ஓரு நாட்டின் வளர்ச்சியை ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தை அளப்பதற்கு பல அளவுகோல்கள் உள்ளன. தொழில் மேம்பாடு, கல்வி வளர்ச்சி, விவசாயத்தில் மறுமலர்ச்சி, தனிநபர் வருமானம், வேலை வாய்ப்பு என்று பல அம்சங்களால் தேசிய வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.
அவற்றோடு ஒரு முக்கிய கணக்கெடுப்பு அவசியப்படுகிறது. ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் எத்தனை நூல்கள் புதிதாகப் பதிப்பிக்கப்படுகின்றன என்பதைக் கணக்கெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளில் வெளியான புதிய நூல்களின் எண்ணிக்கை பற்றி இணையத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை அதிகாரப்பூர்வமாக அந்தந்த நாடுகளின் அரசுகள் முறையாக வெளியிடவில்லையாயினும் ஆர்வமுள்ள தனியார் அமைப்புகளும் பதிப்புலகு ஆய்வாளர்களும் ஆங்காங்கு வெளியிட்டுள்ளன.
அப்படியான கணக்கெடுப்பில் அமெரிக்காவில் 2013 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புதிய நூல்களின் எண்ணிக்கை 2,75,232, ஜெர்மனியில் 2022 ஆம் ஆண்டு 71,524, பிரான்சில் 2018இல் 1,06,779, சீனாவில் 2013 இல் 2,08,418 - இங்கிலாந்தில் 2018ல் 1,88,007, ஜப்பானில் 2019 இல் 1,39,038 என்று புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 2013 கணக்குப்படி 90,000 புதிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இவை பற்றியான ஆழமான துல்லியமான ஆய்வு தேவைப்பட்டாலும் இணையத்தில் வெளியாகியுள்ள புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தொடக்கத் தரவுகளாக இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றுள் புதிய நூல்கள் மட்டுமல்லாது மறுமதிப்பு நூல்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இவை தொடர்பான கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்புலத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 4000 புதிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படலாம் என்று பதிப்பாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இன்னும் இந்த எண்ணிக்கை பற்றியான துல்லியமான கணக்கு யாரிடமும் இல்லை எனினும் குறைவான எண்ணிக்கையில்தான் தமிழ்நாட்டில் புதிதாகப் பதிப்பிக்கப்படும் நூல்கள் வெளிவருகின்றன என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொள்கின்றனர்.
அவற்றுள்ளும் மிகவும் தரமான, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, அறிவுச் செல்வத்தை அள்ளித் தரக்கூடிய சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்குமான நெம்பு கோல்களாக விளங்கக் கூடிய, தனி மனிதர்களை மேம்படுத்துகிற, உலக அறிவை அரிதின் முயன்று ஊட்டுகிற, மக்களின் மனதைப் பண்படுத்துகிற நூல்கள் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் எத்தனை பதிப்பிக்கப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் வெளிவருகிற நூல்களுள் நான்கில் ஒன்றுதான் அத்தகைய இலக்கணத்திற்குள் வரும் என்பதில் சந்தேகமில்லை, அவை இன்னும் குறைவான அளவில் இருக்கும் சாத்தியமும் உண்டு. தமிழ்நாட்டில் வெளிவரும் புதிய நூல்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்க வேண்டும். அவற்றுள்ளும் தரமும் தகுதியும் மிக்க நூல்களின் எண்ணிக்கை மேம்பட மேம்படத்தான் அவற்றை வாசிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை உயர உயரத்தான் சமூக முன்னேற்றமும் மாற்றமும் சாத்தியப்படும்.
புத்தக வாசிப்பே சமூக மாற்றத்தை உருவாக்கிவிடாது என்ற போதிலும் புத்தக வாசிப்பு இல்லாமல் சமூக மாற்றம் இல்லை என்பதையும் வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு