“சிறுவர்கள் தட்டி விளையாடும் பலகைக் கதவின் ஓசையிலிருந்து, தம்பட்டம் பேரிகை மத்தளம், மிருதங்கம் தபிலா உடுக்கை கைத்தாளம் சேமக்கலம் சல்லரிமணி சலங்கை முதலிய கொட்டும் கருவிகளும், ஊதி விளையாடிய இலைக்குழல்களிலிருந்து, தாரை ஒத்து நாகசுரம் முகவீணை மகடி புல்லாங்குழல் கொம்பு சங்கு முதலிய துளைக் கருவிகளும், பல்லினால் கடித்து கையினால் பிடித்து இழுத்து ஒரு கையினால் மீட்டிப் பிறந்த இனிய நாதத்திலிருந்து, துந்தினாமா கின்னரி தம்புரு அகப்பைக் கின்னரி சுந்தரிவீணை ருத்ரவீணை பேரியாழ் மகரயாழ் முதலிய மீட்டும் தந்தி வாத்தியங்களும் சிறுவர் விளையாட்டி லிருந்தே தோன்றி, படிப்படியாய் விருத்தியாயின வென்று நாம் அறிகிறோம்”. (கருணாமிர்தசாகரம். முதல் புத்தகம். முதல் பாகம். 2009:119)

தமிழிசை வரலாற்றில் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) உருவாக்கிய ‘கருணாமிர்தசாகரமும்’, விபுலானந்தர் உருவாக்கிய ‘யாழ்நூலும்’ மயில்கற்கள். கருணாமிர்த சாகரம் 1917இல் வெளிவந்தது. நூல் வெளிவந்த நூற்றாண்டு இது. அந்த நூலை, ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய வரலாற்றை மீள்நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். அந்த நூலில் பண்டிதர் பேசியுள்ள செய்தி களை நூற்றாண்டு கடந்த வரலாற்றோடு இணைத்துப் பேச வேண்டும். அந்த நூலின் வரலாற்று முக்கியத் துவத்தை பின்வருமாறு தொகுத்துக் கொள்ள இயலும்.

- பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் திராவிட மொழிக்குடும்பம் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த நூற்றாண்டில்தான் திருக்குறளும் (1812), தொல்காப்பியமும் (1847), சங்க இலக்கியங்களான கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889) ஆகிய வையும் அச்சு வடிவம் பெற்றன. சிலப்பதிகாரமும் (1892) அச்சானது. இதன் மூலம் தமிழ் மொழியின் செவ்வியல் கூறுகள் உலக அளவில் அறியும் சூழல் உருவானது. இப்பின்புலத்தில் தமிழிசை குறித்த தமது ஆய்வை மேற்கொண்டு வந்த பண்டிதர், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ் நிலம் ஆகியவை குறித்த ஆய்வையும் மேற்கொண்டார். கருணாமிர்த சாகரம் முதல் பகுதியில் மேற்குறித்த இனம், மொழி, நிலம் ஆகியவற்றின் தொன்மை குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இசை குறித்த ஆய்விற்கு அடிப்படையாக மேற்குறித்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார்.

- கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியில் புழக்கத்தில் இருக்கும் கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் உள்ள உறவு குறித்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார். சுமார் இரண்டாயிரத்தைநூறு ஆண்டுகளில் தமிழ்க்கலை வரலாற்றில் இசைக் கலையின் பல்வேறு பரிமாணங்களை விரிவாகப் பதிவு செய்கிறார். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள தொடர்புகளை விரிவாகப் பேசுகிறார். இந்தப் பின்புலத்தில் கருநாடக இசை என்று கருதப் படும் மரபு என்பது தமிழிசை மரபுதான் என்ற கருத்தை முன்வைக்கிறார். இதற்கான விரிவான உரையாட லாகவே இரண்டாம் பகுதி அமைந்துள்ளது.

