ஓவியக் கலை மரபின் தொன்மை
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அன்றாட வாழ்வில், தான் பயன்படுத்திய பொருட்களின் மீது மனிதனது தூரிகை பல்வேறு வடிவங்களை ஓய்வின்றித் தீட்டியது. மிகவும் தனித்தன்மைகள் கொண்ட அவற்றின் கூறுகள், மனிதக் குழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயர்ந்ததை அறிய உதவுகின்றன.
மனித நாகரிகத்தின் மிகத் தொடக்கக் காலத்திலேயே, தன்னைச் சூழ்ந்திருக்கும் பொருள்களின் மீது தனக்கு விருப்பமானவற்றை, இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைந்து அவற்றை அழகியல் நிறைந்த கலைப்பொருட்களாக்கினான் மனிதன். வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே, தான் தங்கியிருந்த இயற்கைக் குகைத்தளங்களின் சுவர்களில், அன்றாடம் தான் இயற்கையின் மூலம் கண்டுணர்ந்தவற்றை, இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைந்து வைத்திருந்தான்.
கட்டடச் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றன. கல்லில் சிலையாக வடித்து வழிபடுவதற்கு முன் தெய்வ உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டி வழிபடப்பட்டதைத் தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன.பல்லவர், பாண்டியர் காலத்தில் செழித்த சுவரோவிய மரபு, இராசராச சோழன் காலத்தில் புகழின் உச்சம் தொட்டதைத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள உன்னதமான ஓவியங்கள் உணர்த்துகின்றன. பின்னர், ஓர் இடைவெளிக்குப் பிறகு, சுவரோவியக் கலை விஜயநகர – நாயக்கர் காலத்தில் தனித்தன்மைகள் கொண்ட புத்தம் புதிய பண்புக்கூறுகளுடன் எழுச்சி பெற்றது. தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இக்காலகட்ட ஓவியங்கள் ஏராளமாக உள்ளன.
தமிழகத்தின் வடபகுதியில், குறிப்பாகக் காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம் போன்ற இடங்களில் உள்ள பல ஓவியங்கள் குறித்துத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலிருந்த இக்காலப் பகுதியைச் சேர்ந்த ஓவியங்கள் பெரும்பாலானவை இழக்கப்பட்டுவிட்டன. இழப்புகளின் பின்புலத்தில் நோக்கும்போது திருப்புடைமருதூர் ஓவியங்களும், சமண ஓவியங்களும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன.
திருப்புடைமருதூர் ஓவியங்கள்
தமிழகத்தின் தென்மாவட்டங்களுள் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில், வீரவநல்லூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில், தாமிரபரணி ஆற்றுடன் கடனாநதி எனும் சிற்றாறு கலக்குமிடத்தில் திருப்புடைமருதூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தனிப்பெரும் சிறப்பாக அமைவது இங்குள்ள சிவன்கோவில் ஆகும். இலிங்க வடிவில் சிவன் உமையன்னையோடு எழுந்தருளியுள்ள இக்கோவில், அருள்மிகு கோமதியம்பாள் சமேதர் நாறும்பூநாத சுவாமி திருக்கோவில் என்று தற்காலத்தில் வழங்கப்படுகிறது.
இக்கோவிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக் கோவில் ஓவியங்கள் எப்போது, யாரால் தீட்டுவிக்கப் பெற்றவை என்பதை அறிவதற்குத் தெளிவான சான்றாதாரங்கள் யாதும் இல்லை என்றாலும், அங்குள்ள சில சிற்பங்களைக் கொண்டு அவை தளவாய் அரியநாதரால் வரைவிக்கப் பெற்றிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
கலை வரலாற்று அறிஞராகவும், சிறந்த சுவரோவிய ஆய்வு வல்லுநருமாக விளங்கும் முனைவர் சா. பாலுசாமி அவர்கள் திருப்புடைமருதூர் ஓவியங்களை அரிதின் முயன்று ஆவணப்படுத்தியுள்ளார். மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆவணப்படுத்தும் நெறிமுறையை முழுமையாகக் கையாண்டும் திருப்புடைமருதூர் கோவில் ஓவியங்கள் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஓவியங்களில் ஓர் அங்குலத்தைக்கூட விடாமல் இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர். ஓவியங்கள் குறித்த தன் கருத்து முடிவுகளை முன்வைக்க, போதுமான சான்றுகளையும் அவர் விளக்கியுரைக்கின்றார்.
