thecase shook emphire book(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஓட்வியர் தொடுத்த வழக்கில் அவன் முன்வைத்த, மன்னிப்புக் கேட்டல், புத்தகத்தின் விற்பனைனயை நிறுத்தி வைத்தல், அவன் குறிப்பிடும் அறச்செயல்களுக்கு ஆயிரம் பவுண்ட் பணத்தை நன்கொடையாக வழங்கல் என்ற மூன்றையும் நிறைவேற்றுவது, மிக எளிதான செயல்கள்தாம்.

இவற்றை மேற்கொண்டால் சங்கரன் நாயரது நேரமும் பணமும் மிச்சமாகும்.அத்துடன் வழக்கு நடத்துவதால் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம். ஆனால் வழக்கை எதிர்கொள்வதில் இருந்து பின்வாங்க நாயர் விரும்பவில்லை.

வழக்கை எதிர்கொள்ளாமல் பின்வாங்கினால் வைசிராயின் நிர்வாகக் குழுவில் இருந்து அவர் விலகியது பொருளற்றதாகிவிடும். ஏனெனில் ஜாலியன் வாலாபாக் நிகழ்வுகள் கொடூரமானவை என்று நம்பியதாலேயே அவர் பதவி விலகினார்.எனவே நீதிமன்ற வழக்கின் வாயிலாக ஓட்வியர் விடுத்த எச்சரிக்கைக்குப் பணிந்துபோக அவர் விரும்பவில்லை.

ஆங்கிலேயன் என்ற அடிப்படையில் தனக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இங்கிலாந்தின் கிங்ஸ் பெஞ்ச் நீதிமன்றத்தை ஓட்வியர் நாடியிருந்தான்.

நாயரின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்தியாவிலேயே அவர் தரப்புச் சாட்சிகளை விசாரித்து அவர்கள் அளித்த சாட்சியங்களைப் பதிவு செய்து அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஓட்வியரைப் பொறுத்த அளவில் அவன் தரப்பு சாட்சிகள் இந்தியாவில் பணிபுரிந்து இங்கிலாந்துக்குத் திரும்பிய உயர் அதிகாரவர்க்கத்தினராய் இருந்தனர்.

எனவே இவர்கள் இங்கிலாந்திலேயே சாட்சியம் அளிக்கலாம். இவர்களில், இந்தியாவின் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு, சர் மன்றோ, லாகூரில் உயர் இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த மேஜர் ஜெனரல் வில்லியம் பினோன், ஆகிய வெள்ளையர்கள் அடங்குவர்.

அத்துடன் தன் தரப்பில் பத்து இந்தியர்களையும் சாட்சிகளாகக் குறிப்பிட்டிருந்தான். இவர்கள் பெருநிலக்கிழார்கள், ஜாலியன்வாலாபாக்கில் அரசு ஏவிய வன்முறையால் பாதிக்கப்படாதவர்கள், ஆங்கில ஆட்சியில் ஆதாயம் பெற்று அதற்கு நன்றி பாராட்டுபவர்கள்.

நாயர் தரப்பில் ஆங்கில அரசின் அதிகாரிகள் சிலர் உட்பட பதினைந்து வழக்கறிஞர்களும் பதினொன்று மருத்துவர்களும் மூன்று கல்வியாளர்களும் வணிகர்கள் சிலரும் சாடசியளித்தனர்.

1923இல் பஞ்சாபின் மூத்த துணை நீதிபதி இரு தரப்பினரின் சாட்சியங்களையும் பதிவு செய்பவராக நியமிக்கப்பட்டார். ஓட்வியரும், நாயரும் தத்தம் தரப்பிறகு வழக்கறிஞர்களை நியமித்தனர். நாயரும் வழக்கறிஞராகப் பங்கேற்றார்.

இரு தரப்பினருக்கும் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சாட்சியங்களும், குறுக்குவிசாரணயில் கூறியனவும் கேள்விபதில் வடிவில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டதுடன் சாடசிகளின் கையெழுத்தும் பெறப்பட்டன.

இந்தியாவில் சாட்சிகளின் பதிவு நடந்து முடிந்ததும் வழக்கு விசாரணை இங்கிலாந்தில் தொடங்கியது. முன்னணி வழக்கறிஞர்களான ஆங்கிலேயர்கள் இருவரைத் தன் சார்பில் வாதாட ஓட்வியர் நியமித்திருந்தான்.

