இலக்கிய ஆராய்ச்சிக்கான அணுகுமுறைகள் தொடக்கத்தில் இலக்கியத்திற்குள்ளிருந்தே பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆயின், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலக்கியத்தை ஆராய்வதற்குச் சமூகவியல், தொல்லியல், மொழியியல், வரலாற்றியல் எனப் பல்துறைகளை இணைத்து ஆராயும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. எண்பதுகளுக்குப் பிறகு, இலக்கியத்திற்கான தனி அணுகுமுறைகள் என்ற நிலைமை மாறி இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் ஆகிய எல்லாத்துறைகளையும் ஆராய்வதற்குரிய பொதுவான திறனாய்வுக் கோட்பாடுகள் (Critical Theories) உருவாகின. அவ்வகையில் அமைப்பியல், பின் அமைப்பியல், பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம், பண்பாட்டு ஆய்வுகள், புதிய வரலாற்றியம் என்பன மனித அறிவுத்துறைகள் பலவற்றையும் அணுகி ஆராய்வதற்கான கோட்பாடுகளாக விளங்குகின்றன.
தொண்ணூறுகளுக்குப் பிறகு இலக்கிய ஆய்வு குறிப்பாக ஒப்பிலக்கிய ஆய்வு என்பது அதன் இலக்கிய எல்லைகளைக் கடந்து மார்க்சியம், அமைப்பியல், பெண்ணியம், பக்தீனின் உரையாடலியம் முதலான பிற துறை ஆய்வு அணுகுமுறைகளை இணைத்து ஆராய்வதாக வளர்ச்சி பெற்றுள்ளது. சூசன் பாசுனெட், காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவாக், ஸெர்பிய ஒப்பிலக்கிய ஆய்வாளர் ஏத்ரீயானா மார்ஸெடக் ஆகியோர் புதிய ஒப்பிலக்கிய ஆய்விற்கான அடிப்படையாக பல்துறை ஆராய்ச்சி அணுகுமுறையை முன்மொழிந்துள்ளனர்.பல்துறை சார்ந்த புதிய ஒப்பிலக்கிய ஆய்வில் இத்தாலிய ஆய்வாளரான ஃபிராங்கோ மொரெட்டியின் விலகி வாசித்தலும் அமைப்புக் கோட்பாடும் (Distant Reading and System Theory) அண்மைக் காலத்தில் கவனம் பெறுகின்ற ஒன்றாக விளங்குகிறது. இக்கோட்பாட்டினை விளக்கி அதனைத் தமிழ் நாவல் வளர்ச்சியோடு பொருத்திக் காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.
ஃபிராங்கோ மொரெட்டியின் ஆய்வுகள்
ஃபிராங்கோ மொரெட்டி(Franco Moretti: B. 1950) இத்தாலி நாட்டைச் சேர்ந்த இலக்கிய வரலாற்றாய்வாளர்; இலக்கியக் கோட்பாட்டாளர். ரோம் பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கியங்களில் பட்டம் பெற்ற மொரெட்டி அமெரிக்காவில் உள்ள கொலம்பியா,ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் ஒப்பிலக்கியம் கற்பித்தார். பல்வேறு ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய மொரெட்டி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நாவல் ஆய்வு மையத்தை(2010) உருவாக்கியவர். மொரெட்டி இருநூறு ஆண்டுகால உலக நாவல் இலக்கிய வளர்ச்சியை விரிவான ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ஐரோப்பிய நாவல்களின் நிலப்படத்தொகுப்பு (Atlas of the European Novels:1800-1900: 1998), வரைபடங்கள், நிலப்படங்கள், மரங்கள் – இலக்கிய வரலாற்றின் சுருக்க மாதிரிகள் (Graphs, Maps, Trees – Abstract Models of Literary History:2005) இவ்விரண்டும் இவரது முக்கிய ஆய்வு நூல்களாகும். மட்டுமல்லாது இவரது விலகிவாசித்தல் கோட்பாட்டினை விளக்கும் உலக இலக்கியத்தின் மீதான யூகங்கள் (Conjectures on World Literature) என்னும் கட்டுரையும் இவரது ஆய்வுப்பங்களிப்பில் முதன்மையானது.