நாயக்கர் கால ஓவியங்களைக் குறித்து எழுதப்பட்ட பல நூல்களிலும் திருப்புடை மருதூரிலுள்ள போர்க் காட்சிகள், குதிரை வணிகக் கப்பல் ஆகியன தவறாமல் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆயினும் ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்தின் இரண்டாம் தளச் சுவர்கள் முழுமையும் தீட்டப்பட்டுள்ள காட்சிகள் எந்தப் போரைக் குறிக்கின்றன? அது, யார் யார் இடையே நடைபெற்றது? போரின் காரணமென்ன? கப்பல் காட்சி எதற்காக அங்குத் தீட்டப்பட்டுள்ளது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் விடையளிக்கிறது.
திருப்புடைமருதூர் ஓவியங்கள் மூலமாக, கி.பி. 1532ஆம் ஆண்டு விஜயநகர அரசிற்கும் திருவிதாங்கூர் அரசிற்கும் இடையே நடந்த வரலாற்று நிகழ்வான ‘தாமிரபரணிப் போர்’ பற்றி அடையாளம் கண்டு இந்நூலின் வழியாக வெளிப்படுத்தியிருப்பது பெரும் வரலாற்றுப் பங்களிப்பாகும்.
கதை தழுவிய ஓவியங்கள் பெரிதும் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே தீட்டப்படுகின்றன. அவ்வகையில் இங்குத் தீட்டப்பட்டுள்ள திருவிளையாடற் புராண ஓவியங்கள், வேப்பத்தூரார், பரஞ்சோதி முனிவர் ஆகியோரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணங்களை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதும், நாட்டுப்புற மரபிலான ஒரு திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்புடைமருதூர் ஓவியங்களைக் ‘கோட்டாற்றுச் சிற்பிகள்’ என அழைக்கப்பெறும் குழுவினைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்தும், நாயக்கர் காலத்தில் தீட்டப்பட்டிருப்பினும் இவ்வோவியங்கள் தனித்துவமானதொரு பாணி, இதனை ‘வேணாட்டு பாணி’ என வழங்கலாம் என்ற கருத்தும் இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஓவியங்களின் உள்ளடக்க அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாம் தளத்திலிருந்து கீழாகக் கண்டுவரும் வகையிலே ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவற்றை வாசகர்களின் புரிந்துசெல்லும் முறைகருதி கீழிருந்து மேலாகத் தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டு நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு தளத்தின் உள் நுழைந்து இடது புறத்திலிருந்து பார்த்துவரும் தன்மை கருதி, சுவர்களும் எண் இடப்பட்டு ஓவியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஓவியங்களை விளக்கிக் கூறும்போது, முதலில் தளத்தின் வரைபடம் இடம்பெறுகிறது. அதனை அடுத்து முழுச்சுவரும் காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னர் சுவரில் கதை நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள முறையில் வரிசை பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரிசையும் தனித்தனியே இடம்பெறுகிறது. அதனை அடுத்து ஒரு வரிசையில் இடம்பெறும் காட்சிகள் தனித்தனியே பிரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்நிகழ்ச்சியின் முக்கியமான ஓவியப் பகுதிகளை நுணுக்கமாக உணரும் வகையில் விவர ஓவியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புமுறை, ஓவியங்களின் முக்கியக்கூறுகள், ஓவிய வரைமுறை, வண்ணப் பயன்பாடு ஆகியவற்றை நுட்பமாக உணரப் பயன்படும்.
தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்
இந்தியப் பெருஞ்சமயங்களுள் ஒன்றான சமணம் எப்போது தோன்றியது என்பதற்கு உறுதியான சான்றாதாரம் ஏதுமில்லை. என்றாலும், சிந்துவெளியிலேயே சமணம் இருந்தது என்ற கருத்தைச் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.
‘மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில்....... பல பிறந்தமேனி உருவங்களும் விலங்குகளின் உருவங்கள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் கிடைத்துள்ளன. இந்தியாவைப் பொருத்தமட்டில் உருவ வழிபாட்டினைத் துவங்கி வைத்தவர்கள் ஜைனர்களே என்பர்.
