பத்தொன்பதாம் நூற்றாண்டு உலக அளவில் சமூக, அரசியல், பொருளியல் அரங்கில் பல புதுமையும் மறுமலர்ச்சியும் ஏற்பட்ட காலம். இந்த மறுமலர்ச்சியின் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தையும் பாதித்தது. குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தை தனது ஆட்சிப் பரப்புக்குள் முழுமையாகக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சி்க்கான கால்தடத்தை கிழக்கிந்திய கம்பெனி அதிகாரத்தின் வழி பதித்துக் கொண்டிருந்த நேரம்.

இந்தியத் துணைக்கண்டத்து மக்களை ஆள்வதற்கும் அவர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் வெவ்வேறு மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை, சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தத் தொடங்குவதற்கான பணியைச் செய்தனர். இந்தச் செயல்பாட்டின் ஊடாக இந்திய நிலப்பரப்பின் இருவேறு சிந்தனைப் பள்ளிகளையும், வடக்கு × தெற்கு என்ற இருவேறுபட்ட நிலப்பகுதிகளையும் அதன் மொழி, பண்பாட்டு வாழ்க்கை முறையையும் இனங்காணத் தொடங்கினர். அதற்கான முறையான கல்விப்புல ஆய்வு நிறுவனங்களை அமைத்தனர்.george fort collegeவடக்கில் கொல்கத்தாவை குவியப்படுத்திய வில்லியம் கோட்டைக் கல்லூரியும் தெற்கே சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியும் தோற்றம் பெற்றன. இவற்றில் சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி ஏற்படுத்திய சமூக, அரசியல் தாக்கத்தை மதிப்பிடுவதும் புரிந்துகொள்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி (1812 -1854)

நான்காம் மைசூர் போருக்குப் (1798-1799) பிறகு கர்நாடகம் உள்ளிட்ட தென்னகப் பகுதியில் ஆங்கிலேயரின் குடியேற்றக் கொள்கைக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்த திப்பு சுல்தான் வீழ்த்தப்படுகிறார். ஏற்கெனவே இதற்கு முந்தைய மைசூர்ப் போர்களில் தென்னகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி தென்னகம் பற்றி புரிந்துகொள்வதற்கான அறிதல் முறையைத் தொடங்கியது. தென்னகத்தைப் பற்றி ஆங்கில அரசு அறிந்துகொள்வதற்கான கருதுகோள்களை உருவாக்கிய காலின் மெக்கன்சியும், எல்லீசும் ஆசியவியல் கழகத்தில் கீழ்த்திசைக் கருத்தியலுக்கு முன்னோடித் திட்டம் வகுக்கும் பொறுப்பில் இருந்தனர். குறிப்பாக ஆங்கிலேய அரசின் முதல் தலைமை நில அளவையராக இருந்த காலின் மெக்கன்சி (1754-1821) தென்னகத்தைப் பற்றித் திரட்டிய கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், மக்கள் வழக்காறுகள், தென்னக நிலம் பற்றிய வரைபடங்கள், சமயப் பனுவல்கள், காசுகள், நில உறவு தொடர்பான ஆவணங்கள் போன்றவை குடியேற்ற அரசுக்குத் தென்னக சமூகம் குறித்தப் புரிதலை உருவாக்கியது. இதனால் வில்லியம் கோட்டைக் கல்லூரியின் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட மொழி அறிதல் முறையானது தென்னகத்தை நிர்வகிக்கப் பயனற்றது என்ற முடிவை வந்தடைவதற்குக் காரணங்களாக அமைந்தன.

1806இல் மெக்கன்சிக்கு எல்லீசு எழுதிய கடிதத்தில் சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை மொழிபெயர்ப்பதில் இந்தியாவிலுள்ளவர்களை பயன்படுத்துவது குறித்தும் ஆங்கிலேய, இந்திய அறிஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் தனது கருத்தை முன்வைக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் சமஸ்கிருதம், தமிழில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்த்து ஆவணங்களாகச் சேகரிக்கலாம். மேலும் அதற்கான கல்லூரி ஒன்றை நிறுவிச் செயல்படுத்துவதற்குத் திரட்டப்பட வேண்டிய நிதி வளங்கள், அதற்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, மொழிபெயர்ப்பை மேற்பார்வையிடுவது உள்ளிட்ட விரிவான திட்டங்களுடன் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.

