ilangumaranar 398பழந்தமிழில் எந்த ஒன்றைக் குறிப்பிட்டாலும் என்றாலும் புலவர் பெருமக்கள் அடை மொழிகளாலேயே குறிப்பிடுவார்கள். இருங்குளிர்வாடை (அகம்.337:21), தாழ் இருங் கூந்தல் (அகம்.87:15) நெடுஞ்செவிக் குறு முயல் (பெரும்.115), நெடுமென் பணைத்தோள் (குறுந்.185:2) அம்மென்குவை இருங்கூந்தல் (புறம்.25:13-14).

இவ்வகையான தன்மையில் அடை மொழிகளைப் பெற்ற ஒரு மாபெரும் மூதறிஞரே முதுபெரும் தமிழறிஞர் இரா. இளங்குமரனார். இவ்வகையான மொழிப் பயன்பாட்டுக்கும் தொல்காப்பியர் இலக்கணம் கூறுகின்றார் (தொ.சொ.42). ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என இளம்பூரணர் சான்று கொடுக்கின்றார். சாத்தன் என்பவனுக்கே முன்னுள்ள அடை மொழிகள் பெருமை சேர்க்கும்.

முதுபெரும் தமிழறிஞர், புலவர் என்னும் அடை மொழிகளைப் போகிற போக்கில் ஒருவருக்குக் கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருக்க முடியாது. இரா. இளங்குமரனார் பெற்றுள்ள அடைமொழிகள் அவரின் உயரிய தமிழ்ப் புலமை, நூற்றாண்டை நெருங்கும் நெடிய முதுமை என எல்லாவற்றுக்கும் பொருந்தி வரும்.

1. தமிழ்

திராவிடம் என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல் வந்தது என்பதை இரா. இளங்குமரனார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் உயர் தனிச் செம்மொழி என உலகுக்கு முதன் முதல் அறிவித்தவர் திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல் என்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றார். தமிழ் உயர்தனிச் செம்மொழி என உலகுக்கு முதற்கண் வெளிப்படுத்தி நிலை நாட்டிய கால்டுவெல்ஞ் (தமிழ்ச் சொற்பொருள் வரலாறு 2006:15).

இந்நூலில் தமிழ் என்னும் சொல்லாக்கம், அதன் பொருளை எவ்வாறெல்லாம் அணுகுகின்றார்கள் என்பதை விரிவாக விளக்குகின்றார். தமிழ் என்பது ஓர் ஆக்கப் பெயர். தம்-வேர்ச்சொல்; இழ் ஓர் ஆக்க விகுதி. மண் (புறம்.711) என்பது வேர்ச் சொல் மணல் (மண்-அல, பட்-178) ஓர் ஆக்கச் சொல். மண் என்பது ஒரு வேர்ச் சொல் தெளிவாக பொருளை உணர்த்துகின்றது. மணல் என்னும் ஆக்கப் பெயர் ஒரு வகை மண்ணை உணர்த்துகின்றது. எல்லா வேர்ச் சொற்களும் வெளிப்படையாகப் பொருளை உணர்ந்த வேண்டும் என்பதில்லை. அவற்றுள் குறிப்பாகப் பொருள் இருக்கும். ஆக்க விகுதி சேரும்போது தெற்றெனப் பொருள் வெளிப்படும்.

தமிழ் (தம்-இழ்) என்னும் ஆக்கப் பெயரைப் போன்று குறிப்பாக பொருளைக் கொண்ட வேர்ச் சொல்லுடன்-இழ் என்னும் ஆக்க விகுதியைப் பெற்ற பல வடிவங்கள் பழந்தமிழில் காணப்படுகின்றன.

இமிழ் (இம்-இழ்,புறம்.19:1), உமிழ் (உம்-இழ்,அகம்.31:10) குமிழ் (கும்-இழ்(புறம்.324:9), மகிழ் (மக்-இழ்,நற்.77:12).

இரா.இளங்குமரனார் தம் என்பது உரிமைப் பொருளை உணர்த்தும் என்றும் இமிழ் என்னும் இனிமை உணர்த்தும் சொல்லுடன் சேர்ந்து தமிழ் (தம்-இமிழ்) ஆகும் எனக் குறிப்பிடுகின்றார் (2006:38). ஆய்வுக்கு உரிய ஆக்கமாகும். (தம்-இமிழ்ரீதமிழ்).

