மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை உள்ளிட்ட நாவல்களை எழுதிய சு.தமிழ்ச்செல்வியின் புதிய நாவல் ‘சிலாவம்.’ தற்போது எழுதிக் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். பொதுவாகப் பெண்கள் நவீன இலக்கியத்தில் கவிதைக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றனர். கவிதைக்கு அடுத்து சிறுகதையே அவர்களின் தேர்வாக இருக்கிறது. ஆனால், சு.தமிழ்ச்செல்வியின் பிரதான இலக்கிய வடிவம் நாவல். கடந்த இருபது ஆண்டுகளில் வெவ்வேறு நிலம் சார்ந்து பத்து நாவல்களை எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் சார்ந்த தொன்மக் கதைகளுக்கு இவரது எழுத்து மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. கிராமம்தான் இவரது புனைவுகளின் நிலம்.

தொல்தமிழரின் திணை வாழ்க்கையில் நெய்தல் திணையும் ஒன்று. சங்க அக இலக்கியத்தில் பாலை, குறிஞ்சிக்கு அடுத்து நெய்தல் திணை சார்ந்து 342 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பாலைக்குத் தனி நிலமில்லை என்பதால் மலைக்கு அடுத்து கடல்பகுதிதான் தொல்தமிழர் வாழ்க்கையில் பிரதான நிலமாக இருந்திருக்கிறது. ஆனால், சங்க காலத்திற்குப் பிறகு கடல் சார்ந்த வாழ்க்கை குறித்துக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. நவீன இலக்கியங்கள்தாம் மீண்டும் நெய்தல் நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று கருத இடமிருக்கிறது. ‘கடல்புரத்தில்’, ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘ஆழி சூழ் உலகு’ போன்ற நாவல்கள் நெய்தல் நிலம் சார்ந்து எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ராஜம் கிருஷ்ணன், ஸ்ரீதர கணேசன் உள்ளிட்டோரும் இந்நிலம் சார்ந்து எழுதியுள்ளனர். சு.தமிழ்ச்செல்வி நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை வெவ்வேறு பின்னணியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவர் எழுதியுள்ள ‘அளம்’, ‘ஆறுகாட்டுத்துறை’ ஆகிய நாவல்கள் நெய்தல் நில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டவை. ‘சிலாவம்’ நாவலும் அவற்றுடன் சேர்ந்து கொள்கிறது.

tamilselvi novel silaavamவிவசாயிகள், இடையர்கள், மீனவர்கள், உப்பளம் என எந்தத் தொழில் சார்ந்து எழுதினாலும் அதில் பெண்களின் உழைப்புக்கே சு.தமிழ்ச்செல்வியின் நாவல்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. செல்லாயி (மாணிக்கம்), சுந்தராம்பாள் (அளம்), சமுத்திரவல்லி (ஆறுகாட்டுத்துறை), மணிமேகலை (கற்றாழை), கண்ணகி (கண்ணகி) என்று இவரது நாவல்களில் இடம்பெறும் பெண்கள் ஒரு காவியத்திற்கு நிகரான பாத்திரமாக ஒளிர்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே ‘சிலாவம்’ நாவலில் வெங்கண்ணியைப் படைத்திருக்கிறார். தமிழில் புனைகதைகள் ஒருசார்புத் தன்மையுடனேயே எழுதப்படுகின்றன. பெண்களுக்கு உரிய இடமளித்து எழுதப்பட்ட நாவல்கள் மிகக் குறைவு; அவ்வாறு எழுதப்பட்ட நாவல்களும் ஆண்களின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. அப்படித்தான் எழுதவும் இயலும். அதனைச் சமன்படுத்தும் பணியைப் பெண் எழுத்தாளர்கள் இன்று செய்து வருகின்றனர். அதில் ஒருவராக சு.தமிழ்ச்செல்வி இருக்கிறார். வெகுசன எழுத்துக்கும் காத்திரமான எழுத்துக்கும் இடையில் இவரது எழுத்தை நிறுத்தலாம். அதாவது, ராஜம் கிருஷ்ணனின் நவீன வடிவமாக இவரது எழுத்துக்கள் இருக்கின்றன.

