பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சு வடிவம் பெற்ற குறுந்தொகை உள்ளிட்ட பதினெட்டு நூல்களும் தமிழர்களிடையே உருவாக்கிய அடையாள அரசியல், சங்க இலக்கியம் குறித்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அகம்ஙீபுறம் என்ற இலக்கியப் பாகுபாடும் இலக்கண நூலான தொல்காப்பியப் பொருளதிகாரமும் பருண்மையான நிலையில் தமிழ்ப் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்தன. சம்ஸ்கிருதம்தான் கற்றோரின் மொழியென முன்னிறுத்தப்பட்ட சூழலில், இரண்டாயிரமாண்டு களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைப் பின்புலத்தில் விரிந்திடும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழிலக்கியக் கல்வியிலும் ஆய்விலும் பெரும் மாற்றத்தை உருவாக்கின. தமிழுக்குச் செம்மொழி ஏற்புடைமை வழங்கப்பட்டமைக்குச் சங்க இலக்கியப் பிரதிகள்தான் காரணம்.

va su pa manikkanarசங்ககாலத் தமிழர் வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்டிருக்கிற பெருமித உணர்வு, தமிழ் மொழி வழியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிற நுண்ணரசியல் காத்திரமானவை. சங்க இலக்கியப் படைப்புகள் குறித்த ஆராய்ச்சி, வரலாற்றுச் சான்று களுடன் ஒப்பிடப்பட்டு, உருவான பதிவுகள் இன்றளவு செல்வாக்குடன் விளங்குகின்றன.

சங்க இலக்கியப் பிரதிகள் குறித்தான பேச்சுகள் இன்று பல்வேறு தளங்களில் கோட்பாடுகள் அடிப்படையில் நிகழ்த்தப் படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்க இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் தங்களுடைய கருத்துகளை அழுத்த மாகப் பதிவாக்கியுள்ளனர்.

ஐம்பதுகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய வ.சுப.மாணிக்கம் The Tamil Concept of Love என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வு, 1962-இல் தமிழ்க் காதல் என்ற தலைப்பில் நூலாக வெளியானது. சங்க இலக்கியப் படைப்புகளைப் போற்றி எழுதுவது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தொல்காப்பியரின் பொருளதிகாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் வ.சுப.மா. சங்க இலக்கியத்தை விரிவாக அணுகியிருந்தார். சங்க இலக்கியத்தை முன்வைத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்; பலர் ஆய்வேடுகளை நூலாக வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ்க் காதல் நூலினை மறுவாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது. பின் காலனியம், பின் நவீனத்துவம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், உளவியல், அமைப்பியல் என்று பல்வேறு கோட்பாடுகள் சார்ந்து திறனாய்வு மேற்கொள்ளப்படுகிற சூழலில், வ.சுப.மா.வின் சங்கக் கருத்தியல் போக்குகள் பெறுமிடம் கவனத்திற்குரியன. தமிழ்க் காதல் நூல் முன்னிறுத்துகிற அடிப்படையான ஆய்வு முடிவுகள், இன்றைய நவீனக் கோட்பாடுகளுடன் ஒத்திசைந்தும், வேறுபடுகிற களங்கள், சங்க இலக்கியம் குறித்த வ.சுப.மாவின் ஆய்வுப் புலமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

இன்று பின் நவீனத்துவக் கோட்பாடு வலியுறுத்துகிற மறுவாசிப்பு என்ற செயல்பாடு, பிரதிக்குள் பொதிந் திருக்கிற பல்வேறுபட்ட குரல்களை முன்னிறுத்துகிறது; ஒற்றைத் தன்மையை மறுக்கிறது. இத்தகைய போக்கின் கூறுகள், தொல்காப்பியத்தில் நுட்பமாக இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், தங்களுடைய கருத்தியலை நூற்பாக்கள் மீது சுமத்தி எழுதியுள்ள உரைகள், பிரதியின் பல்வேறு சாத்தியங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. சங்கப் பாடல்களின் அசலான கருத்துகளை நுட்பமாக அறிந்திட முயன்றுள்ள வ.சுப.மா. இலக்கண உரையாசிரியர்களின் கருத்துகளை மறுத்துப் புதிய விளக்கம் தந்துள்ளார்.