குறுக்குவிசாரணையில் திறமைவாய்ந்தவர் என்று பெயர் பெற்றிருந்த சர் பேட்ரிக் ஹேஸ்டிங்ஸ் என்ற ஆங்கிலேய வழக்கறிஞரைத் தனது வழக்கறிஞராக நியமிக்க நாயர் எண்ணியிருந்தார். ஆனால் ஓட்வியர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னர் இங்கிலாந்தின் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அட்டார்னி ஜெனரல் பதவியில் அவர் நியமிக்கப்பட்டார்.

இதனால் நாயர் சார்பில் அவரால் வாதாட முடியாது போயிற்று. எனவே சர் ஜான் சைமன் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரைத் தன் சார்பில் வாதாட நாயர் நியமித்தார்.

வழக்கறிஞர் ஜான் சைமன், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பரிசீலித்தபோது இவ் வழக்கானது ஒட்வியரை மதிப்பிழக்கச் செய்யும் என்பதைக் கண்டறிந்தார். பஞ்சாபில் நடந்தது என்ன என்பது இங்கிலாந்தில் வெளிப்படும்போது ஒரு வகையான சலசலப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

பாரிஸ் நகரில் இருந்தவாறு வழக்குவிசாரணைக்கு முதல் நாளன்று தன்னால் அவ்வழக்கை நடத்த முடியாதென்று நாயருக்குத் தந்தி அனுப்பினார்.

இத்தகைய இக்கட்டான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய சர் வால்ட்டர் என்பவரை தமது வழக்கறிஞராக நாயர் அமர்த்திக் கொண்டார். ஆனால் வழக்கை நடத்துவதற்குத் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்குப் போதுமான காலம் அவருக்குக் கிட்டவில்லை.

இதற்குப் பதிலாக தேர்ந்த வழக்கறிஞரான நாயரே தமக்காக வாதாடியிருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கும் நூலாசிரியர்கள் அவ்வாறு அவர் செய்யாமைக்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.. வழக்கின் விசாரணை இங்கிலாந்தில் நடப்பதால் நீதிபதியின் தீர்ப்புக்குத் துணைபுரியும் அவையத்தார் (Jury) ஆங்கிலேயர்களாகவே இருப்பார்கள்.

மேலும் இந்தியர்களைவிடத் தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற மன உணர்வு ஆங்கிலயர்களிடம் மேலோங்கியிருந்தது. எனவே மிகவும் அரிதாகவே இந்தியர்களிடம் நியாயமாக நடந்து கொள்வர். ஒரு கூலியைக் கொன்ற ஆங்கிலேயனையும் தன் ஊதியத்தைக் கேட்ட வண்ணாரைக் கொன்ற ஆங்கிலேயனையும் அவையத்தார் விடுதலை செய்துள்ளார்கள்.

இவ் வழக்கிலோ ஓர் ஆங்கிலேயன் அடாவடிச் செயல்கள் செய்ததாக ஆங்கில நீமன்றத்தில் ஓர் இந்தியன் குற்றம் சாட்டுகிறான். இதை அவன் முன்மொழிவதை விட ஓர் ஆங்கில வழக்கறிஞன் குறிப்பிடுவது அவையத்தாரை எரிச்சலடையச் செய்யாதிருக்கலாம்.

வழக்கு விசாரணை

1924 ஏப்ரல் 24 ஆவது நாளன்று வழக்கின் விசாரணை தொடங்கியது. நீதிபதியான ஹென்றி மக்கார்த்தி தன்முனைப்புள்ள நீதிபதி.

பஞ்சாபில் நிகழ்ந்த அரசு வன்முறை குறித்த சில முடிவுகளுடனேயே அவர் வந்திருந்தார். அவரது முடிவுகள் ஓட்வியரின் கருத்துடன் ஒத்துப் போவதாகவே இருந்தன. அவையத்தாராகப் பன்னிருவர் இருந்தனர்.

இவரகளில் ஆடவர்கள் ஒன்பது பேர். பெண்கள் மூவர். மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இலர்களுக்கு இந்தியா, இந்தியர்கள் குறித்தும் எதுவும் தெரியாது. இவை எல்லாம் ஓட்வியருக்குத் துணை நின்றன.

நீதிமன்றத்தில் தாம் அளித்திருந்த விண்ணப்பத்தை நியாயப்படுத்தும் முகமாகத் தாம் எழுதிய நூலானது பொது நலம் சார்ந்த ஒன்றிற்காக நியாயமாகவும் நல்லெண்ணத்துடனும் எழுதப்பட்ட விமர்சனங்களை உள்ளடக்கியது என்று நாயர் குறிப்பிட்டார்.