நாட்டார் பழமரபுக் கதைகளுக்கு சு.தமிழ்ச்செல்வி புனைவு வடிவம் கொடுத்து எழுதி வருகிறார். இவர் நாவல் எழுதத் தேர்ந்தெடுக்கும் நிலப்பரப்பில் புழங்கும் தொன்மம் சார்ந்த கதைகள் இவர் நாவல்களினூடாக மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன. இவர் எழுதத் தேர்ந்தெடுக்கும் கதைகளுடன் நாட்டார் கதைகளும் புனைவுகளில் ஊடிழையாகப் பயணிக்கின்றன. இயற்கை சார்ந்த பொருட்களின்மீது பொதுமக்களால் கட்டப்பட்டுள்ள நம்பிக்கைகளும் சடங்குகளும் இவரது எழுத்தில் பூரணத்துவம் பெறுகின்றன; அந்த நம்பிக்கைகளுக்கு இவரது எழுத்து ஒரு புனைவை உருவாக்கி உறுதிப்படுத்துகிறது. ‘அண்மைப் பழங்காலத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையோ, கற்பனையான நிகழ்ச்சிகளையோ கருப்பொருளாகக் கொண்டு, மக்கள் கூறும் கதைகளே பழமரபுக் கதைகளாகும். இக்கதைகளின் முக்கியப் பாத்திரங்கள் மனிதர்களே என்றாலும் பேய்கள், இறந்து உயிர்த்தெழுந்தவர்கள், தெய்வங்கள், புனிதர்கள் ஆகியோரும் இதில் இடம்பெறுவர்’ (அடித்தள மக்கள் வரலாறு, பக்.15) என்று தொன்மக் கதைகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இந்தப் பின்னணியில்தான் ‘சிலாவம்’ நாவலையும் அணுக வேண்டியிருக்கிறது.

‘சிலாவம்’ Bynge செயலியில் தொடராக எழுதப்பட்டது. அதனால் தொடர்கதைகளுக்கே உரிய பலவீனங்களுடன்தான் இப்புதினத்தை அணுக வேண்டும். இந்தப் புதினத்திலும் ஒரு தொன்மக் கதை இடம்பெகிறது. முத்துக்குளிப்பதில் திறமைசாலியான முத்துராசாவைப் பாண்டிய மன்னன் அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டுகிறான். இவனது ஆற்றலிலும் அழகிலும் மயங்கிய பட்டத்து இளவரசி, முத்துராசாவைக் காதலிக்கிறாள். இந்த உண்மை அரசனுக்குத் தெரியவருகிறது. அரசன் சரியான முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கிறான். இந்நிலையில், சேனாதிபதி முத்துராசாவைக் கடலுக்கு அழைத்துச் சென்று கல்லைக்கட்டி நீரில் மூழ்கடித்துக் கொன்று விடுகிறான். இதனையறிந்த இளவரசியும் கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள். இருவரது ஆன்மாவையும் இரு சிப்பிகள் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் நம்புகின்றனர். இந்த வாய்மொழிக் கதையை எடுத்துக்கொண்டுதான் சு.தமிழ்ச்செல்வி இந்நாவலை எழுதியிருக்கிறார். இந்தக் கதையைப் புனைவாக்குவதற்காக அவர் எடுத்துக் கொண்ட கதாபாத்திரங்கள் பரதவர்கள். அவர்களினூடாக முத்துக் குளிப்பவர்களின் வாழ்க்கையும் அவர்களது நம்பிக்கைகளும் நாவலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் உடலிலிருந்து வெளியேறும் ஆன்மா குறித்த நம்பிக்கை நாட்டார் வழக்காறுகளில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் மூலமாக இதனை உறுதிப்படுத்தலாம். இந்த நம்பிக்கைக்கு ஒரு பெரும் தொடர்ச்சி இருக்கிறது. இத்தகைய ஆவியுலகக் கோட்பாடு குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் பின்வருமாறு கூறுகிறார்:

  • இறந்த அல்லது உயிரோடிருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆவி அல்லது ஆன்மாவின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.
  • பௌதிகப் பொருள்களின் மீது உறுதியாகத் தொடர்பில்லாத ஆவிகளின் மீது நம்பிக்கை கொள்ளுதல்.
  • இயற்கைப் பொருள்களின் மீதும் வாழும் ஆவிகளின் மீதும் நம்பிக்கை கொண்டு வழிபடுதல் (மந்திரமும் சடங்குகளும், பக்.26).

