இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைச் செய்தவர் கவிஞர் தமிழ் ஒளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளில் மூழ்கியவர். உழைக்கும் மக்களின் வலிகளை, பாடுகளை எழுத்தில் வார்த்தவர். இடதுசாரி சிந்தனையாளர்களுள் தனித்த பார்வை கொண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் இழிநிலையைக் கண்டு கொதித்தெழுந்தவர். சமூக முரண்களைக் கண்டித்தவர். இப்படிப் பல சிறப்புகள் பெற்றிருப்பவர். தமிழ் இலக்கிய உலகில் கவிதை, மரபுக்கவிதை என்னும் இரண்டிலும் ஆழமாகக் கால் பதித்தவர். அந்த வரிசையில், தமிழில் சிறார் (குழந்தை) இலக்கிய மரபு என்பது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது, “இன்றைய சிறுவர்கள்; நாளைய இளைஞர்கள்” என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாக்கிற்கேற்ப சிறுவர்களை மையமிட்டு பாடல்கள், கதைகள், நாடகங்கள், இதழ்கள் எனப் பலவும் தொடர்ந்து வந்தன. அவர்களிடையே ஒழுக்க உணர்வும் சமுதாய உணர்வும் நாளைய மக்களின் எதிர்காலச் சிந்தனைகளும் இயற்கை சார்ந்த புரிதல்களையும் உண்டாக்க கவிதைகள் / பாடல்கள் பலராலும் எழுதப்பட்டது. அவர்களுள் கவிஞர் தமிழ் ஒளியும் தன்னுடைய காலத்தில் தனக்குத் தோன்றிய சிந்தனைகளைக் குழந்தைப் பாடல்களாக வடித்துச் சென்றுள்ளார். அவை, இளம்பருவத்தில் குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்க்கும் விதமாகவும் வழிபடுத்துபவையாகவும் அப்பாடல்கள் அமைந்துள்ளன.

தமிழ் ஒளி என்னும் விசயரங்கம்

tamil oli 370தமிழ் ஒளி என்னும் புனைப்பெயர் விசயரங்கம். இவர் 21.09.1924 அன்று பிறக்கின்றார். 29.03.1965 அன்று 41 வயதில் இவ்வுலக வாழ்வினை விட்டு நீங்கிச் செல்கிறார். புதுவை மண்ணில் பிறந்த தமிழ் ஒளி பாரதி, பாரதிதாசனின் வழித் தோன்றலாக, அவர்களின் படைப்புகள் வழி ஆட்கொள்ளப்படுகிறார். தமிழ் இலக்கியப் பங்களிப்பில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், திறனாய்வு உரைகள், நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பன்முகத் திறன் கொண்டவராக விளங்குகிறார்.

தமிழ் ஒளி, விஜயரங்கம், விஜயன் சி.வி.ர. போன்ற புனைப்பெயர்களில் தமிழ் இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். திராவிடர் கழகத்தில் தொடங்கிய இவரது அரசியல் பயணம், வளர்ச்சியுற்று பொதுவுடைமைச் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு வாழலானார். தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளையும் உழைப்புச் சுரண்டலையும் சாடி தம் படைப்புகளைப் படைக்கலானார்.

தமிழ் ஒளியின் நூல்கள்

“நிலை பெற்ற சிலை -1947, வீராயி - 1947, மே தின ரோசா -, விதியோ வீணையோ -1961, கண்ணப்பன் கிளிகள் - 1966, புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்), கோசலக் குமாரி - 1966, மாதவிக் காவியம் - 1995, சிலப்பதிகாரம் காவியமா நாடகமா, திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம்” போன்ற நூல்களைப் படைத்துள்ளார். (இப்பட்டியல் முழுமையானவை அல்ல.)

