திருநெல்வேலி படையெடுப்பு, வருவாய் வசூலிப்பு மற்றும் நிதி முறைகேடுகள், 1755
1754-ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், பிரெஞ்சு கிழகிந்தியக் கம்பெனிக்கும் இடையே ஏற்பட்ட பாண்டிச்சேரி உடன்படிக்கையின் அடிப்படையில், கர்நாடகப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், வணிக முற்றுரிமையை தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும், அரசியல் ரீதியாக பிரெஞ்சுக்காரர்களை தனக்குக் கீழாக வைத்துக்கொள்ள விரும்பிய ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகர்கள் முகமது அலி கர்நாடக நவாபாக தொடர்வதை உறுதி செய்தனர். பாண்டிச்சேரி உடன்படிக்கையைத் தொடர்ந்து, கம்பெனியின் பொதுக்குழு கர்நாடக நவாப் முகமது அலிக்கு கணிசமான அளவில் கடனாகக் கொடுத்திருந்த முன்பணத்தின் ஒரு பகுதியை திரும்பப் பெறுவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தை கவனமாக பரிசீலித்தது. அதே நேரத்தில் ஆங்கிலேய வணிகர்கள் கர்நாடக மாகாணத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து தங்களுக்குத் தரவேண்டிய கடன் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆங்கிலேய வணிகர்கள் கவலை கொண்டனர். அதே நேரத்தில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாகாணங்களிலிருந்து நவாப்பிற்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை வசூலிக்க, கம்பெனியின் படைப்பிரிவு ஒன்றை அனுப்பி வைக்க வேண்டி நவாப் முகமது அலி ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் புனித ஜார்ஜ் கோட்டையின் தலைவர் ஜார்ஜ் பிக்காட்டை (George Pigot) தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கர்நாடக நவாப் முகமது அலி, தான் கர்நாடக போர்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பாளையக்காரர்களும், வருவாய்த்தொகை வசூலிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் தனக்கு வரி செலுத்தவில்லை என்றும், அத்தொகை கணிசமானது என்றும் கம்பெனியின் தலைவரான பிக்காட்டிடம் உறுதிபடத் தெரிவித்தார். போர் முடிந்த பின்னரும் கூட, அப்பகுதியினைச் சேர்ந்த பாளையக்காரர்கள் தனக்குச் செலுத்த வேண்டிய நிலுவை வரியினைக் கட்டுவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்பதை நவாப் கண்டறிந்தார். வலுவானதொரு இராணுவப்படையை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கவில்லை என்றால், இப்பிரச்சினை காலவரையின்றி நீடித்திருக்கும் என்று உறுதியாக நம்பினார் நவாப். இறுதியில், கம்பெனி தன்னுடைய இராணுவ துருப்புகளை மதுரை, திருநெல்வேலி பாளையக்காரர்களுக்கு எதிராக அனுப்பி வைக்க முடிவு செய்தது.இந்த வரலாற்றுப் புரிதலிலிருந்து, இக்கட்டுரை 1755-ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கர்நாடக நவாப்பிற்கு ஆதரவாகவும், மதுரை மற்றும் திருநெல்வேலி பாளையக்காரர்களுக்கு எதிராகவும் நடத்திய படையெடுப்பின் பொழுது, கம்பெனி படையை வழிநடத்திய கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் (Colonel Alexander Heron) செய்த நிதி முறைகேடுகள் குறித்து ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
I - கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் நடத்தப்பட்ட படையெடுப்பு
மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியில் இருந்த பெரும்பாலான மறவர் மற்றும் நாயக்கர் பாளையக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ளும் பொருட்டு கர்நாடக நவாபின் நிர்வாகத்திற்கு தொல்லை தரக்கூடியவர்களாக மாறியிருந்தார்கள். அதேசமயம், திருநெல்வேலி மறவர் பாளையக்காரர்களும், மறவர் காவல் தலைவர்களும் அந்தந்தப் பகுதிகளிலிருந்த மக்களிடமிருந்து தன்னிச்சையான வரி வசூலிப்பில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக, மதுரை அரசின் முன்னாள் மத்திய நிர்வாகம் இருந்த பகுதிகளில் இருந்த காவல் தலைவர்கள் சுதந்திரமான குறுநில மன்னர்களைப்போல நடந்து கொள்கிறார்கள் என்றும் அவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை என்றும் நவாபிற்கு தெரிவிக்கப்பட்டது. பாளையக்காரர்கள் முந்தைய நாயக்க மன்னர்களிடமிருந்து பதவிகளையும், பொறுப்புக்களையும் பெற்றிருந்ததன் காரணமாக, மதுரை, நடுமண்டலம், திருநெல்வேலி பாளையக்காரர்கள் நவாபின் நிர்வாகத்திற்கும், தொடர்ச்சியான படையெடுப்பிற்கும் பெரும் இடையூறு விளைவிக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் நவாப் முகமது அலியிடம் தெரிவிக்கப்பட்டது.1