அத்துடன் அப்பாவிப் பொதுமக்கள் மீது 1919 மே 19 ஆவது நாளன்று ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூட்டை டயர் நிகழ்த்தினான் என்றும் அப்போது பஞ்சாபின் லெப்டன்ன்ட் கவர்னர் ஜெனரலாய் இருந்த ஓட்வியர் இந்தக் கொடுரச் செயலுக்குப் பொறுப்பாளி என்ற கருத்தையும் முன் வைத்தார்.

இதனையடுத்து அவையத்தாரின் பதவியேற்பு நிகழ்ந்தது. பின்னர் அவர்களை நோக்கி ஓட்வியரின் வழக்கறிஞர் எர்னஸ்ட் பி.சார்லஸ் இரண்டரை மணிநேரம் உரையாற்றினார், பஞ்சாபில் கலகம் ஒன்று நிகழாமல் தடுத்து நிறுத்தியதாகவும் பிரிட்டிஷ் பேரரசின் இராணுவத்திற்காக உலகப்போரின்போது பணம், ஆட்கள், உணவு ஆகியனவற்றைத் திரட்டியதாகவும் ஓட்வியரை அவர் புகழ்ந்தார்.

ஓட்வியரின் செயல்கள் பேரரசைக் காப்பாற்றியதாகவும் ஆனால் தற்போது அட்டூழியங்கள் செய்தவராக இகழப்படுவதாகவும் எனவே தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் நாயரைப் பாரத்தவாறு கூறினார்.

மேலும் ஜாலியன்வாலாபாக்கில் பொதுக் கூட்டம் நிகழவில்லை என்றும் கொலையும், சதிச்செயலும் நிகழ்ந்ததாகவும் இதை அறிந்த ஜெனரல் டயர் தன் கடமையை ஆற்றியதாகவும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆங்கிலப் பேரரசைக் காப்பாற்றும் நோக்கிலேயே நிகழ்ந்ததாகவும் கூறியதுடன் இந்தியர்களை கலகக்காகர்களாகவும் தீவீரவாதிகளாகவும் ஆட்சிக்கெதிரான சதிகாரர்களாகவும் சித்தரித்தான்.இது ஆங்கிலேயர்களான அவையத்தாரின் அனுதாப உணர்வை, ஓட்வியரின் பக்கம் திருப்பும் முயற்சியின் வெளிப்பாடுதான்.

இவரையடுத்து நாயரின் வழக்கறிஞர் உரையாற்றினார். நாயர் எழுதிய நூலில் இடம் பெற்றுள்ள விமர்சனங்களின் உண்மைத் தனமையை ஆராய்வது இந்த அவதூறு வழக்கின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு வழக்கு விசாரணையின் போது ஜாலியன்வாலாபாக்கில் நிகழ்ந்த அட்டூழியங்களுக்கு ஓட்வியர் காரணமாக இருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.

வழக்கமான நடைமுறைப்படி இருதரப்பு வழக்கறிஞர்களின் உரை முடிந்த பின்னர் வழக்கை எதிர்கொள்பவரின்(குற்றம் சாட்டப்பட்டவரின்) முதல் சாட்சியை விசாரிக்க வேண்டும். ஆனால் இங்கு இது நிகழவில்லை. மாறாக நாயரின் வழக்கறிஞரை நோக்கி ஜெனரல் டயர் செய்தது சரியானதா அல்லது தவறானதா எனபதை உறுதி செய்யும் நோக்கம் உள்ளதா? என்று நீதிபதி வினவினார்.

அத்தகைய நோக்கம் எதுவும் இல்லையென்று நாயரின் வழக்கறிஞர் விடையிறுத்தார். அப்போது அவையத்தாரை நோக்கி, இந்தியாவில் பிரிட்டிசாரின் நலனைப் பாதுகாக்க எடுக்கும் கட்டாயத்திற்கு ஒருவன் ஆளாகும்போது, அவனது செயல்பாடாடனது பிற்காலத்தில் வெறுக்கத்தக்கதாகக் கருதப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார். இவ்வாறு கூறியதன் மூலம் நாயரின் வழக்கறிஞர் என்ன உண்மையைக் கூறப்போகிறார் என்பதை அறிய முயன்றார்.

1919 ஏப்ரல் 13இல் அமிர்தசரசில் நிகழ்ந்தது அட்டூழியம்தான் என்றும் ஓட்வியருக்கு இதில் பங்குண்டு என்றும் நாயரின் வழக்கறிஞர் விடையளித்தார்.

