ullasa thirumanamஅண்மையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரெஞ்சுப் பேராசிரியர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். 1.உல்லாசத் திருமணம். பிரெஞ்சு நாவல்(2016) மூல ஆசிரியர் தஹர் பென் ஜெலூன்(மொராக்கோ), 2.ஆன்டன் செக்காவ் ஆகச் சிறந்த கதைகள், தமிழில் 3.வாழ்வு இறப்பு வாழ்வு லூயி பஸ்தேர் (1822-1895) வாழ்க்கை வரலாறு. இவை மூன்றையும் தடாகம் பதிப்பகம் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளது.

மனதை உருக்கும் மூன்று தலைமுறைக் கதையைச் சொல்லும் உல்லாசத் திருமணம் நாவலை பிரெஞ்சில் எழுதிய தஹர் பென் ஜெலூன் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பிரெஞ்சில் எழுதும் மொராக்கோ எழுத்தாளர். அவரைப்பற்றி மொழிபெயர்ப்பு ஆசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அறிமுகப்படுத்துவதைப் பார்ப்போம்.

‘வட ஆப்பிரிக்க பின்காலனித்துவ எழுத்தாளர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் ஜெலூன் தாய்மொழியான அரேபிய மொழியில் எழுதாமல் பிரெஞ்சு மொழியிலேயே தன் இலக்கியப் படைப்புகளான புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் அனைத்தையும் எழுதி வருகிறார். இலக்கியத்தின் மூலம் இனவேற்றுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

2016 இல் வெளியான உல்லாசத் திருமணம் எனும் இப்புதினத்திலும் இது எதிரொலிப்பதை உணரலாம்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனாலேயே ஜெலூன், பிரெஞ்சு மொழியினைத் தாய்மொழியாய்க் கொள்ளாத எழுத்தாளர்கனின் படைப்புகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களுக்குரியவர் என்ற பெருமை பெற்றவராகிறார்.

சமூகத்தில் மனித இனம் எதிர்கொள்ளும் சிக்கல்களை வாசகர்களுக்கு நெருக்கமான மொழியில், நடையில் எடுத்துரைக்கும் உத்தியினைக் கொண்டவர் ஜெலூன்.

பல இலக்கியப் பரிசுகளைப் பெற்றுள்ள இவர் பெயர் நோபல் பரிசுத் தேர்வுப் பட்டியலிலும் உள்ளது. இவர் இப்போது பாரிசில் வாழ்ந்து வருகிறார்.

உல்லாசத் திருமணம் ஒரு மனதை உருக்கும் மூன்றுதலைமுறைக் கதை.

மொராக்கோவிலுள்ள ஃபேஸ் நகரத்தைச் சேர்ந்த வெள்ளை நிறமுள்ள அரபு வணிகனான அமீர் வணிக நிமித்தமாக செனகல் நாட்டிற்குச் செல்லும்போது அன்று வழக்கிலிருந்த உல்லாசத் திருமணம் என்ற தற்காலிகத் திருமண ஏற்பாட்டின்படி நபு என்ற அழகான கருப்பினப் பெண்ணுடன் சில காலம் வாழ்ந்துவிட்டுத் திரும்பும்போது அவள் மீது உள்ள காதலால் தன் நாட்டிற்கு அழைத்துவந்து தன் வெள்ளை அரபு முதல் மனைவி லாலா ஃபாத்மாவின் எதிர்ப்பையும் மீறி இசுலாமிய முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். அமீருக்கும் நபுவுக்கும் வெள்ளைநிறத்திலும் கருப்பு நிறத்திலும் ஹூசேன் ஹசன் என்ற இரு மகன்கள் பிறக்கின்றனர். பின்பு அமீரின் முதல் மனைவி லாலா ஃபாத்மாவும் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். அதன் பின் அமீர் குடும்பத்தின் பல்வேறு நிறவெறித் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்ட அவன் இரண்டாம் கருப்பின மனைவி நபு தன் கருப்பு மகன் ஹசனுக்குப் பிறந்த பேரன் சலீம், ஐரோப்பாவிற்குக் குடிபெயரும் முயற்சியில் எல்லை தாண்டும்போது குண்டடிபட்டுச் சாவதையும், மகன் ஹசன் பைத்தியமாவதையும் கண்டு நிற்பதோடு கதை முடிகிறது. இக்கதைகளுக்குச் சாட்சி போல இக்கதையில் தொடர்ந்து வருபவன் அமீருக்கு முதல் திருமணத்தில் பிறந்த வெள்ளை நிறத்திலுள்ள மனிதாபிமானியான மனவளர்ச்சி குறைந்த கரீம் என்ற பாத்திரம்.