சிரவணபெலகுளக் குடியேற்றத்திற்குப் பின்னர் விசாகாச்சாரியார் என்னும் சமணத் துறவியின் தலைமையில் ஒரு குழுவினர் கொங்குநாடு வழியாகத் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் வந்து தங்கினர். இவர்கள் தங்கிப் பணியாற்றுவதற்கும் மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வதற்கும் ஏற்ற மலைவாழிடங்கள் மிகுதியாக இருந்ததால், மதுரைப் பகுதியில் பல மலைகளில் அவர்கள் பள்ளி அமைத்துத் தங்கிச் சமயப் பணிகளைத் தொடங்கினர்.
பொ.ஆ.மு. 300 அளவில் இத்தகைய குடியேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கு மதுரைப் பகுதியிலுள்ள பல குகைகளும் தமிழ் - பிராமி கல்வெட்டுகளும் சான்றுகளாக நிற்கின்றன. ஆனால், பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டளவிலேயே சமணம் தமிழகம் வழியாக இலங்கைக்குச் சென்றது என்ற கருத்தும் உண்டு.
சமணம் பல்வேறு கலைகளையும் தனித்தன்மைகளுடன் போற்றி வளர்த்துள்ளது. ‘பள்ளி’ என்னும் சொல்லே, தமிழிற்குச் சமணம் வழங்கிய கொடை என்பதில் ஐயமில்லை. அறவோர் துறவு பூண்டுத் தவமியற்றிய பள்ளிகள் மக்களுக்கு எழுத்தையும் இலக்கியத்தையும் அறநெறியையும் போதித்தன. துறவியரும் சமண சித்தாந்தத்தை ஏற்றிருந்த வாழ்வினரும் ஏராளமான, நூல்களை, மொழி, வளம் பெறவும் மக்கள், அறவாழ்வுறவும் வழங்கினர்.
‘திரமிள சங்கம்’ என்ற சங்கம் வைத்துத் தமிழின் வளத்தைப் பெருக்கினர். சமணத்தால் தமிழ்மொழி பெற்ற வளம் அளப்பரியது. இலக்கியம், இலக்கணம், புராணம், நிகண்டு, சிற்றிலக்கியம், சோதிடம் முதலான பல்வேறு துறைகளிலும் நூல்களைச் சமணர் யாத்தனர்.
சமண பனுவல்கள் ஓவியக்கலையை உன்னதத்தொழில் என்று போற்றுகின்றன. ஓவியர்கள், சிற்பிகளுக்குள் வைத்தெண்ணப்பட்டனர். முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரால் இக்கலை கற்பிக்கப் பெற்றதாகச் சமண நூல்கள் கூறுகின்றன.
தமிழகத்திலும், எல்லோராவிலும் எஞ்சியுள்ள சமணச் சுவரோவியங்களை உலகக் கலையியல் வல்லுநர்கள் பலரும் ஆராய்ந்துள்ளனர். சமணம் சார்ந்த கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்துப் பல்வேறு நூல்களும் ஓவியக்கலை குறித்துக் கட்டுரைகளும் இருந்தபோதிலும் சமணம் வளர்த்த ஓவியக்கலை குறித்துத் தனிநூல் தமிழில் இல்லாதிருந்தது. இந்நிலையைத் “தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்” என்ற இந்நூல் மாற்றியுள்ளது. தமிழ்நாட்டுச் சமண ஓவியங்களை முழுமையாகப் பார்த்து உணர்ந்திடும் வாய்ப்பை இந்நூல் நமக்கு வழங்கியிருக்கிறது.
ஆனைமலை, சித்தன்னவாசல், ஆர்மாமலை, திருமலை, திருப்பருத்திக்குன்றம், கரந்தை, சித்தாமூர், வீடூர் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களை நெறிமுறைப்படி ஆவணப்படுத்தியும், ஆய்வு செய்தும், விவரித்தும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
திருப்பருத்திக்குன்றம், கரந்தை ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்கள் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளன. திருப்பருத்திக்குன்றம் பகவான் புஷ்பதந்தர் கருவறை ஓவியங்கள் மட்டும் பழமை மாறாமல் உள்ளன. அவைகள் இந்நூல் வாயிலாகக் காணக்கிடைக்கின்றன.