 சங்கப் பிரதிகளை ஆராய்ந்திட பேராசிரியர் வ.சுப.மா. பயன்படுத்தியுள்ள விமர்சன அணுகுமுறை, இன்று பின் நவீனத்துவக் கோட்பாடு முன்னிறுத்தும் மறுவாசிப்புச் செயல்பாடுதான். பண்டைய இலக்கண இலக்கியப் பிரதிகளை ஆராய்ந்திடும்போது, வ.சுப.மா. தர்க்கரீதியில் தந்துள்ள கண்டுபிடிப்புகள் ஏற்புடையன. தொல்காப்பியத்தின் பின்புலத்தில் அகத்திணை மரபு குறித்த நுட்பமான புரிதல், தமிழ்க் காதல் நூல் முழுக்க அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. இன்று அகத்திணை ஆய்வினை மேற்கொண்டுள்ள ஆய்வாளர்கள் எதிர்கொள்கிற சிக்கல்கள் குறித்து விவாதம் நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

அகத்திணை எனில் அன்பின் ஐந்திணை என்றும் ஏனைய கைக்கிளையும் பெருந்திணையும் ஒப்பீட்டளவில் தரமற்றவை என்றும் உரையாசிரியர்கள் உருவாக்கிய கருத்துகள், பன்னெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்து கின்றன. அன்பின் ஏழு திணைகள் என்ற கருதுகோளின் அடிப்படையில் தரவுகளை விவாதப் போக்கில் கட்டமைத்துள்ளார் வ.சுப.மா. கைக்கிளை என்ற சொல்லுக்கு முதிராக் குறுங்கரு எனக் கருத்து அடிப்படையில் தரும் விளக்கம் நுட்பமானது.

கண்டதும் காதல் எனக் காதல் வயப்படுகிற இளைஞனின் பார்வைக் கோணத்திற்கும், புணர்ச்சிக்குத் தயாராகாத உடலினைக்கொண்ட காமம் சாலாத மனநிலையுடைய சிறுமிக்கும் இடையிலான முரண், கைக்கிளைத் திணையின் அடிப்படையாகும். ஒரு கணம் இளைஞனின் மனதில் தோன்றும் காதல் விழைவை முன்வைத்திடும் அகத் திணையானது, கைக்கிளையில் அடங்கும். அந்தளவில் திடீரென அரும்பிடும் காதல், தூய்மையானது; அன்பிலானது என இலக்கணம் வகுத்திடும் வ.சுப.மாவின் ஆய்வு, அகத்திணைசார் மரபில் ஏற்புடையது.

பொருந்தாக் காமம் என்பது வலிந்து பெண்ணுடன் புணர்ச்சி என உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிற பெருந்திணை குறித்து வ.சுப.மா. புதிய நோக்கில் கருத்துரைத்துள்ளார். ஆரியர் வழக்கினிலான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கினையும் பெறும் திணை, பெருந்திணையானது என்ற நச்சினார்க் கினியரின் கூற்றைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். “இது சிறு கணக்கு நயமேயன்றிக் காரணம் ஆகாது. ஐந்துவரை எண்ணுவதற்காக ஐவிரல்களைப் படைத்தான் என்று கட்டுரைப்பது போலும்’’.

