தமிழ்க் கவிதை மரபு நெடியது. யாப்பு நீக்கமற வீற்றிருந்த இலக்கியப் பரப்பில் காலனியக் கல்வியும், கேள்வியும், உலக இலக்கிய அறிமுகமும் உரைநடை எனும் இயல்மொழி ஊடகத்தை உற்பத்தி செய்தது. தமிழ் மொழியில் முன்னரே உரைசார் கூறுகள் இருக்கத் தான் செய்தன. என்றாலும், அய்ரோப்பிய அறிவுப் பரிமாற்றம் உரைநடை இலக்கிய வெளியை விசாலமாக்கிற்று.
நவீன கவிதை தன்னளவில் விடுதலைபெற்று தனித்தியங்கத் தொடங்கிய தருணமிது. இலக்கிய மெழுகுப் பூச்சுக்கள் உதிர்ந்து விட்டன. நவீனத் தன்மை ஒருவகையில் மொழிப்பயன்பாட்டிலிருந்தே தன்னை எழுதிக்கொண்டது எனலாம். புத்தாயிரத்தின் தொடக்கம் ஆதிவாழ்வின் அசலிலிருந்து புதிய மொழிதல் முறையைக் கொண்டுவந்து சேர்த்தது. உரத்துக் கேட்ட முழக்கங்களைக் கடந்து இரத்தமும் சதையுமான வாழ்விலிருந்து நவீனகவிதை தன்னைத் தகவமைத்துக் கொண்டது.
மையங்களிலிருந்து விலக்கப்பட்டிருந்த விளிம்புகள் தங்களின் அடையாளங்களை வரையத்தொடங்கின. தலித், பழங்குடி, மூன்றாம் பாலினம், இழிதொழில் வகை, குற்றவாளிகள், தீரா நோயாளிகள்... என்றெல்லாம் ஓரங்கட்டப்பட்டவர்கள் தங்களை எழுதத் தொடங்கினர். இது ஒரு வகையில் தன் அனுபவப் பகிர்வானாலும் கூட தனித்த ஒன்றை முன்மொழியவில்லை. மாறாக, ஒரு குழுவின், கூட்டத்தின், பிரிவின் வாழ்வைப் பேசின. இழப்பைப் பேசின. துயரைப் பேசின. விடுதலையைப் பேசின. பின்காலனிய எழுத்து வகை எனப் பெயர் பெற்றன.
இனவரைவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகியவற்றின் மூலமாக ஓரளவு அறியப்பட்டிருந்த விளிம்பு நிலை வாழ்க்கை இப்புதுப் பாய்ச்சலால் உக்கிரம் கொண்டது. கதை, கவிதை, தன்வரலாறு, பத்தி எழுத்து... எனப் பலவகைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் பதிவானது.
அருந்ததிய மக்களை எழுதிய மதிவண்ணன், காணிக்காரப் பழங்குடிகளை எழுதிய என்.டி.ராஜ்குமார், புதிரை வண்ணார்களை எழுதிய நட. சிவக்குமார், தலித்துகளை எழுதிய சுகிர்தராணி... வரிசையில் நாவிதர்களை எழுதியுள்ளார் கலைவாணன் இ.எம்.எஸ். ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ நாவிதர்களின் விளிம்புநிலை வாழ்வை மிக நுட்பமாக பதிவு செய்கின்றது.
(எங்கும் எதிலும் எப்போதும்‘மயிருகள்’ உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ‘மயிரு’ இங்கு குறியீடுதான். சாதி மயித்தைத்தான் கலைவாணன் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.)
கவிதையைப் பெண்ணாக, மலராக, உயிராக, உணர்வாக, கை வாளாக, துப்பாக்கியாக... அவரவர் மனவெளி சார்ந்து பார்த்ததுண்டு. பறைசாற்றியதுண்டு. எண்μம் எழுத்தும் மரபுப் புனிதங்கள் எனும் மாயப் போர்வையால் மூடிப் பாதுகாக்கப்பட்டதுண்டு. ‘உவமை என்பதே உயர்ந்ததன் பொருட்டு’ என்பதுதானே தொல்காப்பிய நெறி. மேன்மைகள், உன்னதங்கள், உள் வெளிகள்... எனக் கட்டமைக்கப்பட்ட ‘மேட்டிமைப்’ பண்பாட்டுக்கூறுகளை உடைத்து நொறுக்கிக் கரை யிறக்கியிருக்கிறது காலம். அனுபூதி நிலையில் ஆன்ம விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்த நவீனத்தமிழ் கவிதைச் சூழலில் - ‘பீ அள்ளப்போகும் என் கவிதை’ என்றொரு கலகக்குரல் குமரி மண்ணிலிருந்து பீறிட்டுக் கிளம்பிற்று. ‘எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ எனக் கட்டியமைக்கப்பட்டதும், சரஸ்வதி நாவில் எழுதவும், விநாயகன் அடி எடுத்துக் கொடுக்கவு மாக உருவாக்கப்பட்ட புனிதங்கள் பின்காலனியச் சூழலில் உடைந்து நொருங்கின.
இப்பின்புலத்தில்தான் கவிதையை ‘மயிருகள்’ என வெடிக்கிறார் கலைவாணன் இ.எம்.எஸ். ‘மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான்’ என மயிரை (தன்) மானத்தின் குறியீடாக்கிய தமிழ்ச்சமூகம் அதனை அவமானத்தின் அடையாளமாகவும் ஆக்கிவிட்டது. மீசை தமிழ் வீரம்: மீசையை சீர்செய்பவன் ஒதுக்கப் பட்டவன். மருத்துவரின் அறுவை சிகிச்சைக்கு ஆயுத மாகப் பயன்பட்ட கத்தியும், கத்திரியும் முடிவெட்ட, மழிக்கப் போனது எப்படி? பெண் பருவம் எய்துதலிலும், திருமணத்திலும், பிள்ளைப் பேற்றிலும், சாவிலும் தீட்டைக் கழிக்கும் தூய்மையான நாவிதர்கள் ‘தீண்டாதார்கள்’ ஆனது எப்படி?
ஏணிப்படிநிலை அமைப்பாக உள்ள இந்தியச் சாதி அமைப்புமுறையைக் கேள்வி எழுப்பாமல் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை. குடிமைச் சமூகத்தில் தொழில் அடிப்படைச் சாதிகள் ஒடுக்கப்பட்ட துயரம் சொல்லி மாளாது. வெகு மக்களின் அன்றாட வாழ்க் கைக்கு ‘வெகு சிலராக’ இருக்கிற சேவைக்குடிகள் தவிர்க்க முடியாதவர்கள். முக்கியத்துவம் வாய்ந்த இவர்கள், வர்ணமும் வர்க்கமும் சேர்ந்து உறுதிப்பட்டபின்னால் ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகிவிட்டனர். பிறப்பு முதல் இறப்பு வரை, காலை முதல் இரவு வரை எல்லா தருணங்களிலும் ‘நீக்கமற’ சாதி எழுந்து நிற்கிறது. எங்கும் எதிலும் எப்போதும் ‘மயிருகள்’ உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ‘மயிரு’ இங்கு குறியீடுதான்.
சாதி மயித்தைத்தான் கலைவாணன் திரும்பத் திரும்பச் சொல்கிறார். “தொட்டிலில் கிடக்கும் என்னை /சலூனில்/வேலைமுடிந்து வந்த அப்பா/முத்தமிட்ட/ கன்னப்பரப்பில் இரண்டு மூன்று/வெள்ளை முடிகள்/ஒட்டியிருக்கின்றன/எந்த ஜாதிக்காரனின்/அழுக்கு மயிரோ?” என அருவருக்கிறார். அதே சமயம் அப்பாவின் தொழில் ஏளனமானது அல்ல, அது உழைப்பு. உழைப்பின் அறுவடைதான் தமது இருப்பு என்பதையும் ஒரு கவிதையில் பதிவு செய்கிறார். வெட்டியும் மழித்தும் போட்ட மயிர்களின் வயலில் அரிசியும் கிழங்கும் விளைந்து பின்னர் தன் உடம்பானதைச் சுட்டுகிறார்.
