கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன்.
periyar with kidsஎவரேனும் ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வதை அப்படியே திருப்பிக் கேட்கின்ற நிலைமை வராது.

பெரியார் சொல்லாத ஒருவிடயத்தை, அவர் சொன்னதாகச் சொல்வது அவதூறு. சீமான் அவ்வாறு சொல்லி, அது இந்தத் திகதியிட்ட பத்திரிகையிலும் வந்துள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அந்தத் திகதியிட்ட பத்திரிகையில் அப்படி இல்லை என்று கூறி ஆதாரத்தைக் கேட்கின்றார்கள், அதற்கு பெரியார் எழுத்துகளைப் பூட்டி வைத்துள்ளார்கள், நாட்டுடமை ஆக்கினால் ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார் சீமான். தான் வாசித்ததாகச் சொன்னவரிடம் எங்கே வாசித்தாய் என்று கேட்டால் சொல்லும் பதில் இதுவா?

எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது என்பதே எனக்குத் தெரிந்து ஒக்ரோபர் புரட்சிக் காலத்தில் சில காலம் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்தது; மற்றும்படி தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. ஏதோ உலகம் முழுவதும் எழுத்துகளை நாட்டுடமையாக்குவது நடைமுறையாக இருக்கின்றது; பெரியாரின் எழுத்துகளை மட்டும் ஒழித்து வைத்துள்ளார்கள் என்பது போல சீமான் சொல்கின்ற, உள்நோக்கம் கொண்ட உளறலை அப்படியே நாமும் எதிரொலிப்பது அபத்தமானது அல்லவா?

எழுத்துகளை நாட்டுடமை ஆக்குதல் என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளத்தில் நாட்டுடமை ஆக்குதல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வர வேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளைப் பொதுக்களத்திற்குக் (Public Domain) கொண்டு வருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதே இந்த நாட்டுடமையாக்கலின் நோக்கமாகும். எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படும்போது குறித்த எழுத்தாளரின் நூல்களுக்கான மரபுரிமை யாரிடம் இருக்கின்றதோ, அவருக்குப் பரிவுத் தொகையாக பணமும் வழங்கப்படும். 

இவ்வாறு முதலில் நாட்டுடமையாக்கப்பட்டவை பாரதியின் எழுத்துகளும் பாடல்களும்; இதனை இன்னொரு விதத்தில் பாரதியின் பாடல்கள் தனியார் சொத்தாகிவிடாமல் மீட்டெடுப்பதற்காகவே இந்த நாட்டுடமையாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாம். பாரதியாரின் குடும்பத்தினரிடம் இருந்த பாரதியின் பாடல்களுக்கான உரிமை பல்வேறு கைகள் மாறி, ஒரு கட்டத்தில் மெய்யப்பச் செட்டியார் 9500 ரூபாய் கொடுத்து பாரதியாரின் பாடல்களின் ஒலிப்பதிவாகப் பாவிக்கின்ற உரிமையை வாங்கி வைத்திருந்தார். பிரபல நாடகக் கலைஞரான அவ்வை டி.கே. சண்முகம் பாரதியாரின் “தூண்டில் புழுவினைப் போல” என்ற பாடலைத் தனது திரைப்படம் ஒன்றில் சேர்த்தபோது, மெய்யப்பச் செட்டியார், பாரதியின் பாடல்களுக்காக உரிமை தன்னிடம் உள்ளதால் அவ்வை. டி.கே. சண்முகம் தனக்கு 50,000 ரூபாய்கள் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களும், காப்புரிமை பற்றிய விழிப்புணர்வும். பாரதியாரின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி காட்டிய ஆதரவும் சேர்ந்து பாரதியாரின் முழு எழுத்துகளும் நாட்டுடமையாக்கப்பட்டன. இதுபற்றி “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” என்கிற ஆய்வு நூலொன்றினை ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ளார்.

இப்போது “பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

பெரியாரின் எந்த எழுத்துகள் இன்று பொதுக்களத்தில் இல்லை?, எந்த எழுத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால்தானே இதற்குப் பதிலளிக்கலாம்? தான் சொன்ன அவதூறுக்குப் பதிலளிக்க முடியாமல் சீமான் உளறுவதை காவித் திரிந்தால் நாமும் அந்த மந்தைக் கூட்டத்தில் ஒருவராகி விடுவோமேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை. இதே சீமான் எதிர்வரும் காலத்தில் புலிகள் இயக்கம் பற்றியும் ஏதேனும் ஓர் அவதூறைக் கூறிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால், புலிகள் இயக்கத்தின் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவெளியில் பகிருங்கள் நான் ஆதாரம் தருவேன் என்று உளறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் சீமானை நம்புகின்ற ஈழத்தமிழர்கள் உணர வேண்டும். ஏனென்றால் சீமானின் வரலாறு அப்படித்தான் இருக்கின்றது.

பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும்

பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்துக் காலவரிசையில் வெளியிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மிக நீண்ட காலமாக பெரியாரியவாதிகளாலும் ஆய்வுத்துறை சார்ந்தோராலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1925 முதல் 1938 வரை குடியரசு ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள், பேச்சுகள் என்பவற்றை முழுமையாகத் திரட்டி கால வரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட உள்ளதாக பெரியார் திராவிடர் கழகம் 2008 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.

ஆனால் பெரியாரின் எழுத்துகளுக்கான வாரிசுரிமை தனக்கே இருப்பதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி உரிமை கோரி வழக்குப் பதிவு செய்திருந்தார். பெரியாரின் பொதுவாழ்வின் தொடக்க காலத்திலிருந்து அவரது எழுத்துகள், பேச்சுகள், சிறுநூல்கள் என்பவற்றை வெளியிடுவதற்காக பெரியார் ஆரம்பித்ததுப் பின் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்” உரிமை கி. வீரமணிக்கு உண்டென்பதால் பெரியாரின் எழுத்துகளுக்கும் தனக்கே உரிமை உள்ளது என்பது அவரது வாதமாக இருந்தது. இதன்மூலம் பெரியாரின் எழுத்துகள் காலவரிசைப்படி வெளியிட முன்வந்த பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஒன்றினை வீரமணி இட்டிருந்தார்.

இக்காலப்பகுதியில் பெரியாரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், எஸ்.வி. ராஜதுரை, உள்ளிட்ட பெரியாரியவாதிகளும், பெரியாரிய ஆய்வறிஞர்களும் சட்டப் போராட்டத்தையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார்கள்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு ஜூலை 27, 2009 அன்று “பெரியாரின் எழுத்துகளுக்கும் பேச்சுகளுக்கும் பதிப்புரிமை கூறும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்குக் கிடையாது என்றும் பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கி விடவில்லை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி இருந்தார்.

1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை ஆதாரமாக வைத்து இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, எவற்றுக்கு எல்லாம் பதிப்புரிமையைக் கோர முடியாது என்பதனை விளக்கும் இந்தச் சட்டப்பிரிவின்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில் நாட்டின் நடப்புகள் குறித்துச் செய்தித்தாள்களிலும் இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால் அதற்கு பதிப்புரிமை கோர முடியாது என்றும், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் அதற்கான பதிப்புரிமையைக் கோரியிருக்க வேண்டும் என்றும் இந்த பிரிவு குறிப்பிடுகின்றது; பெரியார் திராவிடர் கழகத்தின் வக்கீல் வைத்த இந்த வாதம் வலிமையானது என்று சுட்டிக்காட்டி கி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். 

மேலும் பெரியாரின் எழுத்துக்களை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, பெரியாரின் எழுத்துகள் அறிவுசார் சொத்துரிமையாகக் கருதப்பட வேண்டும் என்ற கி வீரமணி தன் மனுவில் குறிப்பிட்டு இருந்ததற்கும், “அறிவுசார் சொத்துரிமை கோருவதற்கும் எழுத்துப்பூர்வமாக உரிமை தரப்பட்டிருக்க வேண்டும்; அப்படி எழுத்து மூலமாக பெரியார் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் பெரியார் எந்த உயிரும் எழுதி வைக்காமல் தான் இறந்துள்ளார்; இது எல்லோருக்கும் தெரியும் என்றும்” விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஊடாக பெரியார் வெளியிட்ட நூல்களுக்காக பதிப்புரிமையைப் பொறுத்தவரை, அந்த அறக்கட்டளை அமைக்கப்பட்ட போது இருந்த காப்புரிமை விதிகள் எழுத்தாளர் இறந்து 25 வருடங்களின் பின்னர் அவரது எழுத்துகள் பொதுக்களத்திற்கு வரும் என்றே இருந்ததால், அதன்படி அவையும் பெரியார் இறந்து 25 வருடங்களின் பின்னர், அதாவது 1998 இன் இறுதியில் பொதுக்களத்திற்கு வந்து விட்டன என்றும் இந்தத் தீர்ப்பு உறுதி செய்தது.

இதன்படி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற தீர்ப்பின் வழியாக இனி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். 

எனவே பெரியாரின் எழுத்துகள் இப்போது பொதுக் களத்திற்கு (Public Domain) வந்து விட்டன. காப்புரிமை என்ற பெயரால் எவரிடமும் அவரது எழுத்துகளும் பேச்சும் பதுக்கிவைக்கப்படவில்லை. எழுத்துகளை நாட்டுடமையாக்கல் என்பதன் நோக்கமே, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளை பொதுக் களத்திற்குக் (Public Domain) கொண்டுவருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே. இன்னொரு விதத்தில் சொன்னால், ஒருவரின் எழுத்துகளுக்கான காப்புரிமை குறித்த ஒரு தரப்பிடம் இருப்பதன் காரணமாக அந்த எழுத்துகள் பரவலாகச் சென்றடைவது தடைப்படுகின்றது என்ற சூழலில், காப்புரிமையை வைத்திருப்பவருக்கு குறித்த தொகையைக் கொடுப்பதனால் அந்த எழுத்துகளை எவரும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்குவதே எழுத்துகளை நாட்டுடமையாக்குதல். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பொறுத்தவரை அது 2009 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புடன் நிறைவேறி விட்டது.

