பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் (1926 -2009) 29. 06.2009 அன்று மறைந்தார். அவரது பூதஉடல் மறைவு நிகழ்ந்தபோதும், கால காலத்திற்கு மறையாமல் இருக்கும் அவரது செயல்பாடுகள் குறித்து மீள நினைப்பதற்கு இதுவே ஏற்ற தருணம். அவரைக் குறித்துப் பல பரிமாணங்கல் உரையாடுவதற்கான ஏதுக்கள் இருந்தாலும், அவரது நிறுவன உருவாக்கச் செயல்பாடுகளை மட்டும் நினைவுகூறலாம்.

பிரித்தானியர்கள், பல்வேறு சமஸ்தானங்களையும் இணைத்து இந்தியாவை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உருவாக்கினார்கள். அவ்விதம் உருவான சூழலில் பல நிறுவனங்களை உருவாக்கினார்கள். மானிடவியல்துறை , கல்வெட்டியல்துறை, தொல்லியல்துறை, மொழி கணக்கெடுப்புத்துறை ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இந்நிறுவனங்கன் மூலமே இந்திய வரலாறு, குறிப்பாக தொல்பழம் வரலாறு, இந்தியாவில் வாழும் தேசிய இனங்கள், இந்திய மொழிகள் ஆகியன பலவற்றைக் குறித்த பல்வேறு விவரங்களைப் பெற முடிந்தது. இவைகளைக் கொண்டே மேலைத்தேயத்திற்கு இணையாக கீழைத்தேயம் என்னும் கருத்தாக்கத்தைக் கட்டமுடிந்தது. இந்தியவியல் எனும் கருத்தாக்கமும் உருவானது. பிரித்தானியர்கள் உருவாக்கிய இவ்வகையான கருத்தாக்கத்தின் தொடர்ச்சியாக, பின்னர் ‘திராவிடஇயல்’ எனும் கருத்தாக்கம் உருவானது. பேரா. வ.அய். சுப்பிரமணியம், தாம் முன்னின்று உருவாக்கியன நிறுவனங்கன் மூலம் திராவிடஇயல் கருத்தாக்கத்திற்கு எவ்வகையில் வளம் சேர்த்தார் என்ற உரையாடல், அவர் உருவாக்கிய நிறுவனங்கன் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.

இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து திராவிட மொழிக்குடும்பம் வேறுபட்டது என்ற கருத்துநிலை கால்டுவெல் மூலம் உறுதிப்பட்டது. (1856) அக்கருத்துநிலை 1940கல் உலகம் முழுவதும் வளர்ச்சி பெறத் தொடங்கிய மொழியியல் ஆய்வால் மேலும் உறுதியானது. மொழி ஒப்பிட்டு ஆய்வு என்பது அறிவியல்பூர்வமான தர்க்கமாக, மொழியியல்துறை உருப்பெற்றது. இந்தச் சூழலில் பிரித்தானியர்களால் வட்டாரமொழிகள் சார்ந்த ஆய்வுகளும் உருவாயின. இந்தப் பின்புலத்தில் பேரா. தனிநாயகம் அடிகள், தூத்துக்குடியைச் சேர்ந்த புரவலர்கன் துணையோடு, ‘Tamil Culture’ எனும் ஆங்கில இதழை 1952 முதல் கொண்டுவரத் தொடங்கினார். இவ்விதழில் திராவிடமொழிகன் இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு குறித்த கட்டுரைகள் வெவரத் தொடங்கின. குறிப்பாக தமிழில் புதிதாக அங்கீகாரம் பெற்றுவந்த சங்க இலக்கியம், தொல்காப்பியம் மற்றும் சிந்துசமவெளி அகழ்வாய்வு ஆகியவை குறித்த கட்டுரைகள் வெளிப்பட்டன.

