இந்தியா சிந்தாமல் சிதறாமல் எதிர்காலத்தில் வலுவுடனும், பொலிவுடனும் நின்று நிலைத்திருக்க அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தீர்வாகும். இதை மறுத்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்தி பேசாத மக்களின் மீது திணித்தால், சோவியத்திற்கு ஏற்பட்ட கதி இந்தியாவிற்கும் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்தியா ஒரு தேசமல்ல, பல நாடுகளின் ஒன்றியமே (Union of States) என்பது இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை பறைசாற்றும் வரலாற்று உண்மையாகும். இதற்கு மாறாக மொழிவழித் தேசிய இனங்களின் மொழிப் பாதுகாப்பிற்கும், அதன் தனித்தன்மைக்கும் எதிராக இன்றைய பாஜக, ஆர்எஸ்எஸ், தங்களது இன மொழிகளான இந்தியையும், வடமொழியையும் தமிழக மக்கள் மீது ‘ஒரே நாடு’ ‘ஒரே மொழி’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சியிலும், நிர்வாகத்திலும், கல்வியிலும், வேலையிலும் திணித்தால் பிற மொழி வழி மாநிலங்கள் அந்நியமாக்கப்பட்டு, இந்தியன் என்ற பொது உணர்வு அழிக்கப்பட்டு, தனி நாட்டு மொழி உணர்வு ஓங்கி ஒலிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டு விடும்.
இந்தியா போன்ற பல்வேறு சாதி, மத, இன, மொழி அடிப்படையில் அமைந்த ஒரு நாட்டில் அனைத்தையும் சமமாக நடத்த வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும். இதில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வாதம் சொத்தையாகும்.
அண்ணா கூறியதை இங்கு எடுத்துக்காட்டுவது சாலச்சிறந்ததாகும். அதாவது நாடு முழுவதும் காகங்கள் எண்ணற்ற வகையில் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றன. எண்ணிக்கையில் ஏராளமாகக் ‘காகங்கள்’ இருந்தாலும், இந்திய நாட்டின் தேசியப் பறவை ‘மயில்’ தான் என்பது தீர்க்கமான முடிவு.
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மயில் என்ற சொல், ‘நற்றமிழ்ச்’ சொல். வடமொழிக் கலவாதச் சொல். பேரறிஞர் மறைமலையடிகளார் இச்சொல் ரிக் வேதத்தில் தமிழிலிருந்து எடுத்துள்ளது என்பதை, வேதங்களில் உள்ள தமிழ் சொற்களில் ஒன்று ‘மயில்’ என்பதை விளக்கியுள்ளார்.
ஆக, தமிழ் தொன்மைக்கும், இலக்கண, இலக்கியச் செறிவிற்கும் சான்றாய் உலக மொழிகளில் முன்னிற்கின்றது. தமிழ் இன்று உலக மொழிகளில் ஒன்று என்பதை எவரும் மறுத்துக் கூற இயலாத நிலையில் தமிழ்ப் பகைவர்கள் உள்ளனர்.
அன்றாட வாழ்வியலில் வழக்கொழிந்த கிரேக்கம், ரோமம், வடமொழி (சமஸ்கிருதம்) போன்றவை போலில்லாமல், தமிழ்மொழியை இன்றளவும் எந்த மொழியின் துணையுமின்றிப் பேசவும் எழுதவும் முடியும். இதைப் பதினெட்டு மொழிகளைக் கற்றுணர்ந்து ஆய்வு முடிவாக ஆங்கில அறிஞர் இராபர்ட் கால்டுவெல் உலகிற்கு அறிவித்துள்ளார். இதை உலக மொழியியல் அறிஞர்கள் நன்று அறிவர்.
இதன் காரணமாகத்தான் மகத்தான மனிதர், கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொழிப் பிரச்சனை வரும்பொழுது ‘தமிழ் மொழி’யை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கும்படி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று உண்மையாகும்.
வடநாட்டுத் தலைவர்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்கக் கூறினர். ஆனால், அலுவலக மொழியாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் இந்தி தேசிய மொழி அன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கட்தொகை 2001ல் 120 கோடியாகும். இதில் இந்தி மொழி பேசுவோர் 42 கோடியாகும். மேலும், ‘ஆரியவர்த்தா’ என்று அழைக்கப்பட்ட மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், இமாச்சலப் பிரதேசம் போன்றவற்றில் 6 கோடி மக்கள் பிற மொழிகளைப் பேசி வருகின்றனர்.