மேலும் 1807இல் மெக்கன்சி தனக்குக் கீழ் உள்ள பணியாளர்களுக்கு எழுதிய சுற்றறிக்கைக் கடிதம், 'தென்னக மொழிகள் சமஸ்கிருத மூலத்திலிருந்து கிளைத்தவை அல்ல என்றும் பிராமணர்களின் தென்னக வருகையோடுதான் சமஸ்கிருத மொழித் தாக்கம் தென்னகத்தில் ஏற்பட்டது' என்றும் அக்கடிதம் கூறியதோடு, 'பழங்கன்னடம் தென்னகத்தின் மூல மொழியாக இருக்குமோ?' என்ற கருத்தும் தென்னக மொழிகளின் கட்டமைப்புக் குறித்த தொடக்க கால எல்லீசின் கருத்துகளுக்கு வழி வகுத்தன. இங்கிலாந்தில் இருந்த ஹெய்லிபரி கல்லூரியில் இருந்து சென்னை வந்த இளநிலை அதிகாரிகளுக்கு ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி தொடங்கப்படுவதற்கு முன்பே உரிய மொழி கற்பித்தல் முறை சென்னையை மையப்படுத்தி இயங்கியது. இந்துஸ்தானி, பாரசீகம் ஆகிய மொழிகளோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கான தேர்வையும் சென்னை அரசு நடத்தியது. இவ்வாறான மொழி கற்பித்தலுக்கான முயற்சிகள் வங்காளத்தின் வில்லியம் கோட்டைக் கல்லூரி வழிகாட்டுதலின் படி இயங்கியதால் இந்துஸ்தானி, பாரசீக மொழிகளில் தேர்ச்சிப் பெறுவதையே மாணவர்கள் விரும்பினர். இதனை உணர்ந்த எல்லீசு, கிழக்கிந்திய இயக்குநர் வாரியத்துக்கு வழங்கிய அறிக்கையில் தென்னகத்தில் பெரு வழக்காக உள்ள தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளின் கற்பித்தலுக்கான கல்லூரியை சென்னையில் நிறுவ வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக 1812இல் தொடங்கப்பட்ட ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி நிறுவனர் எனும் பெருமையைப் பெற்றார். இக்கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்களான மாமடி வெங்கையா, சங்கரையா, பட்டாபிராம சாஸ்திரி, சிற்றம்பல தேசிகர், முத்துச்சாமி பிள்ளை, தாண்டவராய முதலியார் ஆகியோர் இணைந்த கூட்டு, தென்னகச் சிந்தனையையும் திராவிடச் சான்றுக்கான கருதுகோள்களையும் உருவாக்குவதில் முன்னணியாக செயல்பட்டது. மேலும் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய பன்மொழிகள் அறிந்த இப்புலமை கூட்டம் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் செயல்பாட்டினைத் தீர்மானிப்பவையாக அமைந்தன.

வட மரபு, தென் மரபு என்ற இருவேறு சிந்தனைப் பள்ளிகளின் தோற்றம்:

வங்காளத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு அதன் நிர்வாகத் தேவைகளுக்காக அங்கே வழக்கிலிருந்த சட்டங்களையும் வரலாறுகளையும் தொகுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவை அனைத்தும் பெர்சிய மொழியில் அமைந்திருந்தன. எனவே, ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் ஆட்சியாளர்களாக இருந்த முகலாயர்களின் அரச மொழியான பெர்சிய மொழியில் இருந்த நூல்களில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் எழுதவும் தொடங்கினர். வில்லியம் ஜோன்ஸ் 1771 ஆண்டிலேயே பெர்சிய மொழிக்கு இலக்கணம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேய அதிகாரிகள் பெர்சிய மொழியின் வழியாகவே சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்தனர்.

