நினைவோடை

தோழர் ச.சீ.கண்ணன் அவர்கள் 94 வயதில் மறைந்தார்.

இறந்த செய்தி தெரிந்தபோதே அவர் உடல் கொடையாக மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டு விட்ட செய்தியும் தெரியவர, இறுதியாகப் பார்க்க முடியாதது கூடுதல் வருத்தம். அவர் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிய எனக்கு அவர் இறப்புக்குகூட போக வாய்க்காதது நல்ல தண்டனையே.

kannanசெய்தி தெரிந்ததும் வீட்டுக்குச் சென்று தோழர் மனைவியை சந்தித்து விட்டு அடுத்த நாள் தோழர்களுடன் மருத்துவமனை சென்று பிணவறையில் இருந்த அவர் உடலை பார்த்துவிட்டு வந்தேன்.

வீட்டில் அவர் மனைவியை சந்தித்தபோது வினோத்குமார், உங்க தோழர் சகாப்தம் முடிந்துவிட்டது என்றுதான் பேசத் துவங்கினார்.

ஆம், உண்மையில் அவர் ஒரு சகாப்தமே.

இடதுசாரி அமைப்புப் பணி, எழுத்தாளர் பணி, மொழிப்பெயர்ப்பு பணி என அவர் செயல்பாடுகள் நீண்டாலும்.. . பார்வையற்றவர்களுக்கான அவரது பணியும், காரல் மார்க்ஸ் நூலகத்தை உருவாக்கிய பணியும் அவற்றில் முதன்மையானவை ஆகும்.

இதில் மாற்றுத் திறனாளர்கள் நடுவில் அவர் பணிகள் விரிந்த அளவு.. . நூலக விடயத்தில் இடது தோழர்களிடம் வெற்றியடையாதது மிகப் பெரும் துயரம்.

2012இல் தோழர் ரமணி மூலம் முதல் முறையாக காரல்மார்க்ஸ் நூலகம் சென்றபோது, ஏற்ப்பட்ட முதல் அனுபவம் பல ஆச்சர்யங்களும் வருத்தங்களும் நிறைந்தது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல் முறை பார்த்த போதே இடதுசாரி தோழர்களுக்காக இப்படி ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்ற பெருங்கனவு உண்டானது. அரசியல் தொடர்பாக உலக அளவில் வந்துள்ள அனைத்துப் புத்தக்கங்களும், வெளியாகும் அனைத்து இதழ்களும் கொண்ட ஒரு நூலகம். தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் களமாக, கருத்தரங்கங்கள், விவாதங்கள் நடப்பதற்கான வசதிகள் கொண்ட, அனைத்து இடது சாரி இயக்கத் தோழர்களும் பயன்படுத்தும், ஆயிரம் கருத்துக்களும் மோதி வளர்ச்சிகான பாதை மலரும் இடமாக ஒரு நூலகம், என வண்ண வண்ணச் சிகப்புக் கனவுகள்.

மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகப் புத்தகங்களுக்கான தேடலின் போது தோழர் ரமணி காரல்மார்க்ஸ் நூலகம் பற்றி கூற அவருடன் சென்றேன்.

வீட்டில் நுழைந்ததும் சுமார் 90 வயது ஒட்டிய இளம் தோழர், ஒற்றைக் கண் பார்வையுடன், கையில் பூதக் கண்ணாடி உதவியுடன் புத்தகத்தில், தேடலில் இருந்தார். தோழர் ச.சீ.கண்ணன் ஆச்சர்யம் தந்தார்.

மாடிக்குச் சென்று நூலகத்தைப் பார்த்ததும் அசந்து போனேன். 90% மேல் அரசியல் நூல்கள்… குறிப்பாக இடது புதையல்கள்.

மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட அனைத்து ஆங்கில, தமிழ் நூல்கள், ருஷ்ய, சீன, உலக முற்போக்கு நாவல்கள், மார்க்ஸ் முதல் மாவோ வரை தொகுப்பு, தேர்வு நூல்கள் என அரிய நூல்கள்.

மாக்சிய மெய்யியல், பொருளாதாரம், மாக்சிய அரசியல் என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி அலமாரி. . . அனைத்தும் ஆங்கில நூல்கள்.

உலகத் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் கண்டம் வாரியாக பிரிக்கப்பட்டு 4 அலமாரி முழுக்க தூசிபடிந்த நிலையில்.