மரபிலக்கணங்களில் குறிப்பாகவே தொல்காப்பியர் காலத்தில் இருந்தே புணரியல் கோட்பாடுகள் பல மொழியின் இயல்புக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் புணர்ச்சி விதி கூறும்போது இடர்ப்பாடு ஏற்படுகின்றது.

நிலை மொழியும் வருமொழியும் புணரும்போது இரண்டும் தனிச் சொல்லாகவே இருக்க வேண்டும் என்பது மரபிலக்கணக் கோட்பாடாகும். நான்காயிரம் புணர் மொழியின் நிலைமொழி நான்கு, வருமொழி ஆயிரம். இவை புணரும்போது -கு கெடும்; னகர மெய் லகரமாகத் திரியும். (தொ.எ.468). லகரமெய் னகரமாவதற்குத் தொல்காப்பியத்தில் விதி இருக்கின்றது (தொ.எ.368). ஆனால் குற்றியலுகரப்புணிரியலில் விதி உள்ளதே தவிர, பொதுப்புணர்ச்சி கூறும் புணரியல், தொகைமரபு, உருபியல் போன்ற இயல்களில் இல்லை.

நால்-ஆயிரம் என நிலை, வருமொழியாகக் கொண்டால் மேற்கூறப்படும் மாறுபாடு ஏற்பட வழியில்லை. புணர்மொழிக் கோட்பாட்டை வரையறை செய்யும்போது இப்படிக் கருத்து மாறுபாடு ஏற்படுகின்றது.

2. தமிழ்வளம்

இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் தலைப்பில் மூதறிஞரின் மூளையில் முகிழ்ந்தவற்றை எல்லாம் தொகுத்து வளவன் பதிப்பகம் (2009) இருபது தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. மொழி இலக்கணம், வாழ்வியில் இலக்கணம், கவிதையியல் இலக்கணம் என அனைத்தையும் விளக்கும் வகையில் பேரறிஞரின் நூல்கள் அமைந்துள்ளன.

இந்த இருபது தொகுதிகளில் நான்காவது தொகுதி ஐந்திலக்கணங்களை விளக்கும் நூலாக அமைந்துள்ளது. ஒவ்வோர் இலக்கணக் கலைச் சொல்லுக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் உள்ளது; சான்றுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம்.

2.1. கைக்கினை

அகப்பொருள் வகை ஏழனுள் ஒன்று. ஒரு தலைக்காமம் எனப்பட்டுத் தலைமகன் கூற்றால் நிகழ்வது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் நால்வகையானும் கூற்று நிகழும். (தமிழ் வளம்-4;187)

மேலும் வேறு ஒரு கட்டுரையில் ஐந்நிலத்திற்கும் பொதுவான கைக்கிளை என்னும் ஒருதலைக் காமத்தைக் காமஞ் சாலா இளையவளிடத்தில் தோன்றித் தொடர்பு அறுந்து போனதாகக் கொள்ளக் கூடாது. ஐந்திணைக்கும் கைக்கிளையே அடிப்படையானது இரா.இளங்குமரனாரின் பின் வரும் கைக்கிளைக்கான விளக்கம் மற்ற அறிஞர்கள் கூறியதில் இருந்து வேறுபட்டுள்ளது.

கைக்கிளை என்பது அறிவு அறியாச் சிறுமியை அறிவு அறிந்தான் ஒருவன் கண்டு அவன் மேல் காதல்மொழி பகர்ந்தான் என்பது இல்லையாய்ப் பருவமும் உருவமும் அமைந்தான் ஒருத்தி எனவும் காதற் கிழமைக்கு உரியாள் எனவும் மயங்குக் ஒருத்தியையே கண்டு காதல் மொழி பகர்ந்தான் என்றும் அவள்தான் பெண்மையொடு கூடிய நாணத்தாலோ தன் கருத்தோடு பொருந்தாமையாலோ மறுமொழி கூறினாள் அல்வள் என்றும் அவளே உள்ளகங்கொண்டு அவனை மணங்கூடி மகிழ்தல் உண்டு என்றும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் எனக் கொண்டவை அன்பின் ஐந்திணை எனப்படும் அகநிலை வளர்ச்சிக்குத் தொடக்க நிலையே கைக்கிளை என்றும் ஒழுக்கம் கிளைத்து வளரும் நிலையே கைக்கிளைப் பொருள் என்றும் அக வொழுக்கத்தின் அரும்பு நிலையே அஃது... (கைக்கிளை-மேலாய்வு,ப.161)

தொல்காப்பியத்திற்கு இளம்பூரணார், சேனாவரையர், நச்சினாக்ககினியர், தெய்வச் சிலையார், கல்லாடைனார் போன்றோர் உரை எழுதியுள்ளார்கள். அவற்றை எல்லாம் இரா.இளங்குமரனார் பதிப்பித்துள்ளார்.