- கர்நாடக இசை மரபு என்பது தமிழிசை மரபுதான் என்ற கருதுகோளை நிலைபெறு கொள்ளச் செய்யும் பணிகளில் ஈடுபடுகிறார். பல்வேறு இசை மாநாடு களை நடத்துகிறார். இந்தியா முழுதும் இருக்கும் இசை அறிஞர்களைப் பங்கேற்க செய்து, அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்கிறார். தஞ்சையில் நிலையான மன்றம் ஒன்றையும் உருவாக்குகிறார். தனது ஆய்வு வழி கண்டறிந்தவற்றை நடைமுறைப் படுத்தும் பணியை மேற்கொள்கிறார். இவ்வகை யான செயல்கள் குறித்த விரிவான பதிவாக மூன்றாம் பகுதி அமைந்துள்ளது.

-     இறுதிப் பகுதியில் கர்நாடக இசை மரபில் கூறப்படும் 22 அலகுகள் என்பதை ஏற்றுக் கொள்ளாது, 24 அலகுகள் என்று நிறுவுகிறார். இதனை சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார். இதன் மூலம் யாழிசை மரபு குறித்த ஆய்வையும் முன்னெடுக்கிறார். பண்டைத் தமிழ் மரபின் இசை வரலாற்றை இவ்வகையில் புதிதாகக் கட்டமைக்கிறார்.

***

இசையின் பழைமையை உறுதிப்படுத்துவதற்காக, உலகத்தோற்றம் தொடர்பான பல்வேறு தொன்மைக் கதைகளை பண்டிதர் அறிமுகப்படுத்துகிறார். விவிலியத்தில் கூறப்படும் இசைக்கருவிகள் பற்றிய விவரங்களைத் தருகிறார். மோசே முனிவர், தாவீது ராஜா, சாலமோன் ராஜா, பாபிலோன் அரண்மனையில் வாசிக்கப்படும் இசை ஆகிய பல செய்திகளை விவிலியத்திலிருந்து எடுத்துப் பேசுகிறார். இதன் மூலம் இசையின் தொன்மை குறித்துச் சொல்கிறார். தமிழ் பேசும் பகுதிகளில் ஏற்பட்ட கடற்கோள்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்கிறார். ஜலப்பிரளயம் எனும் சொல்லை கடற்கோள் என்பதற்குப் பயன்படுத்துகிறார். இதன் மூலம் தமிழைப் போற்றிய முதல், இடை, கடைச்சங்கங்கள் கடலில் மூழ்கியதைச் சொல்கிறார். இறையனார் களவியல் உரையில் பேசப்படும் செய்தி களை அடிப்படையாகக் கொண்டு, மேற்குறித்த விவரணங்களைப் பதிவு செய்கிறார். லெமூரியா கண்டம் குறித்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கோள் காட்டு கிறார். அழிந்துபோன லெமூரியாவில்தான் தமிழ்மொழி புழக்கத்தில் இருந்ததாகக் கூறுகிறார். இதன் மூலம் தமிழ்மொழியின் தொன்மையைப் பதிவு செய்கிறார்.

சென்னை இராஜதானியின் நிர்வாகக் கையேடு, அபிதான சிந்தாமணி, கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், வின்சுலோ அகராதியில் உள்ள செய்திகள், மோனியர் வில்லியம்ஸ் அவர்களின் தமிழ் - சமசுகிருத அகராதி ஆகியவற்றிலிருந்து விரிவான மேற்கோள்களைத் தருகிறார். ஆங்கிலத்தில் கொடுத்து விட்டு அதன் தமிழ் மொழியாக்கத்தையும் தருகிறார். இச்சான்றுகள் தமிழ்மொழியின் தொன்மையை உறுதிப்படுத்துவதாகக் கருதுகிறார்.

“உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியா கண்டத்திலுள்ளோர் நாகரிகமுடையவர்களாயிருந்திருக்க வேண்டு மென்று சரித்திரக்காரர் சொல்வதற்கிணங்க அக் கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய ராஜர்களும் சங்கப்புலவர்களும் பேசி வந்த பாஷையாகிய தமிழும், மிகுந்த தொன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவைகளாயிருந்தன. தமிழ் என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த தமி என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், தமிழ் என்னும் பதமானது, இனிமை, மதுரம் என்றும் அர்த்தப்படுமென்று நாம் அறிவோம்”. (கருணாமிர்தசாகரம். முதல்புத்தகம். முதல்பாகம்:2009:153)

இவ்வகையில் பண்டிதரின் கருணாமிர்தசாகரம் முதல் பகுதியில் உலகத்தில் இசையின் தொன்மை, விவிலியம் கூறும் இசையின் பழைமை, கடற்கோள்களினால் அழிந்து போன தமிழ்ச்சங்கங்கள், தமிழின் பழமை ஆகியவற்றைப் பதிவு செய்கிறார். தொல்பழங்காலத்தில் பேணப்பட்ட இசைமரபு பிற்கால மன்னர்கள் காலத்திலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்பதை முதல் பாகத்தின் இறுதிப் பகுதியில் பேசுகிறார். பிற்கால சோழர் காலத்தில் உள்ள இசை தொடர்பான கல்வெட்டுக்களை விரிவாக மேற்கோள் காட்டுகிறார். தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகளிலுள்ள இசை, நடனம் தொடர்பான விரிவான விவரணங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் தஞ்சையில் “சங்கீத வித்யா மகாஜன சங்கம்” உருவாக்கப் பட்டதற்கான காரணங்களைக் கூறுகிறார். தென்னிந்திய இசை வல்லுநர்கள் சுமார் நாற்பது பேர், இசைமரபை ஆதரித்த அரசர்கள், புரவலர்கள் ஆகியோரின் பட்டியல் களையும் தந்துள்ளார். ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்யும்போது, அதன் அடிப்படையாக அமையும் வரலாறு அவசியமாகும். அந்த வகையில் கருணாமிர்த சாகரத்தின் முதல் பகுதி அமைந்துள்ளது.

***

கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் சாரங்கர் என்பவர் எழுதிய ‘சங்கீதரத்னாகரம்’ எனும் நூல், தென்னிந்திய இசைமரபு குறித்து எழுதிய முதல் நூலாகப் பலராலும் கருதப்படுகிறது. இந்நூலில் பேசப்படும் இருபத்திரண்டு சுருதிகள் என்னும் அலகைப் பண்டிதர் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே அந்நூலில் சுருதிகள் குறித்துப் பேசப் படும் செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வை மேற் கொள்கிறார். அந்நூலை அடியற்றிப் பேசும் அறிஞர் களின் கருத்துக்களையும் ஆய்வு செய்கிறார். ‘விக்டோரிய கீதிகா’ என்ற சமசுகிருத இசை நூலை எழுதிய ராஜா சுரேந்திர மோகன தாகோர் மற்றும் கே.பி.தேவால், இ.கிளிமெண்ட்ஸ், சி.நாகோஜிராவ், சுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர், ‘சங்கீதரத்னாகரம்’ நூலில் பேசப்படும் இருபத்திரெண்டு சுருதிகளை எவ்வா றெல்லாம் புரிந்து பதிவு செய்துள்ளனர் என்பதை விரிவாகப் பேசுகிறார். மேற்குறித்த அறிஞர்களின் கருத்துக்களை சாரங்கர் கருத்துக்களோடு ஒப்பிட்டு பல்வேறு அட்டவணைகளை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இருபத்திரெண்டு சுருதிகள் குறித்துப் பேசு வோரின் கருத்துக்களைப் பதிவு செய்கிறார். சமசுகிருத மொழியிலுள்ள தென்னிந்திய இசை பற்றிய சாரங்கரின் நூலான சங்கீதரத்னாகரம் செய்திகளை, பண்டிதர் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்துவது என்பது, அடுத்த பகுதியில் 22 சுருதிகள் எனும் அலகுப் பதிலாக 24 சுருதிகள் எனும் அலகை அவர் கட்டமைப்பதற்கான அடிப்படையாக அமைகிறது. அவ்வகையான உரை யாடல் பூர்வ தமிழிசை குறித்தப் புரிதலுக்கு உதவுமென்றும் கருதுகிறார்.