என நெற்றியடியாக வ.சுப.மா. மறுத்துரைத்துள்ளார். பெருந்திணைப் பெயர் ஆரியர் மணமுறைகளை எண்ணி இடப்பட்டது என்ற வாதம், அறியாமையை வெளிப்படுத்துகிறது என்பது வ.சுப.மா. வின் வாதம். கைக்கிளையும் பெருந் திணையும் அகத்திணை சார்ந்தவை அல்ல என்ற பிற்காலத்தியக் கருத்தியல் போக்கும், அவை குற்றேவல் செய்வாரின் காதல்கள் என்ற இளம்பூரணரின் கருத்தும் சரியல்ல என்று மறுக்கிறார் வ.சுப.மா. சிறிய அளவில் நடைபெற்றதை அவையல் கிளவியாகப் பெருந்திணை எனச் சொல்வது வழக்கானது என்ற சோமசுந்தர பாரதியாரின் கருத்தினை, இதையெல்லாம் மங்கல வழக்காகச் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று கருத்துரைக்கிறார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் முனைவர் பட்டத்திற்காகச் செய்த ஆய்வில், தமிழ் மரபுஙீஆரிய மரபு குறித்த வ.சுப.மா.வின் நுண்ணரசியல் வெளிப் பட்டுள்ளது. இடைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மதங்களும் சாதிகளும் முன்வைத்த கோட்பாடுகளைச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற பண்டைய நூல்களில் புலவர்கள் காண முயன்றதால், குழப்பங்கள் நடைபெற்றன என்ற வரையறை கவனத்திற்குரியது. பொதுவாக அகத்திணை என்ற வரையறையை நுட்பமாக ஆராய்ந்திட்ட வ.சுப.மா.வின் விளக்கம் இன்றைக்கும் பொருந்துகிறது.

சங்க இலக்கியம் பண்டைத் தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகிறது; குறிப்பாகக் காதலின் மகத்துவத்தை மேன்மைப்படுத்தியுள்ளது என்று பொதுப்புத்தியில் இன்று உருவாக்கப்பட்டுள்ள கருத்தியலுக்கு மாற்றாகத் தமிழ்க் காதல் நூல் விளங்குகிறது. தூய காதல் என்று உருவாக்கப்பட்டுள்ள புனைவை மறுதலித்து உடல்களின் காமத்தைக் கொண்டாடுகிற பிரதியெனச் சங்க இலக்கியத்தை வ.சுப.மா. முன்னிறுத்துகிறார். சங்கப் பிரதிகளில் மையமாக ஒலிக்கிற குரல்கள் அடையாளங் கண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சங்ககாலத்தில் காதலர்கள் களவுக் காலத்தில் தங்கள் விருப்பம் போல புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்று அகப் பாடல்களின் வழியாக வ.சுப.மா. நிறுவுகிறார். விரும்பிய ஆணும் பெண்ணும் உடலுறவுகொள்வதை பண்டையத் தமிழ்ச் சமூகம் இயல்பானதாகக் கருதி அங்கீகரித்தது என்பது, இன்றைய தமிழர்கள் அறியாதது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் கரணம் எனப்பட்ட சடங்கு வகுக்கப்பட்டது என்ற தொல் காப்பியரின் நூற்பா குறித்து ஏற்கனவே உரையாசிரி யர்கள் விளக்கம் தந்துள்ள நிலையில், வ.சுப.மா. அவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறார். எண்ணுவார் தம் எண்ணத்தை அந்த நூற்பாவில் காண விழைகின்றனர் என்று குறிப்பிடுகிறவர், தனது கருத்தை ஆய்வு நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

களவுக் காலத்தில் காதலித்த பெண்ணுடன் உடலுறவுகொண்ட காதலன், பின்னர் பொய்யாக மறுத்ததால் கரணம் தோன்றியது என்பதில் வ.சுப.மா.விற்கு உடன்பாடு இல்லை. களவு வாழ்க்கையில் மட்டுமின்றி, திருமண வாழ்க்கையில் கணவன் பரத்தையுடன் சேர்ந்து வாழ்கிற வழுவினையும் கரணம் தடுக்காது. பின்னர் தொல்காப்பியர் குறிப் பிடுகிற பொய்யும் வழுவும் எதைக் குறிக்கின்றன? கரணம் என்பது திருமணக் காலத்தில் செய்யப்படுகிற ஒருவகையான சடங்கு. பொய்யும் வழுவும் இல்லாத பெண்ணும் ஆணும் திருமண உறவில் ஒன்றிணையும் போது, நிகழ்த்தப்படுகிற சடங்குதான் கரணம் என்ற வரையறை ஏற்புடையது. அழகிய இளைஞிக்கும், இளமையான மனைவிக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லாத நிலையைப் பொய் எனவும் அண்மையில் திருமணமான பெண்ணின் எழிலான இளமைத் தோற்றம், இளைஞரின் மனதில் ஏற்படுத்துகிற ஈர்ப்பினை வழு என்றும் தொல்காப்பியர் குறிப்பிட்டு உள்ளார். இத்தகைய இளம் மனைவியும் இளைஞனும் குழம்புவதற்குக் காரணமாக விளங்குகிற வழுவும் பொய்யும் சமுதாயத்தின் குறைதான். இந்நிலையைப் போக்குவதற்குக் காரணமாகத்தான் சான்றோர் கரணத்தை உருவாக்கினர். எந்தவகையான கரணம் பின்பற்றப்பட்டது எனத் தொல்காப்பியர் குறிப்பாகச் சுட்டவில்லை. பொய்யும் வழுவும் என்பதற்கு இதுவரை மரபான முறையில் சொல்லப்பட்ட விளக்கங்களை மறுத்து, புதிய கோணத்தில் வ.சுப.மா. சொல்லியுள்ள கருத்து, அகத்திணைக் கோட்பாட்டுக்கு வலுச் சேர்க்கிறது.

பெண் குழந்தைக்குக் குழவிப் பருவம் முதலாகக் காலில் அணிவிக்கப்பட்ட சிலம்பு என்ற அணிகலனைத் திருமணத்திற்கு முன் நீக்கப்படும்போது, அச்சடங்கு விழாவாகக் கொண்டாடப்பட்டது. சிலம்பு கழி நோன்பு சடங்கு, இளம் பெண் திருமணமானவள் என்பதைப் பிறர்க்கு உணர்த்திடும். இதுபோன்று திணைதோறும் வேறுபட்ட கரணங்கள் வழக்கினில் நிலவியிருக்கலாம் என்பது வ.சுப.மாவின் கருத்து.

பண்டைய நாளில் இளம் பெண்கள் கூந்தலில் மலர் சூடுவது வழக்கம் இல்லை. களவின்போது தலைவன் பெண்ணின் கூந்தலில் பூவைச் சூடியதால் ஏற்பட்ட பூவின் வாசம், அவளைத் தாயிடம் காட்டிக் கொடுப்பதாகச் சங்கப் பாடல் குறிப்பிட்டுள்ளது. குமரிப் பெண் கூந்தலில் பூவைச் சூடும் உரிமையைத் திருமண நாள் முதலாகப் பெறுகின்றாள். கரணம் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற பண்டைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கை நெறியைச் சங்கப் பாடல்கள் மூலம் அழுத்தமாக வ.சுப.மா. நிறுவி யுள்ளார். அவருடைய ஆய்வுப் பொருண்மையானது பண்பாட்டு மானுடவியல் நெறியில் அமைந்துள்ளது.