3. வழக்குச் சொற்கள்

பெரும்பான்மையான மூத்த தமிழறிஞர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கிய ஆய்வுகளிலேயே திளைத்து விடுவர். அவ்வாறு ஆய்வதற்கு அவற்றில் அவ்வளவு செய்திகள் உள்ளன. மரபிலக்கணத்திலும் பழந்தமிழ் இலக்கியங்கள் தோய்ந்த மூதறிஞர் இரா.இளங்குமரனார் வழக்குச் சொற்களைத் தொகுத்து ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது (வழக்குச் சொல்லகராதி,1989).

4. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்

இத்தலைப்பில் மூதறிஞர் இரா.இளங்குமரனார் பத்துத் தொகுதிகளில் சொற்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளார். தமிழ்மண் பதிப்பகம்வழி 2018இல் வெளி வந்துள்ளன. சங்க இலக்கியங்கள், பிற இலக்கியங்கள், வழக்கு மொழி என எல்லாவற்றில் இருந்தும் சான்றுகளைத் தொகுத்து விளக்கம் அளிக்கின்றார். அத்தாச்சி என்னும் உறவு முறைப் பெயருக்குப் பின்வருமாறு விளக்கம் உள்ளது.

அத்தாச்சி: அத்தை-ஆ(ய்)ச்சி ரீ அத்தாச்சி; அத்தாச்சி-அத்தையைப் பெற்றதாய். அத்தாச்சி எனப்படுதல் மதுரை வழக்கு. ஆய்ச்சி-ஆயர் மகளிர், ஆய்ச்சி-அம்மை. அம்மையைப் பெற்றவர் அத்தாச்சி. (செந்.சொற்.களஞ்.1:151)

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த உறவு முறைப் பெயர் முற்றிலும் வேறுபட்ட பொருளைக் கொடுக்கின்றது. அத்தையின் மகள் எனப் பொருள் படும். ஆய்ச்சிரீஆச்சி என யகரமெய் இழந்துள்ளது. இதனை மேலும் விளக்க வேண்டும் என்றால் ஆய்-என்னும் வேர்ச் சொல்லுடன் மரபிலக்கணங்களில் குறிக்கப்படாத ஆனால் பழந்தமிழில் பயன்று வந்துள்ள பெண்பால் விகுதி இகரம் சேர்ந்த பெயராகும். இடையில் வரும்-த்-என்பது சாரியை.

ஆய்-த்-இரீ ஆய்த்தி (கலித்.108:9). அண்ணவினமாதல் (palatalization) என்றும் விதியின்படி த்தரீச்ச் எனத்திரியும். ஆய்ச்சியர் (கலித்.106:32) முன்னுயிர் இ, யகரமெய் அடிச் சொல்லில் வரும்போது இத்திரிபு ஏற்படும் கொடிச்சி (நற்.22:1< கொடித்தி). பிற சூழலில் அண்ணவினமாதல் மாற்றம் நிகழாது. உழத்தி (சிலப்.12:12:2) கிழத்தி (தொ.பொ.90:3).

இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். தனி ஒருவராக இருந்து மூதறிஞர் செய்துள்ள தமிழ்ப் பணிகளை நினைக்கும்போது வியப்பாக உள்ளது. தொல்காப்பியம் சொற்பொருட் களஞ்சியம் என வந்துள்ள தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

அரசினர் கல்லூரி எதிலும் இளங்குமரனார் போல் அகர முதலிப் பணியாற்றுவார் யாருமில்லை. ஆங்கிலப் பெரும் பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர் போல் இலக்கணம் கற்றாரும் ஆய்ந்தாரும் ஒருவருமில்லை.  (செந்.சொற்.களஞ்.பின்னட்டை)

என மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் கூற்று மிகைப்படுத்திக் கூறியதன்று. அந்த அளவிற்கு இலக்கண, இலக்கிய, வழக்குச் சொற்களைத் தொகுத்து விளக்கம் அளித்துள்ளார். நாட்டுப் புறவியலில் ஈடுபாடு கொண்ட கி.ராஜ்நாராயணனையும் இந்த இடத்தில் நினைவு கூர்தல் வேண்டும்.