பூர்வ தமிழிசை மரபில் காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பண்டிதர் ஆய்வு செய்கிறார். அவ்வாய்வில் தமிழிசை தொடர்பான சொற்கள் பலவும் சமசுகிருத சொற்களாக மொழிமாற்றம் பெற்றதாகக் கருதுகிறார். அவ்வகையான செயல்பாடுகள், சாரங்கரின் ‘சங்கீதரத்னாகரம்’ நூலில்தான் முதல்முதல் முன்னெடுக்கப் படுவதாகக் கருதுகிறார். தமிழிசையில் ஏற்பட்ட இவ்வகையான மொழிமாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், பண்டிதர் தமது ஆய்வைக் கொண்டு செல்கிறார். இக்கண்ணோட்டத்தில் அந்நூல் பேசும்  செய்திகளையும் அதனை வேறு பலர் எடுத்துக் கொண்ட முறையினையும் விரிவாகப் பதிவு செய்கிறார். இப்பகுதி கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியாக அமைகிறது.

***

“வடநாட்டில் வழங்கிவரும் கானத்திற்கும் சாரங்க தேவர் எழுதிய சங்கீதரத்னாகரத்திற்கும் எப்படி ஒற்றுமையில்லையோ அப்படியே தென்னாட்டில் சமஸ்கிருதம் தெலுங்கு தமிழ் முதலிய பாஷை களில் எழுதிய சங்கீத சாஸ்திரத்திற்கும், சங்கீத ரத்னாகரத்திற்கும் முற்றிலும் ஒற்றுமையில்லை யென்று அறிகிறோம். ஆனால் தென்னாட்டிலுள்ள சில சமஸ்கிருத நூல்களுக்கும் தென்னாட்டின் சங்கீதத்திற்கும் ஒற்றுமையிருக்கிறதென்று விசாரிக்கும் விவேகிகள் அறிவார்கள். ஊர்ந்து திரிகிற குழந்தை நடக்க பிரயத்தனப்படுவதும், பூமியில் நடக்கிற ஒருவன் ஆகாயத்தில் பறக்க விரும்புவதும் பெற்று வளர்த்த தாயைவிட்டு மனையாளிடத்தில் அதிகப் பிரியங்காட்டுவதும் இயற்கையென்று அறிவோம். அரைகுறையாய்த் தான் கற்ற அந்நிய பாஷையில் தனது தாயின் குணங்களை வர்ணிப்பது போலத் தென்னாட்டின் சங்கீத ரகசியங்களை அந்நியப் பாஷையிலெழுதி வைத்ததேயழிய வேறில்லை”. (கருணாமிர்த சாகரம். முதல்புத்தகம். மூன்றாம் பாகம்: 2009:10)

தென்னிந்திய இசை மரபு எவ்வாறு பதிவு செய்யப் பட்டது? ஒரு மொழியில் பதிவு செய்யப்பட்டது என்பதனாலேயே அதிலுள்ள செய்திகள் அம்மொழி சார்ந்த பண்பாட்டுத் தரவுகளாக அமைந்துவிடுமா? எனும் கேள்விகளுக்குப் பதிலாகவே, தென்னிந்திய இசைமரபு பதிவு செய்யப்பட்டிருக்கும் மொழிபற்றிய புரிதலை மேற்காணும் பண்டிதரின் பதிவுதருகிறது. பல்லவ மன்னர்கள், பிற்கால சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் காலத்தில் அரச மொழியாக சமஸ்கிருதம் செயல்பட்டது. தென்னிந்திய கட்டிடக் கலை, தென்னிந்திய இசைக்கலை, தென்னிந்திய சமய மரபுகளின் அடிப்படைகள் ஆகிய பிற சமசுகிருத மொழியில் எழுதப்பட்டன. வைணவ ஈட்டு உரைகள் எழுதப்பட்ட மணிப்பிரவாள மொழி எத்தகையது என்பதை நாம் அறிவோம். கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மொழி குறித்தும் நாம் அறிவோம். இந்தப் பின்புலத்தில் சமஸ்கிருத சொற்களிலிருக்கும் பூர்வ தமிழிசை மரபு குறித்த ஆய்வை பண்டிதர் மேற்கொள்கிறார். கருணாமிர்த சாகரத்தின் மூன்றாம் பகுதியில் சங்கீதரத்னாகரத்தில் கூறப்படும் செய்திகளில் தொல்பழமையைக் கூறுகிறார். அதனை இசைத்தமிழ்ச் சுருதிகள் என்று அழைக்கிறார். இதனை அவரது சொற்களில் வாசிப்பது நல்லது. அப்பகுதி வருமாறு.

“பூர்வ நூல்களின் அபிப்ராயத்தை உள்ளது உள்ளபடி அர்த்தம் செய்து, பழைய வழி அதனை மேலான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அநேக கனவான்கள் பிரயாசப்பட்டிருக்கிறார் களென்றும், அவர்கள் சாரங்கத்தேவர் கருத்தின்படி சுருதி சேர்க்காமல் வெவ்வேறு விதமாய்த் தங்கள் மனம்போல் செய்திருக்கிறார்களென்றும் இதன் முன் உள்ள அட்டவணைகளில் தெளிவாகக் கண்டோம்.

அவைகள் யாவையும் பார்த்த நமக்கு யாவராலும் மிக அருமையும் சாஸ்திர முறைமையுமுடைய தென்று மதிக்கப்படும் தென்னிந்திய சங்கீதத்திற்குப் பூர்வ தமிழ் நூல்களின் ஆதாரம் ஏதாவது உண்டா என்று விசாரிக்கும் எண்ணம் உண்டாகாமல் போகாது. இவ்வெண்ணம் முற்றிலும் பூர்த்தி அடையாமல் போனாலும், அதாவது தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி விவரஞ்சொல்லும் பூர்வ நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும், தென்னிந்திய சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமான சில அம்சங்கள் மாத்திரம் தற்காலம் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

அதோடு தென்னாட்டில் வழங்கிவரும் சங்கீதப் புத்தகங்கள் என்று சொல்லப்படும் சில சமஸ்கிருத நூல்களிலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த சில அம்சங்களையே சொல்லியிருக்கிற தென்று நாம் அறிய வேண்டும்”. (கருணாமிர்த சாகரம். முதல்புத்தகம். மூன்றாம்பாகம். 2009:10)

தென்னிந்திய சங்கீதமரபு என்பது பூர்வ தமிழிசை மரபுதான் என்பதை உறுதியாகப் பேசும் பண்டிதர், இதனை சிலப்பதிகாரத்தில் பேசும் இசை தொடர்பான செய்திகளின் அடிப்படையில் விரிவாக ஆய்வு செய்திருக் கிறார். மூன்றாம் பகுதி முழுவதும், தொல்காப்பியம், பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலுள்ள இசை தொடர்பான மரபுகளை ஆய்வு செய்வதாகவே அமைகிறது. இந்த மரபு பின்னர் எவ்வாறு தென்னிந்திய இசைமரபாக வடிவம் பெற்றது என்பதையும் பேசுகிறார். பண்டிதரின் தமிழ் இசை பற்றிய ஆய்வு என்பது, தமிழ்ச்சமூகத்தில் நடைமுறையில் தொழிற்பட்ட அவைதீக மற்றும் வைதீக மரபுகள் சார்ந்து புரிந்து கொள்ளும் தேவை உண்டு.