விலகி வாசித்தல்
மொரெட்டி அமெரிக்கப் புதுத்திறனாய்வும் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் முன்மொழிந்த நெருங்கி வாசித்தல் (Close Reading) என்னும் உருவவியல் கோட்பாட்டிற்கு எதிராக விலகி வாசித்தல் என்னும் புதிய கோட்பாட்டினை முன்மொழிகின்றார். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாவல்கள் 30,000 எண்ணிக்கை அளவில் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் ஐம்பது, அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் குறித்து எவருக்கும் தெரியாது. எனவே, வாசிக்கப்படாத நாவல்கள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. எனவே, வாசிக்கப்படாத பெரும் இலக்கியப்பரப்பை(Great unread) வாசிப்பது தேவையாகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதியை நெருங்கி வாசிக்கும் பண்பியல்ரீதியான (Qualitative) ஆய்வுக்கு மாறாக பெரும் எண்ணிக்கை அளவினைக் கருத்திற்கொள்ளும் (Quantitative) ஆய்வுப்போக்கினை மொரெட்டி வற்புறுத்துகிறார். மேலும், உருவவியல் பார்வை இலக்கியத்தை வாழ்க்கையிலிருந்து பிரித்து விடுகிறது. இப்பார்வை இலக்கிய ஏற்புக்கும் மதிப்புக்கும் உதவுமே தவிர நடைமுறைப் பயனற்றது என்கிறார். விலகி வாசித்தலின் மூலம் பனுவலைவிட விரிவான அடிக்கருத்துகள், இலக்கிய வகைகள், அழகியற் கூறுகள் என்கிற இலக்கியத்தின் விரிவடைந்த பகுதிகளை நோக்கி ஆய்வினை நிகழ்த்துகிறார். இதன்மூலம், உலக இலக்கியம் என்ற ஒரு பேரமைப்பினை மொரெட்டி கட்டமைக்கின்றார். நெருங்கி வாசித்தலிலும் விலகி வாசித்தலிலும் ஒன்று போலவே பிரதி என்பது காணாமல் மறைந்து போகிறது. நெருங்கி வாசிப்பதைப் ‘புனிதப்பிரதி வாசிப்பாக’ பகடி செய்யும் மொரெட்டி, விலகி வாசித்தலின் மூலம் உலக இலக்கியம் என்ற ஒன்றை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார். ஒப்பிலக்கியத்தில் தேசிய இலக்கியம் பொருளற்றதாகி விட்டது. கோத்தேயும் எங்கல்சும் முன்மொழிந்த உலக இலக்கியம் இப்போது தேவைக்குரிய ஒன்றாகியுள்ளது. உலக இலக்கியத்தின் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு விலகி வாசித்தல் ஒரு முக்கிய அணுகுமுறையாக விளங்கும் என்கிறார்.
உலக இலக்கியம் என்னும் அமைப்பு
மொரெட்டி இலக்கிய வரலாறு எழுதியலை மாற்றுப் பாதையில் திருப்பிவிடுகின்றார். இலக்கிய வரலாறு என்பது உலகளாவிய வரைச்சட்டகத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமென வற்புறுத்துகிறார். உலக இலக்கியம் என்பது ஓர் அமைப்புதான்; ஆனால், அது சமச்சீரற்றதாக இருக்கிறது. உலக இலக்கியம் என்ற அமைப்பிற்குள் மையம்(Core), விளிம்பு(Periphery),அரைவிளிம்பு(Semi –Periphery) என்கிற மூன்று கூறுகள் செயல்படுகின்றன. மையம் என்பது சிறிய குழு; வளர்ச்சியடைந்த இலக்கியக் குழு. பெரும்பான்மையான புதிய இலக்கிய வடிவங்களை, வகைகளை, உத்திகளை இக்குழுவே உற்பத்தி செய்கிறது. விளிம்பு என்பது மிக விரிவடைந்த குழு. ஆனால், இக்குழுவில் உள்ள இலக்கியங்கள் மையக்குழு உற்பத்திசெய்த இலக்கியவகைகளை, வடிவங்களை, உத்திகளைத் தமது மொழிக்குள் போலச்செய்தலின் மூலமும் தழுவலின் மூலமும் கொண்டுவந்து சேர்க்கின்றன. விளிம்புக்குழு இலக்கியங்கள் தமக்கானவற்றை மையக்குழுவின் இலக்கிய மூலதனத்திலிருந்தே எடுத்துக் கொள்கின்றன. அரை விளிம்புநிலைக் குழுவைச்சார்ந்த இலக்கியங்கள் மையத்திலிருந்தும் விளிம்புகளிலிருந்தும் இலக்கியப்பண்புகளைப் பெற்று இலக்கியங்களை உற்பத்தி செய்கின்றன. இவை கலவைத் தன்மை கொண்ட ஒட்டுநிலைக் கொத்து. ஸ்பானிஷ், இத்தாலி, பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்கள் மையக்குழுவைச் சார்ந்தவை. ஆசிய, ஆப்பிரிக்க இலக்கியங்கள் விளிம்புநிலைக் குழுவைச் சார்ந்தவை. ருசிய இலக்கியம் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிப் பயணிக்கும் அரை விளிம்பு நிலை இலக்கியமாக இருக்கிறது. இலக்கிய இணைப்புகளுக்கும் குறுக்கீடுகளுக்கும் இடையில் அதிகாரமும் அசமத்துவமும் நிலவுகிறது. உலக இலக்கியம் என்ற அமைப்பினை உலக மொழிகளிலுள்ள இலக்கியங்கள் தம்முடைய இடையீடுகளாலும் உறவுநிலைகளாலும் கட்டமைக்கின்றன.
உலகப் பொருளாதார அமைப்பும் இலக்கிய அமைப்பும்
உலக இலக்கியம் என்பதனை ஓர் அமைப்பாகக் கருதும் அமைப்புக்கோட்பாட்டினைப் ஃபிராங்கோ மொரெட்டி அமெரிக்க சமூகவியல் பொருளாதார நிபுணர் இம்மானுவேல் மாரிஸ் வாலர்ஸ்டீனின்(Immanuel Maurice wallerstein) உலக அமைப்புகள் கோட்பாட்டிலிருந்து (World Systems Theory)உருவாக்குகிறார். மூன்றாம் உலக நாடுகள் என்ற கருத்தை நிராகரிக்கும் வாலர்ஸ்டீன், ஒரே உலகப் பொருளாதார அமைப்புதான் இருக்கிறது; அது நிதிமூலதனத்தை அடிப்படையாகக் கொண்டது. நிதிமூலதனத்தை மையக்குழு நாடுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவைதான் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. விளிம்புநிலையிலிருக்கும் நாடுகள் உற்பத்திக்கான மூலப்பொருட்களை அதிகாரம் மிக்க மைய நாடுகளுக்கு வழங்குவதோடு மலிவான உழைப்பையும் அவை வழங்குகின்றன. இதன்மூலம் மையம் அதிகாரம் மிக்கதாகவும் விளங்குகிறது. சில நாடுகள், விளிம்பு நிலையிலிருந்து மையத்திற்கு உற்பத்திகான மூலப்பொருட்களை வழங்குவதோடு சில பொருட்களை அவையே உற்பத்தியும் செய்கின்றன. இவை அரை விளிம்புநிலைக் குழுவைச் சார்ந்தவை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் மையக்குழுவைச் சார்ந்தவை. ஏனையவை விளிம்புநிலைக்குட்பட்டவை. தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் விளிம்புநிலையிலிருந்து மையத்தை நோக்கி முன்னேறி அரை விளிம்பு நிலையில் உள்ளன. இவ்வாறு, பொருளாதார அடிப்படையில் உலக அமைப்புகள் கோட்பாட்டை வாலர்ஸ்டீன் கட்டமைத்துள்ளார்.
உலகப் பொருளாதார அமைப்பு ஒன்றாக இருந்தாலும் அது சமச்சீரற்றதாகவும் அசமத்துவமானதாகவும் விளங்குகிறது. அதிகாரமும் அடிபணிதலும் இவற்றிற்குள் தொழிற்படுகின்றன. உழைப்பிற்கும் மூலதனத்திற்குமான போராட்டமும் தொடர்கின்றது. நிதி மூலதனம் அதிகாரம் மிக்கதாகவும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சாராம்சம் மிக்கதாகவும் திகழ்கிறது. வாலர்ஸ்டீனின் உலக அமைப்புக் கோட்பாட்டின் போலச்செய்தலாகவே ஃப்ராங்கோ மொரெட்டியின் உலக இலக்கியங்கள் பற்றிய அமைப்புக்கோட்பாடு விளங்குகின்றது.
வரைபடங்கள் – நிலப்படங்கள்- மரங்கள்
ஃப்ராங்கோ மொரெட்டியின் வரைபடங்கள், நிலப்படங்கள், மரங்கள் என்னும் நூல் நாவல் இலக்கிய வகையின் பரவலையும் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியையும் விரிந்த தளத்தில் கோட்பாட்டு நோக்கில் ஆராய்வதற்கான ஒரு புது தளத்தைச் சமைத்துள்ளது. 1750 முதல் 1950 வரை உலக இலக்கியங்களில் நாவல் வகை எவ்வாறு பயணம் செய்துள்ளது என்பதை இந்நூல் ஆராய்கிறது. ஸ்பானிஷ், இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மையக் குழுவிலிருந்து போலிஷ், துருக்கி, ருசியா, ஜப்பானிய இலக்கியங்களுக்கு நாவல் எவ்வாறு பரவியது என்பதை இந்நூல் விவரிக்கிறது. 1740களில் ஜப்பானிய இலக்கியத்திற்குப் பரவிய நாவல் இலக்கியம் 1940களில் மேற்கு ஆப்பிரிக்க இலக்கியத்திற்குப் போய்ச் சேர்கிறது. நாவல் இலக்கியம் உலகத்தின் எந்த மொழியிலும் தன்னெழுச்சியாக உருவாகவில்லை. மேற்கத்திய மற்றும் உள்ளூர் யதார்த்தம் ஆகியவற்றிற்கிடையிலான சமரசத்தின் அடிப்படையிலேயே நாவல் இலக்கியம் உருப்பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி காலம், வெளி ஆகியவற்றின் அடிப்படையில் நாவல்வகை எவ்வாறு உலக மொழிகளில் வேறுபட்டிருக்கிறது என்பதையும் மொரெட்டி நிறுவுகிறார். இந்த நூலில் பிரிட்டன், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் முறையே கீழ்வரும் காலப்பகுதிகளில் நாவல் எழுச்சி பெற்றிருப்பதை எடுத்துரைக்கிறார்.