இருந்தபோதும், மதுரை நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாளையக்காரர்கள் சுயாட்சி பெற்ற சுதந்திரமான ஆட்சியாளர்களாக தத்தமது பகுதிகளில் மாறியிருந்தார்கள். 1752-ஆம் ஆண்டு கர்நாடக நவாப் பொறுப்பிற்கு முகமது அலிக்கு எதிராக இருந்த சந்தா சாகிப் - ன் தளபதியான ஆலம்கானின் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட அரசாங்க நிலப்பரப்பில் இருந்த அலுவலர்களான முகமது கான் பர்கி, முகமது கான் மையானா, அப்துல் நபிகான் கட்டாக் ஆகியோர் நவாபின் நிர்வாகத்திற்கு பெரும் இடையூறு செய்பவர்களாக இருந்தார்கள்.2 அதிகரித்து வரும் கடன் தொல்லையாலும், நிதிப்பிரச்சினைகளை சரிசெய்யவும், நவாப் முகமது அலி திருநெல்வேலியை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார்.3 அதன் விளைவாக, நவாபின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பாண்டிச்சேரி உடன்படிக்கைக்கு மாறாக, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் பிக்காட், திருநெல்வேலி, மதுரை பாளையக்காரர்களிடமிருந்து நிலுவையிலிருந்த வரி வருவாயை வசூலிக்க கர்னல் அலெக்சாண்டர் ஹெரானை நியமித்தார். மேலும், படையெடுப்பை 1,000 வீரர்களுடன் துவங்குவதற்கும் அனுமதியளித்தார்.4
பிப்ரவரி 1755-இல் 2,000 சிப்பாய்கள் மற்றும் 500 நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஐரோப்பிய படை வீரர்கள் உள்ளடங்கிய ஒருங்கமைந்த படைப்பிரிவு முகமது யூசுப் கான், நவாபின் மூத்த சகோதரரான மாபூஸ் கான் மற்றும் கர்னல் அலெக்சாண்டர் ஹெரான் ஆகியோரால் வழிநடத்தப்பட்டது. மதுரை மற்றும் திருநெல்வேலி பாளையக்காரர்களை ஒடுக்குவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டு முன்னேறிச் சென்றது.5
படையெடுப்பின் போது கர்னல் ஹெரான் திருநெல்வேலி பாளையக்காரர்கள் அனைவருக்கும் தனது வருகையைப் பற்றியும், அதன் நோக்கத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வமாக தகவலளித்தார். அக்கடிதத்தில் செலுத்தப்பட வேண்டிய வரிப்பாக்கியை பாளையக்காரர்கள் எந்தவிதமான நிலுவையும் இல்லாமல் முழுமையாக ”பேஷ்குஷ்” (Peshcush) தொகையைக் கட்டுவதற்கு கடுமையாக எச்சரித்ததோடு, கர்நாடக நவாபின் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவும் கட்டாயப்படுத்தினார். தவறும் பட்சத்தில் இராணுவ நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என்று அவர்களை அச்சுறுத்தினார். இருப்பினும், 25 மார்ச் 1755 அன்று கர்னல் ஹெரான் மற்றும் மாபூஸ் கான், தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த திருநெல்வேலி பாளையக்காரர்களை ஒடுக்குவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். திருநெல்வேலி பாளையக்காரர்கள் நவாப் மற்றும் கர்னல் ஹெரானின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததாலும், வரிகட்ட மறுத்ததாலும், மேற்குப் பகுதியில் நெல்கட்டும்செவல் காத்தப்ப பூலித்தேவர், கிழக்கில் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்ம நாயக்கர் ஆகியோர் நவாப் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் முதன்மையான எதிரிகளாகக் கருதப்பட்டார்கள்.
1 மே 1755 அன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மன் பீரங்கித் தாக்குதல் மூலம் அச்சுறுத்தப்பட்டார். அவருடைய வரி வருவாய் கடனுக்குப் பாதுகாப்புத்தொகையாக, நவாபின் இராணுவ தளபதியும், முதலியாரும் ரூபாய் 80,000 மதிப்பிலான உத்திரவாதப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். அவரைத் தொடர்ந்து, இதர நாயக்கர் பாளையங்களும் கர்னல் ஹெரானின் உத்தரவிற்குக் கீழ்ப்படிந்தார்கள் மற்றும் கர்நாடக நவாபின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.6 இப்படையெடுப்பின் போது திருநெல்வேலி பாளையக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வருவாய் நிலுவைத்தொகை விவரங்களை கீழ்க்காணும் அட்டவணை அளிக்கிறது.
அட்டவணை I:1
திருநெல்வேலி பாளையக்காரர்களால் செலுத்தப்பட்ட வரி பாக்கிகள்
Source: Report on the Records of Fort St. George: Military Department Diary and Consultation, 1755 (Madras: Government Press, 1912), p.162.
இருப்பினும், திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் இருந்த மறவர் பாளையக்காரர்கள் நவாப் அரசின் மேலாதிக்கத்தை உறுதியான முறையில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, நிலுவையிலிருந்த வரி பாக்கிகளைக் கட்டவும் மறுத்தார்கள். ஆகவே, கர்னல் ஹெரான் வரி செலுத்த மறுத்த மறவர் பாளையக்காரர்களை எதிர்கொள்வதென்று முடிவு செய்தார். இதற்கிடையில், கர்னல் ஹெரானுக்கு கம்பெனியின் அதிகாரிகள் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். அதில் கர்னல் ஹெரான் தன்னுடைய சேனையோடு திருச்சிராப்பள்ளிக்கு உடனடியாக திரும்பி வருமாறு உத்தரவு வழங்கப்பட்டது. இருந்தபோதும், மாபூஸ் கானின் தூண்டுதலின் பேரில், எந்தவிதமான புலனாய்வுத் தகவலும் இல்லாமல், நெல்கட்டும்செவல் பூலித்தேவரை முற்றுகையிடச் சென்றார் கர்னல் ஹெரான்.
கர்னல் ஹெரான் திருநெல்வேலியின் உள்ளூர் விவகாரங்களை தனக்கு விளக்குவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்திருந்தார். அம்மொழிபெயர்ப்பாளர் கர்னல் ஹெரானின் படையெடுப்பு மற்றும் வெள்ளைக்கார இராணுவத்தின் பலகீனம் தொடர்புடைய உளவுச் செய்திகளை இராணுவம் செல்வதற்கு முன்பாகவே மிக விரைவாக நெல்கட்டும்செவல் பாளையக்காரரிடம் பகிர்ந்தார். அதன் காரணமாக பூலித்தேவர் வலுவான கல் சுவர்களுடன் தனது கோட்டையை பாதுகாத்தார்.7
II நீதி விசாரணை: வரி வசூலிப்பும், நிதி முறைகேடும்
பல்வேறு முக்கியமான காரணங்களுக்காக படைகளைத் திரும்பப் பெறுவது அவசியமானது என்று கருதப்பட்டது. அதன் விளைவாக, 26 மார்ச் 1755 அன்று கம்பெனியின் பொதுக்குழு தனது இராணுவத்துடன் திரும்பி வருமாறு கர்னல் ஹெரானுக்கு உத்தரவு பிறப்பித்தது. படைகள் திரும்ப வருவது தொடர்பான இத்தகைய உத்தரவு 1755 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கர்னல் ஹெரான் 6 ஜுன் 1755 அன்று வரை திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேரவில்லை. இறுதியில், கர்னல் ஹெரான் மூன்று வார காலதாமதமாக தனது படையுடன் வந்து சேர்ந்தார். இதற்கிடையில், கர்னல் ஹெரான் பணம் முறைகேடு செய்ததாக கம்பெனியின் தலைவர் ஜார்ஜ் பிக்காட்டிற்கு பல எழுத்துப்பூர்வ தரவுகள் கிடைத்தது. ஆகவே, படைகளை கேப்டன் பொலையரிடம் (Captain Polier) ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு வருமாறு கர்னல் ஹெரானுக்கு ஆணை அனுப்பிவைக்கப்பட்டது.8
மதுரை மற்றும் திருநெல்வேலி பாளையக்காரர்களின் வருவாய் பாக்கிகள் மற்றும் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக, 30 ஜூலை 1755-இல் கவர்னர் ஜார்ஜ் பிக்காட் மற்றும் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் (Stringer Lawrence), ஹென்றி போனி (Henry Poney), ராபர்ட் ஓர்ம் (Robert Orme), வின்ச் (Wynch), வில்லியம் பெர்செவல் (William Perceval) மற்றும் ராப் பால்க் (Rob Palk) உள்ளடங்கிய பிற உறுப்பினர்களைக் கொண்ட ஏழு பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இறுதியாக, கர்னல் ஹெரான் தனது சேனைகளுடன் திருநெல்வேலியில் நிறுத்தப்பட்டிருந்ததாலும், மேஜர் தாமஸ் மான்செல் (Major Thomas Maunsell) கணக்குகளை சரிபார்க்க அனுப்பிவைக்கப்பட்டதாலும், கர்னல் ஹெரான் மீதான நிதி முறைகேடுகள் குறித்த சந்தேகங்கள் விசாரணைக்குழுவிற்குள் வலுவடைந்தது.
விசாரணைக்குழுவால் கம்பெனியின் செயலாளர் சட்டவிதிகளின் அடிப்படையில் மேற்கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக கர்னல் ஹெரானிடம் இருந்து விளக்கம் கேட்டு பெறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் கம்பெனியின் தலைவருக்கு நவாப் அரசாங்கம் வழங்கிய அறிக்கையில் கர்னல் ஹெரான் இலட்சக்கணக்கான ரூபாய்களை தமக்கு வரி வருவாய் பாக்கி வைத்துள்ள பாளையக்காரர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடமிருந்து பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், விசாரணைக்குழுவோ நவாபின் குற்றச்சாட்டில் சொல்லப்பட்டுள்ள தனிக்கடன் பாக்கிகளை வசூலிப்பதற்காக கர்னல் ஹெரான் அனுப்பி வைக்கப்படவில்லை என முடிவு செய்தது. இருப்பினும் விசாரணைக்குழு ஒரு முடிவு செய்தது. அதனடிப்படையில் கர்னல் ஹெரான் நவாப் அரசாங்கத்திற்கு வரிபாக்கிகள் செலுத்தாமல் இருந்த பாளையக்காரர்கள், தலைவர்கள் அல்லது இதர நபர்களிடமிருந்து என்னென்ன வகைகளிலெல்லாம் பணம் வசூல் செய்துள்ளார் என்ற கணக்கை துல்லியமாகக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கிடையில், கம்பெனியின் செயலாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவில் கர்னல் ஹெரான் மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதியில் மேற்கொண்ட படையெடுப்பில் தொடர்புடைய அனைத்துக் கடிதங்களையும் நகல்களாக பதிவு செய்யும்படி பணிக்கப்பட்டார். அவ்வாறு பெறப்பட்ட அனைத்துக் கடிதங்களையும் தனித்தனியாக பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்தவும் பணிக்கப்பட்டார். தற்சமயம் நடந்து கொண்டிருக்கக்கூடிய விசாரணை அறிக்கையில் இந்தத் தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்யும்படியும் பணிக்கப்பட்டார். இதன்மூலம், கர்னல் ஹெரானின் நடவடிக்கைகள் குறித்து கம்பெனியின் நிர்வாகிகளுக்கு முழுமையான மற்றும் தனித்துவமான புரிதல் ஏற்படும் என நம்பப்பட்டது.