இந்தியத் துணை கண்டத்தில் உருவாகி, பல்கி பெருகிய A முதல் Z வரை துவங்கி A10 முதல் Z10 வரை என அனைத்து இந்திய இடது அமைப்புகள், அ முதல் ஃ வரையிலான அனைத்துத் தமிழ்தேசிய அமைப்புகள், முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்களின் ஆவணங்கள், வெளியீடுகள், புத்தகங்கள், அனைத்தும் இருந்தன.

இது தவிர கவிதை நூல்கள், நாவல்கள், பல மொழி அகராதிகள், இலக்கிய இலக்கண நூல்கள், இசை நூல்கள், பார்வையற்றவர்களுக்கான புத்தகங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில்.

சோவியத் ஒன்றியத்தில் ஆங்கிலத்தில் பதிப்பித்து வெளிவந்த இதழ்கள் அனைத்தும் கட்டுகட்டாய். இந்திய அளவில், தமிழக அளவில், உலக அளவில் வெளிவந்த பல ஆங்கில, தமிழ் இதழ்கள், செய்தித் தாள்கள் என நீண்ட பட்டியல்.

Main Stream, Aspects of Indian Economy, Third World Resurgenceபோன்ற பல இதழ்களை முதன் முறையாக அங்குதான் பார்த்தேன்.

ஒரு இடது சாரி அமைப்பு செய்ய வேண்டிய, செய்யத் தவறிய இப்படி ஒரு நூலக பணியைத் தனி மனிதராக மிகச் சிறப்பாகச் செய்துக்கொண்டிருந்தார்.

ஆனால் கொடுமை என்னவென்றால் யாரும் பயன்படுத்தாமல் அனைத்தும் தூசி ஏறிபோய் இருந்ததுதான்.

இடதுசாரி தோழர்களில் எந்தனை சதவீதம் பேருக்கு இப்படி ஒரு நூலகம் இருப்பது தெரியும். எத்தனை அமைப்புகள் தம் தோழர்களுக்கு இந்த நூலகத்தை அறிமுகப்படுத்படுத்தினார்கள்?

மக்களுக்கான அரசியல் செய்ய வாசிப்பே தேவையில்லையா? இல்லை வாசிப்பு இருந்தால் கேள்வி கேட்பார்களோ என்ற அச்சமா?

எப்படியும் பொது மக்கள் யாரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தப் போவதில்லை. இடதுசாரித் தோழர்களும் இதைப் பயன்படுத்தவில்லை எனில் எதற்காக இத்தனை புத்தகங்கள்? யாருக்காக?

ஒட்டுமொத்த அவரது உழைப்பையும் கேவலப்படுத்திய இடதுசாரிகள் புறக்கணிப்பு இது.

பொதுவுடமை இயக்க தோழர்களை பொருத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையே முழுவதும் படிக்காதவர்கள் குறைந்தது 60% இருப்பர் எனில் பாட்டாளி வர்க்கத்தின் கதி என்ன?????

போல்ஷ்விக் கட்சி வரலாறு கூட முழுமையாக படிக்காமல் நம்மில் எத்தனை பேர் ருஷ்யப் புரட்சி பற்றி அளந்துக்கொண்டிருக்கிறோம். யாரை ஏமாற்றிகொண்டு இருக்கிறோம்?? மக்களையா? நம்மையா?

இதில் பல தோழர்கள் “ நாங்கள் எல்லாம் நடைமுறையில் அரசியல் கத்துக்கிறோம் தோழர்” என்ற அர்த்தமற்ற பெருமை பேசுவர், தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் கலையின் முக்கியத்துவத்தை அறியாமலும் . . . அறிந்தும் . . . .

இப்படிபட்ட சமூகத்தில் 90 வயதில் ஒற்றைப் பார்வையுடன் கையில் பூதக் கண்ணாடி வைத்து கொண்டு, Aspects of Indian Economy என்ற நூலில் சமூக அடிக்கட்டுமானத்தின் தன்மையைத் தேடிக்கொண்டிருக்கும் இவரின் அரசியல் தேடல் அழகிய கவிதை.

யாருக்காக படிக்கிறார்? இன்னும் எதற்காக இந்தத் தேடல்? தேடலில் பெற்றதையும், பெற்றதைச் சிந்தித்து அதில் பெற்றதையும் யாரிடமும் பகிர வாய்ப்பில்லை. இவருடன் உரையாட யாரும் வரபோவதில்லை. எழுத்துப் பணி செய்யும் சூழலில் அவரும் இல்லை. பின் எதற்காக?.

வாசிப்பின் மீதும் புத்தகங்கள் மீதும் அவருக்கான காதல் அற்புதமானது.

