தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் ஏராளமாக வந்துகொண்டிருக்கின்றன. அனைத்துப் பல்கலைக்கழகப் பகுதி ஒன்றுக்கான தமிழ் மொழிப்பாடத்திட்டத்திலும் ஓர் அலகு என்ற அளவில் நான்கு தாள்களிலும் இலக்கிய வரலாறு கற்பிக்கப்படுகின்றது. இளநிலைத் தமிழ்ப் பாடத்திட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு தாள்களாகத் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி வரலாறும் இலக்கிய வரலாறும் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கின்றன. இதனால் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் அங்காடி மதிப்புடையவையாக மாறியிருக்கின்றன. அங்காடி மதிப்புடைய பொருள்கள் பல தரத்தில் பல விலைகளில் பல்கிப் பெருகுவதைத் தடுத்துவிட முடியாது என்பது உண்மையாகும். பரவலான வாசிப்பு, வேலை வாய்ப்புக்கு அடிப்படையாக இருத்தல், வணிக வாய்ப்பு, பொருள்களின் / நூல்களின் பெருக்கம் ஆகியவற்றால் இலக்கிய வரலாற்று நூல்கள் தரத்தை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். மாறாக, விலை மலிவை முன்வைத்துத் தரமற்ற பொருள்களின் / நூல்களின் உற்பத்தி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆய்வு நூல்களைவிட இலக்கிய வரலாற்று நூல்கள் வணிக மதிப்பு உடையவையாக இருப்பதனால் மிகுதியாக வெளிவருகின்றன. நண்பர்களின் உதவியால் பாடத்திட்டத்தில் சேர்த்துவிடலாம்; தெரிந்தவர்களைக் கொண்டு மாணவர்களை வாங்கச் செய்துவிடலாம் என்ற எண்ணத்திலும் ஏராளமான இலக்கிய வரலாற்று நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது கவிதை எழுதிவிடுவதைப் போல எல்லாத் தமிழ்ப் பேராசிரியர்களும் ஓர் இலக்கிய வரலாற்று நூலை எழுதிப் பார்த்துவிட விரும்புகின்றார்களோ என்று நினைக்குமளவுக்கு இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு இலக்கிய வரலாற்று நூலை எழுதுவது ஆசிரியர்களுக்கு எளிதாக இருக்கின்றது. நான்கு இலக்கிய வரலாற்று நூல்களைக் கையில் வைத்துக் கொண்டு ஓர் இலக்கிய வரலாற்று நூலை எழுதிவிடுகின்ற நுட்பம் கைவரப் பெற்றவர்களாகப் பெரும்பாலான இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஒரே தகவலும் தொடரியல் மாறுபாடும் உடையவையாகப் பெரும்பாலான இலக்கிய வரலாற்று நூல்கள் இருப்பதைக் காண முடிகின்றது.

ilakkiya varalatru varaiviyalஇலக்கிய வரலாற்றுக்கான ஓர் அமைப்பாக்கம் உருவாக்கப்பட்டு விட்டது. அந்த அமைப்பாக்கத்தில் அடுத்தடுத்த நூல்கள் உருவாக்கப்படுகின்றன. அதாவது, செங்கல் அறுப்பதைப் போல இலக்கிய வரலாற்று நூல்களும் அறுத்தெடுக்கப் படுகின்றன. தமக்கு முன்னர் வெளிவந்துள்ள இலக்கிய வரலாற்று நூல்களிலிருந்து வேறுபட்டு, கூடுதல் தகவல்களுடன் அல்லது கருத்துகளை முன்வைக்கும் முறைமையால் வேறுபட்டு வெளிவந்துள்ள நூல்கள் மிகச் சிலவே ஆகும். தொடக்கால இலக்கிய வரலாற்று நூல்களையும் கால அடிப்படை மற்றும் இலக்கிய வகைமை அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களையும் தவிர்த்துத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற பெயரில் வெளிவந்துள்ள நூல்களைத் தொகுத்து ஆராய்ந்து பார்த்தால் இலக்கிய வரலாறுகள் எவ்வாறு தமிழின் புலமை மரபை ஒரு சட்டகத்திற்குள் அடக்கி விட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இயலும். புதிய செய்திகளோ, ஆராய்ச்சி மனப்பாங்கோ இன்றி முந்தைய தகவல்களே திருப்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. பல்கிப் பெருகிவரும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் மதிப்புரைக்கோ, திறனாய்வுக்கோ உட்படுத்தப்படுவதே இல்லை. அதனால் இந்நூல்களின் நகலாக்க முறைகளும் போதாமைகளும் ஒப்புக்காகக் கூடப் பேசப்படுவதில்லை.

