ஆணையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பெண்ணாக இக்கதையின் நாயகி இருப்பதாகவும்கூட இந்நாவலைப் புரிந்துகொள்ளலாம். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செல்வாக்குச் செலுத்தும் பங்குச் சந்தையில், ஒரு பெண் தன்மீது திணிக்கப்பட்டுள்ள அனைத்துத் தளைகளையும் உடைத்துத் தனியளாக முன்னேறுகிறாள். இந்நாவலின் கதைநாயகி, பெண்களுக்காக இச்சமூகம் உருவாக்கியுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தனக்கான புதிய தடத்தைத் தேடிக் கண்டடைகிறாள். புதிய களத்தில் ஆண், பெண்ணுக்கான இருப்பு குறித்து எழுதப்பட்ட நாவல் என்ற வகையில் இடபத்தை வரவேற்கலாம். இந்நாவலில் பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண்தான் முதன்மைப் பாத்திரம். அவள்தான் கதையைச் சொல்கிறாள். அவளது நடவடிக்கைகளை மட்டுமே இக்கட்டுரை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
‘இடபம்’ நாவல் கன்னடத்தில் கூலி (Gooli) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; மொழிபெயர்த்தவர் க.நல்லதம்பி. இந்நாவலின் கதைநிலம் பெங்களூர். பெங்களூரின் சாலைகளையும் அதன் சூழலியலையும் அவ்வளவு விரிவாக இந்நாவலில் எழுதியுள்ளார் பா.கண்மணி. பெங்களூர் நகர உயர் நடுத்தர மக்களின் கலாச்சாரத்தையும் கொண்டாட்டத்தையும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கதைநாயகி உள்வாங்கிக்கொள்கிறாள். அதனால் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க கன்னட நிலத்தின் தன்மைகளையே நாவல் தன் உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழைவிட கன்னடத்தில் இந்நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருதையும் (2021) இந்நாவல் பெற்றுள்ளது.
இந்நாவலின் கதைநாயகி ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிஷோர். கதைநாயகியும் கிஷோரும் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் காதலிக்கவும் செய்கிறார்கள். ஆனால் கிஷோரின் குடும்பம் பணப்பலன் கருதி அவனுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறது. ‘சேட்டுகள் காதலில்லாமல் வாழ்ந்து விடுவர்; பணமில்லாமல் அவர்களால் வாழ முடியாது’ என்கிறாள் நாயகி. இவளது நடவடிக்கைகள் காதலின்மீது போர்த்தப்பட்டுள்ள புனித மதிப்பீடுகளையெல்லாம் உடைத்து விடுகின்றன. கிஷோர் திருமணம் செய்துகொள்ளாததில் இவளுக்குப் பெரிய அளவில் வருத்தம் ஏதுமில்லை. பின்னாட்களில் அந்தக் காதலை நினைவுகூரும்போது அது வசதியான வாழ்க்கைமீது உருவான ஈர்ப்பாகக்கூட இருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். இப்படியாகச் சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட பாவனையான மதிப்பீடுகளைத் தன் தொடர் செயல்பாடுகளால் உடைத்துக்கொண்டே இருக்கிறாள். அடுத்து நவீன் என்பவனை விரும்புகிறாள். நவீன் அவளிடம் அதிகாரத்தைச் செலுத்த முயல்கிறான். தவிர, தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ள நடிக்கவும் செய்கிறான். இந்த பாவனைகளைத்தான் அவள் வெறுக்கிறாள். நவீனிடமிருந்தும் விலகுகிறாள். காதல், அன்பு ஆகிய இரண்டுமே ஒருவித பாவனைதான். இரண்டுமே அடிமைப்படுத்தவும் செய்யும் என்ற மனநிலைதான் அவளை விரட்டிக்கொண்டே இருக்கிறது.