***

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு சமூக இயக்கங்கள், தமிழ்ச்சூழலில் உருப்பெற்றன. திராவிட மாணவர் சங்கம் (1912), தனித் தமிழ் இயக்கம், தமிழ் பௌத்த சங்கம்;, தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் (1917), சென்னை மாகாணசங்கம் (1924), சுயமரியாதை இயக்கம் (1925), தமிழிசை இயக்கம் என்பவை அவ்வகையில் அமையும். இவை இனம், மொழி சார்ந்த பல்வேறு புதிய பார்வைகளை முன்னெடுத்தவை. இவ் வகையில் தமிழிசை இயக்கத்தின் பங்கும் குறிப்பிடத் தக்கது.

சென்னை சங்கீத வித்வ சபை (1927)இல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் அரங்காக மியூசிக்கல் அகாடெமி கட்டிடம் கட்டப்பட்டது. அவ்வரங்கில் தமிழ்ப் பாடல்கள் பாடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அதற்கு எதிராக உருவான இயக்கமே தமிழிசை இயக்கம் என அறியப்படுகிறது. இதில் தமிழகத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். 1929இல் உருவான அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உருவாக இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாகவே அமைந்தது. ஆந்திரப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றே காலனிய இரட்டையாட்சி அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அண்ணாமலை அரசரின் செல்வாக்கால், சிதம்பரம் மீனாட்சி கல்லூரி தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாக அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக அமைந்தது. அங்கு தமிழ் இசைக்கு முதன்மை கொடுக்கும் செயல்கள் முன்னெடுக்கப் பட்டன. சங்கீத வித்வ சபையை எதிர்கொள்ள தமிழ் இசை குறித்த ஆய்வு, மற்றும் மாநாடு நடத்தல் (பண்ணிசை மாநாடு) ஆகியவை நடந்தன. மதுரை, சென்னையில் கட்டப்பட்டுள்ள அண்ணாமலை மன்றங்களும், சங்கீத வித்வ சபை நடவடிக்கைகளுக்கு எதிரான உருவாக்கங்களே ஆகும்.

இவ்வகை இயக்கத்தை இராஜாஜி ‘தமிழ்ப்பாட்டு’  இயக்கம் என்றே அழைப்பார். ஏனெனில் தமிழில் பாட இயலாத நிலைக்கு எதிராக உருவான இயக்கம் என்பதால் ஆகும். இவ்வகையான இயக்கத்திற்கு முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதரைக் குறிப்பிட முடியும். கீழ்க்காணும் செயல்கள் அவரது தமிழிசை இயக்கச் செயல்களாகக் கருதலாம்.

-     1907இல் கருணாமிர்தசாகரத்திரட்டு எனும் நூலை வெளியிட்டார். இவை தமிழ்ப் பாட்டுக்களைப் பாடும் பயிற்சியாளர்களுக்கென்று உருவாக்கப் பட்ட கையேடு ஆகும். 95 தமிழ்ப்பாடல்களுக்கு சுர தாள ஒழுங்கை இவர் அமைத்து இந்நூலைக் கொண்டுவந்தார். தமிழ்க் கீர்த்தனங்கள் இல்லை யென்ற சூழலில் அதற்கான மாற்று ஏற்பாடாகவே செய்தார்.

-     1912இல் தஞ்சாவூர் சங்கீத வித்ய மகாஜன சங்கத்தை உருவாக்கினார். அந்த ஆண்டு முதல் 1916 வரை ஏழு இசை மாநாடுகளை நடத்தினார். சுருதிகள் பற்றிய ஆய்வு இம்மாநாடுகளில் மேற் கொள்ளப்பட்டது. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திய பண்ணிசை ஆராய்ச்சி மாநாடுகளுக்கு முன்னோடியானது என்று கூற முடியும்.