இதுவரை மதுரை மற்றும் திருநெல்வேலி கிராமப் பகுதிகளிலிருந்து வசூலித்து கம்பெனிக்கு செலுத்தப்பட வேண்டிய ஒட்டுமொத்த வாடகை இரண்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரத்தில், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை மட்டுமே மாபூஸ் கான் செலுத்தியிருக்கிறார். ஆகவே, மாபூஸ் கான் மீதம் செலுத்த வேண்டிய பாக்கிப் பணம் ஒரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரம் (1,22,000) ரூபாயை கேப்டன் கைலாடு (Captain Caillaud) வசூலிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.”9
இதற்கிடையில், கர்னல் ஹெரான் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு, கம்பெனியின் விசாரணைக்குழுவிற்கு பின்வருமாறு தனது பதிலை பதிவு செய்கிறார், சுருக்கம்: “...நான்காவது சரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டில், நவாபிற்கு வரிபாக்கிகள் செலுத்தாமல் வைத்திருந்த பாளையக்காரர்கள், தலைவர்கள் அல்லது இதர நபர்களிடமிருந்து என்னென்ன வகைகளிலெல்லாம் பணம் வசூல் செய்துள்ளேன் என்பதற்கான கணக்கை துல்லியமாகக் கொடுக்கின்றேன். கர்னல் ஹெரானாகிய நான் பதிவு செய்கின்றேன் எந்தப் பாளையக்காரரிடம் அல்லது எந்த ஊர் தலைவர்களிடமும் இருந்து நவாபிற்கு வழங்கப்பட வேண்டிய வரி பாக்கிகளையோ அல்லது கடன்களையோ நான் வசூலிக்கவில்லை. நவாப் தமக்கான இந்த பரிவர்த்தனைகளை திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் இருந்தே அவர் செய்து முடித்துக்கொண்டுள்ளார். அதில் பின்வரும் பரிசுகளை நவாப் பெற்றுக்கொண்டதற்கான தகவல்களை நான் வழங்குகின்றேன்:
- இலட்சுமி நாயக்கரின் நாட்டைக் கைப்பற்றியபோது நவாப் அவரிடமிருந்து 1,000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார்.
- நத்தம் பாளையக்காரரிடமிருந்து அவருடைய நாட்டைக் கடந்து செல்லும் போது சிறிய அளவிலான நகைகள் மற்றும் 500 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
- திருநெல்வேலிக்குள் நுழையும் பொழுது பக்சியிடமிருந்து (இராணுவ தளபதி) நவாபிற்கு 15,000 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
- இராமநாதபுரம் சேதுபதியிடமிருந்து மறவர்களின் சார்பாக 6,000 பகோடாக்களும், சிறிய அளவிலான இரண்டு நகைகளும் நோய்வாய்ப்பட்ட ஒரு யானையும் நவாப் பெற்றுக்கொண்டார். சிறிது நாட்களில் நோய்வாய்ப்பட்ட யானை இறந்து போனது.
நவாபின் சகோதரர் மாபூஸ் கான் பாளையக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு வழக்கமாக வழங்கப்பட்ட பரிசுகளைப் பெற்ற பிறகு, கேப்டன் லீ மூலம் எனக்கு (கர்னல் ஹெரானுக்கு) மதுரை பணத்தில் 20,000 ரூபாய் அனுப்பி வைத்தார். மேலும் மாபூஸ் கான் ஐயாயிரம் (5,000) ரூபாய் அதிகமாகத் தருவதாக எனக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் மதுரை கோட்டையின் அரசாங்க காவலர் இதுவரை என்னைச் சந்திக்க வரவுமில்லை, அந்த பணத்தை என்னிடம் தரவுமில்லை.
