தமிழ்நாட்டில் நிலவிய கல்வி நிலை குறித்துப் பல ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்துள்ளன என்பது உண்மைதான். ஆயினும், விரிவான விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளனவா என்பது இன்னும் பெரும் வினாவாகவே நீடித்து வருகிறது.
பண்டைத் தமிழகத்தில் கல்வி விரிவாக மக்களிடம் பரவி இருந்தது என்பதற்கான சான்றுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. வெவ்வேறு பகுதிகளில், வேறுபட்ட இடங்களில் நடைபெற்ற பல அகழ்வாய்வுகளில் அகப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பானை ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், தமிழ்நாட்டில் பரவலாக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான அடிப்படைச் சான்றுகளாக அமைகின்றன என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதனையடுத்து, பழந்தமிழ்ப் பாடல்களிலும் அடுத்தடுத்து எழுந்த இலக்கியங்களிலும் கல்வியின் மேன்மை சிறப்பிக்கப்படுகிறது. 'கற்றல் நன்றே' என வலியுறுத்தும் புறநானூறும், எண்ணையும் எழுத்தையும் போற்றும் திருக்குறளும் இன்னும் நாலடியார் உள்ளிட்டுப் பின்னர் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள், ஏதாவதொரு வகையில் கல்வியின் பெருமையை எடுத்துக் காட்டியிருக்கின்றன.
இருப்பினும், கல்வி முறை, பாடத்திட்டங்கள், கற்பிக்கப்பட்ட பாடங்கள், ஆசிரியர்கள், பயின்ற மாணவர்கள், பள்ளிகளை நடத்தியோர், அவற்றுக்கான உதவியை நல்கியோர், கற்பிக்கப்பட்ட இடம், யாருக்கான கல்வி, எத்தகைய கல்வி என்பன போன்ற பல விவரங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது.
இவற்றுடன், இத்தகைய கல்வியில் அன்றைய சமூகம் பெற்ற ஆக்கம், அன்றைய சமூக உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் அந்தக் கல்வியின் பங்களிப்பு, வெவ்வேறு சமூகப் பிரிவுகள் நுட்பப் பயிற்சி பெற்ற வகை ஆகியனவும் தெரியவில்லை. குறிப்பிட்ட காலத்தில் மக்கள் திரள் பெற்றிருந்த அறிவு, நுட்பம் போன்ற செல்வங்களை அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்கக்கூடியவாறு கல்வி முறை அமைந்திருந்ததா என்பதும் ஆய்வு செய்யப்படவில்லை.
கற்றல் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் பண்டைய தமிழ் மக்கள் தெளிவான புரிதல்களைக் கொண்டிருந்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல்பால் ஒருவனும் அவன்கண் படுமே (புறநா. 183)
என்ற பாடல், கற்றல் எனப்படும் எண்ணும் எழுத்துமாகிய கல்விக்குப் புதிய நுட்பங்களை அறிதல் என்னும் மேம்பட்ட பொருளினைத் தருகிறது. ஓர் இனக்குழு, தனக்குத் தெரியாத அறிதல்களை எங்கிருந்தாலும், எப்படியாயினும், வாழிட வேறுபாடின்றிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய கல்வி, தாயிலிருந்து மன்னர் வரை அனைவராலும் போற்றப்படும் என்பதும் எடுத்துரைக்கப்படுகிறது. கற்றலில் மனித இனம் எதிர்பார்க்கக்கூடிய அனைத்தையும் இந்த ஒரு பாடல் விளக்கி விடுகிறது எனலாம். பின்னர் வந்த இலக்கியங்களில் இவ்வளவு நுண்ணிய விவரங்கள் கூறப்படவில்லை என்றாலும், கல்வியின் மேன்மைகள் குறிக்கப்படுகின்றன.
ஆயினும், இடைக் காலத்தில் நிலவிய கல்வி குறித்த விவரங்கள், ஒரு சில கலவெட்டுக்கள் குறிக்கின்ற வேதங்கள் உள்ளிட்ட பார்ப்பனர் பள்ளிகளோடு நின்றுவிட்டன. அன்றைய உடைமையினரின் அறிதல்கள், நில அளவைகள், வேளாண் உற்பத்திக் கட்டமைப்புகள், கோயில் கட்டிட வளர்ச்சி உள்ளிட்ட நுட்பங்கள் எவ்வாறு கற்றுக் கொள்ளப்பட்டன என்பன போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை.
இந்த வகையில், அறிஞர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் எழுதிய ‘தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் : தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை, மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப் பரிமாணங்கள் (1567 – 1887)’ என்னும் நூல் குறிப்பிட்ட காலப் பகுதியில் ஏற்பட்டிருந்த கல்வி நிலைமைகளை விரிவான விவரங்களுடன் பதிவு செய்திருக்கிறது.
இதனை ஒரு நூல் என்று கூறி முடித்து விடுவதைவிட, ஆவணங்களின் முழுமையான தொகுப்புகளுடன் கூடிய விரிவான ஆய்வு நூல் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
நூலாசிரியரே குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, தமிழ்நாட்டில் அய்ரோப்பிய வருகையினை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்த கல்வியின் போக்குகளும் அவை அன்றைய மக்கள் திரளில் ஏற்படுத்திய தாக்கங்களும் இது வரை முழுமையாகக் கொண்டுவரப்படவில்லை என்பது உண்மைதான். இதனை நிறைவு செய்யும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்டு, இந்திய ஒன்றியத்தின் இன்ன பிற ஆவணக் காப்பகங்களிலிருந்து மட்டுமின்றி, இங்கிலாந்து, பிரான்சு, டென்மார்க், போர்ச்சுக்கல், செர்மனி, இத்தாலி போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் ஆவணத் தரவுகள் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தமிழுடன், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுக்கீசு, செர்மன் ஆகிய மொழிச் சான்றுகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. அரசு ஆவணங்கள், கிருத்துவப் பரப்பாளர்கள் எழுதிய மடல்கள், அறிக்கைகள், தனியார் குறிப்புகள் என்ற அளவிலும் எதையும் இந்த நூலாசிரியர் விட்டுவைக்கவில்லை. ஆங்கிலச் சமயப் பரப்பாளர்களின் கல்வி, சமயப் பரப்பு முயற்சிகள் பல ஆய்வாளர்களால் விரித்துக் கூறப்பட்டிருப்பினும், பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, டச்சு, செர்மன் சமயப் பரப்பாளர்களின் பங்களிப்புகள் வெளிவராமல் இருந்தன. அவற்றையும் இந்த நூல் முழுமை செய்திருக்கிறது.
ஒரு நிறுவனம், பல அறிஞர்களைக் கொண்டு செய்யவேண்டிய அரிய பணிகளைத் தனியொருவராக நின்று ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் தொகுத்தும் பகுத்தும் தந்திருப்பது போற்றத்தக்க முயற்சியாகும்.
மேலோட்டமாகக் கூறிச் செல்லாமல் கல்வி கற்பித்த ஆண்டு, இடம், கற்றல் விவரங்கள், மகளிர் உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர், துணை நின்றோர், சமூகப் பிரிவுகளின் பங்கேற்பு, கிருத்துவ அமைப்புகளின் எதிர்பார்ப்புகள், ஆங்கில, பிரெஞ்சு, போர்ச்சுக்கல், டச்சுக்காரர் போன்ற ஆட்சியாளர்களின் முயற்சிகள் என விவரங்கள் அடுக்கடுக்காக அள்ளித் தரப்பட்டுள்ளன. தரவுகளோடு நின்றுவிடாமல், அன்றைய நிலையில் கல்வி ஏற்படுத்திய புதிய மாறுதல்கள், எதிர்கொண்ட எதிர்ப்புகள், ஏற்றுக்கொண்ட எதிர்பார்ப்புகள் என நூல் விரிகிறது.
'முன்னுரை: காலனிய மற்றும் வரலாற்றுச் சூழலில் தமிழகத்தில் கல்வி' என்ற முதல் இயலில், தமிழகத்தில் நிலவிய கல்வி தொடர்பான முயற்சிகளும் நூலின் நோக்கங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இயல், கி.பி. 500 முதல் 1500 வரையிலான தமிழகக் கல்வி முறைகள் தமிழர் பண்பாட்டுடன் எப்படி இணைந்திருந்தன என்பது சற்று விரிவாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பார்ப்பனக் கல்வி வேதப் பள்ளிகளாகத் தொடர்ந்தன. பார்ப்பனரில்லாத பள்ளிகளாக அன்று நடைமுறையில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் குறித்து விரிவாகவே கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திண்ணைப் பள்ளிகளின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று கூட்டல். கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட எண்களின் அறிவைப் பெருக்குவதாகும். சோழப் பேரரசர் முதலாம் ராசராசன் காலத்தில், ஒன்றின் பகுதிகள்கூட நுட்பமாகப் பிரிக்கப்பட்டிருந்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், இளைஞர்கள் கடவுள் நம்பிக்கை, அறம் தொடர்பான இலக்கியங்களையும் பாடல்களையும் படித்தனர். இந்த நிலையின் தொடர்ச்சி, அண்மைக் காலம் வரை ஊர்ப்புறங்களில் இருந்து வந்ததை அறியலாம்.
அடுத்து வரும் 11 இயல்களில், அய்ரோப்பியரின் கல்வி முயற்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டு, நாள், இடம் சமயம், ஆட்சியாளர், மாணவர், ஆசிரியர், படித்த பாடங்கள் ஆகியன விவரங்களுடன் வரிசைப்படுத்தப்படுகின்றன. கத்தோலிக்கம், புராட்டஸ்டண்ட், லூத்தரன் போன்ற சமயப் பரப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தாம் கல்வி கற்பித்தலின் தொடக்கமாக அமைந்திருந்தன. இதனைப் போன்றே ஆங்கில, பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, டச்சு நாட்டினர் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ்ப் பகுதிகளில் நிகழ்ந்த கல்வி முயற்சிகளும் அவற்றுள் உள்ளடங்கியிருக்கின்றன. 14ஆவது இயலில் முடிவுரையாக நூலின் நடுவக் கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சென்னை, தரங்கம்பாடி. புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற கடற்கரைப் பகுதிகளில்தாம் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், வேலூர் போன்ற பிற பகுதிகளுக்கும் கல்வி முயற்சிகள் அடுத்தடுத்து விரிவடைந்தன.
இவர்கள் அனைவருடைய அடிப்படையான நோக்கம் தமிழர்களைத் தங்கள் சமயப் பிரிவுகளுக்குச் சமய மாற்றம் செய்வதுதான். அதற்காக அவர்களுக்கு முதலில் வேண்டப்பட்டது தொடர்பு மொழி ஒன்று. சமயப் பரப்பாளர்களாகத் தமிழகப் பகுதிகளுக்கு வந்து உள்ளூர் மொழியினைக் கற்றுக் கொண்டு, சமயப் பரப்பும் சமய மாற்றமும் செய்வது அப்போது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மொழியினைக் கற்றுக்கொள்ளும் நீண்ட கால அளவுடன், பரப்பாளர்களின் எண்ணிக்கையும் அப்போது குறைவாகவே இருந்தது. இதனால்தான், தொடக்கக் கல்வியில் தொடங்கித் தமிழ்வழிக் கல்வியுடன் சமயப் பாடங்களையும் புகுத்தித் தங்கள் மொழியினைக் கற்றுக் கொடுக்கும் பணியினை அவர்கள் மேற்கொண்டனர். மேலும், கிருத்துவத்துக்கு மாறிய இல்லத்தினரின் குழந்தைகளுக்கும் சமயக் கல்வியின் ஊடாகத் தமிழ்க் கல்வி தரவேண்டிய நிலை இருந்தது. இத்துடன், பெரியோரைச் சமய மாற்றம் செய்வதைவிட இளைஞர்களைக் கவர்வது எளிதாக இருந்தது. எடுத்துக்காட்டாக, 1709ஆம் ஆண்டில் தரங்கம்பாடி லூத்தரன் பிரிவினர் நடத்திய பள்ளியின் கால அட்டவணையில் காலை 6 மணி முதல் 11 மணி வரை சமயம் தொடர்பான கல்வியே வழங்கப்பட்டது தெரிகிறது. அத்துடன், பகல் 1 மணியிலிருந்து 4 மணி வரை போர்ச்சுக்கீசிய மொழிப் பயிற்சியும் தரப்பட்டிருக்கிறது (பக்கம் 155). 1878ஆம் ஆண்டின் பள்ளிப் பாட முறையில், சமயம் தொடர்பாக 5 மணிக் காலமும் ஆங்கிலத்திற்கு 7 மணியும் தமிழுக்கு 5 மணியும் நேர கால அளவும் ஒதுக்கப்பட்டதை அறியலாம் (பக். 97).
அன்றைய அளவில் வேறொரு வேண்டலும் அவர்களை நெருக்கியது என்று கூற வேண்டும். அய்ரோப்பியர் பெருமளவில் வணிகம், மேலாண்மை, சமயப் பரப்பு, படைகளில் பங்கெடுப்பு போன்ற பணிகளுக்காகத் தமிழகத்தில் வந்து குவிந்திருந்தனர். இவர்களுடைய இல்லக் குழந்தைகளுக்கு அய்ரோப்பியக் கல்வியளிக்கும் கடமையும் ஏற்பட்டுவிட்டது. சமயப் பரப்பாளர் நடத்திய பள்ளிகளில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கையும் இதனை உறுதிப்படுத்தும். புதுச்சேரியில் இருந்த ஒரு கல்லூரியில் 1879ஆம் ஆண்டு பின்வரும் வகையிலான மாணவர்கள் படித்தனர் என்பதை நூலாசிரியர் குறிக்கிறார்: இந்தியக் கிருத்துவர் 48, பிற கிருத்துவர் 79, பறையர் கிருத்துவர் 8, இந்துக்கள் 6. கூட்டளவான 141இல் 79 மாணவர் அய்ரோப்பியராக இருந்துள்ளனர்.
கிருத்துவப் பிரிவினர் தங்களது சமயத்துக்கு மக்களை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. நாகப்பட்டினத்தில் கிருத்துவர் நடத்திய பள்ளியினை 11-09-1846 அன்று தீயிட்டு எரித்திருக்கிறார்கள். இது கிருத்துவச் சமய மாற்றத்துக்கான எதிர்ப்பா அல்லது கீழ்த்தட்டு மக்களைத் தங்கள் பிடிக்குள் கொண்டிருந்த உடமைப் பிரிவினரின் எதிர்ப்பா என்பது தெரியவில்லை.
சமய மாற்றத்துக்கான முயற்சியாகப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அன்றைய சமூகத்தில் பல மாறுதல்கள் உருவாவதற்கும் இந்தக் கல்வி பயன்பட்டிருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. குறிப்பாகக் கீழ்த்தட்டு மக்களது கல்விக்குச் சமய நிறுவனங்கள் சிறப்பிடம் தந்தன. சமயம் மாறியோர் பெரிதும் கீழ்த்தட்டு மக்களாகவே இருந்தனர். அவர்களில் பறையர் இனத்தைச் சார்ந்த பலர் ஆசிரியர்களாகவும் அலுவலகப் பணியாளராகவும் கிருத்துவப் பாதிரிகளாகவும் ஏற்றம் பெற்றனர். பாட நூல்கள் உள்ளிட்டு, அய்ரோப்பிய மொழிகளில் இருந்த அறிவியல், இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. தொடக்க நிலைப் பாட நூல்கள் அய்ரோப்பிய ஆட்சிப் பகுதிகளில் நிறுவப்பட்ட அச்சகங்களில் அச்சிடப்பட்டன.
1846 ஆம்ஆண்டில் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற 17 கிராமங்களின் கணக்கெடுப்பில் ஆறில் ஒரு பகுதிப் பெண்கள் இளம் விதவைகளாக இருந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு வாழ்வமைத்துத் தரும் வகையில் சிறப்புப் பள்ளிகள் திறக்கப்பட்டுத் தொழிற் பயிற்சியும் தரப்பட்டது. அத்தகைய 233 இளம் பெண்களில் 90 பேர் பயிற்சி பெற்றனர். சிலர் ஆசிரியர்களாக மாறினர். பலர் தையல், நெசவு போன்ற பயிற்சியும் பெற்றனர்.
தொடக்கத்தில் பார்ப்பனர் இத்தகைய கல்வியினை எதிர்த்தாலும், அடுத்து அவர்கள் அந்தப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு அரசு அலுவலர்களாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
1879ஆம் ஆண்டில் புதுச்சேரிப் பகுதியில் மட்டும் இருந்த பள்ளிகளில், 1554 சிறுவர்களும், 1245 சிறுமியர்களும் இருந்தனர். இவர்களில் 321 பேர் பறையர் இனத்தைச் சார்ந்தோர். சிறுவர்களுக்கு இணையாகச் சிறுமியரும் அன்று கல்வி பெற்றனர் என்பது சிறப்பான முன்னேற்றமாகும். அத்துடன், புதுச்சேரியில் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 1898இல் கட்டாயக் கல்வியும் கொண்டு வரப்பட்டது. பல சாதியினரை உள்ளடக்கிய பொது பள்ளிகளும் தொடங்கப்பட்டன. பிரெஞ்சு நாட்டில் இருந்த அதே கல்வி முறை இங்கும் ஏற்படுத்தப்பட்டது. 1846இல் லத்தீன், பிரெஞ்சு, தமிழ் அகராதிகளும் அச்சிடப்பட்டன.
அச்சு நூல்களும் எழுது பொருள்களும் இல்லாத தொடக்கக் காலத்தில் தமிழருடைய மரபு சார்ந்த கல்வி முறைகளைக் கிருத்துவப் பிரிவுகள் உள்வாங்கிக் கொண்டன. மணலில் எழுதிப் பழகுவது, மனனம் செய்து பாடங்களைக் கற்பது என்பவையும் இதில் அடங்கும்.
இந்த நூல் ஐரோப்பியர் வருகையை அடுத்துக் கிருத்துவச் சமயப் பிரிவினரும் வணிகத்துக்கு வந்திறங்கிய வெவ்வேறு அய்ரோப்பிய நாட்டினரும் எடுத்துக் கொண்ட கல்வி முயற்சிகளை விவரிப்பதோடு நின்றுவிடவில்லை. இவற்றுக்கு மேலாக இந்தக் கல்வி ஏற்படுத்திய தாக்கங்களையும் அவற்றால் ஏற்பட்ட புதிய நிலைமைகளையும் விவரமாகத் தந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி புகட்டலும் சமய மாற்றங்களும் பல நூற்றாண்டுகள் நடந்து வந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படியான சாதிப் பாகுபாடுகளை அவற்றால் அகற்றிவிட முடியவில்லை. அதேபோன்று, பல நூற்றாண்டுகள் தமிழ் மண்ணில் தங்களது சமயப் பணிகளைச் செய்தபோதிலும், தங்களுக்குள்ளேயே இருந்த பிரிவுப் பாகுபாடுகளை – மோதல்களைக் கிருத்துவம் விட்டுவிடவில்லை. சில வேளைகளில் பாடங்களையும் ஆசிரியர்களையும் பகிர்ந்து கொண்டாலும் அவர்களிடையே நிலவிய முரண்கள் முன்னெழுந்துகொண்டே இருந்தன. பிரான்சிடமிருந்த புதுச்சேரிப் பகுதிகள் டச்சு, ஆங்கில ஆளுமைக்குள் அவ்வப்போது வந்தபோதும், சென்னை இடையில் பிரெஞ்சு நாட்டினரின் கைக்குச் சென்றபோதும், நாகையில் போர்ச்சுக்கீசியரிடமிருந்து டச்சுக்களிடம் சென்றபோதும், அதற்கு முன்னர் அங்கிருந்த கிருத்தவரின் சமயப் பிரிவினர் நடத்திய பள்ளிகள் தாக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. மீண்டும் ஆட்சி மாற்றம் வரும் வரை அந்தச் சமயப் பிரிவினரால் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நாகையில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியர் பலர் தரங்கம்பாடிக்கு இடம்பெயர்ந்த நிலையும்கூட ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும், அய்ரோப்பியர் நுழைவுக்குப் பின்னரும் தொடர்ந்துகொண்டிருந்த கற்றல் முறைகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கவில்லை. கி.பி. 500 – 1500 காலப்பகுதியின் அய்ரோப்பிய முயற்சிகளோடு மட்டும் வரையறை செய்துகொண்டது. ஆங்கில ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தாலும் கொங்கு நாட்டுப் பகுதிகளின் செயல்பாடுகள் இந்நூலில் இடம்பெறவில்லை. கிருத்துவச் சமயப் பரப்பலின் ஊடுருவல் பெருமளவில் அங்கு இல்லாததும் காரணியாகலாம்.
தமிழ் நாட்டு மக்கள் சாதிப் பிரிவுகளுக்குள் கட்டுண்டு கிடந்தனர் என்பதே உண்மை. அவர்கள் இந்துக்களாக எப்போதும் இருக்கவில்லை. இந்த நூலில் தமிழ் மக்களை இந்துக்களாகக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனாலும், அன்றைய தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிலைமைகளையும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்ற ஆவலையும் இந்நூல் ஏற்படுத்துகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நூலில் இருக்கின்ற தரவுகளின் அடிப்படையில் மேலும் பல விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அறிவியல் பாடங்களைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு 1775ஆம் ஆண்டிலேயே தொடங்கி இருந்தாலும், 1835இல் மெக்காலே கல்வித் திட்டம் வரும் வரை அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படைகள் தமிழ்நாட்டில் கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆங்கில நாடாளுமன்றம் 1813ஆம் ஆண்டில் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கிய ஒரு லட்சம் ரூபாய் தொகையினை சமஸ்கிருத, அரபு மொழிகளே பங்கிட்டுக் கொண்டன.
கிருத்துவச் சமயப் பிரிவினர் மொழி, சமய அறிவுடன் புவியியல், வரலாறு போன்ற பாடங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும், தொழில் புரட்சியினை அடுத்து அய்ரோப்பாவில் மேம்பட்டிருந்த அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான பாடங்களில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் மக்கள் தாங்கள் மரபு வழியாகப் பெற்றோர்வழிப் பெற்ற நுட்ப அறிவினை, உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டுதான் வந்துள்ளனர். இதனைக் கல்வியாகப் பார்க்கும் தெளிவு எழுத்தறிவு பெற்ற பிரிவினருக்கு ஏற்படவில்லை. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு இருந்தது, உற்பத்திக் கருவிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, இவற்றைக் கொண்டு உற்பத்தி வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் எவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்தன என்பன போன்ற ஆய்வுகள் மேலும் கொண்டு வரப்பட வேண்டும். எழுத்துக் கல்விக்கு அப்பாலும் ஒரு வகையான கற்றல் இருந்தது என்பது ஏற்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் உற்பத்திக் கட்டமைப்பு நீடித்திருந்தது என்பது மதிக்கப்பட வேண்டும். இன்னும் ஏதோவொரு வகையில் நீடிப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இத்தகைய வேறுபட்ட ஆய்வு முயற்சிகளுக்கு இந்த நூல் ஓர் அடித்தளமாக அமையும் என்று நம்பலாம்.
(தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் : தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை, மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப் பரிமாணங்கள் (1567 – 1887) | எஸ். ஜெயசீல ஸ்டீபன் | வெளியீடு: என்.சி.பி.எச், விலை ரூ.270)
- மே.து. ராசுகுமார்