1) ஈழத்து தமிழ் அறிஞர் சி.மௌனகுரு தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற மாநில மாநாட்டு அரங்கில் ஈழத்து நாடகம் பற்றிய ஒரு சிறந்த உரையை நிகழ்த்தினார். சாகித்திய அகாடெமியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பேரா.நாச்சிமுத்து நெறிப்படுத்தினார். தமிழகத்தின் முற்போக்கு மரபு என்ற சொல்லின் புதிய பரிமாணத்திலிருந்து துவங்கிய மௌனகுருவின் பேச்சு தொன்மங்களிலிருந்து படைப்புகளில் மீள் உருவாக்கம் பெற்ற தொன்மங்களின் உலகை விரித்துப் போட்டார். 19, மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மாக்ஸ் முல்லர், பிரேசர், பிராயிடு, லெவிஸ்ட்ராஸ் போன்றோரின் தொன்மம் பற்றிய பார்வை வரிசைப்படுத்தப்பட்டது. இயற்கைக் குறியீடுகளினூடே வரலாற்றை, வாழ்வை புனைவாக மாற்றும் முறையியலாக இதனை விளக்கினார். Myth is powerful than Truth என்பதான விவாதத்தை முன்வைத்தார்.
சங்காரம், சக்தி பிறக்குது, ராவணீஸ்வரம் போன்ற நாடகப்பிரதிகள் உருவான விதம் பற்றியும் அதில் புராணிக தொன்மங்கள் மறு உருவாக்கம் பெற்றமை குறித்தும் சி.மௌனகுரு உரையாடினார். சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்களின் மீதான அழித்தொழிப்பை எதிர்கொள்ள பண்பாட்டு வெளியில் இந்த தொன்மங்கள் போராயுதங் களாகவே பயன்பட்டுள்ளன.
2) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டில் மும்பை சமூகவியல் அறிஞர் ஆனந்த் டெல்ட்டுமே நவதாராளமயம், இந்துத்துவா, பண்பாட்டுச் சவால்கள் என்ற பொருளில் சிறப்புரை உரையாற்றினார். இதனை தமிழில் தோழர் ரமணி தொகுத்து அளித்தார். மக்கள் இயக்கங்களின் அறிவுஜீவி ஆனந்த் டெல்ட்டுமே Khairilanji A Strange and Bitter Crop, Globalisation and The Dalits ,Anti Imperialism and Annihilation of caste என பல நூல்களின் ஆசிரியர்...
3) அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன கேரள மாநில செயலாளர் டாக்டர் மோகன்தாஸ் தனது ஆய்வுரையில் கேரள பாரம்பரிய இலக்கிய மாற்றுமரபினை மையப்படுத்திப் பேசினார்.
4) தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் நிறைவுரையை வழங்கினார்கள். கலை இலக்கியப்பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் சமூக ஒற்றுமை குறித்தும் அவர்தம் பேச்சு மையமிட்டிருந்தது. பேராசான் ஜீவாவின் எளிமை, மரபுசார் இலக்கியப் புலமை, கலை இலக்கியத்தை மக்கள் விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய முறைமை குறித்தும் விளக்கினார்கள். சமயங்களிடையே நிலவும் சகிப்புத்தன்மையற்ற நிலையை நீக்குவதற்கும் நல்லிணக்கத்தின்பால் மக்களை ஒன்றுசேர்ப்பதற்குமான ஆயத்தங்கள் அப்பேச்சில் தொனித்தது. பன்மிய சமய உரையாடல் சார்ந்தும் அடிகளார் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியின் வாழ்வியல் சம்பவத்தை எடுத்துப் பேசியது மிக அற்புத மாக இருந்தது. எளிமையான, ஆழமான, சிறு சிறு சம்பவங்களின் மூலம் காட்சிகளை பார்வையாளனின் மனதில் பதியவைக்கும் நுட்பமான அழகு அடிகளாரின் பேச்சில் நிறைந்திருந்தது.