ஹால்வெல்லின் நூலான இந்துஸ்தான் பேரரசும், வங்காளத்தின் சுவை மிகுந்த வரலாற்று நிகழ்வுகளும்(1765-71), பெர்சிய வரலாற்று அறிஞரான பிரிஸ்டாவின் நூலான இந்துஸ்தானத்தின் வரலாறு (1768) அலெக்ஸாண்டர் டவ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் பிராமணர்கள், பெர்சிய உயர்குடிகள் ஆகியோர் மட்டுமே இந்துஸ்தானத்தின் வரலாற்றை சொல்வதற்கு தகுதியானவர்கள் எனக் கருதியவர். இதே காலத்தில் ஹால்ஹெட்டின் இந்துச் சட்டத் தொகுப்பு (1776) மற்றும் வங்க மொழிக்கான இலக்கண நூல் (1778) ஆங்கிலத்தில் வெளிவந்தன. இந்த நூல்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அன்றைய அரசியல் எதிரிகளான முகலாயர்களுக்கு முந்தைய இந்துஸ்தானத்தின் பொற்காலம் பற்றிய கனவுலகக் கருத்துகளை விதைத்தன.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீசும்(1777-1819) தென்புல மரபும்:

திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகு தென்புலத்தை விரைவாக ஆய்வதற்கு முதல் நில அளவையாளரான காலின் மெக்கன்சி(1754–1821) நியமிக்கப்பட்டார். அவரோடு பல வகையில் கருத்துகளை பரிமாறுகிறவராக களத் தொடர்பையும் கடிதத் தொடர்பையும் எல்லீசு வைத்திருந்தார். கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பில் மாவட்ட நீதிபதி, வருவாய் வாரியப் பணி, கடைசியாக சென்னை ஆட்சியர் பணி, ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி நிறுவனர் எனப் பல நிர்வாகப் பொறுப்புகளை எல்லீசு வகித்து வந்தார்.

1806 ஆம் ஆண்டிலேயே மெக்கன்சி மேற்கொண்ட நிலப்பரப்பு மேலாய்வுகள் தென்னகம் பற்றிய புதிய கருதுகோள்கள் உருவாவதற்கு அடிக்கோலிட்டன. மெக்கன்சி வில்கின்சிற்கு 1808இல் எழுதிய கடிதம் சில முதன்மை வாய்ந்த செய்திகளைத் தருகிறது. தென்னகம் வைதீக சமயத்திற்கு ஆளாகாத சமண சமய மரபைத் தொடக்கத்தில் கொண்டிருந்தது என்றும், பிராமணர்களின் வருகைக்குப் பிறகுதான் வைதீக சமயக் கருத்துகள் தென்னகத்தில் பரவத் தொடங்கின, குறிப்பாக சங்கராச்சாரியாரும், ஹொய்சாள ஆட்சிப் பகுதியில் இராமானுஜரும் தென்னகத்தில் சமண சமய வீழ்ச்சிக்கும் வைதீக எழுச்சிக்கும் வித்திட்டனர் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே காலத்தில் தனது உற்ற நண்பரான லெய்டனுக்கு கடிதம் எழுதிய எல்லீசு வேதாந்தத்திற்கு முந்தைய சமண சமய கருத்துத் தாக்கத்தைத் தென்னகம் கொண்டிருந்தது எனவும், சங்கரர், இராமானுஜர் காலத்திலேயே சமணம் வீழ்ச்சியடையத் தொடங்கியது எனவும் தமிழின் முதன்மையான இலக்கியங்களை எழுதியவர்கள் சமணர்களே எனவும் எல்லீசு குறிப்பிட்டிருந்தார்.

வில்லியம் கோட்டைக் கல்லூரியும் ஜோன்சு உள்ளிட்ட ஆசியவியல் கழகத்தினரும் மனு உள்ளிட்ட வைதீகக் கருத்துகளைப் பரப்பும் நூல்களை அச்சிட்டுப் பரப்பிய காலத்தில் எல்லீசு திருக்குறளைத் தமிழின் முதன்மை அறநூலாக அடையாளம் கண்டார். திருவள்ளுவருக்குத் தங்க நாணயம் ஒன்றை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியின் சார்பாக வெளியிட்டார். திருக்குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சமஸ்கிருதத்தில் ஊறித் திளைத்திருந்த ஜோன்சுக்கு மாறாக தனித்தமிழில் எழுதவும் தமிழில் பாக்களைப் படைக்கும் ஆற்றலையும் எல்லீசு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தை எல்லீசு கற்றுணர்ந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாகத்தான் கல்லூரியின் தலைமைப் புலவரான சிற்றம்பல தேசிகரை வைத்து இலக்கணச் சுருக்கம் எனும் தமிழ் நூலை வெளியிட்டு இருக்கலாம். எல்லீசு, சமணத் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் பற்றி வெளியிடப்படாத தனிக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். சமணம் பிராமணர்களால் அழித்தொழிக்கப்பட்டது எனவும் சமணத்தை அழித்த பிறகே தென்னகத்தில் பிராமணச் சட்டங்கள் நிலைநிறுத்தப்பட்டன எனவும் இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மொழிக் குடும்பம் பற்றிய சிந்தனை:

