில் மொழிபெயர்க்க அவர்கள் முடிவு செய்தனர். 1928ஆம் ஆண்டில் வாங் யானான் ஜப்பானுக்குச் சென்று டோக்கியோவில் மார்க்சிய அரசியல் பொருளாதார படிப்பில் சேர்ந்தார். அவர் ஒரு புறம், முதலாளித்துவ செவ்வியல் பொருளியல் நூல்களை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். இன்னொரு புறம் ஜெர்மன் மொழியையும், ஜப்பானிய மொழியையும் கற்கலானார்.

-             மூலதனம் நூலை மொழிபெயர்ப்பதற்கு முன்னர் ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் (Wealth of Nations) நூலை இருவரும் இணைந்து மொழிபெயர்த்தனர்.

-             1930-இல் வாங் யானான், நில வாடகை பற்றிய சிந்தனையின் வரலாறு என்ற ஜப்பானிய நூலை சீன மொழிக்கு பெயர்த்தார்.

-             1932-ல் அவர்கள் இருவரும் சேர்ந்து டேவிட் ரிக்கார்டோவின் பொருளியல் மற்றும் வரி விதிப்பின் கொள்கைகள் (Principles of Economics and Taxation) என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்தனர்.

இவ்வாறாக, இருவரும் சேர்ந்து மார்க்சின் மூலதனம் நூலை மொழிபெயர்ப்பதற்கு முன்னர், அதற்கான தயாரிப்பாக, புகழ்பெற்ற ஆறு பொருளியல் நூல்களை மொழிபெயர்த்தனர்.

1933இல் சீனாவின் குவோமிங்தாங் அரசால் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்ட வாங் யானான் ஐரோப்பாவுக்குச் சென்றார்; ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ஓர் ஆண்டுக்கு மேல் வசித்தார்; 1935இன் இறுதியில் அரசியல் சூழல் தணிந்த நிலையில் ஷாங்காய்க்கு திரும்பினார். குவோ தாலியுடன் இணைந்து மூலதனம் நூலின் மொழிபெயர்ப்பைத் தொடங்கினார். மூலதனம் முதல் தொகுதியை ஜெர்மன் மூல நூலில் இருந்து அவர்கள் மொழிபெயர்த்தனர்; அதனை ஜப்பான் மொழிபெயர்ப்புடனும் ஏற்கனவே சீன மொழியில் வெளியிடப்பட்ட சில பகுதிகளுடனும் ஒப்பிட்டு சரிபார்த்தனர். இறுதியில், 1938இல் மூலதனம் நூலின் மூன்று தொகுதிகளையும் மொழிபெயர்த்து முடித்தனர். [குவோ]

இதற்குப் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிக்கப்பட்டது.

ஏ. இந்தியாவுக்குள் மூலதனம் - - 100 ஆண்டுகளுக்குப் பிறகு!

மூலதனம் நூலின் சுருக்கப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள் முதன்முதலில் வங்காளத்திலும் மராத்தியிலும் 1938இல் வெளியாகியுள்ளன. மராத்தியில், கேப்ரியல் டெவில்லவின் மக்களின் மார்க்ஸ் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு பி.வி. காட்கில் மூலதனம் நூலின் ஒரு சுருக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டார். இந்திய மொழி ஒன்றில் மூலதனம் நூலின் மூன்று தொகுதிகளும் வெளியாவது 1970 வாக்கில்தான் தொடங்கியிருக்கிறது.

1. வங்காளம்

வங்காள மொழியில் முதல் முழுமையான மொழிபெயர்ப்பு பவானி சென், பஞ்சுகோபால் பாதுரி, சோம்நாத் லஹிரி ஆகியோரால் 1960-களின் இறுதியில் செய்யப்பட்டது; அதனை மாஸ்கோவில் இருந்து வெளியிடுவதாகத் திட்டம் இருந்ததாகத் தகவல் உள்ளது. ஆனால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. மூலதனம் நூலின் முதல் முழு மொழிபெயர்ப்பு 1974இல்தான் வெளி வந்தது. அதை மொழிபெயர்த்தவர் பேராசிரியர் பியுஷ் தாஸ்குப்தா, வெளியிட்டவர்கள் பாணிபிரகாஷ், கொல்கத்தா. அதன் பெயர் கேபிடல் : தனாதாந்திரிக் உத்பாதனர் பிசார்மூலக் பிஷ்லேஷன் (Capital: Dhanataantrik Utpaadaner Bichaarmoolak Bishleshan).

