மாற்கு ஸ்டீபன் என்கிற மாற்கு அடிகளார் விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர். 1982இல் குருப்பட்டம் பெற்றதும் கோட்டார் மறைமாவட்டம் கோடிமுனையில் பங்குப் பணியாளராகப் பணியைத் தொடங்கினார். கத்தோலிக்க கிருத்தவத்தில் மேலதிகமாக தீண்டாமை இருப்பதைக் கண்டு தலித் கிருத்தவ இயக்கத்தைத் தொடங்கி அதில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிரமாக முயன்றவர். களச்செயல்பாடுகளின் வழியாக ஆய்வு செய்து அருந்ததியர்களின் இனவரைவியலை நூலாக எழுதியவர்.
சமூக அக்கறையுள்ள பாதிரியாராக களத்தில் பணியாற்றியபடியே அனுபவ அறிவில் தான் கண்ட உண்மைநிலைதனை மையமாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், விழிப்புணர்வு, இறையியல், தன்வரலாறு, மானுடவியல் எனப் பல்வேறு தளங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர். இவரது படைப்புகள் பல கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக உள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து சிலர் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். தற்போது சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் தங்கி எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவரைச் சந்தித்தோம்.கத்தோலிக்க அவையின் உலகளாவிய முக்கிய துறவற சபையில் நீங்கள் ஒரு துறவியாகச் சேர்ந்தது உங்களது சுயவிருப்பமா, அல்லது உங்கள் பெற்றோர் எடுத்த முடிவா?
என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திறாயிருப்புக்கு அருகில் உள்ள புதுப்பட்டிதான். அங்கு கோயில், வளாகம், பள்ளி மூன்றும் ஒரே இடத்தில் இருந்தன. இவற்றின் முன்னிருந்த தெருவின் முதல் வீட்டில் நான் பிறந்தேன். எனது சிறுவயது அனுபவங்கள் அனைத்தும் இவற்றோடு தொடர்புடைய கிறிஸ்தவச் சூழல் மட்டுமே. இங்கு பணியாளர் திரிங்கால் 1876இல் உருவாக்கிய திரிங்கால் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில்தான் படித்தேன். அப்பள்ளியிலேயே சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போதுதான் சேசு சபையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவல் உருவானது. இதற்குக் காரணம் வெவ்வேறு சிந்தனைப் போக்குள்ள நண்பர்களது உறவின் காரணமாகத் தீவிரமாகக் கிறிஸ்தவ கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே. எனது பெற்றோர் இதை விரும்பவில்லை. வீட்டின் பொருளாதார சூழ்நிலையே இதற்குக் காரணம். பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற நான் ஓரளவு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அரை மனதுடன் நான் சேசு சபையில் சேர்வதற்கு என் தந்தை சம்மதித்தார். என் அம்மா அறவே ஏற்கவில்லை. அதிலிருந்து அவர் என்னுடன் பேசுவதையே முற்றிலும் தவிர்த்தார். அவர் இறப்பு வரை என்னுடன் பேசவில்லை. அவரது இறப்பு என்னை மிகவும் பாதித்தது. இருப்பினும் உறுதியுடன் சேசு சபையில் சேர்ந்தேன். இதைப்பற்றி தெளிவாக எனது ‘பேருவகை’ என்ற என் சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளேன்.
உங்கள் முடிவு என்றால் இதற்கு உந்துவிசையாக இருந்தது ஆன்மீகம் மட்டும்தானா? சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வேட்கையும் இணைந்ததா?
இளம் வயதில் வெவ்வேறு சாதி, மதம், சித்தாந்தம் (நக்சல்பாரி-நடராஜன், பொதுவுடைமை-ராஜ்கௌதமன், நாத்திகம்-பாலகுரு, காங்கிரஸ்-பழனிச்சாமி, கிறிஸ்தவம்-நான்) பின்னணி கொண்ட ஐவர் நண்பர்களானோம். தீவிர வாசிப்பே எங்களை இணைக்கும் புள்ளியாய் இருந்தது. வாசித்தவைகளை எங்களது கொள்கைகளின் பின்னணியில் விமர்சித்தோம். காலப்போக்கில் நாங்கள் நம்பிய சித்தாந்தங்களைப் பற்றியும் தீவிரமாக விவாதித்தோம். சில வேளைகளில் விடியும்வரைகூட எங்களது விவாதம் நீடித்ததுண்டு. கருத்து வேறுபாடுகள் எங்களது நட்பைப் பிரிக்கவில்லை. மனித நேயமே அனைத்துச் சித்தாந்தங்களுக்கும் அடிப்படை என்பதிலும், அடித்தட்டுமக்கள் ஒன்றிணைந்து போராடினால்தான் சமூகத்தில் மாற்றம் வரும் என்பதிலும் நாங்கள் உறுதியாயிருந்தோம். எங்களது உளமார்ந்த தேடலே எங்களது நீடித்த நட்புக்கு அடித்தளமிட்டது. இச்சூழலில் நான் சேசு சபையில் சேர்ந்தேன். நண்பர்கள் எனது முடிவை ஏற்கவில்லை. இருப்பினும் எங்களது நட்பு தொடர்ந்தது. எனது துறவுப் பயணம் நான் இளைஞனாக இருந்தபோது நண்பர்களோடு இணைந்து நம்பிய இரண்டு குறிக்கோள்களின் பின்னணியிலேயே தொடர்ந்தது என்று கூறலாம்.
விடுதலை இறையியல் (Liberation Theology) அல்லது விடுதலைக்கான இறையியல் (Theology of Liberation) என்ற சிந்தனையோட்டம் நீங்கள் துறவற வாழ்க்கையைத் தொடங்கியபோது அறிமுகம் ஆகியிருந்ததா?
தொடங்கவில்லை என்றுதான் கூறுவேன். ஆனால் அந்த இலக்கை நோக்கிச் சென்றது என்று கூறலாம். துறவு வாழ்வின் தொடக்கத்தில் நவதுறவிகளின் இயக்குநராக இருந்த தந்தை மரியதாஸ் ஏழைகளுக்காக உழைக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் எங்களை வழிநடத்தினார். அந்தத் தாக்கம் என்னில் இருந்தது. 1974இல் சேசு சபையின் 32வது பொதுஅமர்வு ரோமில் நடந்தது. அதில் நீதிக்காக உழைப்பதே சேசு சபையினரது விசுவாசம் என்று சபை பிரகடனப்படுத்தியது. இக்கருத்து என்னில் ஆழமாக வேர்விட்டு வளர்ந்தது. பயிற்சிக் காலத்திலேயே ஏழைகளோடு வாழும் அனுபவம் வேண்டும் என்றும் 32வது பொது அமர்வு வலியுறுத்தியது. இக்கருத்தின் பின்னணியில் கொடைக்கானலில் உள்ள செண்பகனூர் திரு இருதயக் கல்லூரியில் தத்துவ இயல் படித்தபோது கல்லூரின் வசதியான வாழ்வை விட்டுவிட்டு நாங்கள் ஆறுபேர் ஏழை மக்கள் நடுவில் ஒரு குடிசையில் தங்கி வாழ்ந்தோம். வாட்டும் குளிரில், வறுமையில் வாழும் ஏழை மக்களது துன்பங்களை நேரில் அறிந்துகொண்டோம். இன்றுவரை எங்களால் அந்த அனுபவத்தை மறக்க முடியாது. அதைத் தொடர்ந்து 1978இல் தலித் மக்களை இயக்கமாக ஒருங்கிணைக்க பல்மேரா (Peoples’ Action and Liberation Movement in East Ramand-PALMERA) என்ற சமூகச் செயல்பாட்டுக் குழுவை நால்வர் இணைந்து தொடங்கினோம். ஓர் ஆண்டு அங்கு பணிபுரிந்தேன். உட்சாதிப் பிரிவு, மதம், கலாச்சாரம், கட்சி எனும் தடைகளைக் கடந்து தலித்துகளை இயக்கமாக ஒருங்கிணைத்த அனுபவம் இன்றும் என்னை வழிநடத்துகிறது. ஏழை மக்களிடமிருந்து அதிகம் கற்கும் வாய்ப்பும் அங்கு எனக்குக் கிடைத்தது.
எங்கள் குழுவினர் டில்லியில் 1981இல் மூன்றாம் ஆண்டு இறையியல் படித்தபோது வளரும் நாடுகளின் இறையியல் அறிஞர்களின் மாநாடு அங்கு நடைபெற்றது. இலத்தீன் அமெரிக்க இறையியல் அறிஞர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர். அதில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பும், அவர்களோடு உரையாடும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. லத்தீன் அமெரிக்க சூழ்நிலையை விளக்கிய அவர்கள் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆயர், குருக்கள், இருபால் துறவிகள், பொது நிலையினர் என்று எண்ணற்றவர்களைச் சுட்டுக் கொன்ற பல நிகழ்வுகளை வேதனையுடன் பகிர்ந்தனர். நிகழ்வுகள் எங்களை அதிகம் பாதித்தன. எங்களது பாதிப்புகளைப் பதிவு செய்ய விரும்பினோம்.