1720 – 1740 : பிரிட்டன்
1745 – 1765 : ஜப்பான்
1820 - 1840 : இத்தாலி
1845 - 1860 : ஸ்பெயின்
1965 - 1980 : நைஜீரியா
இந்த ஐந்து காலகட்டத்தில் நிகழ்ந்த நாவலின் எழுச்சியைப் பல்வேறு வரைபடங்களின் மூலம் துல்லியப்படுத்திக் காட்டியுள்ளார்.
மொரெட்டி வரைபடங்கள் வாயிலாக நாவலின் வெளியீட்டு எண்ணிக்கையையும் இந்த நூலில் அளவியல் ரீதியாக துல்லியப்படுத்திக் காட்டுகிறார். பிரிட்டனில் 1710-1850 காலகட்டத்தில் நாவலின் எண்ணிக்கை வளர்ச்சியை வரைபடத்தின் மூலம் விளக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 1750 -1820 காலப்பகுதியில் பிரிட்டனைவிட ஜப்பானில் நாவல்கள் அதிகளவில் வெளிவந்துள்ளதாகச் சுட்டுகிறார். மேலும், 1820 - 1860 காலப்பகுதியில் பிரான்சு, இத்தாலி நாடுகளில் நாவலின் வெளியீட்டு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றார். இதேபோன்று 1800 - 1900 காலப்பகுதியில் பிரிட்டிஷ் ஆங்கிலத்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையையும் வரைபடமாக்கிக் காட்டுகிறார். மேலும் வட்டார நாவல், துப்பறியும் நாவல், புதிய பெண் நாவல், குடும்பநாவல், சமயநாவல், தொழிற்கள நாவல் என 160 ஆண்டுகளில் பிரிட்டனில் 44 நாவல் வகைகள் உருவாகி வளர்ச்சியடைந்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றார். அத்துடன் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடக்ககாலப் பெண் நாவலாசிரியர்களின் எண்ணிக்கையைப் புறந்தள்ளி ஆண் நாவலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் பாலின மடைமாற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.
நிலப்படங்கள் என்னும் பகுதியில் பிரிட்டனில் 19ஆம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் புகழ்பெற்ற கிராமப்புறக் கதை நாவல்களின் வெளியை மிக நுணுக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். 1824 – 1832 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் வெளிவந்த கிராமப்புற நாவல்களின் நிலப்பின்னணியை அவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் புவியியலைத் துல்லியப்படுத்திக் காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட நாவல் எத்தனை மைல்பரப்பை எல்லையாகக் கொண்டு அமைந்திருக்கிறது; எத்தனை விதமான மக்களைப் பற்றிப் பேசுகிறது, எத்தனை தெருக்கள், தேவாலயங்கள், விளையாட்டு மைதானங்கள், விளைநிலங்கள் அவற்றுள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை வரைபடத்தைக் கொண்டு விளக்கிக்காட்டுகிறார். இதன்வழி நாவலின் நிலவியல் அமைப்பை அதன் உட்தொடர்புகளுடனும் சமூகப் புவியியலுடனும் (சான்றாக உழைப்பாளிகளின் உறைவிடமும் இயங்குதளமும்) இணைத்துக் காட்டுகிறார்.
டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையில் நாவலின் உள்ளார்ந்த வளர்ச்சிநிலையினை இந்நூலின் மரங்கள் என்னும் பகுதியில் விளக்குகிறார். மரம் நாவல் இலக்கிய வகைக்குக் குறியீடாகிறது. மரம் விதைநிலையிலிருந்து முளைத்து, கிளை பரப்பி, பூத்துக் குலுங்குவதைப் போல் நாவல் என்னும் இலக்கிய வகை பாத்திரப்படைப்பு, எடுத்துரைப்புத் தன்மையில் (கதைக்கூற்று முறையில்) எவ்வாறு தொடர் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதைச் சமூக வளர்ச்சியோடு இணைத்துக் காட்டுகிறார்.
நாவலின் கதைக்கூற்று முறையில் மடைமாற்றங்கள்
சமூக அமைப்பின் மாற்றத்திற்கேற்ப நாவலின் கதைக்கூற்றுமுறை அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களை மொரெட்டி தனது ஆய்வில் தொடர்புபடுத்தி விளக்குகிறார். சுதந்திரமான மறைமுக நடை (Free indirect style) என்கிற படர்க்கைக் கதைக்கூற்று முறை (எடுத்துரைப்பியல் கருவி) 19, 20ஆம் நூற்றாண்டு ஆங்கில, பிரெஞ்சு நாவல்களின் வாயிலாக பிற ஐரோப்பிய நாட்டிலக்கியங்களுக்கு புலம்பெயர்ந்து எவ்விதமான உள்ளார்ந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறார். மேலும் இந்த எடுத்துரைப்பியல் கூறு பிற ஐரோப்பிய, உலக இலக்கியங்களில் எவ்வாறு உள்ளூர் மரபுகளுக்கேற்ப மாற்றம் அடைந்துள்ளது என்பதையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்த ஒப்பீட்டு முறையியலை ஒப்பீட்டு உருபனியல் (Comparative Morphology) என்று அவர் அழைக்கிறார்.
19ஆம் நூற்றாண்டில் ஜேன் ஆஸ்டினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சுதந்திர மறைமுகக் கூற்றானது மேற்கு ஐரோப்பாவில் ஃப்ளாபர்ட், ஜோலா ஆகியோரின் நாவல்களில் மேலும் வளர்ச்சி பெற்றதாகச் சுட்டிக் காட்டுகிறார். எடுத்துரைப்பாளர்களும் கதைமாந்தர்களும் இணைந்துள்ள நேரடி மற்றும் மறைமுகச் சொல்லாடலைக் கொண்ட இந்தக் கூற்றுமுறையானது இருபதாம் நூற்றாண்டில் சார்லஸ் பாலியின் நாவல்களில் புதிய உத்திக்கூறுடன் மாறுபடுகிறது. அதாவது, புறவயமாகக் கூறுகின்ற மறைமுகக் கூற்று அகவயமாக உருமாறுகின்றது.
ருசிய நாவல் இலக்கியத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளில் இந்த மறைமுகக் கூற்று இன்னொரு மடைமாற்றத்தைப் பெறுகிறது. அங்கு பிற மக்களின் வார்த்தைகள்– குரல்கள் கவனப்படுத்தப்பட்டு நாவல் பல்குரல்தன்மை கொண்டதாக மாறுகிறது. முன்னிலைக் கூற்று முதன்மை பெறுகிறது. பக்தீனின் முன்னிலைக் கூற்றை முதன்மைப்படுத்தும் உரையாடலியம் தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் காணாமல் போய், ஆழ்மன அடுக்குகளின் உளவியல் வாழ்க்கைக்குள் தன்மைக் கூற்றுக்குள் போகிறது. இந்த தன்மைக் கூற்றை ஜேம்ஸ் ஜாய்ஸ் தனது யூலீசஸ் நாவலில் நனவோடை உத்தியாக மாற்றுகிறார். இறுதியான மாற்றமாக இலத்தீன் அமெரிக்க நாவல்களில் இந்த படர்க்கை எடுத்துரைப்பியல் தன்மைக்கூற்று அகமனக் குரலாக உருமாற்றம் பெறுகிறது. பிரெஞ்சு கயானாவில் நாவல் எடுத்துரைப்பாளர்கள் அவர்களது சொந்தச் சமூகத்திற்காகப் பேசுகிறார்கள். எடுத்துரைப்பு என்பது உள்நோக்கிப் பார்ப்பதாக இல்லாமல் கூட்டுச்சொல்லாடலாக அமைகிறது.
அமைப்புக் கோட்பாடும் இந்திய நாவல் வளர்ச்சியும்
அமைப்புக் கோட்பாட்டின் வாயிலாக இந்தியச் சூழலில் நாவல் இலக்கிய வகையின் பரவலையும் வளர்ச்சியையும் ஆராய்கின்றபோது இந்திய நாவல்கள் இரண்டு மையக் குழுக்களிலிருந்து இலக்கிய மூலதனத்தைப் பெற்றுள்ளன. ஒன்று உலக இலக்கியங்களுக்கு இலக்கிய மூலதனத்தை வழங்கும் இத்தாலி, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மையக் குழு. மற்றொன்று மேற்கத்திய இலக்கிய மூலதனத்தின் வழி புதிய இலக்கிய வகைகளை இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கி முன்னோடியாகத் திகழும் வங்க இலக்கியம். இந்தியச் சூழலில் வங்க மொழியில்தான் முதன் முதலில் நாவல் மற்றும் சிறுகதைகள் உருப்பெற்றன. வங்க இலக்கியம் ஐரோப்பிய இலக்கியத்தோடு ஒப்பிடும்போது விளிம்புக் குழுவைச் சேர்ந்தது. ஆனால் இந்திய இலக்கியங்களைப் பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் வங்க இலக்கியம் பிற இந்தியமொழி இலக்கியங்களுக்கு இலக்கிய மூலதனத்தை வழங்கும் மையமாகத் திகழ்ந்தது. பங்கிம் சந்திரரும் தாகூரும் புதிய இந்திய இலக்கிய வகைகளுக்கு, இலக்கிய வடிவங்களுக்குவும் முன்னோடிகளாகவும் களம் சமைத்தவர்களாகவும் விளங்குகின்றனர்.
இந்திய நாவல்களின் உருவாக்கத்திற்கு சர் வால்டர் ஸ்காட் மட்டுமின்றி பங்கிம் சந்திரரும் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். ஸ்காட்டின் சாகசக் கற்பனை நாவலும் பங்கிம் சந்திரரின் வரலாற்று சாகசக் கற்பனை நாவலும் இந்திய மொழிகளில் வெளியான தொடக்க நாவல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்தியச் சூழலில் ஐரோப்பிய மையக் குழுவில் இருந்து நாவல் வடிவத்தைப் பெற்று அவர்தம் சொந்த மொழியில் எழுதாமல் மையக் குழுவில் உள்ள ஆங்கில மொழியில் எழுதியதை இந்தியச் சூழலில் காண முடிகிறது. இந்தியாவில் நாவல் இலக்கிய வகையினை முதலில் அறிமுகப்படுத்திய பங்கிம் சந்திரர் தனது முதல் நாவலை (Rajmohan's Wife -1864) ஆங்கில மொழியில் எழுதி ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்து (Indian writing in English) முறையைத் தொடங்கி வைத்தார். வங்க மொழியில் அதற்கடுத்த ஆண்டில் (1865) துர்க்கேச நந்தினி எனும் நாவலை எழுதி வெளியிட்டார். இந்திய மொழிகளில் முதலில் வெளிவந்த நாவல் இதுதான் என்று வைத்துக் கொண்டால் இந்திய மொழிகளில் நாவல் இலக்கியத்தின் பரவல் 1930ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது. இந்த ஆண்டில் மணிப்பூரில் மெய்தி மொழியில் 'மாதவி' என்றொரு நாவல் வெளிவந்துள்ளது. இதனை லம்பம் கமல் என்பவர் எழுதியுள்ளார்.
தொடக்ககால இந்திய நாவல்கள் ஐரோப்பிய நாவல் வடிவத்தைத் திருத்தம் செய்தும் சீரமைத்துமே தம்மை வடிவமைத்துள்ளன; தகவமைத்துக் கொண்டுள்ளன. சான்றாக தசகுமார சரிதம், ஹர்ஷ சரிதம் முதலான சரித்திர கதைக்காவியங்களை நினைவூட்டும் வகையிலேயே பெரும்பாலான தொடக்ககால இந்திய நாவலின் தலைப்புகளும் உள்ளடக்கங்களும் அமைந்துள்ளன. சான்றாக இந்திய மொழிகளில் முதல் நாவல்களான துர்க்கேச நந்தினி, கபால குண்டலை (வங்கம்), குந்தலதா, மார்த்தாண்ட வர்மா(மலையாளம்) முதலியன பழைய வரலாற்றைக் கதைப்பொருளாகக் கொண்டவை. சரிதம் என்ற பழைய இந்திய வகையை நினைவூட்டும் வகையில் பல தொடக்ககால இந்திய நாவல்கள் சரித்திரம் என்ற பெயரைத் தாங்கி வெளிவந்துள்ளன. பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் (தமிழ்), ஸ்ரீரங்கராஜூ சரித்திரம், ராஜசேகர சரித்திரம் (தெலுங்கு). ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தொடர்ந்து ஆண்ட மன்னர்களின் வரலாற்றை நாவலாக எழுதுவதையும் இந்திய நாவல்களில் காண முடிகிறது. இவ்வகையில், வங்க நாவலாசிரியரான ரமேஷ் சந்திரதத் எழுதியுள்ள மகாராஷ்டிர ஜீவன் பிரபாத்(1871), பங்க விஜதா(1874), மாதவி கங்கண்(1877) ஆகிய மூன்று நாவல்களும் தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்ட மூன்று மொகலாய அரசர்களான அக்பர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோரின் வரலாற்றுப் பின்புலத்தை அவர்கள் ஆண்ட காலத்தைப் பதிவு செய்துள்ளன. இம்மூன்று நாவல்களும் பின்னர் சத வருஷம் (நூறாண்டுகாலம்) என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டன. இதேபோன்று திருவிதாங்கூரைத் தொடர்ந்து ஆண்ட மூன்று மன்னர்களின் வரலாற்றை சி.வி.ராமன்பிள்ளை மார்த்தாண்ட வர்மா(1891), தர்மராஜா (1913), ராம, ராஜபகதூர்(1919) ஆகிய நாவல்களில் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். எனவே, நாவல் என்ற நவீன இலக்கிய வடிவம் இந்தியச் சூழலில் பழைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் அதன்வழி தேசியவுணர்வை (இந்திய/வட்டார) எழுச்சி பெறச் செய்வதற்கும் உதவியுள்ளன. மேலும், நாவலைப் பிரபந்தம் என்ற பழைய இலக்கிய வகையோடு இணைத்துப் பேசுகிற தன்மையினைக் காண முடிகின்றது. தெலுங்கின் முதல் நாவலான ஸ்ரீரங்கராஜூ சரித்திரத்தை எழுதிய நரஹரி கோபால கிருஷ்ணம செட்டி தனது நாவலை ‘வசன பிரபந்தம்’ என்றே அழைத்தார்.