இரா.இளங்குமரனார் தமிழில் பதிவான சொற்களையும் வழக்குச் சொற்களையும் தொகுத்து விளக்கம் அளித்துள்ளார் என்றால் கிரா பதிவாகாத நாட்டுப் புற வழக்காறுகளாகிய கதை, பழமொழி போன்றவற்றை எல்லாம் தொகுத்துள்ளார். வழக்குச் சொல்லகராதியும் (அன்னம்2008) கிராவின் குறிப்பிடத் தக்க தமிழ்ப் பணியாகும்.

கிராவும்(99) இரா.இளங்குமரானாரும்(91) நூற்றாண்டைத் தொடும் அளவிற்கு நிறைவாக வாழ்ந்தவர்கள். தமிழே அவர்களை வாழ வைத்துள்ளது. பாவேந்தரின் பின்வரும் பாடலைப் படிக்கும்போது இவர்களைப் போன்ற சான்றோர்களும் நினைவுக்கு வருகின்றார்கள். அரசியல் மாற்றங்களும் நினைவுக்கு வருகின்றன.

உனக்கு வந்த நலம் எமக்கு வந்ததாகும்

உனக்கு வந்த வெற்றி எமக்கு வந்ததாகும்

தனக்கென வாழ்ந்தது சாவுக்கு ஒப்பாகும்

தமிழுக்கு வாழ்வதே வாழ்வ தாகும்!

தமிழே உனக்கு வணக்கம்         (பாரதிதா.கவி.ப.731)

மொழியால் எல்லாம் முடியும். ஓர் இனம் பேசும் தாய் மொழியை அழிக்கவும் முயற்சி செய்கின்றார்கள். மொழிகளை அழித்து ஒரு மொழியை வளர்க்க நினைப்பது சுடுகாட்டில் மாளிகை கட்டுவது போலாகும். தாய்மொழிப் பற்று ஒவ்வொருக்கும் இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியும்.

செவ்வியல் தகுதி பெற்ற செந்தமிழுக்குச் செழுமையான இலக்கிய இலக்கண வளம், வழக்கு மொழி வளம் போன்றவை இருக்கின்றன. தமிழின் தொன்மைக்குத் தூண்களாக அகழாய்வுப் பொருள்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. தமிழன்னையின் பெருமையை நிலைநாட்டப் பாடுபட்டால் யார் ஆண்டாலும் மக்கள் மனதில் நிலை பெறுவார்கள்.

மேலே குறிப்பிட்டவாறு மூதறிஞர் இரா. இளங்குமரனார் எழுத்துப் பணியோடு நின்று விடாமல் தமிழர் பண்பாடு, நாகரிகத்தை மக்களிடம் கொண்டு செல்வதிலும் முன்னத்தி ஏராக நின்றுள்ளார். தமிழுக்குத் தமிழில் எழுதிக் குவித்துள்ளமை போலத் தமிழின் தொன்மையையும் வேறு மொழிகளுக்கு இல்லாத பெருமையையும் மகிழ்ச்சி மேலிட வெளிப்படுத்துகின்றார்.

தமிழ் மொழி-இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது மொழி இலக்கணமே எனினும் தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். (தொ.பொ.நச்சர் உரை-2:3)

என ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியம் பற்றிக் குறிப்பிடும்போதும் பின்வருமாறு சங்க இலக்கியங்களைக் குறிப்பிடும்போதும் நெஞ்சம் நிமிர்ந்து செம்மாந்து நிற்கின்றது.

சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதினெட்டு நூல்களும் மாபெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக்கருவூலம் போல எச்செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புது பொலிவுடன் வற்றா வளஞ் சுரக்கும் உயிர் ஆறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியால் கணினி மொழியாய்-கலைமலி மொழியாய்-விளங்கும் புத்தம் புது மொழியாய்-எம்மொழி உலகில் உள்ளது? (பாவேந்தம்-3:ஸ்)

தமிழன்னையின் வரலாற்றில் சுவடி, கல்வெட்டுகளும் குறிப்பிடத் தக்கவை ஆகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழைக் காட்சிப் படுத்துபவை கல்வெட்டுகள். பழந்தமிழ் முதற் கொண்டு காலந்தோறும் வளர்ந்த தமிழைக் கட்டிக் காத்தவை சுவடிகள். காலந்தோறும் தமிழுக்குத் தாலாட்டுப் பாடும் தொட்டில்.

5. சுவடிக்கலை

அறியாமையாலும் வஞ்சகத்தாலும் எவ்வளவோ சுவடிகள் அழிந்து விட்டன. உ.வே.சாமிநாதையர் உட்படப் பல சான்றோர் பெருமக்கள் தமிழ்ச் சுவடிகளைப் பெறவும் பதிப்பிக்கவும் அவ்வளவு பாடுபட்டுள்ளார்கள். நம்முடைய கையில் தவழும் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அற இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பிற இலக்கண நூல்களும் நிகண்டுகளும் சும்மாக் கிடைத்தவை அல்ல. பல மடங்களும் தனிப்பட்டோரும் பாடுபட்டுக் காத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தவை. சுவடிக்கலை (அரிமாப் பதிப்பகம், சேலம்,19991) என்னும் நூலில் மூதறிஞர் இரா. இளங்குமரனார் சுவடி பற்றிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றார்.

தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு புராணம், இதிகாசங்களால் புனையப்பட்டவை அல்ல. இலக்கிய இலக்கணங்கள், கல்வெட்டுகள், தொல்பொருள்களில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் ஒளிர்கின்றன. சுடச்சுடரும் பொன்போல் (திருக்.267) கீழடியில் சிறிய அளவிலான அழகாய்விலேயே தமிழரின் வரலாறு கி.மு 300 என நீண்ட காலமாகக் கட்டி வைத்திருந்த மடையை உடைத்துக்கொண்டு கி.மு.600இல் நிற்கின்றது. தோண்டத் தோண்ட இன்னும் இன்னும் பின்னோக்கிச் செல்லும். வாழிடம், புழங்கு பொருள் போன்றவற்றின் நேர்த்தியைக் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் அகழாய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வளவு நேர்த்தியைப்பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் பின்னோக்கி நீண்டிருக்கும்! மேலும் பூம்புகார் போலக் கடற்கரைகள், ஆதிச்சநல்லூர் முதற் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதிவரை அகழாய்வு செய்து சிந்து வெளியுடன் ஒப்பிட வேண்டும்.

மூதறிஞர் இரா.இளங்குமரனார் வடக்கில் தொடங்கிய ஆரியப் பரவல் தெற்கு நோக்கியதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

தமிழர் பனிமலை வரை பரவியிருந்த காலையில் ஆங்குப் புகுந்த ஆரியர் படிப்படியே தெற்கில் பரவினர். அரசர்களைத் தழுவி நின்று அவர்களைத் தம் வயப்படுத்தினர். வேத வேள்வி முறைகளே அவர்களே மேற்கொண்டு நடாத்தும் ஏற்பாட்டையும் செய்தனர். அரசியல் செல்வாக்குக் கிடைத்து விட்டால் ஆட்டிப் படைத்தல் என்பது எளிதாகி விடும் அல்லவா? (தனித்தமிழ்,1991,பக்-49-50)

புதிதாகப் பதவி ஏற்றுள்ள தமிழக அரசு இன்னும் நியைப் பாராட்டுகளைப் பெற வேண்டும். நோண்டி நுங்கு எடுப்பது என்பார்கள். அவ்வாறு எங்கெங்கு தமிழக வரலாறு பூமிக்குள் கிடக்கின்றதோ அவற்றை எல்லாம் அகழ்ந்து வெளிக் கொண்டு வர வேண்டும். சான்றோர், பொது மக்கள் என அனைவரும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பார்கள். தமிழர் பரவி வாழ்ந்த இடங்களை எல்லாம் ஆய்வு செய்து தமிழர் தொன்மையை - திராவிட இனத்தின் பெருமையை வெளிப்படுத்த முனையும் தமிழக முதல்வர்க்கும் அரசுக்கும் நன்றி கூற வேண்டும்.

