கவிஞர் சோ.சு.யுவராசன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் அடிகளை உணர்ச்சி பீறிட முழக்குவதைக் கேட்டு, அந்த வரிகளின் கருத்துகளில் ஒன்றி-திளைத்துப் போவேன். ஏனெனில் நான்  பெரியார் கொள்கைளால் ஈர்க்கப்டவும் தமிழின்பால் பற்று கொண்டிடவும் காரணமே பாரதி தாசனின் செறிந்த கருத்தமைந்த பாக்கள்தாம்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமை யில், 1972இல் ஆர்க்காட்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் அரக்கோணம் தோழர் சோ.சு.யுவராசனை வேலூர் தோழர் து.அரங்கநாதன் அறிமுகப்படுத்தினார். பெரியார் சமவுரிமைக் கழகம் தொடங்கப்பட்ட பின் எங்கள் தோழமை தொடர பற்பல வாய்ப்புகள் அமைந்தன. 1980இல் பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் சமவுரிமைக் கழகத்தின் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கத்தில் மூன்று நாள்கள் நடந்தன. வேலூர் தோழர் நா.ப.செந்தமிழ்க்கோ முன் முயற்சியில் எடுக்கப்பட்ட அந்த விழாக் குழுவிற்கு வேலூர் வழக்குரைஞர் தெ.சமரசம் தலைவர்; தோழர் சோ.சு.யுவராசனும் நானும் (சா.குப்பன்) இரு செயலாளர்கள்; வேலூர் தோழர் மு.சுகுமார் பொருளாளர்.

பெரியார் சமவுரிமைக் கழகத்தில் நான் வேலூர் நகரச் செயலாளராகவும் பின் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியதால், தோழர் யுவராசன் முன்னெடுப்பில் அரக்கோணத்தில் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவிற்கு ஒருநாள் முன்னதாக அரக்கோணத்திற்கு முதன்முதலாகச் சென்றேன்.

இருவரும் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையில் ஈடுபாடும் கொண்டிருந்தோம். அண்ணல் அம்பேத்கர் போராட்டங்களால், எழுத்துகளால் ஏற்பட்டுள்ள  விளைவுகளை உணர்ந்திருந்தோம். தோழர் வே.ஆனைமுத்து முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் பேரவையும் பாம்ஃசெப் அமைப்பின் தலைவர் கன்ஷிராம் அவர்கள் வலியுறுத்திய பி.வ.-ப.வ.ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தும் எங்களை ஈர்த்திருந்தது. எனது பிள்ளைகள் மூவரின் பெயர்களுக்கு முன் தாய்-தந்தை இருவர் முதலெழுத்துகளையும்  முன்னெழுத்தாகப் பதிவு செய்திருந்தேன். தோழர் தமிழேந்தியின் பிள்ளைகள் மூவருக்கும் தாய்-தந்தை இருவர் பெயர்களையும் முன்னெழுத்துகளாகப் பதிந்திருந்தார். மற்றும் பிள்ளைகளை தமிழ்வழியில் படிப்பித்தல் முதலானவற்றில் ஒற்றுமை இருந்தது.

சாதி ஒழித்திடல் ஒன்று-நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால்-மற்றப்

பாதி துலக்குவது இல்லை.

என்ற புரட்சிக் கவிஞரின் கருத்தினை நினைவில் நிறைத்திருந்தோம். தொடர்ந்து, இரு மாநாடுகளுக்கு நிதி திரட்ட வடஆர்க்காடு மாவட்டம் முழுக்க இருவரும் இணைந்து சுற்றிவந்துள்ளோம். இருவரும் திருவண்ணா மலைக்குச் சென்று-எங்கள் முயற்சியில் ஈழம் பற்றிய ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினோம்.

இருவரும் பணிநிறைவுக்குப்பின் ஒருமுறை மதுரை, சிவகங்கை, இராசபாளையம், தேனி ஆகிய ஊர்களில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் நிகழ்வுகளுக்காகச் சென்று வந்தோம்.“இதனால் தோழர் தமிழேந்தி தமிழகமெங்கும் பரவலாக பெற்றிருந்த அறிமுகத்தையும் பல இயக்கங்களைச் சார்ந்த தோழர் களிடம் பெற்றுள்ள நன்மதிப்பையும் கண்டு மகிழ்ந்தேன்.

சிந்தனையாளன் ஏட்டில் வெகுமக்களுக்கு எதிரான இந்திய, தமிழக அரசின் கொள்கைகளையும் செயல்களையும் கண்டிக்கின்ற வகையில் தமிழேந்தி கட்டுரைகளை அச்சமின்றி எழுதிவந்தார். அப்போது ஒருவர், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு  அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் யுவராசன் தமிழேந்தி என்ற பெயரில் இப்படி எழுதுகிறார் என்று தொடர்ந்து புகார் தெரிவித்து, அதனால் தொல்லைகள் வந்தபோதுகூட, வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் 'புலவர் அஞ்சான்' என்ற பெயரில் தொடர்ந்து உரையாற்றியுள்ளார்; சிந்தனையாளனில் எழுதியும் உள்ளார்.

பாவலர் தமிழேந்தியின் பாவீச்சின் கருத்துச் செறிவு, நடையாற்றல், உணர்வூட்டம்  பற்றி நான் சொல்லத் தேவையில்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பின் மக்கள் பாவலர் இன்குலாபின் பாடல்களும் எழுச்சிப் பாவலர் தமிழேந்தியின் பாடல்களுமே என் மனத்திற் கேற்றன.

எழுச்சிப் பாவலரின் "தமிழேந்தி கவிதைகள்"  "பன்முகப் பார்வையில் பாவேந்தர்" ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவை, 2013 சிந்தனை யாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழாவுடன் இணைத்து வேலூரில் நடத்தியது மனதிற்கு நிறை வளிக்கிறது.

தமிழேந்தியின் மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய-தமிழ்த் தேசியப் பாடல்கள் நம் சிந்தனைக்கும் செயலுக்கும் உந்தாற்றலாகத் திகழ்வன.

எழுச்சிப் பாவலர் தமிழேந்தியை என்றென்றும் நினைவேந்துவோம்!

Pin It