இந்தியா என்றால் இந்தி இல்லை.
இந்தியா என்றால் இந்தி என்பது வரலாற்று உண்மைக்குப் புறம்பானது. புதிதாகத் தோன்றியுள்ள மாநிலங்களான உத்தர்கண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்றவை தனித்தனியே இலக்கியம், இலக்கணம், எழுத்துக்களைக் கொண்ட மொழிகளைப் பெற்றுள்ளன.
மைதிலி என்ற மொழியை 4 கோடி மக்கள் பேசுகின்றனர். சந்தாலி மொழி பேசுபவர்களையும் இந்தியோடு சேர்த்துள்ளனர். ஆனால் 2003ஆம் ஆண்டு 8வது அட்டவணையில் அதற்குத் தனி அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் போஜ்புரி மொழியை உ.பி.யிலும், பீகாரிலும் 15 கோடி மக்கள் பேசி வருகின்றனர்.
கடந்த காலத்தில் உத்தரப் பிரதேசம் (United Province) இணைக்கப்பட்ட பிரதேசங்கள் என்றும், மத்தியப் பிரதேசம் (Central Province) மையப் பிரதேசங்கள் என்றும் அழைக்கப்பட்டன.
ஆக, அப்பெரும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக இந்தி பேசும் மாநிலங்கள் அல்ல என்பது உண்மை.
கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் நுழைந்த பொழுது இன்றுள்ள இந்தி மொழி இல்லை. பீகாரைக் கிழக்கிந்தியக் கம்பெனியார் வடக்கு எல்லைப் பிரதேசங்கள் (North Frontier Province) என்றனர். உண்மையில் அப்பிரதேசத்தில் முக்கியமாக நான்கு பெரும் மொழிகளைப் பேசி வருகின்றனர். அம்மொழிகள் யாவும் சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன என்பது வரலாறு.
அரியானாவின் மக்கட்தொகை 2001ல் 2.1 கோடி. இதில் 70 விழுக்காட்டினர் அரியானாவி மொழியைப் பேசுகின்றனர். இதில் 68 விழுக்காட்டினர் இந்தி மொழி பேசுகின்றனர் என்பதில் 55 விழுக்காட்டினர் அரியானாவி மொழியினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது ஒரு மொழி மோசடிச் செயலாகும்.
1948ல் ராஜஸ்தானை ‘ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்கள்’ (United States of Rajasthan) என்பர். இதன் மக்கள் தொகை 2001ல் 5.64 கோடி. இதில் 1.6 கோடி மக்கள் மார்வாரி மொழியினர். இந்த மொழி 8வது அட்டவணையில் சேர்க்கப்பட உள்ளது. இதற்குத் தனி எழுத்து உண்டு. மேலும், மேவாரி என்ற மொழியை 52 இலட்சமும், பக்ரி என்ற மொழியை 20 இலட்சமும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
இன்னும் சில மொழிகள் மேவாத்தி, சேக்காவதி, ஹமேவத்தி, துந்தாரி என்று பல மொழிகள் உள்ளன. இந்த மொழிகள் தனித்தனியே பிரதேசங்களைக் கொண்டுள்ளன.
பிராஜ் என்ற மொழியை கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் காணலாம். அதைப் போலவே கொண்டி, சவாரா, கோயா போன்றவற்றை இந்தி என்று அழைக்க முடியாது. அவை திராவிடத் தெலுங்காகும்.
இமாச்சலப் பிரதேசம் தனிக்குழு மொழிகளைக் கொண்டுள்ளது. காஷ்மீரி மொழி தனித் தொகுதியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிலவி வருகிறது.
ஒரே இந்தியா, ஒரே மொழி என்ற போர்வையில் இந்தி மாநிலங்கள் என்று பொய்யாக இந்து சனாதனவாதிகள் கூறி வருகின்றனர்.