டயரின் நடவடிக்கைகள் பஞ்சாபைக் காப்பாற்று வதற்காகவா என்று நீதிபதி கேட்டபோது அது அவசியப்படவில்லை என்று நாயரின் வழக்கறிஞர் விடையிறுத்தார். வழக்கின் மையப்புள்ளியான ஓட்வியருக்கும் பஞ்சாபில் நிகழ்ந்த அட்டூழியங் களுக்கும் இடையிலான உறவு குறித்த வழக்கை டயரை நோக்கித் திருப்புவதாக நீதிபதியின் கூற்று அமைந்தது.

தமக்கு ஒரு வாய்ப்பளிக்கும்படியும் அமிரதசரசில், நிகழ்ந்தவை அட்டூழியங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் நாயரின் வழக்கறிஞர் கூறினார்.

நீதிபதி மக்கார்தியின் இச் சொல்லாடல்கள் நாயருக்கு வியப்பையளித்தன. அவரும் நீதிபதியாகப் பணியாற்றியவர் என்ற நிலையில் இவ்வழக்கில் மக்கார்த்தியின் பங்களிப்பு என்பது ஒரு நியாயமான விசாரணையை நடத்துவதுதானே ஒழிய அவையத்தாரின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதல்ல என்பதை அவர் அறிந்திருந்தார்.

இருப்பினும் வழக்கு விசாரணையின் முதல் நாளன்றே தமது அழுத்தமான கருத்துக்களை நீதிபதி வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இத்தொடக்க நிகழ்வுகளையடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியாக ஓட்வியர் விசாரிக்கப்பட்டார். ஆறு நாட்கள் வரை இவரது சாட்சியம் தொடர்ந்தது.குறுக்கு விசாரணையின் போது அவர் பதட்டமடைந்தது தெரிந்தது.

கலைந்து போகும் வாயப்பை அளிக்காமல் ஜாலியன்வாலாபாக் திடலில் கூடியிருந்த மக்களின் மீது தொடர்ச்சியாகச் சுட்டதையும், காயமடைந்த வர்களைக் குறித்துக் கவலைப்படாது அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதையும் ஹண்டர் விசாரணை ஆணையத்தில் டயர் ஒப்புக் கொண்டிருந்தான்.

இதைச் சுட்டிக் காட்டிய போது டயரின் செயல்பாடுகளை ஓட்வியர் நியாயப்படுத்த விரும்பவில்லை. இவ் விசாரணையில் ஓட்வியர் திணறிப்போன நிலையில் நீதிபதி அவரது துணைக்கு வந்ததையும் நூலாசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

டயரின் சாட்சியம் தன் தரப்பை வலுவிழக்கச் செய்யும் என்பதால் சாட்சியமளிக்க அவரை ஓட்வியர் அழைக்கவில்லை. உடல் நலம் குன்றியிருந்த டயரை மரணத்தின் எல்லையில் இருப்பவராக ஓட்வியரின் வழக்கறிஞர் சித்தரித்து அவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதைத் தவிர்த்துவிட்டார். (இவ் வழக்கு முடிந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னரே டயரின் மரணம் நிகழ்ந்தது).

ஓட்வியர் தரப்பின் முதல் சாட்சியாக இந்தியாவில் வைசிராயாகப் பணியாற்றிய செம்ஸ்போர்டு விசாரிக்கப்பட்டார். வைசிராய் என்ற நிலையில் தொடக்கத்தில் ஓட்வியர், டயர் என்ற் இருவரது செயல்களையும் ஆதரித்தவர். ஹண்டர் விசாரணை ஆணையத்தில் இவரது நிலைபாடு மாறியது.

இராணுவச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டபோது நிகழ்ந்த அட்டூழியங்கள் ஓட்வியரின் அனுமதியுடனேயே நிகழ்ந்துள்ளன என்றும் தரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமென்று இடப்பட்ட உத்தரவு தமக்கு அதிரச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் வைசிராயின் சாட்சியமானது பஞ்சாப் நிகழ்வுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகவும் ஓட்வியரைச் சிக்கவைப்பதாகவும் அமைந்தது.

வைசிராயை அடுத்து உயர் இராணுவ அதிகாரி, லாகூர் பிரிவின் ஆணையர் எனப் பலரும் ஓட்வியர் தரப்பில் சாட்சியம் அளித்தனர். ஓட்வியரும் நீதிபதியும் விரும்பியதற்கேற்ப இவர்களின் சாட்சியம் பஞ்சாபில் நடந்த அட்டூழியங்களை நியாயப்படுத்தும் தன்மையிலேயே அமைந்திருந்தது. இறுதியாக நாயர் தம். தரப்பை நிறுவும் வகையில் சாட்சியமளித்தார்

ஓட்வியரைப் போன்று அவர் பதட்ட மடையவில்லை.. குறுக்கு விசாரணையிலும் அவர் அமைதியாகவே விடையளித்தார். ஓட்வியரின் மீது தமக்கு எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்பதையும் தெரிவித்தார்.