அதே ஆண்டில் பியூஷ் தாஸ்குப்தா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு 1977இல் சிபிஎம் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் மூலதனம் நூலின் பிற தொகுதிகளின் மொழிபெயர்ப்பையும் முடித்து விட்டார்; இரண்டாம் தொகுதி 1983இலும் மூன்றாம் தொகுதி 1984இலும் நான்காம் தொகுதி 1985இலும் ஐந்தாம் தொகுதி 1987இலும் ஆறாம் (இறுதி) தொகுதி1988இலும் வெளியாகின. இவற்றை வெளியிட்டது அக்தார் ஹொசைன் என்பவர் நடத்திய பானி பிரகாஷ் என்ற பதிப்பகம். அவர் இந்த நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்தார்.

இவ்வாறு வங்காள மொழியில் மூலதனம் நூலின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நான்கு பதிப்புகள் வெளியாகியிருந்தும், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பரந்து பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இந்த நூலுக்கு போதுமான கவனமோ சுற்றோட்டமோ ஏற்போ இருக்கவில்லை என்று ராஜர்ஷி தாஸ்குப்தா "வங்காளத்தில் மூலதனம்: பின்காலனிய காலத்தில் மார்க்சை பெயர்த்தல்" (Capital in Bangla: Postcolonial Translation of Marx) என்ற கட்டுரையில் தமது ஏமாற்றத்தைத் தெரிவிக்கிறார். [சக்ரபோர்த்தி, பக். 35]

2. இந்தி

இந்தியில் மூலதனம் முதல் தொகுதி ஓம்பிரகாஷ் சங்கல்-ஆல் மொழிபெயர்க்கப்பட்டு, பூஞ்சி 1: பூஞ்சி கே உத்பாதன் கி ப்ரகிரியா என்ற பெயரில் 1965இல் வெளியானது. இரண்டாவது தொகுதியை புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் ராம் விலாஸ் ஷர்மா மொழிபெயர்த்தார். அது பூஞ்சி 2 என்ற பெயரில் 1979இல் வெளியானது. மூன்றாம் தொகுதியை நரேஷ் பேடி மொழிபெயர்க்க அது 1983ஆம் ஆண்டில் பூஞ்சி 3 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மூன்று தொகுதிகளுமே மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் (பிரகதி பிரகாஷன் மாஸ்கோ) வெளியிடப்பட்டன [சக்ரபோர்த்தி, பக். 30-31].

3. மராத்தி

மராத்தி மொழியில் மூன்று தொகுதிகளையும் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்த்தவர், வசந்த் துல்புலே. அவை பந்த்வால் காண்ட் 1 : பண்ட்வாலி உத்பாதனாச்சி மூல்காமி மிமாம்சா (‘Bhandval’ Khand 1: Bhandvali Utpaadanaachi Moolgaami Mimamsa) (1970), பந்த்வால் காண்ட் 2 : ரஜாகியா அர்த்தசாஸ்த்ரா சி மிமார்சா (‘Bhandval’ Khand 2: Rajakiya Arthashastra chi Mimansa, 1975 ) (1975), பண்ட்வால் காண்ட் 3 (‘Bhandval’ Khand 3) (1980) என்ற தலைப்புகளில் பூனாவைச் சேர்ந்த பிராகதிக் பிரகாஷன் (Praagatik Prakashan Pune) நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டன. [சக்ரபோர்த்தி, பக். 30-31].