தோழர் எஸ்.வி.ஆர். உடன் இணைந்து காரல் மார்க்ஸ் நூலகத்தை உருவாக்கினார். பின் கருத்து முரண் காரணமாக இருவரும் பிரிந்துவிட, சி.ஐ.டி. நகரில் இவர் வீட்டு மாடியில் நூலகத்தை நடத்திவந்தார். புத்தகங்கள், இதழ்கள் திரட்ட, இவர் எடுத்த முயற்சிகள் தனி வரலாறு. வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் மூலம் அங்கு வெளிவரும் புத்தகங்களை உடனுக்குடனே வரவைத்துவிடுவார். இவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் பெரும்பகுதியை அதற்காக செலவிட்டார்.

ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்தெல்லாம் இடதுசாரித் தோழர்கள் புத்தகம் படிக்கவே இங்க வருவதை பற்றி மகிழ்ச்சியுடன் கூறுவார்.

”அப்போதெல்லாம் புலிகள், டெலோ எனப் பல போராளிக் குழுக்களும் இங்கே படிக்க வருவாங்க. எங்க அவர்களுக்குள் சண்டை வந்துடுமோனு கொஞ்சம் பயமாவும் இருக்கும்” எனச் சிரித்துகொண்டே கூறினார்.

இப்படி பல விடயங்கள் கூறினாலும், பெரிய அளவிலான பயன்படுத்தல் என்பது இந்த நூலகத்தில் நிகழ்ந்ததே இல்லை என்பதே உண்மை. இருப்பினும் நூலகர் நியமித்து புத்தக பட்டியல் முதல் நூலகத்துக்கான அனைத்து ஆவணங்களும் முறையாகப் பராமரிப்பார். அதுவும் இறுதி பத்தாண்டுகளில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10ஐ தொடவில்லை.

மற்றபடி பல பேர் அவர்களுக்குத் தேவையான அரிய புத்தகங்களை எடுத்துக் கொள்வதற்கு மட்டும் தேவையான போது இந்த நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர். வரலாற்று நோக்கில் மொத்த இடதுசாரிகளுக்கும் பயன்பட வேண்டிய இந்த நூலத்தில் தோழர்களே நடத்திய புத்தகக் களவாடல்கள் பற்றி என்ன சொல்ல? இது அவரை மிகவும் எரிச்சலூட்டியது. புத்தக விடயத்தில் தோழர்கள் மீது அவருக்கு மிக பெரிய அவநம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.

தோழர் அறிவொளி, தோழர் ரமணி, நான் மூவர் மட்டும் தொடர்ச்சியாகப் போவோம். அறிவொளி கொஞ்ச காலம் நூலகம் பார்த்துக்கொள்ளும் வேலை செய்ததார். அதன் பின் வேறு ஒரு பெண் பணியில் அமர்ந்தார்.

அமைப்பு, படப்பிடிப்புப் பணிகள் இல்லாத நாட்களில் பகல் நேரங்களில் பெரும்பாலும் நான் நூலகத்தில் படித்துகொண்டு இருப்பேன். பல தோழர்களை இந்த நூலகம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன். ஆனால் தாஜ்மகாலை பர்க்க போவதுபோல் பெரும்பாலும் முதல் முறையோடு சரி. அதன் பின் வர மாட்டார்கள்.

தோழர் கண்ணன் அவர்கள் விமர்சனங்களை முகத்துக்கு நேராக கூறும் திறமையுடையவர், சிறிது கோபக்காரர் ஆனால் நல்ல நகைச்சுவையாளர் எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் ஒரு குழந்தை தனத்தை உணரலாம்..

பணிச்சுமைக் காரணமாக ஓரிரு வாரம் நூலக பக்கம் போகாமல் இருந்துவிட்டு, போகும்போது ஒரு புதிய நபரை பார்ப்பதுபோல் ”யார் நீங்க.. உங்களுக்கு என்ன வேண்டும்” என கேட்கும் அந்தக் குட்டி கோபத்திலும் ஒரு கிண்டல் இருக்கும்.

அடுத்தவரிடம் உதவி பெறுவதில் கூச்சம் கொள்பவர். உடல் முடியாதபோதும் யார் துணையும் இன்றி மாடிக்குப் போய் புத்தகங்களைப் பார்த்து வருவார். பல தோழர்களுக்கு மாதா மாதம் நிதி உதவி செய்துவந்தார்.

அவரின் நினைவாற்றல் குறிப்பாக நூலக விடயத்தில் அலாதியானது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பெயரை கூறி, ”அவர் 15 வருடம் முன்பு இங்க வந்து சந்தித்தார். 2 புத்தகம் கொண்டு போனார். இரண்டு நாளில் வருவதாகச் சொன்னார். இன்றுவரை வரவில்லை” என்பார்.

