பிரிட்டிஷ் ஆட்சி தொடர்ந்த இராஜதுவேஷ வழக்கு

“பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது. பெரியார் இயக்க வரலாற்றிலிருந்து ஒரு சில நிகழ்வுகளை மட்டும் தேர்வு செய்து பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

periyar 4801932ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ பத்திரிகையில் “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்” என்று பெரியார் எழுதிய கட்டுரைக்காக அவர் மீது ‘இராஜ துவேஷ’ வழக்கை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி போட்டது. கட்டுரை அப்படி ஒன்றும் கடுமையானதும் அல்ல. “ஏழை எளிய மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கு, பரம்பரை மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் அரசு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது” என்பதே கட்டுரையின் உள்ளடக்கம் (குடிஅரசு, 29.10.1933). பெரியார் மட்டும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையின் பதிப்பாளர் - அச்சிடுபவராக இருந்த பெரியாரின் தங்கை கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றம் பெரியாருக்கு 9 மாத தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் செலுத்த மறுத்தால் மீண்டும் ஒரு மாதம் காவல். பெரியார் வழக்கம்போல் அபராதம் செலுத்தவில்லை. கண்ணம்மாளுக்கு 6 மாதம் தண்டனை; 300 ரூபாய் அபராதம், செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை.

பெரியார் எந்த ஒரு வழக்கிலும் வழக்கறிஞர் வைத்து எதிர் வழக்காடுவதில்லை. பிணை கேட்பதும் இல்லை. இதை இறுதி வரை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார். மாறாக வழக்கம்போல் நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்தார். ‘அடக்கு முறைகள்’ என்பதை பெரியார் எப்படிப் பார்த்தார்? அது குறித்து அவரது கண்ணோட்டம் எதுவாக இருந்தது என்பதற்கு சான்றாக அவரது வாக்குமூலத்தின் ஒரு பகுதியை சுட்டிக் காட்டுகிறேன்.

“இந்த நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி; அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று, நியாயத்தையும் சட்டத்தையும் இலட்சியம் செய்து வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி; இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்”

- என்று அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.

அடக்குமுறைகளை தனது தோழர்கள் வரவேற்க வேண்டும் என்று பெரியார் கூறுவதற்கான காரணம் என்ன? தனது இலட்சியங்கள் மக்களிடம் சென்றடைவதற்கு - இந்த அடக்குமுறைகள் பயன்படும். அதற்காகவே ஆதரிக்க வேண்டும் என்று உறுதிபட நம்பினார். இது குறித்து எழுதும்போது பெரியார் கூறுகிறார்: “இதற்காக நாம் வருத்தப்படவில்லை; கவர்ன்மென்டார் மீதும் நிஷ்டுரப்படவும் (வருத்தமடையவும்) இல்லை. இதுவரை இப்படிச் செய்யாமல் விட்டு வைத்திருந்ததற்கு நன்றி செலுத்தவும் மகிழ்ச்சியடையவும் கடமைப்பட் டுள்ளேன்” என்று எழுதினார். காலையில் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துப் போய் மதிய உணவு போட்டு மாலையில் மண்டபத்தை விட்டு விடுதலை செய்யப்பட்டு வருவதற்கே தியாகப் பட்டியல் தயாரிக்கும். இன்றைய சூழலில் பெரியாரின் பார்வை எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இராஜ துவேஷ வழக்கைத் தொடர்ந்து பெரியார் நடத்திய ‘பத்திரிகை அலுவலகமும் பெரியாரின் தங்கை கண்ணம்மாள் வீடும் சோதனை போடப்படுகிறது. இரவு தொடர்வண்டியில் இருவரையும் ஏற்றி கோவைக்குக் கொண்டு போகிறார்கள். கண்ணம்மாள் மேல்முறையீடு செய்கிறார். பெரியார் மேல் முறையீடு செய்யவில்லை. 1933 ஜன.4இல் கைது செய்யப்பட்ட பெரியார் மே 15இல் விடுதலை செய்யப்படுகிறார். ஈரோட்டில் பெரியாருக்கு ஒரு வரவேற்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பெரியார் என்ன பேசினார் என்பதுதான் மிகவும் முக்கியம். இளைய தலைமுறை இந்த வரலாறுகளை அறிய வேண்டும் என்பதற்காகக் கூறு கிறேன். பெரியார் பேச்சை சாராம்சமாக இப்படி தொகுத்துக் கூறலாம்.

  1. இது பாராட்டக் கூடிய பிரச்சினை அல்ல;
  2. இந்த சிறைவாசம் நானாகப் போய் ஏற்றுக் கொண்டதும் அல்ல; சிறைக்குப் போவதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்று கூறிய பெரியார், தொடர்ந்து “குடிஅரசு பத்திரிகையில் இப்போது நான் எழுதியது ஒரு சாதாரணமானதும் சப்பையானதுமான வியாசம் தான். மற்றபடி ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் ‘குடிஅரசு’ பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக் கணக்கில் தண்டிக்கக் கூடியதும் நாடு கடத்தக் கூடியதுமான விசயங்கள் நூற்றுக்கணக்காகத் தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக் காலத்தில் எல்லாம் கவனித்ததாகத் தெரியவில்லை” என்று கூறி விட்டு அப்படி சர்க்கார் ஏன் கவனிக்காமல் விட்டது என்பதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

“காங்கிரசுக்கு பாமர ஜனங்களிடம் இருந்த செல்வாக்கின் பயனால் நமதுகட்டுரைகளை பொது ஜனங்கள் இலட்சியம் செய்ய மாட்டார்கள் என்கிற தைரியத்தால் சர்க்கார் அப்போது சும்மா இருந்தார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் இப்போது அப்படி சிறிய விஷயங்களையெல்லாம் வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதென்பது நன்றாய் தெரிகிறது. இதிலிருந்து நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் சுயமரியாதைக் கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் சர்க்கார் இப்போது உணர்ந்ததாகத் தெரிகிறது” - என்று கூறுகிறார்.

விருப்பு வெறுப்பற்ற இத்தகைய சுயமதிப்பீட்டை ஒரு தலைவர் முன் வைக்கிறார் என்றால், அதில் அடங்கியுள்ள நேர்மையின் உச்சத்தை கருதிப் பார்க்க வேண்டும். ‘ஆகா, அடக்குமுறை வந்துவிட்டது; மக்கள் ஆதரவு நமது பக்கம் திரும்புவதை சர்க்கார் உணரத் தொடங்கிவிட்டது’ என்று அடக்குமுறையைக் கொண்டாடி மகிழ்கிறார்.

தனது சிறை வாழ்க்கை ஒன்றும் அப்படி கஷ்டமானதும் அல்ல என்றும் அதே பேச்சில் கூறுகிறார்: “இப்போது சிறையில் அதிகமாகக் கஷ்டம் இல்லை. 1921இல் நானும் தோழர்களும் கைதிகளாக்கப்பட்ட போது கையில் ‘சூட்டை’ போடுவதும் துன்பப்படுத்துவதுமான தொல்லைகள் மிகுந்திருந்தன. அந்தக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் இப்போது ஒன்றும் இல்லை. அப்போது இங்கே - இந்தக் கூட்டத்தில் இருக்கும் தோழர் ஜெயாவை ஜெயிலிலிருந்து வண்டியில் போட்டு வெளியில் அழைத்து வரப்பட்டது. (நடக்கக்கூட முடியாத நிலை) என்னைப் பொறுத்தவரை இப்போது அங்கு (சிறையில்) வெகு மரியாதையாக சாமி, பாபுஜி என்று உள்ளிருப்பவர்களாலும் அழைக்கப்பட்டதோடு, ஜெயில் அதிகாரிகளும் பயந்து நடுங்கும்படியான நிலைமையிலும் இருக்கிறது” - என்று கூறிவிட்டு, மேலும் பேசுகிறார், “நான் வெளியே வந்ததில் ஏன் வந்தோம் என்றே தோன்றுகிறது........ நான் ஏற்கனவே கைது செய்யப்பட்டது எல்லாம் சிவில் வழக்குகளில் தான். அதுவும் காய்ச்சல் காரணமாக இரண்டு மாதத்துக்குள் விடுதலை செய்யப்பட்டேன். அதனால் ‘தேசபக்தன்’ என்ற பெயரை அடைய முடியவில்லை. இப்போது இராஜ துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்து சர்க்கார் அந்தக் குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள்” (இப்போது நான் ‘தேசபக்தன்’ என்றாகி விட்டேன்) என்று கூறுகிறார். என்ன ஒரு கேலியும் கிண்டலும் இதில் புதைந்திருக்கிறது பாருங்கள். பேச்சை முடிக்கும்போது, “இதன் பயனால் அறியாமை மிகுந்த பாமர ஜனங்களால் நான் பாராட்டப்படக் கூடும். மற்றபடி அறிவாளிகள் நான் ஜெயிலுக்குச் சென்றதைப் பாராட்ட யாதொரு விஷயமும் இல்லை” என்று கூறி முடிக்கிறார்.

