நாவல்- ‘வல்லிசை’
பதிப்பகம்- நற்றிணை.
எழுத்தாளர்- அழகிய பெரியவன்

இந்நாவல் ஏறக்குறைய மூன்று தலைமுறையைக் கொண்டிருக்கிறது. அதன் கால அளவு, வெள்ளை ஆட்சியாளர்கள் தொடங்கி, எம்ஜிஆர் கட்சி தொடங்குவதற்கும் மேலான காலமாக நீண்டிருக்கிறது. வெறும் தலித் வாழ்நிலையை மட்டும் சொல்கிறதாக நாவல் இல்லை. சாதிக் கட்டமைப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் இருக்கின்ற பலவித சாதிக்குழு மனிதர்களின், வாழ்வியலின் எதிராட்டங்களை, போராட்டங்களை வெளிப்படுத்துகிறது.

vallisaiஆரம்ப தலைமுறையாகத் தொடங்குகின்ற இராவணேசன் வாழ்நிலை, தான் சார்ந்த மனிதர்களைவிட, தனிப்பட்ட சிந்தனை, சமூக அக்கறை கொண்ட மனிதனாக இருக்கின்றார். தன் சாதிக்குழு மக்களை சற்று மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு இருக்கின்றது. தன் சாதிக்குழு மக்களில் முன்னோடித் தலைவர்களை பின்பற்றுகின்றார். மூத்த தோழர்கள் விழிப்புணர்வுக்காகக் கொண்டு வருகின்ற பத்திரிக்கைகளை வாசிக்கும் அறிவு பெற்ற நபராகவும் இருக்கிறார். பொருள் சார்ந்து முன்னேறிய சாதிக்குழு மனிதர்களைப் போலவே, தான் சார்ந்த மனிதர்களும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதில் விருப்பமுள்ள பாத்திரம் இராவணேசன்.

உயர்வு தாழ்வு சாதிக்குழுக்கள் விவரங்களைத் தெரிவிக்கின்ற நாவல் மட்டுமல்ல. காலணா, அரையணா தொடங்கி, நூற்று சொச்ச ரூபாயில் தற்காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பொருட்களை வாங்க முடிகின்ற காலத்தின் அற்புதங்களை விரிவாகக் காட்டுகிறது. அரசுத்துறை ஊழியர் புதிதாக வாங்கிய சைக்கிள் எப்பேர்ப்பட்ட அதிசயப் பொருளாக மக்கள் கூடிக் கூடி பார்க்கிறார்கள், அது குறித்து பேசுறார்கள் என நினைக்கும்போது. அக்காலத்தின் தன்மையை விரிவாகக் கண்டுகொள்ள முடிகிறது.

கதை பெரும்பாலும் வேலூர் மாவட்ட சிறு கிராமங்களைச் சுற்றி அமைந்தது என்றாலும், இராவணேசன் மகன் திருவேங்கடம் சென்னை பச்சயப்பன் கல்லூரியில் படிக்கச் செல்கின்றபோது, சென்னையை விவரிக்கும் சூழல் அற்புதமானது. திருவேங்கடம் ஏதோ ஒரு மூலையில் சிறிய கிராமத்தில் படித்துவிட்டு, சென்னை நகரத்திற்கு (இன்டர்மீடியட்) படிக்க வருகின்றான். அவனுக்கு பொன்னரசு மூத்த மாணவன் நட்பு கிடைக்கிறது. பொன்னரசு, திருவேங்கடத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தைக் காண்பிக்கின்றான். “மௌண்ட் ரோட்டுக்கு போனா விதவிதமான கார்களைப் பார்க்கலாம். ஏரிக்கரையில் இருக்கும் லயோலா கல்லூரி, தரையில் ஓடும் டிராம், அடையாறு ஆறு சுற்றிய புதர்க்காடுகள். இரவு நேரத்தில் சைக்கிளில் விளக்கு இல்லை என்றால் போலீஸ் மடக்கும் வழக்கம் போன்ற கதை சூழல் விரிவாகப் போகிறபோது, அக்கால சென்னையின் வரலாற்றுச்சூழலை வாசகன் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

