வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வள்ளிமலை என்ற இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அந்தக் கிராமத்தில் அந்த சிறிய மலைப் பகுதிக்கு அருகே மிகப்பெரிய குளம், அதை ஒட்டிய பகுதியில் வள்ளியின் கோயில் உள்ளது. வள்ளியின் சிலையில் பறவை, உண்டி வில், கவண்கல் உள்ளது போல அந்த சிற்பம் காணப்படுகிறது. இது தினைப் புனத்தில் பறவைகளை விரட்டுவதற்காக, வள்ளியின் கைகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது, இந்தக் கோயில், முருகனுடைய அறுபடை வீடுகளைக் கடந்த, ஒரு முக்கிய மலைக் கோயிலாக, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் நம்புகின்றனர்.மேலும் முருகன், வள்ளியை காதலித்ததை, வள்ளியின் தந்தை நம்பிராஜன் பார்த்து விட்டதாகவும், அதனால் முருகன் வேங்கை மரமாக உரு மாறியதாகவும், அதுவே பின்னாளில் தல விருட்சமாக, இருப்பதாகவும், அந்தப் பகுதியில் உள்ள மக்களால் நம்பப்படுகிறது. மலைக்குக் கீழே உள்ள வள்ளியின் கோவிலில் இருந்து மலை மீது உள்ள வள்ளி, முருகன், தெய்வானை கோவிலுக்கு சுமார் 900 கருங்கல் படிக்கட்டுகளைத் தாண்டி பயணப்பட வேண்டும். சிறிய குன்றின் மீது வள்ளி, முருகன், தெய்வானையோடு இருப்பது போன்ற சிலைகள் உள்ளன. வெளியில் நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் வள்ளியின் சிலை பெரிய பாறையில் உள்ளது. இங்கே தினந்தோறும் வழிபாட்டிற்காக ஏராளமான மக்கள், பல்வேறு நம்பிக்கைகளோடு வருகிறார்கள். குறிப்பாக முருகன் வள்ளி சந்திப்பு, இரவு நேரத்திலே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். குறிப்பாக குறவர் மக்களுடைய உணவான, அவர்களது வாழ்வியலில் அந்தப் பகுதியில் விளையக்கூடிய கிடைக்கக்கூடிய திணை மாவும், தேனும் படையலிடப்படுகிறது.
மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் சிலை உள்ளது. முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் சிலைகள் உள்ளன. வலது புறம் சென்றால் சற்று தொலைவில் தினைப் புனத்தில், வள்ளி பறவைகளை விரட்டியதாகக் கூறப்படும் பகுதியில், நான்கு கல் தூண்களைக் கொண்ட 5 அடி உயரத்தில் 3 மண்டபங்கள் காணப்படுகிறது. வற்றாத சுனை, வள்ளி மஞ்சள் தேய்த்த இடம், முருகன் நீர் அருந்தியதாகக் கூறும் குமரி சுனை, இந்த சுனை சூரிய ஒளி, சந்திர ஒளி படாத சுனை என்று கூறப்படுகிறது. இங்குதான் வள்ளிக்கு திருமணம் நடந்ததாகவும், யானையாக வந்து விநாயகர், வள்ளியை பயமுறுத்திய சிறிய குன்று யானை போலவே உள்ளதாகவும், இதை யானைக்குன்று என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். மேலும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் என்ற நம்பிக்கை இம்மக்களுக்கு உள்ளது. வள்ளி தினைப்புனத்தில் முருகனுக்காகக் காத்திருந்ததை அப்பகுதி மக்கள் பாடல் மூலமாகக் கூறுகின்றனர். அந்தப் பாடல் வரிகள்,
"வள்ளி எனும் மலைக்கிழவி
வள்ளிமலைக் காட்டினுள்ளே,
வள்ளல் அவன் வருவானெனக் காத்திருக்கிறாள்!
சொல்லி அவன் வருவானோ?
சொல்ல ஒரு மொழிதானோ?
சொல்வார் தான் யாருமின்றி தனித்திருக்கிறாள்!
கள்ளி அவள் காட்டினுள்ளே,
கள்ளன் அவன் மனதினுள்ளே,
கள்ளர் பயமின்றியந்த
வேடனுக்காகக் காத்திருக்கிறாள்."
என்ற பாடல் வரிகள் மூலமாக அந்த சூழலை அவர்கள் விவரிக்கின்றனர். இந்தக் குன்றுகளில் உள்ள ஒரு கால் தடம் வைக்கும் அளவில் உள்ள பாறைகளின் வழியாகக் கீழே இறங்கி வருகிறபோது, தாமரை இலைகளும் பூக்களும் நிறைந்த, மிகப்பெரிய ஆலமரத்தின் கீழே குளம் ஒன்று எழிலோடு உள்ளது. இதனைக் கடந்து பத்தடி தூரத்தில் இடது புறமாக சமணர் குகையும், சிற்பங்களுக்கும் செல்லும் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிறிய அளவில் கம்பிகள் சார்ந்த வாயில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வாயில்களைத் திறந்து உள்ளே சென்றால் கல்வெட்டு ஒன்று தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில் காணப்படும் ஆதாரங்கள் ' சமணத் துறவிகளுக்கான இந்த தாழ்ந்த குகையில் பல முக்கிய கங்க பாண அரசர்களின் பிரதிமைகளும், கல் படுக்கைகளும், கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளன. இதைக் குடைவித்த அரசன் கங்க இராசமல்லன் (816-843 கி.பி.) ஆவான். இவன் கங்க சிவமாறன் (679-725 கி.பி.) பேரனும், ரண விக்கிரமன் மகனுமாவான் என இங்குள்ள ஒரு கல்வெட்டு குறிக்கிறது. பாண அரசனொருவரின் மதகுருவான பவநந்தியின் சிஷ்யையான தேவசேனையின் பதுமையை இங்குக் காணலாம். இதையும் மற்றொரு பதுமையையும் இங்கு ஸ்தாபித்தவர் சமண குரு ஆர்ய நந்தியாவார் என தொல்லியல் துறை கல்வெட்டு கூறுகிறது.
குறிப்பாக கங்கர்குல அரசன் இராசமல்லன் (816-843 கி.பி) பள்ளிச்சந்தம் கல்வெட்டுகள் பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை சமண சமயத்தில் இல்லை, மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதை சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமண சமயத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளனர். அதுபோலவே கங்க அரசன் நன்கொடை கொடுத்து அமைக்கப்பட்டது வள்ளிமலை சமணர் பள்ளி என்பதை இங்குள்ள கல்வெட்டு ஆதாரங்கள் தெளிவாக்குகின்றன.
இக்குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு திறந்தவெளி குகையின் மேலே சமண உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சமண உருவங்களின் கீழ் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் மூலம் இங்குள்ள குகையில் சமண சிற்பங்களை உருவாக்கியவர் இராசமல்லன் என்ற கங்ககுல அரசன் என்பது தெரிகின்றது.
மேலே உள்ள சமண உருவங்களின் கீழ்ப் பொலியப்பட்டுள்ள எழுத்துக்களில் ஒன்று 'அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்த பிரதிமையைச் செய்தார்' என்றும், இன்னொரு எழுத்தில் ஸ்ரீ பாணராயிரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய 'தேவசேனபட்டாரரின் திருவுருவம்' என்றும், மற்றொரு வரிசையில் 'பாலசந்திரபட்டாரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை என்று கூறுகின்றன. மேலும் தரையில் காணப்படும் கல் படுக்கைகளில் உள்ள கல்வெட்டுகள் தேய்ந்து காணப்படுகின்றன. சமண சமயத்தில் 23 வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர் முக்கூடையின் கீழ் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பங்களின் அமைப்பு முறைகளை பார்க்கலாம்.