4. மலையாளம்

மலையாளத்தில், மூலதனம் நூலின் சில பகுதிகளும் பத்திகளும் 1940-களில் தொழிலாளி என்ற பத்திரிகையில் மனோகரன் என்ற புனைபெயரில் வெளியாகின. ஆனால், மூலதனம் என்ற தலைப்பில் நூலின் மூன்று தொகுதிகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தது குட்டிப்புழா கிருஷ்ண பிள்ளை தலைமையிலான ஒரு குழு. அந்தக் குழுவில் தோழர்கள் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், சி உண்ணிராஜா, என்ஈ பலராம், பாவணன், டிகேஜி நாயர், பிடி பாஸ்கர பணிக்கர் முதலானோர் இருந்தனர். அது 1968இல் சாஹித்ய பிராவர்த்தக கூட்டுறவு சங்கத்தால் வெளியிடப்பட்டது. [ஜயந்த்]

5. பஞ்சாபி

பஞ்சாபி மொழியில் நவ்யுக் பப்ளிஷர்சின் பாபா பிரீத்தம் சிங்-இன் முன்முயற்சியால், எழுத்தாளர்கள் பியாரா சிங் சேஹ்ராய், கரன்ஜீத் சிங், குர்பச்சன் புல்லார், பேராசிரியர் பிரேம் சிங் ஆகியோர் மூலதனம் நூலின் முதல் தொகுதியை மொழிபெயர்த்தனர். அது சர்மயா என்ற பெயரில் 1975ஆம் ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதற்கு சோவியத் ஒன்றியத்தின் தூதரகம் உதவி அளித்தது. இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக 1887இல் எங்கெல்ஸ் பதிப்பித்த ஆங்கில மொழிபெயர்ப்பு பயன்படுத்தப்பட்டது.

கூட்டாகச் செய்த இந்த மொழிபெயர்ப்பில் பொருளியல் சொற்களும் எழுத்து நடையும் நூல் முழுவதும் ஒரே மாதிரி இல்லை என்பதை எண்ணி குர்பச்சன் புல்லார் வருந்துகிறார். "எங்களில் யாரும் மற்றவர்களின் கருத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. கெடுவாய்ப்பாக எங்கள் நால்வரையும் ஒருங்கிணைப்பதற்கு யாரும் இருக்கவில்லை" என்கிறார். [பார்த்தி]

6. தமிழ்

மூலதனம் நூலின் தமிழ் பதிப்பு 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி கார்ல் மார்க்சின் 181ஆவது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை தோழர் தியாகு 1970-களில் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்த போது தொடங்கினார். தோழர் கிருஷ்ணய்யா தொகுப்பாசிரியராக மொழிபெயர்ப்பை செம்மை செய்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மாஸ்கோவில் உள்ள பதிப்பகங்கள் நூலை வெளியிடுவதற்கு மறுத்து விட்ட பிறகு, ப. மாணிக்கம் சேர்மன் ஆக இருந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அதை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இது, "பிரெடரிக் எங்கெல்ஸ் பதிப்பித்த 1887ஆம் வருடத்திய ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பாகும்" என்று அவர்கள் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளனர் [மூலதனம், பக்.5].

நூலின் முன்வெளியீட்டுத் திட்டத்தில் 1,500 படிகள் விற்றிருந்தன. நூலை அன்றைய தமிழ்நாடு ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எம் தமிழ்க்குடிமகன் வெளியிட சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் என் சங்கரையா முதல் இரண்டு தொகுதிகளையும் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் ஆர் நல்லக்கண்ணு மூன்றாம் தொகுதியையும் பெற்றுக் கொண்டனர். [யூஎன்ஐ]

ஐந்து பகுதியாக வெளியான மூன்று தொகுதிகளைக் கொண்ட இந்நூலில் 3,200 பக்கங்கள் உள்ளன. தொடர்ந்து புதிய பதிப்புகள் (அச்சடிப்புகள்) செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டில் ஐந்தாவது பதிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கும் முன்னதாக, மூலதனம் நூலின் மூன்று தொகுதிகளையும் உபரி-மதிப்புக் கோட்பாடுகள் நூலின் மூன்று தொகுதிகளையும் தோழர் ஜமதக்னி தமிழில் மொழிபெயர்த்து அது தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

7. தெலுங்கு

மூலதனம் நூலை தெலுங்கு மொழியில் பெயர்க்கும் பணி 1984இல் தொடங்கியது; 1996இல் அது வெளியிடப்பட்டது. நூலை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகமும் விஷால்ஆந்திரா விஞ்ஞான சமிதியும் இணைந்து வெளியிட்டனர். மொழிபெயர்ப்பாளர்களை தேர்வு செய்து, தெலுங்கு மொழிபெயர்ப்பை ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டனர்; அதே நேரம் அதனை இந்தி மொழிபெயர்ப்புடன் சரிபார்க்கவும் செய்தனர். மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டல்கள் உருவாக்கப்பட்டன.

