கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் தரம் பிரித்து 'Institute of Eminence' என்று மாற்றுவதற்கான திட்டத்தை மய்ய அரசு கொண்டு வந்திருக்கிறது. அது பாராட்டுக்குரிய திட்டம்தான். ஆனால் அதிலே சில குளறுபடிகள் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களுக்கு என்று சொல்லிவிட்டு ஒரு கட்டடம் கூட இல்லாத 'ஜியோ' (Jio) பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி கொடுக்கத் திட்டம் வகுத்திருக்கிறார்கள். ஆக ஆரம்பத்திலேயே 'Institute of Eminence' என்பதில் சில குறைபாடுகள் இருக்கின்றன.

anna university 532தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை 'Institute of Eminence'  என்று மாற்றுவதற்கு மைய அரசு முன்வந்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கது தான்.

அதை எப்படிச் செய்யலாம் என்று வரையறுக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. அந்தக் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கின்றது.

உயர்கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார். அது நியாயமானது. ஏற்றுக்கொள்ளலாம்.  நிதித்துறை, உயர் கல்வித் துறை, சட்டத் துறைச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.  பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் இருக்கின்றார். அவருக்கும் பல்கலைக் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர் இருக்கக் கூடாது. அது கூடப் பரவாயில்லை. மீன்வளத்துறை அமைச்சர் இடம் பெற்றிருக்கிறார். தெரு ஓரத்தில் நின்று லேகியம் விற்பவர்களைப் போல 'சர்வரோக நிவாரணி' என்று  எல்லாவற்றுக்கும் திரு ஜெயக்குமார் அவர்களைப் போடுகிறார்கள். அது அவர்கள் பாடு. ஆனால் உயர் கல்விக்கும் மீன்வளத் துறைக்கும் என்ன சம்பந்தம்? மதுவிலக்குத் துறையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் குழுவில் இருக்கிறார். இவருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆக எதுவுமே சரியில்லாத ஒரு குழுவாக இது இருக்கிறது. கல்வியாளர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஆறு மாதத்திற்கு முன்பு புதிய கல்விக் கொள்கையை மைய அரசு அறிவித்தது. அதுபற்றி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடனே கருத்து தெரிவிக்கவில்லை.

கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். 10 பேர் கொண்ட அந்தக் குழுவில் நான்கு பேர்தான் அரசியல்வாதிகள், ஆறு பேர் கல்வியாளர்கள்.

அந்தக் கல்வியாளர்கள் கூட்டம் கூடி இரண்டு மாதங்கள் விவாதம் நடத்தி அதன் பிறகு அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையைப் படித்துப் பார்த்த பின்னர்தான் அவர் கருத்து தெரிவித்தார்.

அதேபோல தமிழக அரசும் கல்வியாளர்கள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

இரண்டாவது, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முயல்கிறார்கள். கிண்டி பொறியியல் கல்லூரியைத்  தனியே ஒரு ஆய்வுப் பல்கலைக்கழகமாகவும் மற்ற 600 பொறியியல் கல்லூரிகளையும் இணைத்து இணைவிப்புப் பல்கலைக்கழகம் ஒன்றும் கொண்டு வருகிறார்கள்.

2009-இல் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது தொலைநோக்குப் பார்வையோடு அண்ணா பல்கலைக்கழகம் 600 கல்லூரிகளோடு செயல்படுவதால் சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பும் கெட்டுப் போகிறது, மாணவர்களுக்கும் சிரமமாக இருக்கிறது என்று ஐந்து பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.

சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை என ஐந்து இணைப்பு பல்கலைக் கழகங்களாகவும் கிண்டி பொறியியல் கல்லூரி தனியாக ஆய்வுப் பல்கலைக்கழகமாகவும் கொண்டுவந்தார்.  அவர் கல்வியாளர்களைக் கேட்டுத்தான் இதனைச் செய்தார்.

கலைஞர் அவர்கள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் செய்தார் என்பதை மறந்துவிட்டு  2011-ல் ஆட்சிக்கு வந்ததுமே கல்வியாளர்களைக் கலந்தாலோசிக்காமல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஐந்து பல்கலைக்கழகங்களையும் ஒழித்துவிட்டு ஒன்றாக இணைத்து விட்டார். இப்போது இரண்டாகப் பிரிக்கிறார்கள். கலைஞர் செய்த ஏற்பாட்டைப் போல ஐந்து பல்கலைக்கழகங்களாகக் கொண்டு வரவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 மூன்றாவதாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சனை.

இட ஒதுக்கீடு நீடிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறது அவர்கள் இட ஒதுக்கீடு நீடிக்கும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு நீடிக்கும். அதில் யாரும் கை வைக்க முடியாது. ஆனால் 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்குமா? அதுதான் கேள்வி. அதற்கு உறுதியான பதில்அங்கிருந்து வரவில்லை. அவர்களும் தரவில்லை. இவர்களும் கோரவில்லை. ஆடையை விற்றுவிட்டு அன்னதானம் செய்ய முடியாது. ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் தருகிறார்கள் என்பதற்காக இட ஒதுக்கீட்டை விட்டுவிட முடியாது.

எனவே தமிழக அரசு கல்வியாளர்களைக் கொண்டு இதில் முடிவு எடுக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். மைய அரசின் தலையீடோ, UGC இன் தலையீடோ இருக்கக்கூடாது.

அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசின் நிதியிலிருந்துதான் உருவாக்கப்பட்டது. எனவே அதில் மைய அரசு அதிகாரம் செலுத்தக் கூடாது. நிதி கொடுப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

- பேராசிரியர் அ.இராமசாமி, முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்