இந்தப் பகுதியில் காணப்படும் முதல் தொகுதி சிற்பங்கள் வலது பக்கமாகவும், அடுத்த தொகுதிச் சிற்பங்கள் இடது பக்கமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வலது புறத்தில் ஒரே வரிசையாக ஆறு திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முதலாவது சிற்பம் மிகவும் சிறியதாகவும், நாலாவது திருவுருவம் பெரியதாகவும் மற்றவை இதைவிட சிறியவையாகவும் உள்ளன. நான்காவது சிற்பம் தீர்த்தங்கரரையும், பிற திருவுருவங்கள் சமண சமய அறவோரையும் குறிப்பவையாகும். இந்த தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இவரது தலைப்பகுதிக்கு மேல் முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனக் கருதப்படுகிறது. ஆனால் அவருக்குரிய இலாஞ்சனையோ அல்லது இயக்கர், இயக்கியரது வடிவமோ அருகில் இல்லை. பிற சிற்பங்கள் இந்த தீர்த்தங்கரரைப் போன்ற உருவ அமைப்பினைக் கொண்டிருந்த போதிலும், அவற்றின் தலைக்கு மேலாக முக்குடை வடிவம் காட்டப்படவில்லை, இங்குள்ள சாசனங்களும் இவர்களைச் சமண அறவோர் என்றுதான் கூறுகின்றன.
குகையின் இடதுபக்கத்தில் இரண்டாவது தொகுதிச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவையும் இரண்டு இடங்களில் தனித்தொகுதிகளாக உள்ளன. இடது கோடியில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் இரு வரிசைகளாக வீற்றிருப்பதைக் காணலாம். முதல் வரிசையில் இரண்டு பார்சுவநாதர் சிற்பங்களும், அதனையடுத்து மற்றொரு தீர்த்தங்கரரும் இடம் பெற்றிருக்கின்றனர். பார்சுவ தேவரின் தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பு படம் விரித்த நிலையிலிருக்கிறது. இரண்டாவது வரிசையில் பார்சுவநாதர் பீடமொன்றில் அமர்ந்தவாறுள்ளார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகமும், அதற்கு மேல் முக்குடையும் காணப்படுகிறது. இவரது பீடத்தின் வலப்புறம் மாதங்க யக்ஷன் யானை மீதமர்ந்தவாறும், இடப்புறம் யக்ஷியின் சிற்பமும் சிறியனவாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. (தரணேந்திரனுக்குப் பதிலாக இங்கு மாதங்க யஷன் சிற்பம் காணப்படுகிறது.)
இதற்கு அடுத்து ஸ்ருத தேவியின் திருவுருவம் சற்று பெரிய அளவில் அரை வட்ட வடிவ மாடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தேவி பீடமொன்றில் அமர்ந்தவாறு வலது காலைத் தொங்கவிட்டும், இடது காலைப் பீடத்தில் மடக்கி வைத்தும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் நான்கு கரங்களுள் மேலுள்ள வலது கை அங்குசத்தையும், இடதுகை பாசக் கயிற்றினையும் கொண்டுள்ளன. கீழுள்ள வலதுகை அபய முத்திரையைக் குறித்தும், இடது கை தொடையின் மீது வைத்தவாறும் இருக்க தடித்த உடலமைப்பும், பருத்துத் திரண்ட மார்பகமும், ஒடுங்கிய இடையும் இச்சிற்பத்திற்கு அணி செய்வனவாக உள்ளன. மேலைக்கங்கர்களது கலைப்பாணியினைக் கொண்ட திருவுருவம் கி.