சிறார் / குழந்தை இலக்கியம்

               தமிழில் சிறார் / குழந்தை இலக்கியம் என்பது பல்வேறு ஆளுமைகளால் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. என்றாலும் பல்வேறு சூழல்களில் பல ஆளுமைகள் தங்களின் எண்ணவோட்டங்களைச் சிறார்களுக்காக எழுத்து இலக்கியமாக்கினர். அழ. வள்ளியப்பா, வாணிதாசன், பெ. தூரன் போன்றவர்கள் சிறார் இலக்கியத்தில் பட்டொளி வீசினர். ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக தரமான குழந்தைப் பாடல்கள் படைத்து வெளி உலகில் அடையாளப்படுத்த முடியாமல் போனவர்கள் பலர். அவர்களுள் கவிஞர் தமிழ் ஒளியும் முதன்மையர்.

இயற்கையை, குடும்பத்தை, தாய்நாட்டினை, தமிழ் ஆளுமைகளை, தமிழரின் விழாக்களைக் கொண்டாடிய கவிஞர் தமிழ் ஒளி. இவற்றினைக் குழந்தைகளுக்கு ஏற்ற வடிவத்தில் சொற்கட்டுகளுடன் ஓசைநயத்துடன் கருத்துச் செறிவு மிக்க பாடல்களைப் படைத்துள்ளார். சிறார் இலக்கியம் என்றவுடன் அதற்கான மெனக்கெடல்கள், உழைப்பு என்பது அளவிடற்கரியது. சொற்கள் மிக எளிமையாக இருக்க வேண்டும். நீண்ட அல்லது கடுமையான உச்சரிப்பு சொற்கள் இருக்கக் கூடாது, எதுகை, மோனை, இயைபு போன்ற தொடை நலன்கள் மிளிர்ந்து காணப்பட வேண்டும். அந்த ஒழுங்கமைவில் தான் கொண்ட கொள்கைகளைக் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் கவிஞர் தமிழ் ஒளி படைத்துச் சென்றுள்ளார்.

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மரபினர். அம்மக்கள் இயற்கையின் மடிகளில் என்ன இருக்கின்றனவோ அவற்றையே தங்களின் வாழ்வாதாரமாக ஆக்கிக் கொண்டவர்கள். அப்படி ஆறு, மலை, காடு, ஓடை, மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள் போன்றவற்றோடு ஒன்றியைந்த வாழ்வியல் வளமையானதாகத் தமிழர்களை அமைத்துக் கொண்டனர். தங்களின் அடுத்த தலைமுறை­யினருக்கும் இயற்கையின் கொடையினையும் அதன் தன்மைகளையும் விளக்கிச் சென்றுள்ளனர். கவிஞர் அவர்களும் தம் பாடலில் அவற்றினைப் பதிவாக்குகிறார்.

“ஆற்றில் தண்ணீர் சலசல வென்றே ஓடும்

அதுதான் நன்றாய் அழகாய் நாளும் பாடும்;

காற்றும் நன்றாய்க் கலகல வென்றே வீசும்

காதுகள் மகிழப் பறவைகள் கூடிப் பேசும்” (செ.து. சஞ்சீவி; 2010; 137.)

‘இயற்கை அழகு’ என்னும் தலைப்பிலான பாடலில் ஆறும் காற்றும் அதன் இயல்பில் என்னென்ன செய்யும் என்பதனை மிக எளிமையாகக் காட்சிப்படுத்துகிறார்.

மனிதர்கள் என்றும் இயற்கையோடு இணைந்தே வாழ தலைப்பட்டனர். ஆனால், நவீன யுகமானது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களை இயற்கையிலிருந்து அந்நியப்படுத்தி விட்டது. காலந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றது. என்றாலும் இயற்கை தன்னால் முடிந்தளவு இன்னும் மனிதர்களுக்கு நன்மையை அளித்துக் கொண்டுதான் வருகின்றது. இந்த வரலாற்றினைக் குழந்தைகளுக்கு மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,        

“நல்ல இயற்கை தன்னையே என்றும் நாடு

நண்பர்களாவோம் இன்றே நாமதனோடு”         (மேலது,)

இயற்கையோடு நண்பர்களாக மனிதர்கள் மாறிட வேண்டும் என்கிற கூற்று அவற்றிலிருந்து மனிதர்கள் விலகிய எதிர்நிலைப்பட்ட பாங்கினை முன்வைக்கின்றது. இயற்கையும் மனிதனும் நண்பர்களாக இருந்தவரை, இந்தப் பூமி எவ்வித இடர்களுக்கும் ஆட்படாமல் இருந்தது. இயற்கையிலிருந்து பிரிந்த மனிதன் இன்று பல்வேறு நோய்களாலும் துன்பங்களாலும் அவதிக்குள்ளாகின்றனர்.

இயற்கையோடு அன்புடன் வாழ்வேன் என்ற தன்னுடைய கருத்தினை ஆழமாக எடுத்துரைக்கின்றார்.

“நெஞ்சு மணக்கும் மலர்கள் பறித்துத்தாரும்!

அல்லும் பகலும் இயற்கை அன்னை அருளால் நாம்

அன்புடன் வாழ்வோம் அழகென்கின்ற பொருளால்” (மேலது,)

இரவும் பகலும் இந்த உலகமானது இயற்கையின் கையில் தான் வளர்ந்து வருகின்றது. அப்படியான உலகில் இயற்கையின் மீது அன்பு கொண்டவர்களாக வாழலாம். அதுவே சிறந்த வாழ்வியலைத் தரும் என்கிற உண்மையைச் சிறார்களுக்கு எடுத்துக் காட்டுகிறார்.

குடும்ப உறவுகளை அடையாளம் காண்பதும் பேணுவதும் இன்றைய சூழலில் முதன்மையானதாக இருக்கின்றது. கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்த நிலை இன்றுள்ளது. ஆயினும் அனைவரும் ஒன்றாய் வாழ்ந்தபோது நல்லது, கெட்டதை, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட வாழ்வியல் இனிமை மிகுந்ததாக இருந்தது. இதனை எடுத்துக்கூறும் கவிஞர்,

“அப்பா அம்மா அண்ணனுடன்

அக்கா தம்பி சிறுகுழந்தை

எல்லோருக்கும் ஒரு வீடு” (மேலது, 138)

என்கிற குடும்ப ஒற்றுமையைக் குழந்தைகளுக்கு எடுத்து விளக்குகின்றார். அதோடு நாட்டையும் உலகினையும் நேசியுங்கள் என்றும் நல்லவர்கள் அனைவரையும் ஒரு குடும்ப உறுப்பினர்களாகப் பார்க்கின்றார்.

உலகினை, நாட்டினை நேசிக்கும் தமிழ் ஒளி தாய்நாட்டுப் பற்று கொண்டவராகத் திகழ்கிறார். தமிழ் மண்ணின் மீதும் தமிழ் மொழியின் மீதும் தீராக் காதல் கொண்டுள்ளார்.

“அம்மா அப்பா வளர்ந்த இடம்

அவர்கள் நம்மைப் பெற்ற இடம்

........... ............. ............

அழகிய இடமே தமிழ்நாடு

அதுவே நமது தாய்நாடு” (மேலது, 139)

தந்தையும் தாயும் வளர்ந்த இடமாகவும் அழகிய இடமாகவும் விளங்குவது தமிழ்நாடு என்ற ஒற்றைச் சிந்தனை மேலோங்கியவராக, குழந்தைகளுக்கு நாட்டுவுணர்வினையும் மொழிப் பற்றினையும் ஊட்டுகிறார்.

தமிழ்நாட்டின் எல்லைப் பகுப்பினையும் குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்துகின்றார். அதாவது, தொல்காப்பியம் சுட்டிய, ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்க்கூறும் நல்லுலகம்’ என்னும் நிலப்பரப்பினை ஒட்டிய எல்லைப் பகுப்பு செய்தளிக்கின்றார்.

“கிழக்கே பெரிய கடல்

மேற்கே பெரிய மலை

தெற்கே குமரி முனை

வடக்கே திருப் பதியாம்” (மேலது, 140)

கடலும் மலையும் இயற்கை சூழ்ந்த தமிழ்நிலப் பகுதிகள் எல்லைகளாக விளங்குகின்றன.

தமிழின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழும், ‘தமிழ்த் தலைவன்’ திருவள்ளுவரையும் ‘தமிழ்த்தாய்’ ஔவையினையும் கவிஞர் தமிழ் ஒளி புகழ்கின்றார். இரண்டடியில் உலகத்தின் அனைத்து அறங்களைப் புகட்டியவர் திருவள்ளுவர். அவர் குறித்து,

“ஒரு வள்ளுவர் பிறந்த தாலே

நமக்குப் பெருமையாம்!

உலகினிலே அவரைப் போலப்

பிறப்ப தருமையாம்” (மேலது, 141)

குறட்பாக்களைத் தேடிக் கற்க வேண்டும். அது உலகிற்குச் செய்யும் சேவையாகும் என்கிறார். இப்படியாக, திருவள்ளுவரின் சிறப்புகளை விதந்தோதுகிறார்.

“அவ்வைப் பாட்டி மூதாட்டி

அவளே நமக்கு வழிகாட்டி

செவ்வையாக அவள் சொல்லை

சேர்ந்து கற்றால் இடர் இல்லை”     (மேலது, 140)

ஔவையாரின் பாடல்களைத் தமிழ்ச் சமூகம் அறிவுக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளன. அவரின் கருத்துக்கள் மனித இனம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கவிஞர் தமிழ் ஒளி, ஔவையினைத் தாய் போன்ற வழிகாட்டியாகக் கொள்கிறார். துன்பம் இல்லாத வாழ்வுக்கு அவரின் பாடல்கள் நமக்குத் துணையாக வரும் என்கிறார்.

இன்று பலரும் நேரத்தை இழந்து வருகின்றனர். காலமும் நேரமும் யாருக்கும் எதற்கும் நிற்காது. அப்படியான காலத்தில் கல்வி கற்று, வாழ்வினைத் தேர்ச்சிகொள்ள வேண்டும் என்பது அனைவரின் இலக்காகும்.

“நீதி தருகின்ற

கல்வியைக் கற்றிட கண்விழி

நீயும் உலகில்

பெரியவன் ஆகவே கண்விழி” (மேலது, 141)

என்று உறங்குகின்றவர்களை உயர்த்திட கண்விழி என்று கவிஞர் அறிவுறுத்துகிறார்.

குழந்தைப் பாடல்களுக்கு எதுகை, மோனை, இயைபுத் தொடைகள் மிளிர பாடல்கள் அமைவது தான் நினைவில் பதிந்திட வழிவகுக்கும். அந்தவகையில், ‘நகை வேண்டாம் பாப்பா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பாடல் பின்வருமாறு,

“பச்சைக் கிளிக்கு நகையில்லை

பாடுங் குயிலுக் கணியில்லை

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகையில்லை

கச்சை சதங்கை யில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்ட நகையில்லை

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்” (மேலது, 142)

‘நகை’ என்னும் அணிகலன் மனிதர்க்கு அழகு என்று நினைத்துக் கொள்ளும் சமூகத்தில் அவை உண்மையான அணிகலன் இல்லை என்று உரக்கச் சொல்கிறார். கிளி, மைனா, மயில் போன்ற பறவையினங்கள் இயற்கையோடு இயற்கையாகவே இருக்கின்றன. ஆனால், மனித இனம் மட்டும் தான் செயற்கையாக ஏதேதோ பூச்சிகளோடு உருமாறி வாழ்வதை எண்ணி நகையாடுகின்றார்.

தமிழ் நிலத்தில் காவிரி என்னும் ஆறு குறித்தும் அதன் நீர்ப் பங்கீடு குறித்தும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. இன்றும் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இதனைக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் கவிஞர் ‘காவிரி’, ‘காவிரியே வா’ என்னும் தலைப்பிலான இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

குடகு மலையில் குதித்து வந்த காவிரி

கொண்டு வந்த பொருளும் எங்கே? கைவிரி

.................... .................. ................. ............

யார்க்கும் அஞ்சா வீரம்கொண்ட காவிரி

அள்ளி வந்த பொருளும் எங்கே? கைவிரி”  (மேலது, 142)

என்று ‘அரசியல்’ சொல்லாடல்களோடு குழந்தைகளுக்கு வரலாற்றுப் பின்புலத்தை காட்டுகின்றார்.