ஒவ்வொரு குழுவினரும் தங்களது குருத்துவத்தின் நினைவாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுவது வழக்கம். நாங்கள் எங்களது குருத்துவத்தின் நினைவாக லத்தீன் அமெரிக்காவில் போராடி ஆதிக்க வர்க்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உண்மைச் சரித்திரத்தை எழுதி வெளியிடலாம் என முடிவு செய்தோம். கணினி, இணையதளவசதி இல்லாத காலம் அது. ஒவ்வொருவரும் தாங்கள் எழுத விரும்பியவர்களின் உண்மைச் சம்பவத்தைப் பெரும் முயற்சி செய்து பெற்று எழுதினோம். பேராயர் ரொமேரோ, பணியாளர் ருட்டில்லோ கிரான்டா, பணியாளர் மாரிஸ், பணியாளர் ஜான் போஸ்கோ பெர்னியர், சகோதரி டாரத்தி கேஸல், செல்வி ஜீன் டானோவன், சகோதரி மோரா, சகோதரி ஈட்டாவி மற்றும் பலரைப் பற்றிய சரித்திரத்தை எழுதி ‘செந்நீரில் எழுதிய சித்திரங்கள்’ என்ற தலைப்பில் 02-05-1982இல் எங்களது குருப்பட்ட நாளில் வெளியிட்டோம்
ஒரு பணியாளராயிருந்து விடுதலைக்காகப் போராட தனது அங்கியைத் துறந்துவிட்டு துப்பாக்கியுடன் போராட்டக் களத்திற்குக் சென்று அரசுப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட கமிலோ தோரஸின் வாழ்வைக் ‘கண்ணீரில் எழுதிய கடிதம்’ என்ற தலைப்பில் நான் எழுதினேன். ‘புரட்சிவாதியாக இல்லாத கத்தோலிக்கன் சாவான பாவத்தில் வாழ்கிறான்’ என்ற கமிலோ தோரஸின் கருத்து இன்னும் என் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
நீங்கள் எழுத்தாளரான பின்னணியை விரிவாகச் சொல்லுங்களேன்.
நான் ஏற்கனவே என்னிடமிருந்த வாசிப்புப் பழக்கத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர்களுடன் வாசித்தவற்றைப் பற்றி விவாதித்திருக்கிறேன். சில சமயங்களில் வாசித்தபோது நாவலை வேறுவிதமாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று எண்ணினேன். அப்போது நானே ஏன் எழுதக்கூடாது என்ற கேள்வி என்னில் எழுந்தது. எழுத ஆரம்பித்தேன். ஒரு நாவலை எழுதி முடித்தபின் நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்தேன். வாசித்த அவர்கள் மிகவும் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் அடுத்த நாவலையும் எழுதினேன். முதல் நாவலைவிட இரண்டாம் நாவல் சிறப்பாக இருப்பதாக ராஜ் கௌதமன் கூறினார். இச்சூழலில் நான் சேசு சபையில் சேர முடிவெடுத்தேன். இரண்டு நாவல்களின் கையெழுத்துப் பிரதிகளை வீட்டில் வைத்துவிட்டு சேசு சபையில் சேர்ந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின்பு வீட்டிற்குச் சென்றபோது பிரதிகள் வீட்டில் இல்லை.
சேசு சபையில் தமிழ் இறையியல் (அருள் கடல்) 1979இல் சென்னையில் தொடங்கப்பட்டது. இறையியல் மாணவர்களின் முதல்குழுவில் நானும் ஒருவன். மக்களின் வாழ்வை ஆராயும்போது எழும் இறையியல் கேள்விகளுக்கு இறையொளியில் விடை காண்பதே தமிழ் இறையியலின் நோக்கம். மானிடவியல் பேராசிரியர் ஜெயபதி வழிகாட்டுதலில் கிராமங்களில் ஆய்வை மேற்கொண்டு கட்டுரைகள் எழுதினோம். நான் ஜெயபதியிடம், ‘கட்டுரை நமது வடிவமல்ல. மேற்கத்திய வடிவம். நமது மரபு கதை சொல்லுவதுதான். ஐம்பெருங்காப்பியங்கள் என நாம் போற்றுவது கதைகளே. கட்டுரையில் என்ன புனிதத்துவம் இருக்கிறது? ஏன் மாற்று வடிவத்தை நோக்கி நகரக்கூடாது’ என்று கேட்டபின் எனது நாவல் அனுபவங்களைக் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் கட்டுரையாக எழுத நான் எனது அனுபவங்களை ‘வருவான் ஒருநாள்’ என்ற நாவலாக எழுதிச் சமர்ப்பித்தேன். மிகவும் பாராட்டப்பட்டு 1980இல் பதிப்பிக்கப்பட்டது. அதுதான் நான் எழுதி வெளியான முதல் நாவல்.
அது தந்த ஊக்கத்தில் அவ்வாண்டே கிறிஸ்தவத்தில் இருக்கும் கல்லறைப் பிரச்சினைகளை மையப்படுத்திய ‘சுவர்கள்’ நாவலை ஓய்வு நேரத்தில் எழுதினேன்.
மூன்றாவது நாவல் மிக முக்கியமானது. இறையியல் மூன்றாம் ஆண்டு டில்லியில் உள்ள இறையியல் கல்லூரி வித்ய ஜோதியில் படித்தேன். நாங்கள் ஒரு தலைப்பைத் தேர்வுசெய்து, அதை மையப்படுத்தி மூன்று ஆண்டுகள் இறையியலில் கற்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நெடிய ஆய்வுக் கட்டுரையை (thesis) எழுத வேண்டும். அந்த ஆய்வுக் கட்டுரையை ஒட்டித்தான் நான்காம் ஆண்டில் இறுதித் தேர்வு இருக்கும். நான் வன்முறை என்ற தலைப்பைத் தேர்வு செய்தேன். அதை நாவலாக எழுத இறையியல் பேராசிரியர்களிடம் அனுமதி கேட்டேன். 1980களில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் (வட தமிழ்நாடு) பகுதியில் படித்த பல இளைஞர்கள் மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி ஏழைகள், கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, கூலி உயர்வுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அவர்களை எல்லாம் ‘நக்சலைட்டுகள்’ என முத்திரையிட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுச் சூழலைப் படித்து, உள்வாங்கி, கிறிஸ்தவப் பின்னணியில் இறையியல் கண்ணோட்டத்தில் வன்முறையை எப்படிப் பார்க்கிறேன் என நாவல் வடிவில் எழுதுகிறேன் என்றேன். என் புதிய முயற்சி பற்றி பேராசிரியர்கள் தேர்ந்து தெளிந்து முடிவெடுத்தனர். அவர்களது அனுமதியுடன் ‘கத்தியின்றி இரத்தமின்றி’ நாவலை எழுதினேன். வித்தியாசமான முயற்சிக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. நாவல் புத்தகமானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நாவல் பற்றி பெரிய கட்டுரையை டி.என்.கோபாலன் என்ற பத்திரிகையாளர் எழுதினார். ‘யார் இந்த மாற்கு?’ என்று என்னைத் தேடிவந்து பாராட்டினார். சில கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் நாவல் இடம்பெற்றது.
வருவான் ஒருநாள் நாவல் உடனடியாக வெளிவந்தாலும் சுவர்கள், கத்தியின்றி இரத்தமின்றி நாவல்கள் வெளியாவதில் சிக்கல்கள் இருந்தன. பெரும் போராட்டத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்துத்தான் அவை வெளியாயின. வருடத்திற்கு ஒரு நாவல் எழுதலாம் எனத் திட்டமிட்டிருந்த நான் அதன்பின் பத்து ஆண்டுகள் எழுதவில்லை. ஐடியாசில் பதிப்பகம் ஒன்று ஆரம்பித்த பின்புதான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதிய நாவல்தான் யாத்திரை. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் அருந்ததியர்களோடு வாழ்ந்த சமயத்தில் மானிட இயல் நூலாக ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ எழுதினேன்.
அதைத்தொடர்ந்து சங்கரலிங்கபுரத்தில் நடந்த காவலர்களின் வன்முறையை மற்றவர்களின் துணையோடு எதிர்த்தோம். எங்களது தொடர் போராட்டத்தின் காரணமாக அப்போது தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவே அங்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு இழப்பீடும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளை ‘மறியல்’ நாவலாக எழுதினேன்.
சேசு மீண்டும் வந்தால் தமிழகத் திருஅவையை எப்படிப் பார்ப்பார் என்பதை ‘மறுபடியும்’ நாவலிலும், திருஅவையில் பெண் குருத்துவத்தை வலியுறுத்தி ‘இப்படியும்’ நாவலிலும், திருஅவையில் சாதியம் எங்கும்-எதிலும் இருப்பதை ‘எப்படியும்’ நாவலிலும் பதிவு செய்தேன்.
யாத்திரையின் தொடர்ச்சியாக தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் போராட்டங்களை ‘மீள்வெளி’ நாவலிலும், இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்பதை ‘ஐம்பேரியற்கை’ நாவலிலும் வலியுறுத்தினேன். பணியாளர் திரிங்காலின் பணிகளை சரித்திரப் பின்னணியோடு சமூக வரலாற்று நாவலாக ‘முன்னத்தி’யையும் எழுதினேன்.
மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்வதோடு அடுத்து எந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்ஞ் இப்படிச் செய்தால் நல்லது என்கிற வழியைக் காட்டக்கூடிய தீர்க்கத்தரிசியாக, அருள்வாக்குக் கூறுபவராக, ஓர் இறைவாக்கினராகச் செயல்படவேண்டும் என்பதில் நான் தெளிவாயிருக்கிறேன்.
இதுவரை நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, விழிப்புணர்வு, புலனாய்வு, மானிட இயல், தன் வரலாறு, இறையியல் என 23 புத்தகங்களை எழுதியுள்ளேன்.
நான் அடிப்படையில் சமூகச் செயல்பாட்டாளன். ஏழை, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து அவர்களது உரிமைக்காக உழைக்கிறேன். அந்த அனுபவங்களை பல்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுகிறேன். எந்த வடிவம் என்பதை சூழல்தான் உணர்த்துகிறது.