6. தனித்தமிழ்

மூதறிஞர் இரா.இளங்குமரனாரின் தனித்தமிழ் இயக்கம் (மணிவாசகர் பாதிப்பகம், சென்னை,1991) என்னும் நூலும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். மக்கள் ஒன்றிப் பழகினால் தேவபாடை, மக்கள் மொழி என்றெல்லாம் மொழிகள் தீட்டுப் பார்க்காமல் ஒன்றில் இருந்து மற்றொன்று வாராக் கடனாக எடுத்துக் கொள்ளும். தமிழில் திணிக்கப்பட்ட வடமொழிச் சொற்களே ஏராளம். திணித்து விட்டு இப்படியும் கூறுவார்கள்.

அன்றியும் தமிழ் நூற்கு அளவு இலை அவற்றுள்

ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?     (இல.கொத்.பாயிரம்.7)

இப்படிப் பட்டவர்களைக் குறை கூற முடியாது. இடைக்கால மன்னர்களைக் கூற வேண்டும். மதம், பக்தி வளர்க்க அவர்கள் செய்த காரியங்களால் பட்டுச் சேலையைத் தூக்கிக் கொடுத்துத் தடுக்கைத் தூக்கிக் கொண்டு மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், இரா. இளங்குமரனார் என இன்னும் பலர் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பலர் உயிரையும் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறு மூதறிஞர் இரா.இளங்குமரனாரின் நீண்ட கால வாழ்ககையைப் போல அவரின் தமிழ்ப் பணியும் நீண்டுள்ளது. அண்மையில் கூட இலக்கண உரையாசிரியர்கள்: தொல்காப்பியம் (நான்காம் தமிழ்ச்சங்கம், மதுரை, 2019) என்னும் நூல்கள் வெளி வந்துள்ளதுன!

மூதறிஞர் இரா.இளங்குமரனார் தமிழ் தொடர்பான பல்துறைகளில் முத்திரை பதித்து நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். தனித்தமிழ், பதிப்பு போன்றவற்றால் பல தமிழறிஞர்களோடு இணைவதை ய.மணிகண்டன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இரா.இளங்குமரனார் தமிழறிஞர் திருக்கூட்டத்தில் முக்கியமான ஒருவர் என்னும் நிலையில் மட்டுமல்லர். வரலாற்று நிலையில் கருதிப் பார்க்கையில் ஒருபுறம் பரதிமாற் கலைஞர் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் என்னும் மரபில் அவர் ஒரு தனித்தமிழ் இயக்கப் பேராளுமை. இன்னொரு புறம் பழந்தமிழ் நூல்கள் தொடங்கிப் பைந்தமிழ் நூல்கள் ஏராளமானவற்றைச் செம்மையுறப் பதிப்பித்தளித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், எஸ்வையாபுரிப்பிள்ளை என்னும் நிரலில் ஒளிரும் பதிப்பாசிரியச் செம்மல்.

பிறிதொகு நிலையில் பனி மூடிய பண்பாட்டைத் தமிழ் இலக்கண, இலக்கியச் செல்வங்களை உரை ஒளிகாட்டித் துலக்கும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டு கண்ட ஏற்றமிகு உரையாசிரியர். (தினமணி,28.72020,ப.10)

அண்மையில் மறைந்த கி.ராஜ்நாராயணன், இரா.இளங்குமரனார் போன்றோர் பேறு பெற்றவர்கள். தமிழையே வாழ்க்கையாகக் கொண்டோருக்குத் தமிழக அரசு அளிக்கும் இறுதி மரியாதையை விட வேறு என்ன புகழ் வேண்டும்?

சங்ககாலத்தில் புலவர்களும் கலைஞர்களும் கடுமையான வறுமையில் வாடினார்கள். சிலரைத் தவிர, பெரும்பாலான மன்னர்களும் குறுநில மன்னர்களும் அவர்களை ஆரத்தழுவிப் பாதுகாத்துள்ளார்கள்! படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும்.

7. புகழஞ்சலி

மறைந்தவர்களுக்கு அரசின் இறுதி மரியாதை, நினைவு மண்டபம் போல இருப்பவர்களுக்குக் கனவு இல்லம், சாதனையாளர் விருது கொடுப்பவை எல்லாம் பாரட்டத்தக்கவை. தமிழக அரசு மேலும் கவனம் செலுத்தி, முத்தமிழுக்காக வாழ்நாள் முழுவதையும் கரைத்தவர்களை இனங்கண்டு அவர்களின் இறுதி நாட்கள் வறுமையில் வாடாமல் இருக்க உதவ வேண்டும்.

விடுதலை என்றால் நாட்டு விடுதலை என்று முதன்மையாகப் பேசப்பட்ட காலத்தில் நாட்டு விடுதலையோடு மக்களும்-குறிப்பாக அடிமைகளாக வாழும் மக்களுக்கும் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்று பொதுவுடைமைக் கட்சி போராடியது. நாட்டுக்கு விடுதலை கேட்டோர் உழைக்கும் மக்களுக்கு விடுதலை கொடுக்க விரும்பவில்லை.

களப்பால் குப்பு சிறையில் கொல்லப்பட்டார் இரணியன் (மாவீரன் வாட்டாக்குடி இரணியன், 1991) சிவரமான் (சாம்பவானோடை சிவராமன்,1991), ஆம்பல் ஆறுமுகம் போன்ற பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அக்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியில் தீவிரமாகப் போராடியவர்களே ப. ஜீவனாந்தம், சி.எ.பாலன், இரா. நல்லக்கண்ணு, பொதுவுடைமைப் போராளி ஏ.எம்.கோபு (2010), தகைசால் தமிழர் விருது பெறும் சங்கரய்யா போன்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

அக்காலக் கட்டத்தில் மலேயாவில் தொழிற் சங்கம் அமைத்துத் தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர் சேர்ந்த மலேயா கணபதி. இந்தியாவிற்கு வந்து அண்ணல் அம்பேத்காரைச் சந்தித்துள்ளார். ஆங்கில அரசு தேச விரோசக் குற்றம் சாட்டித் தூக்குத் தண்டனை கொடுத்தது.

மேலே குறிக்கப்பட்டுள்ள பொதுவுடைமைப் போராளிகள் தொடர்பாகத் தரவு திரட்டியபோது ஒரு முக்கிய செய்தி கிடைத்தது. மேனாள் முதல்வர் கலைஞர் இளம் வயதில் மலேயா கணபதி பற்றி அறிந்து தூக்கில் தொங்கிய கணபதி என்றொரு சிறு நூலை எழுதியுள்ளார்.

கலைஞர் தூக்கில் தொடங்க விடப்பட்ட கணபதிக்கு நூல் எழுதியதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு கடந்து வாழும் தோழர் சங்கரய்யாவுக்குத் தகைசால் தமிழர் விருது வழங்குவதற்கும் ஒரு தொடர்பு இருப்பதை அறியலாம். தோழர் இரா. நல்லகண்ணு போன்றோர் உழைக்கும் மக்களுக்காகப்பாடுபட்டு பட்ட வேதனையைச் சொல்லிமாளாது. ஆளும் வர்க்கம் எது எதற்கோ ஆசைப்படும். தோழர் நல்லகண்ணுவின் மீசை முடி மீது ஆசைப்பட்டுக் குறடு கொண்டு பிடிங்கி எடுத்துள்ளது. ‘இருந்தால் தானே புடுங்குவே?’ என்று வாலிப மிடுக்கைக் காட்டும் மீசையையே உழைக்கும் மக்களுக்காத் தியாகம் செய்து பெருமை பெற்றவர்

இப்படி நாம் பேசும் மொழி, வாழும் நாடு, பெற்றுள்ள உரிமைகள், கிடைத்துள்ள நாகரிக, பண்பாட்டு விழுமியங்கள் வெறும் கொட்டலில் கிடந்து பொறுக்கியவை அல்ல. பல சான்றோர்களின் அறிவாலும் ஆற்றலாவும் சிந்திய குருதியாலும் விளைந்தவை. ‘ஓடுறவன் பாடிட்டுப் போவான்’ என்பார்கள். தொல்பொருளாய்வு வெட்டி வேலை என்கின்றார் துர்வாசர் இப்படிக் கூறியதற்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள்- பின்னூட்டங்கள் வியக்க வைக்கின்றன. சின்ன தனமாமாகச் சொல்லிவிட்டு இப்படிப் பெரிய அளவில் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? மதம்பிடித்து, சாதியால் உயர்வு, தாழ்வு கற்பித்த இவர்களின் முன்னோர்களையும் வெளுத்து வாங்குகிறார்கள். சிலருக்கு வாங்கிக் கட்டிக்கொள்வது வாடிக்கை ஆகிவிட்டது.

