கேரளத்தில் ஓர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஒரு கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. அதில் கருத்துரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கேரளத்துக்குச் செல்வதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கண் குளிர பசுமையை ரசிக்கலாம், மாணவர்களுடன் கலந்துரையாடலாம். அவர்கள் விவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். என்னை அழைத்தது ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி. எனவே நான் உரையாடப் போவது எதிர்கால ஆசிரியர்களுடன் என்ற காரணத்தால் அதற்கு உடனே சம்மதம் தெரி­வித்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு “ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு இலட்சியங்களும் கல்வியும்” என்பதுதான். இது ஐ.நாவின் இலக்கு அதில் நம் நாடும் கையெழுத்திட்டு, அதை அடைய அத்தளத்தில் எப்படிப்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசாங்கங்கள் சிந்தித்து, உள்ளாட்சிகளை அதற்கு தயார் செய்ய முனைந்து வருகின்றன. இந்தச் செயல்பாடுகளில் கல்லூரி பல்கலைக் கழக மாணவர்களும், ஆசிரியர்களும் எப்படி தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம் என்பதை தெளிவாக விளக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி.

நான் எங்கு உரையாற்றச் சென்றாலும் என் உரையை கேட்பவர்களின் மனதுக்குள் சென்று ஒரு சிலரின் ஆன்மாவையாவது தொட்டு அவர்களை செயல்பட தயார் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் என் உரையைத் தயார் செய்வேன். இந்தக் கல்லூரி ஒரு பயிற்சிக் கல்லூரியாக இருப்பதால் அங்கு வருவோருக்கு ஒரு பயிற்சியாகவே இதைத் தந்திட வேண்டும் என்று நான் முனைந்தேன். பொதுவாக பயிற்சி என்றால் மனிதருக்குள்ளே பணி செய்ய ஒரு வெப்பத்தை உருவாக்குதல் என்றுதான் பொருள். பொதுவாக எல்லா மனிதருக்குள்ளும் ஒரு பேராற்றல் இருக்கும். அதை அவர்களே முயன்று, கண்டு, அதை வெளிக்கொணர செயல்படுவார்கள். இதை அனைவராலும் செய்ய இயலாது. பலருக்கு கல்வி அந்தப் பணியைச் செய்து மாமனிதர்களாக உருவாக்கும். இன்று நம் கல்வி அதற்கு நேர் எதிர் திசையில் பயணிக்கிறது. இருந்தபோதிலும் நாம் எதிர்நீச்சல் போட்டாவது அந்தப் பணியைச் செய்ய அதற்கான தயாரிப்புடன் அங்கு சென்றேன். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பல பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வந்த ஆசிரியைகள், ஆசிரியராகப் போகும் மாணவர்கள்.govt school 491அரங்கத்தில் இருந்த முன்னூறு பங்கேற்பாளர்களில் ஒரு ஐம்பதுபேர் மனதை உலுக்க முடிந்தால், அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று கருதி இந்த உரையை எவ்வளவு எளிதாக்க முடியுமோ அவ்வளவு எளிதாக்கினேன். என் வாழ்நாள் ஆசிரியப்பணியின் நோக்கமே எந்தத் தத்துவத்தையும், சிக்கலான கருத்தாக்கத்தையும் சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் எளிமைப்படுத்தி சாதாரண மனிதர்களுக்குத் தருவதுதான். அதுதான் இன்றுவரை பல இடங்களுக்கு பேசுவதற்கு என்னை அழைப்பதற்கான காரணம். எனவே இந்த ஐக்கியநாடுகள் சபையின் இலக்குகள் பற்றிய புரிதலை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும், அடுத்து அதை நம் கிராமங்களிலும், நகரங்களிலும் செயல்படுத்த நம் பங்களிப்பை எப்படிச் செய்ய முடியும் என விளக்கிட வேண்டும். அத்துடன் இதை நாம் ஏன் செய்திட வேண்டும் என்பதற்கு அவர்களின் மனதைத் தொடும் விளக்கத்தைத் தரவேண்டும். இந்தப் பணியை எவ்வளவு முறைமையுடன் செய்கின்றோமோ அந்த அளவுக்கு விளைவினைக் கொடுக்கும் என்பதனையும் உணர்வுடன் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் மாணவர்களின் முன் ஒரு எதார்த்தத்தை கொண்டு வந்து அவர்களை உணர்வுடன் சிந்திக்கத் தூண்ட வேண்டும். எதார்த்தங்களை அவர்களின் நெஞ்சுக்கு அருகில் கொண்டுவர வேண்டும். அதற்கு உலகச் சூழல், நாட்டுச் சூழல், உள்ளூர்ச் சூழல் இவைகளை படம்பிடித்துக் காட்ட வேண்டும். அவைகளை ஆதாரங்களுடன் காட்ட வேண்டும்.

ஐ.நா.வின் திட்டப்படி 2030க்குள் மானுடம் மேம்பட 17 இலக்குகளை நிர்ணயித்து 169 பணிகளை வடிவமைத்து ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற நாடுகளில் செயல்படுத்த முனைந்துள்ளது. இது மானுட மேம்பாட்டுக்கானது தான். எனவே இதை அனைத்து நாடுகளும் அதை ஆமோதித்து அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டு விட்டன. ஒவ்வொரு நாடும் அதனதன் முறைமையில் இந்த இலக்கினை அடைய முயல்கின்றது. இப்படித்தான் இந்தியாவும் முயல்கின்றது. இந்த இடத்தில் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றது. அந்த அரசாங்கங்கள் மக்களுக்காகத்தானே செயல்படுகின்றன. அப்படி இருக்கும்போது ஐக்கிய நாடுகள் சபை ஏன் ஒரு புதுத் திட்டத்தை உருவாக்கி அனைத்து நாடுகளையும் செயல்படுத்த வேண்டுகின்றது என்று கேட்கத் தோன்றும்.

இன்று உலக நாடுகள் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி அதுதான் வளர்ச்சி, அதுதான் மேம்பாடு என்ற சிந்தனையை உருவாக்கி, வலுவாக்கி போட்டியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த மானுடத்தின் நலம் பேணப்படவில்லை, மாறாக ஒரு சிறுபான்மைக் கூட்டம் எல்லா வளங்களையும் சுரண்டி சுகபோக வாழ்க்கையில் இருக்கிறது, பெரும்பான்மை மக்கள் குறைந்தபட்ச வசதிகளைக்கூட பெற இயலாமல் வாழ்க்கை நடத்தும் சூழல் என்பது நிதர்சனமான பின் உலக சமாதானத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படும் நிறுவனத்திற்கு ஓர் தார்மீகக் கடமை இருக்கிறது. ஆகையால் அது வலிந்து எல்லோருக்குமான மேம்பாடு பற்றி விவாதிக்கிறது, நாடுகளை செயல்படக் கேட்டுக்கொள்கிறது. உலக நாடுகளும் அதை ஏற்றுக் கொள்கின்றன. காரணம், உலகத்தில் ஆய்வு அறிக்கைகள் கொண்டுவரும் தரவுகள் மானுடத்தின் உண்மையை பிரதிபலிக்கின்றன. அந்த அறிக்கைகளை எவராலும் மறுக்கவும் இயலாது.

எனவே இந்தியாவும் மற்ற நாடுகளைப்போல் செயலாற்ற முயல்கிறது. அப்படி முயல்கிறபோது நாம் எப்படிச் சிந்திக்கின்றோம் என்றால் ஐ.நா. கொடுத்த அந்த அறிக்கையைப் படித்து அது தந்திருக்கக்கூடிய முறைமையில் சிந்தித்து செயல்பட முனைகின்றோம். இந்தியா உலகுக்கு வழிகாட்டும் நாடு. இந்தியாவின் சிந்தனையே உலகச் சிந்தனை, அதையும் தாண்டி அண்டத்தைக் காக்கும் சிந்தனை. இது வேதகாலத்திலிருந்து தொடரும் வரலாறு. நமது நவீன காலச் சிந்தனை மேற்கத்தியக் கல்வி, மேற்கத்திய மயத்திலிருந்து வந்ததால், அந்தக் கோணத்திலிருந்தே பார்க்க பழகிவிட்டோம். மேற்கத்திய முறைமை அறிவியல் சார்ந்தது என்பதையும் நாம் மறுக்க இயலாது. அதையும் தாண்டிய ஒரு முறைமை நம்மிடம் உண்டு. அந்த முறைமையியல் என்பது சுரண்டலற்ற மானுட மேம்பாடு சார்ந்த ஒரு அண்டச் செயல்பாடு. அண்டத்தை நேசிக்கும் அறிவுத் தளத்தை உருவாக்கிய நாடு. இது நம் வரலாற்றில் இருக்கிறது.