இந்தி இலக்கியம் 19ஆம் நூற்றாண்டில்தான் பிறப்பிக்கப்பட்டது. அது ஒரு செயற்கை (Test Tube Baby) குழாய் குழந்தையாகும். அது ஒரு கலப்பின உருவாக்கம். ஆக, இந்தியாவின் ‘சுய பிறப்பு’ மொழி அல்ல என்பது வரலாறு.
பிற மொழி இலக்கியங்கள் இந்தி மொழி இலக்கியங்களாகவும் எழுத்துக்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய மொழிகள்
தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிகளாகும். வடமொழியான சமஸ்கிருதத்திற்கும், திராவிடத் தமிழ் மொழிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இந்தியாவின் பூர்வீக மொழி தமிழும், இதர திராவிட மொழிகளும். இவையாவும் தனி இலக்கிய இலக்கணங்களைக் கொண்டுள்ளன.
ஆக, இந்தியா என்பது இந்தி அல்ல என்பது வரலாறு நிறுவும் உண்மையாகும். அப்படியிருக்கையில், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்றும், அலுவல் மொழி என்பதும் இந்தியாவைச் சிதறடித்து விடுமோ என்ற ஐயம் தோன்றுகிறது.
பாகிஸ்தான் தனது ‘உருது’ மொழியை அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் புகுத்தியது. இதை கிழக்கு பாகிஸ்தானியர்களான ‘வங்காள மொழியினர்’ எதிர்த்தனர். எனவே, பாகிஸ்தானிலிருந்து தனிநாடாகப் பிரிந்தனர். ‘வங்காள மொழி’ பிரித்துவிட்டது. மேற்கு கிழக்கு பாகிஸ்தான் ஒரே மதமான இஸ்லாமாக இருந்தாலும் மொழிப் பிரிவு அவர்களைப் பிரித்துத் தனி நாடாக மாற்றிவிட்டது.
இறுதியாகக் கூறவேண்டிய தீர்வு, அண்ணாவின் இருமொழிக் கொள்கையாகும்.
இன்றைய இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருப்பதற்குக் காரணம் பீகாரைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் ஆவார்.
அகில இந்திய மொழித் தேர்வுக்கு நடந்த வாக்கெடுப்பில், இந்தியை ஆதரித்து 50 விழுக்காடும், எதிர்த்து 50 விழுக்காடும் வாக்குகள் சரிபாதியாக இருந்த நிலையில், பாபு ராஜேந்திர பிரசாத் தலைவர் என்ற முறையில் அளித்த வாக்கில் தான் ‘இந்தி மொழி’ அலுவல் மொழி என்ற அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, அனைத்து மொழிகளும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் தேவையாகும். (All are equal and equality of National Languages).
அனைத்து மொழிகளும் சமம் என்ற கோட்பாட்டின்படி இந்தி படிப்பவரும், தமிழ் படிப்பவரும், ஏனைய மொழியினரும் ஆங்கிலம் என்ற ஒரு தொடர்பு மொழியைப் படித்தால் போதும். அவ்வாறு அல்லாமல், இந்தி படிப்பவர் ஆங்கிலம் என்ற ஒரு மொழி படித்தால் போதும். ஆனால், தமிழ் போன்ற பிற மொழியினர் இந்தியும், ஆங்கிலமும் இருவேறு மொழிகளைப் படிக்க வேண்டும்.
இது ஏன்?
ஆங்கிலம் என்பது அறிவியல் மொழி. இராஜாஜி கூறியதைப் போல் அது உலகத்தின் சாளரமாகும். அறிவியலும், தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள ஆங்கிலம் போதும்.
எனவே, ஒவ்வொருவருடைய தாய் மொழியும், ஆங்கிலமும் போதும். பிற மாநில, மத்திய அரசுடன் தொடர்பிற்கு ஆங்கிலமே வேண்டும் என்பது அண்ணாவின் அறுதியிட்ட மொழிக்கொள்கை ஆகும்.
ஆக, இந்தியைத் திணிக்க முயலும் ஆரிய சனாதன சமூக சர்வாதீனக் கொள்கை இந்தியாவின் மதநல்லிணக்கத்தையும், பன்முகத்தன்மையையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் சிதைத்து சோவியத் உடைந்ததைப் போல் இந்தியாவிலும் நேரிடலாம், எச்சரிக்கை!
- பேரா.முனைவர் வெ.சிவப்பிரகாசம்