பழந்தமிழர் வாழ்வியல் எச்சங்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல் பூமிக்குள்ளும் கிடந்து ஒளிர்கின்றன. அகழ்ந்து எடுத்து உண்மையான தமிழர் வரலாற்றை நிலை நாட்டுகின்றார்கள். கூந்தல் உள்ளவள் சீவி முடித்துச் சிங்காரிப்பது வெட்டி வேலை என்றால் இல்லாத சரசுவதி நாகரிகத்தைக் கண்டு பிடிக்கப் பல நூறு கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வதற்கு என்ன பெயர் கொடுப்பது?

பேரறிஞர் இரா.இளங்குமரனாரின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி பின்வருமாறு உள்ளது.

இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லத்தோறும் நிலை நிறுத்துவதற்காக தனது 94வது வயதிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்ஞ் வட மொழி-பிற மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைப் பாதுகாக்கும் முனைப்புடன் சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து 4ஆயிரத்திற்குப் மேற்பட்ட திருமணங்களைத் திருக்குறள் படித்து தமிழில் வாழ்த்தி நடத்தி வைத்தவர் இளங்குமரனார். 500க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். (தினமணி,27.7,2021.ப.5)

தனது கடன் தமிழுக்குத் தொண்டாற்றுவது என்கிற உணர்வுடன் ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழாகவே உலவிய அந்தப் பெருமகனின் அளப்பரிய பங்களிப்புகள் தமிழ் வாழும் நாள் வாழும்; பதிப்பாளராக, உரையாகிரியராக, இலக்கிய, இலக்கண ஆய்வாளராக எல்லாவற்றிற்கும் மேலாக, ‘குறள் வழி வாழ்வு’ என்கிற உயரிய சமூகக் கோட்பாட்டை உருவாக்கிய பெருமகனாக இளங்குமரனார் ஆற்றியிருக்கும் பணிகள் மலைப்பை ஏற்படுத்தும். (தினமணி,1.8.2021,ப.6)

என்னும் கலாரசிகனின் பதிவும் பின்வரும் செந்தலை ந.கவுதமனின் பதிவும் முறையே மூதறிஞர் இரா. இளங்குமரனாரின் நெடுங்காலத் தமிழ்ப் பணியையும் அவரின் பெரியாரைத் துணக் கோடல் என்னும் தெளிவான சிந்தனையையும் புலப்படுத்துகின்றன.

திருவள்ளுவர், மறை மலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர் நால்வரும் தந்த நூல் வெளிச்சத்தில் நடப்பதாகப் பெருமிதம் கொள்பவர் இளங்குமரனார். தமக்குப் பெயர் தந்தவராக மறைமலை அடிகளாரையும் நெஞ்சம் தந்தவராகத் திரு.பி.க.வையும் தோள்தந்தவராகப் பாவாணர், இலக்குவனாரையும் துணிச்சல் தந்தோராகப் பாரதியார் பாவேந்தரையும் குறிப்பிடுவது இளங்குமரனார் வழக்கம். (இந்து-தமிழ், திசை,1.8.2021,ப.6)

மூதறிஞர் இளங்குமரனார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்! பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் வழித் திருமணம், குட முழுக்கு போன்ற விழாக்களை நடத்தி உள்ளார். தமிழக அரசு அவருக்கு இறுதி மரியாதை அளித்துப் பெருமை சேர்த்தது போல அவரின் நூல்களையும் நாட்டுடைமை ஆக்கி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்ற நூல்களின் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த மூதறிஞர் இரா.இளங்குமரனார் திரு.வி.க.,பாவேந்தர், தேவநேயப் பாவாணர் போன்றோரின் நூல் தொகுப்புகள் வரவும் காரணமாக இருந்துள்ளார்.

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு, தமிழரின் நாகரிகம் பண்பாடு என அனைத்தையும் வருங்காலம் அறிந்து கொள்ள முழுமையாகப் பதிவு செய்து, நிறைவாக வாழ்ந்து இயற்கை எய்தி உள்ளார் முதுபெரும் தமிழ்ப் பேரறிஞர் இரா. இளங்குமரனார்.

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It