‘அடிப்படையில் நான் ஒரு சமூகச் செயல்பாட்டாளன்’ என்று குறிப்பிடுகிறீர்கள். உங்களது ஒருசில முக்கியமான சமூகச் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தற்புகழ்ச்சியாக இருக்குமோ என தயங்குகிறேன். இருப்பினும் இதை வாசிக்கும் சிலருக்கு இப்படியும் செயல்படலாம் என்ற துணிவு ஏற்படலாம். அதற்காக சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுகிறேன். எனது சுயசரிதையான பேருவகையில் அனைத்தையும் விரிவாகப் பதிவிட்டுள்ளேன்.
அருள்பொழிவு பெற்றபின் 1982இல் கோட்டார் மறைமாவட்டத்திலுள்ள கோடிமுனையின் பணியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அங்குள்ள கல்லறைத் தோட்டம் நிரம்பிவிட்டது. கல்லறைத் தோட்டமானது அழகிய வேலைப்பாடுகளுடன் மிகப்பெரிதாகக் கட்டப்பட்ட பணக்காரக் கல்லறைகளாலும், பளிங்குச் சிலுவைகள் பதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் கல்லறைகளாலும், மண் குவியல்கள்மீது மரக்குச்சிச் சிலுவைகள் நடப்பட்ட ஏழைகளின் கல்லறைகளாலும் நிறைந்திருந்தது. மண் குவியல் கல்லறைகள் மட்டுமே மறுசுழற்சிக்குப் பயன்பட்டன. கல்லறைகளில் பாகுபாடு இருக்கலாமா? என்ற கேள்வி என்னில் எழுந்தது. மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் கல்லறைகளை அகற்றிவிட்டு மறு சுழற்சிக்குப் பயன்படும் விதத்தில் புதிதாகக் கல்லறைத் தோட்டத்தை உருவாக்கலாம்... புதிய கல்லறைகளில் மரச்சிலுவைகளை மட்டுமே நடலாம்... ஓர் ஆண்டிற்குப்பின் அதையும் அகற்றி விடலாம் எனக் கூறி மக்களை முடிவெடுக்கக் கூறினேன். மக்கள் முடிவுப்படி ஊரார் அனைவரும் சென்று கல்லறைகளை அகற்றிச் சமமாக்கினர். எதிர்ப்புகள் எழுந்தாலும் ஏழைகள் இணைந்திருந்ததால் அவை நீடிக்கவில்லை. விளைவாகத் தற்போது கோட்டார் மறைமாவட்டத்தில் பெரும்பாலான கடற்கரை கிராமத்தினர் இப்பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். ஏழைகளின் சக்தியை உணர்ந்து வியந்தேன். எனது வாழ்வில் நான் செய்த அர்த்தமுள்ள மிகப்பெரிய பணி இது.
1984இல் சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தில் பத்துக் கிளைகளுள்ள ஓங்கூர் பணித்தளத்தின் பணியாளரானேன். கிறிஸ்தவர் அனைவருமே தலித்துகள். இவர்களிடம் ‘கொத்து’ என்ற பாகுபாடான குடும்ப அமைப்பு இருந்தது. இதைப் போக்க வரிசையாக உள்ள பத்துக் குடும்பங்களை ஒன்றிணைத்து அடித்தள சமூகங்களை உருவாக்கினேன். தன்மானம், தன்னிறைவு, தன்னாட்சி என்ற மூன்று சித்தாந்தங்களின் அடிப்படையில் இவர்கள் தங்களைத் தாங்களே ஆளும் சூழ்நிலையை உருவாக்கினேன். (‘அடித்தள விழிப்பினிலே’ புத்தகத்தில் இதை விளக்கியுள்ளேன்.)
ஓங்கூரின் நல்லூர் கிராமத்தில் தலித் மாதா என்ற பெயரில் புதிய சுரூபத்தை தலித் பெண்கள்போல வடிவமைத்து, கோயிலும் கட்டி தலித்துகளுக்காக புதிய ஆன்மீகம் உருவாக ஏற்பாடு செய்தேன். பேராயர் அனுமதி அளிக்கத் தயங்கியதால் தலித் மாதா, விடுதலை மாதாவானார்.
மதுரை ஐடியாஸ் மையத்தில் ஒரு பதிப்பகத்தை உருவாக்கி தலித் படைப்புகள் வெளிவர வழிவகுத்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அருந்ததியர்களை ஒருங்கிணைத்து அவர்களது வளர்ச்சிக்காக ஐந்து சேசு சபையினரைக் கொண்ட ‘கரிசல்’ அமைப்பை உருவாக்கினேன். இதன் வழியாக அருந்ததியர் வளர்ச்சிக்காக விடுதி உட்பட பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதோடு விழிப்புணர்வும் கொடுத்தோம். 1995இல் அருந்ததியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மேலாக ராஜபாளையம் முதல் விருதுநகர் வரை எட்டு நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். அருந்ததியர் வாழும் கிராமங்கள் வழியாகச் சென்று அங்குள்ள தீண்டாமைகளைப் பட்டியலிட்டோம். அவற்றைப் போக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரிடம் மனுகொடுத்தோம். நானும் நடைபயணத்தில் கலந்து கொண்டேன்.
திண்டிவனத்தில் துறவு சபை சகோதரர்கள் போதிய இழப்பீடு கொடுக்காமல் தங்கள் நிறுவனத்தில் பணி செய்த பல தலித்துகளை வெளியேற்றினர். அதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பணியாளர் எஸ்.டி.செல்வராஜ் சகோதரர்களுடன் பல பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. அவர்களிடம் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அவர்களது நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவரோடு நானும் இன்னும் பல பணியாளர்களும் சகோதரிகளும் இணைந்து போராடினோம். நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். பேராசிரியர் கல்யாணி போன்ற தோழர்களின் முயற்சியால் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தோம்.
2004இல் சுனாமியால் திருச்செந்தூரில் அருந்ததியர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு உதவ அவர்களுக்காக ‘மாவீரர் நகர்’ என்ற புதிய கிராமத்தை 84 வீடுகள் மற்றும் இதர வசதிகளுடன் நிர்மாணித்தேன். இதற்கு ‘வெட் டிரஸ்ட்’ இயக்குநர் ஜெயதாஸ் உதவினார். அருந்ததியர்கள் படிக்கும் நோக்கத்தில் இவர்களே நடத்தும் ‘ஸ்டார் மேல்நிலைப் பள்ளி’யை அனைத்து நவீன வசதிகளுடன் உருவாக்கினேன். இதற்கு உதவி செய்தவர் எனது ஜெர்மன் நண்பர் பெர்னாட் ஈழன் சே.ச.
கோட்டூர் அருகிலுள்ள வீரபட்டி கிராமத்தில் தலித் மக்களை மதத்திற்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைத்து அவர்களே செயல்படும் சூழ்நிலையை உருவாக்கினேன். மதப்பாகுபாடு அற்ற கல்லறையையும் உருவாக்கினேன். இவர்களுக்காக அனைத்து வசதிகளும் நிறைந்த 60 வீடுகள் கொண்ட புதிய குடியிருப்பை உருவாக்கினேன்.
கோட்டூருக்கு அருகில் தாப்பாத்தி என்ற ஊரில் ‘சாதி மறுப்புத் திருத்தலம்’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் நான் மாற்றப்பட்டதால் அத்திட்டத்தை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் வாழும் பழங்குடியினர் மற்றும் அருந்ததியர்களுக்காக ‘பீக்’ என்ற தொண்டு நிறுவனத்தை சேசு சபையினர் நடத்தினர். பழங்குடி மற்றும் அருந்ததியர்கள் நலனுக்காக இவர்கள் வாழும் 16 கிராமங்களில் சமுதாயக்கூடம் கட்ட பணஉதவிக்கு ஏற்பாடு செய்தேன். பெரும்பாலான சமுதாயக் கூடங்களை நானே திறந்து வைத்தேன்.
நான் படித்த, பணிபுரிந்த புதுப்பட்டி ஆர்.சி.திரிங்கால் நடுநிலைப் பள்ளி சிதலமடைந்ததைக் கண்டு வேதனைப்பட்டேன். அங்கு அனைத்து வசதிகளும் நிறைந்த மிகப்பெரிய பள்ளியைப் புதிதாகக் கட்ட ஏற்பாடு செய்தேன்.
சபை கேட்டுக் கொண்டதால் மறைமலைநகருக்கு அருகில் உள்ள வடமேல்பாக்கம் கிராமத்தில் ஏழை தலித் மாணவர்களுக்குப் பயன்படும் விதத்தில் ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற சி.பி.எஸ்.சி. மேல்நிலைப் பள்ளியை ‘லொயோலா அகாடெமி' என்ற பெயரில் துவக்கி அதை திறம்பட நான்கு ஆண்டுகள் நிர்வகித்தேன்.
பட்டியல் நீளமானது. ஒருசிலவற்றை மட்டும் கூறியுள்ளேன். படைப்பாற்றலுடன் செயல்பட்டால் எவ்வளவோ பணிகளை நம்மால் ஏழை எளிய மக்களுக்குச் செய்ய முடியும். அடித்தட்டு மக்களுக்கு வளர்ச்சி முக்கியமா? அல்லது விழிப்புணர்வு கொடுத்து இயக்கமாக உருவாக்குவது முக்கியமா? இக் கேள்விகள் என்னில் எழுந்தபோது வளர்ச்சிப் பணியும், விழிப்புணர்வுப் பணியும் இணைந்த பணியே முக்கியம் என்ற நோக்கில் என் பணிகளை அமைத்துக் கொண்டேன்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றிய கலகக்காரத் திருஅவையோ, அங்கி அணிந்த கலகக்காரர்களோ இந்தியாவில் உருவாகாமைக்குக் காரணம் என்ன?