ஐ.நா. வேண்டுவது, இன்றைய சூழலில் மானுடம் எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகளில் சிக்குண்டு ஒரு சிறுபான்மை மக்கள் எல்லா வசதிகளும், சுகபோகங்களையும் எல்லை இல்லா அளவுக்கு அனுபவிக்கின்றனர். பெரும்பான்மை மக்கள் பசியிலும், பட்டியினிலும், ஊட்டச்சத்துக் குறைவுடனும், அறியாமையிலும், கல்வியற்றும், சுகாதாரம் மற்றும், குடிக்க நன்னீர் இன்றியும், வாழ்விடப் பாதுகாப்பின்றியும், அடக்குமுறைகளுக்கும், ஒதுக்குதலுக்கும் இலக்காகி வாழ்ந்து வருகின்றனர் என்பதை ஐ.நாவின் மேம்பாட்டு அறிக்கை, உணவு அறிக்கை, பசி அறிக்கை, நீர் அறிக்கை, ஊழல் அறிக்கை, மனித உரிமை அறிக்கை என்ற ஆய்வறிக்கைகள் பறைசாற்றுகின்றன.

பெரும்பான்மை மக்கள் ஒரு மதிக்கத்தக்க, மரியாதையுடைய மானுட வாழ்வு எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ இயலவில்லை. இந்தச் சூழலை மாற்றி உலகில் அனைத்து நாடுகளிலும் அனைத்துத் தரப்பு மக்களும் மதிக்கத்தக்க, மரியாதையுடைய, மானுட வாழ்வை வாழத் தேவையான வசதிகளையும் சூழலையும் ஒவ்வொரு நாடும் அதன் அரசாங்கத்தின் மூலம் உருவாக்க வேண்டும். அதற்கான புரிதலையும், அதற்கான பணிகளையும் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளது. இந்தப் புரிதலுக்கும், செயலுக்குமான ஒரு கல்வி வேண்டும். அந்தக் கல்வியை நாம் தேட வேண்டும். நாம் முதலில் எங்கு இருக்கின்றோம், எந்தச் சூழலில் வாழ்கின்றோம், நம் சமூகம், அரசியல், பொருளாதாரம், கல்வி, ஆளுகை நிர்வாகம் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்ற புரிதல் நமக்கு வேண்டும்.

இன்று ஒரு சிக்கலான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உலகை போரை நோக்கி, குழப்பத்தை நோக்கி, கலகத்தை நோக்கி, நாடுகளை பிடிக்கும் குறிக்கோளைக் கொண்டு செயல்படும் நாட்டுத் தலைவர்கள் மத்தியில் இன்று இந்த உலகத்தில் வாழ்கின்றோம். தற்போது பெருந்தொற்று ஏற்படுத்திய சூழலிலிருந்து மீண்டுவர மிகப்பெரிய போராட்டத்தில் உலகம் இருந்து வருகிறது. பொருளாதார மந்த நிலையில் வேலைவாய்ப்பை இழப்போர் எண்ணிக்கை கூடி வருகின்றது. வேலை வாய்ப்பில் இருந்த பெண்கள் பெருமளவில் வேலையிலிருந்து வெளியேறி வருகின்றனர். உலகில் எல்லை இல்லா ஏற்றத்தாழ்வுகளை மானுடம் சந்தித்து வருகிறது பருவநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கைப் பேரிடர் என்பது தொடர் நிகழ்வாகி, கொட்டுகின்ற மழை வெள்ளத்தை உருவாக்குகின்றது, அதே நேரத்தில் பல பகுதிகளில் வறட்சியும் உலகை வாட்டி வதைக்கின்றது. பெருமளவில் இயற்கைச் சூழல் மாசுபட்டு நாம் வாழுமிடம் வாழ தகுதியற்றதாக மாறிவிட்டன. அரசியல் என்பது வன்மம் நிறைந்ததாகவும், குற்றப் பின்னணி கொண்ட பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக மாறிவிட்டது.

எல்லை இல்லா ஊழல் ஆட்சியிலும் நிர்வாகத்திலும் பரவி மக்களாட்சியைச் சிதைத்துக் கொண்டுள்ளது. அரசியல் சந்தைமயமாகி சந்தைக்கு செயல்படும் கருவியாக மாறிவிட்டது. சமூகப்பார்வையற்ற தன்னலம் பேணும் மாந்தர்களாக மத்தியதர வர்க்கம் மாறிவருகின்றது. எங்கு நோக்கிலும் பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்புக்களில் தங்களை தலைவர்களாக்கிக் கொண்டு இருக்கின்றனர். நாட்டில் வாழும் மக்களில் பெரும்பகுதி ஏழ்மையில் இருக்கின்றனர். 80 கோடி மக்களுக்கு மத்திய அரசாங்கம்தான் உணவுப் பாதுகாப்பை வழங்க வேண்டிய சூழலில் மக்களை வைத்திருக்கிறது நம் ஆளும் வர்க்கம். ஆனால் இந்த 140 கோடி மக்களை நுகர்வோராக்கி சந்தையின் மூலம் 7% பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது இந்த நாடு. அதே வேளையில் 3% பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழைகளைப் பாதுகாப்பதில் கால் பங்குகூட இந்தியாவால் வசதிகள் செய்து ஏழைகளை மரியாதையுடைய வாழ்க்கையை வாழ வழிகாண இயலவில்லை.

இதன் விளைவுதான் சமீபத்தில் பொருளாதார வல்லுனர்கள், நம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குபவர்கள் கூறுகிறார்கள், “அரசும் தோற்றது, சந்தையும் தோற்றது ஏழைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில்” என்று. இந்த நேரத்தில் நம் நாட்டில் ஒரு விவாதத்தை முன் எடுக்கின்றனர். ஏழ்மையை குறைப்பதற்கு வழி தேடுவதற்குப் பதில் வல்லரசாக்கவும், உலகத்தில் பெரிய பொருளாதார சக்தியாக மாற்றவும் விவாதம் நடக்கின்றது. மக்களாட்சியை எவ்வளவு மாண்பை இழக்கச் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அதனை தரம் தாழ்ந்த நிலைக்கு நம் அரசியல் மூலம் தேர்தல் மூலம் கொண்டு வந்துவிட்டோம். மானுடம் கண்டுபிடித்த கண்டுபிடிப்புக்களில் மக்களாட்சி என்பதுதான் மாபெரும் ஆளுகைக்கான ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. அதை மானுடத்தை மனிதத்துவத்தில் உயர வைக்கச் செயல்படுத்துவதற்குப் பதில் காசு பார்க்க அதிகாரம் பிடிக்கும் கருவியாக்கிவிட்டோமே நம் மாசு படிந்த அரசியலால்.

இந்தச் சூழலில் தான் நாம் குன்றாவளத்தையும் நிலைத்த மேம்பாடு அடையும் வழிமுறைகளைக் கட்டமைக்க விவாதிக்கின்றோம். இன்றைய கலகச் சூழலை மாற்ற, சந்தைச்சூழலை மாற்ற, அரசியல் சூழலை மாற்ற தேவை ஒரு மக்களாட்சிக்கான மக்கள் கல்வி. இந்த மக்கள் கல்வி என்பது பொதுமக்களை எல்லா மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பங்கெடுக்க வைக்க தயாரிப்பதாகும். இன்றைய குடிமக்கள் சிந்தனை என்பது பயனாளிச் சிந்தனை. இந்த சிந்தனையிலிருந்து பொறுப்புமிக்க குடிமைக்கள் சிந்தனைக்கு கொண்டுவர வேண்டும். அந்த சிந்தனை பொதுமக்களுக்கு வந்துவிட்டால் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி பொதுமக்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள். குடிமைச் சமூக அமைப்பை உருவாக்கி செயல்பட ஆரம்பித்தால் அரசைக் கண்காணிக்க ஆரம்பிப்பார்கள், அதிகாரிகளைக் கண்காணிக்க ஆரம்பிப்பார்கள், அதிகாரிகளை, மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். அரசிடம் மனுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு அரசாங்கத்தை வேலை வாங்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தப் பொறுப்புணர்வு மக்களிடம் வந்துவிட்டால் அரசிடமிருந்து பயன்கள் வேண்டும் என கையேந்தி நிற்க மாட்டார்கள். மாறாக அரசிடமிருந்து தங்களுக்கு உரிமைகளாக செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளை சேவைகளாக பெற்று விடுவார்கள். அதற்காக அரசாங்கத்தை நிர்பந்தப்படுத்துவார்கள். அந்த நிலை உருவாகின்றபோது அரசு தான் செய்ய வேண்டிய பங்கீட்டு நிதியிலிருந்து வழுவவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நிலையை பொதுமக்கள் உருவாக்க முனையும்போது நாடு அடைகின்ற பொருளாதார வளர்ச்சி முறையாக பங்கீடு செய்யப்பட்டுவிடும்.

இந்த நிலையை உருவாக்கத்தான் நமக்கு ஒரு கல்வித்திட்டம் தேவைப்படுகிறது. அது சமூகப்பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும், மக்களாட்சி பேணுவதாக இருக்க வேண்டும், சமத்துவம் பேணுவதாக இருக்க வேண்டும், அண்டம் காக்கும் பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். பொறுப்புமிக்க குடிமக்கள் உருவாக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். குடிமைப் பண்பை வளர்ப்பதாக இருக்க வேண்டும், மனிதத்துவத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூக மாற்றத்திற்கு வித்திடும் மிகப் பெரிய கருவியாக இருக்க வேண்டும். அதை போதிக்கின்றவர்கள் சாதாரண மனிதர்களாக இல்லாமல் மாற்றுச் சிந்தனை கொண்ட மாற்றுத் தலைவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கல்வியின் மூலம் பொதுமக்கள் பொதுப்பணிகளுக்கு பொறுப்பேற்க தயங்காமல் தானே வரும் சூழலை உருவாக்க வேண்டும்.

ஆனால் இன்றைய கல்விச் சந்தைக்கு பணியாட்கள் தயார் செய்யும் பயிற்சி நிறுவனங்களாக மாறிவருவதுதான் நாம் பார்க்கும் சோக நிகழ்வு. இன்று அந்தப் பணியைக்கூட பயிற்சித் தொழிற்சாலைக்கு தந்துவிட்டது கல்வி நிறுவனங்கள். இன்றைய கோச்சிங் மையங்கள்தான் பெரும் பணத்தில் செயல்பட்டு பெரும் லாபம் ஈட்டுகின்றன. கல்விச் சாலைகள் அறிவையும் திறனையும் சான்றிதழாக மட்டுமே கொடுத்து வருகின்றன. எப்படி மக்களாட்சி என்ற மாபெரும் ஆளுகைக்கான கோட்பாட்டை தேர்தலாக சுருக்கிப் பார்த்து விட்டோமோ அதேபோல் கல்வியை பணியாட்களைத் தயார் செய்யும் பயிற்சியாக மாற்றி­விட்டோம். கல்வி மனிதத்துவத்தை உயர்த்தும் ஓர் கருவி என்பதிலிருந்து வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் ஓர் முறைமையியலாக மாற்றிவிட்டோம். அது மட்டுமல்ல நம் கல்வியின் விளைவுகளை எங்கே பார்க்க முடிகிறது என்றால் சந்தையின் மேம்பாட்டில்தான். இந்தக் கல்வி மானுடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பணி செய்வதற்கு பதில் சந்தை வியாபிப்பதற்கும், லாபம் பெருக்குவதற்கும் யுத்தியை கற்றுத்தரும் முறைமையாக மாற்றப்பட்டு விட்டது. விண்ணில் நமக்கு ஏவுகணையை செலுத்தத் தெரிந்தது, கொட்டிக் குவித்த குப்பைகளை மேலாண்மை செய்ய இயலவில்லை, அதற்கான அறி­வியலை உருவாக்க இயலவில்லை.

நம் தொழில்நுட்பம் சந்தைக்கான தொழில்நுட்பமாகவே இருந்து பொருள்கள் உற்பத்திக்கும் சந்தைப்படுத்துவதற்கும் செயல்படுகின்றது. கையால் சாக்கடை அடைப்பை எடுக்கும் மனிதனுக்கு ஒரு கருவியைக் கொண்டு வந்து அவனுக்குப் பாதுகாப்புத் தர இயலவில்லை. இவை அனைத்தும் நமக்கு ஒரு செய்தியை உணர்த்துகின்றது. நம் கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம் பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதில் புதிய புதிய பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்ட உதவி வருகின்றன.

இதை மாற்றியமைத்திட நமக்கு ஒரு புரிதல் வேண்டும். நாம் முதலில் மாற வேண்டும். நம் சிந்தனை மாற வேண்டும். இன்றைய சந்தைமய வாழ்விலிருந்து சமூகமய வாழ்வுக்கு மாற வேண்டும். இதற்கு உலக இலக்கியங்களைப் படிக்க வேண்டியதில்லை. காந்தியின் “இந்து சுயராஜ்யத்தை” படித்தால் போதுமானது. வினோபாவேயின் “சுயராஜ்ய சாஸ்திரத்தை”ப் படித்தால் போதுமானது.

காந்தியின் நிர்மாணத் திட்டத்தை படித்தால், இந்த ஐ.நா.வின் 17 இலக்குகளான வறுமையை ஒழித்தல், பசியில்லா சமூகத்தை பாதுகாத்தல், ஆரோக்யத்தை பாதுகாத்தல், தரமான கல்வியைத் தருதல், பாலின சமத்துவத்தை உருவாக்கல், நீர்ப் பாதுகாப்பும் வாழ்விடத் தூய்மையை உருவாக்கல், மாற்றுமுறை எரிசக்தியை உருவாக்கல், நீடித்த பொருளாதார வளர்ச்சியை கட்டமைத்தல், நிலைத்த தொழில்மயத்தை உருவாக்கல், மானுடத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைத்தல், வாழ்விடத்தை பாதுகாப்பாகவும், அனைவருக்கும் உரியதாகவும் உருவாக்கல், பொறுப்புமிக்க உற்பத்தியும் நுகர்வும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்திட்டத்தை உருவாக்குதல், வாழ்வாதாரத்தை கடல் நீரைப் பாதுகாத்து, காடுகளைப் பாதுகாத்து மண்ணை பாதுகாத்து வைத்துக் கொள்ளுதல், நீதியை நிலைநாட்ட ஆளுகை நிறுவனங்களையும் கடமைப்படுத்துதல், இவை அனைத்தையும் உரிய முறையில் நிறைவேற்ற சரியான பங்குதாரர்களை உருவாக்கிக் கொள்ளுதல் என அனைத்தையும் மக்களுடைய பங்கேற்போடு அடைய முடியும்.

இதற்குத் தேவை ஒரு மக்கள் கல்வி. அனைவருக்கும் புரியும் வகையில் இதை ஏற்படுத்தினால் பெரும் மக்கள் பங்கேற்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக உருவாகும். அந்தப் பங்களிப்பு, அரசியல் பங்களிப்பாக, ஆளுகைப் பங்களிப்பாக மாறும். அந்தப் பங்களிப்பின் மூலம் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம், ஆட்சியில் மாற்றம், ஆளுகை மாற்றம், நிர்வாக மாற்றம், இவை எல்லாவற்றையும் விட வாழ்வியலில் ஒரு மாற்றுமுறை உருவாகிவிடும். எளிய வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விடுவார்கள், பொறுப்பு மிக்கவர்களாக மாறுவார்கள், இயற்கை வளங்களைப் பாதுகாக்க உணர்வு பெற்றவர்களாக மாறுவார்கள், மக்களாட்சி புரிந்தவர்களாக சமத்துவத்தையும் சமூக நீதியையும் பேணுவார்கள். எனவே இதற்கான ஒரு கல்வியை நம் கல்விக் கழகங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் உருவாக்கிக் கொண்டு உணர்வு மிக்க ஒரு சமூகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு மக்களுடன் செயல்பட நாம் முயல வேண்டும். நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியது கிடையாது. நாம் வாழும் இடத்தில் மக்களுடன் சிறு சிறு பணிகளில் கைகோர்த்துச் செயல்படலாம்.

மக்களை நமக்கு ஆசிரியராக்கிக் கொள்ளலாம், நாம் அவர்களுக்கு ஆசிரியராக்கிக் கொண்டு செயல்படலாம். இதற்கு அரசாங்கமே ஒரு திட்டத்தை உன்னத் பாரத் அபியான் 2.0 என்று கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் நாம் வாழும் கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களுடன் பணியாற்றி மானுடத்தில் இருக்கும் மனிதத்துவத்தை வளர்க்கலாம். அதன் மூலம் ஒரு மக்கள் கல்வியை உருவாக்கலாம். இதற்குத் தேவை நமக்கு ஓர் உணர்வு மற்றும் கடப்பாடு என்று கூறி அந்த உரையினை நிறைவு செய்தேன்.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It