பி.9-10-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஸ்ருத தேவிக்குச் சற்று தொலைவில் அமர்ந்த கோலத்தில் இரு தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் சற்று பெரியவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது பீடத்தில் சிங்க வடிவங்களும், இருக்கையின் மேற்பகுதியில் நான்கு சாமரம் வீசுவோர் சிற்றுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்களது தலைக்கு மேலாக அரைவட்ட வடிவ பிரபையோ, முக்குடையோ இடம் பெறவில்லை. இவ்விருவருள் முதலாவது தீர்த்தங்கரரின் வலது புறம் மாதங்க யக்ஷன் யானையின் தலைப்பகுதியில் வீற்றிருப்பதைக் காணலாம். இரண்டாவது தீர்த்தங்கரரின் இடதுபுறம் யக்ஷி சிற்பம் ஒன்றுள்ளது. அமர்ந்த வண்ணமுள்ள இந்த யக்ஷியின் வலது கை அபய முத்திரையைக் (அல்லது சிம்ம கர்ண முத்திரை) குறித்தும் இடது கை பழம் ஒன்றினைக் கொண்டும் விளங்குகின்றன. இவளது காலின் அருகில் தனித்தனியாக இரு குழந்தைகளும், அதற்குக் கீழ் சிங்கவாகனமும் இருப்பதைக் காணலாம். இவளது தலையை அலங்கரிக்கும் கரண்ட மகுடத்தின் மேல் சிறிய அளவில் தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த யக்ஷி அம்பிகா,-ம்ர கூஷ்மாண்டினி என அழைக்கப் பெறும் தருமதேவியாவாள். இந்த சிற்பத் தொகுதியில் முதலாவது உள்ள தீர்த்தங்கரர் மகா வீரரைக் குறிப்பதால் அவரது வலது புறம் மாதங்க யக்ஷனையும், அடுத்துள்ள தீர்த்தங்கரர் நேமிநாதராகையால் அவரது இடது புறம் அம்பிகா யக்ஷியையும் செதுக்கியுள்ளனர். இந்த சிற்பங்களும் கங்கர்களது கலைப்பாணியைக் கொண்டவையாக இருப்பதால் கி.பி.9-10-ம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இங்கு தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமின்றி சமண சமய ஆன்றோர்களுக்கும் சிற்பம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருத தேவி சிற்பம் போன்ற காலத்தால் முந்திய திருவுருவம் வேறெங்குமில்லை
கி.பி. 9-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிரவண பெலகோலாவைச் சார்ந்த சமணத் துறவியர் சிலர் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளனர். இவர்களுள் ஆரியநந்தி என்பவர் குறிப்பிடத்தக்கவர். இதனை வள்ளிமலை, மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கீழக்குயில்குடி ஆகிய இடங்களிலுள்ள கன்னடக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
கீழக்குயில்குடியிலுள்ள (சமணர் மலை) கன்னடக் கல்வெட்டு பெலகோலாவிலுள்ள மூலச்சங்கத்தைச் சார்ந்த ஆரிய தேவர் (ஆரிய நந்தி), பாலச்சந்திர தேவர் ஆகியோரது பெயர்களையும் நேமி தேவர், அஜிதசேன தேவர், கோவர்த்தன தேவர் ஆகிய துறவியரது பெயர்களையும் குறிப்பிடுகிறது.
குறிப்பாக (கீழக்குயில்குடியிலுள்ள இந்த கன்னட சாசனம் கி. பி 12-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என கல்வெட்டுத்துறையினர் கருதுகின்றனர். இது சரியாகத் தோன்றவில்லை. 10-ம் நூற்றாண்டு என இருப்பதே பொருத்தமானதாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர்). ஆரிய நந்தி, பாலசந்திர தேவர் மட்டுமின்றி எஞ்சியுள்ள கோவர்த்தனர், அஜிதசேன தேவர், நேமிதேவர் ஆகியோரும் சிரவண பெலகோலாவைச் சார்ந்த துறவியராக இருக்கலாம். இவர்களுள் கோவர்த்தனருக்கு வள்ளி மலையில் சிற்பமும் சமைக்கப்பட்டிருக்கிறது.
வள்ளிமலையில் முதலாவது தொகுதியில் வரிசையாகக் காணப்படும் சிற்பங்களுள் நாலாவது தீர்த்தங்கரர் வடிவமாகும். இங்குள்ள கல்வெட்டின்படி இரண்டாவது உள்ளது தேவசேனரையும், ஆறாவது உள்ளது கோவர்த்தனரையும் குறிக்கும். ஒன்றாவது, மூன்றாவது, ஐந்தாவது திருவுருவங்கள் எந்த முனிவரைக் குறிப்பவை எனக் கல்வெட்டுக்கள் கூறவில்லை. ஆனால் கீழக்குயில்குடியிலுள்ள சாசனம் கூறும் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு வள்ளிமலையிலுள்ள முதல் சிற்பம் ஆரிய நந்தியையும், இரண்டாவது தேவசேனரையும், (அஜிதசேன தேவர் என்னும் பெயரை வள்ளிமலையில் தேவசேனர் என்று பொறித்திருக்கலாம்), மூன்றாவது பாலச்சந்திரரையும் (நான்காவது தீர்த்தங்கரர்), ஐந்தாவது நேமிதேவரையும் குறிப்பவையாகத்தானிருக்க வேண்டுமென்று கூறலாம். இந்த ஐந்து அறவோர் சிற்பங்களுக்கேற்ப ஐந்து பெயர்கள் கீழக்குயில்குடி சாசனத்திலும், வள்ளிமலைக் கல்வெட்டில் மூன்று பெயர்களும் இடம்பெற்றிருப்பது இக்கருத்தை மெய்ப்பிக்கிறது.
இந்த ஐந்து துறவியரும் சிரவணபெலகோலாவில் முக்கியப்பொறுப்பில் இருந்தவர்களாக (தலைமைத் துறவியராக) இருக்கலாம். இவர்களுள் கடைசியில் வாழ்ந்தவர் பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய நந்தியாவார். இவர் கங்க மன்னனாகிய இராசமல்லன் காலத்தில் வாழ்ந்தவராதலால் வள்ளிமலைக்கு வந்தபோது தமக்கு முன்பு வாழ்ந்த துறவியரின் சிற்பங்களை இங்கு வடிக்க வழிவகை செய்துள்ளார். இவர் இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டபோது உயிர் வாழ்ந்தவராதலாலும், மேற்கூறிய துறவியருக்குப் பின்னர் வந்தவராதலாலும் இவரது சிற்பம் மட்டிலும் சிறியதாக வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வரிசையில் இவரது திருவுருவம் (வலமிருந்து இடப்புறமாகப் பார்த்தால்) கடைசியில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வள்ளிமலையில் சமணக் குகைகளில் திகம்பரத் துறவிகள் வசித்து வந்துள்ளனர். இங்கு ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்ததை சிற்பங்கள் காட்டுகின்றன. இங்கு தீர்த்தங்கரர்கள் சிற்பங்களும், யக்ஷர்கள் மற்றும் யக்ஷியர்கள் சிற்பங்கள், சமண சமய ஆன்றோர்கள் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன. இந்த சிற்பங்கள் சாதவாகனர்கள் மற்றும் கங்கர் ஆட்சிக் காலத்தில், சிற்பங்களின் நேர்த்தி மற்றும் நீண்ட நாட்கள் நிலைபெற்று இருக்க வழுவழுப்பான கருங் கற்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
- முனைவர் கோ.ஜெயக்குமார், தொல்லியல் ஆய்வாளர், ஊடகவியலாளர்
(கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி சென்னை பல்கலைக் கழகத்தினுடைய, கங்கு தொல்லியல் தேடிய பயணத்தின் ஊடாக, எனது பேராசிரியரும், தமிழ் இலக்கியத்துறை தலைவருமான முனைவர் ஆ.ஏகாம்பரம் அவர்கள் தலைமையில் முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட போது அவர்களுடன் நான் செல்லும் வாய்ப்பின் காரணமாக உருவான கட்டுரை. இந்த பயண வழிகாட்டுதலில் மிகப்பெரிய உதவி செய்த தினத்தந்தி செய்தியாளர் சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் நியுஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் சகோதரர் குமரன் ஆகியோருக்கு நன்றி.)