மூலதனம் முதல் தொகுதியின் மொழிபெயர்ப்பில் ஐந்து மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர். அது 1996இல் வெளியிடப்பட்டது. இரண்டாம் தொகுதி 1998 நவம்பரிலும், மூன்றாம் தொகுதி 2000 அக்டோபரிலும் வெளியிடப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளின் மொழிபெயர்ப்பையும் மேம்படுத்தி விஷால்ஆந்திரா விஞ்ஞான சமிதி 2017-ல் புதிய பதிப்பை வெளியிட்டது. இந்த மொழிபெயர்ப்பை சரியான தெலுங்கு மொழிபெயர்ப்பாக அனைத்து இடதுசாரி குழுக்களும் ஏற்றுக் கொண்டன.

1988-லேயே சிபிஎம்-ஐச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் மூலதனம் முதல் தொகுதியை தெலுங்கில் மொழிபெயர்த்தனர். அதை அரவிந்தா பதிப்பகத்தார் வெளியிட்டனர். மூன்றாம் தொகுதி 1992-லும் இரண்டாம் தொகுதி 1995-லும் வெளியிடப்பட்டன. இந்த மொழிபெயர்ப்பில் இருந்த குறைகள் காரணமாக இந்தப் பதிப்புகள் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களை எதிர்கொண்டன. இறுதியில் பதிப்பாளர்கள் இதை இனிமேலும் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தனர். ஏற்கனவே அச்சிடப்பட்ட படிகளைத் திரும்பப் பெற்றனர்.

இவ்வாறாக, தெலுங்கு மொழியில் மூலதனம் நூலின் இரண்டு முழுமையான மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ளது, இன்னொன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. [கோடேஷ்]

8. ஒரியா

மூலதனம் நூலின் ஒரியா மொழி பதிப்பு 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. [மொகந்தி] இதனை மொழிபெயர்த்தவர் லம்போதர் நாயக். அவர் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் ஒடியா மாநிலத் தலைவர் ஆவார். இதனை பதிப்பித்தவர்கள், முன்னேற்றப் பதிப்பகம், லோக்ஷிக்ஷா பிரதிஷ்தான், ஒடிசா. மூலதனம் இரண்டாம் தொகுதியின் ஒடியா மொழிபெயர்ப்பு 2011ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. [செய்தியாளர்]

9. கன்னடம்

மார்க்சின் 200ஆவது பிறந்த நாளையும் மூலதனம் முதல் தொகுதி 150ஆவது ஆண்டையும் கொண்டாடும் விதமாக கிரியா, நவகர்நாடகா என்ற இரண்டு பதிப்பகங்கள் மூலதனம் நூலையும் இன்னும் ஆறு நூல்களையும் வெளியிடும் திட்டத்தை அறிவித்தனர். இந்த மொழிபெயர்ப்புப் பணியில் கன்னட மொழியில் முன்னணி முற்போக்கு எழுத்தாளர்கள் 30 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. இந்த நூல்கள் அனைத்திலும் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மூலதனம் முதல் தொகுதி 20 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மொழிபெயர்ப்புகள் மற்ற மொழிபெயர்ப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டன. ஆறு பேர் கொண்ட ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்ப்புகளை சரிபார்த்து தேவையான திருத்தங்களை செய்தனர். ஒட்டு மொத்த நூலுக்கு ஓர் அறிமுகமும் ஒவ்வோர் இயலுக்கும் சுருக்கமும் எழுதப்பட்டன. பொருத்தமான படங்கள் சேர்க்கப்பட்டன. இந்த மொழிபெயர்ப்புப் பணியில் 22-க்கும் அதிகமான எழுத்தாளர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றனர். மூலதனம் முதல் தொகுதி ஆகஸ்ட் 2019இல் வெளியிடப்பட்டது.