நாவலில் பொன்னரசு கொஞ்ச நாட்களே வந்தாலும் மறக்கமுடியாத பாத்திரம். அவரின் போராட்ட குணம், நடைமுறையில் குறுக்கிடும் சாதிய அடக்குமுறை, விடுதியில் நடக்கும் குளறுபடிகள், அவைகளுக்கு எதிரான வாதங்கள், அதிரடிச் செயல்பாடுகள் அற்புதம். எதையும் நேரடியாக எதிர்க்கும் துணிச்சல், பல புத்தகங்களைப் படித்து சமூகத்தை அறிந்து வைத்திருக்கிற திறமை, படிப்பில் சோடை போகாத இளைஞனின் மன உறுதியை வெளிப்படுத்துகிறது.

காதர்பாய் என்று ஒரு பாத்திரம். அதுவும் அவ்வளவு அற்புதமான பாத்திரம். தன்னுடைய தோல் பதனிடும் தொழிற்சாலையில், இராவணேசன் உண்மையாக வேலை செய்தான் என்பதற்காக காதர்பாய் தன் இறுதி வாழ்நாள்வரை இராவணேசன் குடும்பத்திற்கு அநேக உதவிகளைச் செய்கின்றார். ஒரு கட்டத்தில் சாதிப் பிரிவினை போராட்டச் சூழலில் இராவனேசன் இறந்து, அவர் மகன் திருவேங்கடம், தாய் மங்கா அனாதையாக நிற்கும்போது, காதர்பாய் இரண்டு ஏக்கர் விளைநிலத்தை இனாமாகக் கொடுத்து, பயிர் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அந்தச் சூழலில் காதர்பாய் உதிர்க்கும் வார்த்தை “எனக்கு அல்லா கொடுத்தது அனேகம், அதில் நீங்கள் வாழ, கொஞ்சம் தருவதால் நான் ஒண்ணும் குறைந்துவிட மாட்டேன்“ என்று கூறி மங்கம்மாவிடம் நிலப்பத்திரம் தருகின்றார். இவைகள் எல்லாம் அந்தக் காலத்தின், அறம் சார்ந்த அநேக மனிதர்களின் இரங்கும், நேசிக்கும் பண்பைக் காட்டுகிறது.

இராவணேசன் காலத்தில், அதாவது சுதந்தரத்திற்கு முன்காலத்தில், தலித்துகள் பெரிய இன்னல்களைச் சந்தித்திருக்கவில்லை. மிகக் கீழ்மையாக நடத்தப்படவில்லை. சுதந்தர இந்தியாவிற்குப் பிறகுதான் பல முன்னேறிய சாதிக் குழுக்கள் தாங்கள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக தலித் மக்களை பெருமளவில் தொந்தரவுக்குள்ளாகி இருக்கிறார்கள் என்கிற தரவுகள் காணமுடிகிறது.

திருவேங்கடம், மாமன் மகள் குப்பியோடு இடையிடையில் இயல்பாக வரும் காதல் போக்குகள். திருவேங்கடம், சிறுவயது முதலே உடன் வரும் சிவலிங்கம், திருவேங்கடம், சமூக விழிப்புணர்வாளர் தலைவர் சிவமலை தங்கள் மக்களை வழி நடத்த எடுத்துக்கொள்ளும் போராட்ட வழிமுறைகள் ஆகட்டும், தனித் தனிப் பெரும் ரசனையுள்ள பகுதிகளாக நாவலில் வருகின்றது.

உயர்சாதிக் குழு தலைவர்கள், முதலாளிகள் போலீசின் தயையை மிகச் சுலபமாகப் பெறமுடிகின்றது. தங்கள் கருத்துக்கு, தங்களுக்குப் பணியாதபோது தலித்துக்களுக்கு எதிராக பொய் கேசுகளை அரங்கேற்றுவது போன்ற வாழ்நிலைகளை எதார்த்தமாக அடிக்கடி நடக்கிறது. அந்நிலையில் பலர், பல சமயம் பயந்து மீண்டும் அடிமையாகவும், அல்லது தங்கள் வாழ்க்கையையே சூனியமாக்கிக் கொள்வதும் நடந்து விடுகிறது.

சிவமலை, திருவேங்கடம் போன்ற சில வழிகாட்டிகள், பல கட்டங்களில் அம்பேத்கர் போதனைகளை மேற்கோள் காட்டி வழிநடத்துகின்றார்கள். அம்பேத்கரின் வழிகாட்டுதல்களில் முக்கியமாக நாவலுக்கு பங்காற்றுவது ‘நம் மக்கள் வாழ்வாதாரத்திற்காக, செய்யும் வேலைகளின் அளவுகோலைத் தகுதியாக வைத்துதான் உயர்சாதி குழுக்கள் நம்மை இழிவாக நடத்த எத்தனிக்கிறது. அப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய மறுங்கள், முற்றாக துறந்து வேறு வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்' போன்ற கருத்துக்கள்தான் நாவலின் பிரதான பாடுபொருளாக இருக்கின்றது. அத்தன்மை வாய்ந்த வேளையில் முதன்மையாக இருப்பதுதான் பறையிசைத் தொழில். திருவேங்கடத்தின், சிறுவயது நண்பன் சிவலிங்கம். வேறு சில நண்பர்களுக்கு பறையிசை மட்டுமே தெரிந்த கைத்தொழிலாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் சிவலிங்கம் போன்ற சாமான்ய மனிதர்கள் வாழ்வு, இருதலைக் கொள்ளியாக மாறிப்போகிறது. மோளம் அடித்தால் சொந்த சாதிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும். அடிக்கவில்லை என்றால் குடும்பமே பசியால் சாக வேண்டும். இந்த இக்கட்டுகளை எல்லாம் அற்புதமாகக் கொண்டு செல்கிறது நாவல். பணவர்க்கம், பசிவர்க்கம் இரண்டுக்கும் நடக்கும் போராட்டத்தில் நீதி யாரை ஜெயிக்க வைக்கிறது, நண்பர்கள் எங்கே கவிழ்ந்து விடுகின்றார்கள் என்பதையெல்லாம் கூடுதலாக நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலும் ஒரு புத்தக விமர்சனம் என்றால் தொடர்ந்து வாழ்த்துதல்கள், சாங்கியத்திற்காக கொஞ்சம் குறைபாடுகள் போன்ற பார்வைகள் வைக்கப்படுகின்றது. அழகிய பெரியவனின் இந்த நாவலில் அப்படி ஏதும் குறைபாடுகள் காணமுடியவில்லை.

கடந்த கால மனித வாழ்முறைகளை மிக நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். அதற்கு சாட்சியாக உயர்சாதித் தலைவர்கள் ஒரு கட்டத்தில் தவறான காரியங்களுக்குத் துணைபோனாலும், கடைசியில் திருவேங்கடம் உயர்சாதித் முக்கியஸ்தர் தீர்த்தமலையிடம் தன் மகனுக்கு உதவி கேட்டுச் செல்லும்போது தீர்த்தமலை சொல்லும் வார்த்தை “திருவேங்கடம், மனுசன்னா மன்னிக்கத் தெரியணும். பயப்படாத. உம்பையனை நிக்கவய்யி. ஜெயிக்க வைக்கலாம்.” இந்த வாக்கியத்தில்தான் 319 பக்க நாவல் நிற்கிறது என்று நான் கருதுகின்றேன்.

தற்காலங்களில் நாவல்கள் உண்மையான வாழ்முறைகளை பேசாமல் வெறுமனே மேலோட்டமான கேளிக்கைகளை, எதார்த்தம் இல்லாத புனைவுகள், சினிமாத்தனமான விவரணைகள் பாடுபொருளாக வருகின்ற சூழலில். ‘வல்லிசை’ நாவல் மிக முக்கியமாக அனைத்துத் தரப்பு வாசகனையும் ஈர்த்துச் செல்லக்கூடிய நாவல்.

இந்நாவலைக் கொண்டு வந்திருக்கும் 'நற்றிணை' பதிப்பகத்தாருக்கும், படைப்பாளர் 'அழகிய பெரியவன்' அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

- டேனியல் ஜேம்ஸ்

Pin It