வில்லியம் கோட்டைக் கல்லூரி சமஸ்கிருத அடிப்படையிலான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் பற்றிய கருதுகோள்களை நிறுவியதில் முதன்மைப் பங்காற்றியது எனில் சமஸ்கிருத வேரில் இருந்து முற்றிலும் துண்டித்துக்கொண்ட தென்னக மொழிக்குடும்ப மரபை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியும் அதன் நிறுவனரான எல்லீசும் அடையாளம் கண்டனர். மெக்கன்சியின் தென்னகம் தொடர்பான ஆவணத் திரட்டல்கள் தென்னகத்தின் மொழிகள் தொடர்பான தொடக்கநிலை கருதுகோள்களை உருவாக்கின. சமஸ்கிருத மரபில் இருந்து விடுபட்ட தனித்தன்மை கொண்ட மொழிகள் தென்னகத்தில் வழங்கி வருகின்றன. தமிழ்மொழி தென்னக மொழிகளின் தாய் மொழியாக இருக்கிறது என்ற ஆழமான கருத்துகளை எல்லீசு கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே சமஸ்கிருதம் தென்னகத்தில் புழக்கத்தில் உள்ள மொழிகளைக் கற்றறிய உதவாது எனவும் வில்லியம் கோட்டைக் கல்லூரியின் கருத்தாளரான வில்லியம் காரேயின் சமஸ்கிருத மொழிதான் தென்னக மொழிகளின் உருவாக்கத்திற்கு அடிப்படை என்ற கருத்தினை எல்லீசு தனது நண்பர் லெய்டன் துணையுடன் வலுவாக மறுத்துரைத்தார். சமஸ்கிருத சட்ட நூல் வல்லுநரான கோல்புரூக்கின் கருத்தையும் இதே போன்றே எல்லீசு எதிர்கொண்டார்.

சமஸ்கிருதத்தில் இருந்து விடுவித்துக் கொண்ட தென்னக மொழிகளின் தனி மரபை அடையாளம் காணுவதற்காகவே ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி பற்றிய சிந்தனை எல்லீசுக்கு உருவெடுத்ததாக ஆய்வாளர் தாமஸ் டிரவுட்மேன் சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார். ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி வெளியிட்ட ஏ.ஜி.கேம்பல் எழுதிய தெலுங்கு மொழி இலக்கணம்(1816) நூலுக்கு முன்னுரை எழுதிய எல்லீசு தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகள் சமஸ்கிருத மரபில் இருந்து விடுபட்டு தனித்த மொழிக் குடும்பத்திலிருந்து கிளைத்தவை; தென்னிந்திய மொழிகள் தனித்துவம் வாய்ந்தவை என்பதை ஆணித்தரமாக ஒப்பிட்டு மொழிப் புலமையுடன் அதில் வெளியிட்டார். அந்த முன்னுரைக்கு மாமடி வெங்கையா தொகுத்த தெலுங்கு வேர்ச்சொல் அகராதி அடிப்படையாக அமைந்தது. எல்லீசு தெலுங்கு மொழியை நன்கு கற்றுணர்ந்தவர் என்பது கவனிக்கப்பட வேண்டியது. மாமடி வெங்கையாவின் தெலுங்கு வேர்ச்சொல் அகராதி, 'சமஸ்கிருதத்தில் இருந்து தூய தெலுங்கு விலகி இருக்கிறது' என்பதை மெய்ப்பித்தது. மாமடி வெங்கையாவின் தெலுங்குப் புலமை காரணமாக பலமுறை பிராமணர்களால் தாக்குதலுக்கு ஆளானார். இந்த நூலை எல்லீசு பயன்படுத்திக் கொண்டார். எல்லீசின் தென்னக மொழி குறித்த சட்டகத்திற்கு இந்நூல் உதவியது. எனினும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்துக்கு எல்லீசு, மொழி நூல் குறித்த ஆய்வுகளின் வழியாக வரவில்லை. இராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தென்னக மொழிக் குடும்பம் என்ற வரைவுக்கு வந்தவராக எல்லீசு இருந்த போதும் அவர் திராவிடம் மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கத்திற்கு வரவில்லை. ஆனால், தென்னகத்தின் சட்ட நூல்கள் பற்றிய ஆய்வுகளில் திராவிடம் எனும் தனி மரபை அடையாளப்படுத்தியவராக எல்லீசு இருந்தார். தென்னகத்தில் நிலவிய சட்டங்கள் தொடர்பாக ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் ஆற்றிய உரையில் தான் திராவிடம் எனும் தனிச் சட்ட மரபுகள் தென்னகத்தில் வழக்கத்தில் இருந்ததைக் குறிப்பிட்டார்.

