நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் எப் போதும் கேட்போரையும் வாசிப்போரையும் ஈர்த்து வந்திருக்கின்றன. நண்பர் சா. தேவதாஸின் சூதாடியும் வதெய்வங்களும் என்ற வாய் மொழிக் கதைகளின் சேகரம் இன்றைய தமிழ் வாசகனுக்கு நல்லதொரு விருந்து. இந்திய, இலங்கை, பர்மிய, சீன, ஆப்பிரிக்க, ஐரோப்பிய வாய்மொழிக்கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆசிரியரின் “வாய்மொழிக்கதைகள்: இன்றைய நோக்கில் சில குறிப்புகள்” வாய்மொழிக்கதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை. அது நாட்டுப்புறக் கதைகளுக்கு நல்லதொரு முன்னுரையாகவும் அறிமுகமாகவும் அமைகின்றது.

devadoss 241வாய்மொழி இலக்கியம் என்பது எல்லா மொழிகளிலும் காணப்படுகின்ற ஒன்று. அதனைக் குறிப்பிட oral, literature என்ற சொற்களை இணைத்து orature என்ற கூட்டுச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இலக்கியமே வாய்மொழியாகத்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வாய்மொழி இலக்கியம் குறையத்தானே செய்யும்? எனவேதான் ஆதியிலேயே எழுத்தைக் கண்டுபிடித்த தமிழில் வாய்மொழிக் கதைகள் குறைவாக (அரிதாக) இருக்கின்றனவோ? எனினும் வீரமாமுனிவர் தனது பரமார்த்தகுரு கதையின் முன்னுரையில் அதில் வரும் கதைகள் அப்போது தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த கதைகள் என்று குறிப்பிடுகிறார். தமிழ் வாய்மொழிக்கதைகளைப் பழங்காலத்தில் சேகரிப்பார் இல்லை போலும்!

வரலாற்றுக் கதைகள், பழங்கதைகள், நாட்டுப் புறக்கதைகள், தொன்மங்கள் வரிசையில் வாய்மொழிக்கதைகள் இடம்பெறும். இவற்றின் தன்மைகள் பற்றிப்பல என்று குறிப்பிடுவார்கள். இந்தச் சேகரத்தில் அவற்றில் பலவும் இடம் பெறுவதைக் காண்கிறோம். குற்றம் செய்கிறவன் தப்பிப்பது, நரித் தந்திரத்தால் ஏமாற்றுவது, கதையின் மூலம் ஓர் ஒழுக்க நெறியைக் கற்பிப்பது முதலியவற்றைத் தளமாகக் கொண்ட பலவகைக் கதைகள் உள்ளன. சில பேய்க் கதைகளாக இருக்கும். அவை பலருக்குப் பிடிக்கும். இப்போது திரைப்படங்களில் அவை அதிகம் இடம்பெறுகின்றன. சில வேளைகளில் ஒரு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சடங்கு எப்படித் தோன்றியது என்று காட்டவும் கதைகள் பிறந்திருக்கின்றன. அதேபோல ஒரு இயற்கை நிகழ்ச்சி எப்படித் தோன்றியது என்று பண்டைய மக்கள் கதை மூலம் விளக்குவதையும் காணலாம்.

சூதாடியான திந்தாராலாவும், இலங்கைக் கதையின் நாயகன் ஹராந்தகனும் சாகசக்காரர்கள். திந்தாராலா சூதாட்டத்திற்குத் தெய்வங்களையே போட்டிக்கு அழைக்கிறான். ஹராந்தகனும் குற்றத்திலிருந்து தப்பித்து விடுகிறான். பஞ்சாபின் நாட்டுப்புறக் கதையான ‘புலி, பிராமணன், நரி’ தந்திரத்தால் நரி புலியை ஏமாற்றிய கதையைச் சொல்கிறது. கிளி சொன்ன எழுபது கதைகள் எந்த ஒழுக்கநெறியைக் கற்பிக்கின்றன? கணவனை ஏமாற்ற நினைக்கும் மனைவியர் திருந்துகிறார் களா? தவறு செய்யாமல் தடுக்கப்படுகிறார்களா? ஒரு தெளிவின்மை (ambiguity)! எனினும் விக்கிர மாதித்தன் கதைகள் போலச் சுவையாக இருக்கின்றன.