அவரிடம் பேசும்போது பெரும்பாலும் புத்தகங்கள் பற்றியும் வாசிப்பு பற்றியுமே பேச்சுக்கள் இருக்கும்.

லெனினின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை படிக்க எடுத்தால் ரோசா லுக்சம்பர்க்கின் National Questions படிச்சிட்டு இதப் படிங்க என்பார்.

Main Stream இதழ்ல கோபாட் காண்டியோட கட்டுரைகள் வந்திருக்கு, அவசியம் படிங்க, Aspects of Indian Economy 47ஆவது இதழில் வந்துள்ள இந்த கட்டுரை படிங்க, சப்ஸ்கிரிப்ஷன் முடிய போகுது, மணி ஆர்டர் பண்ண முடியுமா, feudal system புத்தகத்தை எடுத்தால், இதில் அடுத்த வால்யுமையும் படிச்சிடுங்க. இப்படி ஒரு புத்தகத்தை பற்றி பேச ஆரம்பித்து சிறிது நேரத்தில் பல புத்தகங்கள் கடந்து உணவகம் எங்கும் நிற்காமல் வேறொரு புத்தகத்தில் வந்து முடிப்பார்.

 இந்த நூலகப் புத்தகங்களைத் தங்கள் அமைப்புக்குக்குக் கொண்டு செல்ல பல அமைப்புகள் முயற்சிகள் செய்த போதும், புத்தகங்களைக் கொடுக்க மறுத்துவிட்டார். நான் இருந்த அமைப்பிலும் தோழர் ரமணி முயன்றார். முடியவில்லை. நூலகத்தை அறிமுகப்படுத்தும்போதே தோழர் ரமணி என்னிடம் புத்தகங்களை அமைப்புக்கு கொண்டு வர நீங்களும் முயற்சி செய்யுங்க என கூறினார்.

தோழர் கண்ணன் அவர்கள் நடத்துவது போலவே, அனைத்து இடதுசாரித் தோழர்களுக்கும் பொதுவானதாக நூலகத்தை நடத்துவதற்கு நான் இருந்த அமைப்பு (கட்சி) இசைவு தெரிவித்ததால் நானும் வாய்ப்பிருந்தால் நூலகம் குறித்து அவரிடம் பேசலாம் என்று இருந்தேன்.

அவருக்கு மனசு வராது என சிலர் கூறுவர். ஆனால் உண்மையில் புத்தகங்களை ஒரு பொருத்தமான ஆளிடம் ஒப்படைக்கவே அவர் விரும்பினார். அனைவருக்கும் பொதுவான நூலகமாக, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதை நடத்த, பாதுகாக்க, வளர்த்தெடுக்க பொருத்தமான ஆளாக யாரையும் அவர் பார்க்கவில்லை என்பதே உண்மை. இப்படி கூறும் போது அப்படிபட்ட ஆட்களே இல்லை என கூறவில்லை. அவரை அணுகியவர்களில் அப்படி பட்டவர்களை அவர் காணவில்லை.

உண்மையில் சொல்லப் போனால், அவர் நூலகம் குறித்த மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நூலகத்தைக் கைமாற்ற விரும்பினார். ஆனால் யார் மீதும் நம்பிக்கை இல்லை. வாழ்வின் இறுதியில் இருக்கும் ஒரு இளைஞன் தனது அன்புக்காதலியின் நிலை குறித்து தவிக்கும் தவிப்பை அவரிடம் உணர முடிந்தது.

தோழர்கள் எல்லாம் கேட்கறாங்க.. புத்தகங்களைக் கொடுக்கணும், ரோஜா முத்தையா நூலகத்துக்கு கொடுக்கலாமா என யோசிக்கிறேன் என ஒருமுறை அவர் கூற, எங்களிடம் கொடுக்கக் கேட்டேன். நூலகம் சார்ந்த என் கனவுகளை ஏற்கனவே பலமுறை அவரிடம் சொல்லி இருப்பதால் இது தொடர்பான பேச்சைத் துவங்கினேன். பார்ப்போம் என்றார்.

நீங்கள் உறுதியளித்தால் ஒரு வாரத்தில் நல்ல இடம் பார்க்கிறோம். முழு நூலகத்தையும் அப்படியே மாற்றிவிடலாம். ஆளுக்கு கொஞ்சம் என பிரித்து மட்டும் நூலகத்தை சிதைக்க வேண்டாம் என்றேன். தொடர்ச்சியான சில நாட்கள் பேச்சுக்குப் பிறகு, ”முதலில் உங்களுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியலைக் கொடுங்க” என்றார்.

கொஞ்சம் புத்தகங்களையாவது கொடுக்கப்போகிறார் என்ற போதும், இதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல இடமாக பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஒரே நேரத்தில் நூலகம் முழுவதையும் அந்த இடத்துக்கு மாற்ற வேண்டும். காரல் மார்க்ஸ் நூலகம் என்ற பெயரிலேயே இயங்க வேண்டும் என்பதே என் விருப்பம். வாழ்நாள் முழுக்க அவர் பாடுபட்டுச் சேர்த்த புத்தகங்கள் தனித்தனியாகப்பிரித்து கொடுப்பது எனக்கு விருப்பம் இல்லை.

புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்தது தெரிந்தால் மற்ற அமைப்புகள் கேட்பார்கள், அவரால் மறுக்க முடியாது. பிறகு அவர்களுக்கு பாதி புத்தகங்கள் கொடுக்க நூலகம் பிரிந்துவிடும். அவர் உழைப்பு வீணாகிவிடும் என்ற வருத்தம்.

இருந்தும் வேறு வழியில்லை. அவருக்கு நம்பிக்கை இல்லை. ஏற்படுத்தவேண்டும். நல்ல இடமாக பார்த்து, முதல் கட்டமாக அவர் கொடுக்கும் புத்தகத்தைக் கொண்டு நூலகம் அமைத்து, அவரை வைத்தேத் திறக்க செய்து நம்பிக்கை ஏற்படுத்தலாம் என்று நினைத்தேன்.

இது பற்றி தோழர் ரமணியிடம் கூற, அவர் அப்படிதான் தருவதாக சொல்வார், ஆனால் தரமாட்டார், கோபப்படுவார் எனக் கூறினார்.

இருந்தும் பட்டியலிட ஆரம்பித்தேன். இரண்டு நாட்களாய் பட்டியல் எடுக்கும் பணி போகும்போதே கொஞ்சநாள் போகட்டும் என்றார். உங்கள் விருப்பம் என்றேன்.

வார இறுதியில் ஒருநாள் திடீரென அவரே, பட்டியல் எடுத்தாச்சா என கேட்டார். கையால் கொஞ்சம்தான் எழுதியுள்ளேன், வேண்டிய புத்தகங்களைச் சொல்கிறோம். அவற்றை எங்களிடம் கொடுங்க. அதைப் பார்த்து கணினியில் பட்டியலிட்டு பிரதி எடுத்து வந்து தருகிறேன் என்றேன்.

நாளை மறுநாள் வந்து தேவையான புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அமைப்பில் கூறினேன். இரண்டு நாள் கழித்து நானும் தோழர் ரமணியும், போய் புத்தகம் கொடுப்பதை உறுதி செய்துவிட்டு பிறகு புத்தகங்களை எடுக்க மற்ற தோழர்களை அழைக்கலாம் எனத் திட்டம்.

காலை கிளம்பிக்கொண்டிருக்கும்போது தோழர் ரமணி செல்பேசியில் அழைத்தார். நூலகம் வந்துவிட்டதாகவும்.. புத்தகத்தை எடுக்க தோழர்களை அழைக்காலாமா என கேட்டதற்கு தோழர் கண்ணன் அவர்கள் ”நான் இன்னும் உயிரோடுதானே இருக்கேன்” எனக் கோபப்படுவதாகக் கூறினார். நான் வேகமாகக் கிளம்பிச் சென்றேன்.

என் மீது ஒரு தனி மதிப்பு அவருக்கு இருந்ததால் என்னிடம் கோபப்படமாட்டார் என நம்பிக்கை இருந்தது. ஆனால் நான் போனதும் என்னிடமும் கோபமாகப் பேசினார். இப்பவே என்ன அவசரம் என கேட்டார். சரி வேண்டாம் விட்டுவிடுவோம் என முடிவெடுத்தோம்.

அவரின் மனவருத்தம் புரிந்தாலும் அவர்மீது சற்றுக் கோபம்.. இவ்வளவு பழகியும். நன்றாகத் தெரிந்தும், என்னிடம் கோபப்பட்டதை ஏற்கமுடியவில்லை. இத்தனைக்கும் அவரே சொன்னதால்தான் புத்தகங்களை எடுக்கப் போனோம். அப்படியிருக்க அவர் கோபப்பட்டிருக்ககூடாது என்று நினைத்தேன். இனி நானாக கேட்கக் கூடாது என முடிவெடுத்தேன். அதன் பிறகும் வழக்கம் போல் அங்கு செல்வேன். பேசுவேன், படிப்பேன். ஆனால் இது குறித்து மட்டும் பேசமாட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒருநாள், இடம் பாத்துட்டீங்களா என அவரே கேட்டார். இல்லை. புத்தகங்கள் கொடுப்பீங்களா என்று உறுதியாகத் தெரியாமல் அமைப்பில் முடிவெடுக்க முடியாது என்றேன். நாளை வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

நான் நம்பிக்கை இல்லாமல் தயங்க, அவருக்கும் முழு மனது இல்லை என்றாலும் உறுதியாக எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

அடுத்த நாள் தோழர்களுடன் வந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எடுத்தோம். அவரிடம் காட்டிவிட்டு, ஒருவாரத்தில் இடம் பார்த்துவிடுவோம் உடனே ஆரம்பித்துவிடலாம் என கூறிவிட்டு, அட்டை பெட்டிகளில் கொண்டு வந்தோம். இயல்பாக பேசினாலும் அவருக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. அந்தத் தோழரின் வருத்தத்தை போக்க வேண்டும்.

சொன்ன படி ஒரு வாரத்தில் ஏற்பாடுகள் செய்து, அவர் கையால் நூலகத்தைத் திறக்க வைத்து அவர் உழைப்பு வீணாகவில்லை என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்த வேண்டும் என நினைத்தேன்.

கொண்டு போன புத்தகங்களின் பட்டியல் கேட்டார். அமைப்புப் பணிகள் இருப்பதால் பட்டியலிட நான்கு நாட்கள் கால அவகாசம் கேளுங்கள் என கட்சியில் கூறினர். ஆனால் அவரிடம் அவகாசம் கேட்க மனமில்லை. இரவு பகலாக உட்கார்ந்து பெரும்பாலும் நானே பட்டியல் எடுத்து இரண்டு நாளில் பிரதி எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். நூலகம் எப்போது அமைக்க போகிறீர்கள் எனக் கேட்டார். இடம் பார்க்க ஆரம்பித்து விட்டோம் என்றேன்.

கட்சியில் நிதிச் சிக்கல் இருப்பதால் நூலகம் அமைக்க தாமதமாகும் என்றனர். இப்படியே ஒரு மாதம் மேல் போனது. எனக்கு அவரிடம் ஒவ்வோர் முறையும் இடம் கிடைக்கவில்லை. பார்த்துக் கொண்டு இருக்கிறோம் எனக் கூறுவது வெறுப்பாக இருந்தது.

முதல் முறையாக அங்கு செல்வதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். இது மன உறுத்தலை ஏற்படுத்தியது. தாமதத்துக்கு கட்சியில் கோபப்படுவேன். பின் இறுதியாக மக்கள் விடுதலையை சேர்ந்த தோழர் கண்ணன் வீட்டு மாடியிலேயே நூலகம் வைத்துக் கொள்ளலாம் என்றனர். மகிழ்ச்சியுடன் அவரிடம் போய் இடம் கிடைத்துவிட்டதை கூறிவிட்டு வந்தேன். அவர் வீட்டில் இருந்த அலமாரிகளையும் புத்தகம் வைக்க கேட்டு எடுத்து வந்தோம்.

வீட்டில் எலித் தொல்லை. எனவே அலமாரிக்குக் கதவு போடவேண்டும் எனக் கொஞ்சநாள் நூலக வேலை தாமதம் ஆனது. மீண்டும் அவரை பார்க்க செல்வது குறைந்து போனது. இடையே நூலகக்குழு அமைத்து, நிதித் திரட்டல் பற்றி எல்லாம் திட்டமிட்டோம்.

மார்க்ஸ் நூலகம் எனப் பெயர் வைக்கப்பட்டது. காரல்மார்க்ஸ் நூலகம் என்றே இருக்கட்டும் பெயரை மாற்றவேண்டாம் என்றேன். அந்து குழுவில் சிறுபான்மை கருத்து என்பதால் நிராகரிக்கப்பட்டது. நூலக பெயரை ஏன் மாற்றினீர்கள் காரல்மார்க்ஸ் நூலகம் என்றே இருக்கட்டுமே என அவர் கூறினார். அவரும் குழுவில் இல்லையே... என்ன செய்வது. அவருக்காக சரி என கூறிவிட்டு வந்தேன். ஆனால் குழு விரும்பியதால் கார்ல் மார்க்ஸ் நூலகம், மார்க்ஸ் நூலகம் ஆனது.