மூலதனம் முதல் தொகுதியை கிரியா மதயமா (Kriya Madhayama Pvt Ltd) என்ற நிறுவனம் வெளியிட்டது. இதன் ஆசிரியர் குழுவின் தலைவராக முதுபெரும் மார்க்சிய அறிஞர் டாக்டர் ஜி ராமகிருஷ்ணாவும் ஒருங்கிணைப்பாளராக கிரியா மதயமாவின் இயக்குநரான வசந்தராஜா என் கேவும் இருந்தனர். ஆசிரியர் குழுவில் மூத்த எழுத்தாளர்கள்/மொழிபெயர்ப்பாளர்கள் பேராசிரியர் வி என் லக்ஷ்மி நாராயண், வேதராஜா என்.கே, ஷிவானந்தா சாஸ்வேஹல்லி, டாக்டர் பி ஆர் மஞ்சுநாத் ஆகியோர் இருந்தனர். மொழிபெயர்ப்பாளர்களில் ஏ எஸ் ஆச்சார்யா, ஜி ராஜசேகரம், பேராசிரியர் நாகராகரே ரமேஷ், பேராசிரியர் டி வெங்கேஷ்மூர்த்தி, யதுர் மகாபலா, பேராசிரியர் டி எஸ் வேணுகோபால், பேராசிரியர் ஷைலஜா, பி ஸ்ரீபாதா பட், பேராசிரியர் வி எஸ் ஸ்ரீதர், டாக்டர் எச் ஜி ஜெயலக் ஷ்மி, பேராசிரியர் பி எம் புட்டையா, டாக்டர் கிருஷ்ணப்ப கொஞ்சாடி, எச்.எஸ் ஜெயகுமார், எம்.சி டொங்ரே, எச்.வி ராவ், டாக்டர் ஆர் ஷோபா ஆகியோர் இருந்தனர்

முதல் தொகுதி மொழிபெயர்ப்பில் கிடைத்த அனுபவத்தில் இருந்து இரண்டாம் தொகுதியை மொழிபெயர்ப்பதற்கு வேறுபட்ட அணுகுமுறை பின்பற்றப்பட்டது. மொழிபெயர்ப்பு தெலுங்கில் இருந்து செய்யப்பட்டது, அது ஆங்கிலத்துடன் சரிபார்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை பேராசிரியர் வி.என். லக்ஷ்மிநாராயணும் பி.ஏ. குமாரும் செய்தனர். வசந்தராஜா என். கே., வேதராஜா என்.கே. இருவரும் தொகுப்பாசியர் பணியைச் செய்தனர். [வசந்த ராஜா]

ஐ. தென்கிழக்காசிய நாடுகளில் மூலதனம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருந்த காலத்திலும் கூட மூலதனம் நூல் ஒருசில தென்கிழக்காசிய மொழிகளிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [சக்ரபோர்த்தி, பக். 39-46]

1. வியட்நாம்

1959-க்கும் 1960-க்கும் இடையே மூலதனம் நூலின் ஃபிரெஞ்சு பதிப்பிலிருந்து வியட்நமீய மொழியில் மூலதனம் நூல் மொழிபெயர்க்கப்பட்டது.

2. இந்தோனேசியா

மூலதனம் நூலின் பாஷா இந்தோனேசியா மொழிபெயர்ப்பு 2004-ல் வெளியிடப்பட்டது. அதை மொழிபெயர்த்தவர் ஓயே ஹாய் ஜோயன் (Oey Hay Djoen). அவர் 1960-களின் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்ட பிறகு பிற கம்யூனிஸ்டுகளுடன் புரு தீவில் சிறையிடப்பட்டிருந்தவர்.

மூலதனம் நூலின் முதல் பிரிவுகள் 1933-ல் இந்தோனேசிய மொழியில் பெயர்க்கப்பட்டிருந்தாலும், ஓயே ஹாய் ஜோயனின் மொழிபெயர்ப்புதான் முதல் முழுமையான மொழிபெயர்ப்பாகும்.