உல்லாசத் திருமணம் என்ற ஏற்பாடு அரபு வணிகர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு வணிகம் காரணமாகச் சென்று தங்கியிருக்கிற காலத்தில் வைப்பாட்டிகள் போல் இன்பம் அனுபவிக்கத் தற்காலிகமாக வைத்துக் கொள்கிற ஒரு சுரண்டல் ஏற்பாடு. இதற்கு ஒப்பந்த ஆவணங்கள் உண்டு. இது ஒரு வகைப் பெண் அடிமை முறை. கேரளத்தில் நம்பூதிரி பிராமணர்கள் நாயர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளாமல் வைத்துக் கொண்டிருந்த சம்பந்தம் என்பது போல இது இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் இரண்டு முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் முடிவு சொல்லவேண்டும். நம் நாட்டுத் தன வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போனபோது இத்தகைய நடைமுறை இருந்தது. ஏன் நாம் ‘அன்பின் ஐந்திணை’ என்று மாய்ந்து மாய்ந்து கொண்டாடுகிற தமிழ் அகத்திணையில் காணப்படும் மருதம் என்ற திணையில் வரும் பரத்தையர் பண்பாடும் அதன் வழிப்பட்டுப் பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட கணிகையர் முறையும் இந்த ஆண்மையைப் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுதான். இந்தக் கண்ட்ராவியை வெறுத்துப் பகுத்தறிவுப் பகலவன் வள்ளுவர் தான் பாடிய இன்பத்துப் பாலில் இந்த மருதக் காட்டுமிராண்டித்தனத்தைப் பாடாமல் விட்டுவிட்டார் என்பது அவர் பெண்ணுரிமைக்கு ஆற்றிய பெரும்பங்கு எனக் கொண்டாடலாம்.

இந்த நாவலை அராபிய ஆயிரத்தொரு இரவுக் கதைகளில் வருவதைப் போல கோஹா ஒரு கதை சொல்லி சொல்லுவது போல அமைத்துள்ளார்.இந்த நாவலில் வெள்ளை நிறத்தில் பிறந்த அராபிய முசுலீம்களும் ஐரோப்பிய வெள்ளை நிறத்தவரும் கருப்பு நிறத்தில் பிறந்த ஆப்பிரிக்க கருப்பினத்தவரை விலங்கு போல எந்தவித மனிதாபிமானமும் கூச்ச நாச்சமும் இன்றி நடத்துவதை அப்பட்டமான கதைகளாக அமையும் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர் நம் முன் படைத்துக் காட்டுவது நம்மைப் பல வேளைகளிலும் அதிர்ச்சிக்கும் சொல்லொணா வருத்தத்திற்கும் உள்ளாக்குகிறது. இங்கு அருளாளர்களும் அறிவார்ந்தவர்களும் உருவாக்கிய மதம் எப்படி ஒரு பாசாங்காக முகமூடியாய் மாறுகிறது என்பதை நாவலாசிரியர் பல இடங்களில் கதைக்களங்கள் மூலம் விவரிக்கிறார்.

மனிதனுக்கு மேலுலகில் மோட்சத்தை முன்பதிவு செய்யும் மதங்கள் இவ்வுலக வாழ்வில் மனிதனின் ஈடேற்றத்திற்கும் மீட்சிக்கும் உதவாத மண்குதிரைகள் என்பதை இந்நாவலின் சாரமாகக் கொள்ளலாம். இந்த நாவலில் கருப்பின மக்கள் ஆளாகும் சொல்ல முடியாத இன்னல்கள் இழிவுகள் பல இடங்களில் தூக்கலாகச் சொல்லப்பட்டாலும் பெண்கள் குறிப்பாகக் கருப்பினப் பெண்கள் படும் அத்தகைய இழிவுகளும் இன்னல்களும் பூடகமாக முக்கியத்துவம் பெறுகின்றன என்று தோன்றுகிறது.மேலும் மனிதன் எங்கு எப்படி இருந்தாலும் அவனுக்குள் கடவுள் ஓரிருவராகவும் சாத்தான்கள் அரக்கர்கள் வகையறாக்கள் பலராகவும் இருப்பதை நாவல் கதைமாந்தர்கள் காட்டி நிற்கிறார்கள்.அநீதியைக் கண்டும் காணாது போகிற அமீர் அநீதியைத் தன்னளவில் தாங்கிக் கொள்ள முடியாத கரீம் போன்றவர்கள் கருத்துக்களும் குரல்களும் இளைத்தே ஒலிக்கின்றன. சுருக்கமாக நிறவெறி, பெண்ணடிமைத்தனம், பொருளாதாரச் சுரண்டல், மதங்களின் கபடம் இவையே இந்த நாவலின் பாவிகம் எனலாம்.

நாவலாசிரியர் பற்றிய குறிப்பும் மொழிபெயர்ப்பாசிரியர் பற்றிய குறிப்பும், நாவலில் இடம்பெறும் இடப்பெயர்கள் இசுலாமியக் கலைச் சொற்கள் முதலியவற்றின் அகராதியும் கதைமாந்தர்களிடையே உள்ள உறவுமுறை விளக்கம் பற்றிய கிளைப்படமும் வாசகர்களுக்குப் பயன்படும். கதை நிகழும் இடங்களின் நிலப்படம் ஒன்றை இணைத்திருக்கலாம்.

பேரா.பஞ்சாங்கம் அவர்கள் முன்னுரை நாவலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைகிறது.

நாம் அறியாத இன்னொரு மனித இனத்தின் இருளடைந்த ஏடுகளை அறிந்து கொள்ள இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ள வெங்கடசுப்புராய நாயகர் அவர்கள் பணியை எப்படி எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அவர் மொழிபெயர்ப்பு மொழி பெயர்ப்பு என்று தோன்றாதபடி பச்சைத் தமிழாகவே இருக்கிறது.மூலமொழியை அருமையான எளிய ஆழமான நடையில் ஆற்றொழுக்காக மரபு பிறழாமல் தமிழாக்கியிருக்கிறார். இதனால் தங்கு தடையின்றி நாம் வாசிக்க முடிகிறது. மொழி பெயர்ப்பு இனிமையானதாகவும் பெறுமொழியாளர்களாகிய தமிழர்களுக்கு நெருக்கமானதாகவும் கொணர்வதற்கு நாயகர் நன்கு உழைத்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கிற யாரும் உணர்வார்கள். நாயகர் அவர்கள் தாம் எதிர்கொண்ட மொழிபெயர்ப்புச் சிக்கல்கள், அதைத் தீர்க்கத் தாம் கையாண்ட மொழிபெயர்ப்பு உத்திகள் போன்றவற்றை ஒரு விரிவான கட்டுரையாக எழுதி வெளியிட்டால் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பற்றிய கையேடு ஒன்றை உருவாக்கவும் பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய கோட்பாடுகளை உருவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

கதையில் பாத்திரங்கள் செயல்கள் ஒருமையில் சொன்னான் சொன்னாள் என்பது போல மொழிபெயர்க்கப்பட்டது ஏன் என்று என்னைக் குடைந்த கேள்விக்கு விடை தேடியபோது மூலமொழியான பிரெஞ்சில் அப்படி அமைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று தோன்றியது.

பிரெஞ்சில் தமிழில் போல (ர்) மரியாதைப் பலர்பால் உண்டா என்று எனக்குத் தெரியாது. இல்லை என்று நாயகர் உரையாடும்போது தெரிவித்தார். ஆனால் கதை சொல்லி கோஹா பார்வையில் அப்படிச் சொல்லியிருப்பார் என்று தோன்றியது. அந்த நுட்பத்தை ஆசிரியர் எடுத்துரைப்பில் கொண்டு வந்துள்ளது பொருத்தமானது.

கீழே உள்ள நீண்ட வாக்கியத்தைப் பாருங்கள்.-

1.‘வட ஆப்பிரிக்க பின் காலனித்துவ எழுத்தாளர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் ஜெலூன், பிரஞ்சு மொழியினைத் தாய்மொழியாய்க் கொள்ளாத எழுத்தாளர்கனின் படைப்புகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரியவர்.’ பக்.1)

இந்த வாக்கியத்தைப் பிழை என்று சொல்லமுடியாது.திருவள்ளுவரை மொழிபெயர்த்தவர் என்ற வாக்கியத்தில் திருவள்ளுவர் என்பது அவர் இயற்றிய திருக்குறளைச் சுட்டுவது போன்ற முதலாகுபெயர் வழக்கு இது.

