hussainஅஞ்சலி

“மொழிபெயர்ப்பாளர்களை குறிப்பாக ரா.கிருஷ்ணய்யா, தொ.மு.சி.ரகுநாதன், பாஸ்கரன், சோமசுந்தரம் ஆர்.கே.கண்ணன், நா.தர்மராஜன்,  நா.முகமது சரீப், ஆகிய தோழர்களை மாஸ்கோவிற்கு அனுப்பிவைத்து சிறந்த தமிழ் நூல்கள் வெளிவரத் திட்டமிட்டதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.”

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினருமான, தோழர் யு.எம்.உசேன் அவர்கள் 1.8.2020 அன்று மாலை 3 மணி அளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85.

தோழர் யு.எம்.உசேன் அவர்கள் இளம் வயதில் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களோடு தொடர்பு ஏற்பட்ட பின்னர் சென்னை மாவட்ட கட்சியோடு இணைந்து செயல்பட்டவர். பின்னர் தோழர் "பி எஸ் ஆர்" அவர்கள் என்சிபிஎச் பொறுப்பாளராக இருந்தபோது இவர் விற்பனையாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து தனது கடுமையான முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் சோவியத் நூல்களை மக்களிடம் கொண்டு சென்றதில் இவருக்கு மிகப் பெரும் பங்கு உண்டு.

தோழர் ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சோவியத் புத்தகக் கண்காட்சி நடத்தி அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார். படிப்படியாக கிளை நிர்வாகியாகவும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உதவி செயலாளராகவும், நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ் நிர்வாகியாகவும் திறம்பட செயல்பட்டவர்.

மாஸ்கோவில் நடைபெற்ற உலக புத்தகக் காட்சியில் பலமுறை பங்கு பெற்றுள்ளார். மாஸ்கோ செல்லும்போது தோழர் எம்.வி.சுந்தரம் அவர்களும் தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களும் யு.எம்.உசேன் ஆகியோர் சோவியத் பதிப்பகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு சோவியத் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்து கொண்டு வர ஏற்பாடு செய்தனர். குறிப்பாக முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், ஆகியவற்றின் மூலம் பல நூல்கள் தமிழிலே கிடைத்தன.

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் நூல்கள் சமூக அரசியல் நூல்கள், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி மற்றும் பல இலக்கிய ஆளுமைகளின் நூல்கள் பெருமளவில் தமிழில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் சோவியத் புத்தகக் கண்காட்சி உத்திரப்பிரதேசம், பீகார், அந்தமான் தீவுகள் உட்பட பல மாநிலங்களில் கண்காட்சிகள் தொடர்ச்சியாக நடைபெற மூளையாக இருந்து செயல்பட்டவர் தோழர் உசேன்.

தமிழ்நாட்டில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அனைத்து கிராமங்களுக்கும், புத்தகங்களைக் கொண்டு செல்ல ஏதுவாக நியூ செஞ்சுரி நடமாடும் புத்தக நிலையத்தை துவக்க முன்முயற்சி எடுத்தவர்.

பதிப்பகத் துறையில் மிகப்பெரிய உச்சத்தை எட்டும் அளவுக்கு "தமிழில் முடியும்" என்ற நா.வானமாமலை அவர்களின் நூல் வெளியிடப்பட்டது. தமிழில் நியூ செஞ்சுரியின் அறிவியல், தொழில்நுட்பம், கதைகள் கவிதைகள் கட்டுரைகள் உட்பட பல துறைகளில் நூல்கள் வெளியிடப்பட்டன மர்ரே வெளியிட்ட சங்க இலக்கிய நூல்களை மீள் பதிப்பு செய்தது இவர் காலத்தில்தான்.

தோழர் ஜெயகாந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு; தோழர் அறந்தை நாராயணன் அவர்களையும் இணைத்து "கல்பனா" என்ற மாத இதழை வெளிக்கொணர முயற்சி எடுத்தவர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அம்பத்தூர் எஸ்டேட் நிலங்கள், கட்டடங்கள், மதுரையில் புதிய ஷோரூம் கட்டுவதற்கான செயல், ஜானி ஜான் கான் ரோட்டில் உள்ள பாவை அச்சகம், நியூ செஞ்சுரி பள்ளி, நியூ செஞ்சுரி மருத்துவமனை ஆகியவற்றை உருவாக்குவதற்கு தோழர் ராதாகிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்தியவர் தோழர் உசேன் என்றால் மிகையல்ல.

முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து புதிய புதிய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டதில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. மொழிபெயர்ப்பாளர்களை குறிப்பாக ரா.கிருஷ்ணய்யா, தொ.மு சி.ரகுநாதன், பாஸ்கரன், சோமசுந்தரம், ஆர்.கே கண்ணன், நா.தர்மராஜன், நா.முகமது சரீப் ஆகிய தோழர்களை மாஸ்கோவிற்கு அனுப்பிவைத்து சிறந்த தமிழ் நூல்கள் வெளிவரத் திட்டமிட்டதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

கார்ல் மார்க்ஸ் அவர்களின் ‘மூலதனம்’ நூல் தோழர் தியாகு அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தோழர் கிருஷ்ணன் அவர்கள் சரிபார்த்து சோவியத் யூனியனில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கால மாற்றத்தால் அன்று அது நடைபெறவில்லை. அவருக்குப் பின்னால் வந்த தோழர்கள் முயற்சியால் என்சிபிஎச் மூலம் தமிழில் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டது.

1990களில் சோவியத் பத்திரிகைகளின் கலைவிழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது அதை முன்னின்று வழி நடத்தியவர் தோழர் உசேன் அவர்களே.

நியூ செஞ்சுரியின் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை செய்த தோழர் யு.எம்.உசேன் அவர்கள் இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவர் செய்த செயல்கள், குறிப்பாக கட்சித் தலைமையுடனும், பணிபுரிகின்ற தோழர்களோடும், இணக்கமாக பேசி, செயல்பட்டு, நியூ செஞ்சுரியின் நிறுவனத்தை உயர்த்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என்றால் மிகையல்ல.

அப்பேர்ப்பட்ட மிகப்பெரிய ஆளுமையை நாம் இழந்திருக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நேசிக்கின்ற அனைத்து தோழமைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆர்.துரைசாமி