ஆவியுலகக் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு நாட்டார் வழக்காற்றியல் பார்வையிலும் இந்நாவலை வாசிக்கலாம். வெளிப்படையாகப் பார்த்தால் ‘சிலாவம்’ முத்துக் குளிப்புத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்டது போலத் தோன்றும். நுட்பமாக வாசித்தால் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள முயல்தீவு என்ற பகுதியில் வழங்கப்பெறும் மேற்கண்ட பழமரபுக் கதையையே புனைவு மையப்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கதையைப் புனைவாக்க சு.தமிழ்ச்செல்விக்குச் சில கதாபாத்திரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதனால் சடையன், வெங்கண்ணி, இசக்கிமுத்து, பேத்தை, முருகன், வீரைய்யன், சின்னக்கருப்பன், முத்துமாரி உள்ளிட்டவர்களை சு.தமிழ்ச்செல்வி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாட்டுப்புற மக்களிடம் ஏராளமான தொன்மக் கதைகளும் நம்பிக்கைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தொன்மத்திற்குப் பின்னுள்ள கதைகள் அவர்களின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதாக இருக்கும்; பண்பாட்டுடன் கலந்தவையாக இருக்கும். இப்படியொரு கதையாகத்தான் முத்துராசா - இளவரசி கதையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. காதலித்த இருவர் கடலுக்குள் சிப்பியாகக் கிடக்கிறார்கள். அவர்கள் ஆன்மாவுக்கு உயிர்கொடுக்க வேண்டும். இறந்தவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் என்பது நாட்டுப்புற மக்களின் ஆழமான நம்பிக்கை. இன்றுவரை இந்நம்பிக்கை கொஞ்சமும் தளர்ச்சியடையவில்லை. ‘சிலாவம்’ அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது.

சடையனால் இலங்கைத்தீவில் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டவள் வெங்கண்ணி. சடையனின் மனைவி அன்னம்மா இறப்பிற்குப் பிறகு வெங்கண்ணிக்கு எல்லாமுமாக இருப்பவன் சடையன்தான். இவ்விரு கதாபாத்திரங்களுமே புனைவில் வலிமையாகப் பின்னப்பட்டுள்ளன. தந்தையும் மகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இப்பாத்திரங்கள். ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பும் அனுசரணையும் மெச்சத்தகுந்தவை. இவர்களிருவரையும் சுற்றியே பிற கதாபாத்திரங்கள் இயங்குகின்றன. வெங்கண்ணி ஆண்களைப் போன்று வத்தையை எடுத்துக்கொண்டு தனியாகக் கடலுக்குச் செல்கிறாள். முத்துக்குளிக்கவும் அவளுக்கு ஆசை இருக்கிறது. பொதுவாக மீனவப் பெண்கள் கரையில் நின்று ஆண்களுக்கு உதவுவதாகவே இதுவரை எழுதப்பட்டுள்ளன. புனைவில் அவர்களுக்கு அவ்வளவுதான் இடமளிக்கப்பட்டிருக்கும். இந்நாவல் விதிவிலக்கு. சு.தமிழ்ச்செல்வி தொடக்கம் முதலே இப்படித்தான் எழுதி வருகிறார். அதாவது, அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பெண்களின் இருப்பை ஆவணப்படுத்துவதை இவர் புனைவுகள் செய்து வருகின்றன. இந்நாவலில் வெங்கண்ணிக்கு அந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சடையனும் கணவன் இசக்கிமுத்துவும் வெங்கண்ணி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுகின்றனர். ‘அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்’ என்று நம்புகின்றனர். வெங்கண்ணி கடல் தாயின் மகள் என்ற படிமத்தை புனைவின் தொடக்கத்திலேயே சு.தமிழ்ச்செல்வி உருவாக்கி விடுகிறார். நாவல், யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் பல இடங்களில் மாயத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. பெரிய துயரங்கள் வந்தாலும் இவர்களின் கடவுளான ‘முனியசாமி’ அதனை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார். மாயத்தை நிகழ்த்திக் காட்டும் ஆற்றல் கடவுளுக்கு இருக்கிறது; ‘முனியசாமி’ கடவுள். எனவே, புனைவு உருவாக்கும் தர்க்கப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அதாவது, வெங்கண்ணியின் ஆளுமையை நிறுவிக்கொள்ள முனியசாமி பயன்பட்டிருக்கிறார்.

இந்நாவல் கட்டமைக்கும் சிறுதெய்வ நம்பிக்கை அசாத்தியமானது. சடையனை முனியசாமி எப்போதும் பின்தொடர்கிறார். இசக்கிமுத்துவைக் கண்டுபிடிப்பதற்கு முனியசாமி வியாபாரி வேடம் புனைந்துகொள்கிறார். சடையனுடன் லாரியில் கொல்கத்தா வரை பயணிக்கிறார். கடவுளுக்குரிய பெரிய பிம்பத்தை அழித்து மனிதர்களுடன் மிக நெருக்கமாக்கும் வேலையைப் புனைவு செய்திருக்கிறது. நாட்டுப்புற தெய்வங்களின் தன்மையாக இதனைக் கருதலாம். சிறுதெய்வகள் உருவாகும் பின்னணிகள் எப்போதும் சுவாரசியமானவை. அப்படித்தான் முனியசாமியின் தோற்றமும். இலங்கையிலிருந்து கொண்டுவந்த மண்ணைக் கடலில் மிதந்து வந்த தென்னங்குடுவையில் நிரப்பிவைத்து வழிபடுகிறார் சடையன். தற்போது முயல்தீவில் எல்லோருக்குமான கடவுளாக முனியசாமி இருக்கிறார். எனவே, முனியசாமியை முயல்தீவுக்குக் கடவுளாக்கியவர் சடையன். சடையனின் மூலமாகப் பரவிய நம்பிக்கையால்தான் முனியசாமி அம்மண்ணில் கடவுளாக நிலைபெறுகிறார். இதுபோன்று நாட்டுப்புற தெய்வங்களில் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கையில் நீர்பாய்ச்சும் வேலையையும் சு.தமிழ்ச்செல்வியின் புனைவுகள் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றன.

‘சிலாவம்’ மீனவர்களின் தொழில் சார்ந்த துயரங்களை எழுத்தாக்கவில்லை என்பது ஆறுதல். கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் இயல்பானவை. சுறா மீனால் உண்டாகும் பிரச்சினைகளும் அவர்களுக்குத் தெரிந்தேதான் இருக்கிறது. எல்லாம் தெரிந்துதான் வெங்கண்ணி கடலுக்குச் செல்கிறாள். நிலத்தில் இரு சக்கர வாகனத்தில் பொழுதுபோக்குக்காகச் சுற்றுவதைப் போல மரக்கலத்தைத் தள்ளிக் கொண்டு கடலுக்குச் செல்கிறார்கள். மகிழ்ச்சியையும் துயரத்தையும் கடல்மீது நின்று கொண்டே பகிர்ந்து கொள்கிறார்கள். அன்றாடத்தின் ஒரு பகுதியாக மீனவர்களுக்குக் கடல் இருக்கிறது. கடல் அன்னையின் மீதான நம்பிக்கைதான் அவர்களை இயங்க வைக்கிறது. இதுபோன்ற மீனவர்களது கடல் சார்ந்த வாழ்க்கையையும் நம்பிக்கையையும் சடங்குகளையும் கொண்டாட்டங்களையுமே நாவல் விவரிக்கிறது.

இந்நாவலில் துயரங்கள் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. பின்னோக்கு உத்தியில்தான் நினைவுகூரப்படுகிறது. நாவலில் நல்ல விஷயங்கள் மட்டுமே அடுத்தடுத்து நிகழ்கின்றன. மனிதர்கள் இவ்வளவு நல்லவர்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்குப் புனைவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளன. நினைத்த எல்லாமும் உடனுக்குடன் கைக்கூடி வருகிறது. யதார்த்தத்தில் அப்படி நிகழ்வதில்லைதானே? இதுபோன்ற இடங்களில்தான் நாவல் யதார்த்தத்தை மீறிச் செல்கிறது. நவீன இலக்கியத்தின் பெரும் சாதனை, மனித மனங்களில் படிந்துபோயுள்ள கசப்புணர்வை இலக்கியமாக்கியதுதான். சு.தமிழ்ச்செல்வி இதுபோன்ற இடங்களைத் தவற விடுகிறார் என்று தோன்றுகிறது. துயரங்களை எல்லாம் நினைவுகளாகப் பகிரப்படும்போது துயரம் அதன் வீரியத்தை இழந்து விடுகிறது. இந்தப் பிரச்சினை இந்நாவலிலும் இருக்கிறது.

வெங்கண்ணி கதாபாத்திரம் பெண்களின் இருப்பு சார்ந்து அவ்வளவு நம்பிக்கையை உருவாக்குகிறது. ஆண்களைப் போன்று சங்கெடுக்கவும் இவள் ஆசைப்படுகிறாள். சடையன்தான் தடுக்கிறான். அவள் அணியக்கூடிய ஆடை இந்தத் தொழிலுக்குச் சரியாக இருக்காது என்கிறான். பெண்களின் இயல்புகள் மிக நுட்பமாகப் புனைவுக்குள் தொழிற்பட்டுள்ளன. இசக்கிமுத்துவுடனான காதலைச் சடையன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார். ‘தன் மகள் ஒரு பயலை விரும்புகிறாள் என்ற நினைவே அவருக்கு உவப்பாயிருந்தது’ என்கிறார். ஒரு பெண்ணின் பார்வையில் ஆண்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற ஏக்கம்தான் சடையன் மற்றும் இசக்கிமுத்துவின் கதாபாத்திரங்கள். வெங்கண்ணியைப் புரிந்துகொண்ட இரு ஆண்கள் அவளுக்கு வாழ்க்கையில் அமைகிறார்கள். சு.தமிழ்ச்செல்வி, பெண்களின் சார்பில் நின்று பெண்ணியம் பேசவில்லை. ஆனால் தனக்கு விருப்பமான ஓர் ஆண்களின் உலகத்தை இந்நாவலில் படைத்துள்ளார். செங்கண்ணியின் தோழியான பேத்தை கதாபத்திரமும் நாவலில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

புனைவின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாய்மொழிக் கதையை நாவலின் இறுதியில் புனைவாசிரியர் அழகாக இணைத்திருக்கிறார். இந்த வாய்மொழிக் கதைக்கு நிகழ்காலத் தன்மையை அளிப்பதற்கு வெங்கண்ணியும் பேத்தையும் பயன்பட்டிருக்கிறார்கள். பேத்தைக்கும் முருகனுக்கும் ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது; முத்துராசா எனப் பெயர் வைக்கிறார்கள். வெங்கண்ணிக்கும் இசக்கிமுத்துவுக்கும் பிறக்கும் பெண் குழந்தைக்கு இளவரசி எனப் பெயரிடுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதற்கான வாசலைப் புனைவு திறந்து விடுகிறது. கடலில் இரு சிப்பிகளில் அடைபட்டுக் கிடந்த முத்துராசாவின் ஆன்மாவும் இளவரசியின் ஆன்மாவும் மீண்டும் மனித உரு எடுக்கின்றன. இது வெங்கண்ணி மற்றும் பேத்தையின் வழியாக நிகழ்கிறது. நாட்டுப்புற நம்பிக்கையில் இதனை தெய்வீக ஆவி என்கின்றனர். அதாவது காற்று, மழை, நெருப்பு, கடல், மலை, சூரியன், சந்திரன் போன்ற இயற்கைச் சக்திகளிலும் பொருள்களிலும் ஆவி உறைவதாக ஆதிகால மனிதன் நம்பினான். அந்த நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.

தெய்வீக ஆவி குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதற்கான உறுதியான காரணங்களைக் கூற இயலாது. ஆனால், நாட்டுப்புற ஆய்வாளர்கள் சில அனுமானங்களை முன்வைக்கின்றனர். ‘உலகப் பொருள்களின் அடிப்படைத் தன்மைகளை அறிய இயலாத நிலையில் அப்பொருள்களுக்கு அதீத ஆற்றலைப் புராதன மனிதன் கற்பித்தான். அத்துடன் இத்தகைய ஆற்றலையுடைய பொருள்கள் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்று மென்று நம்பினான். இதனையே ‘புனிதப் பொருள் வழிபாடு’ என்பர்’ (மந்திரமும் சடங்குகளும் பக்.27) என்று ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். இயற்கைப் பொருட்களில் ஆவியுறையும் நம்பிக்கையை மீனவர்களின் வாழ்வியலுடன் இணைத்து சு.தமிழ்ச்செல்வி புனைவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்புனைவினூடாக வெளிப்படும் மீனவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சொலவடைகள், மருத்துவம் என எல்லாவற்றைக் குறித்தும் உரையாடலாம். ஆனால் பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு வரும் ஒரு நாட்டார் கதைக்கு உயிர் கொடுத்தத்தில்தான் புனைவு தனித்துத் தெரிகிறது.

இயற்கையைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் நாட்டுப்புற மக்களிடம் இன்றும் உள்ளது. அந்த வகையில் கடல் அவர்களுக்கு முக்கிய தெய்வம். மனித ஆற்றலுக்கும் மேலான ஆற்றல் இயற்கையிடம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அதுதான் உலகத்தைக் கட்டுப்படுத்துகிறது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் ஆழமாக இருக்கிறது. புயல், கடல் சீற்றம், பெருமழை, பூகம்பம் போன்றவற்றை அவர்கள் தற்செயல் நிகழ்வுகளாகப் பார்ப்பதில்லை. மனிதத் தவறுகளுக்கு இயற்கை தரும் சமிக்ஞைகளாகக் கருதுகின்றனர். இயற்கையின் ஆற்றலை வழிபாட்டின் மூலமாகவும் அவற்றின்மீது வைக்கும் நம்பிக்கையின் மூலமாகவும் தங்களால் பெற முடியும் என்று நம்புகின்றனர். சடையன் அத்தகையதொரு கதாபாத்திரம். அவனிடமிருந்தே இதுபோன்ற நம்பிக்கைகள் புனைவில் வெளிப்பட்டிருக்கின்றன.

தமிழ்ப் புனைகதை வரலாற்றில் நிலம் சார்ந்த எழுத்துக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அதில் சிலாவமும் தன்னை இணைத்துக் கொள்கிறது. வெங்கண்ணியின் திருமணத்துடன் நாவல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பாண்டிய நாட்டு இளவரசி வெங்கண்ணியின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பதற்காக இரண்டாம் பாகமாக நீண்டிருக்கிறது. அடுத்து, நாவலில் பெரிய திருப்பங்களே இல்லை. எல்லாமே சடையன் குடும்பத்திற்குச் சாதகமாகவே நடப்பதால் வாசிக்கும்போது ஒரு தொய்வை ஏற்படுத்தி விடுகிறது. நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் நிலம்பெயர்வுகூட பெரிய அளவுக்கு மீனவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முனியசாமியை நம்பாதவர்களுக்கும் நாவல் நியாயம் செய்திருக்க வேண்டும். ஆனால் பிரதி அதனைச் செய்யவில்லை என்றே கருதுகிறேன்..

- சுப்பிரமணி இரமேஷ், உதவிப் பேராசிரியர், D.R.B.C.C.C இந்துக் கல்லூரி, சென்னை- 72.

Pin It