இலத்தீன் அமெரிக்க சூழ்நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இந்தியச் சூழல். இலத்தீன் அமெரிக்க நாட்டினர் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். அங்கு ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுபவர்களும் கிறிஸ்தவர்கள். அதனால் அங்கு ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து விடுதலை இறையியல் பிறந்தது. உங்களது வார்த்தையில் குறிப்பிட வேண்டும் என்றால் கலகக்கார திருஅவை பிறந்தது. ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவே. அப்படியிருக்க இங்கிருந்து ஆளும் கட்சிக்கு எதிராகக் கலகக்கார திருஅவை எப்படி பிறக்க முடியும்?
மேலும், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பின்மை என்பது அரசு எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல என்பது ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரது புரிதல். ஆனால் இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அரசு எல்லா மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று விளக்கப்படுகிறது. இச்சூழலில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்வர் என்பது யதார்த்தம் அல்ல.ஆனால் கிறிஸ்தவத்தில் குறிப்பாக சேசு சபையில் விடுதலை இறையியலின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று சொல்வேன். சேசு சபையிலேயே செபஸ்டியான் காப்பன், சாமுவேல் ராயன் போன்றோர் விடுதலை இறையியல் பற்றி பேசியும் எழுதியும் இருக்கின்றனர். இருவருமே எனது பேராசிரியர்கள். அருட்கடலில் பேராசிரியர் லூர்துசாமி சே.ச. கிறிஸ்தியலை, விடுதலை இறையியலாகத்தான் கற்றுக்கொடுத்தார். அவரின் தாக்கம் என்னில் அதிகம்.
80களில் சென்னை-மயிலை மறைமாவட்டத்தில் ஓங்கூரில் நான் பணியாற்றியபோது ஜார்ஜ் ஜோசப், மார்ட்டின் என்ற இரு பணியாளர்களின் உதவியுடன் 1986இல் தலித் கிறிஸ்தவ இயக்கத்தை உருவாக்கினேன். கிறிஸ்தவத்தில் சமத்துவத்தையும் அரசு தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற இரட்டை நோக்கத்துடன் உருவாக்கினோம். தலித் கிறிஸ்தவர்களே தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தினர். இயக்கத்தை சேசு சபையினர் ஆதரித்தனர். 1989இல் பணியாளர் அந்தோனிராஜ் சே.ச. தமிழகத் தலித் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தை உருவாக்கினார். தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (சுமார் 70 சதவிகிதம்) கிறிஸ்தவ நிறுவனங்களில் பணி நியமனத்திலும், மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினார். அதனால் தமிழகத் திருஅவை தலித் கிறிஸ்தவர்களின் நலனுக்காகப் பத்து அம்சத் திட்டங்களை 1990இல் அறிவித்தது. ஆனால் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இவை நிறைவேற்றப்படவேண்டும் என்று பல போராட்டங்களை தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் அந்தோனிராஜ் தலைமையில் நடத்தினர். சேசு சபையினரது நிறுவனங்களிலும் பணி நியமனத்திலும், மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு வழங்கப் போராடினார். 50 சதவிகிதம் உடனடியாக அளிப்பதாகவும் 70 சதவிகிதம் இலக்கு என்றும் சேசு சபையினர் வாக்களித்தனர். அது இன்றும் நிறைவேற்றப்படுகிறது.
ஆனால் தமிழகத் திருஅவையின் ஆயர்களால் இந்தப் போராட்டங்களை ஏற்க முடியவில்லை. அந்தோனிராஜ் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது என்ற புரிதல் ஆயர்களுக்கு இருந்ததால் அவர் தலைவராக இருக்கக்கூடாது என்று ரோமில் உள்ள சேசு சபைத் தலைவருக்கு எழுதினர். அந்தோனிராஜ் இயக்கத்தின் தலைவராக நீடிக்க தமிழக சேசு சபைத் தலைவர் ஆதரவு அளித்தார். இருப்பினும்; ரோம் அந்தோனிராஜ் தலைவராக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தது. அந்தோனிராஜ் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் பொது நிலையினரின் தலைமையில் த.கி.வி.இ. இன்றும் செயல்படுகிறது.
திருஅவைக்கு வெளியேயும் நீதிக்காக சேசு சபையினர் பேராடுகின்றனர். அதற்கு உதாரணமாக ஸ்டான் சாமியைச் சொல்லலாம். இவர் மலைவாழ் மக்களது உரிமைக்காக மதம் கடந்து மிகத் தீவிரமாக அதேசமயம் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட்டார். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று அவருக்கு எதிராகப் போலியான ஆவணங்களை உருவாக்கி அவரைச் சிறையில் அடைத்தது தற்போதைய ஒன்றிய அரசு. 84 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தண்ணீர் குடிக்க உதவும் உறிஞ்சு குழாய்கூட கொடுக்காமல் சிறையிலேயே கொன்றது ஒன்றிய அரசு.
சாதிய மேலாண்மை, தீண்டாமை என்பனவற்றை உங்கள் நாவல்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் இவற்றிற்கு எதிரான எதிர்க்குரலையும் உரக்கவே ஒலிக்கின்றன. இதற்கு உங்கள் துறவற அவையும் சராசரிக் கத்தோலிக்கர்களும் ஆற்றிய எதிர்வினை எவ்வாறு இருந்தது?
தீண்டாமைக்குத் திருஅவையில் இடமே இல்லை என்பதுதான் கொள்கை. 1990இல் தமிழகத் திருஅவையின் ஆயர்களும் துறவு சபைத் தலைவர்களும் பத்து அம்சத்திட்டங்களை அறிவித்தனர். 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளை ஷெட்யூல்டு வகுப்பினரின் ஆண்டுகள் என அறிவித்தனர். திருஅவையில் தீண்டாமையை-ஜாதி-சமூக வேறுபாடுகளை உடனடியாக ஒழிக்கப்பட்டு கத்தோலிக்கத் திருஅவையில் நீதி, அன்பு, சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம் ஆகியவை நிலவ அனைத்துத் தரப்பு மக்களும் உழைக்க அன்புடன் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் பெரும்பாலான ஆயர்களும், துறவு சபையினரும் பத்து அம்சத் திட்டங்களை நிறைவேற்றவில்லை. ஆதிக்கச் சாதிக் கிறிஸ்தவர்களும் பத்து அம்சத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த உண்மை நிகழ்வுகளைத்தான் எனது நாவல்களில் பதிவு செய்தேன். எனவே எனது நிலைப்பாடு கிறிஸ்தவத்திற்கு எதிரானது, திருஅவைக்கு எதிரானது என யாரும் தீர்ப்பிடமுடியாது. இருப்பினும் எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தன. ஒரு சமாதானக் கூட்டத்திற்குச் சென்றபோது வெளியே வா, உன்னைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று ஆதிக்கச் சாதிக் கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்ததையும், சில இடங்களில் தாக்க முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை.
எனது படைப்புகளை வெளியிடுவதில் சேசு சபைக்குள்ளும் சில பிரச்சினைகள் எழுந்தன. ஆன்மீக நூல்களைத்தான் வெளியிடுவோம் என்பதே காரணம். எனது நாவல்கள் ஆன்மீகமில்லை என்று கருதியிருக்கலாம். அதனால் தலித்துகளின் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதியவைகளை வெளியிட மதுரை ஐடியாசில் ஒரு பதிப்பகத்தை உருவாக்கினேன். அதில் எனது படைப்புகள் சிலவற்றை வெளியிட்டேன். அதையும் கடந்து பொதுவெளியில் பல பதிப்பகங்களோடு தொடர்பு கொண்டு வெளியிடும் வாய்ப்பும் உருவானது.
நான் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் கோட்டூரில் பணியாற்றியபோது அருகில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் ஊராட்சித் தலைவர் தேர்தலில் பொதுத்தொகுதியில் தலித் போட்டியிட்டதால் பிரச்சினை உருவானது. காவலர்கள் ஆதிக்கச் சாதியினருடன் கைகோர்த்துத் தலித்துகள்மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து தலித்துகள் சாலை மறியல் செய்ததால் அவர்களைக் காவலர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதோடு சங்கரலிங்கபுரம் தலித் பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும் பொருள்களையும் முற்றிலும் அழித்தபோது ஆண்-பெண் என்று பாராமல் கண்ணில் பட்ட தலித்துகளைக் கைதுசெய்து கொடுமையாகத் தாக்கி எலும்புகளையும் உடைத்தனர். அதோடு மிகக் கேவலமான பாலியல் வசவுகளால் தலித்துகளின் மனதில் ஆழமான காயங்களையும் ஏற்படுத்தினர். நீதிக்கான பொது விசாரணையில் காவலர்களின் பாலியல் வசவுகளை தலித் ஆண்களும் பெண்களும் அப்படியே கூறினர். அவற்றைப் பதிவு செய்து நடந்த நிகழ்வுகளை ‘மறியல்’ என்ற நாவலில் பதிவுசெய்தேன். சபையின் அனுமதியோடுதான் வெளியிட முடியும்.
