1 "ஆவோடல்லது யகரம் முதலாது" என்பது தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் வரும் சூத்திரம் (மொழிமரபு-65). யகர மெய் ஆ என்னும் ஓர் உயிர் எழுத்துடன் மட்டுமே கூடி மொழிக்கு முதலாகும் என்பது இச்சூத்திரத்தின் பொருள்.இச்சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டாக, பழந்தமிழில் பல சொற்கள் கிடைக்கின்றன. அவை:யான், யார், யாடு, யானை, யாமை, யாது, யாண்டு, யாக்கை, யாழ், யாறு, யாணர், யா, யாப்பு முதலியவை. 'யா' என்ற ஓரெழுத்து ஒரு சொல் (மரத்தைக் குறிக்கும்) தொல்காப்பியத்தில் வந்துள்ளது. 'யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்' என்ற இச்சூத்திரம் உயிர் மயங்கியலில் வருகிறது.யாணர் என்பதும் பழந்தமிழுக்கே உரிய சொல். யானை, யார், யாழ் ஆகிய சொற்கள் தான் இன்றைய தமிழில் புழக்கத்தில் உள்ளன.

இந்தச் சூத்திரத்திற்கு விதி விலக்காக யவனர், யூபம் போன்ற சொற்கள் பழந்தமிழில் வந்துள்ளன. யூபம் ஒரு பாலி மொழிச் சொல். வேள்வித்தூண் என்பது அதற்குப் பொருள்.யவனர் என்பதும் கடன் சொல்தான். பொதுவாக, கடன் சொற்கள் தாய்மொழி இலக்கண விதிகளுக்குக் கட்டுப்படாது என்பர். நச்சினார்க்கினியரும் "யவனர்-யுத்தி-யூபம்-யோகம்-யௌவனம் என்பன வடசொல் என மறுக்க" என்று மேற்கண்ட தொல்காப்பிய நூற்பாவிற்கு அமைதி கூறுகிறார்.

1.1 ஆனால் தொடக்கத்திலிருந்தே ஆகாரத்துடன் கூடிய யகரமெய் தவிர்க்கப்படுவதையும் ஆங்காங்கே காணமுடிகிறது. இடைக்கால இலக்கியங்களில் யா-வில் தொடங்கும் பழைய சொற்களில் யகரம் மறைகிறது. (செ.வை.சண்முகம் 1974)

யாண்டு                                      >                 ஆண்டு

யாடு                          >                 ஆடு

யார்                            >                 ஆர்

யானை                                       >                 ஆனை

யாக்கை                                     >                 ஆக்கை

யாப்பு                       >                 ஆப்பு

யாறு                          >                 ஆறு

யாது                          >                 இது

"ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே" (நா.தி.பிரபந்தம்-3566) என்ற பாடல் வரியில் யாது என்பது ஆது என்று மாறியுள்ளது. இது புதுமையாக உள்ளது. யான், யாம் தன்மையில் வரும் ஒருமை,பன்மை சொற்கள் கூட பின்னாளில் நான், நாம் என்றாகிறது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ஆவோடு வரும் யகர மெய்யெழுத்து வழக்கொழிய வேறு மொழித் தொடர்பு காரணமாக இருக்கலாமா? அல்லது தனி வளர்ச்சியா?

1.2 பிராகிருத மொழியில் மொழிமுதல் யகரம் வராது. அதாவது சமஸ்கிருத மொழிமுதல் யகரம் பிராகிருத மொழியில் ஜகரமாக மாறி விடும்.( y > j).

யௌவனம்          >                 ஜொவ்வணம்

யம                              >                 ஜம

யாம                           >                 ஜாம

யக்ஷ.                         >                 ஜக்க

யெ.                             >.                ஜெ. யார்'

யோகி.                     >                 ஜோகி                     

பிராகிருத மொழியில் மொழி முதல் யகரம் திரிந்து ஜகரமாக வளர்ச்சி அடைகிறது; ஒருக்காலும் யகரம் மொழிமுதல் வராது. பக்தி இலக்கிய காலம் அதற்கு முன்பாக, பிராகிருத மொழியோடு தமிழுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இதன் விளைவாக ஆவுடன் கூடிய மொழி முதல் யகரம் கெட்டிருக்கலாம். யகரத்தில் தொடங்கும் வடசொற்கள் எவ்வாறு தமிழாக்கப் பட்டன என்று இனி காணலாம்.முதலாவதாக 'யம' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