சாதி என்பதே ஒரு கற்பிதம்தான். சநாதனம் அதை நிலைபேறுடையதாக்கிவிட்டது. ஒடுக்கப்பட்டோர் உளவியல் சார்ந்து சாதி ஒடுக்குதலை உணர ஒரு அற்புதமான கவிதை: “இராத்திரி / அப்பா மிச்சம் வைத்த / கஞ்சியைக்குடிக்க / பசியோடு காத்திருப்பேன் / அதுல மிக்சர் பொடியும் / எவனுக்கோ / வெட்டி தள்ளிய / அஞ்சாறு முடிகளும் மிதக்கும்” இது அனுபவத்தின் வெளிப்பாடு. சதா தொழிலை, சாதியை இழிவுப்படுத்தும் போது... அது தின்னும் சோற்றில், உடுத்தும் உடையில், சுவாசிக்கும் காற்றில்... பரவி நாறுவது தவிர்க்க முடியாததாகிறது. “செத்த வீட்டில், பிணத்துக்கு சவரம் செய்து / மூக்குச்சளி குண்டிபீ துடைத்து / குளிப்பாட்டி பவுடர் போட்டு / கைகால் / பெருவிரல்கள் சேர்த்து கட்டி / உடைமாற்றி / சென்ட் அடித்து / பிரேதத்தை கருநீள பெஞ்சில / நீளமாக படுக்க வைத்துவிட்டு” - இதற்குக் கூலி என்ன தெரியுமா? கொஞ்சம் அரிசி. அன்றாடங் காய்ச்சி வாழ்க்கை. கலைவாணன் எழுதுகிறார்: “அன்னைக்கு ராத்திரி / வீட்டுல / சோறுபூரா / பொண நாத்தம்” இந்த வாழ்க்கையை எப்படி சகித்துக் கொண்டிருப்பது?
“செத்த வீட்டுக்கும் / பாபர் ஷாப்புக்கும் போனவங்க / குளித்த பிறகுதான் / வீட்டுக்குள் வரμம் / ஒட்டிய / முடிகள் போவதற்கும் / நாசுவன் தொட்டதற்கும்”எனத் தீண்டாமைக்குள்ளாக்கப்பட்டதைக் கூறுவதோடு நின்றுவிடவில்லை. மருத்துவர்களாக, அழகுக்கலைஞர் களாக, சடங்குமுறை நிறைவேற்றுனராக, இசைக் கலைஞர்களாக இருந்த முன்னோரின் பெருமையைப் பல கவிதைகளில் அழகுறப் பதிவு செய்கிறார். வர்மம் தெரிந்த அப்பா, ஊர்ப்பெண்களின் மர்மம் அறிந்த அம்மா, எந்தவிதத்திலும் குறைவுபடாத நாவிதத் தொழில் எனப் பலவற்றையும் கவிதைகளாக்கியுள்ளார். “ஆலமூடு சுடலைமாடனும் / சுடுகாட்டுப் பேய்களும் / ஆமத்தான் பொத்தை சாலையில் / தனியாக வருவதில்லை / கத்தி கத்திரியுடன் வரும் / அப்பாவுக்கு பயந்து” - என எழுதிச் செல்லும் போது இது தனிப்பட்ட அப்பாவை அல்ல தன் தொல்குடியை, குலத்தை கம்பீரமாக முன் நிறுத்துவதாக அமைகின்றது. அதே போல இதில் நாவிதப் பெண்களை - அம்மாவை முன் வைத்து - அவர்களின் பணிச்சிறப்பை மிக எளிமையாக ஒருவித எள்ளலோடு பல கவிதைகளில் படைத்துள்ளார். “ஊரு மருத்துவச்சியாக / அம்மா பிரசவம் பார்த்து / பூச்சு பறக்கி போட்ட / எல்லா குந்திராண்டங்களும் / இப்ப வளர்ந்து / ஆளுக்கொரு பனைமரத்துல / பூதங்களா தொங்குது”. அதே நேரத்தில் சொந்த சாதியைச் சொல்லிக் கொள்வதை இழிவாகக் கருதும் மேல்நிலையாக்கத்தை சில கவிதைகளில் எள்ளலுடன் பதிவு செய்கிறார். “நல்லது கெட்டதுக்கு கூப்பிட்டா / ஜாதி தெரிஞ்சிரும்னு /கவர்மெண்டுல வேலை பாக்குறவனுகளும் / பணக்கார நாசுவ பயலுகளும் / வீட்டுக்கு வரமாட்டானுக”. என்றும், பார்பர் ஷாப்பில் வேலை என்றால் உதாசினப் படுத்துவதையும், புலம் பெயர்ந்த இடங்களில் நாயராக, நாடாராக மாற்றிக் காட்டிக்கொள்வதையும் தன் கவிதைகளில் சுட்டுகிறார். கடக்க முடியாதது அல்ல சாதி. சாதியின் ஆணிவேர் அகமணத் திருமணமுறை. இதில் கைவைத்தால்தான் சாதி சரியும் என்பதை மிகச் சரியாக ஒரு கவிதையில் பதிவு செய்கிறார்: நாவிதனின் மனைவியான தாய் செட்டியோடு வாழ்ந்து பாதிச் செட்டிச்சி ஆகிறாள். அக்கா மலையாளியாகிவிட்டாள், தங்கை தேவராகிவிட்டாள், அவனும் நாடாராக நடிக்கிறான். “அம்மா இறந்த அன்று/லேமக்கா உங்க/அம்மைக்கு சாவு சடங்குகளெல்லாம்/என்ன கணக்குல/பண்ணனும் டேன்னனு கேட்டான்/காரியம் நடத்த வந்த/கோட்டாறு பார்பர் ஷாப் முருகன்”.
வாழ்விலிருந்துதான் எல்லாமும் முகிழ்க்கிறது. கலைவாணன் தன் வாழ்வை எழுதும் போது முன்னோரைச் சொன்னால் அது வரலாறாகிறது. நாவிதர்கள் வெறும் முடிதிருத்துபவர்கள் மட்டுமல்ல, தனித்திறக் கலைகளின் ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள் என்பதை ஒரு கவிதை இப்படிப் பதிவுசெய்கிறது. ‘நொங்கு / கருப்பட்டி புளி / வருக்கச்சக்க மாம்பழம் / கொண்டு வந்து / ஓய் ஆசானேன்னு / விளிச்சு / சாராயம் ஊத்திகொடுத்து / ஒத்த கம்பு இரட்டைக் கம்பு / தீப்பந்தம் சுருட்டு வாளு / கடாரி சிலம்பம் / நாட்டு அடவு வர்மம் / அவன் அம்மைக்க அடியந்திரம் / எல்லா கொண்டாட்டத்தையும் படிச்சிட்டு / வீட்டு உள் வழியா / சிவப்பு கலர் நிக்கர் தெரிய / தொடை தட்டி நடந்துபோவானுக / அஞ்சாறு கறுத்த சிஷ்ய பயலுக / அப்பாவுக்கு வயிறு நிறைஞ்சிருக்கும் / அண்ணைக்கு வீட்ல / இவனுக தந்த தட்சணைதான் /மூμநேர சோறு.”
அப்பாவிடம் வித்தைகள் கற்றவர்கள் பல நிலைகளில் முன்னேறிவிடுகிறார்கள். உதவியாய் இருந்தவன் வைத்தியர் ஆகிறான். அவன் மகனோ டாக்டர். சிலம்பாட்ட உதவியாளன் வர்மக்கலை ஆசான். பிள்ளைகள் அமெரிக்காவில். மந்திரத்துக்கு கூடப்போன ஆளுக்கு டாக்டர் பட்டம். அப்பா நாடகத்தில் நடித்த ஜோக்கர் டைரக்டராகிவிடுகிறார். அப்பா மட்டும்... “இப்படி எல்லாத்தையும் / உருவி கொடுத்திட்டு / அம்மணமா நிக்கிற / எங்கப்பன் பேரு / வெரும் நாசுவன் / என்பேரு வெளங்காதவன்”. இதில் உள்ள ஆதங்கம் சொல்லி மாளாதது. நாசுவனாக மட்டுமல்ல அந்தத் தொழிலிலும் கடைநிலை. ஒரு கவிதை இப்படிச் சுடுகிறது.
“நாகர்கோவிலு டவுμல / செல்வக்குமாருக்க ஜோதிசலூன் / கடைய பாத்துட்டு வந்து / கருகருவென / நாலுகாலும் வளர்ந்த / பலகைபோட்டு / கடகடவென மேலே இழுத்து / ஆணிசொருகும் / தலைதாங்கி வச்ச / கடையில் கிடந்த / பழைய மரச்செயரை மாத்தி / முன்னும் பின்னும் அசையும் / தலைசாய்ப்பு உள்ள / நீலக்கலர் மெத்தை போட்ட / வட்டமடிக்கும் கறக்கு செயரை / வாங்கμம்னு நினைச்சு / கடைசிவரை வாங்கவே முடியல / அப்பாவால்”.
ஈடுபாட்டோடு ஒரு தொழிலைச் செய்யும் தொழிலாளிக்கு அவன் ஆசைப்பட்டதை (தொழிலில் தான்) செய்யமுடியா நிலை. சாதி தொழில்படும் நிலை பல கவிதைகளில் உயிர்ப்பாய் வெளிப்படுகின்றது. முத்தாரம்மன் கோவில் கொடை. கொட்டடி அடிக் கிறார்கள். உச்சம். யாருக்கும் சாமி வரவில்லை. குடித்து நின்ற அவனுக்கு சாமி வந்துவிடுகின்றது. காரியக் கமிட்டி சுந்தர் சொல்வதாகக் கவிதைமுடிகிறது: “லே நாசுவ பயல / சாமி பீடத்துக்குகிட்ட / விட்டுறாத”. பொது வெளியில் கூச்சமற்று எக்காளமிடும் சாதீ. சரி.
நாவிதர்கள் வெறும் முடிதிருத்துபவர்கள் மட்டுமல்ல, தனித்திறக் கலைகளின் ஆசான்களாகத் திகழ்ந்தவர்கள் என்பதை ஒரு கவிதை இப்படிப் பதிவுசெய்கிறது.
தொழில் வேண்டாம். விட்டுவிடலாம். மாற்றுத் தொழில் பார்க்கலாம். ஒரு கவிதை அந்த அனுபவத்தையும் பதிவு செய்கின்றது.
“பிச்சையெடுத்தாலும் / பார்பர்ஷாப் வேலைக்கு போகக்கூடாதுன்னு /சொல்லிட்டா அம்மா / லாரில கிளியா இருக்கும்போது / விருதுநகர் பஸ்டாண்டு / குளி ரூம்ல / நான் குளிச்ச பொறவு / நீ குளில நாசுவ தாயிளின்னுட்டு / சோப்பு நுரையோடு / என்னை வெளிய வரச்சொல்லி / டிரைவர் குளிக்க போனான்/பல்லு தேய்ச்சுகிட்டு நின்ன / கண்ட பயக்க எல்லாம் / ஒருமாதிரியா பாக்கானுக / அப்பத்தான் தோணிச்சு / கௌரவமா / அப்பாக்க வேலைக்கே / போயிருக்கலாமோன்னு” விடாமல் விரட்டுகிறது சாதி. இதில் மிகை இல்லை. தொழிலைவிட அப்பா முடிவு செய்கிறார். “பத்திர ஆபிசுல / எடவாடு தித்துற்று / அப்பா போனதும் / நாசுவ தோலே / தன்னை விட்டு /உரிஞ்சு போனதா / நினைச்சிருக்கμம் / வீட்டுக்கு வந்து / பெட்டியில் கிடந்த / அஞ்சாறு கத்தி கத்திரிகளை / குப்பைல தூக்கிபோட்டு / பார்பர்ஷாப்பு செயருக்க / கையும் காலையும் உடைச்சு / அடுப்புல சொருவி /வென்னி போட்டு / தலைக்கு குளிச்சா அம்மா” இது தொழில் வெறுப்பு அல்ல சாதி வெறுப்பு. சாதி மீதான எதிர்தாக்குதல்.
சாமான்யர்கள் சாதியை எதிர்கொள்ளும் எளிய வழிகள் ஒன்று இழிவை ஏற்பது, மற்றது சாதியை மறைப்பது. “திருவனந்தபுரத்துல / திவாகரன் நாயர் தெருவுக்குள்ள ரேவதி அக்கா வீடு / மக கல்யாணத்துக்கு / கார்டு கொடுக்க போயிருந்தேன் / மருமகனுக்கு / பார்பர்ஷாப்புல / வேலைன்னு சொன்னதும் / வாய பொத்தி / காப்பி தந்து / பஸ் ஏத்தி விட்டுட்டா / என்னை / அவ அங்க / ஒரிஜனல் நாயராம்” மிக இயல்பாக எழுதிச் செல்கிறார்.
சாதியோடு சேர்ந்து நிற்பது சுத்தம் - அசுத்தம், புனிதம் - தீட்டு எனும் கற்பிதங்கள். ஒரு கவிதையில் அம்மா ‘சுத்தம்’ பதிவாகின்றது: “அம்மாவுக்கு /வீடு எப்பவும் / சுத்தமா இருக்கμம் / அவளுக்கு சலவர்த்து / பெட் சீட்டு ஒண்ணையும் / ஒருத்தரையும் போட விடமாட்டா / சட்டி பானையெல்லாம் / கழுவி கழுவி / தேஞ்சு போயிருக்கும் / ஒருமாதிரி பட்ட மீனையெல்லாம் / திங்க மாட்டா / ஒரு நாளு வீட்டுக்கு வந்த / செட்டி தெரு ஸ்ரீமதி / சொல்லிட்டு போனா / மல்லிகாளுக்க அடுக்களை / நாசுவ குடி மாதிரியா இருக்கு / பிராமணத்தி வீடு / தோத்து போயிரும்”. இதில் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள், இழிசாதியினர் அசுத்தமானவர்கள் என்கிற பொதுப் புத்தியை கடந்து போவதை இயல்பாகக் காணலாம்.