எல்லீசும் புலமை மரபும்:

வில்லியம் ஜோன்ஸ் பிராமணர்களைத் தனது புலமைக் கூட்டத்தின் முதன்மை பகுதியாகக் கொண்டிருந்தார். அவர் உருவாக்கிய சிந்தனைப் பள்ளி சமஸ்கிருத பிராமண மேலாதிக்கப் புலமை மரபுக்கு முதன்மை இடம் அளித்தது. அவதி மொழியில் எழுதிய துளசிதாசரின் இராமாயணத்தை ஜோன்சு எற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் எல்லீசினைச் சுற்றி உருவான ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் தமிழ்ப் புலமை மரபு, சைவ சித்தாந்த மடங்களில் செல்வாக்குச் செலுத்தி வந்த பிராமணரல்லாத வேளாள, முதலி, பண்டார சாதிகளின் தொகுப்பாக அமைந்தது. எல்லீசின் முதன்மை ஸ்ரேஸ்தாரராகப் பணியாற்றிய சங்கரையா, தெலுங்கு, ஆங்கில, சமஸ்கிருத மொழி வல்லுநரான' பட்டாபிராம சங்கர சாஸ்திரிகள் போன்றோர் பிராமணராக இருந்தனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. சமஸ்கிருத மொழி கற்றலுக்கு ஜோன்சுக்கு அறிவுறுத்தப்பட்ட பிராமண பிறவித் தகுதியோ, புனிதத் தகுதியோ தமிழ் மொழிக் கற்றலுக்கு எல்லீசுக்கு தடையாக இல்லை. திருக்குறளின் மூலச் சுவடிகளை பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் ஹாரிங்டன் என்ற அதிகாரிக்கு வழங்கினார் என்ற அயோத்திதாசரின் கருத்து ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதோடு திருக்குறளுக்கு கவிராஜ பண்டிதர் போன்ற சமண உரையாசிரியர்களும் விரிவான உரை எழுதியிருந்தனர். அந்த உரை நூலையே எல்லீசுக்கு முன் சென்னையின் ஆட்சியராக இருந்த நதானியல் கிண்டர்ஸ்லி(1763-1831) பயன்படுத்தினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும், சமண சமயத்தைப் பின்பற்றிய ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவைச் சார்ந்த கிராமங்கள் தொண்டை மண்டலத்தில் இருந்ததாக மெக்கன்சி ஆவணப்படுத்தியிருப்பதும் கவனத்திற்குரியது.

