என் புத்தக அலமாரியிலிருந்து-3 

ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது எனத் தீவிரக் களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்!

இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது? ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்குக் கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸ§ம் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.

இதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40% மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா? அதற்கு என்ன சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாகப் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக்கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களிடம் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக்கிளை உருவாகி, நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.

இப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்குப் பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஓர் உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.

இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை, மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள் தான் ஆகியுள்ளன.

ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின்றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய, இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

பரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ஆம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை? இதற்குக் காரணம், பிளேட்டோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளைப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேட்டோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

டார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.

ஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின் மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைப்படிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின், மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.

பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை மேலும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.

குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.

இதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.

பொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன?’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததால் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.

எப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றன? தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா? தாள் ஒன்றில் இங்கைத் தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஓர் அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் எடுத்துக் காண்பிக்கிறார்.

உயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்குத் தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அது இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்!

உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீசக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவற்றை ஆழப் படித்து, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.அவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.

- பத்ரி சேஷாத்ரி 

Pin It