மேற்கூறியவை மட்டுமே நான் பெற்றுக்கொண்டதாக எனக்கு நினைவில் இருக்கின்றது. திரு. மான்செல், அவர்கள் பதிவு செய்துள்ள கணக்குகள் அனைத்தும் கம்பெனியின் சார்பாக நவாப் அல்லது அவரின் சகோதரர் மாபூஸ் கான் வழங்கிய பதிவுகள் மட்டுமே என தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கிடையில், திருநெல்வேலி பாளையக்காரர்களிடம் சென்று வரி வசூலிப்புகள் நடத்துவதற்கு, நான் படை நடத்திச் செல்ல தயாரான நிலையில் எனது உடல்நிலை மோசமான காரணத்தால் அந்தப் படையெடுப்பு நடத்தப்படவில்லை” எனப் பதிவு செய்தார்.10
III பணி நீக்கம்: கடமை தவறியதன் மீதான விசாரணை
கர்னல் ஹெரான் தன்னுடைய கடமையிலிருந்து தவறியமைக்காக கடுமையாக கண்டிக்கப்பட்டார். கர்நாடக நவாப் அரசாங்கம் மதுரை மற்றும் திருநெல்வேலி பாளையக்காரர்களுடனான தனது சொந்த கணக்குகளைக் கையாளுவதற்கும் மற்றும் தீர்த்துக்கொள்ளவும் பொருத்தமான நபர் என்று கமிட்டி பதிவுசெய்தது. இருந்தபோதும், கர்னல் ஹெரான் தான் எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளிலும் பாளையக்காரர்களுடன் ஈடுபடவில்லை என்று தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கர்னல் ஹெரானின் இத்தகைய பதிலை விசாரணைக்குழு கடுமையாக ஆட்சேபனை செய்தது. ஏனெனில் கர்னல் ஹெரான் தனது படையோடு பிரத்தியேகமாக அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக மட்டுமே திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
தனது ஆட்சேபனையை விசாரணைக்குழு பின்வருமாறு பதிவு செய்தது: "நிச்சயமாக நவாப் முகமது அலி தன்னுடைய படையினரோடு இருக்கும்பொழுது, மிகத் திறமையான நபராகத்தான் இருக்கின்றார். அந்த நேரங்களில் பாளையக்காரர்களிடமிருந்து அவர் வசூலிக்க வேண்டிய வரிப் பாக்கிகளையும் எளிதாக வசூலிக்கவும் செய்வார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், இது எப்பொழுது சாத்தியப்படும் என்றால், அந்த பாளையக்காரர்கள் திருச்சிராப்பள்ளிக்கு அருகாமையில் வசித்து வந்தால் மட்டுமே சாத்தியமாகும். கர்னல் ஹெரானின் செயல்பாடுகளின் மீது நவாப்பிற்கு நம்பிக்கை இருக்கின்றது என்று அவர் கூறும் கருத்திற்கு விசாரணைக்குழு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் மற்றொருபுறம், நவாப் விசாரணைக்குழுவிற்கு எழுதிய பதில் கடிதங்களில் பெரும்பாலானவை கர்னல் ஹெரானின் செயல்பாட்டிற்கு எதிரானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் கர்னல் ஹெரான் எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளிலும் பாளையக்காரர்களுடன் ஈடுபடவில்லை என்று சொல்லும் கருத்திற்கு எதிராக நவாப் பதிவு செய்துள்ள பதில்களை கம்பெனி கவனிக்கத்தக்க கருத்துக்களாக எடுத்துள்ளது. ஆனால், கர்னல் ஹெரான், மான்செல் மற்றும் நவாபின் அதிகாரிகளோடு இணைந்து, பாளையக்காரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வரிப் பாக்கிகளை வசூலிப்பதற்கான வேலைகளைச் செய்வதற்காக மட்டுமே நவாபாலும் மற்றும் கம்பெனியாலும் அனுப்பி வைக்கப்பட்டார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
நவாபின் அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பி கர்னல் ஹெரான் அவர்கள் வழங்கிய சிறிய தொகையை தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புப் பரிசாக வைத்துக்கொண்டார். ஆனால் உண்மையில் நவாபின் அதிகாரிகள் அதிகமான தொகையை வசூலித்து விட்டு அதை கம்பெனியின் கடன் கணக்கில் பதிவு செய்துவிட்டனர். கம்பெனி கொடுத்த உத்தரவை கணக்கில் எடுக்காமல், நவாபின் அதிகாரிகள் கொடுத்த உத்தரவின் அடிப்படையில் அவர் செயல்பட்டுள்ளார் என்பதையும் விசாரணைக்குழு பதிவு செய்தது. மேலும், கம்பெனியின் சார்பாக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்ற தகவல்களைப் பெறுவதற்காக கேப்டன் லீ, நவாபின் பக்சி மற்றும் மான்செல் ஆகிய மூவரையும் விசாரணைக்குழுவின் முன் மறுநாள் காலையில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து பெறப்படக்கூடிய தகவல்களை நவாப் வழங்கிய கணக்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.”11
திருநெல்வேலியின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்காக, 16 செப்டம்பர் 1755 அன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் விசாரணைக்குழு, கேப்டன் லீ, கேப்டன் லின், மான்செல் மற்றும் நவாபின் பக்ஸியால் நியமிக்கப்பட்ட ஒரு பிராமணர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 17 செப்டம்பர் 1755 அன்று, கேப்டன் லீ முதலில் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார். விசாரணையில், திருநெல்வேலிப் பாளையக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் உத்திரவாதப் பத்திரங்கள் பெறப்பட்டது குறித்து விளக்கினார். சாட்சிப் பதிவின் சுருக்கம்: ”...