இந்நாவலின் நாயகி இனக்குழு வாழ்க்கை சார்ந்த நனவிலி மனத்தால் தூண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். இயல்பாகப் புணர்ந்துகொண்டிருக்கும் வரிக்குதிரைகளின் வாழ்க்கை இவளை ஈர்க்கிறது. ஆணும் பெண்ணும் சுய விருப்பத்தின் அடிப்படையில் புணர்வதற்குப் பின்புள்ள சமூக ஏற்பாடுகள் இவளுக்கு வெறுப்பைத் தருகின்றன. ‘ஒருநாள் படுத்து எழுந்திரிக்க எதுக்குடா இத்தனையும் கேக்குற?’ என்று ஓரிடத்தில் நாயகி பேசுகிறாள். இது தனிநபரைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாகத் தெரியவில்லை. சடங்குகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன என்பது இவளது வாதம். ஆடை, கல்வி, திருமணம் ஆகிய சாதாரண விடயங்களில்கூட பாலினச் சமமின்மை இருப்பதே தனது மீறலுக்குக் காரணமென தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறாள்.
பெண்கள் பிறந்ததிலிருந்தே திருமணத்திற்காகவே தயார் செய்யப்படுகிறார்கள். அதனைக் கொஞ்சமும் மறுக்க முடியாது. பெண்களின் உடல் அமைப்பு, நிறம் ஆகியவை தொடர்ந்து பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகின்றன. பெண்களது உடல் வளைவு நெளிவுகளுக்காகவே அவளது உணவு சார்ந்த பல ஆசைகளைத் துறக்க வேண்டியிருக்கிறது. இது இந்நாவலின் நாயகிக்கும் நடக்கிறது. இவளுடைய அண்ணனின் பிறந்த நாளுக்கு கிரிக்கெட் மட்டையும் பந்தும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர், இவள் பிறந்த நாளுக்குத் தங்கத்தை வாங்கி பீரோவில் சேமிக்கின்றனர். இந்தச் சமமின்மைதான் இவளை இந்தச் சுழல் பாதையிலிருந்து விலகி, தனக்கென ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொள்ளச் செய்கிறது. அப்பா - அம்மா; அண்ணன் - அண்ணி ஆகிய இரு தலைமுறையினரிடமும் இந்தச் சமமின்மை நிலவுகிறது. அந்த இரு பெண்களும் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டே இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். அவர்களது இயல்பான மணம் குடும்பத்திற்குள் கரைந்து வெங்காயம், இஞ்சி, பூண்டு மணத்தின் கலவையாக அவர்கள் நடமாடுகின்றனர். இவள் அவளது தனித்த வாசனையை இழக்க விரும்பவில்லை.
பா.கண்மணியின் புனைவுமொழி மிகுந்த அங்கதத்துடன் வெளிப்பட்டுள்ளது. இது பெண் எழுத்தாளர்கள் பலரிடம் இல்லாதது. பாலியல் சமமின்மை மீதான கசப்பு பல இடங்களில் அங்கதமாக வினையாற்றியுள்ளது. ‘வர்ஜின் கேளும் வேணும்; எல்லாம் தெரிஞ்சும் இருக்கணூன்னா எப்புடி?’ என்று ஓரிடத்தில் வேணுவிடம் பேசுகிறாள். ‘காதலில்லாத கலவி உடற்பயிற்சி போன்றதே’ என்றும் நினைத்துப் பார்க்கிறாள். இதுபோன்ற பல மேற்கோள்களை இந்நாவலில் இருந்து எடுத்துக் காட்டலாம். இவள் கட்டற்றவளாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறாள். அதனால் எல்லாவற்றின் மீதும் தன் கருத்தைப் பதிவு செய்துகொண்டே செல்கிறாள். அவள் தன்னுடைய குடும்பத்திலிருந்தே தனது மீறல் உணர்வுக்கான தர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறாள். அவற்றில் பல ஏற்கெனவே பேசித் தீர்க்கப்பட்டவை என்பதுதான் இந்நாவலைப் பின்னுக்குத் தள்ளுகிறது. கிஷோர், நவீன், சிபி, ராவ், உமர், வேணு எனப் பல ஆண்களுடன் இவள் பழகுகிறாள். தேவைப்படும்போது உடலுறவும் கொள்கிறாள். அதனைப் பற்றி இவளுக்கு எவ்விதக் குற்றவுணர்வும் இல்லை. இதனையெல்லாம் பகடிசெய்து கடந்து விடுகிறாள். நாயகியின் மீறல் குணத்திற்கு அங்கதமொழி புனைவில் நன்றாக ஒத்துழைத்திருக்கிறது.
பெண்ணின் உடலையும் மனத்தையும் நாயகி வெவ்வேறு அங்கங்களாகப் பாவித்துக் கொள்கிறாள். ‘இவனோடு மட்டுமே வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று இதுவரை நான் சந்தித்த எந்த ஆணுமே தோன்ற வைத்ததில்லை’ என்று ஓரிடத்தில் கூறுகிறாள். அப்படியோர் ஆணோ பெண்ணோ இருக்க முடியுமா? தான் செய்யும் சமூக மீறல்களுக்கு மனம் கற்பித்துக்கொள்ளும் ஒருவகை பாவனை உணர்வுதான் இது. அதீத உணர்ச்சிப் பெருக்கில் ஓர் ஆணோ பெண்ணோ அப்படிக் கூறுவதுகூட அந்த நேரத்திற்கான மன இயல்புதான். ‘இம்மை மாறி மறுமை யாயினும் / நீயா கியரென் கணவனை / யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே’ (குறுந்.49) என்று சங்க காலத்திலேயே ஒரு தலைவி கூறியிருக்கிறாள். இதுபோன்ற பாவனைகள் காலந்தோறும் தொடரத்தான் செய்கின்றன. ஒருவர் எல்லா கணத்திலும் அப்படித் தோன்றுவது எப்படிச் சாத்தியமாகும்? மனம் என்பது அருவமானது; ஒட்டுமொத்த நடத்தைகளின் தொகுப்பாகப் பார்க்கப்படுகிறது. எனவே, மனம் என்பது புற உடலோடு இணைந்துதான் இயங்கும். ‘யாரும் நுழையாத மனம் இன்னும் வர்ஜினாகத்தானே இருக்கிறது’ என்ற நாயகியின் கூற்றும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் பாவனைதான். “நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்ளுவதுதான் பொருந்தும்” (சாபவிமோசனம்) என்று விசுவாமித்திரர் கூறுகிறார்; கௌதம முனிவர் மிகுந்த தயக்கத்துடனேயே அகலிகையை ஏற்றுக் கொள்கிறார். யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது. மனத்தூய்மையைவிட உடல் தூய்மைக்கு முக்கியத்துவம் தரும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, ‘நான் மனதால் தூய்மையானவள்’ என்ற நாயகியின் வாதத்திற்கேற்ப அவளது நடவடிக்கைகள் புனைவில் அமையவில்லை. பலருடன் அவள் விரும்பியே உறவு கொள்கிறாள். அடுத்து, தன்னைவிட வயதில் இளையவனான வேணுவின்மீது இவளுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. அவனது தொடுகை இவளுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. இதுவும் ஒருவகையில் மரபின்மீது விரிசலை உண்டாக்கும் முயற்சிதான்.
கட்டற்ற உடலுறவும் குடியும் பொதுவாக ஆண்களோடு தொடர்புடையதாகவே கருதப்படுகிறது. அதேபோன்று சடங்குகளைப் பின்பற்றுதல் பெண்களுக்குரியதாகவே இருந்து வருகிறது. இதனை உடைக்க இந்நாவலின் நாயகி முயற்சிக்கிறாள். அதற்குச் சில சமாதானங்களைச் சொல்லிக் கொள்கிறாள். இவள் உருவாக்கிக் கொள்ளும் சமாதானங்கள் வலிமையாக இல்லை என்பதுதான் பிரச்சினை. மரபுகள் உடைப்பது அவ்வளவு எளிதானது இல்லை. கூட்டு நனவிலியின் ஒட்டுமொத்த சிந்தனையையும் அது மறுபரிசீலனை செய்யவைக்க வேண்டும். அதற்குத் தர்க்கங்கள் வலிமையாகக் கட்டமைக்கப்பட வேண்டும். மரபுக்கு மாற்றான ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும். குடும்ப அமைப்பைச் சிதைப்பது மரபை உடைப்பதாகாது; அதற்கு மாற்றை முன்வைக்க வேண்டும். இந்நாவலின் நாயகியிடம் அத்தகைய வலிமையான மாற்று இல்லை. சிதைப்பது மட்டுமே அவளது நோக்கமாக இருக்கிறது. அதில் மட்டுமே அவள் மகிழ்ச்சி காண்கிறாள். திருவிழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் ஆகியவைகூட குடும்ப அமைப்பை வலிமையாகத் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகள்தாம். அவற்றின்மீதும் இவளுக்கு ஒவ்வாமைகள் உள்ளன. தீபாவளியைப் புறக்கணித்துவிட்டு பப்புக்குப் போய் குடித்து மகிழ்ந்திருப்பதை எப்படித் தீர்வாகக் கருத முடியும்? தீர்வு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்குமானதாக இருக்க வேண்டும். உதிரிகளுக்கான தீர்வு மட்டுமே இவளிடம் உள்ளது.
நாவலின் பல இடங்களில் இவள் அறிவுக் கூர்மையானவள் என்பது போன்ற உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘அன்பின் அடுத்த கட்டமானது அதிகாரந்தானே.’ ‘தன் ஊரைச் சுமந்தே திரிபவர்களால் அதிக தூரம் பயணிக்க முடியாது.’ ‘அகந்தை நல்லது. செயலூக்கத்தைக் கூட்டும்’ என்பது போன்ற தனித்த உரையாடல்கள் நிறைய உள்ளன. இதுபோன்ற இடங்களில் எல்லாம் பா.கண்மணிதான் நினைவுக்கு வருகிறார். கதாபாத்திரத்தின் இருப்பை மீறி அவள் பேசுவதாகவே கருதுகிறேன். ஏனெனில் அவள் ஆர்வத்துடன் இயங்கும் பங்குச் சந்தையில் அவளுக்குப் போதிய அறிவு இல்லை. பிறரைச் சார்ந்தே இயங்குகிறாள். அவர்கள் தரும் குறிப்புகளுக்காகக் காத்திருக்கிறாள். பெரிய அளவில் அவளால் பங்குச் சந்தையில் இலாபம் ஈட்ட முடியவில்லை. சிபியிடம் இவள் அடிக்கடி ஆலோசனை பெறுகிறாள். அதற்காக அவனிடம் தன் உடலையும் பகிர்ந்து கொள்கிறாள். புனைவின் இறுதியில்தான் ஒரு வெற்றியைப் பெறுகிறாள். அதன் பிறகுதான் இவளுக்குத் தன்னம்பிக்கை பிறக்கிறது. தன் வேலையைத் துணிந்து விட்டுவிட்டு முழுநேர பங்கு வர்த்தகத்தில் ஈடுபட நினைக்கிறாள். நாவலை இந்த இடத்தில் முடித்துக் கொள்கிறார் பா.கண்மணி.
பா.கண்மணி தனக்குப் பிடித்த எழுத்தாளர்களாக ஆதவனையும் தி.ஜானகிராமனையும் குறிப்பிடுகிறார். ஆதவன் உயர் நடுத்தர வர்க்கத்தின் அகவாழ்க்கையைத் தம் புனைவுகளில் காத்திரமாக எழுதியவர். இவரது ‘என் பெயர் ராமசேஷன்’, ‘காகித மலர்கள்’ ஆகிய இரு நாவல்களிலும் பேசப்படும் களமும் உயர் நடுத்தர வர்க்கம்தான். தி.ஜானகிராமன் பெண்களின் பாலியல் சுயதேர்வுகளை நாவல்களாக எழுதியவர். ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ ஆகிய இரு நாவல்களும் இதில் குறிப்பிடத்தக்கவை. இவ்விருவரது புனைவுத் தன்மைகளும் ‘இடபம்’ நாவலில் அப்படியே பதிவாகியுள்ளன. ‘பங்குச் சந்தை’ என்ற களத்தை வெளியே எடுத்துவிட்டால் ‘இடபம்’ நாவலின் கதைநாயகியும் ‘மரப்பசு’ நாவலின் முதன்மைக் கதாபாத்திரமான அம்மணியும் வெவ்வேறானவர்களாகத் தெரிய மாட்டார்கள். இவ்விரு நாவல்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து விரிவாக எழுத முடியும். அந்த அளவுக்கு ‘மரப்பசு’ நாவலை ‘இடபம்’ உள்வாங்கியுள்ளது. தி.ஜானகிராமன் பாலியல் பிரச்சினைகளைச் செவ்வியல் தன்மைகளுடன் எழுதினார்; ஆதவன் அதனையே நவீனத் தன்மைகளுடன் அணுகினார். பா.கண்மணி இதில் ஆதவன் பாணியைத் தெரிவு செய்திருக்கிறார். அம்மணி, மரபான சடங்குகள்மீதும் திருமணத்தின்மீதும் நம்பிக்கையற்றுப் போவதற்கு தி.ஜா. வலிமையான காரணங்களைப் புனைவுக்குள் உருவாக்குகிறார். பா.கண்மணியால் அதனைத் திறம்படச் செய்ய முடியவில்லை. குடும்ப அமைப்பின் பலவீனங்களாக ஏற்கெனவே பலரும் பேசிப் பேசித் தேய்வழக்கான விடயங்களையே இடபத்தின் நாயகியும் பேசுகிறாள். குடும்ப அமைப்பிலிருந்து தன்னை வெளியேற்றிக் கொள்வதற்கான காரணிகளாக அவள் அதனையே தேர்ந்துகொள்கிறாள்.
குடும்ப அமைப்பிற்குள் இவளுக்கு ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. கு.ப.ரா., தி.ஜா. உள்ளிட்ட பல முன்னோடி எழுத்தாளர்களும் பெண்களுக்குள்ள புகார்களை மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்கள். இதனைப் பெண்களே எழுதும்போது இன்னும் அணுக்கமாக இருக்கிறது. பெண்கள் அவ்வளவு புகார்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை உடைத்துக்கொண்டு வெளியேறும் பெண்கள் தனித்து விடப்படுகிறார்கள். தி.ஜா. அலங்காரத்தம்மாள், அம்மணி உள்ளிட்ட தம் கதாபாத்திரங்களின் வழியாக இந்த அமைப்பின்மீது உடைப்பை ஏற்படுத்தத்தான் செய்தார். ஆனாலும் அவர்கள் மீண்டும் அந்த அமைப்பிற்குள்தான் இயங்கினார்கள். ஏனெனில் அதுதான் சமூக யதார்த்தமாக இருக்கிறது. இந்நாவலின் நாயகி இதிலிருந்து மாறுபடுகிறாள். தனியளாகத் தன்னை நிறுவிக் கொள்ளும் முயற்சியில் இவள் கொஞ்சமும் பின்வாங்கவில்லை. புனைவும் இவளுக்கு பங்குச் சந்தையில் கிடைத்த சிறு வெற்றியின் நிறைவுடன் முடிந்துவிடுகிறது. இதற்குப் பிறகான அவளது வாழ்க்கை எவ்வாறு பயணித்தது என்பது வாசகரின் புரிதலுக்கே விடப்பட்டுள்ளது.
நாவல் பங்குச் சந்தை சார்ந்த சில நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டாலும் அது புனைவுக்கான நோக்கமாக இருக்க முடியாது. பங்குச் சந்தையினூடாக நாயகி தன் பொருளாதாரத் தேவையை நிறைவுசெய்து கொள்கிறாள் என்பதைக் கடந்து புனைவை வாசிப்பவர்களுக்கு அது பெரிய அளவில் உதவாது. பெண்கள் தன்னியல்புடன் இயங்குவதற்குச் சுய பொருளாதாரம் மிக முக்கியமானது என்ற புள்ளியை மட்டும் எடுத்து வாசிக்கும்போது இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்நாவலின் நாயகி செயல்பாடுகளில் அவ்வளவு தர்க்க முரண்கள் உள்ளன. அவளுக்கு அது சரி; அவளைப் பின்தொடர நினைப்பவர்களுக்கு அவள் காட்டிய பாதையில் நிறைய முரண்கள் உள்ளதாகவே தோன்றுகிறது. ஏற்கெனவே இருக்கக்கூடிய ஒழுங்கைச் சிதைப்பது மிக எளிது; அதனை மாற்றி அடுக்குவதுதான் கடினமானது. இந்நாவல் சிதைத்து மட்டுமே விட்டிருக்கிறது.
(இடபம் (நாவல்), பா.கண்மணி, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை ரூ.209)
- சுப்பிரமணி இரமேஷ், தமிழ் உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி. சென்னை.