சித்தன்னவாசல், திருப்பருத்திக்குன்றம் ஆகிய பெயர்க் காரணங்கள் குறித்த சில புதிய கருதுகோள்களையும் ஓவியங்களில் இடம்பெறும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் குறித்த சில புரிதல் முயற்சிகளும் மேலாய்வுக்கு உரிய வகையில் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை சிந்தனைக்குரிய பகுதிகளாகும். சில சுவடிக்கட்டை ஓவியங்களைப் பற்றிய படங்களும், விளக்கங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டின் முன் தொடங்கி, கடந்த நூற்றாண்டு வரை சமணம் வளர்த்த ஓவியக் கலையின் பல்வேறு பண்புக் கூறுகளை ஆய்வுநோக்கில் அணுகுவது தமிழகத்தில் வளர்ச்சியுற்ற ஓவியக் கலையின் பல்வேறு பரிமாணங்களை அறியத் துணைபுரியும். அவற்றிற்கு இந்நூல் பெரும்பங்களிப்பாக அமையும் என்பது திண்ணமாகும்.
கலை வரலாற்று ஆய்வாளரான முனைவர் சா. பாலுசாமி அவர்கள் தமிழ்நாட்டுச் சமண ஓவியங்களை பெருமுயற்சி செய்து இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். மிகுந்த ஈடுபாட்டுடனும் உரிய நெறிமுறையை முழுமையாகக் கையாண்டும் சமண ஓவியங்களை ஆவணப்படுத்தி அளித்துள்ள அவரது முயற்சியைத் தமிழுலகம் பெரிதும் போற்ற வேண்டும்.
காஞ்சி, பனைமலை ஆகிய இடங்களில் எஞ்சியுள்ள பல்லவ ஓவியங்களும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் காணப்படும் சோழ ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ள அதே செவ்வியல் மரபையே ஆனைமலை, சித்தன்னவாசல், ஆர்மாமலை ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன என்ற ஆய்வு முடிவை பாலுசாமி அவர்கள் தெளிவாக முன்வைத்திருக்கிறார்.
அஜந்தா ஓவியங்களின் அமைப்பு, வடிவமைப்பு முறையினை மேற்கொண்டு சித்தன்னவாசல் ஓவியம், இராஷ்டிரகூட - கங்கர் கலை பாணியை உட்கொண்ட செவ்வியல் மரபிலான ஆர்மாமலை ஓவியம் மெல்லிய அழுத்தமான கோடுகள், செவ்வியல் கால வண்ணங்கள் ஆகியனவற்றைக் கொண்டுள்ளன என்று ஒப்பிட்டு ஆராய்ந்தும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியதாகும்.
தமிழ்நாட்டு ஓவிய மரபிற்கும், கலை வரலாற்று ஆய்விற்கும் பெருந்துணையாக விளங்கும் ‘திருப்புடைமருதூர் ஓவியங்கள்’, ‘தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்’ என்ற இந்த இரண்டு நூல்களையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்து, தரமான தாளில் வெளியிட்டிருக்கிறது. தமிழில் இத்தகு சிறப்பு வாய்ந்த ஓவியநூல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசு சார்ந்த ஒரு நிறுவனம் தரமான வெளியீடுகளை அளித்திருப்பது பாராட்டுதலுக்கும்; போற்றுதலுக்கும் உரிய செயலாகும். ஆளுமைப் பண்புகள் நிறைந்த தலைமையின் கீழ் செயல்படும் ஓர் அரசு நிறுவனத்தால்தான் இப்படியான செயல்களைச் செய்ய முடியும்.
மிக உயர்தரமான இப்படைப்புகள் 50% கழிவு விலையில் விற்பனை செய்யப்படுவது இன்னுமோர் கூடுதல் சிறப்பாகும்; வாசகர்களுக்குப் பயனுள்ள செய்தியாகும்.
தமிழ்நாட்டு ஓவியக் கலைப் படைப்புகள் சார்ந்த ஆய்வுகளுக்கும், அறிதலுக்கும் முன்மாதிரியாகவும், கருவி நூலாகவும் இவ்விரண்டு படைப்புகள் அமைந்துள்ளன என்பதைத் தமிழ்ச் சமூகம் எண்ணிப்பார்க்க வேண்டும்; பாராட்ட வேண்டும்.
- முனைவர் இரா.வெங்கடேசன், இளநிலை ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை