மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் தெய்வங்களாகப் பார்க்கப் படுகின்ற கொரோனா காலம் இது. முதல் மூவருக்கும் எப்போதுமே சமூக அந்தஸ்த்து உண்டு. ஆனால் தூய்மைப் பணியாளர்கள் பற்றிய நம் பார்வை இப்படியே தொடருமா என்பது கேள்விக் குறியே! தூய்மைப் பணியாளர்கள் “கடவுளாக கருதப்படுகின்ற” (?!) இந்த கொரோனா காலத்தில், கழிசடை (2003) நாவல் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியதொன்றாகிறது.
மலத்தோடு, சாக்கடைக் குழிகளோடு, குப்பையோடு குடும்பம் குடும்பமாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது ஓர் இனம். இவர்களைப் பற்றி, அனுமந்தய்யா எனும் துப்புரவு தொழிலாளர் பார்வையில் ‘கழிசடை’ நாவலை அறிவழகன் படைத்திருக்கின்றார். ‘கழிசடை’ என்றால் “மிகக் கேவலமானவன்” “ஈனப்பிறவி” என்று பொருள் வழங்கப்படுகிறது. இவ்வாறு ‘கழிசடைகளாகவும், “ஈனப்பிறவி”களாகவும் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி இந்நாவல் அழுத்தமாக எடுத்துக் கூறுகிறது.
பெயர்களின் அரசியல்
“தீண்டாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றம். அவர்களின் பெயர்கள் இகழ்ச்சியைக் குறிப்பனவாக இருக்க வேண்டும் என்பது தீண்டத்தக்கவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு தரும் 15 விதிகளில் ஒன்று” என்று “இந்தியசேரி-தீண்டாமையின் மையம்” கட்டுரையில் குறிப்பிடுகின்றார் அம்பேத்கர். ‘கழிசடை’ நாவலின் கதாநாயகன் “அனுமந்தய்யா” (குரங்கு முகத்தோன்). நகராட்சி துப்புரவு பணியில் சேரும்போது இந்தப் பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவரது இயற்பெயர் ராசப்பன் (அரசரின் தந்தை).
நரகல் எடுக்க, தெரு கூட்ட, குப்பை அள்ள சேரியிலிருந்து ஏஜெண்டுகள் ஆட்களை முனிசிபாலிட்டி இன்ஸ்பெக்டரிடம் அழைத்து வருவது வழக்கம். அப்படி வந்தவர்களின் பெயரை பதிவு செய்கின்ற காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது:
“ஒன்னோட பேரு இன்னாடா? “சின்னசாமி, சாமி” “இனிமே ஒம் பேரு சின்னசாமில்லாம் இல்ல, சின்ன பையன்..” “சரிங்க சாமி... கூலி கொடுக்கற நீங்க எப்படி கூப்பிட்டாலும் நான் இன்னாசாமி சொல்ல போறேன்ங்!”
அடுத்தவரிடம் “பேர சொல்லு” “பாலைய்யா சாமி” “பெரிய தொர பாரு... உன்னல்லாங் நானு அய்யான்னு கூப்பிடனும்னுங் இல்ல!..” “இனிமே ஒம்பேரு பாலைய்யா இல்ல.. பாலிகாடு.. சரிதானங்!!” இப்படித்தான்... பாலய்யா பாலிகாடு என்றும், பெஞ்சிலைய்யா பெஞ்சிலிகாடு என்றும், ரோசய்யா ரோசிகாடு என்றும் பெயர் மாற்றப்பட்டார்கள்.
“இன்று நாற்பத்தி அய்ந்தாவது சுதந்திர தினம்” என்று தொடங்குகின்ற நாவல், ‘சுதந்திர’ நாட்டின் அடிமைகளாய் இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் சுதந்திரமாக பெயர் வைக்கக் கூட முடியாத அவல நிலையை சித்தரிக்கின்றது.
கழிவறை கழுவுதல்
“பீங்கான் மலம் நிரம்பி, மேல்புறம் காய்ந்து இருந்தது. கால் வைக்கிற இடமெல்லாம் கூட காய்ந்தும் காயாமலுமாக மலம்... அவன் கால்பட்டு நசநசவென்று இருந்தது. உள்ளே வந்து நிற்கப் பொறுக்காமல் வழிப்போக்கர்கள் வெளியில் சற்று தூரத்திலிருந்த படியே மூத்திரம் பெய்ததால் தரையெல்லாம் தேக்கம் கண்டு நாத்தம் மூக்கை அடைத்தது... சுவரின் கீழ்பகுதி மஞ்சள் கறையும், செம்மண் கறையுமாக அழுக்கேறி நிறம் மாறியிருந்தது.
வெற்றிலை பாக்கு எச்சிலும், பீடித் துண்டுகளும்... சிகரெட் காகிதங்களுமாக... குப்பைகள் சிதறிக் கிடந்தன. மலத்தை விடவும் மூத்திர நாத்தம்தான் பொறுக்க முடியாததாய் இருந்தது..” வாசிக்கும் போதே வாந்தியெடுக்கச் செய்யும் எதார்த்தமான வரிகள்!
“பொதுக் கழிப்பிடத்தில் ஒண்ணுக்குப்போனா கூட பால் நோயி வர்றத்துக்கு வாய்ப்பிருக்குதுன்னு பக்கம் பக்கமா பத்திரிக்கையிலெல்லாம் எழுதுறாங்க... பால்நோயிதான்னு இல்ல... படை, காச நோய்... இன்னங் என்னென்னவோ… புதுசா எயிட்ஸாங்.. சுத்தங் இல்லாத இடத்துனால இம்மாங்; வருதுன்னா அதலயே ஒடம்ப முக்கி வேலை செய்யறவங்களுக்கு சாவு தாங் வரும்...” என்று அனுமந்தய்யா புலம்புவதாக அறிவழகன் பொதுக் கழிப்பிடங்களின் நிலையையும், அதை சுத்தம் செய்கின்ற துப்புரவு பணியாளர்களின் நிலையையும் சரியாகப் பதிவு செய்கின்றார்.
“சூத்த கழுவவே சோம்பலா இருக்கிற நம்ப ஜெனங்களா போன இடத்துல தண்ணி ஊத்தப் போறாங்க... தண்ணி ஓட்டம் அதிகமா இருந்தா கழியற மலம் நல்லா கரைஞ்சி ஓடும். தண்ணியில்லைன்னா கட்டி கட்டியா குழாயில மாட்டிக்கினு மண்ணு கணக்கா அடைச்சுக்கிறதாலத்தாங் இந்த அடைப்பெல்லாம்” என்று சுத்தமின்மைக்கு காரணமும் சொல்லப்படுகிறது!
மலம் அள்ளுதல்
இத்தகைய மோசமான நிலையிலிருக்கும் பொதுக் கழிவறைகளைக் கூட சிறிது நேரத்தில் கழுவி சுத்தம் செய்துவிடலாம். ஆனால் “எடுப்பு கக்கூஸ்” என அழைக்கப்படும் வீடுகளில் இருக்கும் கழிவறைகளை ஒவ்வொன்றாக சுத்தம் செய்வது மிகவும் கொடுமையான விஷயம்! “மனுசங் மலத்த மனுசன வாரச் சொல்லறது.. பாவத்துலயுங் பெரிய பாவங் இல்லியா?” என அனுமந்தய்யாவின் மகன் சீனய்யா கேட்கும் போது, “வயித்துப் பொழப்புக்குன்னு வந்ததுக்கப்புறங்... இதெல்லாங் பாத்தா ஆவுமா? போவப் போவ சரியா பூடும்…” என அனுமந்தய்யாவின் மனைவி கொண்டம்மா ஆறுதல் கூறுகிறாள்.