  1. யம. > நமன், எமன், இயமன், ஞமன்

தற்காலத் தமிழில் எமன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். எமதர்மன், எமலோகம் போன்ற சொற்கள் இப்போது பிரபலம். பழந்தமிழில் கூற்று, கூற்றுவன் ஆகிய சொற்கள் வர, இடைக்காலத்தில் இது 'நமன்' என்று வழங்கிற்று. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று அப்பர் தேவாரத்தில் வந்துள்ளது. மொழிமுதல் யகரம் தவிர்க்க யகரம் நகரமாக மாறியது. நமன் மட்டுமன்றி 'ஞமன்' என்ற சொல்லும் இடைக்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. "இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணர்" என வரும் சுந்தரர் (7.55.6) தேவார வரிகளால் இதனை அறிந்து கொள்ளலாம். நவும் ஞவும் உழற்சியாக இடைக்காலத்தில் வருகிறது.ஞான்றே என்பது நான்றே என்றும் வருகிறது.இயமன் என்றொரு சொல்லும் அகராதிகளில் காணமுடிகிறது.

  1. ஓசனித்தல். < யோசனா

சிலம்பில் ஊர்காண் காதையில் (124-125) 'ஓசனிக்கின்ற' என்ற சொல் வருகிறது. அச்சொல் வருகிற பாடல் வரிகள்: "வேனில்வேந்தன் வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற வுறுவெ­யிற் கடைநாள்" .இதற்குப் பொருள் கூறும் அரும்பதவுரைக்காரர் 'வெக்கையால் தலையெடுத்தல்' என்று பொருள் காண்கிறார். அடியார்க்கு நல்லாரோ, "வேனிலரசன் தனக்குப் புகலிடமாகிய வேற்றுப் புலன்களிற் சேறற்கு முயலாநின்ற கடைநாளிலென்க" என்று பொருள் காண்கிறார். ஓசனித்தல் என்ற சொல் 'ஓசண' (முடிவில்) என்ற பிராகிருத சொல்லிலிருந்து வந்தது என்று கொள்ளப்படுகிறது. அவஸான என்ற சமஸ்கிருதச் சொல் இதற்கு மூலம் என்பர். தற்கால மலையாளத்திலும் அவஸானம் -முடிவில் என்ற பொருளில்- என்ற சொல் உள்ளது. சிலம்பின் பாடல் வரிகளில் கடைநாள் என்ற சொல்லும் வருவதால் ஓசனித்தல் என்ற சொல்லை வேறுவிதமாகப் பார்க்கலாம்.ஓசனை என்ற சொல் நாற்காதம் என்ற பொருளில் சீவக சிந்தாமணியில் வந்துள்ளது.

யோசி, யோசனை என்ற சொற்கள் ஓசி,ஓசனை என்று பேச்சுத் தமிழில் மாறுவதைக் காண்கிறோம்.யோசனையில் மொழி முதல் யகரம் கெடுகிறது.

பிறகு ஓசனை என்ற பெயர் ஓசனித்தல் என்ற வினை யாயிற்று.பூசை திருக்குறளில் பூசனை என்று வருவதை ஒப்பிடலாம். யோஜனா என்பதே ஓசனி என்று மாற்றம் அடைந்தது.