1964 இல் அகில உலக கீழ்த்திசை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற தனிநாயகம் அடிகளும் வ.அய். சுப்பிரமணியம் அவர்களும் சுற்றறிக்கை ஒன்றை மாநாட்டுப் பங்கேற்பாளர்கடையே சுற்றுக்கு விட்டார்கள். இதன் விளைவாக அகில உலகத் தமிழ் ஆய்வுக்கழகம் உருவானது. இவ்வமைப்புதான் உலகத் தமிழ்மாநாடுகளை நடத்தியது. இம்மாநாடு தமிழகத்தில் நடைபெற்ற போதெல்லாம் ஆளும் கட்சிகள் தங்களது பிரச்சாரக் கருவியாக அம்மாநாடுகளை கட்டமைத்தன. அதில் பல நல்ல விளைவுகளும் ஏற்பட்டன. இம்மாநாடுகள் மூலம் வெளிவந்த ஆய்வுகள், தமிழியல் ஆய்வை உலகப் பரப்பிற்கு எடுத்துச்சென்றது. இதற்கான திட்டமிடுதலில், இவ்வமைப்பின் செயலாளராக இருந்த (1967 -1980) பேரா. வ.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு முதன்மையான இடமுண்டு. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கல் தமிழ் குறித்த புரிதல், இம்மாநாடுகள் மூலமே சாத்தியமாயின. இம்மாநாடுகல் பங்கேற்ற ஐரோப்பிய, அமெரிக்கப் பேராசிரியர்கன் பட்டியல் இதனை உறுதிப்படுத்தும். பேரா. கமில்சுவலபில், ஜான் பிலியோசா, எமனோ, ஆஷர், டி. பர்ரோ, எம்.எஸ். ஆந்திரனோவ் ஆகிய பலர். இப்பட்டியல் மிக நீளமானது. ஆக, உலக அளவில் தமிழியல் ஆய்வு பல பரிமாணங்கல் புரிந்து கொள்ள பேராசிரியரின் பங்களிப்பு எவ்வகையில் இருந்தது என்பதை உலகத்தமிழ் மாநாட்டு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

பேரா. வ.அய். சுப்பிரமணிம், கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறை (1965) உருவாக்கினார். இக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் விரிவான ஆய்வுகள் உருப்பெற்றிருந்தன. இச்சூழலைப் பயன்படுத்தி 1971 இல் திராவிட மொழியியற் கழகத்தை கேரள அரசின் துணையோடு திருவனந்தபுரத்தில் உருவாக்கினார். அந்த ஆண்டே திராவிட மொழிகள் ஆய்விற்கான இதழையும் கொண்டுவரத் தொடங்கினார். International Journal of Dravidian Lingustics எனும் இந்த ஆய்வு இதழ் திராவிட மொழியியல் கழகத்தின் வெளியீடாக இன்றும் வந்து கொண்டிருக்கிறது. இவ்விதழ், திராவிட மொழியியல் ஆய்வை உலகத்தரத்திற்கு முன்னெடுத்தது. திராவிட மொழியியல் கழகம் மற்றும் அவ்வமைப்பின் இதழ் வெளியீடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக ‘பன்னாட்டுத் திராவிட மொழியியல்’ பள்ளியை 1977 இல் திருவனந்தபுரத்தில் உருவாக்கினார்.

அரபி பெருங்கடலின் ஓரத்தில் கடலைப்போன்ற அகன்ற இடத்தில் அந்நிறுவனத்தை அவர் உருவாக்கியிருப்பதை நாம் காணமுடிகிறது. இவ்விதம் 1960கல் உலக அளவில் தமிழியியல் ஆய்விற்கு ஏற்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, கேரளாவில் அவர் உருவாகியுள்ள திராவிடமொழிகளுக்கான ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் மாநாடுகளை நடத்தி, திராவிடமொழி ஆய்வை வளப்படுத்தியது. அம் மாநாட்டு கட்டுரைகளை தொடக்கத்தில் பேராசிரியரே பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

அரசு சார்ந்த நிறுவனங்கன் செயல்பாடுகள், எல்லாத் தருணங்களிலும் சிறப்பாக இருப்பதில்லை. அதன் தலைமையைப் பொறுத்தே அது அமையும். தன்னாட்சித் தன்மையுடன் (கிutஷீஸீஷீனீus) உருவாக்கப்படும் நிறுவனங்கள், சாதனைகள் செய்திருப்பதை நாம் காணமுடிகிறது. இப்பின்புலத்தில்தான், தன்னாட்சி நிறுவனங்களை உருவாக்குவதில் பேராசிரியர் அக்கறை காட்டினார். அவைகளுக்கு அரசாங்கம் உதவவேண்டும் என்றும் கருதினார். 1968 இல் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு, சி.என்.ஏ. அவர்களால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். யுனெஸ்கோ அங்கீகாரத்தோடு, தன்னாட்சியாக அந்நிறுவனம் செயல்பட அடிப்படை வரைவுகளை உருவாக்கியதில் பேராசிரியருக்கும் பங்குண்டு.

1981 இல் பேராசிரியர் புதிதாக உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவருக்கிருந்த நிறுவன உருவாக்க ஆளுமைத் திறன்களை சோதனைப்படுத்தும் கூடமாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தைக் கட்டமைத்தார். கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் என்று பல்துறை சார்ந்த ஆய்வுகளுக்கான புலங்களை உருவாக்கினார். திட்டப்பணிகள், மையங்கள் என்று தனித்தும் உருவாக்கினார். கலைப்புலத்தின் மூலம் சிற்பம், இசை, நாடகம் ஆகிய துறைகள் தொடர்பான ஆய்வுகளுக்கு வழிகண்டார். சுவடிப்புலத்தில் ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடிகள், கல்வெட்டு மற்றும் தொல்லியல் நீரகழாய்வு மையம் ஆகியவற்றை உருவாக்கினார்.

வளர் தமிழ்ப்புலத்தில் அயல்நாட்டு தமிழ்க்கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆகிய பிரிவுகளை ஏற்படுத்தினார். மொழிப்புலத்தில், இலக்கியம், மொழியியல், தத்துவமையம், பழங்குடி மக்கள் ஆய்வுமையம், நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள் பள் ஆகிய பிரிவுகளை உருவாக்கினார். அறிவியல் புலத்தில் சித்த மருத்துவம், தொல் அறிவியல், நில அறிவியல், கணிப்பொறி அறிவியல், கட்டடக்கலை ஆகியவற்றை ஏற்படுத்தினார். இவ்வகையில், குறிப்பிட்ட தேசிய இனத்தின் மொழி, கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த கூறுகளை தர்க்கப்பூர்வமாக புரிந்து கொள்ளும் படிப்பு மற்றும் ஆய்வை கட்டமைப்பதாக பேராசிரியரின் இவ்வகையான நிறுவன உருவாக்கமுறை அமைந்துள்ளது. ஆழமான பார்வையைக் கொண்டதாகவும் உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக அமைப்பு சார்ந்து தமிழியல் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுமானால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் செயல்படும் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு இணையான ஆய்வை நாம் முன்னெடுக்க முடியும். இதற்கான கால்கோள் அவரது காலத்தில் (1981-86) அப்பல்கலைக்கழகத்தில் இடப்பட்டது.

பேராசிரியர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படும் நிலப்பகுதி ஒன்றை தேர்வு செய்தார். அதுவே ஆந்திராவில் உள்ள குப்பம் ஆகும். 1997இல் அங்கு திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். நான்கு மொழிகள் இணைந்த ஆய்வை மேற்கொள்ளும் பல்கலைக்கழகமாக அதனைக் கட்டமைத்தார். சில ஆண்டுகள் இணைவேந்தராக இருந்துவிட்டு, பின்னர் அதிலிருந்து விலகிக் கொண்டார். அவரது நிறைவேறாத கனவாக குப்பம் பல்கலைக்கழகம் இருக்கிறது.

புத்தொளிக் காலத்தில் உருவான பல புதிய கூறுகளை உள்வாங்கி ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கன் தொடர்பால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகல் பல்கலைக் கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்நிறுவனங்களை பிரித்தானியர் கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு நமது நிறுவனமாக உருவாக்கம் தேவை நமக்கு உண்டு. இந்தக் கண்ணோட்டம் பேராசிரியருக்கு இருந்தது. உலகத்தில் ‘இந்தியவியல்’ என்றே அறியப்பட்டது. அதற்குள் ஒரு பகுதியாக அல்லது கீழைத்தேயவியலோடு இணைப்பாக தமிழ் பற்றிய பதிவுகள் இருந்தன. இந்தியவியல் சமசுகிருதத்தை முன்னிருத்தியே புரிந்து கொள்ளப்பட்டது. இதற்கு மாற்றாக திராவிடஇயல் என்பது திராவிட மொழிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை கட்டமைக்கும் தேவை ஏற்பட்டது. அதில் முன்னத்தி ஏர் பிடித்த மனிதராக பேராசிரியர் வரலாற்றில் இடம் பெறுகிறார். இந்தியவியல், திராவிடஇயல் என்பவை இணையான தனித்தனி புலமாகப் புரிந்துகொள்ளும் தேவையை பேராசிரியரின் பணிகள் உருவாக்கியுள்ளன. இந்தியவியலிலிருந்து திராவிடஇயலை தனித்தெடுத்து வளர்த்த சூழல் இன்று தமிழியல் ஆய்வு என்ற கட்டமைப்பை நோக்கி வளர்கிறது; அதற்குப் பேராசிரியரின் நிறுவன உருவாக்கம் கைவிளக்காக இருக்கிறது. தமிழ்ச்சமூகம் இவரை என்றும் மறக்காது.

- வீ.அரசு