காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக்கலைகள் புலத்தின் சார்பாக உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்ச்சி 22. 02. 16 அன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு.சு. நடராஜன் தலைமை உரையாற்றினார். அவர் தமது உரையில் மொழித்திணிப்பு கூடாது. இயல்பாகவே பல மொழிகளைக் கற்க வேண்டும். 

சீனா, ஜப்பான் நாடுகளில்கூட தாய்மொழியில்தான் விஞ்ஞானிகள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.  தாய்மொழித் திருநாள் கொண்டாட வேண்டியதன் தேவையையும் அது உருவான வரலாற்றையும் வரவேற்புரை நல்கிய தமிழ்ப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் எடுத்துரைத்தார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழியல் புலத்தின் தலைவர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து சிறப்புரையாற்றினார்.

அவர், இன்றைய சூழலில் இந்திய அரசு கடைபிடிக்கும் மொழிக் கொள்கை காலத்திற்கு ஏற்ப கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.  மேலும் இன்றைய சூழலில் மொழிஅழிவு- அச் சுறுத்தல், மொழித்தாவல், மொழிக்கலப்பு, மொழியை மீட்டெடுத்தல், மொழி உரிமைப் பிரகடனம் ஆகிய விஷயங்களில் அரசும் மொழி வல்லுநர்களும் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று குறிப் பிட்டார்.  உலகில் ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன.  இவற்றுள் 50ரூ மொழிகள் 2100க்குள் அழித்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.

tamillanguage meeting 600இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் பதினைந் திற்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிட்டன   என்று கவலை தெரிவித்தார்.  இந்நிலையில் அழியும் தறுவாயில் உள்ள மொழிகள் பழங்குடியினரது மொழிகள் கண்டிப்பாக மீட்டெடுக்கப்பட வேண்டும்.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதியைப் பெற்று இப் பகுதியில் அழியக்கூடிய நிலையில் இருக்கும் மொழிக் கென ஒரு புதிய துறையை உருவாக்க வேண்டும்   என்றும் கேட்டுக்கொண்டார். 

இதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் சிறுபான்மையினரின் விடு கதைகள், பழமொழிகள், வழக்காறுகள் முதலியவை ஆவணப்படுத்தப்பட வேண்டும்.  அதற்காக இப்பல்கலைக்கழகம் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

பலமொழிச்சமூகமான இந்தியச் சூழலில் ஒவ்வொரு மாணவனும் குறைந்த அளவிற்கு ஐந்து மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது.  சமஸ்கிருதத்தை நான்காம் மொழி யாகக் கற்கலாம்.  மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுவது, மாணவர்களின் தாய்மொழி அறிவிற்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். 

தமிழ்மொழி வரலாறு மொழிப்போரின் வரலாறாக இருக்கிறது.  வடமொழி ஆதிக்கம் தமிழுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது.  மொழி ஆதிக்கமின்றி மற்ற மொழிகளின் இருப்பை அங்கீகரிக்க வேண்டும்.  அதே சமயத்தில் தாய் மொழியின் இருப்பும் நிலை நாட்டப்பட வேண்டும்.  பல்லுயிர்த்தன்மை போற்றப்படுவதைப்போல மொழிப் பன்மையும் பேணப்பட வேண்டும்.  இதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்.  மொழி பெயர்ப்புச் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும்.

தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். இராசரத்தினம், மலையாளப் பேராசிரியர் ஷாஜி முதலியோர் வாழ்த்துரையும் வழங்கினர்.  புல முதன்மையர் பேராசிரியர்.  மொகல் சலீம் பேக் நன்றியுரை கூறினார்.  இந்நிகழ்ச்சியில், தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர் களுக்குப் பரிசுகளை துணை வேந்தர் வழங்கினார்.

மேலும், விழாவின் இறுதியில் தமிழ், இந்திய மொழிகள் புலத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியோடு உருது, சமஸ்கிருத மொழித் துறைகள் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினர் மொழிகள் மற்றும் அழியும் மொழிகளுக்கான ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட வேண்டுமென அறிவிப்புச் செய்தார்.

Pin It