பிரதியை வாசித்தபின் பாலியல் வசவுகளை எப்படி நீங்கள் எழுதலாம். அவற்றை எழுதக்கூடாது என்றனர். தாங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டோம் என்பதைக்கூட ஆதிக்க வர்க்கம் தீர்மானிக்கும் மொழியில்தான் எழுதவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பிய நான் எதையும் மாற்ற முடியாது என்பதில் உறுதியாயிருந்தேன். பல்வேறு உரையாடல்களுக்குப் பின் வெளியிட அனுமதி அளித்தபின் சபை இதை வெளியிடாது என்றும், பிற வெளியீடுகளில் வெளியிட்டாலும் சேசு சபை (சே.ச.) என்ற அடையாளத்தோடு வெளியிடக்கூடாது என்றனர். நானும் ஏற்றுக்கொண்டேன். எனது படைப்புகளை அதுவரை மாற்கு சே.ச. (சேசு சபை) என்ற அடையாளத்தோடுதான் வெளியிட்டேன். கலகம் பதிப்பகத்தில் மறியல் நாவலை வெளியிட்டபோது மாற்கு என்று மட்டும் குறிப்பிட்டேன். அதன் பிறகு நான் எழுதியவற்றை மாற்கு என்ற அடையாளத்தோடு மட்டுமே வெளியிடுகிறேன். சே.ச. என்ற அடையாளத்தை எடுத்துவிட்டு பொதுநிலையினருடன் நான் இணைந்துகொண்டேன். இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
மற்றொன்றையும் குறிப்பிடவேண்டும். ‘உண்மையாஞ் அது என்ன?’ என்ற நாவலை எழுதினேன். அப்பொழுது சேசு சபைக்குக் களங்கம் ஏற்படும் மிகப் பெரிய நிகழ்வு நடந்தது. அதுவே தமிழகத்தின் பேசு பொருளாகத் திகழ்ந்தது. இப் பிரச்சினையை மையப்படுத்தித்தான் நாவல் எழுதப்பட்டுள்ளது என்ற வதந்தி சபையில் பரவியது. நான் அப்பிரச்சினை பற்றி எழுதவில்லை. ஆனால் அப்பிரச்சினையை சேசு சபையினர், பிற துறவு சபையினர், கிறிஸ்தவர்கள் எப்படி சாதியக் கண்ணோட்டத்தில் பார்த்தனர் என்பதை எழுதியிருந்தேன். சபையில் சாதி இருக்கிறதுஞ் இதுதான் உண்மை என்ற யதார்த்தத்தை எழுதியிருந்தேன். மாநிலத் தலைவர் என்னை அழைத்து புத்தகத்தை வெளியிடக்கூடாது என்றார். புத்தகம் ஏற்கனவே அச்சாகியிருந்தது. நான் அவரிடம் புத்தகத்தின் பிரதியை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் புத்தகத்தைக் கொடுங்கள்ஞ் அவர்களது ஆலோசனைக்குப் பின் முடிவெடுங்கள் என்றேன். யாருமே வாசிக்காமல் முடிவெடுப்பது ஏற்புடையதல்ல என்றேன். முதலில் நீங்கள் நான் சொல்வதற்குக் கீழ்படியுங்கள். உங்கள் கருத்தைப் பிறகு ஆராயலாம் என்றார். நானும் வெளியிடவில்லை. குழு இன்றுவரை அமைக்கப்படவில்லை. நாவல் வெளிவரவில்லையே என்ற வடு இன்றும் என்னிடம் இருக்கிறது.
உங்கள் நாவல்கள் சிலவற்றில் (யாத்திரை, முன்னத்தி) கனவுகள் இடம் பெற்றுள்ளன. இது கனவுகள் தொடர்பான உங்களது நம்பிக்கையின் வெளிப்பாடா, அல்லது ஓர் இலக்கிய உத்தியாக மட்டும் இதைக் கொள்ளலாமா?
கனவுகளை நான் நம்புவதில்லை. ஆனால் எனது பல நாவல்களில் கனவை ஓர் இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தியுள்ளேன். அதற்குக் கிறிஸ்தவப் பின்னணி உண்டு. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் தொடக்க நூலில் எகிப்தின் மன்னன் பார்வோன் ஒரு கனவு காண்பார். அதில் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் அவர் நதியிலிருந்து கொழுத்த ஏழு பசுக்கள் வெளிவந்து செழுமையான கோரைப்புற்களை மேய்வதைக் காண்பார். தொடர்ந்து எலும்பும் தோலுமாக வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளிவரும். அவை கொழுத்த ஏழு பசுக்களையும் விழுங்கிய பின்னும் எலும்பும் தோலுமாக இருப்பதைக் காண்பார். இக்கனவிற்கு விளக்கம் கொடுக்க ஞானிகளின் உதவியை நாடுவார். அவர்களால் விளக்கம் கொடுக்க இயலாது. சிறையிலிருக்கும் யோசேப்பு கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்பார் மன்னர். யோசேப்பும் விளக்கம் கொடுப்பார். ஏழு நல்ல பசுக்கள் ஏழு செழுமையான ஆண்டுகளைக் குறிக்கும்ஞ் ஏழு மெலிந்த பசுக்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்ஞ் நாட்டின் செழுமை அனைத்தையும் பஞ்சம் அழித்துவிடும் என்று கனவுக்கு விளக்கம் அளித்ததோடு அதிலிருந்து விடுபட செழுமையான காலத்து விளைச்சலை அதிக அளவு களஞ்சியத்தில் சேர்த்து பஞ்ச காலத்தில் அதை மக்களுக்கு விநியோகிக்கலாம் என்ற தீர்வையும் கூறுவார்.
அதுபோல புதிய ஏற்பாட்டில் மரியாளின் கணவர் யோசேப்புக்கு இறைவன் கனவு வழியாகவே சிலவற்றை உணர்த்துகிறார்.
இதைப்போன்ற கனவுகளைத்தான் நான் எனது இலக்கியங்களில் உருவாக்குகிறேன். உதாரணத்திற்கு முன்னத்தி நாவலைக் குறிப்பிடலாம். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் கணவனை இழந்த பெண்கள் ‘சதி’ என்று உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும் அல்லது விதவைக் கோலத்தில் அவர்கள் படும் அவலங்களையும் பணியாளர் திரிங்கால் 1844இல் அறிகிறார். இதற்கு விதவைகளின் மறுமணமே தீர்வு என்று உணர்கிறார். இருப்பினும் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அப்போது அவரது கனவில் மஞ்சள் கழுத்துப் பறவை எரித்துக் கொல்லப்படுவதைக் காண்கிறார். அக்கனவு அவருக்கு ஒரு தெளிவைக் கொடுக்கிறது. துணிந்து ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைக்கிறார். அதன்பின்பே தமிழகத் திருஅவை கிறிஸ்தவ விதவைகளின் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கிறது. இதைப் போன்று எனது படைப்புகளில் பல கனவுகளை நான் குறிப்பிடுகிறேன். வாசித்தோர் கனவுகளை ரசித்ததாகப் பாராட்டியுள்ளனர்.
மீள்வெளி நாவலில் அருள்வாக்குக் கூறுவதுபோன்று கனவின் வழியாக நற்செய்திக்கு புது விளக்கம் அளிக்கும் பகுதியும் உண்டு.
உயர்நிலைப்பள்ளியில் உங்களது வகுப்புத் தோழராக படைப்பிலக்கியவாதி பாமாவின் அண்ணனும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இருந்துள்ளார். நண்பர்கள் என்ற முறையில் உங்கள் இருவருக்குமான உறவு குறித்துக் கூறுங்களேன்.
ராஜ்கௌதமனின் கிறிஸ்தவப் பெயர் புஷ்பராஜ். நாங்கள் இருவரும் ஒரே ஊர். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்கள். நான் சேசு சபையில் சேரும் முடிவை இவரிடம் கூறியபோது சேர வேண்டாம் என்று தனது ஆலோசனையை வழங்கியவர். அதற்கான காரணங்களையும் விளக்கியவர். இருப்பினும் நான் சபையில் சேர்ந்தேன். அதன் பின்பும் எங்கள் நட்பு கடிதங்கள் வழியாகத் தொடர்ந்தது. ஊரில் மற்ற நண்பர்களுடன் இணைந்து இலக்கிய வெளிவட்டம் என்ற சிறுபத்திரிகையை நடத்தினார். அதன் பிரதிகளைத் தவறாமல் எனக்கு அனுப்பினார். தனது பெயர் ராஜ்கௌதமன் என்று மாற்றியதையும் குறிப்பிட்டார். பல சமயங்களில் காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரிக்குச் சென்று அவரின் இல்லத்தில் தங்கியதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் தனது கருத்துக்களை திறந்த மனதோடு என்னிடம் பகிர்வார். இவரது சிந்தனையைக் கண்டு நான் வியப்பதுண்டு. இவரது உடன் பிறந்தவர்கள் மற்றும் இவரது குடும்பத்தினர் அனைவரையும் நான் நன்கு அறிவேன்.
எனது குருத்துவத்திற்குப் பின்பு எங்களது உறவு அதிகரித்தது. நான் பணிசெய்த ஓங்கூருக்குக் குடும்பத்துடன் வந்துள்ளார். எனது பணிகளைக் கேட்டு அவற்றிற்கு முழு ஆதரவு அளித்தார். நான் ஐடியாஸ் மையத்தில் சேசு சபையின் சமூகப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 1991இல் தலித் எழுத்தாளர்களை உருவாக்க ஒரு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்தேன். அதை முழுமையாக ஆதரித்த ராஜ்கௌதமன் தலித் இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு கட்டுரையையும் எழுதிக்கொடுத்தார். அதுவே ஐடியாசின் முதல் வெளியீடானது. பயிற்சி முகாமிற்குத் தன்னால் வர இயலாது என்று சொன்னாலும் எழுத்தாளர் பிரபஞ்சன், மற்றும் ரவிக்குமார் (தற்போது விழுப்புரம் மாநிலங்களவை உறுப்பினர்) ஆகியோரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தார். பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.
எனது நண்பர் என்றாலும் எனது படைப்புகள் பற்றி தனது விமர்சனத்தைத் சொல்லத் தயங்கியதில்லை. அவருக்கு யாத்திரை நாவலின் பிரதியைக் கொடுத்து அவரது கருத்தைக் கேட்டேன். வெகுவாகப் பாராட்டியதுடன் அதற்கு முன்னுரையும் எழுதிக்கொடுத்தார். அதுபோல எனது மானிடஇயல் நூலான ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதிலுள்ள ஐந்து தலைப்பிற்கும் ஐந்து முனைவர் பட்டங்களைப் பல்கலைக்கழகங்கள் உங்களுக்கு வழங்கலாம் என்றார்.
அவரின் மகள் கௌரியின் இறப்பு அவரை வெகுவாகப் பாதித்தது. அதன்பின்பு இவர் அதிகமாக எழுத ஆரம்பித்தார். பல படைப்புகள் அவரிடமிருந்து வெளிவந்தன. ‘சிலுவைராஜ் சரித்திரம்’ என்ற தலைப்பில் தனது சுயவரலாற்றை எழுதியபோது அதில் என்னைப் பற்றிய அத்தியாயத்தின் பிரதியைக் கொடுத்து எனது கருத்தைக் கேட்டார். நான் சுருக்கமாக என்னைப் பற்றிய உங்கள் கருத்து என்றேன்.
சங்க இலக்கியங்களை தலித் பார்வையில் விமர்சித்து எழுதிய அவரது நூல்கள் யாரும் செய்யாத, செய்ய இயலாத, செய்ய முடியாத மிகப் பெரிய முயற்சி. ஆனால் அதற்கேற்ற அங்கீகாரத்தை அரசு அவருக்கு வழங்கவில்லை. சாகித்திய அகாதமி விருதுக்கு அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டும் ஏனோ கிடைக்கவில்லை. தமிழக அரசின் விருதும் கிடைக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட அமைப்புகளான விளக்கு விருது, பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் வேர்ச்சொல் விருது, எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது, விடுதலைச் சிறுத்தைகளின் அயோத்திதாசர் விருது அவருக்குக் கிடைத்துள்ளன. அவருக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் கவலைப்பட்டாலும் அவர் அரசின் அங்கீகாரத்திற்கும் மேற்பட்டவர். அவருக்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தால் விருதுக்குத்தான் பெருமையே தவிர அவர் விருதுக்கும் மேற்பட்டவர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
பாமாவின் முதல் நூலான ‘கருக்கு’ நாவலை எழுதும்படி நீங்கள்தான் தூண்டியுள்ளீர்கள். இது குறித்து கூற முடியுமா?
விரிவாகவே கூறுகிறேன். பாமாவின் இயற்பெயர் பாஸ்டினா. நாங்கள் ஒரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது பாமா எனக்கு மாணவி. அவர்தான் வகுப்பில் புத்திக் கூர்மையுள்ள மாணவி என்பது எனது கணிப்பு. அதற்கு அவர் வகுப்பில் எழுப்பிய கேள்விகளே காரணம். அதன்பின் நான் சேசு சபையில் சேர்ந்து துறவியானேன். பாமாவுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ராஜ்கௌதமனுடன் நான் தொடர்ந்து நட்புடன் இருந்தேன். ராஜ்கௌதமனின் தங்கை தான் பாமா.
1984இல் உத்திரமேரூக்கு அருகில் உள்ள ஓங்கூர் பணித்தளத்தில் பொறுப்பேற்றேன். நண்பன் ராஜ்கௌதமன் எனக்கு எழுதிய கடிதத்தில் பாமா துறவியாக விரும்புவதாகவும் அவருக்கு வழிகாட்டும்படியும் கேட்டிருந்தார். நான் சம்மதித்தேன். ஒருநாள் பாமா என்னைப் பார்க்க ஓங்கூர் வந்தார். ஆறு ஆண்டுகள் அனுபவங்கள் உள்ள பட்டதாரி ஆசிரியை அவர் என்று எனக்குத் தெரியும். தனது வாழ்க்கையைச் சுருக்கமாகப் பகிர்ந்த அவர் தான் துறவியாகி ஏழை மாணவ மாணவிகளுக்கு உழைக்க விரும்புவதாகக் கூறினார்.
தலித் கிறிஸ்தவப் பெண் துறவிகளின் நிலையை எடுத்துக்கூறி துறவியாகும் எண்ணத்தைக் கைவிடுமாறு கோரினேன். திருமணம் முடிக்க விரும்பவில்லை என்றால் திருமணம் செய்யாமலே ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவலாமே என்றேன். ஆனால் அவர் தான் துறவியாவதில் உறுதியாக இருந்தார். எந்தச் சூழ்நிலையையும் தன்னால் எதிர்கொண்டு தனது இலட்சியப்படி துறவியாக வாழமுடியும் என்ற தைரியமும், தெளிவும் இருப்பதாகத் தயமின்றி கூறினார். வியந்த நான் அவருக்கு உதவ வாக்களித்தேன். அவர் விரும்பிய சபையில் சேர உதவியதோடு நானே அவரை துறவு மடத்துக்கு அழைத்துச் சென்றேன்.
ஆரம்பப் பயிற்சிக்குப் பின் துறவியான அவருக்குப் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிய சபை அவரைப் பணித்தது. தான் விரும்பியபடி ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அங்கு துறவிகளிடையே சாதியப் பாகுபாடு இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டார்.
இச்சூழலில் நான் பணிமாற்றம் பெற்று மதுரை ஐடியாஸ் மையத்தில் சேசு சபையின் சமூகப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். பாமாவை காஷ்மீரின் ஜம்முவில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிமாற்றம் செய்தது சபை. ஜம்முவிலிருந்து பாமா பல பக்கங்கள் கொண்ட கடிதங்களை எனக்கு அடிக்கடி ஆங்கிலம், தமிழ், பேச்சு வழக்குத் தமிழ் ஆகிய மூன்று வடிவங்களிலும் எழுதுவதுண்டு. ஒவ்வொரு கடிதமும் இலக்கியமாக மிளிர்ந்ததை உணர்ந்தேன். ஜம்முவின் அழகு, மக்களின் கலாச்சாரம், மாணவர்களின் இயல்புகள், அங்குள்ள சூழ்நிலை, பணிசெய்யும் ஆசிரியர்களின் மனநிலை, சகோதரிகளின் குணங்கள் என்று அவர் கவனித்தவற்றைச் சுவைபட வர்ணித்து எழுதினார். அவருக்குள் ஓர் இலக்கியவாதி மறைந்திருப்பதை உணர்ந்தேன். கடிதங்களை ஆவணப்படுத்தி அவற்றை வெளியிட்டிருந்தால் இன்று அவை வித்தியாசமான பேரிலக்கியமாகப் போற்றப்பட்டிருக்கும்.
அக்காலத்தில் (1991) அலைபேசி கிடையாது. எப்போதாவது பாமாவுடன் தொலைபேசியில் பேசுவதுண்டு. ஒருநாள் மடத்தின் சூழ்நிலையை விளக்கிய பாமா, தன்னால் இனிமேலும் இத்தகைய துறவு வாழ்வைத் தொடர முடியாது என்றும் தான் சபையிலிருந்து விலகப்போவதாகவும் கூறினார். ஒருகாலத்தில் சபையில் சேர வேண்டாம் என்று கூறிய நான், அதற்கு மாறுபட்ட நிலைப்பாடு எடுத்தேன். எந்தச் சூழ்நிலையிலும் சபையிலிருந்து விலகக்கூடாது என்றும், சபையும் ஏழைகள் சார்பாக நிலைப்பாடு எடுத்து மாறும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றும், அங்கு எதுவும் அநீதி நடப்பதாக உணர்ந்தால் துணிந்து இலட்சியத்திற்காகப் போராடத் தயங்கக் கூடாது என்றும் அறிவுரை கூறினேன். ஆனால், அவரோ தன் வாழ்வை மடத்தில் வீணாக்க விரும்பவில்லை என்றார். பிறகொருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாமா “நான் சபையிலிருந்து விலகுவது உறுதி. யாருக்கும் தெரியாமல் ஜம்முவிலிருந்து திருச்சிக்குச் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். திருச்சி வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. ஐடியாஸ் மையத்தில் சிறிது காலம் ஏதாவது வேலை செய்ய ஏற்பாடு செய்யுங்கள். மடத்திலிருந்து வெளியேறும் முடிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். அவரது முடிவு அதிர்ச்சியளித்தது. கட்டாயம் திருச்சிக்கு வருவதாக உறுதியளித்து அதனை நிறைவேற்றினேன்.
மதுரை ஐடியாஸ் மையத்தில் தற்காலிகமாக ஒருசில மாதங்கள் பாமா பணிபுரியவும், அரசரடி இறையியல் கல்லூரியிலுள்ள பெண்கள் விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்தேன். ஐடியாசில் பணியாற்றியபோது பாமா என்னிடம் துறவு வாழ்வு தன்னைச் சிதைத்துவிட்டது எனவும், சுதந்திரப் பறவையான தனது சிறகுகளை ஒடித்துவிட்டது எனவும், தற்போது தரையில் வீழ்ந்து நடக்கக்கூடச் சக்தியற்றவளாகத் திகழ்வதாகவும் வேதனையுடன் கூறினார்.
அவருக்கு ஆறுதல் கூறிய அதேவேளையில் அவரை ஒரு படைப்பாளியாக்க முடிவு செய்தேன். அவரது வாழ்க்கை அனுபவங்களை எழுதும்படிக் கூறினேன். தன்னை ஆற்றுப்படுத்தவே எழுதச்சொல்வதாக பாமா நினைத்திருக்கிறார். அவரிடம் புதைந்திருந்த படைப்பாற்றல் இலக்கியமாக முளையிட்டது. தினமும் எழுதியவற்றை என்னிடம் கொடுப்பார். அவற்றை வாசித்த பின் பத்திரப்படுத்தினேன். ஒன்பது பகுதிகளாக அவர் வாழ்ந்த தலித் கிறிஸ்தவர்களின் வாழ்வையும், அவர்களது கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும், கலகலப்பான வாழ்க்கை முறைகளையும் மிக அழகாகப் பதிவு செய்திருந்தார். நான் படித்து வியந்தேன். இன்னும் சற்று வித்தியாசமாக எழுதினால் மிகச் சிறப்பாக இருக்குமே! அது என்ன என்று தோண்டியபோது அவரது கடிதங்களில் சில தலித் மக்களது மொழியில் எழுதியிருந்ததை உணர்ந்தேன். அவ்வாறே எழுதும்படிக் கூறினேன். தன்னால் அந்த வடிவில் சிறப்பாக எழுத முடியும் என்ற அவர், அனைத்தையும் தலித் மொழியில் எழுதிக் கொடுத்தார்.
முழுமையாக வாசித்த எனக்கு அது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகத் தோன்றியது. எனவே பாமாவிடம் இதைப் புத்தகமாக வெளியிடப்போகிறேன் என்றேன். அவர் அதிர்ச்சியடைந்தார். “என்னை ஆற்றுப்படுத்தவே எழுதச் சொன்னதாக நினைத்தேன். இதை வெளியிட எனக்குச் சற்றும் விருப்பமில்லை” என்று கோபப்பட்டார். பிரதியை என்னிடமிருந்து பறித்துக் கிழித்துப்போட விரும்பினார். நான் அவரிடம் “இது அம்பேத்கரின் நூற்றாண்டு விழா. தலித் படைப்புகள் வெளிவர ஏற்ற காலம். இது மிகச் சிறந்த வித்தியாசமான படைப்பு. நிச்சயம் மக்களிடையே இப்படைப்பு ஓர் எழுச்சியை ஏற்படுத்தும்” என்றேன். பலமுறை பேசியபின் அவர் சம்மதித்தார். நூலுக்கு ‘கருக்கு’ என்று பெயரிட்டார். புனைப் பெயரில் வெளிடலாம் என்றேன். அப்படி அவர் தேர்வுசெய்த பெயர்தான் பாமா.
ஏதோவொரு உள்ளுணர்வில் ஐடியாசில் வெளியிட்டேன். முதல் பிரதியை பாமாவிடம் கொடுத்தேன். நீர் நிறைந்த விழிகளுடன் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு விழா எதுவும் நடத்தவில்லை. கருக்கு நாவல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒருமுறை பாமாவை சொந்த ஊருக்கு அழைத்த ஊர்க்காரர்கள், பேருந்து நிலையத்திலிருந்த அம்பேத்கர் சிலைக்கு அவரை மாலையிடச் செய்தனர். பின் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாகத் தங்களது தெருவுக்கு அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஆரத்தி எடுத்து அவரை கௌரவப்படுத்தினர். பொதுக்கூட்டம் நடத்தி கருக்கின் சிறப்பைப் பற்றிப் பேசினர். பிறந்த ஊரில் பாமாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் அது. இதுபோன்ற வரவேற்பு மற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்குமா? தெரியவில்லை.
தலித் கிறிஸ்தவப் பெண்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அவர்களது நிலை சமூகத்திற்கு தெரியவரும் என்று பாமாவிடம் கூறினேன். விரைவாக ‘சங்கதி’ என்ற பெயரில் எழுதினார். ஐடியாசில் வெளியிட்டேன். சங்கதியும் அதிகமாகப் பாராட்டப்பட்டதால் அதன் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டேன்.
சில பிரபலமான பத்திரிகைகள் அவரிடம் சிறுகதைகள் எழுதித் தரும்படி கேட்டன. அவையும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அவற்றைத் தொகுத்து ‘கிசும்புக்காரன்’ என்ற தலைப்பில் ஐடியாசிலிருந்து வெளியிட்டேன். பாமாவின் பேட்டிகளையும் சில பத்திரிகைகள் வெளியிட்டன. அவர் தமிழகம் அறிந்த படைப்பாளியானார். இவரது கருக்கு நாவலும், சில சிறுகதைகளும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் நாடறிந்த படைப்பாளியானார்.
மேக்மில்லன் நிறுவனம் ‘கருக்கு’ நூலினை லட்சுமி ஹோம்ஸ்ராங் என்பவரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘கருக்கு’ என்ற பெயரிலேயே வெளியிட்டது. அதற்கு ஏற்பாடு செய்தவர் திருமதி மினி கிருஷ்ணன். கிராஸ்வேர்ட் நிறுவனம் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கான விருதை 2000ஆம் ஆண்டில் கருக்குக்கு வழங்கியது. பாமாவுக்கு 1.5 இலட்சம் ரூபாய் பரிசை அறிவித்தது. டில்லியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பாமாவுடன் நானும் சென்றேன். அதன்பின் கருக்கு நாவல் உட்பட அவரது படைப்புகள் அனைத்தையும் ஆக்ஸ்போர்ட் வெளியிட்டது. இதற்கு ஏற்பாடு செய்ததும் மினி கிருஷ்ணன்தான். கருக்கு உட்பட பாமாவின் அனைத்துப் படைப்புகளும் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாமா உலகம் அறிந்த படைப்பாளியானார்.
கருக்கு நாவலுக்கு வெளியீட்டு விழா நடத்தாத வேதனை இருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக 2017இல் கருக்கின் வெள்ளிவிழாவை மூன்று இடங்களில் (அவர் பணிசெய்த ஓங்கூரின் குப்பையநல்லூர் பள்ளி, பிறந்த ஊராகிய புதுப்பட்டியின் சிறுமலை, சென்னை லொயோலாக் கல்லூரியில்) கொண்டாட ஏற்பாடு செய்தேன். சென்னை லொயோலாக் கல்லூரியில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருமதி மினி கிருஷ்ணன், எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியது மறக்க முடியாத அனுபவமாகத் திகழ்ந்தது.
தமிழ்நாட்டில் பணியாற்றிய ஐரோப்பிய சேசுசபைக் குருக்களில் புனித சவேரியார், ஜான் டி பிரிட்டோ, டி நோபிலி, வீரமாமுனிவர் ஆகியோர் தமிழ்நாட்டில் அறிமுகமான அளவுக்குக் கௌசானல், டிரிங்கால் என்ற பிரான்ஸ் நாட்டுத் துறவியர் இருவரும் அறிமுகம் ஆகவில்லையே. இதற்கான காரணம் என்ன?
பிரான்சிஸ் சேவியர் என்ற சவேரியார் சேசு சபையை உருவாக்கிய இஞ்ஞாசியாரோடு இருந்தவர். சேசு சபை உருவான காலத்திலேயே 1542இல் இந்தியா வந்து தமிழகக் கடலோரப் பகுதியில் பரதவர் மற்றம் முக்குவர்களை மனம் மாற்றினார். இவரைப் புனிதராகத் திருஅவை அங்கீகரித்ததால் இவர் மிகவும் பிரபலமானார். அதுபோல ஜான் டி பிரிட்டோவும் ஒரு புனிதர். இவர் பண்டார சந்நியாசியாக தன்னை அறிவித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களிடம் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். குறுநில மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் பணிசெய்தவர். மக்களின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பணி செய்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களை மனந்திருப்பினார். அதோடு வடதமிழகமான உத்திரமேரூர், செஞ்சி போன்ற பகுதிகளில் பணியாற்றியபோது யாருக்கும் தெரியாமல் தலித் மக்களிடம் சென்று கிறிஸ்தவத்தைப் பரப்பினார். இவரும் குறுநில மன்னரால் ஓரியூரில் கொல்லப்பட்டு புனிதர் ஆனார். எனவே புனிதர் என்ற முறையில் இவரும் தமிழகத்தில் பிரபலமானார்.
ஆனால் ராபர்ட் டி நோபிலி என்ற தத்துவ போதகர் தமிழர்களின் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர். தமிழையும் நன்கு கற்றார். கலாச்சாரத்திற்கு ஏற்ப வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். பிராமண சந்நியாசி, பண்டார சந்நியாசி என்ற அமைப்பைத் தொடங்கினார். தமிழை நன்கு கற்றதால் தமிழில் பல நூல்களை எழுதினார். இவரது வித்தியாசமான அணுகுமுறையினாலும், தமிழ் அறிவினாலும் தமிழகத்தில் பிரபலமானார்.
இதுபோல கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழையும் நன்கு கற்றார். அதனால் தான் பணிசெய்த இடங்களில் அன்னை மரியாளுக்கு வெவ்வேறு பெயரிட்டு தமிழக மரபுக்கு ஏற்பச் செயல்பட்டார். கோணான்குப்பத்தில் அன்னைக்குப் பெரிய நாயகி அம்மாள் என்று பெயரிட்டார். ஏலாக்குறிச்சியில் அன்னைக்கு அடைக்கல நாயகி என்று பெயரிட்டார். தமிழை நன்கு கற்றதால் தேம்பாவணி உட்பட பல படைப்புகளை உருவாக்கினார். உரைநடையாக ‘பரமார்த்தகுரு கதை’யையும் எழுதினார். திருக்குறளின் முதல் இரண்டு பாகங்களை லத்தீனில் மொழிபெயர்த்தார். இவர்கள் நால்வருமே சேசு சபையின் பழைய பணித்தளத்தைச் சார்ந்தவர்கள். அப்போது சேசு சபையினரிடம் எந்த நிறுவனங்களும் இல்லை. பங்குப் பணியாளர்களாக மட்டுமே இருந்தனர். மக்களோடு நேரடி தொடர்பு இருந்தது.
1773இல் சேசு சபை உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்டது. தமிழகத்திலும் தடைசெய்யப்பட்டது. 1814இல் தடை நீக்கப்பட்டது, 1837இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு சேசு சபைக் குருக்கள் தமிழகத்திற்கு வந்தனர். இவர்கள் வந்தபோது தமிழகச் சூழல் முற்றிலும் மாறியிருந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுக்கல், டச்சு போன்ற ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கம் இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவியிருந்தது. எனவே பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த சேசு சபையினர் இவர்களோடு எளிதில் உறவு வைத்துக்கொண்டனர். கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தனர். பொருளாதார உதவியும் பிரான்சிலிருந்து கிடைத்தது. விளைவு மக்களோடு நெருங்கிய உறவு இல்லாமலும், தமிழைக் கற்காமலும் பணிசெய்யும் சூழல் உருவானது. தமிழே தெரியாமல் தங்களது வாழ்நாள் முழுதும் பலர் தமிழ்நாட்டில் பணி செய்தனர். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுக்கு உதவும் போக்கு உருவானது. அடித்தட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டவர்களாக வாழ ஆரம்பித்தனர்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக ஜான் பேப்டிஸ்ட் திரிங்காலும், கௌசானலும் பணிபுரிந்தனர். இவர்கள் அடித்தட்டு மக்களது பிரச்சினையில் தங்களைக் கரைத்துக்கொண்டனர். தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் தனியொருவனாக தலித்துகள் சார்பாக நிலைப்பாடு எடுத்து திரிங்கால் பணிபுரிந்தார். அக்காலத்தில் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்திவிட்டு தங்கள் நிலங்களில் வேலைசெய்த தலித்துகளை கொத்தடிமைகளாக நடத்தினர். இப்பகுதியிலிருந்த சுமார் 15 ஜமீன்தார்களை திரிங்கால் துணிவுடன் எதிர்த்தார். ஜமீன்தார்களுக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடுத்தார். இவரது போராட்டத்திற்கு சபையில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. வழக்குக்காக பணத்தை வீணாகச் செலவு செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு இவர்மேல் இருந்தது. திரிங்கால் தமிழை நன்கு கற்று புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்ததோடு பல புத்தகங்களையும் தமிழில் எழுதினார். இவரைத் தொடர்ந்து வந்த கௌசானலும் திரிங்காலின் வழியைப் பின்பற்றினார். தீண்டாமையால் பாதிக்கப்பட்ட கழுகுமலை, வடக்கன்குளம் போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் சார்பாக துணிவுடன் நிலைப்பாடு எடுத்து சமத்துவத்தை நிலைநாட்டினார்.
இவர்களது பங்களிப்பானது நிறுவனங்களிலேயே மூழ்கிப்போன சேசு சபையினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் அடித்தட்டு மக்களுக்காக உழைத்ததால் இவர்களது பணியை சேசு சபையினர் அங்கீகரிக்கவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.
நிறுவனப் பார்வையிலிருந்து அடித்தட்டு மக்களின் பார்வைக்கு சேசு சபை வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் இந்துமத அடிப்படைவாதிகளுடன் கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், கத்தோலிக்க அறிவுஜீவிகள் சிலர் இணைந்து நிற்கிறார்களே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தைப் பொறுத்த அளவில் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், அறிவுஜீவிகள் யாரும் இந்துமத அடிப்படைவாதிகளுடன் இணைந்து நிற்கவில்லை என்று என்னால் துணிந்து கூறமுடியும். கிறிஸ்தவத்தைப் பற்றிய சில தவறுதலான புரிதல்களே இக்கேள்விக்கான காரணமாகலாம்.
கிறிஸ்தவத்தில் பல்வேறுவிதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. தமிழகத்தைப்பொறுத்த அளவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் லத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். ஆனால் கேரளாவில் அப்படி அல்ல. அங்கு கத்தோலிக்கர்களிடம் சீரோ மலபார், சீரோ மலங்கரா, லத்தீன் போன்ற வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இவற்றில் சீரோ மலபார் வழிபாட்டு முறைதான் கேரளாவில் அதிகம். நமது புரிதலுக்காக இரண்டையும் இணைத்து சிரியன் வழிபாட்டு முறை என்று கூறலாம். கேரளாவில் கடலோரம் வாழும் மீனவ கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், தலித் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் லத்தீன் வழிபாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். (இவர்களில் சிலர் சிரியன் வழிபாட்டு முறையிலும் இருக்கின்றனர்.) பெரும்பாலும் இவர்களைச் சிரியன் கிறிஸ்தவர்கள் சமமாக மதிப்பதில்லை. தாழ்ந்தவர்களாகக் கருதுகின்றனர்.
உயர் வகுப்பைச் சார்ந்த சிரியன் கிறிஸ்தவர்கள் சிலர் ரப்பர் தோட்டங்களை வைத்திருக்கின்றனர். ரப்பர் தோட்டங்களில் போதிய வருமானம் இல்லாததால் பெரும்பாலான இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். மூத்தவர்கள்தான் நிலத்தைப் பராமரிக்கின்றனர். சிரியன் கிறிஸ்தவர்களுக்குத் தனியாகப் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள் இருக்கின்றனர்.
சிரியன் கிறிஸ்தவர்கள் பிஜேபியை ஆதரிப்பதற்கு நான்கு காரணங்களை அவதானிக்கலாம். முதல் காரணமாக சனாதனத்தைச் சொல்லலாம். இவர்களில் சிலர் இன்னும் சனாதனத்தைக் கடைப்பிடிப்பதால் சனாதனத்தைக் கொள்கையாக வைத்திருக்கும் பிஜேபியை ஆதரிக்கின்றனர்.
இரண்டாவது காரணம் பொருளாதாரம். ரப்பரின் விலை குறைந்ததால் தங்களது தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம்கூட கொடுக்க முடியாத சூழல் சிரியன் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டது. எனவே சிரியன் பேராயர் ஒருவர் ரப்பர் விலையை எக்கட்சி உயர்த்துகிறதோ அவர்களுக்கே எங்களது ஓட்டு என்று அறிவித்தார். இதற்குச் சிரியன் கிறிஸ்தவர்களிடம் பரவலான வரவேற்பு இருந்தது.
மூன்றாவது காரணம் நிறுவனங்களைப் பாதுகாப்பது. சிரியன் கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பல்வேறுவிதமான சிக்கல்கள், முரண்பாடுகள், ஒழுக்கக்கேடுகள் போன்ற பிரச்சினைகள் வெடித்தன. பிஜேபியை ஆதரிக்கவில்லை என்றால் தங்களது நிறுவனங்களை ஒன்றிய பிஜேபி அரசு திடீரென சோதித்துப் பிரச்சினைகளைப் பெரிதாக்கலாம்... நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கலாம் என எண்ணினர். இதிலிருந்து தப்பிக்க பிஜேபிக்கு ஆதரவு அளிப்பதே ஒரே வழியாகத் தோன்றியது.
இறுதிக் காரணம் இஸ்லாமியர்கள். இவர்களின் பொருளாதாரமும், எண்ணிக்கையும் அதிகரிக்கும் அதேவேளையில் சிரியன் கிறிஸ்தவர்கள் இவை இரண்டிலும் பின்நோக்கிச் செல்லும் போக்கு இருக்கிறது. மேலும் இஸ்லாம் இளைஞர்கள், சிரியன் பெண்களைக் காதலித்து திருமணம் செய்கின்றனர். இதையும் சிரியன் ஆயர் ஒருவர் கண்டித்து அறிக்கை விட்டார். பிஜேபியினர் இயல்பாகவே இஸ்லாமியர்களை எதிர்ப்பதால் அவர்களைச் சிரியன் கிறிஸ்தவர்கள் ஆதரிக்கின்றனர் என்றும் சொல்லலாம்.
பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கேரளாவில் சிரியன் பேராயரின் அறிக்கையும். அதன் அடிப்படையில் சிரியன் கிறிஸ்தவர்கள் இந்துமத அடிப்படைவாதக் கட்சியான பிஜேபிக்கு ஆதரவு அளித்ததையும் நான் ஏற்கவில்லை. இதைக் கண்டிக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.
தங்கள் எதிர்காலத் திட்டமாக என்னென்ன இருக்கின்றன. அறிந்து கொள்ளலாமா?
தமிழகத் திருஅவை மட்டுமல்லாது இந்தியத் திருஅவையே சாதியத் திருஅவையாகத்தான் இருக்கிறது. இது கிறிஸ்தவத்திற்கு மிகப்பெரிய இழிவு. நான் சார்ந்திருக்கும் சேசு சபையினர் சிலரிடமும் சாதியம் இருப்பது வேதனை அளிக்கிறது. சேசு சபையினரை வழிநடத்துவது சபையை உருவாக்கிய இஞ்ஞாசியாரின் ஆன்மீகமே. அவர் ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ என்ற அற்புதமான நூலை எழுதினார். அந்த ஆன்மீகப் பயிற்சிகளை இரண்டு முறை விரிவாகச் செய்தாலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டு நாள்கள் செய்கிறோம். இருப்பினும் சாதி ஒழியவில்லை. இஞ்ஞாசியாரின் ஆன்மீகம் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. சமத்துவம் பற்றி அதில் கூறியிருந்தாலும் சாதி ஒழிப்பு பற்றி நேரடியாக எதுவும் அதில் இல்லை. இன்றைய இந்திய, தமிழ்ச் சூழலில் சாதி ஓழிப்பே ஆன்மீகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இக் கருத்தின் பின்னணியில் இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்திற்கு புதிய விளக்கத்தை நாவல் வடிவில் கொடுக்க விரும்புகிறேன். விரைவில் எழுத வேண்டும். எப்போது எழுதுவேன்? தெரியவில்லை. இதுதான் எனது இறுதிப் படைப்பாக இருக்கும்.
- மாற்கு
நேர்காணல்: ஜி.சரவணன்