3. மலேசியா

மலேசியாவில் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மையாக சீனர்களைக் கொண்ட கட்சியாக இருந்தது. பெரும்பான்மை மலாய் மக்களின் ஆதரவை அது திரட்ட முடியவில்லை. கட்சியின் வெளியீடுகள் சீன மொழியிலேயே இருந்தன. எனவே, மலேசியாவில் யாராவது மூலதனம் நூலை வாசிக்க வேண்டுமானால் அது ஆங்கிலத்திலோ அல்லது சீன மொழியிலோதான் சாத்தியம். இந்நூல் மலேசிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படவே இல்லை.

4. தாய்லாந்து

தாய்லாந்தில் கம்யூனிஸ்ட் குழுக்கள் 1920-களில் இருந்தே செயல்பட்டாலும், 1999ஆம் ஆண்டு வரை மூலதனம் நூல் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதன் தாய் மொழிபெயர்ப்பு ஆங்கிலப் பதிப்பையும் சீன மொழிபெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது. அதை மொழிபெயர்த்தவர் மத்தி ஈம்வாரா (Matee Eamwara). அவர் மார்க்சியத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருக்கவில்லை. அவர் அதற்கு முன் அகராதிகள் எழுதுபவராக புகழ்பெற்றிருந்தார். மூலதனம் நூலின் முதல் தொகுதியையும் இரண்டாம் தொகுதியும் மத்தி ஈம்வாரா மொழிபெயர்த்தார். 2016இல் மூன்று தொகுதிகளையும் இணைத்த ஒரு சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வெளியானது. அதை மொழிபெயர்த்தவர் பூன்ஸ்சக் சங்க்ரவீ (BoonssakSangrawee).

5. மியான்மர்

மியான்மர் என்ற பர்மாவில், 1939இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. கொந்தளிப்பான அரசியல் போராட்டங்களைக் கடந்து வந்த மியான்மரில் இப்போது மார்க்சியப் படைப்புகள் கிடைத்தாலும், மார்க்சின் மூலதனம் நூல் பர்மிய மொழியில் மொழிபெயர்க்கப்படவே இல்லை.

தொகுப்பாக,

மூலதனம் நூல் வெளியான 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1872இல் ரசிய மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது; அங்கு 1917இல் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்தேறியது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 1938இல் மூலதனம் நூலின் சீன மொழிபெயர்ப்பு வெளியானது; 1949இல் அங்கு பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையிலான புரட்சி நடந்தது. வியட்நாமில் பிரான்சுக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் எதிரான தேச விடுதலைப் போராட்டத்தின் மத்தியில் 1960இல் மூலதனம் நூல் வியட்நமீய மொழிக்கு பெயர்க்கப்பட்டது.

மூலதனம் நூலின் முதல் தொகுதி வெளியாகி கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய மொழிகளிலும் மற்ற தென்கிழக்காசிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மார்க்சியத்தைக் கற்பதற்கான ஆதார நூலாக மூலதனம் நூலாக உள்ளது. புரட்சிகர இயக்கத்துக்கு தத்துவ வலிமையையும் நடைமுறை உந்துதலையும் அது வழங்குகிறது.

மார்க்சியம் ஓர் அறிவியலாக தொழிலாளர்கள் மத்தியிலும் வெகுமக்கள் மத்தியிலும் பரவுவதற்கு மூலதனம் நூல் உள்ளூர் மொழியில் கிடைப்பது முதன்மை பாத்திரம் ஆற்றுகிறது. அந்நூல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.

நூல் குறிப்புகள்

1. மார்க்ஸ், கார்ல். மூலதனம், முதல் தொகுதி, மொழிபெயர்ப்பாளர்: தியாகு; பதிப்பாளர்: ரா கிருஷ்ணய்யா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், ஏப்ரல் 2003.

2. Chakroborty, Achin et al (ed), Capital in the East, - Reflections on Marx, Springer 2019 (சக்ரபோர்த்தி, அசின் முதலானோர் (தொகுப்பு). கிழக்கில் ‘மூலதனம்’ - மார்க்ஸ் பற்றி சில சிந்தனைகள், ஸ்பிரிங்கர், 2019).