தொடக்ககால இந்திய நாவல்களின் தலைப்புகள் மிக நீண்டதாக இருப்பதை நாம் கவனிக்க முடிகிறது. அத்துடன் சில நாவல்கள் இரட்டைத் தலைப்புகள் கொண்டதாகவும் இருக்கின்றன. தமிழில் கமலாம்பாள் சரித்திரம், ஆபத்துக்கிடமான அபவாதம் என்று ஒரு துணைத்தலைப்பைப் பெற்றிருப்பதைப் போல தெலுங்கின் முதல் நாவல் ஸ்ரீரங்கராஜூ சரித்திரம் 1872, ஸோனாபாயி பரிணயம் என்ற மற்றொரு துணைத்தலைப்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்திய நாவல்கள் அவற்றுக்கான எடுத்துரைப்பு வடிவத்தை காப்பியங்களிலிருந்தும் கதைப்பாடல்களிலிருந்தும் பெற்றுள்ளன. சான்றாக தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் காப்பியங்கள் போல கிளைக்கதைகள் இடம் பெற்றுள்ளன. அற இலக்கியத்தைப் போன்று நீதியுணர்த்தும் பாங்கு மேலோங்கி நிற்கிறது. ஸ்காட்டின் சாகசக் கற்பனைப் பண்பு பிரதாப முதலியார் சரித்திரத்தில் இந்திய - தமிழ் வண்ணம் பெற்றுக் காட்சி அளிக்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் காணப்படும் கதைக்கூற்று முறைக்கும் விடுதலைக்குப் பின்தோன்றிய நாவலான மலரும் சருகும் நாவலின் எடுத்துரைப்பிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனிக்கத்தக்கன.
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய நாவல் தனக்கான இலக்கிய மூலதனத்தை ருசியமொழியிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளது. மக்ஸீம் கோர்க்கியின் தாய் நாவல் அறிமுகத்தின் காரணமாக சோசலிச யதார்த்தவாத நாவல் என்கிற புதிய நாவல் இலக்கியவகை இந்திய இலக்கியத்தில் உருப்பெற்றது. உலகநாவல் இலக்கிய உருவாக்கத்தில் விளிம்புநிலையில் இருந்த ருசிய நாவல் மையத்தை நோக்கி முன்னேறி விளிம்புநிலை இந்திய நாவல்களுக்கு இலக்கிய மூலதனத்தை வழங்கியுள்ளது. சோசலிச யதார்த்தவாத நாவல் வகையின் அறிமுகத்தின் காரணமாக இந்திய நாவல்களின் எடுத்துரைப்பு முறையில் அதாவது கதைக்கூற்று முறையில் மாற்றம் நிகழ்ந்தது. நாவலாசிரியர் நேரடியாகக் கதைசொல்லும் முறைமையில் இருந்து விலகி சுதந்திரமான மறைமுகப் படர்க்கைக்கூற்று முறை செல்வாக்குப் பெற்றது.
இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் சுவாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு சத்தியபுரி என்னும் ஊரிலே, தொண்டை மண்டல முதலிமார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் இந்தத் தேசத்தை ஆண்ட நவாபுகளிடத்தில் திவான் உத்தியோகஞ் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூஸ்திதிகளையும் சம்பாதித்தார் (பிரதாப முதலியார் சரித்திரம்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
‘என்னலே, சுதந்திரம் வந்துட்டா மேல்குலம் கீழ்குலமிங்கிறது எல்லாம் இல்லாம போயிருமோ? காலை இணுங்கிக் கையிலே குடுத்துப்போடுவோம். எச்சரிக்கையா புழைச்சுக்கங்க’ மாடசாமிக் குடும்பனைப் பார்த்து இவ்வாறு உறுமிவிட்டு மீசையைத் தடவிவிட்ட வண்ணம் நின்றார் மூக்கையாத்தேவர். (மலரும் சருகும்: டி.செல்வராஜ்)
மேற்காட்டிய இரண்டு நாவல்களின் தொடக்கங்கள் அதன் கதை விவரணை முறையிலும் உள்ளடக்கத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைச் சுட்டி நிற்கின்றன. பிரதாப முதலியார் சரித்திரம் கதைத்தலைவனின் தன்மைக்கூற்றாக விரிந்துசெல்ல, மலரும் சருகும் இருவரின் உரையாடலாக விவரணை செய்யப்பட்டுள்ளது. கதைக்கூற்று முறையிலுள்ள இந்த மாற்றம் சமூக மாற்றத்தோடு இணைந்தே நிகழ்ந்துள்ளது. தொடக்ககால நாவல்களில் கருத்தியல் சார்பில்லாத கதைமாந்தர்களையும் விடுதலைப் போராட்ட காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கதைமாந்தர்கள் கருத்தியல் சார்பு கொண்டவர்களாகவும் பொதுமக்கள் மற்றும் நாவலாசிரியரின் அபிப்ராயங்களை வெளிப்படுத்துகின்றவர்களாகவும் திகழ்கின்றனர். தமிழ் நாவல்களின் கதைக்கூற்று முறையின் பரிணாம வளர்ச்சி தனித்த ஒரு ஆய்வுக்குரியது.
முடிவுரை
ஃபிராங்கோ மொரெட்டியின் அமைப்புக் கோட்பாடு உலக இலக்கியங்களை விரிந்த தளத்தில் ஆராய்வதற்கான அடிப்படையை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட இலக்கியப் பனுவல்களின் நுண்ணியக் கூறுகளின் ஆழங்களுக்குச் செல்லாமல் இலக்கியங்களின் மேற்பரப்பில் அதிகக் கவனம் செலுத்தும் விலகி வாசித்தலின்வழி ஒட்டுமொத்த உலக இலக்கியப் பரப்பு ஆய்வுக்குரிய களமாக மாறுகின்றது. இத்தகைய விசாலப் பார்வையில் இலக்கியங்களின் பொதுக்கூறுகளும் விரிந்த கட்டமைப்பும் கவனப்படுத்தப்படுகின்றன. இதன் வழியாக உலகப் பொதுவான இலக்கியக் கொள்கையை உருவாக்கவும் உலக இலக்கிய வரலாற்றை எழுதவும் முடிகிறது. அத்துடன் குறிப்பிட்ட இலக்கிய வகையின் உலகப் பயணத்தையும் பரவலையும் கண்டறிய முடிகிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையின் உலகப் பயணத்தில் உள்ளூர் மரபுகளின் குறுக்கீடுகளும் இணைப்புகளும் அவ் இலக்கிய வகை பண்பாட்டுமயமாக்கலுக்கு உள்ளாகி உள்ளூர் வண்ணம் பெறுவதையும் ஆராய இயலும். மொரெட்டியின் அமைப்புக் கோட்பாடு இலக்கியம் பற்றிய பெருங்கதையாடலாகத் திகழ்கிறது. விலகி வாசித்தல் மற்றும் அமைப்புக் கோட்பாடு வழி மொரெட்டி நாவல் எனும் நவீன இலக்கிய வகையின் சகல விதமான பரிமாணங்களையும் ஆராய்வதற்கான பெரும் வாயிலைத் திறந்து விட்டிருக்கிறார்.
துணைநூற்பட்டியல் :
தமிழ்
1. செல்வராஜ், டி, மலரும் சருகும், சித்திரை நிலவு புத்தக வெளியீட்டாளர், மதுரை, 2023.
2. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்திரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2014
3. சுகுமார் சென், பெ.நா.அப்புஸ்வாமி(தமிழில்), வங்க இலக்கிய வரலாறு, சாகித்திய அகாதெமி, புதுதில்லி, 2019.
4. ஆனந்தகுமார்,பா., டி.எஸ்.கிரிபிரகாஷ், தெலுங்கு இலக்கிய வரலாறு, பார்த்திபன் பதிப்பகம், மதுரை,1987.
மலையாளம்
5. எரிமேலி பரமேஸ்வரன் பிள்ளை, மலையாள சாகித்தியம் காலகட்டங்களினூடே, பார்த்திபன் புக்ஸ், மாவேலிக்கர, 2003.
ஆங்கில நூல்கள்
6. Adrijana Marcetic,After Comparative Literature, Institute for Literature and Art, Bangalore, 2018, Greta Goetz(in English).
7. Carolyn Lesjak, ‘‘All or Nothing: Reading Franco Moretti Reading’’ , A review of Distant reading and the Bourgeouis: Between History and Literature by Franco Moretti, Historical Materialism, 24.3(2016) pp.185- 205.
8. Frank Jacob,(ed.,) wallerstein 2.0, Transcript Verlag, Bielefeld, 2023.
9. Franco Moretti, Graphs, Maps, Trees – Abstract Models for Literary history, Verso, London, New York, 2007
10. Franco Moretti, “Conjectures on world literature’’, New left Review, Jan- feb 2000.pp.54-68
- முனைவர் பா.ஆனந்தகுமார், முதுநிலைப் பேராசிரியர் & தலைவர், தமிழ்த்துறை, தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.