  1. யாமம்: > யாமம், சாமம்

யாமம் என்ற சொல் குறுந்தொகையில்" நள்ளன் றன்றே யாமம்" எனக் கையாளப்பட்டுள்ளது (.பாடல்-6) "யாமம் நீ துஞ்சலை மன்"(கலி) "வைகறை யாமம் துயில் எழுந்து" என்று ஆசாரக்கோவையிலும் யாமம் வருகிறது."வான்கண் விழியா வைகறை யாமத்து" என சிலப்பதிகாரத்தில் (நாடுகாண்-1) யாமம் வந்துள்ளது.யாமம், யாமத்து போன்றவை சங்கத் தமிழில் ஏராளமாகப் பயன்படுத்தப் படுகிறது. நள்ளிரவு என்று பொருள் படும் யாமம் வடசொல்லே. பிராகிருத மொழியில் ஜாம என்று தான் வரும்.தமிழில் கோவில்களில் நடைபெறும் பூசைகளில் அர்த்த ஜாம பூசை என்றொரு வகை உண்டு. ஜாமம் சாமம் என்றும் மாறும். சாமக்கோழி இரவில் கூவும் கோழியாகும். சாமம் பிராகிருத சொல்லே.

  1. ஓசனை - நில அளவை, தூரம்

யோஜனா என்ற இன்னொரு சமஸ்கிருதச் சொல் ஒரு குறிப்பிட்ட தூரத்தை, நில அளவை குறிக்கும் சொல்.

பரிபாடலில் இதே பொருளில் இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. பெண்கள் வையை யாற்றைக் காணச் செல்லும் வண்ணனை வருமிடத்தில்,"ஓசனை கமழும் வாச மேனியர்மடமா மிசையோர் பிடிமேல் அன்னப் பெரும்படை அனையோர்" பரி-12:25) என்ற வரி வந்துள்ளது. பெண்கள் ஒரு யோசனை(தூரம்) நாறும் வாசனை தடவியர்களாயும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் இவர்ந்து அன்னப் பேடைகள் போல் சென்றனர்.இங்கும் மொழி முதல் யகரம் கெடுகிறது. யோசனை > ஓசனை என்றாகிறது.

  1. யுக > நுகம்

பழந்தமிழில் வரும் 'நுகம்' என்ற சொல் மிகவும் தெரிந்த சொல். இக்காலத்திலும் வழக்கில் உள்ளது.மாட்டு வண்டியின் பாகங்களில் நுகத்தடி உண்டு. காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரம் என்பது பொருள். இச்சொல் "எருதே இளைய நுகம் உணராவே" என்று புறநானூற்றில் வந்துள்ளது. பொகுட்டெழினி குறித்து அவ்வையார் பாடியது. இளைய வீரர்களின் வலிமையை உணர்த்த உவமை பயன்படுத்தப்பட்டது.காளைகள் இளையவை.அவை வலிமையானவை. அவற்றிற்குப் பாரம் தெரியாது."தெவ்வர் தேஎ நுகம்படக் கடந்து" என்று மலைபடுகடாத்திலும் வருகிறது. அதுமட்டுமின்றி, குறுந்தொகையிலும் "வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி" (குறுந்தொகை-80-4) நுகம் என்ற சொல் பயின்று வந்தது. யுக என்ற சொல்லில் மொழிமுதல் யகரம் நகரமாகத் திரிந்தது. (yuga > nukam)

  1. யக்ஷி > இயக்கி, ஜக்கம்மா

தென் தமிழகத்தில் இசக்கி அம்மன் வழிபாடு இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இசக்கி என்ற இச்சொல் இயக்கி என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர்.இயக்கி என்ற எங்கிருந்து வந்தது? இச்சொல் சிலப்பதிகாரத்தில் வருகிறது. அடைக்கலக்காதையில் "புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்/பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்"( 115-117).மாதரி மூதூரின்கண் கோவிலில் உள்ள அருட்பார்வையுடைய இயக்கிக்குப் பாற்சோறு படைத்துவிட்டு வந்து கொண்டிருந்தாள் என்பது பாடல் வரிகளின் பொருள். சமண சமய தீர்த்தங்கரர்கட்கு உதவி செய்ய யக்ஷ,யக்ஷி போன்ற தேவதைகள் இருந்தனர் (சிலம்பு : உவேசா பதிப்பு.)

இயக்கர் என்ற சொல் தேவாரம் போன்ற பக்திப் பாடல்களிலும் தொடர்ந்து பயன்படுத்தப் பட்டது. "இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணர்" ஆகியோர் சிவனை வழிபட்டதாக சுந்தரர் பாடினார் (7.55.6).