தமிழர்களின் வாழ்வியலில் மிக இன்றியமையாத விழாவாகத் திகழ்வது பொங்கல். இது உழைப்போடு தொடர்புடைய பெருவிழாவாகும். மனிதர்கள் தங்களின் எண்ணங்களைக் கொண்டாட்ட உணர்வோடு இணைத்து வெளிப்படுத்தினர்.

“பூசணிப் பூ பூத்தது

பொங்கல் மாசம் வந்தது!

......... ........... ...........

நெல் விளைத்த உழவனே

நேர்த்தியான பொங்கலின்

திருவிழாவைச் செய்பவன்

தேசத் தொண்டு செய்பவன்!

விருந்து வைக்கக் கூடுவோம்

வெற்றிப் பாட்டுப் பாடுவோம்!” (மேலது, 144)

அதாவது, தமிழர்கள் மார்கழி முடிந்து, தை மாதத்தில் நிகழும் பொங்கல் விழா வளமையின் நிகழ்வாகக் கொண்டாடி வந்தனர். பூசணிப் பூக்களால் கோலங்களை அழகுபடுத்திக் கொள்வர். நெல் விளைச்சலின் நற்பயனைப் பொங்கல் உலையில் இட்டு மகிழ்வர். அது பலருக்கு விருந்து வைக்கும் ஒரு வெற்றிக் கூடலாக அமைகிறது என்கிற தமிழர் பண்பாட்டின் பெருமையைக் குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்.

இப்படியாக, தமிழ்ப் படைப்பாளர்களுள் கவிஞர் தமிழ் ஒளி தனித்து ஒளிரும் நிலவாக தம் குழந்தைப் பாடல்களின் வழி தெரிகின்றார். ஆனாலும் பாரதியாரைப் போலவே தமிழ் ஒளியும் அவர் வாழும் காலத்தில் கொண்டாடப்படவில்லை என்பது கசப்பான உண்மை. தமிழ் ஒளி பற்றி, பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் குறிப்பிடுகையில், “என்னுடைய காலத்தில், என் அருகில் இப்படி ஒரு மகத்தான கவிஞர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே! என்றார்”. அது எவ்வளவு உண்மை பொதிந்தது என்பதை இக்கட்டுரை மேலும் தெளிவுபடுத்தும்.

நூற்றாண்டினைக் கடக்கும் வேளையிலும் தமிழ் ஒளி சில சட்ட வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்கிறார். அவற்றை விடுத்து ஒரு எளிய மனிதனின் ஆழமான, அழுத்தமான சிந்தனை எப்படிப் பட்டவையாக இருந்திருக்கின்றன என்பதைத் தெளிவு கண்டு அவரையும் அவர்தம் எழுத்துக்களைப் பரவலாக்கம் செய்ய வேண்டும். அவரின் கருத்துக்களைப் பின்பற்றி வாழவும் வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களில், தமிழ் ஒளி குறித்து அதிகம் பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறையினராவது தமிழ் ஒளியினை, அவரின் கருத்துப் புகழ் ஒளியில் நின்று காணட்டும்.

துணை நின்றவை

1.           பூவண்ணன். சிறுவர் இலக்கிய வரலாறு, வானதி பதிப்பகம் சென்னை, 1980

2.           கவிஞர் தமிழ் ஒளி, மே தினமே வருக, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,2008.

3.           செ. து. சஞ்சீவி., தமிழ் ஒளியின் சிறந்த கவிதைகள், சாகித்திய அகாதெமி, புது தில்லி, 2010.

4.           தொல்காப்பியர்., - தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை பதிப்பு - 2011.

5.           பொழிலன்., பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள், மன்பதைப் பதிப்பகம், சென்னை, 2016.

6.           தமிழ் இணையம், தமிழ் ஒளி, தமிழ் விக்கிபீடியா..

- முனைவர் ஜெ. மதிவேந்தன், கௌரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு - 604 407.