பணிகள் எல்லாம் முடிந்து நூலகத் திறப்பு விழா நடக்க பல மாதங்கள் ஆயின. இந்தத் தாமதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அவரிடம் உடனே அமைப்பதாக சொல்லிதான் கொண்டு வந்தோம். எனவே சாக்குசொல்ல முடியவில்லை. அவர் வருத்தப்படகூடாது என்பதற்காக, திறப்பு விழா மட்டும்தான் தள்ளி போகுது, நூலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என பொய்யாகக் கூறிவிட்டேன். மன உறுத்தல் அதிகமானது.

இதற்கிடையில் cpm தோழர்கள் வந்து பெரும் எண்ணிக்கையிலான புத்தகங்களைக் கொண்டு சென்று விட்டனர் எனத் தெரிந்ததும் எனக்கு வருத்தம் அதிகமானது. அவர்களுக்கு போய்விட்டதே என்ற காரணம் இல்லை.. புத்தகம் பிரிந்தது தான் காரணம்.

உலகின் பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட வரலாறுகள் முதல், மாக்சியப் பொருளியல், தத்துவம் அரசியல் என முக்கியமான பெரும் எண்ணிக்கை புத்தகங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றுவிட்டன.

நாம் ஒரே நூலகமாக வைத்திருக்கலாமே.. ஏன் இப்படி கஷ்ட்டப்பட்டு சேர்த்ததை பிரித்துக்கொடுத்து விட்டீர்கள். உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்ததானே முதலில் கொஞ்சம் புத்தகங்கள் மட்டும் எடுத்துச் சென்றோம். அவசரப்பட்டு விட்டீர்களே என கேட்டேன்.

அவர்களும் கேட்டனர். கொடுத்துவிட்டேன் என்றார். இன்னும் தான் இருக்கிறதே நீங்களும் வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இரண்டாம் முறை புத்தகங்கள், இதழ்கள் என முன்பை விட இரு மடங்குக்கு மேல் எடுத்து வந்தோம்.

தோழர் அறிவொளி கொஞ்சம் புத்தகங்கள் எடுத்துச் சென்றார்.

அதன் பிறகு ரோஜா முத்தையா நூலகத்துக்கு அரசியல் சாரா நூல்களை கொடுத்தார்.

மார்க்ஸ் நூலகத் திறப்பு விழாவுக்கு முன்.. மீண்டும் ஒரு முறை புத்தகங்கள் கொண்டுவந்தோம்.

அனைவரும் எடுத்தது போக இன்னும் கொஞ்சம் புத்தகங்களும், கட்டு கட்டாய் இதழ்களும் இருந்தன.        

திறப்பு விழாவுக்குத் தோழர் ச. சீ. கண்ணன் அவர்களும் தோழர் எஸ்.வி.ஆரும் கலந்துகொண்டனர். என்னால் கலந்துகொள்ள முடியாத சூழல். மிகப்பெரும் வருத்தம். ஆனால் அதன் பிறகும் அது நூலகமாக இயங்கவில்லை.

சென்னை மழை வெள்ளத்தில் அவர் வீடு பாதிக்கப்பட்டதில் கொஞ்சம் குப்பை ஆகிவிட, மீதி இருந்த புத்தகங்கள், இதழ்கள் அனைத்தையும் இரண்டு தவனையாக கொண்டு வந்தோம்.

இருப்பினும் முதல் முறை புத்தகம் கொண்டு வந்தது முதல் நூலகத் திறப்பு தாமதம் காரணமாக ஏற்பட்ட மன உறுத்தல் இன்றுவரை உள்ளது. மூன்று ஆண்டுகள் ஆகியும் மார்க்ஸ் நூலகம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், இன்றுவரை அது ஒரு நூலகமாக செயல்படவில்லை என்பது பெரிய உறுத்தல்.

ஒவ்வோர் முறை அவரை சந்திக்க செல்லும்போதும். என்ன வினோத்குமார் எப்படி இருக்கு உங்கள் நூலகம் என்பார். புத்தகம் நம்மிடம் கொடுத்த முதலே எப்போது சென்றாலும் பொதுவுடைமை மனநிலையில் உங்கள் நூலகம் என்றுதான் சொல்வார். என் புத்தகம் என்ற வார்த்தையை அவரிடம் கேட்டதில்லை.

ஆனால் புத்தகங்கள் போனதில் இருந்தே என் உயிரே என்னை விட்டு போயிடுச்சி என்பார். பின்னர் எப்படி இருக்கு உங்க நூலகம். தோழர்கள் எல்லாம் படிக்கிறாங்கலா என்பார். எனக்குக் குற்ற உணர்வை அதிகப்படுத்துவார்.