சங்க இலக்கிய மருதத் திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ள பரத்தை பற்றிய செய்திகளை முன் வைத்து, அன்றைய சமூகச் சூழலை வ.சுப.மா. ஆராய்ந் துள்ளார். அன்பின் ஐந்திணை வாழ்க்கையில் ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கிற இன்பத்தை முன்னிறுத்துகிற சங்கப் பாடல்களில் பரத்தையை எப்படி அணுகுவது என்பது முக்கியமான கேள்வி. சங்கப் பரத்தை என்பவள் கீழ்மகள் அல்லள் எனத் துல்லியமாக மதிப்பிடப்படுகிற நிலையில், பரத்தை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. குடும்பப் பெண்ணின் ஊடலை வெளிப் படுத்த பரத்தை ஒழுக்கம் என்ற விளக்கம் பொருத்த மன்று. ‘’பண்டைச் சமுதாயத்தில் கனிகை மடந்தையர் இயல்பாகப் பெற்றிருந்த நிலையான செல்வாக்கை நாம் மறைப்பதற்கில்லை” என்று குறிப்பிடுகிற வ.சுப.மா. அகத்திணைக் கோட்பாடுடன் அதை எப்படிப் பொருத்துவது எனக் குழம்பியுள்ளார். சங்க இலக்கியம் குறிப்பிடுகிற பரத்தை என்பவள் பண்டைய தாய்வழிச் சமூகத்தின் எச்சம். சங்கப் பிரதிகள் வலியுறுத்துகிற குடும்பம் என்ற நிறுவனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறையைப் பொருட்படுத்தாமல், தன்னியல்பாக வாழ்ந்த சுதந்திரமான பெண்ணைப் புலமை மரபு, பரத்தை என்று குறிப்பிட்டுள்ளது. அவளுடைய பாலியல் விழைவும் தேர்வும்கூட அன்பு வயப்பட்டது தான். எனவே வ.சுப.மா. வலியுறுத்துகிற அகத்திணைக் கோட்பாட்டு நெறிக்குள் பரத்தமை ஒழுக்கம் இடம் பெறுகிறது.

வ.சுப.மா. தனது கருத்தை அழுத்தமாக வலியுறுத்திட உரையாசிரியர்களின் தட்டையான விளக்கங்களை விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளார். ஒருவரையருவர் விரும்பிய இளைஞனும் இளைஞியும் கரணம் என்ற திருமணச் சடங்கினுக்குப் பின்னர், தங்குதடையின்றி உடலுறவு இன்பத்தைத் துய்ப்பர் என்பதைப் பின்வரும் தொல்காப்பிய நூற்பா குறிப்பிட்டுள்ளது.

கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சுதனை அவிழ்ந்த புணர்ச்சி

களவுக் காலத்தில் தயக்கத்துடன் காதலர்கள் அனுபவித்த கலவி இன்பம், மணச்சடங்கு பலரறிய முடிந்த பின்னர், கற்புக் காலத்தில் கட்டற்றுப் பொங்குகிறது என்பது இந்நூற்பாவின் இயல்பான பொருளாகும். இந்த நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கிற உரையின் பின்னர் பொதிந்திருக்கிற வைதிக அரசியலைக் கண்டறிந்த வ.சுப.மா. கடுமையாகச் சாடியுள்ளார். “இவ்வெளிய இனிய கற்பியல் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் ஒழுக்க மில்லுரை எழுதியிருக்கிறார் என்று வரைய என் எழுதுகோல் நடுங்கினும் எடுத்துக் காட்டினாற்றானே தெரியும் என்ற முறையால், எழுத என் மனம் ஒப்புகிறது. ‘கரணப்படி முதல் நாள் திங்களுக்கும் இரண்டாம் நாள் கந்தருவருக்கும் மூன்றாம் நாள் அங்கிக்கும் தலைவியை அளிப்பார்களாம். இத் தெய்வங்களோடு அவள் பள்ளி செய்து ஒழுகுவாளாம்; இந் நாளெல்லை முடிந்த காலத்து அங்கியங்கடவுள் நாலாம் நாள் தலைவனுக்குத் தலைவியை அளிப்ப, அவன் அவளை நுகர்வானாம்; வரைந்த பின் முன்று நாளும் கூட்டமின்மையால் நிகழ்ந்த மனக்குறை, நெஞ்சு தளை நாலாம் நாள் இரவின் புணர்ச்சியால் தீருமாம்; இது வேத வழக்கு எனத் தலைவன் தலைவியிடம் கூறுவானாம்’ என இவ்வாறு நச்சினார்க்கினியர் கருத்துரை செய்துள்ளார். தமிழர் கண்ட கற்பியல் இதுவா? தமிழினத்தின் நாகரிக ஏடான தொல் காப்பியத்துக்கு உரையா இது? இக்கருத்தெல்லாம் அல்தமிழ் நெறியன்று அகற்றுக.” இன்றளவும் உயர் சாதியினர் இல்லத் திருமணங்களில் பிராமணர்கள் இத்தகைய மந்திரங்களைச் சம்ஸ்கிருத மொழியில் சொல்லி திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். தமிழர் பண்பாட்டிற்கு முரணான வைதிகச் சீரழிவு தொடர்கிறது. அகத்திணைக் கோட்பாடு, தமிழர் நெறியில் அமைந்தது என்று காரணகாரியத்துடன் நிறுவுகிற வ.சுப.மா, அதனை வைதிக நெறியுடன் இயைபுபடுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். சங்க அகப் பாடல்களையும் தொல்காப்பியரின் அகத்திணை இயலையும் நுட்பமாக வாசித்து, அவற்றின் தனித்துவத்தைக் கண்டறிந்திட்டவர் தமிழர் பண்பாட்டினுக்கும் அடையாள அரசியலுக்கும் வழிவகுத்துள்ளார்.