கம்பெனியின் கணக்கில் பணம் பெறப்படவில்லை என்றும், உத்திரவாத பத்திரங்கள் மட்டுமே பெறப்பட்டது என்றும் பதிவு செய்தார். ஆனால் படை அணிவகுப்பின் பொழுது பக்ஸி மற்றும் முதலியார் பல்வேறு தொகைகளைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. பக்சியும், நானும் சேர்ந்து 73,000 ரூபாய் பணத்தை பாளையக்காரர்களிடமிருந்து வசூலித்தோம். அவையனைத்தும் பரிசாக தரப்பட்டவை என நவாபின் அதிகாரிகள் கூறினர். இருந்தபொழுதும், அவ்வாறு பெறப்பட்ட பணத்திற்கு கணக்கு எழுதி இரசீது தரும்படி நான் தொடர்ச்சியாக கர்னல் ஹெரானை வலியுறுத்தினேன். வெறும் 40,000 ரூபாய் பணத்தை எந்தவித கணக்கும் எழுதாமல் என் கையில் ஒப்படைத்துவிட்டு மீதிப்பணத்தை நவாபின் படையினரும், கம்பெனியின் படையினரும் தமக்குள் பிரித்து வைத்துக்கொள்வோம் என்ற ஆலோசனையை நவாபின் பக்சி வழங்கினார். ஆனால், அந்த ஆலோசனையை நான் ஏற்க மறுத்துவிட்டேன். ஒட்டுமொத்த பணத்தையும் நாங்கள் தங்கியிருந்த இராணுவ முகாமிற்கு எடுத்துவந்தேன். மேலும், அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று கர்னல் ஹெரானிடம் கேட்டதற்கு அந்தப் பணத்தை மாபூஸ் கான் தன்னிடம் கேட்டுள்ளதாக கர்னல் ஹெரான் கூறினார். பாளையக்காரர்கள் இவ்வாறு பெறப்பட்ட வரிப் பணத்தை நவாபிற்கு அன்பளிப்பாக வழங்குவது என்பது நெடுங்காலமாக பின்பற்றக்கூடிய வழக்கமாகும் என்றும் கூறினார். இதனடிப்படையில் கர்னல் ஹெரான் என்னிடமிருந்த பணத்தை மாபூஸ் கானிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் நான் பணத்தை மாபூஸ்கானிடம் ஒப்படைத்தேன். அந்தப் பணத்திலிருந்து 3,000 ரூபாயை கர்னல் ஹெரானின் உத்தரவை நான் நிறைவேற்றியதற்காகவும், மேலும் 2,000 ரூபாயை முந்தைய நேரங்களில் நான் நிறைவேற்றிய கடமைகளுக்காகவும் வழங்குவதாகக் கூறி மாபூஸ்கான் எனக்கு கொடுத்தார். இந்தப் பணத்தை நான் மதுரையில் பெற்றுக்கொண்டேன்.”12 விசாரணைக்குழுவின் முன் கேப்டன் லீ வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், 15 மற்றும் 16 மே 1755 ஆம் தேதிகளில் ரசீது எதுவும் பதிவு செய்யாமல், மாபூஸ் கான் வசூலித்து பிரித்துக்கொடுத்த முழுமையான பண விவரம் மற்றும் ஈவுத்தொகை குறித்த கணக்கு பின்வருமாறு:
அட்டவணை: III :1
மாபூஸ்கானால் வசூலித்து பிரித்துக்கொடுக்கப்பட்ட பணத்திற்கான கணக்கு
Source: Report on the Records of Fort St. George: Military Department Diary and Consultation, 1755, Enquiry dated 17th September 1755 (Madras: Government Press, 1912), p.158.
அதன்பிறகு, கர்னல் ஹெரான் திருநெல்வேலிக்குச் சென்ற பின்னர், மதுரையின் படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த கேப்டன் லின் மதுரையின் கோட்டைக்கு பொறுப்பாக இருந்த கிள்ளேதாரரிடம் மற்றும் கொத்துவால் ஆகியோரிடமிருந்து 75,000 ரூபாய் பணத்தைத் தருமாறு வலியுறுத்தினார். ஆனால், 20,460 ரூபாய் மட்டுமே தங்கள் பங்காக வழங்கினார்கள். மேலும், நவாபின் பக்சியிடமிருந்து 500 ரூபாயை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டார்.13 பின்னர், மான்செல் மற்றும் நவாபின் பக்ஸியின் பிராமண உதவியாளர் ஆகியோர் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டனர். அவர்கள் இருவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பெறப்பட்ட நிதி பரிவர்த்தனை குறித்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்த பொழுது ரூபாய் 19,689 ¾ - எந்தவிதப் பதிவும் செய்யப்படாமல் மற்றும் கம்பெனிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்த முரண்பாடை கண்டுபிடித்தனர்.14
கேப்டன் லீ, கேப்டன் லின், மான்செல் மற்றும் நவாபின் பக்சியின் பிராமண உதவியாளர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்து விசாரணைக்குழு கர்னல் ஹெரானுக்கு எதிராக மேலும் மூன்று குற்றச்சாட்டுகளை கூடுதலாகப் பதிவு செய்தது. முதலாவதாக, திருநெல்வேலியில் கர்னல் ஹெரான் இருக்கும் பொழுது மாபூஸ் கான் தான் வழங்கிய ரூபாய்
1,30,000-க்கான ரசீதுகள் வைத்திருந்தார். அந்தப் பணத்தில் கர்னல் ஹெரான் ரூபாய் 1,00,000 மட்டும் கம்பெனியின் கணக்கில் வரவு வைத்துவிட்டு, மீதமுள்ள தொகையான ரூபாய் 30,000 கையாடல் செய்துவிட்டார் என்பது தெரிய வந்தது. மேலும், கர்னல் ஹெரான் அளித்த வாக்குமூலத்தில் தனது அனுமதியின்றி மாபூஸ் கான் எந்தவித நிர்வாக வேலைகளிலும் தலையிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இரண்டாவதாக, நவாபின் பக்ஸி மற்றும் கேப்டன் லீ ஆகியோர் பாளையக்காரர்களிடம் இருந்து ரொக்கமாக வசூலித்த எழுபத்து மூன்றாயிரம் ரூபாயை கர்னல் ஹெரானிடம் தான் ஒப்படைத்திருந்தார்கள். இருந்தபொழுதும், ....