நூலகம் அவரிடம் இருந்தவரை யாரும் பயன்படுத்தவில்லை என்றாலும் அது ஒரு நூலகமாகச் செயல்பட்டது. அந்த நூலகத்தின் மீதான அவர் காதல் தெரிந்தும், ஆனால் அவரிடம் இருந்து வாங்கிச் சென்று அவரை விட சிறப்பாக நடத்த விரும்பி செய்ய முடியாத மன உளைச்சல் காரணமாக மாதக் கணக்கில் அங்கு செல்வதைத் தவிர்த்தேன்.

நூலகம் பற்றிய எண்ணம் தோன்றியபோதெல்லாம் மனக் குத்தல் ஏற்ப்படும். அவர் என்ன நினைப்பார். நல்லா பேசிப் பழகியவன், காரியம் முடிந்ததும் வரவில்லையே என நினைக்கமாட்டாரா.. இப்படி நினைத்தாலே வருத்தம் அதிகமாகும். எப்போதாவாது தைரியத்தை வரவைத்து கொண்டு சென்று பார்ப்பேன். என்ன வினோத் குமார் உங்க நூலகம் நால்லா இயங்குதா என கேட்பார்? அந்த வார்த்தை முள்ளாக தைக்கும்.

 நூலகம் குறித்து இந்து நாளிதழில் வந்த கட்டுரை, எப்போதாவது நூலகம் பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் துண்டறிக்கைகள் ஆகியவற்றை காட்டி நூலகம் செயல்படுவதாக பொய்யாக அவரிடம் ஒரு பிம்பத்தை ஏற்ப்படுத்திவிட்டு வருவேன். அவர் வருத்தத்தை குறைத்து சிறு ஆறுதல் கொடுப்பதற்காக.

முரன்பாடு காரணமாக முதலில் நூலகக் குழுவில் இருந்தும், பின் மற்ற முரண் காரணமாக கட்சியில் இருந்தும் வெளிவந்துவிட்டேன். இப்போது எனக்கும் அந்த நூலகத்துக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் ஒன்று. இன்றுவரை அந்த நூலகம் இயங்காததை நியாயப்படுத்த நம்மிடம் ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு நூலகம் நடத்துவதற்கான நமது தகுதியின்மையின் வெளிப்பாட்டை தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்படி நம்மிடம் கூற 1000 காரணங்கள் இருக்கும் என அவர் அறிந்தே இருந்தார். அதனால்தான் நம்மிடம் ஒப்படைக்க தயங்கினார். நம் பற்றிய அவரின் மதிப்பீட்டை மெய்ப்பித்திருக்கிறோம்.

இத்தனை ஆண்டுகளாக ஒரு தனிமனிதன் சரியாகச் செய்ததை, ஓர் அமைப்பால் செய்ய முடியவில்லை. காரல்மார்க்ஸ் நூலகம் என்பது அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவான ஒன்று. இது அந்த நூலகக் குழுவும் ஏற்றுகொண்ட விடயம்தான்.

 எனவே இன்றுவரை அந்த நூலகம் செயல்பாடாமல் இருந்ததற்கு அந்த குழுவையோ, அந்த கட்சியையோ மட்டும் குறை சொல்வது சரியாகாது. அனைத்து இடதுசாரிகளும், அனைத்து அமைப்புத் தோழர்களும் ஒரு வயதான கிழவரின் கனவைக் குப்பையில் போட்டுவிட்டோம்.

அவர் நடத்தியபோதும் புறக்கணித்தோம். அதன் பின் நாங்கள் நடத்துவதாக சொல்லி கிடப்பில் போடப்பட்டு கிடப்பதையும் கண்டும் காணாமல் புறக்கணித்துவிட்டோம். இப்போது இறந்துவிட்டார். இனி உரக்கச் சொல்வோம் தோழருக்கு செவ்வணக்கம்… செவ்வணக்கம் என்று..

அவரை ஏமாற்றிய எனக்கு அவர் இறப்புக்கு கூட போக வாய்க்காதது சரியான தண்டனைதான்.

மருத்துவமனைப் பிணவறையில் அவரைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அதே குரல் மூளைக்குள் ஒலித்தது. ”உங்கள் நூலகம் எப்படி இருக்கு? தோழர்கள் எல்லாம் வராங்களா?” என்று….

- வெ.பி.வினோத்குமார், ஆவணப்பட இயக்குனர்.