சிறைவாசத்தைப் பாராட்டி வரவேற்க ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய பேச்சு இது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இவ்வளவு மகிழ்ச்சியாக தனது சிறைவாசத்தையும் அடக்கு முறைகளையும் கொண்டாடிய பெரியாரின் உடல்நிலை அவர் சிறைக்குப் போவதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதையும், அவர் எழுத்து வழியாகவே நாம் அறிய முடிகிறது.

“நமது உடல்நிலை, 5, 6 மாதமாய் மிகவும் அதிகம் சீர்கெட்டு விட்டது. மயக்கமும் மார்புவலியும் மிக அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம்; காதுகளும் சரியாகக் கேட்பது இல்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன், இனி உயிர் வாழ்வதும் உலகுக்குப் பாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் ‘குடிஅரசு’ நின்று போக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டதுபோலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ள வேண்டியதாகும்” - இதுதான் பெரியார் சிறை செல்வதற்கு முன்பு இருந்த அவரது உடல் நிலை; மன நிலை.

பெரியாருக்கு அப்போது வயது 54தான். அதற்குப் பிறகு 93 வயது வரை அவர் வாழ்ந்தார் என்றால் பொது வாழ்க்கையும் போராட்டமும் தந்த உற்சாகம்தான். அவரது ஆயுளை நீடிக்கச் செய்திருக்கிறது.

பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்தில் பயணித்து நீதிக்கட்சி, திராவிடர் கழகமானபோது, விலகி நின்ற ஆற்றல்மிகு எழுத்தாளர் மணவை திருமலைசாமி; 1938 இந்தி எதிர்ப்புப் போரில் வழி நடைப் படையில் பங்கேற்ற முன்னணி தளபதி; அவர் நடத்திய ‘நகரதூதன்’ ஏட்டில் அவரது எழுத்துகள் மிகப் பெரும் வாசகர் கூட்டத்தை அவர்பால் ஈர்த்தது. பெரியார் இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.

“கைது செய்யப்பட்டது தோழர் இராமசாமிக்கு ரெட்டை சந்தோஷம். இந்த சாக்கில் உள்ளே போய்விட்டு வந்தால் ஊக்கம் ரொம்பவே ஏற்படும் என்பது அவரது ஆசை................ அப்பப்பா இந்தப் பழுத்த வயதில் இவ்வளவு பிடிவாதம் கூடாது. எதிர் வழக்காடக் கூடாது என்பதில்தான் இவ்வளவு முரட்டுத்தனம் என்றால், வாக்குமூலமாவது கொஞ்சம் ஈனஸ்வரத்தில் கொடுத்திருக்கக் கூடாதா? குடிஅரசு தலையங்கம் ஒரு படியைத் தாண்டியிருந்தது என்றால், இவரது வாக்குமூலம் ஒன்பத்திரண்டு படியையும் தாண்டிவிட்டது.

“கடைசியாக பப்ளிக் பிராசிகியூட்டர் தனது ‘ஆர்குமென்டைப் (வாதங்களை)’ பேசும்போது பார்க்க வேண்டுமே, இவரது குறும்புத்தனத்தை. அவர் பேசும்போது, பத்திரிகை வாசகங்களைப் படித்துக் காட்டி இந்த இடத்தில் இராஜ துவேஷம் இருக்கிறது. இந்த இடத்தில் பொதுவுடைமையில் பிரச்சாரம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டும் போது, தோழர் இராமசாமி ‘ஸ்பிரிங்’ பொம்மையைப் போல் தலையை அசைத்து அசைத்து ஆட்டிக் கொண்டு, அதற்குத் துணையாக ஆள்காட்டி விரலையும் பலகையில் அடித்துக் கொண்டு ‘பப்ளிக் பிராசிகியூட்டர்’ சொல்வதெல்லாம் வாஸ்தவம் எனச் சொல்லுவதுபோல் தலையாட்டி வந்தார். தீர்ப்புக் கூறியதும் அவரது முகம் பொலிவு படம் பிடிக்கக்கூடியதாயிருந்தது” என்று அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டினார்.

இராஜதுரோக வழக்கு பாய்ந்ததற்காக அவ்வளவு மகிழ்ந்து உற்சாகமடைந்த பெரியார், இந்த கைதின் வழியாக ‘எனக்கு தேசபக்தன்’ பட்டம் கிடைத்து விட்டது என்று வரவேற்பில் கூறியுள்ள நக்கலையும் புரிந்து கொள்ள முடியும்.

(22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து.)

(தொடரும்)

Pin It