கவிஞர் மிக யதார்த்தமாக, ரத்தமும் சதையுமாக தன் மக்களின் வாழ்வை எழுதிச் செல்கிறார். முடிதிருத்தும் நிலையங்கள், அங்கே வரும் நாளிதழ்கள், நடக்கும் விவாதங்கள் யாவும் ஒரு காலத்தில் சமூக, அரசியல் விழிப்புணர்வை ஊட்டின என்பது சமூக வரலாறு. இதனை மிக நுட்பமாக ஒரு கவிதையில் பதிவு செய்கிறார்: மார்க்ஸ், லெனின், சிவப்புச் சட்டைக் காரர்கள், அண்ணாதுரை, மதியழகன், கருணாநிதிகள்... காந்தி, நேரு, இந்திரா காந்திகள்... என்றெல்லாம் தலைவர்கள் படங்கள் சலூனில் இருக்கும். கார, சார விவாதங்கள் நடக்கும். இவையாவும் தேர்தலாக, எம்.பி, எம்.எல்.ஏ-க்களாக, மந்திரிகளாக, அரசாக மாறின. ஆனால் இவற்றுக்குக் களம் அமைத்த முடிதிருத்தும் கலைஞர்களின் வாழ்க்கை “இன்னமும் / பத்துக்கு பத்து / சதுர கட்டிடத்தில் / உடைந்த கண்ணாடி / கதவுகளின் வழியே / வெறித்துப்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.” அரசியல் விடுதலையும், சமூகவிடுதலையும் யாருக்கு வந்தது? அதிகார நகர்வாக முடிந்து போன அரசியலை இதைவிட எப்படி உணர்த்துவது?
கலைவாணன் அற்புதமான கலைஞர். கலைவாணர் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் செய்பவர். தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் வார்ப்பு. பிரியமும் பாசமும் வாஞ்சையும் மிக்க அற்புத மனுஷன். எப்போதும் வேடிக்கை காட்டி கலகலப்பாக இருக்கும் அவருக்குள் இப்படியரு எரிமலைக்கீற்று... வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் ஒரு துளி வாழ்வு. தனதும், தன் உறவினதும் வாழ்க்கையை எழுதி உள்ளார். பின் காலனிய, பின் நவீனத்துவப்பிரதி என்பதெல்லாம் இதன் வீச்சை மட்டுப்படுத்திவிடும். இது ஒரு கலக வித்து. இதை வாசிக்கும் யாவரும் மனசாட்சி இருந்தால் கூனிக் குறுகிக் கூசத்தான் வேண்டும். நம் ஒவ்வொருவரின் உணவுத்தட்டிலும் ஒரு சில மயிர்த்துகள்கள்.
கலைவாணன் இத்தொகுப்பு மூலம் சவரக்காரர் களாக்கப்பட்ட சேவைக்குடிகளின் பன்முக ஆற்றல் சார் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கின்றார். மருத்துவர் களாக, வர்மக்கலைஞர்களாக, இசை நாடகக் கலைஞர்களாக, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக்கலை வல்லுநர்களாக அவர்கள் விளங்கியதன் எச்சங்களைச் சுட்டிச் செல்கிறார். சாதி, தீண்டாமை, இழிவு ஆகியவற்றின் கோர முகங்களைக் காட்டுவதோடு, அவற்றுக்கெதிரான கோபாவேச எதிர்களையும் பதிவு செய்கிறார். மருத்துவர் இனவரைவியல் கூறுகள், புழங்குபொருள் பண்பாடு ஆகியன ஆங்காங்கே கவிதைகளில் தெறிக்கின்றன. விளிம்பு நிலை வாழ்நிலை இக்கவிதைகளில் மையமாகி நிற்கின்றது.
ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
ஆசிரியர்: கலைவாணன் இ.எம்.எஸ்.
வெளியீடு: கீற்று வெளியீட்டகம்
1/47ஹ, அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல்,
குமரிமாவட்டம் - 629167
விலை: ரூ. 75/-