“...கால்களை வைத்து உட்காரும் படியாக மேடையுடன் கூடிய சிறிய கழிப்பறை ஒன்றை கட்டியிருப்பார்கள். அதில் இரும்புத் தகடால் ‘ப’ வடிவிலான டப்பா வைக்கப்பட்டிருக்கும். அதில் வீட்டினுள்ளோரின் கழிக்கப்பட்ட மலம் மற்றும் கால் கழுவிய நீர்; நிறைந்து இருக்கும். அனுமந்தய்யா டப்பாவில் நிறைந்திருந்த மல நீரை எடுத்து வாளியில் ஊற்றி விட்டு அதனைக் கழுவி சுத்தம் செய்ய காத்திருந்தான்...”
மல டப்பாவையும், மல தரையையும் குனிந்து கழுவிய அனுமந்தய்யாவின் முகத்திலும் உடம்பிலும் நீர்; தெறித்து படிந்த போது முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் வேலையில் கவனமாயிருந்தான்.
“டேய்.. பழைய சோறு போடறேன்... தின்றயா?” அனுமந்தய்யாவுக்கு ஆசைதான். ஆனால்.. மறுபடியும் காய்ச்சல் கண்டு படுத்த படுக்கயா ஆக்கிடுச்சுன்னா..
“வேனாங் தாயி..!
“இப்பல்லாங்; நீங்க பழயத தின்னுவிங்களா? இட்லி தோசன்னு தின்னு சொகங் கண்டுட்டீங்கயில்ல...”
மரண அவஸ்தைப்பட்டு கழிவறையைச் சுத்தம் செய்தபோதிலும் ஆதிக்க சமூகம் இவர்களை நடத்தும் விதம் இதுதான்!
“இப்படி ஒவ்வொரு வீடாய் இரண்டு தெருக்கள். இருநூறு வீடுகளுக்கும் குறையாமல் சுத்தம் செய்ய வேண்டும். சில வீடுகளில் ஆளிருக்க மாட்டார்கள். சில வீடுகளில் நெடுநேரம் காத்திருக்க வேண்டும். கட்டி கட்டியா இருந்தா... அள்ளிப் போட்றது சுலபம். பெரும்பாலான வீட்ல கழிச்ச கண்டு தெரிச்சாப்பல… சிதறிக் கெடக்கும், வாரி எடுக்க முடியாது. தண்ணிய ஊத்தச் சொல்லி கழுவித் தள்ளதாங் முடியும். பொதுவா வயித்துல காச நோயி கண்டவங்க, மஞ்சகாமல உள்ளவங்க, வாந்தி பேதி, சீத பேதி, டைபாயிடுன்னு அவஸ்தபடறவங்க போறதெல்லாங் அள்ளி போட்றாப்பல இருக்காது”
என துப்புரவு தொழிலாளியின் உள்ளக் குகையில் உட்கார்ந்துகொண்டு மிகச் சரியாக, மிக விரிவாக அறிவழகன் துப்புரவு தொழிலின் அகல ஆழ பரிமாணங்களைப் பதிவு செய்கிறார்.
மலத்தொட்டி கழுவுதல்
மலத்தொட்டி கழுவுவதும் இவர்களின் வேலை. பேருந்து நிலையத்தில் இருக்கின்ற பெரிய மலத்தொட்டி பற்றிய விவரிப்பும் அதைக் கழுவுகிற விதமும் கீழ்வருமாறு:
“ஒவ்வொரு தொட்டிக் குள்ளாறயும் தடுப்புச் சுவரெல்லாம் மூணு பிரிவா பிரிச்சு கட்டியிருப்பாங்க. வெளிக்குக் போற இடத்துலர்ந்து வர மலமும் தண்ணியும் முதல் தொட்டிக்குள்ளாற வுழுந்து அடிவழியா ரெண்டாவது அறைக்குள்ளாற போயி தேங்கும். அடியில படியிற மலம் நாளாக நாளாக மக்கி கசரு மண்ணா மாறிடும்.
தண்ணி மட்டும் மேல நெரம்பி மூணாவது தொட்டிக்குள்ளாற வுழும். மலம் மக்க மக்க அளவு ரொம்ப கொறஞ்சுடும். பெனாயிலோ, பிளீச்சிங் பவுடரோ அதல கலந்துட்டா மக்கறதுக்கு பதிலா நாத்தத்த கௌப்பிவுட்டுரும்…
இந்த காலத்துல இருக்கறாப்பல அழுக்குத் தண்ணிய கொண்டு போயி ஊத்தறதுக்கு அப்பெல்லாங் லாரி கிடையாது. லாரியில கயித்தக் கட்டி தண்ணி யெல்லாத்தையும் சேந்தி சேந்தி வெளிய ஊத்தணும். அதுக்கப்பறமா உள்ள எறங்கி கசடு மண்ணு எல்லாத்தையும் வாரி வெளிய கொட்டணும்...”
தெருநாய் பிடித்தல், செத்தநாய் அகற்றுதல்
நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்குத்தான் தெருநாய் பிடிக்கிற வேலையும். அப்படி நாய் பிடிக்கிறபோது நாய் கடித்துவிட்டால் “தொப்புல சுத்தி பதினாறு ஊசி போடனும்... உண்டானப் பட்டவங்க ஜஸ் ஒத்தடங் கொடுப்பாங்க. இல்லாதவங்க இன்ன பண்றது? சுடுதண்ணி ஒத்தடங்லாங்; இதுக்கு ஆவாது!”
“கழுத்துபட்டையில்லாத நாய்கள புடிக்கணும்ணுதான் உத்தரவு... அப்படிதாங் ஒரு தபா, தெருவுல திரிஞ்சுக்கிணு இருந்த ஒரு நாய புடுச்சு மத்த நாய்களோட நாயா போட்டுக் கொன்னாச்சு. பின்னால தாங் தெரிஞ்சது அது …யாரு நாயின்னு... நாய் செத்து போச்சுன்னு கேட்டாரோ இல்லையோ... முனிசிபாலிட்டி ஆளுங்கன்னு கூடப் பார்க்காம நாய அடிக்கிறா பல வெரட்டி வெரட்டி அடிச்சாரு. ஒரு நாய்க்காவ மனுசன போட்டு ஏண்டா இப்படி அடிக்கிறீங்கன்னு ஒருத்தன் கேக்கல... வேடிக்கதாங் பார்த்தாங்க.”
தெருவில் நாய் செத்துக் கிடந்தாலும் அகற்றுவது இவர்கள் வேலை. “அனுமந்தய்யா நாய்க்குப் பக்கத்திலேயே முழங்கால் ஆழத்திற்கு பள்ளம் போட்டான்.. நாயை மண்வெட்டியாலேயே புரட்டித்தள்ளி குழியை மூடினான். பிறகு சாக்கடை நீரிலேயே தெளிந்த நீராய் அள்ளி முகத்தையும் கை, கால்களையும் கழுவிக்கொண்டு... போனான்.” என்ன கொடுமை இது!
அனாதை பிணங்களை அகற்றுவதும் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை தான்! காவலர்கள் இவர்களைத் தான் அழைப்பார்கள். பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்கிறவரை இவர்கள் பொறுப்பு. “நாய் செத்தாலும், மனுசஞ் செத்தாலும் எடுத்துப் போட குப்பை அள்ளற முனிசிபாலிட்டி காரனுங்க தாங் இருக்கவே இருக்கறானுவ... அப்பறங் இன்னாத்துக்கு செலவு பண்ணனும்?” “போலிஸ்காரன நம்பவே முடியாது. அஞ்சுபைசா கூடங் செலவு பண்ணாம அனாத பொணத்த பொதைக்கச் சொல்லி எந்த சட்டத்துல இருக்கும்? இவுனுவளா?... கல்லுளி மங்கனுங்களாச்சே! அதயுங் இவுனுவளே எடுத்துக்;குனு நம்பளவுட்டு எடுத்துப்போட சொல்லிட்டு செலவு செஞ்சதா கணக்குல எழுதி தொப்பையில போட்டுக்க மாட்டானுங்களா...”
வாந்தி பேதி வந்தவுங்களை அப்புறப்படுத்துவதும் இவர்கள் வேலைதான்! “வாந்தி பேதின்னு வர்றவங்களுக்கு வந்திருக்கிறது காலரா தானான்னு கண்டுபிடிக்க பஞ்சு சுத்துன குச்சியை சூத்துக்குள்ளாறவுட்டு மலத்த யெடுத்துக் கொடுக்கச் சொல்லுவாங்க. கழியிற கழிச்சல வாரி எடுத்துக்கிணு போயி பெனாயிலு, பிளீச்சிங் பவுடர் தண்ணியில தொவிச்சு எடுத்து காய போடணும்..”
குடிநோய்
வாழ்நாள் முழுவதும் எப்படி நரகலோடு இவர்களால் வாழ முடிகிறது? போதையின் துணை தேவைப்படுகிறது. அனுமந்தய்யா எப்படி போதைக்கு அடிமையானார் என்பது நாவலில் விரிவாக வருகிறது. “...எனக்கு மட்டுங் குடிக்கணுன்னா ஆச? இந்த சனியன விட்டுப் புடலான்னுதாங்... எம்மாங் வைராக்கியமா இருந்தா கூடங்... அந்த நெனப்பு வந்துட்டா பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுது.” என்று புலம்புகிறார் அனுமந்தய்யா. இறுதியில் காசநோய் கண்டு உடம்பு மிகவும் மோசமாகிறது தனக்குப் பதிலாக தன் மகன் சீனய்யாவுக்கு இதே வேலையை பழக்குகிறார்... அவன் சாக்கடை கிணறு தூய்மை செய்யும் போது, தீ விபத்தில் இறப்பதாக கதை முடிகிறது!
இறுதியாக…
“இந்த தூய்மைப் பணியாளர்களைப் பார்க்கின்றபோது, இவர்களை வணங்க நம் கரங்கள் உயரவேண்டும்…ஆனால் நாம் அவர்களை ஏளனமாகப் பார்க்கிறோம்” என்கிறார் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குரூஸ். “கழிசடை நாவலைப் படித்து முடித்ததும் மனது தாங்க முடியாமல் இருந்தது. இந்நூலுக்கு ‘மனிதர்கள்’ எனத் தலைப்பிட்டிருக்க வேண்டும். இந்த நகர சமுதாயத்தில் வாழும் மற்றவர்கள் - நாம் உள்பட - கழிசடைகள் என்றால் பொருத்தமாயிருக்கும்” என மிகச்சரியாக எழுதுகிறார் ராஜம் கிருஷ்ணன்.
உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் மனிதர் கழிவை மனிதரே அகற்றும் மாபெரும் அவலம்! இன்றும் கூடச் சுமார் 13 லட்சம் துப்புரவு தொழிலாளிகள் கைகளால் மலம் அள்ளும் வேலை பார்க்கிறார்கள். இவர்களை இந்த நரகத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கும்’ இந்திய சமூகமே ‘கழிசடை’! இந்த கொரோனா காலங்களில் முன்களப்பணியாளர்களாக, தங்கள் உயிரை துச்சமென கருதி உழைப்போர் தூய்மைப் பணியாளர்கள். இவர்களைப் பற்றிய நமது பொதுப்புத்தியைத் தூய்மைப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது!!
(முனைவர் சி.பேசில் சேவியர் மதுரை கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர், அருந்ததியரின் இனத்தத்துவஇயல் எனும் ஆங்கில நூலின் ஆசிரியர்) (இதன் மிகச்சுருக்கப்பட்ட வடிவம் தமிழ் இந்து நாளிதழில் 03-10-2020 அன்று வெளியிடப்பட்டது) (இக்கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க butitis.com)
-சி.பேசில் சேவியர்