வேளாள, முதலி உள்ளிட்ட இதர மிராசு வகுப்புகளில் இருந்து உருவான புலமைக் கூட்டம் தவிர தமிழில் ஒரு வெகுமக்கள் மரபொன்று செயல்பட்டு வந்தது என்பதும் முதன்மையான செய்தி. நதானியல் கிண்டர்ஸ்லி, 'திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்' என்ற ஆசிரியர் குறிப்பையும் அன்றைக்குத் தொண்டை மண்டலத்தில் வழக்கில் இருந்த வரலாற்று மரபுகளில் இருந்து கூறுகிறார். சைவ மடங்களின் புறக்கணிப்புக்குப் பிறகும் அறநூலான திருக்குறள் பரவலாகத் தமிழ்ப் பரப்பில் அறியப்பட்டிருந்தது என்பதையும் கூற வேண்டியுள்ளது. எனவே தான் எல்லீசுக்கு திருக்குறள் முதன்மை இலக்கியமாகப் பட்டது எனலாம். ஆனாலும் எல்லீசு உருவாக்கிய ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி புலமைக் கூட்டம் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை ஜார்ஜ் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை என்பதும் வரலாற்று உண்மை. 1834ல் பறையர் சாதியைச் சார்ந்த ஒருவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது கல்லூரியின் புலமைக் கூட்டம் அதனை ஏற்கவில்லை என்பதால் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது. இந்நிகழ்வு அன்றைய காலத்தில் நிலவுடைமை உறவுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிவினரின் குரல் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லீசு, தொண்டை மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலவுடைமை சக்திகளின் மிராசு உரிமையை முற்றிலும் ஏற்றுக்கொண்டார் என்பதும், உழுகுடி சாதிகளின் நிலத்தின் மீதான பாரம்பரிய உரிமையை மறுக்கும் மிராசு உரிமை குறித்த நூலொன்றை அவர் எழுதி அது கம்பெனியின் மதிப்புமிகு நில உரிமை தொடர்பான ஆவணமாக வெளிவந்தது என்ற வரலாறும் சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரிக்கு உண்டு.

குடியேற்ற அரசின் நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவி வந்த சமஸ்கிருத, பிராமண, புராண, இதிகாச மரபிற்கு எதிரான தென்னகச் சிந்தனை மரபை எதிரொலித்தது. எல்லீசின் தென்னிந்திய மொழிக் குடும்பம் பற்றிய கருதுகோள் மெல்ல வளர்ந்து இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிக் குடும்பம் பற்றிய சிந்தனைக்கு வழிகோலியது. 19ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த ஆதிக்க மரபிற்கு எதிரான கருத்துகள், கருத்தாளர்கள் தோன்றுவதற்கு சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. ஒற்றை ஆதிக்க மரபிற்கு எதிரான இந்தியத் துணைக் கண்டத்தின் பன்மைத்துவத்தை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் சென்னை ஜார்ஜ் கல்லூரியும் அது உருவாக்கிய கீழைத்தேய சிந்தனைப் பள்ளியும் தமிழ்ச் சமூக வரலாற்றின் மறுமலர்ச்சியில் சிறப்பான பங்கை ஆற்றிது என்று துணிந்து உரைக்கலாம்.

துணைநூற் பட்டியல்

திராவிடச் சான்று எல்லீசும் திராவிட மொழிகளும்- தாமஸ் டிரவுட்மேன், தமிழில் இராமசுந்தரம்.

காலச்சுவடு பதிப்பகம் 2007 வெளியீடு.

மாற்றுவெளி ஆய்விதழ் -11, காலின் மெக்கன்சி சிறப்பிதழ், டிசம்பர் 2012

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு

இந்துமதம் ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப் பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு.

பதிப்பாசிரியர்: வீ.அரசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2013

இந்திரர் தேசத்து சரித்திரம், அயோத்திதாசப் பண்டிதர் அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி - 4

தலித் சாகித்ய அகாடமி, 1997

அதிகாரமும் தமிழ்ப்புலமையும் தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ந.கோவிந்தராஜன், 2016 க்ரியா பதிப்பம்

மொழியாகிய தமிழ் காலனியம் நிகழ்த்திய உரையாடல்கள், ந.கோவிந்தராஜன், க்ரியா பதிப்பகம், 2021

காலனியத் தொடக்க காலம், (கி.பி 1500 - 1800) எஸ் ஜெயசீல ஸ்டீபன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,2018

Aryans and British India, Thomas R. Trautmann, University of California press, 1997

Madras school of Orientalism Producing knowledge in colonial south india, Thomas.R.Trautmann, Oxford university press, 2009

Dialogue and History Constructing south India, 1795 -1895, Eugene F. Irschick Oxford university press

The Nation and its Fragments Colonial and post colonial Histories, Partha chatterjee, Princeton University Press,1993

- இர.குமரன்