தலைவி, தலைவன் உள்ளிட்ட பதினைந்து மாந்தர்களுடன் இயைந்துள்ள அகத்திணைக் கோட்பாடு முழுக்கப் புனைவுமயமானது என ஒதுக்கும் போக்கு இன்றளவு நிலவுகிறது. சங்க இலக்கியத்தின் சிறப்பான அகத்திணைக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு வ.சுப. மா. சொல்லும் தீர்வுகள், குறிப்பிடத்தக்கன. ஐந்திணையின் பொருள் வரம்பினை விரித்தால் அளவற்றுப் பெருகிட வாய்ப்புண்டு. அவை: காதலர் பிரிவு, வேறு புதிய துணையைத் தேடுதல், தலைவனுக்குத் தோழியுடன் பாலுறவு, தோழிக்கும் பாங்கனுக்கும் காதல், தலைவிக்கும் பாங்கனுக்கும் பாலுறவு, வன்புணர்ச்சி, ஐந்திணை மாந்தர் மரணம், உடன்போக்கு / இரவுக்குறியில் விலங்கு தாக்கி தலைவன் அல்லது தலைவி இறத்தல், பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தராமையினால், காதலர் நஞ்சுண்டு இறத்தல், பொருள் ஈட்டச் சென்ற நாட்டில், ஈட்டிய பொருளை எல்லாம் செலவழித்துவிட்டு வெறுமனே திரும்புதல். இன்ன பிற சம்பவங்கள் அகத்திணை மரபில் அடங்காதவை; பொருந்தாதவை என்ற வ.சுப. மா.வின் விவரிப்பு, பாடல் சான்ற வழக்கினை நினைவூட்டுகிறது. ஐந்திணை இலக்கியத்திற்குக் காமமே காலம் என்ற நிலையில், அங்கே தோன்றும் காதல் செயல்பாடுகளே பொருளாக அமைகின்றன.