யக்ஷ என்ற சொல் பிராகிருத மொழியில் ஜக்க என்று மாற்றம் அடையும் என்று மேலே குறிப்பிட்டோம்.ஜக்கம்மா என்பது 'தொட்டியர் வணங்கும் ஒரு சிறுதேவதை' என்று சென்னைப் பல்கலைக் கழக அகராதி குறிப்பிடும். ஜக்கம்மா, ஜக்கையன் போன்ற பெயர்கள் பிராகிருதச் சொல்லோடு தொடர்புடையவை. yaksha > jakkha  இது பிராகிருத இலக்கண விதி. ஆனால் தமிழில் yaksha > iyakka-an)  என்றாகிறது. இயக்கி சிலப்பதிகாரத்திலேயே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 8/).

  1. யசோதை > அசோதை

யசோதா என்ற சமஸ்கிருதப் பெயர்ச் சொல்லின் மொழிமுதல் யகரம் கெட்டு அசோதை என்ற வடிவம் சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் காணப்படுகிறது. "ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த/பூவைப் புதுமலர் வண்ணன் “கால்லோ" (கொலைக்களக் காதை :46-47) என்றும் அசோதைப் பிராட்டியார் தொழுதேத்த என்றும் ஆய்ச்சியர் குரவையிலும் வந்துள்ளது. நாலாயிரதிவ்விய பிரபந்தத்தில் கூட 'அசோதை' வருகிறது. "அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற"(311), கோதைக் குழலாள் அசோதைக்கு "(பெரியாழ்வார்- 23) அசோதையோடு யசோதையும் ஆழ்வார் பாசுரங்களில் பயில்கிறது. "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" (திருப்பாவை-1). தொடக்கத்தில் மொழிமுதல் கெடுகிறது. இடைக்காலத்தில் உறழ்ந்தும் வந்தது.

யாளி என்ற வடசொல்லும் ஆளி என்று மாறுகிறது.

  1. யமுனா > தொழுனை, ஜமுனா

யமுனை என்ற சொல் கங்கை நதியின் ஓர் கிளை நதியைத் குறிக்கிறது.நமது தலைநகர் புதுதில்லி யமுனை ஆற்றின் கரையில் தான் அமைந்துள்ளது. ஆனால் அச்சொல்லுக்கு நீண்ட நெடிய வரலாறு இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. வட இந்தியாவில் தற்போது 'ஜும்னா' எனப் பேச்சில் அறியப்படுகிறது. இடைக்கால இலக்கியத்தில் யமுனை என்ற சொல்லாட்சி வந்துள்ளது. திருப்பாவையில் (திவ்விய) "தூயபெருநீர் யமுனைத் துறைவனை" என்ற வரியில் யமுனை வருகிறது. "யமுனைக் கரைக்கென்னை உய்த்திடுமின்" என்றும் ஆண்டாள் உருகிப் பாடுகிறார். சிலப்பதிகாரத்தில் யமுனை 'தொழுனை' என்று வருகிறது. தொழுதற்குரிய நதி என்பது போல பொருள்படும்படித் தொழுனை மாற்றம் அடைந்து விட்டது.சிலம்பில் வரும் வரிகள்: "தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை/ விழுமம் தீர்த்த விளக்கு கொல்"(கொலைக்களக் காதை-50,51). உணவருந்தும் கோவலன் யமுனை ஆற்றினுள் ஆயர் பாடி மக்களின் துயர் துடைத்த நீலமணி வண்ணனைப் போலவே இருக்கிறான் என்று ஐயை கூறுகிறாள். "தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை /அணிநிறம் பாடுகேம் யாம்" என்று ஆய்ச்சியர் குரவையிலும் (22-23) வருகிறது.

சிலப்பதிகாரத்திற்கு முன்பாகவே அகநானூற்றில்-(59) தொழுனை கையாளப்பட்டுள்ளது. "வடாஅது வண்புனல் தொழுனை வார்மணல் அகன்துறை/ அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்/மரம் செல மிதித்த மாஅல் போல" என்று வருகிறது.யமுனை வடதிசையில் உள்ள ஆறு. வற்றாத நீர்வளம் உடையது. அகன்ற மணற்பரப்பைப் பெற்றது.அங்கு நீராடிக் கொண்டிருந்த ஆயர் மகளிரின் மானத்தைக் காக்க குருந்த மரத்தின் கிளையைத் தாழ்த்தி இலையை ஆடையாகத் திருமால் அளித்தாராம். மருதன் இளநாகனார் பாடிய இப்பாடலிலும் தொழுனை வந்துள்ளது.

யமுனை > தொழுனை என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது. பிராகிருத மொழியில் யமுனை என்ற சொல் “ஜஉனா” என்று மாறுகிறது. இச்சொல்லே தொழுனை என்று தமிழ்ப்படுத்தப் பட்டிருக்கலாம். எமுனை என்ற சொல் கூட கிடைக்கிறது.

  1. யந்த்ர (yantra)) > எந்திரம்

யகரம் எகர உயிராகத் திரிவதை எத்தனம், எந்திரம் போன்ற தற்கால சொற்களில் காணமுடிகிறது. (yatna > ettanam, yantra > enttiram) இவற்றுள் எந்திரம் என்ற சொல் சங்கச் செய்யுள்களில் வந்துள்ளது.இது இச்சொல்லின் பழமையைக் காட்டுகிறது. "கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்" (ஐங்குறுநூறு-55) என்றும் "கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது/இருஞ்சுவல் வாளை பிறழும்"(புறம்-392) என்றும் வருகிறது. யானைகள் தமது நீண்ட துதிக்கையால் எழுப்பிய ஓசையானது கரும்பு பிழியும் எந்திரங்கள் எழுப்பிய ஓசையினைப் போல இருந்தது என்றும் கரும்பு பிழியும் எந்திரத்தின் ஓசையைக் கேட்டுப் பக்கத்து வயலில் உள்ள வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கும் என்றும் முறையே பொருள்படும்.

  1. யஜுர் > எசுர்

நான்கு வேதங்களில் யஜுர் வேதமும் ஒன்று.நான்மறை என்ற தொகை பழந்தமிழில் வந்தாலும் யஜுர் என்ற சொல் வரவில்லை. இடைக்காலத்தில் யஜுர் >எசுர் என்று வழங்கிற்று. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் எசுர் என்ற சொல்லாட்சி உள்ளது. "இருக்கு எசுச் சாம வேத நாண்மலர் கொண்டு உன் பாதம் நண்ணாநாள்" ( நா.தி.பிரபந்தம்:4388)

பிராகிருத மொழியில் மொழிமுதல் யகரம் நிலை பெறவில்லை. அங்கே யகரம் ஜகரமாக மாறுகிறது. இது ஓர் ஒழுங்கான (regular)) வளர்ச்சி. பழந்தமிழில் மொழி முதல் யகரம் ஆகார உயிருடன் கூடி மட்டுமே வந்தது. இடைக்காலத்தில் அச்சொற்களிலும் யகரம் கெடுகிறது. மேலும் வடமொழியில் இருந்து வந்த சொற்கள் பல காலகட்டங்களில் பலவிதமாகத் தமிழ் படுத்தப்பட்டன. சாமம், ஜக்கம்மா, ஜக்கையன் போன்றவை பிராகிருத வழி வந்தவை.யகரம் கெட்டு அகரமாவதை அசோதை, ஆளி ஆகிய சொற்களில் காணமுடிகிறது. யமன் என்ற சொல் இயமன், எமன், ஞமன், நமன் என்றெல்லாம் மாறி வந்துள்ளது.சில சொற்களில் இ- முதலில் சேர்க்கப் படுகிறது.(இயக்கி, இயந்திரம்). இசக்கி, இசக்கியம்மன் ஆகியவை தென் தமிழகத்தில் தற்போதும் பழகுகின்றன. யகரம் மூக்கொலியாகத் திரிவதனையும் காண்கிறோம். நுகம். நமன், ஞமன் ஆகியவற்றில் இதைப் பார்க்கலாம். யமுனை தொழுனையாகத் தமிழ்ப்படுத்தப்பட்டது எப்படி என்பது மேலும் ஆராயத்தக்கது.

- ஆ.கார்த்திகேயன்

Pin It