தமிழில் இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ள அளவுக்கு இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகள் நிகழ்ந்ததாகவோ அவை நூல்களாக வெளிவந்ததாகவோ அறிய இயலவில்லை. கா. சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு (வரலாற்று எழுதியல் நோக்கு) என்ற நூல் வெளிவந்த பிறகு இலக்கிய வரலாறு பற்றிய ஒரு மாறுபட்ட பார்வை உருவாகியுள்ளது. அதன் பிறகு, ஒரு சில இலக்கிய வரலாற்று ஆய்வுகள் நிகழ்ந்திருந்தாலும் (இந்நூலாசிரியர் சில ஆய்வுகளின் தலைப்புகளை இந்நூலில் அளித்துள்ளார். இருந்தாலும்) அவை நூல்வடிவம் பெற்றுப் பரவலாக அறியப்பட்டனவாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இலக்கிய வரலாற்று வரைவியல் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இரா. சீனிவாசனின் நூல் மிகுந்த கவனம் பெறுகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் ஒரு சட்டகத்திற்குள் அடங்கிவிட்ட நிலையில், அச்சட்டகத்தை மறுதலிப்பதுடன், இலக்கியம் தோன்றிய இடத்திற்கு, சமூகத்திற்கு முதன்மையளிக்க வேண்டும் என்ற கருத்துடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் காட்டுவதாகத் தமிழில் தோன்றியுள்ள இலக்கிய வரலாற்று நூல்கள் இல்லை என்னும் கருத்தை முன்வைத்து, இலக்கிய வரலாற்று நூல்கள் அமைய வேண்டிய முறைகளை விவாதித்துச் செல்லும் இந்நூல், 1.முன்னுரை 2.இலக்கிய வரலாறும் மொழியும் 3.இலக்கிய வரலாற்றின் நோக்கமும் தரவுகளும் 4. தமிழ் இலக்கியத்தின் பன்முகத் தன்மை 5.தமிழ் இலக்கியத்தின் மையமற்ற வளர்ச்சி 6.கலைகளுக்குப் பொதுக் கூறுகள் 7.வழக்காறும் நூல் உருவாக்கமும் 8.தமிழரின் சமஸ்கிருத ஆக்கங்கள் 9.நாட்டிய சாத்திரம் 10.அரண்மனைத்தோட்டமும் சோலையும் அரச ஆதரவும் இலக்கிய உருவாக்கமும் என்னும் பத்துத் தலைப்புகளில் அமைந்துள்ளது.

இந்நூலின் முன்னுரை தமிழ் இலக்கிய வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களை மீள் ஆய்வுக்கு உட்படுத்துவதற்கேற்ற விவாதங்களை முன்வைத்துச் செல்கின்றது. இலக்கிய வரலாற்றையும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளையும் வேறுபடுத்திக் காணவேண்டும் என்பதைச் சுட்டி இதுவரை வந்துள்ள நூல்கள் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் உள்ளடக்கியதாக அமையவில்லை என்பதையும் தமிழ் இலக்கியத்தின் விரிந்த எல்லை எழுத்து மரபுக்குக்கு முந்தைய வாய்மொழி மரபிலிருந்து நோக்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்துகின்றது.

தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள் சமஸ்கிருத மரபுகளிலிருந்து பிறந்தவை என்ற கூற்றினைப் பல்வேறு வாதங்களின் வழியாக மறுத்து சமஸ்கிருத மரபோ தமிழ் மரபோ இரண்டுக்கும் வாய்மொழி மரபுகளே அடிப்படையாக இருந்துள்ளன என்ற கருத்தை நிலை நிறுத்துகின்றது. இதனால், வாய்மொழி மரபிலிருந்து இலக்கிய மரபினைத் தொடங்கவேண்டும் என்று கருத்தினை அழுத்தமாகப் பதிவு செய்கின்றது. ஒரு சமூகத்தின் மரபுகளைப் பதிவு செய்துள்ளதனாலேயே கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ள மொழிக்குரியதாகிவிடாது என்ற கருத்தை இந்நூல் முன்வைக்க முயன்றுள்ளது. டேவிட் ஷூல்மன் (தமிழின் வாழ்க்கை வரலாறு 2016), இரா.நாகசாமி (Mirror of Tamil and Sanskrit 2012) ஆகியோரின் நூல்கள் மூல மரபாக சமஸ்கிருத மரபையும் அதிலிருந்து கிளைத்தாகத் தமிழ் மரபினையும் சுட்டுகின்றன. வேதநெறி, ஆகமம், தொன்மம் ஆகிய சொல்லாடல்களால் கட்டப்பட்ட அந்நூல்களுக்கான மறுப்புரையை அளவையியல் நெறியில் முன்வைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதை இந்நூலின் முன்னுரை வெளிப்படுத்துகின்றது. மேலும், இலக்கியம் தோன்றுவதற்கான சமூகப் பின்னணி, மொழியும் இலக்கியமும் அடைந்துள்ள பண்பட்ட நிலை ஆகியவை இலக்கியம் தோன்றுவதற்கான காரணிகளாக இருந்த முறைமை ஆராயப்பட வேண்டும் எனச் சுட்டுகின்றது.

பொதுவாக இலக்கிய வரலாறுகள் இலக்கியம் என்று வரையறை செய்யப்பட்டவற்றை (குறிப்பாக எழுத்தாக்கம் பெற்றுள்ளவற்றை) மட்டும் தரவாக எடுத்துக் கொண்டுள்ளதைச் சுட்டி, இத்தரவுகளின் அடிப்படையில் எழுதப்படும் வரலாறு ஒரு பக்கச் சார்பானதாகவும் இலக்கியங்களின் இயக்கத்தைப் புரிந்து கொள்ளாதவையாகவுமே இருக்கும் என இந்நூல் சுட்டுகின்றது. இலக்கியத்தை அது எழுதப்பட்டுள்ள அல்லது வழங்குகின்ற மொழியுடன் மட்டும் பொருத்திப் பார்க்காமல் ஒட்டுமொத்தச் சமூகத்துடனும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் ஆக்கம் உருவான பகுதிகள், ஆக்கத்தை உருவாக்கியவரின் சமூக நிலை, சமயம் முதலியவற்றையும் இலக்கிய வரலாறு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் சுட்டுகின்றது. இலக்கியங்களை அவை தோன்றிய சமூகத்துடனும் சமயத்துடனும் பொருத்தி ஆராயப்பட்ட பல இலக்கிய ஆய்வுகள் தமிழில் வெளிவந்துள்ளமையைத் தமிழ் ஆய்வு வரலாற்றில் காணமுடிகின்றது. பள்ளு இலக்கியங்கள் சமூகவியல் பார்வை (கோ. கேசவன்), மெலிவாரும் நலிவாரும் சேக்கிழாரும் (அ. மார்க்ஸ்), சிற்றிலக்கியங்கள் சில பார்வைகள் (அ. மார்க்ஸ்), பேரரசும் பெருந்தத்துவமும் (க. கைலாசபதி), இளங்கோவடிகள் யார் (தொ.மு.சி. ரகுநாதன்) போன்ற ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவை மார்க்சிய இயங்கியல் சார்ந்து எழுதப்பட்டிருப்பது தற்செயலானதன்று. அது போலவே, சேரநாட்டு இலக்கியங்கள், கொங்குநாட்டு இலக்கியங்கள், நாஞ்சில் நாட்டு இலக்கியங்கள் என நூல்கள் பல வெளிவந்துள்ளன. அது போலவே தமிழில் சமயம் சார்ந்து உருவாகியிருந்த இலக்கியங்கள் பற்றியும் (சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாமியம்) நூல்கள் பல வெளிவந்துள்ளன. இவையன்றி வட்டாரம் சார்ந்த மக்களின் பண்பாடு, இலக்கிய வளம் பற்றியும் நூல்கள் (கெடிலக்கரை நாகரிகம்) வெளிவந்துள்ன. ஆனால், இந்நூல்களில் சுட்டப்பட்டிருக்கும் கருத்துகளை இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியுள்ள அறிஞர்கள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