அப்பாவி ஆண்களையும் பெண்கள் குழந்தைகளையும் குண்டுகள் எறிந்து கொலை செய்வதென்பதை நியாயப்படுத்த முடியாது என்ற தம் அறம்சார்ந்த நிலையில் உறுதியுடன் நின்றார்.

நடந்த அட்டூழியங்கள் குறித்து ஓட்வியர் அறிந்திருந்தார் என்றும் அவரது வேண்டுகோளின் அடிப்படையிலேயே இராணுவச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டது என்றும் அவருடன் இராணுவம் எப்போதும் கலந்தாலோசித்தது என்றும் நாயர் குறிப்பிட்டார்.

ஓட்வியரின் வழக்கறிஞர் போன்று நீதிபதி இவரிடம் குறுக்குக் கேள்விகள் கேட்டார்... நாயர் தரப்பிலான சான்றுகளையும் சாட்சியங்களையும் பொருட்படுத்தாது, டயரின் செயல்பாடுகள் ஆங்கிலப் பேரரசைக் காப்பாற்றும் நோக்கிலேயே நிகழ்ந்தன என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.

அட்டூழியங்கள் என்ற சொல்லாட்சியையே அவர் வெறுத்தார். டயர் மேற்கொண்ட செயல்கள் சரி என்றால் ஓட்வியரைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் அலரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவை என்பது அவரது கருத்தாக அமைந்திருந்தது.

சாட்சியம் கூறல் அவற்றின் மீதான வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணை என்பனவற்றைக் கடந்து அவையத்தாரின் தீர்பபை அறிய வேண்டிய கட்டத்தை வழக்கு எட்டியது. ஹண்டர் விசாரணை ஆணையம் வெளிப்படுத்திய செய்திகளையோ, இந்திய அரசு அல்லது இங்கிலாந்தில் இருந்த இந்தியாவுக்கான செயலளர் வெளியிட்ட அரசு அறிக்கைகளையோ கண்டு கொள்ள வேண்டாம் என்று அவையத்தாரிடம் நீதிபதி குறிப்பிட்டார்.

பஞ்சாப் நிகழ்வுகளில் ஓட்வியருக்கு நேரடியான பங்கு இருந்ததா என்பதை மட்டும் முடிவு செய்யும்படியும் அவர்களிடம் கூறினார். அத்துடன் பின்வரும் இரண்டு வினாக்களுக்கு விடை காணும்படிக் கூறினார்:

1. அமிர்தசரசில் ஜெனரல் டயரின் செயல்பாடுகளை அட்டூழியங்கள் எனவாமா

2. அட்டூழியங்கள் எனில் பஞ்சாபின் லெப்டிடனண்ட் கவர்னர் என்ற முறையில் ஓட்வியர் இதற்குப் பொறுப்பு என்று கூறலாமா

இவ்விரு வினாக்களில் முதலாவது வினா இவ்வழக்குடன் தொடர்புடையதல்ல. ஹண்டர் விசாரணை ஆணையம் சில உண்மைகளைக் கண்டறிந்தது. இவை இங்கிலாந்தின் அமைச்சர வையாலும் இந்தியாவுக்கான செயலாளராலும் விரிவாக ஆராயப்பட்டன.

ஓட்வியர் தொடுத்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியம் இதனுடன் ஒத்துப் போனது. ஆனால் இவ்வாறு ஒத்துப் போவதை ஆராயாதவாறு இரண்டாவது வினா தடுத்தது. ஆயத்தாரின் தீர்பபு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நீதிபதி முடிவு செய்துவிட்டார்.

நீதிபதியின் உரை முடிந்ததும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் கூடி ஆயத்தார் முன்பாக வைக்கவேண்டியதாகப் பின்வரும் மூன்று வினாக்களை உருவாக்கினர்.

1) சாட்சியத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு செய்திகளும் மனுதாரரின் (ஓட்வியரின்) புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையனவா..?

2) அவை உண்மைத் தன்மை கொண்டவையா?

3) அவை நியாயத் தன்மை கொண்டவையா ?

ஏறத்தாள மூன்றுமணி நேரம் கலந்தாலோசித்த. பின்னர் அவையத்தார் நீதிபதியின் முன்பு வந்தனர். அவர்கள் எடுத்த முடிவு குறித்து நீதிபதி வினவியபொது அவையத்தாரின் தலைவராக இருந்தவர் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை என்று விடையளித்தார்.

(தொடரும்)

- ஆ.சிவசுப்பிரமணியன்