காலவரிசைப்படியாக எழுத்துகள் தொகுக்கப்படுவதன் அவசியம்

பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தவர்கள், அவை கால வரிசைப்படியான தொகுப்புகளாகத் தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்டுக் கொண்டனர். இது ஒரு முக்கியமான வேண்டுகோளாகும். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசையில் வைத்துப் பார்த்தாலே ஒட்டுமொத்த விடுதலைக்கான, சமூகநீதி நோக்கிய பயணத்துக்கான அவரது படிமுறை வளர்ச்சி தெரியும். தனிப்பட்ட முறையில், காலவரிசையில் தொகுக்கப்பட்ட பெரியாரின் குடியரசு எழுத்துகளையும் பேச்சுகளையும் வாசித்ததே எனக்குப் பெரியாரைப் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றியும் இங்கே குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கின்றேன்.

பெரியார் திராவிடர் கழகம் 1925 முதல் 1938வரையான குடியரசில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் மின்னூல்களாக வெளியிட்டிருந்தது. அவற்றினை முழுமையாக படிக்க ஆரம்பித்த எனக்கு பெரியாரின் எழுத்துநடையும், சமத்துவக்கான அவரது பயணம் எப்படி எப்படியெல்லாம் முகிழ்ந்து வந்தது என்கிற அந்தப் பரிணாம வளர்ச்சியும் மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தது. அவை அனைத்தையும் ப்ரிண்ட் பண்ணி கோப்புகளில் இட்டு வைத்து வாசித்து வந்தேன். ஈழப் பிரச்சனை, சாதியம், பெண்ணுரிமை, மதங்கள், அறிவியல் பார்வை, பகுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வப்போது வாசித்தவை தரவுகளாகவும் சம்பவங்களாகவும் செய்திகளாகவும் மூளைக்குள் தேங்கி குழப்பங்களும் துலக்கமற்ற பார்வையுமே அப்போது இருந்தது. பெரியாரை வாசிக்கத் தொடங்கிய பின்னர், அவரது அணுகுமுறையும் சிந்தனைமுறையும் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன. அந்த வகையில் பெரியாரின் எழுத்துகள், சமூக உறவுகளையும், அரசியலையும் புரிந்து கொள்வதற்கு உதவியதுடன் சமத்துவத்துக்காகச் செயற்பட வேண்டும் என்கிற உந்துதலையும் எனக்கு ஏற்படுத்தின.

குறிப்பாக, மிக நீண்டகாலம் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெரியாரின் எழுத்துகளை அவற்றின் காலவரிசையில் வைத்துப் பார்க்கின்றபோதே அவரது எழுத்துகளின் முழுமையான அர்த்தமும், சிந்தனை வளார்ச்சியின் பரிணாமமும் தெரியும். உதாரணத்துக்கு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகுவதற்கு முன்னர் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்ன பெரியார் தான், மொழிவழி மாநிலங்கள் உருவான 1965 இற்குப் பின்னர் தமிழ் நாடு தமிழருக்கு என்பதையே தன் கடைசி மூச்சு வரை சொல்லி வந்தார். திருக்குறளை ஆரம்பத்தில் நிராகரித்தவர் பின்னர் திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதனைத் தமிழர்களின் அடையாளமாகச் சொல்ல வேண்டும் என்று பேசியவரும் அதே பெரியார் தான். காலவரிசையை பின்பற்றாமல் எழுத்துகள் தொகுக்கப்பட்டால் அரசியல் நிலைப்பாடுகளே திரிக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் வீரமணிக்கு இருந்திருக்கலாம். இன்று, வாசித்து, ஒவ்வோர் விடயத்தையும் கேள்வி கேட்டு சான்றாதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தேடித் துலங்கி உண்மையக் கண்டடையாமல் கேள்விச் செவியன்களாக பெரும்பான்மையானோர் மாறிப் போய்விட்ட "post-truth" காலத்தில் எல்லாத் திரித்தல்களுக்குமான வாய்ப்பும் இருக்கின்றது. ஆயினும் பெரியார் உள்ளிட்டோர் ஏற்றிய சமூகநீதிக்கான தீபத்தின் வெளிச்சத்தில் நாம் மானுட சமத்துவம் பேணுவோம்

பின்குறிப்பு:

குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடுவது தொடர்பாகவும் அவற்றுக்கான காப்புரிமை குறித்தும் நடந்த வழக்கு விபரங்களையும் வெவ்வேறு கட்டுரைகளையும் தொகுத்து குடிஅரசு வழக்கு என்ற பெயரில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

- அருண்மொழிவர்மன்