அந்தப் பணம் கம்பெனிக்கு உரியது இல்லை என கர்னல் ஹெரான் அவர்களிடம் பதிவு செய்திருந்தார். இந்த விவகாரத்தில் தலையிட விருப்பமில்லாமல் கேப்டன் லீ - யை அந்தப் பணத்தை மாபூஸ் கானிடம் வழங்குமாறு அனுப்பிவைத்தார். கம்பெனியின் சார்பாக பொறுப்பாக வரி வசூலித்து அந்தப் பணத்தை கம்பெனியிடம் சேர்க்க வேண்டிய பணியிலிருந்த கர்னல் ஹெரான் தாம் வசூலித்த 73,000 ரூபாய் பணத்தை கம்பெனிக்கு உரிமையானது அல்ல என்று கூறி மாபூஸ் கானிடம் ஒப்படைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக விசாரணைக்குழு பார்த்தது. மேலும், கர்னல் ஹெரான் தனது தனிப்பட்ட நலனுக்காக ரூபாய் 20,000-யை கையாடல் செய்திருந்ததை விசாரணைக்குழு கண்டுபிடித்தது. மூன்றாவதாக, நவாப் மற்றும் கம்பெனியினர் பராமரித்து வந்த நிதி பரிவர்த்தனை பதிவேடுகளில் ஏற்பட்டிருந்த கணக்கு முரண்பாடுகளுக்கு கர்னல் ஹெரான் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.15 இதன் தொடர்ச்சியாக 19 செப்டம்பர் 1755 அன்று, கம்பெனியின் செயலாளர் கர்னல் ஹெரானுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்கும்படி கோரினார். 22 செப்டம்பர் 1755 அன்று, கர்னல் ஹெரான் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழங்கிய பதில்கள் பெரும்பாலும் அவரது முந்தைய பதில் கடிதங்களுக்கு முற்றிலும் முரண்பாடுகளுடன் இருந்தன.16
29 செப்டம்பர் 1755 அன்று, கர்னல் ஹெரானின் பணி நடத்தை குறித்து விசாரிப்பதற்காக கம்பெனியின் பொதுக் குழுவின் தலைவர் வாரியத்தின் உறுப்பினர்களின் குழுவைக் கூட்டினார். கர்னல் ஹெரான் மீதான குற்றச்சாட்டுகள் அவருடைய கடிதங்களில் உள்ள பதில்கள் மற்றும் இரசீதுகளில் உள்ள கணக்குகளின் விபரங்கள் ஆகியவற்றை மிகக்கவனமாக ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் கர்னல் ஹெரான் கம்பெனியின் உத்தரவுகளை மீறியதற்கும், அவரது படையெடுப்பின் நோக்கங்களை திசைதிருப்பியதற்கும் அவர் குற்றவாளி என்று வாரியம் கூட்டாக ஒரு ஒருங்கிணைந்த முடிவை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவர் கர்னல் அலெக்சாண்டர் ஹெரானை வாரியத்திலிருந்து இடைநீக்கம் செய்தார்.17 மேலும், கர்னல் ஹெரானின் நடத்தையின் பல பகுதிகளை கம்பெனி நிர்வாகம் கணக்கில் எடுத்துக்கொண்டது. குறிப்பாக நத்தம் காட்டில் நடந்த போரில் கர்னல் ஹெரான் ஒரு அதிகாரியைப் போல் இல்லாமல் செயல்பட்டதை உன்னிப்பாகக் கவனித்தது. இதன் அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்தின் முன் போர்க் குற்றம் புரிந்தவராக கர்னல் ஹெரான் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையின் முடிவில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.18
இறுதியாக
திருநெல்வேலி பாளையக்காரர்களை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு, ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ உதவியோடு, கர்நாடக நவாப் அரசாங்கம் எடுத்த முதல் முயற்சி கர்னல் அலெக்சாண்டர் ஹெரானின் நிதி முறைகேடுகளால் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர், 12 மார்ச் 1756 அன்று திருநெல்வேலி மறவர் பாளையக்காரர்கள் மீண்டும் நவாப் நிர்வாகத்திற்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி மறவர் பாளையக்காரர்கள் செய்து வரும் கிளர்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நவாபின் சகோதரர் மாபூஸ் கானுக்கு உதவி செய்திட ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி முகமது யூசுப் கானை நியமித்தது. இதற்காக கம்பெனி 1,000 சிப்பாய்களையும், இரண்டு பெரிய பீரங்கிகளையும் முகமது யூசுப் கானுக்கு வழங்கியது. இந்த நடவடிக்கை தொடர்பான செய்தி நவாப் முகமது அலிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ஈடாக திருநெல்வேலி பாளையக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளிலிருந்து நேர் பாதியை முகமது யூசுப் கானிடம் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்க வேண்டும். இந்தப் பணம் கம்பெனிக்கு வழங்கப்பட வேண்டிய கடனில் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையைப் பாராட்டி நவாப் முகமது அலி கம்பெனி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுதல் கடிதத்தை கீழ்க்கண்டவாறு அனுப்பினார், சுருக்கம்: “கம்பெனிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய கடனைச் செலுத்தும் விதமாக திருநெல்வேலி நாட்டின் வருவாயில் பாதியை முகமது யூசுப் கானிடம் மாபூஸ் கான் செலுத்துவதற்கு தான் கடிதம் எழுத வேண்டும் என்று தாங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருநெல்வேலி நாடு பிரச்சினையில் இருக்கிறது. மேலும், அந்த நாட்டிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் அந்தப் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் இராணுவ துருப்புக்களின் செலவுகளுக்குக் கூட சரியாக இருக்காது. அதேசமயம், அந்நாட்டின் பிரச்சினைகளை சரி செய்வதற்கு முகமது யூசுப் கான் தலைமையில் அனுப்பி வைக்கப்படும் படைகளைச் சார்ந்து மாபூஸ் கானின் படைகளை குறைக்கவும் முடியாது. இந்த விசயத்தில் வசூலிக்கப்படும் ஒவ்வொரு தொகையும் இராணுவ துருப்புகளின் கணக்கில் தான் செலவு செய்யப்படும். திருநெல்வேலியிலிருந்து நீங்கள் பணத்தைப் பெற