மக்கள் கவிஞர் எனப் போற்றப்பட்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாரதி, பாரதிதாசன் வழியில் வெகுமக்கள் கவிஞராக விளங்கினார்.
13.04.1930 ல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ‘செங்கப்படுத்தான்காடு’ எனும் சிற்றூரில், எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை மட்டுமே எட்டிய இவர், இளமையிலேயே கவிபாடும் திறன் பெற்றிருந்தார். இவரின் தந்தையாரும் பாட்டுக் கட்டும் பாவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணசுந்தரம் எளிய மக்களோடு வாழ்ந்தார். வாழ்க்கைப்பாட்டிற்காகப் பல்வேறு தொழில்களைச் செய்தார். விவசாயி, மாட்டு வியாபாரி, மாம்பழம் விற்பவர், இட்லி விற்பவர், முறுக்கு விற்பவர், தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் என அவரின் ‘அவதாரங்கள்’ நீளும். பதினேழு தொழில்கள் செய்ததாகச் சுட்டுவர்.
உதிரி வாழ்வில் அடித்தள மக்கள் மீதான கரிசனம் பிறந்தது. பொதுவுடைமை இயக்கத்தின் மீது ஈர்ப்பு எழுந்தது. பட்டுக்கோட்டைப் பகுதியில் களமாடிய வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடை சிவராமன் ஆகியோரின் தாக்கமும் காரணமாக அமைந்தன. கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பில் புதுச்சேரித் தலைவர் வ.சுப்பையா மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு நெருக்கம் ஏற்படுகிறது. இவர் ‘பாரதிதாசன் வாழ்க’ என்று எழுதிவிட்டே தன் பாடல்களை எழுதுவாராம். அந்தப் பாடல் புனையும் திறன், கலை ஆர்வம் காரணமாக ‘சக்தி நாடக சபா’விலும் இணைகிறார். பின்னர் திரைத்துறையில் நுழைகிறார். 1956 ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்தில் இவரின் முதல் திரையிசைப் பாடல் வெளிவந்தது.
ஓரிரு ஆண்டுகளிலேயே நூற்றுக் கணக்கானப் பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார். 08.10.1954இல் தன் இருபத்தொன்பதாம் வயதில் காலமானார். இவரின் பொது வாழ்வு சுமார் பத்தாண்டுகள். கலை உலக அனுபவம் சுமார், ஐந்தாண்டுகள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவா, ஐ.மாயாண்டி பாரதி, மாசிலாமணி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் தொடர்பு… என மக்கள் கவிஞரின் வாழ்வும் வரலாறும் சுருக்கமானதுதான். ஆனால் அவரின் வீச்சு பெரிது.
பாரதி, பாரதிதாசன் புகழ்பரப்பியோர் போல மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் புகழ் பரவச் செய்தோர் பலர் உள்ளனர். கவிஞர் ஜீவபாரதி முதன்மையானவர். பட்டுக்கோட்டையில் நிறுவப் பெற்ற மக்கள் கவிஞர் திருவுருவச்சிலை முக்கியமானது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாக்களும் குறிப்பிடத்தக்கவை. சிங்கப்பூரில் செயல்படும் ‘மக்கள் கவிஞர் மன்றம்’ கவிஞரை அயலகச் சூழலில் கொண்டாடி மகிழ்கிறது. பட்டுக்கோட்டையார் குறித்த ஆவணப்படமும் முக்கியமானது.
தமிழகத்தில் மக்களிடம் கவிஞரைக் கொண்டு சேர்த்த பெருமையில் கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் ஜீவி ஆகியோருக்குப் பெரும்பங்கு உண்டு.
இதன் தொடர்ச்சியாக கவிஞர் ஜீவி 'பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை' எனும் புதுக்கவிதை நூலை எழுதியுள்ளார். ஜீவி பல கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர். எளிமையாகவும், இனிமையாகவும் மக்கள் விரும்பும் வண்ணம் பேசும் ஆற்றல் மிக்கவர். எழுத்து, மேடைப் பேச்சு எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்.
பட்டுக்கோட்டையாரை உணர்ந்து உள் வாங்கிய கவிஞர், அவரின் வாழ்வியல் நிகழ்வுகள் சிலவற்றை அழகாகக் கவிதைகளாக்கி உள்ளார். உண்மையிலேயே இது பட்டுக்கோட்டைக்கு சிறந்த ‘கவிதாஞ்சலியாக’ அமைந்துள்ளது.
பட்டுக்கோட்டையாரை, 'தஞ்சைத் தரணிதந்த / கவிதை ஊருணி' என்கிறார். மேலும், “வயிறு பசிக்கிறவன் / விடமாட்டான் / மூலதனம் / கூலி ஜனம் / வாழ்க்கைப் பாடு மாற / அவன் சொன்ன வாய்ப்பாடு” என்று பட்டுக்கோட்டையின் அகத்தைச் சுட்டுவார்.
“வெற்றிலையும் வாயும் / விளையாடும் வேளையிலே / நெற்றியிலே சிந்தை / நிழலோடி நின்றிருக்கும் / கற்ற தமிழ் வழியில் / கவியாக வந்திருக்கும் / அண்ணே! என அழைத்தால் / அதில் ஒரு சுவை இருக்கும்” எனக் கவிஞரின் புற அழகைச் சுட்டுகிறார்.
பட்டுக்கோட்டையின் பாட்டுப் பிரவேசத்தை, “வரிகள் திரிகளாயின / திசையெட்டும் தீப்பற்ற வைத்தன”, “அழகியலும் சமூக / அக்கறையும் கொண்ட / பாட்டு வரிகள் / பட்டுக் கோட்டையின் / அடையாளம் ஆயின” என மிகச் சரியாகச் சுட்டுகிறார். மேலும்,
“வஞ்சிப்பா பாடிய / கவிஞர்களுக்கு மத்தியில் / ஏழைகளை வஞ்சிப்போர் பற்றிப் / பாடியவன் பட்டுக்கோட்டை”
“சொல்லுக்குள் வார்த்தைகளைச் /சுருக்கி வைக்கும் வித்தகர் கல்யாணசுந்தரம்”
“பட்டுக் கோட்டையாரின் / சொல் வெட்டு கவிதைக் / கல்வெட்டாக இன்று வரை / நிலைத்து விட்டது”
“சாணக்கியர் எழுதியது / அர்த்த சாஸ்திரம் நம் / பட்டுக்கோட்டை எழுதியதோ / வர்க்க சூத்திரம்” என்றெல்லாம் கவிஞர் ஜீவி, மக்கள் கவிஞருக்கு கவிதை மகுடம் சூடி இருக்கிறார்.
குறுகிய வாழ்வில் எளிய மக்களின் வாழ்வியலை வெகு மக்கள் ஊடகமாம் திரைக்கலையில் பதியமிட்டவர் பட்டுக்கோட்டை. கொள்கை வழி நின்ற மக்கள் கவிஞருக்கு ஜீவி படைத்திட்ட கவிதைத் தோரணமாக இந்நூல் விளங்குகிறது.
பட்டுக்கோட்டை தமிழின் பாட்டுக்கோட்டை / கவிஞர் ஜீவி /
தமிழ் திசை / சென்னை – 2 / விலை ரூ 150/-
- இரா.காமராசு, பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.