திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தாய் மொழியாம் தமிழைத் தமிழர்களே தாழ்வாகக் கருதியதை நினைத்து, நெஞ்சம் உருகினார்கள். ‘எனக்குத் தமிழில் பேச வராது’ என மேடைகளில் உரையாற்றிய தமிழர்களின் அவலத்தை அறிந்து, மன வேதனை கொண்டார்கள். வெட்கமும், தன்மானமும், தாய் மொழி உணர்வும் அற்ற தமிழர்களின், ஆங்கில மோகத்தைக் கண்டு உள்ளம் குமுறினார்கள். வயிற்றுக்கும் வாழ்விற்கும் தமிழ் துணையாக நிற்காது என்ற எண்ணம், படித்த தமிழர்களிடம் பரவி வரும் நிலையைக் கண்டு கண் கலங்கினார்கள்.

              gnaniar adigal  இந்த இழிநிலை தமிழ் மொழியை மட்டுமல்லாது தமிழர்களின் பண்பாட்டையும், தமிழ் மொழி மீதான நம்பிக்கையையும் சீரழித்துத் தமிழர்களைத் தலைகுனியச் செய்துவிடும் என ஆழ்ந்து சிந்தித்த ஞானியார் அடிகள், தமிழுணர்வூட்டும் அமைப்புகளை ஏற்படுத்தி உரையாற்றினார்கள்.

                திருப்பாதிரிப்புலியூர் திருமடாலயத்திற்கு 1900 ஆம் ஆண்டு ஞானியார் அடிகளைத் தரிசிக்க வருகை புரிந்த பாலவநத்தம் குறுநில மன்னரும் பாவலரும் நாவலருமான பாண்டித்துரைத் தேவரிடம், “தமிழைத் தழைக்கச் செய்திட தாங்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழின் வளர்ச்சிக்கு ஓர் அமைப்பை, சங்கம் கண்ட மதுரையில் உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார் ஞானியார் அடிகள்!

                பாண்டித்துரைத் தேவர், “வெகு விரைவில் மதுரை மாநகரில், தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைப்போம்!” – என உறுதியளித்தார். பின்னர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, திருமடாலயத்திற்கு வருகைபுரிந்தபோதும் ஞானியார் அடிகள் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

                ஞானியார் அடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், “தமிழை முறையாகப் பயிற்றுவிக்கவும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணரச் செய்யவும் மதுரையில் ஓர் தமிழ் அமைப்பை கண்டிப்பாக உருவாக்குவோம்” – என மன்னர் பாஸ்கர சேதுபதியும் உறுதியளித்தார்.

                மதுரை மாநகரில் 24.5.1901 ஆம் நாள் ‘தமிழ்ச் சங்கம்’ நிறுவப்பெற்றது என்னும் செய்தி ஞானியார் அடிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. மன்னர் சேதுபதிக்கும், பாண்டித்துரைத் தேவருக்கும் பாராட்டுத் தெரிவித்து மடல் எழுதினார் அடிகள்.

                திருப்பாதிரிப்புலியூரில், ‘வாணி விலாச சபை’ எனும் ஓர் அமைப்பு பாண்டித்துரைத் தேவர் தலைமையில் தொடங்கினார் ஞானியார் அடிகள். வாணி விலாச சபையில் வாரந்தோறும் சமய நெறியையும், தமிழ் உணர்வையும் ஊட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றதோடு, தமிழைக் கற்பிக்கும் முயற்சியும் நடைபெற்றது.

                திருப்பாதிரிப்புலியூரில் ‘ஞானியார் மாணவர் கழகம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்மூலம் நாள்தோறும், மாலையில், தமிழ் இலக்கிய, இதிகாச, புராணங்கள் சொல்லித்தரப்பட்டதுடன்; தமிழ் இலக்கணமும் சுவைபடக் கற்பிக்கப்பட்டது.

                “எத்தனையோ திருமடங்கள் தமிழகத்தில் உள்ளன என்றாலும் அடியேனை ஈர்த்த ஓரே திருமடம் ஞானியார் சுவாமிகள் குருமூர்த்தியாய் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருமடமே! ஏனெனில், தமிழ் மக்களுக்குத் தமிழின் மேன்மையைத் தமது கலையொளிரும் சொற்பொழிவுகளால் ஊட்டியும், உணர்த்தியும் வருபவர்கள் ஞானியார் சுவாமிகள். சுவாமிகளைத் தமிழாகவே யான்கண்டு மகிழ்கிறேன்“ - எனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க!

                தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை, ஞானியார் அடிகளை ‘தமிழ் ஞானி’ எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

                ‘ஞானத் தமிழ்’ என்பதற்கு ஞானியார் அடிகளாரின் பேச்சே சரியான உதாரணம். படித்தவர்கள் ரசிப்பார்கள்; பாமரர்கள் புரிந்து கொள்வார்கள். ‘தமிழ்ச்சுவை’ என்னவென்பதை ஞானியார் அடிகளாரின் உரையைக் கேட்டால் புரிந்துவிடும் - “என, ‘கல்கி’ பதிவு செய்து உள்ளார்.

                திருநாகேசுவரத்தில் அண்ணாமலை - பார்வதி அம்மை ஆகியோரின் மகனாக 1873 ஆம் ஆண்டு பிறந்தார் ஞானியார் அடிகள். பெற்றோர் இட்ட பெயர் பழனியாண்டி என்பதாகும்.

                ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது, அவரது பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் திருமடத்திற்கு, ‘மடாலயப் பிள்ளை’யாகப் பெற்றோர் வழங்கினர்.

                தமிழும், ஆங்கிலமும் பயிற்றுவிக்கப் பெற்ற பள்ளியில் பயின்றார். பின்னர், வட மொழியையும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். பதினேழாம் வயதிலேயே திருமடத்தின் பொறுப்பை ஏற்று, “சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்” என அழைக்கப்பட்டார்.

                இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்திலும், இடைப்பகுதியிலும் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இலக்கிய, சமய விழாக்களில் கலந்து கொண்டு தலைமையேற்று தமிழ் முழக்கம் செய்தார் ஞானியார் அடிகள்.

                ‘திருப்பாதிரிப்புலியூர் புராணம்’, ‘திருப்பாதிரிப்புலியூர் தோத்திரக் கொத்து’, ‘அற்புதத் திருவந்தாதி’, ‘ஞானதேசிகமாலை’, ‘கந்தர்சட்டிக் கட்டுரைகள்’, ‘அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து’ முதலிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார் ஞானியார் அடிகள்.

                தித்திக்கும் தமிழால் சித்தாந்த மேன்மைகளை எளிமையாகவும், இனிமையாகவும் எடுத்துரைத்து, எத்திக்கும் புகழ் மணக்க, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு, தமது வாழ்நாள் முழுவதும் உழைத்த ஞானியார் அடிகள் 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், தாய் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் தமிழ்மொழி வரலாற்றில் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்

Pin It