நீதிக்கதைகளும் இல்லாமலில்லை. பெரும் பாலும் விலங்குக்கதைகளும், தேவதைக் கதை களும் ஒழுக்க நெறியைக் கற்பிப்பவையாகவே இருக்கும். ஆனால் டென்மார்க்கின் ‘நற்காரியங்களின் பலன்’ என்ற கதை நற்காரியங்களுக்குக் கெட்டது தான் கிடைக்கும் என்றல்லவா பாடம் தருகிறது? சீனத்துக் கதையான ‘நல்ல மனைவி’ அறிவாளியான ஒரு இளவரசியைப் பற்றியது. பெண்களை மதிக்காத மன்னவன் தனது மகள்மேல் கோபங்கொண்டு அவளுக்கு சவால் விடுகிறான். இளவரசியை முட்டாள் இளைஞன் ஒருவனுக்கு மணமுடித்து வைக்கிறான். அவளோ அவனைக் கெட்டிக்காரனாக ஆக்கி மன்னனையே தனது மகுடத்தையும் சிம்மாசனத்தையும் அவனுக்குத் தரச்செய்கிறாள். கதை ‘புத்திசாலி மனைவி முட்டாளை மன்னனாக்குவாள்; சோம்பேறி மனைவி துடிப்புள்ளவனை மந்தமாக்குவாள், என்ற இளவரசியின் சவாலை உண்மையாக்குகிறது. “எழுத்திலக்கியம் ஆணின் அதிகாரக் குரலைப் பதிவு செய்தால், நாட்டார் இலக்கியம் பெண் குரலை ஒலிக்கச் செய்யும்,” என்று முன்னுரையில் கூறப்பட்டிருப்பது இங்கு உண்மையாகிறது.

சந்திர கிரகணத்தையும், தேங்காயின் தோற்றத் தையும் விளக்குகின்றன சீனக்கதைகள். சீனப் பெரு நதிகள் உருவான கதையும் உண்டு. ஆமையின் ஓடு கரடு முரடாக ஆனது எப்படி என்று காட்டுகிறது ஆப்பிரிக்கக் கதை. வானவில் தோன்றிய விதத்தைப் பர்மியக் கதை விவரிக்கிறது. சிலவேளைகளில் மனிதருக்கு முக்கியமான படிப்பினையைத் தரு வதற்காகவும் கதைகள் பிறந்திருக்கின்றன. இயற்கை யையும், குறிப்பாக மரங்களையும் காப்பதற்காக ஒரு மரத்தைச் சுற்றி எழுந்த கென்ய நாட்டுக் கதையை வான்காரி மாத்தாய் தன் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (‘அன்பௌவ்டில்’ நிறைய நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன).

வழிநடை போகும்போதும், இருட்டில் கணப்புக்கு முன்னால் அமர்ந்து காவல்காக்கும் போதும் பேய்ப் பயம் துரத்தக் கதைகள் சொன்னால் அவையும் பேய்கள் பற்றியே இருக்கும். பேய்களும் ஆவிகளும் நடமாடும் கதைகள் இத்தொகுப்பில் குறைவுதான். சீனக்கதைகளில் டிராகன்களும், ஐரோப்பியக் கதைகளில் (ஆண்டர்சன் கதைகள் உட்பட), தேவதைகளும், விலங்குகளும், பூதங் களும் நிறைந்திருக்கும். சூதாடிக் கதையில் தெய்வங் களும் சிவனுமே முக்கிய பாத்திரங்களாக இருப் பதைப் பார்த்தோம்.

ராஜஸ்தான் கதையான ‘இரு பூநாரைகளில்’தான் நூற்றி இருபத்தெட்டு ஆவிகள் வசிக்கும் குளத்தை அடைகிறோம். அங்கு தகிக்கும் வெண்ணிற மனிதனாகிய ஆவி தீஜா, பீஜா ஆகிய இரு பெண்களுக்கும் அடைக்கலம் தருகிறது. நல்ல ஆவி அது. கதை ஒருபால் உறவைச் சொல்லுகிறது. தொகுப்பிலேயே நீண்ட கதை இதுதான். மகளை மகன் என்று கூறி ஆணாக வளர்த்து அவளுக்குத் தன் நண்பனிடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்ட படி நண்பனின் மகளை மணம் முடித்து வைக்கிறார் ஒரு சேட்டு.

பெண்கள் இருவரும் சேட்டின் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். தடுக்க முயன்ற கிராம ஆண்களை சோளக்கொல்லை பொம்மையின் உதவி கொண்டு அடக்குகிறாள் பீஜா. இருவரும் காட்டை அடைந்து குளத்தருகில் ஆவியின் தலைவனைச் சந்தித்து அவனது வெண் பளிங்கு மாளிகையில் தங்குகின்றனர். அங்கே ஒன்றாய் இணைகின்றனர். மீண்டும் மணிதரின் ஊருக்குப் போய் வெறுப்புடன் திரும்புகின்றனர். அடுத்த நாள் பீஜாவின் தாயும் சித்தி மகளும் இவர்களைப் பார்க்க வருகின்றனர். சித்தி மகள் அவர்களது திருமணம் ஏற்ககூடியது அல்ல. கேலிக் கூத்து என்று சொல்லி இவர்களை மாற்ற முயல்கிறாள்.

ஆனால் அவளே தனிமையில் வந்து ஆண்மையில்லாத தன் கணவன் பற்றியும் அதனால்தான் படும் துன்பங்களைப் பற்றியும் சொல்லிப் புலம்புகிறாள். பீஜா ஆணாக விரும்பி ஆவிகள் தலைவனின் வரத்தால் இனம் மாறுகிறாள். ஆண் பெண் உறவு கொண்டாலும் சிறிது காலத்திலேயே மனமுறிவு ஏற்பட்டு மறுபடியும் பெண்ணாகி விடுகிறாள். ஆவிகளின் தலைவனுடைய உதவியால் தீஜாவின் வித்தும் கருப்பையும் என்றென்றைக்கும் பொசுக்கப்படுகின்றன.

கதை கொஞ்சம் விரசமானது தான். ஆனால் விரசம் வெளியில் தெரியாதவாறு கதை சொல்லி யிருக்கிறார் தேவதாஸ். பெண்ணும் பெண்ணும் கொள்ளும் உறவை எவ்வளவு நாசூக்காகச் சொல் கிறார் பாருங்கள்:

பெண்பறவைகள் போன்று நின்ற இருவரும் தழுவிக்கொண்டு, ஒருவருடன் மற்றவர் சங்க மிக்கும் வேட்கையுடன், ஒருவரின் இதழ்களி லிருந்து மற்றவர் அமுதம் பருகியவாறு உலகை மறந்து போயினர்.

இன்னும் சங்கமிக்கவில்லை.

ஆனந்த ஊஞ்சலில் ஆடினர், குங்குமத்தை விடவும் சிவந்திருந்த அவ்விரு பறவைகளும் தாங்கள் ஒன்று சேர்ந்திருந்த களிப்பில் உலகை மறந்து போயினர்.

இந்தக் கதையை இச் சேகரத்தில் சேர்ப்பதற்கு தேவதாஸ் முன்னுரையில் சமாதானம் சொல்வது போல் இருக்கிறது. கதை ஜனரஞ்சகமாக இருக் கிறது என்கிறார். வாய்மொழிக்கதை அப்படித் தானே இருக்கவேண்டும்! கதையின் தொடக்கமே இது நாட்டுப்புறக் கதை என்பதைக் காட்டுகிறதே! ‘ஒரு காலத்திலே...’ என்றுதானே தொடங்குகிறது. மற்ற கதைகளில் காணப்படாத ஒருவகை நாட்டுப் புறத்திற்கே உரித்தான கவிதை நடையை இதில் பார்க்கிறோம். சின்னச் சின்ன வாக்கியங்கள். அழுத்தமான சொற் பிரயோகம். யாரோ ஒருவர் நம்முன்னால் நின்று கதை சொல்வது போல ஒரு உணர்வு. ஆனால் எதற்காக இந்தக் கதை? ஓரின மணத்தை அங்கீகரிக்கவா? ஆணாதிக்கத்தைச் சாடவா?

மொழியாக்கத்தில் வல்லுனரான தேவதாஸ் மொழி பெயர்ப்பு என்ற உணர்வே நமக்குத் தோன்றாதவாறு கதை சொல்கிறார். மொழி பெயர்ப்பு என்று தெரியவேண்டும் என்று சொல் பவர்களும் உள்ளனர். இருந்தாலும் வாய்மொழிக் கதையை அப்படியே வாசகன் ஏற்றுக்கொள்ளு மாறு சொல்ல வேண்டும். சினுவ அச்சிபி தனது படைப்புகளில் இக்கதைகளை எப்படிக் கையாள் கிறார் என்பதே வியப்பைத் தரும். இத் தொகுப்பில் வரும் ஆப்பிரிக்கக் கதை அவருடைய புதினத்தில் வருவது தான். எனினும் தேவதாஸ் அவர்களின் கதை சொல்லுகின்ற உத்தியும் நடையும் வாய் மொழிக் கதைக்குப் பொருத்தமாகவே இருக் கின்றன. இத்தனை கதைகளையும் தேடி, மொழி யாக்கம் செய்து சேகரித்திருப்பது பாராட்டிற் குரியது.

நூலை விசாகன் வடிவமைத்திருக்கின்றார், நன்றாக உள்ளது. ‘இரு பூநாரைகள்’ கதையில் வருகின்ற சோளக்கொல்லை பொம்மை அட்டையை அலங்கரிக்கிறது. அருமை.

சூதாடியும் தெய்வங்களும்
வாய்மொழி கதைகளின் சேகரம்
தமிழில்: சா.தேவதாஸ்
வெளியீடு: பன்முகம்
9487845666
விலை: ரூ. 200/-