3. Resis, Albert. Das Capital Comes to Russia, Slavic Review, Volume 29, Issue 2, June 1970. pp 219-237. Published online by Cambridge University Press, 2017.. (ரெசிஸ், ஆல்பர்ட். "மூலதனம் நூல் ரசியாவுக்கு வருகிறது", ஸ்லாவிக் ரிவியூ, தொகுதி 29, இதழ் 2, ஜூன் 1970. பக் 219-237. கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ் இணையத்தில் முதலில் வெளியிட்டது, 2017).

4. Guo, Qianshen, Wang Yanan and the Complex of DAS Kapital, Frontiers in Business, Economics and Management, Vol. 3, No. 3, 2022 (குவோ, சியன்ஷென். வாங் யான்ஆன் - மூலதனம் நூலின் சிக்கல்கள், ஃபிரான்டியர்ஸ் இன் பிசினஸ், எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், தொகுதி 3, எண் 3, 2022)

5. Engels, Frederick. How Not to Translate Marx, Marx & Engels Collected Works, Volume 26, Lawrence & Wishart, 2010, pp. 335-340. (எங்கெல்ஸ், பிரடெரிக். மார்க்சை எவ்வாறு மொழிபெயர்க்கக் கூடாது, மார்க்ஸ் & எங்கெல்ஸ் தொகுதி நூல்கள், தொகுதி 26, லாரன்ஸ் & விஷார்ட், 2010, பக். 335-340).

6. Musto, Marcello. When Marx Translated Capital, Jacobin Magazine, September 2022. (முஸ்டோ, மார்சலோ. மார்க்ஸ் மூலதனம் நூலை மொழிபெயர்த்தபோது, ஜாக்கோபின் மேகசின், செப்டம்பர் 2022).

7. Jayanth, A.S. At 150, the deep imprint of Das Kapital on Kerala, The Hindu, September 13, 2017 (ஜயந்த், ஏ.எஸ். 150ஆம் ஆண்டில், கேரளாவில் மூலதனம் நூலின் ஆழமான தாக்கம், தி ஹிந்து, செப்டம்பர் 17, 2017).

8. Bharti, Vishav. 200 yrs of Karl Marx: ‘Capital’ lost in Punjabi translation, Tribune News Services, May 10, 2018 (பார்த்தி, விஷவ். கார்ல் மார்க்சின் 200 ஆண்டுகள்: ‘மூலதனம்' பஞ்சாபி மொழிபெயர்ப்பில் தொலைந்தது, டிரிபியூன் நியூஸ் சர்வீசஸ், மே 10, 2018).

9. UNI. Das Kapital Translated into Tamil, Rediff on the Net, May 2, 1998 (யூஎன்ஐ. மூலதனம் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது, ரீடிஃப் இணையம், மே 2, 1998).

10. Mohanty, Pradip. Oriya Version of Capital, Vol 1, Comes out, People's Democracy, Vol XXXIV, No.40, October 03, 2010 (மொகந்தி, பிரதீப். மூலதனம் தொகுதி 1இன் ஒரியா பதிப்பு வெளியாகிறது, பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தொகுதி 34, எண் 40, அக்டோபர் 03, 2010), .

11. Correspondent. Second volume of “Das Kapital” released in Oriya, The Hindu, May 7, 2011 (செய்தியாளர். "மூலதனம்" இரண்டாம் தொகுதி ஒரியாவில் வெளியிடப்பட்டது, தி ஹிந்து, மே 7, 2011.).

12. Vasantha Raja, N.K. Story of 'Capital' in Kannada (வசந்த ராஜா, என்.கே. கன்னடத்தில் "மூலதனம்" நூலின் வரலாறு).

13. Kotesh, Devulapalli. Reception and Dissemination of Marx's Capital in Telugu: Language Politics and the Communist Movement. (கோடேஷ், தேவுலபள்ளி. தெலுங்கு மொழியில் மார்க்சின் மூலதனம் நூலுக்கு வரவேற்பு - அதன் பரவல்: மொழி அரசியல் - கம்யூனிஸ்ட் இயக்கம்).

- மா.சிவகுமார், மார்க்சிய மாணவர், மூலதனம் வாசிப்பு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்.