***

ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக அமைகிறது. மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, பெரும் ஆளுமையாக உருவான வரலாறு வியப்பளிக்கும் வகையில் உள்ளது. சித்த மருத்துவ நாடார் குடும்பம், மூன்று தலைமுறை யாக சித்த மருத்துவப்பயிற்சியில் இருந்த குடும்பத்தில் பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கினார். சுருளி மலைப் பகுதியில் இருந்த கருணாமிர்தர் என்பவரை தமது குருவாக ஏற்றுக் கொண்டார். அவரின் மூலமாக இவரது மருத்துவ அறிவு வளர்ந்தது. அக் காலத்தில் தென்னிந்தியாவை அலைக்கழித்த பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து மக்களைக் காப்பாற்றி யவர் பண்டிதர். திண்டுக்கல் பகுதியிலிருந்து, தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தார். ஆசிரியப் பணியை விட்டார். முழு

நேர மருத்துவர் ஆனார். முழுநேர விவசாயியும் கூட. பழப் பண்ணை, மாட்டுப் பண்ணை ஆகியவற்றை உருவாக்கினார். அவற்றிற்கு நவீன நீர் இறைக்கும் கருவிகளை இங்கிலாந்திலிருந்து வருவித்தார். தனது கருணாமிர்த சாகரம் நூல் அச்சிட லாலி அச்சகத்தை உருவாக்கினார். அதற்கான இயந்திரம் இங்கிலாந்தி லிருந்து வாங்கப்பட்டது. ஒருவகையில் ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கைக்கும் பண்டிதர் வாழ்க்கைக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட பின்புலத்தில் இருந்த பண்டிதர், இசைத் துறைக்குச் சென்றதில் அவரது இரண்டாவது துணைவியார் கோவில் பாக்கியம் அம்மா அவர்களுக்குப் பங்குண்டு. அவரது இசைப் பணிகள் தமிழ்ச்சமூக வரலாற்றில் என்றும் பேசப்படும். தமிழ்ச்சமூகத்தில் பண்டிதர் ஆளுமையை முழுதும் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதா? என்றே கேட்க வேண்டியுள்ளது. அவரைக் கொண்டாடும் கடமை நமக்குண்டு.

***

ஆதாரநூல்கள்

1917  -     ஆபிரகாம் பண்டிதர் மு. கருணாமிர்த சாகரம் எனும் இசைத்தமிழ் நூல். 1994இல் அன்றில் பதிப்பக வெளியீடாக வந்தது. இது இரண்டாம் அச்சு. அந்நூல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

1950  -     வரகுணபாண்டியன் ஆ.அ. பாணர் இசைவழி எனப்படும் யாழ்நூல். இதன் மறுபதிப்பு 2001இல் வந்தது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். இந்நூல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

1984  -     தனபாண்டியன் ஆபிரகாம்பண்டிதர் (வாழ்க்கை வரலாறு)

1985  -     அருணாச்சலம்.மு கருநாடக சங்கீதம் தமிழிசை. ஆதி மும்மூர்த்திகள்.    

1988  -     தனபாண்டியன்.து.ஆ நுண்ணலகுகளும் இராகங்களும் தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.    

1993  -     தண்டபாணி.ப. திராவிடர் இசை ஆபிரகாம் பண்டிதர் மன்றம். சென்னை   

2007  -     அமுதாபாண்டியன். கருணாமிர்தம்:சுருக்கத் திறனாய்வு உரை ஆபிரகாம் பதிப்பகம் தஞ்சாவூர். 

2009  - ஆபிரகாம் பண்டிதர். தமிழிசைக் களஞ்சியம் கருணாமிர்தசாகரத்திரட்டு (பகுதி 1), கருணா மிர்த சாகரம் (பகுதி-2 முதல் 7 வரை) பதிப்பு: அங்கயற்கண்ணி. மு. வளவன் பதிப்பகம். சென்னை.