எழுத்து வடிவில் எழுதப்பட்டவற்றை, அச்சில் வெளிவந்துள்ளவற்றை மட்டுமே இலக்கிய வரலாற்று நூல்கள் கவனத்தில் கொண்டிருப்பதைச் சுட்டி, இத்தகு குறுகிய தரவுகளைக் கொண்டு உருவாக்கப்படுவது எவ்வாறு முழுமையான வரலாறாக அமையமுடியும்? என்ற வினாவினை இந்நூலாசிரியர் எழுப்புகின்றார். அச்சேற்றப்படாமல், ஓலைச்சுவடிகளிலேயே பல நூல்கள் அடைபட்டுக் கிடைப்பதையும் வாய்மொழி மரபில் அல்லாமல் எழுத்துமரபில் அமைந்திருந்தாலும் இலக்கிய வரலாற்றுக்கு அவை மூலமாக அமையாமல் இருப்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது. தமிழ் இலக்கிய மரபில் உருவான பல நூல்கள் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் அவற்றை உள்ளடக்காதவரை இலக்கிய வரலாறுகள் முழுமையானதாக ஆக முடியாது என்பதையும் நூல் சுட்டுகின்றது. அதே நேரம், “எல்லா ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக இலக்கிய வரலாறு அமையவேண்டும். அப்போதுதான் ஒரு சமூகம் எந்த அளவுக்குச் சிந்தனை வளத்துடன் இயங்கியுள்ளது என்பதை அறியமுடியும். இலக்கியம் அல்லது நூல் என்பதை மொழியுடன் மட்டும் தொடர்புபடுத்தாமல் ஒட்டுமொத்தச் சமூகத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்”(ப. 21) என்ற கருத்தை நூல் முன்வைக்கின்றது.

எழுதப்பட்டுள்ள இலக்கியமும் அது அமைந்திருக்கும் இலக்கிய மரபும் சமூகத்தின் விளைபொருளாகும். அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தில் வழங்கிவரும் பல்வேறு ஆக்கங்கள் இலக்கிய மரபின் பின்புலத்தில் ஆராயத்தக்கனவாகும். விதிவிலக்காக ஒரு சில நூல்கள் வெளிவந்திருந்தாலும் பெரும்பாலான தமிழிலக்கிய வரலாறுகள் இலக்கிய மரபுகளின் தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு உருவானதாகத் தெரியவில்லை. எழுத்து வடிவில் அமைந்த, குறிப்பாக அச்சேறிய, பரவலான வாசிப்புக்கு உள்ளானவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இலக்கிய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இதனால், இலக்கிய வரலாற்றில் உள்ளடங்காத ஏராளமான தமிழ் ஆக்கங்கள் அமைந்து கிடப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழ்ச் சமூகத்தில் பரவலாகக் காணப்படும் தொன்ம ஆக்கங்களும் தலபுராண ஆக்கங்களும் வடமொழி நூல்களின் வழிவந்தனவாகவே கருதப்படுகின்றன. ஆனால், அவை புழங்குகின்ற இடமாகவும் உருவாக்கப்பட்ட இடமாகவும் தமிழ் நிலப்பரப்பே திகழ்கின்றது. இந்த முரண்பாட்டினைத் தமது ஆய்வுப் பொருளாகக் கொள்ளும் இந்நூல், மொழியை இலக்கிய வரலாற்று வரைவியலுக்கு அடிப்படையாகக் கொள்ளாமல் இடத்தையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என வற்புறுத்தி அதற்கான அளவையியல் பூர்வமான காரணங்களையும் சுட்டுகின்றது. வடமொழியில் அமைந்துள்ள பல தொன்ம ஆக்கங்களையும் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை இருப்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. இலக்கியம், கலை ஆகியவை எந்த மொழியில் இருந்தாலும் அது தான் ஒரு நிலப்பரப்பு சார்ந்தே தோன்றுகின்றது என்பதால் இலக்கிய வரலாற்றுக்கு மொழியை அடிப்படை அலகாகக் கொள்ளாமல், மொழி தோன்றிய நிலத்தின் மரபினை அடிப்படை அலகாகக் கொள்ள வேண்டும் என்பதை முதன்மையான கருத்தாக நூல் சுட்டுகின்றது.

பழங்காலத்தில் தோன்றிய நூல்கள் தனி ஒருவரால், ஒரு மனிதரின் தனிப்பட்ட சிந்தனையால் தோன்றியிருக்க முடியாது என்ற கருத்தை நூல் தெளிவாக முன்வைக்கின்றது. இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், ஆகமங்கள், தலபுராணங்கள், தத்துவ நூல்கள், சிற்ப நூல்கள், இசை நூல்கள் எனப் பல நூல்களும் வழக்காற்றில் இருந்தே உருவாகியுள்ளன என்ற கருத்தை நூல் பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றது. இந்நூல்கள் வழக்காற்றிலிருந்து உருவானதால் வழக்காறுகள் மக்களின் பொதுக்கருத்தாக இயங்கியுள்ளதைக் காட்டி இவ்வழக்காறுகளே எந்த மொழியில் உருவான நூலுக்கும் பொது மூலங்களாகத் திகழ்ந்துள்ளன என்கின்றது. இதன் மூலம் ஒரு நூலாக்கத்தில் மொழி கருவி மட்டுமே என்ற கருத்தை நூல் முன்வைப்பதுடன், நூலின் கருத்துக்குத் தனி ஆசிரியரோ, தனி மொழியோ உரிமை கொண்டாட முடியாது என்ற கருத்தையும் முன்வைக்கின்றது. மேலும், தமிழில் தோன்றியுள்ள நூல்களுக்கு இணையான நூல்கள் சமஸ்கிருதம் பாலி பிராகிருத மொழிகளில் இருப்பதையும் ஒரு மொழியை மூல மொழியாகவும் பிறவற்றை வருமொழியாகவும் பார்க்கும் பார்வையைத் தவறு எனவும் நிறுவ முயல்கின்றது. ஒரு மூலக்கருத்து பதிவு செய்யப்படும்போது தம் காலச் சூழலுக்கேற்பப் பல்வேறு மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காண்பதே சரியானது எனவும் கருத்து மொழிக்குரியதன்று, அது வழங்கிய சமூகத்திற்கானது என்றும் சுட்டுகின்றது. சமூகத்தில் வழங்கிய இக்கருத்துகள் சமூகத்தில் நிலவிய கல்வி மரபுகளால் உருப்பெற்றனவே எனச் சுட்டி, இக்கல்வி மரபில் உருவான கருத்துகளே பல்வேறு மொழி இலக்கணங்களிலும் பிரதிபலித்துள்ளன என்கின்றது இந்த நூல். இதன் மூலம், ஒரு மொழியிலிருந்து (குறிப்பாக வடமொழி மரபிலிருந்து) பெறப்பட்டே தமிழ் இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன என்ற கருத்தினை மறுத்து, இரண்டு மொழிகளுக்குமான கருத்துகள் மக்கள் வழங்கில் வழங்கி வந்தன என்ற கருத்தை முன்வைப்பதுடன், தமிழ் மொழி பன்னாட்டு மொழியாக இயங்கிவருவதையும் தற்சார்பான ஆக்கங்கள், நீண்ட கல்வி மரபினை உடைய பெருமொழியாகத் தமிழ் இருப்பதையும் மற்ற மொழிகளுக்குத் தருமொழியாக அது இருப்பதையும் விளக்குகின்றது.

ஒரு நூல் தான் தோன்றிய இடத்தின் கருத்தினையே கொண்டிருக்கின்றது என்ற கருத்தை முன்வைக்கும் நூல், சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட பல நூல்கள் தமிழ் நிலப்பகுதியில் இருந்தே உருவாகியுள்ளன என்பதை விரிவாக விளக்குகின்றது. குறிப்பாக, சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள ஆகமங்கள், சிற்ப நூல்கள், தலபுராணங்கள் போன்றவையும் நாட்டிய சாத்திரம் தமிழ் நாட்டுப் பகுதியிலேயே உருவாகியுள்ளதையும் இவை தொடர்ந்து இந்தப் பகுதியிலேயே வழங்கிவருவதையும் விரிவாக நூல் விளக்குகின்றது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும் இந்நூல்களின் கருத்துகள் தமிழ் மண்ணின் கருத்துகளே என்பதை நூல் அறுதியிட்டு முன்வைக்கின்றது. குறிப்பாக, வடமொழியில் அமைந்துள்ள பல அணியிலக்கண நூல்களும் நாட்டிய சாத்திரமும் தமிழ்ப் பகுதியின் செல்வங்களே என்பதை நூல் நிறுவ முனைந்துள்ளது.

இலக்கிய ஆக்கங்களுக்கும் அரச அதிகார மையத்திற்கும் உள்ள உறவு இந்நூலின் இறுதியில் ஆராயப்பட்டுள்ளது. அரசு சார்ந்து உருவான இலக்கியங்களின் பண்புகளையும் அவ்வாறு உருவான இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. தெலுங்கு மொழியில் அமைந்த நூல்கள், இசைப்பாடல்கள், சமய நூல்கள் பல அரச ஆதரவுடனும் அரசனைப் பற்றியதாகவும் அமைந்தமையை இப்பகுதி எடுத்துக்காட்டுவதுடன், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பற்றிய பல தகவல்களையும் இப்பகுதி வழங்குகின்றது. அதே நேரம், இவ்விலக்கியங்கள் பொதுமக்கள் இலக்கியங்களாக அன்றி, மேட்டிமைத் தன்மையுடன் இருப்பதையும் அவை எவ்வித உயிரோட்டமும் இன்றிப் பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் அமைந்திருப்பதையும் இப்பகுதி சுட்டுகின்றது.

தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய வரலாறுகள் தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களின் அறிமுகங்களாகவே இருக்க, தமிழ் இலக்கிய வரலாறு என்பது ஒரு சமூகத்தின் சிந்தனை வரலாறாக வெளிப்படவேண்டும் என்பதை இந்நூல் வற்புறுத்துகின்றது. அவ்வாறு சிந்தனை வரலாறாக அமையுமிடத்திலேயே, இலக்கியத்தின் வரலாற்றை முழுதளாவிய நிலையில் வெளிப்படுத்துவதாக இலக்கிய வரலாறுகள் அமையும். குறிப்பாக, இலக்கிய ஆக்கங்கள் தனித்து நோக்கப்படாமல், சமகால ஆக்கங்களுடனும் சமூக அமைப்புகள், அவற்றின் வளர்ச்சி, பண்பாடு, கலைகள், சமயம் ஆகியவற்றுடனும் இணைத்து நோக்கப்படவேண்டும். அதற்காகவே தமிழ் இலக்கிய வரலாறுகள் இதுவரை தமது எல்லையில் இருந்து புறந்தள்ளி வைத்திருந்த, பெரும்பாலும் வடமொழியில் எழுதப்பட்ட அல்லது வடமொழி மரபினைத் தழுவியதாக அமைந்துள்ள, தலபுராணம், ஆகமம், தருக்க நூல்கள், நாட்டியசாத்திரம், அணியிலக்கண நூல்கள் ஆகிவற்றின் முதன்மையை இந்நூல் உணர்த்துகின்றது. இதன் மூலம் தமிழ் மொழி வழங்கிய நிலப்பகுதியில், வடமொழியிலும் பிற மொழிகளிலும் எழுந்துள்ள ஆக்கங்கள் பலவற்றைத் தமிழ் மரபு சார்ந்தவையாகவே காண வேண்டியுள்ளது என்பதை இந்நூல் வற்புறுத்துகின்றது. இக்கருத்தை நிறுவுவதற்காகத் தமிழ் நாட்டில் தோற்றம் பெற்ற பிறமொழி இலக்கியங்கள் பற்றிய பல்வேறு தகவல்களைத் தொகுத்தளித்துள்ளது. இதனால், வடமொழி மற்றும் பிற மொழி சார்ந்து இந்திய அளவில் பரவியுள்ள இலக்கியங்கள் மற்றும் பல மரபுகளுக்குத் தமிழே மூலம் என்பதை உணர்த்த முயன்றுள்ளது.

 இந்தியா பன்மொழிச் சூழல் கொண்ட நாடு, பண்டைக் காலத்தில் இருந்தே இந்தப் பன்மொழிச் சூழல் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் இருந்துவந்துள்ளது. பன்மொழிச் சூழல் நிலவிய இந்நாட்டின் இலக்கியங்கள் பற்றி ஆய்வின் போது, குறிப்பாக இலக்கிய வரலாறு எழுதுதலின் போது இலக்கியங்களைத் தனிப்பட்டவையாகக் காண்பது, பன்மொழிச் சூழல் இயல்புக்கு மாறானதாகவே இருக்கும் என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்ட இந்நூல், அக்கருதுகோளினைப் பல்வேறு சான்றாதாரங்களுடனும் அளவையியல் நெறியில் நின்று நிறுவியுள்ளது. எந்த ஒரு கருத்தையும் ஒரு தளத்தில் மட்டும் நிறுத்திப் புரிந்து கொள்ளாமல், முழுதளாவிய நிலையில் புரிந்து கொள்வதே அவசியமாகும். ஏனெனில், எந்தக் கருத்தும் சுயம்புவாகப் பிறப்பதில்லை. அது, பல்வேறு கருத்துகளில் கூட்டினாலேயே பிறக்கின்றது. தமிழ் மொழியில், இலக்கியத்தில் வழங்கிய பல கருத்துகள் பிறமொழியில் இருந்து, குறிப்பாக வடமொழியில் இருந்து கடன் பெற்றவையாக முன்வைக்கப்பட்ட பல ஆய்வுக் கருத்துகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளதை இந்நூல் மறைமுகமாகச் உணர்த்துகின்றது. இந்நூல் சுட்டும் கருத்துகளைத் தமிழ் ஆய்வுலகம் தொடர் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியதும் புதிய இலக்கிய வரலாற்று எழுதுமுறையை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும்.

இலக்கிய வரலாறு, இலக்கியத்தை வாசிப்பதற்கும் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கும் மட்டும் பயன்படக் கூடியதன்று; அது, ஒரு நாட்டின் வரலாற்றை, சமூக, பண்பாட்டு வரலாற்றை மீள் கட்டமைப்புச் செய்வதற்கும் பயன்படக் கூடியது என்பதை இந்நூல் உணர்துகின்றது.

இலக்கிய வரலாற்று வரைவியல் | இரா. சீனிவாசன்

பரிசல் புத்தக நிலையம், சென்னை, 2022.

ரூ. 380/-

- முனைவர் கே. பழனிவேலு, இணைப்பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.

Pin It