வ.சுப.மா. அகத்திணைக் கோட்பாட்டினைப் பாலியல் கல்வி என்று குறிப்பிடுவதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. ஒருவகையான லட்சிய நோக்கினுக்குக் காமம் சார்ந்த சங்கப் பாடல்கள் முக்கியத்துவம் தந்துள்ளன; உடல்களின் வேட்கையைப் போற்று வதுடன், பாலியல் துய்ப்பைக் கொண்டாட்டமாக்கி யுள்ளன, பாலியல் துய்ப்பை முன்னிறுத்திய உடலரசியல் வரலாற்றில் காமம் சார்ந்த சங்கப் பாடல்கள் தனித்துவமானவை.. “காமம் நிலையாது, மெய்யுறு புணர்ச்சி தீது. துறவுக் கோட்பாடுகளை ஐந்திணைக்கண், அகத்திணைக்கண் காண முயலுதல் ஆண் வயிற்றில் கருக் காண்பதை ஒக்கும்” என்ற வ.சுப.மா.வின் நிலைப்பாடு ஏற்புடையது. காமத்தின் பயனின்மையை அறிவுறுத்தவே அகத்திணையைத் தொல்காப்பியர் இயற்றினார் என்ற உரையாசிரியர் இளம்பூரணரின் கருத்து, மூலஆசிரியரின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானது. ஜைன சமயத்தைச் சார்ந்த இளம் பூரணர் காமத்தைப் பாவம் எனவும் மெய்யின்பத்தைச் சிற்றின்பம் எனவும் பெண்ணை அணங்கு எனவும் குறிப்பிடுகிற சமயக் கருத்தியலை அகத்திணைக்குப் பொருத்துவதை வ.சுப. மறுப்பது, இன்றைய பெண்ணிய வாசிப்பினில் முக்கியமானதாகும். பூமியில் மனித உடல்களைப் புறக்கணித்து, புலன்களால் கிடைக்கிற இன்ப நுகர்வைத் தவிர்ப்பதுடன், இயற்கையான பாலியல் விழைவைக் குற்ற மனத்துடன் தொடர் புடையதாக்குகிற மத அடிப்படைவாத அரசியல், காலந்தோறும் எப்படி அதிகாரம் செலுத்துகிறது என்பதற்கான மூலம் உரையாசிரியர் காலத்தில் தொடங்கிவிட்டதை வ.சுப.மா.வின் மறுப்புரையில் அறிய முடிகிறது.

பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியுடையவரால் சங்க இலக்கியப் பாடல்களை வாசித்து, அவற்றின் பொருளையும் கவித்துவச் செழுமையையும் புரிந்திட இயலும். எனினும் பிற்காலத்தில் வகுக்கப்பட்ட திணை, துறைக் கோட்பாடுகள், சங்க இலக்கிய வாசிப்பில் புதிய அணுகு முறையை உருவாக்கின. அவ்வடிப்படையில் தொல் காப்பிய அகத்திணையியல் அடிப்படையில் சங்கப் பாடல்களை விளக்கி, அகக்கோட்பாட்டின் பன்முக அம்சங்களை வரையறுத்துள்ளது, தமிழ்க் காதல் நூலின் தனித்த அடையாளமாகும். திணை, துறை என்ற நிலையில் பாடல்களில் ஊடாடும் கருத்தியல் போக்கு களைத் துல்லியமாக வரையறுத்திட முயன்றது, இன்றளவும் அகத்திணை ஆய்வில் முன்னோடியாக விளங்குகிறது. இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் புணர்ச்சி, பகல் / இரவுக் கூட்டங்கள், வெறியாட்டு, அலர், மடலேறுதல், உடன் போக்கு, பொருள்வயின் பிரிவு, பரத்தை, நொதுமலர் வரைவு போன்ற அகத்திணைக் கலைச்சொற்களை இளம் ஆய்வாளர்கள் நுண்ணிதின் அறிந்திடுமாறு, ஆழமாகவும் அகலமாகவும் தமிழ்க்காதல் நூலில் விளக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் காதல் நூலுக்கு முகவுரையில் வ.சுப.மா. குறிப்பிட்டுள்ள அகப் பாடல்கள் குறித்த மதிப்பீடுகள், இன்றைய மறுவாசிப்பிலும் கவனத்திற்குரியனவாக விளங்குகின்றன. அவை: “அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர், எடுத்த உடம்பை மதிப்பர், கொண்ட மனத்தை மதிப்பர், ஒருவர் ஒருவர் தம் காம நாடிகளைப் புரிவர், காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர். வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர், மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர், அகத்திணை வாழ்க்கையை அன்புத் திணை வாழ்க்கையாகக் காண்பர்”. இரண்டாயிரமாண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த சங்கத் தமிழரிடமிருந்து பாலியல் தொடர்பான செய்திகளை அறிந்திடும் சூழலில், பாலியல் கல்விக்கும் அகத்திணைக் கோட்பாடு முன்னோடியாக விளங்குவது, வரலாற்றில் விநோதம் தான்.

(காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 22-02-18 அன்று நடைபெற்ற அறக்கட்டளைக் கருத்தரங்கச் சொற்பொழிவில் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்)