ஆனால் இதுவே ‘வட ஆப்பிரிக்க பின்காலனித்துவ எழுத்தாளர்கள் வரிசையில் முன்னணியில் நிற்கும் ஜெலூன், பிரெஞ்சு மொழியினைத் தாய்மொழியாய்க் கொள்ளாத எழுத்தாளர்கனின் படைப்புகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களுக்குரியவர் என்ற பெருமை பெற்றவர்.’

என்றிருந்தால் கவர்பொருள் மயக்கம் ஏற்படாது.

இன்னும் சில எடுத்துக்காட்டுக்கள்-

2.(ஹூசேன்)இளம்வயதில் தன் சகோதரன் ஹசனுக்கு நேர் எதிராகப் பெண்களை வளைப்பவனாக வலம் வந்தான் (பக்.191).

என்ற வாக்கியம் கீழ்க்கண்டவாறெல்லாம் அமையலாம்.

(ஹூசேன்)இளம்வயதில் தன் சகோதரன் ஹசனுக்கு நேர்மாறாகப் பெண்களை வளைப்பவனாக வலம் வந்தான்

இது ‘(ஹூசேன்)இளம்வயதில் தன் சகோதரன் ஹசனிலிருந்து மாறுபட்டவனாய்ப் பெண்களை வளைப்பவனாக வலம் வந்தான்

(ஹூசேன்)இளம்வயதில் தன் சகோதரன் ஹசனைப் போல் அல்லாமல் பெண்களை வளைப்பவனாக (வளைக்கிற கில்லாடியாக) வலம் வந்தான்

3.‘உலகம் அழியப்போவது நிச்சயம். 1.தீய பழக்கங்களை விட்டுவிட்டு, எக்காலத்துக்குமான இறைத்தூதர் கற்றுத் தந்த தேவையான விழுமியங்களைக் கடைப்பிடித்து நல்வழிக்குத் திரும்ப வேண்டியது அவசியம்’ என்று கூறினான். 2.தீமையினால் ஆக்கிரமிக்கப்பட்ட உடலினையும், மனதையும் கொண்ட தீய சமயப் பற்றாளர்களுக்கு உதவ முன்வருபவர் அவர் ஒருவரே என்றும் கத்தினான். பக். 193

தீய பழக்கங்களை விட்டுவிட்டு, இறைத்தூதர் கற்றுத்தந்த எக்காலத்துக்கும் தேவையான விழுமியங்களை என்று தொடர் இடம் மாறி அமையின் நலம்.

தீமை நிறைந்த உடலினையும்,மனதையும் உடைய தீய சமயப் பற்றாளர்களுக்கு அவர்கள் அதிலிருந்து மீளவதற்கு உதவ முன்வருபவர் அவர் ஒருவரே என்றும் கத்தினான். இங்கே அவர்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கு என்ற தொடர் சேர்ப்பின் பொருள் தெளிவுபடும்.

செடிக்குத் தண்ணீர் என்றால் குகரம் ‘வளர்ச்சி உண்டாதல் பொருட்டு’ என்று பொருள் தரும். நோய்க்கு மருந்து என்றால் குகரம் ‘நீங்குதல் பொருட்டு’ என்று பொருள் தரும். ‘பித்தத்திற்கு இஞ்சி’ என்பதும் இப்படியே. இவ் வேறுபாடு நமக்குத் தெரிந்தாலும் சிலவேளை இது தெளிவாகாததால் பொருட்குழப்பம் ஏற்படும்.

அறத்திற்கே அன்புசார்பு என்பர் அறிவிலார்

மறத்திற்கும் அஃதே துணை (குறள்.76)

என்ற குறளிலும் இது போன்ற இரண்டு ஆட்சிகளைப் பார்க்கலாம். அறத்திற்குச் சார்பு என்பது அறத்தை ஆக்குதற்குத் துணை என்று பொருள்படும். மறத்திற்குத் துணை என்றால் மறத்தை நீக்குதற்குத் துணை என்று பொருள். நான்காம் வேற்றுமைக் குகர உருபின் நுட்பமான பொருள்வேறுபாட்டை உணர்ந்து‘ ‘மறத்தை நீக்குதற்கு’ என்று பரிமேலழகர் பொருள் கொள்வதைப் போல் பொருள் கொள்ள வேண்டும். அப்படிக் கொள்ளாமல் ‘மறத்தை ஆக்குதற்கும் அறம் துணை செய்யும்’ என்று பொருள் எழுதுவது பிறழ் பொருள் ஆகிவிடும். இங்கும் அப்படிப் பிறழ் பொருள் கொள்ளும்படி மயக்கம் தருகிறது. அந்த மயக்கத்தை நீக்கும்படி மொழி பெயர்ப்பு இருக்க வேண்டும்.

4.இத்தகைய மிதமிஞ்சிய இனவெறியும், அடக்கு முறையும் ஆப்பிரிக்கர்களை விட அரேபியர்கள் மேல் நிலையில் உள்ளவர்கள் என்று கூறப்படும் காலனிய மனோபாவத்தால் நியாயப்படுத்தப்பட்டன (பக்.200) என்ற பகுதியில் காரணத் தொடர்(1) முன்பும் செயப்பாட்டு வினை எழுவாய்த்தொடர் (2) தொடர்ந்தும் அமைந்தால் நன்றாக இருக்கும்.இங்குக் கூறப்படும் என்னும் செயப்பாட்டுத் தொடர் கருதும் என்று செய்வினையாக அமைக்கலாம்.

1.ஆப்பிரிக்கர்களை விட அரேபியர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் காலனிய மனோபாவத்தால் 2.இத்தகைய மிதமிஞ்சிய இனவெறியும், அடக்கு முறையும் நியாயப்படுத்தப்பட்டன.

இப்பகுதியிலுள்ள முக்கியச் செயப்பாட்டுத் தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆப்பிரிக்கர்களை விட அரேபியர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதும் காலனிய மனோபாவம் இத்தகைய மிதமிஞ்சிய இனவெறியையும் அடக்கு முறையையும் நியாயப்படுத்திக் கொண்டன.

இன்னும் நாயகர் மொழிபெயர்த்துள்ள லூயி பஸ்தேர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலையும் படித்துக் கொண்டுள்ளேன். அதனையும் சுவையாக மொழியாக்கம் செய்துள்ளார் அவர். அது பற்றி எழுதினால் நீண்டுவிடும். பிறகு பார்க்கலாம்.

கடந்த முப்பது ஆண்டுகளாகப் புதுவையில் பிரெஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றும் பேரா.சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளுக்கிடையே ஆரவாரமின்றி மொழிபெயர்ப்புப் பணியிலும் இலக்கியப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நான்கு புதினங்களைப் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்துள்ளார். மேலும் பிரெஞ்சுச் சிறுகதைகளின் மொழியாக்கத் தொகுப்புகள் இரணடினையும் வெளியிட்டுள்ளார். தமிழிலிருந்து கதைகள், கவிதைகள் போன்றவற்றையும் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்துள்ளார். அவர் பணிகளில் குறிப்பிடத்தக்கது சங்க இலக்கியங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு இரண்டையும் முழுமையாகப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதாகும்.மேலும் இவர் இடையிடையே பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் அந்நாட்டுக்குச் சென்று தங்கிப் பல மொழிபெயர்ப்புப் பணிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார். கி.ரா.வும், பிரபஞ்சனும் இவருடைய பணிகளின் சிறப்பை உணர்ந்து பாராட்டிக் கொண்டாடுவார்கள்.

 தமிழ் பிரெஞ்சு பிரெஞ்சு தமிழ் ஆங்கிலம் என்று மூன்று நிலையிலும் ஆற்றி வரும் பணிகள் அரியவை.பெரியவை. அவற்றை நாம் படிக்கவேண்டும். போற்ற வேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறும் சிறப்பும். இந்த நூல்களைச் சிறப்பாக வெளியிட்டுள்ள தடாகம் பதிப்பகத்தாரையும் நாம் போற்ற வேண்டும். ஆதரிக்க வேண்டும்.

உல்லாசத் திருமணம் (தமிழில் விரியும் பிரெஞ்சு வழி / ஆப்பிரிக்க உலகம்) பிரெஞ்சு நாவல் (2016) / மூல ஆசிரியர்: தஹர் பென் ஜெலூன் (மொராக்கோ) / தமிழில்: சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர் / தடாகம் வெளியீடு, சென்னை 2020 / பக்.263, விலை 300

 - கி.நாச்சிமுத்து

Pin It