வேண்டுமானால், மாபூஸ் கான் தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்ற முடிவை நோக்கி நீங்கள் சென்றால் அதற்கு பொருத்தமான எண்ணிக்கையுடன் கம்பெனி உதவ வேண்டும். அதே சமயம், கம்பெனி படைகளின் உதவி மூலம் திருநெல்வேலி நாட்டிலுள்ள பிரச்சினைக்குரிய விவகாரங்களை சரிசெய்து, வரி வருவாயை வசூல் செய்யும் பட்சத்தில், வசூலிக்கப்பட்ட தொகையில் ஒரு பாதியை கம்பெனிக்கும், மற்றொரு பாதியை என்னுடைய செலவிற்கும் வைத்துக்கொள்ள உறுதியளிக்க வேண்டுகிறேன். ஒருவேளை கம்பெனி குறைந்தபட்ச எண்ணிக்கையில் படைவீரர்களை அனுப்பி, வரி வருவாயைக் கோரினால், திருநெல்வேலியில் இருக்கும் விவகாரத்தில் மேலும் குழப்பங்கள் தான் நேரக்கூடும். ஆகவே தயவுகூர்ந்து இந்த விவகாரத்தினை தீவிரமாக பரிசீலனை செய்யவும், மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்களோ அவற்றை எனக்கு எழுதுங்கள். அதன்படி நான் நடந்து கொள்கின்றேன். எனவே, முகமது யூசுப் கானுக்கு விரைந்து திருநெல்வேலியில் கிளர்ச்சி செய்துவரும் பாளையக்காரர்களை ஒடுக்குவதற்கு படைநடத்துவதற்கான உத்தரவை கடிதமாக அனுப்பும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் எனக்கு வந்த வண்ணம் உள்ளன.”19
Endnotes
1. K. Rajayyan, “Rise and Fall of the Poligars of Tamilnadu,” Journal of Madras University, Vol. 46, 1974, pp. 119 – 120.
2. Report on the Records of Fort St. George: Military Department Country Correspondence, 1755, Letter dated 29th November 1755 (Madras: Government Press, 1912), p. 14; see also Robert Caldwell, A Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras: From the Earliest Period to its Cession to the English Government in A.D. 1801 (Madras: Government Press, 1881), pp. 96 - 97.
3. S. Kadhirvel, A History of the Maravas, 1700 – 1802 (Madurai: Madurai Publishing House, 1977), p. 97.
4. Report on the Records of Fort St. George: Military Department Diary and Consultation, 1755, Letter dated 4th February 1755 (Madras: Government Press, 1912), p.25; see also Richard Owen
Cambridge, An Account of the War in India Between English and French on the Coast of Coramandel from the Year 1750 to the Year 1760, p. 83; see also Robert Orme, History of the Military Transactions of the British Nation in Indostan: From the Year MDCCXLV, Vol. I (London: J. Nourse, 1763), p. 377.
5. A. J. Stuart, A Manual of the Tinnevelly District in the Presidency of Madras (Madras: Government Press, 1879), p. 48.
6. Report on the Records of Fort St. George: Military Department Diary and Consultation, 1755, Report dated 17th September 1755, pp. 157 - 162; see also S. Kadhirvel, A History of the Maravas, 1700 - 1802, pp. 105 - 106.
7. Robert Orme, History of the Military Transactions of the British Nation in Indostan: From the Year MDCCXLV, Vol. I, p. 390.
8. Report on the Records of Fort St. George: Public Department Diary and Consultations, 1755, Report dated 29th September 1755 (Madras: Government Press, 1942), p. 262.
9. Report on the Records of Fort St. George: Military Department Diary and Consultation, 1755, Report dated 5th September 1755, pp. 144-146.
10. Ibid for Letter dated 15th September 1755, p. 153.
11. Ibid., pp. 153 – 154.
12. Ibid for Report dated 17th September 1755, p. 157.
13. Ibid., pp. 158 – 159.
14. Ibid., p. 160.
15. Ibid for Report dated 17th September 1755, pp. 157-161.
16. Ibid for Letter dated 24th September 1755, p. 164.
17. Report on the Records of Fort St. George: Public Department Diary and Consultations, Report dated 29th September 1755, pp. 262 - 263.
18. Ibid., p. 263; see also Ibid for Letter dated 15th October 1755, pp. 280 – 281; see also A.J. Stuart, A Manual of the Tinnevelly District in the Presidency of Madras, p. 49.
19. Report on the Records of Fort St. George: Military Department Country Correspondence, 1756, Letter dated 12th March 1756 (Madras: Government Press, 1913), p. 33.
Notes
பேஷ்குஷ் - கப்பத்தொகை
கிள்ளேதார் - கோட்டையின் கவர்னர்
கொத்துவால் - கோட்டையின் தலைவர்
கட்டுரையாளர்கள்:
கி. மகாராஜ பாரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், நவீன வரலாற்றுத்துறை, வரலாற்றுப்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
& பேரா ஜே.சண்முகராஜா, உதவிப் பேராசிரியர், நவீன வரலாற்றுத்துறை, வரலாற்றுப்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை